Deiva Dharisanam
 


கலப்பை போன்ற பெரிய நுகத்தடியை கழுத்தில் தாங்கிக்கொண்டு, நிமிர்ந்த திமில்களுடன்கூடிய உயரமான பெரிய காளைகள் வண்டியில் பூட்டப்பட்டு அனாயசமாக நின்றுகொண்டிருந்தன. வண்டியின் கூரை மூங்கில் தட்டிகளால் அழகாக- கவனமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வண்டியை ஓட்டுபவரும் வெய்யில், மழையில் பாதிக்காத வண்ணம் கூரை முன்புறம் நீண்டிருக்க, மிக அமைப்பாக பெரியதாக இருந்தது வண்டி. அதிலிருந்து நெற்றி நிறைய விபூதியுடன், தூய வெள்ளாடை உடுத்திய நடுத்தர வயதைக் கடந்த ஒருவர் வேகமாக இறங்கிவந்தார்.

“”மன்னிக்க வேண்டும், மன்னிக்க வேண்டும். எங்களால் உங்கள் பயணம் தடைப்பட்டுவிட்டது. தாங்கள் நிச்சயம் அரசாங்க காரியஸ்தராகத்தான் இருக்கவேண்டும். தங்கள் உடையும் தோற்றமும் அதனை உணர்த்துகின்றது. வழி தவறிவிட்டோம். தாங்கள் தயைகூர்ந்து உதவமுடியுமா?” என்றார்.

விரைவான தன் பயணம் திடீரென்று தடைப்பட்டதால் சற்றே உஷ்ணமாயிருந்த வெங்கண்ணர், தன் எதிரில்வந்து பவ்யத்துடன் நின்றிருந்தவரைக் கண்டவுடன் கோபம் சட்டென்று மறைந்தது.

“”சொல்லுங்கள், நீங்கள் எங்கு செல்லவேண்டும்?” என்றார்.

“”ஐயா, எனது பெயர் மல்லிகார்ஜுனன். நான் எனது சுற்றத்துடன் ஸ்ரீசைலத்திலிருந்து வருகிறேன். ஸ்வாமி ராகவேந்திரரின் பிருந்தாவனப் பிரவேச செய்தியைக் கேள்வியுற்று கவலையடைந்தோம். அவரைக் காண ஓடோடி வருகிறோம். இங்குவந்து வழி தவறிவிட்டோம். தாங்கள்தான் உதவவேண்டும்.”

அப்பண்ணாவுடைய சேவையின் வேகம் கண்டு மகிழ்ந்த வெங்கண்ணர் அவரை மனதுள் வணங்கிப் பெருமிதப்பட்டார்.

“”ஆம்; வழி தவறித்தான் விட்டீர்கள். இந்தப் பாதை நதிக்கரைக்குச் செல்கிறது. தாங்கள் வந்தவழியே திரும்பி இடப்பக்க ரஸ்தாவை அடைந்து, அங்கிருந்து கேட்டுக்கொண்டே மடத்திற்குச் சென்றுவிடலாம்.”

“”மிக்க நன்றி ஐயா. தாங்கள் யாரென்று தெரிந்துகொள்ளலாமா?”

“”என்னை வெங்கண்ணா என்பார்கள். நான் ஆதோனி நவாப்பின் திவான்.”

“”ஆகா! தங்களைப்பற்றி நன்கு அறிந்திருக்கிறேன். எங்கள் ராகவேந்திரரின் அற்புதம் தங்களிடம் நிகழ்ந்ததுபற்றி அறிந்திருக்கிறேன். அருளாளரான தங்களை நேரில் கண்டது எனது பாக்கியம்” என தாழ்ந்து வணங்கினார்.

“எங்கள் ராகவேந்திரர்’ என்ற அவரது பேச்சு வெங்கண்ணருக்கு அவர் மீது சட்டென்று வாத்சல்யத்தை உண்டாக்கியது. “”சற்று பொறுங்கள்” என்றவர், தன்னுடன் துணைக்குவந்த இருவரில் ஒருவரை அவர்களுடன் செல்லப் பணித்தார். உடனிருந்து வழிகாட்டி அவர்களுக்கு ஸ்வாமிகளின் தரிசனமும் தங்க இடமும் உணவும் ஏற்பாடு செய்யப் பணித்தார். ஸ்வாமிகளின் புகழும் கீர்த்தியும் எத்தனை தூரம் பக்தர்களை ஆகர்ஷிக்கிறது என்ற பெருமிதம் விலகாது தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

நவாப் மாளிகையடைந்த திவானை நவாப் மரியாதையுடன் வரவேற்றார்.

“”அமருங்கள், ஸ்வாமிகள் நலமா? ஸ்வாமிகளிடமிருந்து ஏதேனும் செய்திகளுண்டா? பிருந்தாவன வேலைகள் ஏதேனும் விடுபட்டிருக்கின்றதா” என்று கேள்விகளைத் தொடர்ந்தார் நவாப்.

ஸ்வாமிகள்மீது அவர் வைத்திருந்த பக்தியும் பாசமும் வெங்கண்ணரை நெகிழச் செய்தன.

“”நன்றி நவாப் அவர்களே. ஸ்வாமிகள் தனது ஆசிர்வாதங்களைத் தெரியப்படுத்தினார். தங்களிடம் இந்த மந்த்ராட்சதைகளை சேர்ப்பிக்கச் சொன்னார்.”

நவாப் மிகுந்த மரியாதையுடன் பெற்றுக்கொண்டு கண்களில் ஒற்றி கண்மூடி தரித்துக் கொண்டார்.

“”திவான் அவர்களே! நீங்கள் பெரும் வாட்டத்துடன் காணப்படுகிறீர்களே? என்ன செய்வது… எத்தனையோ பேர் இருக்க, எத்தனையோ இடமிருக்க, ஸ்வாமிகள் என்னிடம் மாஞ்சால கிராமத்தைக் கேட்டருளினாரே! இதற்காக என்னை அவர் தேர்ந்தெடுத்தது நான் செய்த புண்ணியம். இருப்பினும், இந்த பிரிவாற்றாமை அனைவருக்கும் பொதுவானதுதான். இந்த பிரபஞ்ச சோகத்தை எப்படி நம்மால் தாங்கமுடியுமோ என்று யோசிக்கையில் இயலாமையில் மனம் தடுமாறுகிறது” என்றார் சோகத் துடன். அவர் சொல்லிமுடித்தபோது, அவர் சொன்ன உண்மையின் தாக்கத்தால் திவான் கண்ணீர்விட ஆரம்பித்தார். நவாப்பும் அவரைத் தேற்றவில்லை. காரணம் அவரும் மிகுந்த உணர்ச்சி மேலீட்டில் இருந்தார்.

“”சரி திவான் அவர்களே! அன்று பெருந் திரளான மக்கள் வருவர். எனவே அவசியம் கருதி நமது மாளிகையிலுள்ள அரிசி மற்றும் தானிய வகைகளை வேண்டுமளவு எடுத்துச் செல்லுங்கள். காய்கறிகளும் பழவகைகளையும் நான் வீரர்கள் மூலமாக சேகரிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். மேலும் அன்று அதிகப்படியான மலர்கள் தேவைப்படும். மற்றும் என்னென்ன தேவைப்படுகிறதோ அனைத்தும் தயக்கமில்லாமல் நீங்கள் பெற்றுக்கொள்ள லாம். எனக்கு தங்களின் மத சம்பிரதாயங்கள் தெரியாது. எனவே மாபெரும் நிகழ்வில் எக்குறைவுமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு.”

வெங்கண்ணரின் கண்கள் பனித்தன. தன்னை சவுக்காலடித்த கடின நவாப், ஸ்ரீராகவேந்திரரின் தரிசனத்தால் எந்த அளவுக்கு பக்குவப்பட்டு ஆழ்ந்த பக்தி செலுத்துகிறார் என்பதைக் கண்டு உவகையடைந்தார்.

“”நவாப் அவர்களே, என்னென்ன தேவை என்பதனை முன்கூட்டியே பட்டியலிட்டு வந்திருக்கிறேன். மலர்களுக்கு மட்டும் ஆட்களை அனுப்பிவிட்டேன்.”

நவாப், அவரிடமிருந்து பட்டியலைப் பெற்றுக் கொண்டு, உடனடியாக மெய்காப்பாளரை அழைத்து மறுநாள் காலையே அவற்றையெல்லாம் மடத்தில் சேர்க்க ஆணையிட்டார்.

“”நான் விடைபெற அனுமதிக்கவேண்டும் நவாப் அவர்களே.”

“”இரவு தங்கிச்செல்லலாமே.”

“”இல்லை நவாப் அவர்களே. இன்று ஆவணி மாத திங்கட்கிழமை. இடையில் இரு நாட்களே இருக்கின்றன. நான் ஸ்வாமிகளின் அருகில் இருக்க ஆசைப்படுகிறேன். ஸ்வாமிகளும் எவ்வித தடங்கல்களும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்லியுள்ளார்.”

“”சரி புறப்படுங்கள். ஸ்வாமிகளுக்கு எனது வணக்கத்தினையும் நன்றியையும் தெரியப் படுத்துங்கள். நானும் நாளையே மந்த்ராலயம் வந்துசேர்கிறேன். தாங்கள் சென்றுவாருங்கள்” என்றார் நவாப்.

அப்பண்ணா சற்றே தெளிந்திருந்தார். வயிற்றில் இறங்கிய சூடான பாலும் பழங்களும் களைப்பை சிறிது நீக்கியிருந்தது. குரலில் தெம்பு கூடியிருந்தது. இமைகளில் மட்டும் இன்னும் வலியிருந்தது. சோர்வும் அயர்ச்சியும் தூக்கமின்மையும் இணைந்ததால் இமைகளில் கனமிருந்தது. உடம்பு நிரம்பவே வலித்தது. கையூன்றி உடம்பை நகர்த்தி நிமிர்ந்தமர்ந்தார். தனக்கு முன் கூடியிருந்த கிராம மக்களுக்கு ஸ்ரீராகவேந்திரரின் அண்மையில் தானுணர்ந்த அற்புதங்களை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தான் அப்படியே உறங்கிவிட்டது நினைவுக்குவர வருத்தப்பட்டார்.

“”ஜனங்களே! தாங்கள் என்னை மன்னிக்கவேண்டும். ஸ்வாமிகளைப் பற்றிய அற்புதங்களை நான் சொல்லிக்கொண்டிருக் கையிலேயே தூக்கத்திலாழ்ந்துவிட்டேன். மன்னிக்கவும்.”

“”நன்றாகச் சொன்னீர்கள் குருவே. இரண்டு நாட்களாக தாங்கள் விழிக்கவேயில்லை” என்றான் ரகோத்தமன்.

“”என்ன சொல்கிறீர்கள்! இரண்டு நாட்களா? ராயர் பணியில் ஓய்வா? ஐயோ!” தள்ளாட்டத்துடன் எழுந்துநின்றார். களைப்பு அவரிடம் இன்னுமிருந்தாலும் மனோபலம் அதைவிட பலமடங்கிருந்தது. “”திரும்பவும் மன்னிப்பு கோருகிறேன். ஜனங்களே! எனக்குப் பணி முடியவில்லை. அனைவரும் இன்றே புறப்பட்டு மந்த்ராலயம் செல்லுங்கள். பிருந்தாவனப் பிரவேசத்தன்று நாம் சந்திப்போம். இன்னுமிரு கிராமங்களே மிச்சமுள்ளன. நான் செய்தி சொல்ல…” என்று கூறியபடியே நடக்கலானார். தள்ளாட்ட நடை படிப்படியாக வேகமெடுக்க, பயணம் தொடர்ந்தது.

அன்று விரோதிகிருது வருடம், 1671, ஆவணி மாத கிருஷ்ண பட்சம், த்விதியை திதி அதிகாலை நேரம், வியாழக்கிழமை. வானத் தின் கண்களும் மந்த்ராலயம் நோக்கியே விழித்தது. உலகத்தின் நாட்களில், அன்றிலிருந்து வியாழக்கிழமைக்கு புண்ணியம் சேர்த்த குரு நாளானது. அன்றைய தினம் விடியற்காலை இருள்பிரியாத நேரத்தில் மந்த்ராலயத்தின் அருகேயிருந்த துங்கா நதிக்கரையில் கணக்கிலடங்கா மக்கள் கூட்டம். நதிக்கரை திமிலோகப்பட்டது. குளித்துமுடித்தால் முன்வரிசையில் சென்றமர்ந்து ஸ்ரீராகவேந்திரரை கண்ணார தரிசிக்கவேண்டும். இனி காணக்கிடைக்காத அந்த திவ்ய தரிசனத்தை, தருணத்தை, வெகு நெருக்கத்தில் காணும் வேட்கை அங்குவந்திருந்த அனைவரின் மனதிலுமே மேலோங்கியிருந்தது. மக்கள் அனைவரும் கனமான சோகத்திலிருந்தனர். எந்நேரமும் வெடித்தழும் நிலையிலிருந்தனர். அவசரமாய் இடம்பிடித்து அமர்ந்துகொண்டேயிருந்தனர்.

ஸ்வாமி ஸ்ரீ ராகவேந்திரர் அனைவருக்கும் முன்பாகவே துங்கா ஸ்நானம் முடித்திருந்தார். அந்த காலை வேளையில் சூரியன், தனது கதிர்களில் அன்று மட்டும் பிரத்யேகமாய் செந்நிறக் கதிர்களை மந்த்ராலயத்துக்கு அனுப்பியிருந்தான். ஸ்வாமிகள் தனது அனைத்து நித்ய பூஜைகளையும் ஜெபங்களையும் முடித்து வெளித்தோன்றினார். சூரியகதிர்களின் பின்னணியில் காவி போர்த்திய ஒரு மாத்வ காவியமாக, ஸ்ரீராகவேந்திரர் மென்மையான புன்னகையுடன் நடந்துவந்து மக்கள் கூட்டத்தின் நடுவில் நின்று, அனைவரையும் தனது அருட்பார்வையால் புனிதமாக்கினார்.

அந்தப் பேரொளி அருள் ரூபம், சிறிது நேரத்துக்குள் கண்மூடி அமர்ந்துவிடுமோ என்ற உணர்வு எழுந்த அக்கணமே கூட்டத்திலிருந்து பெரும் ஓலம் எழுந்தது. “ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ’ என்ற கோஷம் அலையலையாய் எழும்பிக்கொண்டே யிருந்தது.

ஸ்வாமிகள் நெடிதுயர்ந்து பெரும் தேஜஸுடன் இருந்தார். கழுத்தில் அவர் அணிந்திருந்த துளசிமணி மாலைகள் அசைந்தாட, பாதக்குறடின்றி வெற்றுப் பாதங்களில் எல்லா திசைகளிலும் நடந்து, மக்களின் அருகில்சென்று அவர்களின் பக்தி வெள்ளத்தில் தன்னை இணைத்து அவர்களை இதமாக்கினார். “ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ… ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ’ என்ற கோஷம் எழும்பியவண்ணமாயிருந்தது.

அவ்விடமே தேஜோமயமாயிருந்தது. வாசனை மலர்களும் நறுமணப் பொடிகளும், மங்கள வாத்தியங்களின் இசையொலியும், வேத பாராயண கோஷமும், மக்களின் அன்புக் கோலமும் சேர்ந்து, மந்த்ராலயமே தெய்வீக அதிர்வில் மிளிர்ந்தது.

ஸ்வாமிகள் தனது இரு கரங்களையும் தூக்கி மக்கள் கூட்டத்தை ஆசீர்வதித்தார். பெருத்த கோஷம் சட்டென்று அடங்கியது. அன்று வெகு தொலைவில் ஒலியெழுப்பிய குயிலின் குரலே துல்லியமாய்க் கேட்குமளவு ஜனங்களின் அமைதி! ஸ்ரீராகவேந்திரர் என்ன கூறப்போகிறார் என்பதில் எதிர்பார்ப் பிருந்தது.

ஸ்வாமிகள் தனது மென்மையான குரலில் பேசத் தொடங்கினார்.

(தொடரும்)

 

Leave a Reply