விழா


 

கபினி (கபிலா) நதியின் வடகரையில் அமைந்துள்ளது பழமைமிக்க நஞ்சன்கூடு நகரம். இங்கு புகழ்பெற்ற நஞ்சுண்டேஸ் வரர் ஆலயம் உள்ளது. ஏழுதலை நாகம் குடைபிடிக்க, லிங்க வடிவில் காட்சி தருகிறார் சிவபெருமான். ஆலகால விஷத்தை உண்டதால் நஞ்சுண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார். காந்தேஸ்வரர், நஞ்சுண்டையா என்ற பெயர்களும்; ஹக்கீம் நஞ்சுண்டையா என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

ஒருகாலத்தில் இங்கு வாழ்ந்துவந்த கௌதம முனிவர், பார்வதிதேவியின் விருப்பத்திற்கிணங்க, காந்தேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டுவந்தார். அப்போது மைசூரிலுள்ள ஒரு குன்றின்மீது தேவிரி என்ற பெயரில் கோவில்கொண்டி ருந்தாள் பார்வதிதேவி. அவளே தற்போது சாமுண்டீஸ்வரி (சாமாயி) என்ற பெயரில் புகழ்பெற்று வணங்கப் பட்டு வருகிறாள்.

பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை சிவபெருமான் உட்கொண்ட இடம் காராளபுரி என்ற தற்போதைய நஞ்சன்கூடு நகரம் என்பது சிறப்புத் தகவல். “”ஏன் இந்த இடத்தைத் தேர்ந் தெடுத்து விஷத்தை அருந்தினீர்கள்?” என்று பார்வதிதேவி கேட்க, “”பூவுலகில் கயிலைக்கு ஒப்பான புனிதத்தலம் இதுதான். அதனால்தான்  இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்” என்றாராம் சிவபெருமான்.

மைசூரை ஆண்ட ஹைதர் அலி (1762- 1782) ஆட்சிக்காலத்தில், அவரது பட்டத்து யானை கண் நோய்க்கு ஆளாகி பார்வையிழந்தது. பல வைத்தியர்கள் பார்த்தும் பயனில்லை.

இறுதியில் அமைச்சர் ஒருவரின் யோசனையின்படி ஹைதர் அலியின் சம்மதத்துடன், நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு யானை  கொண்டு வரப்பட்டது. அங்கு தினமும் சுவாமிக் குச் செய்யப்படும் அபிஷேக தீர்த்தம்  யானையின் இரண்டு கண்களிலும் வார்க்கப்பட்டது. கோவில் பிராகாரத்தை யானை தினமும் வலம்வந்தது. சில நாட்களிலேயே யானைக்கு மீண்டும் பார்வை கிடைத்தது. இச்செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த மன்னர் ஹைதர் அலி, விலையுயர்ந்த மரகதப் பச்சைக்கல் பதித்த அழகிய மாலை ஒன்றை நஞ்சுண்டேஸ்வரருக்கு சமர்ப்பித்தார். இதனால் இந்த சிவபெருமானுக்கு ஹக்கீம் நஞ்சுண்டையா (வைத்தியர் நஞ்சுண்டையா) என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை மக்களின் நோய்களைத் தீர்க்கும் கடவுளாகவும் விளங்கிவருகிறார் நஞ்சுண்டேஸ்வரர்.

இக்கோவில் கட்டுமானப் பணி கங்கமன்னர்கள் (9-ஆம் நூற்றாண்டு) ஆட்சிக்காலத்தில் தொடங்கி, பின்னர் ஹொய்சாள மன்னர்கள் ஆட்சியிலும், அதன்பின்னர் கிருஷ்ண தேவராயரின் தந்தை வீரக்ஷத்திரியர், கிருஷ்ண தேவராயர் ஆகியோரது காலத்திலும் தொடர்ந்து சுமார் 1,000 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது.

பல மன்னர்களின் ஆட்சி மாறியபோதும், இக்கோவில் கட்டுமானப்பணி எந்த பாதிப்புமில்லாமல் நடந்துவந்தது ஒரு உலக சரித்திர அதிசயம்! ஆனால் உண்மை.

பின்னாளில் மைசூர் மன்னராக இருந்த மூன்றாவது கிருஷ்ண தேவராஜ உடையார் காலத்தில், தெற்கு பார்த்த பெரிய நுழைவாயிலுடன் ஏழு நிலைகள் கொண்ட 120 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதன் உச்சியில் ஏழு தங்கக் கலசங்களும் அமைக்கப்பட்டன.

சந்நிதிக்குள் சென்று பக்தர்கள் சிரமமில்லாமல் தரிசனம் செய்ய விசாலமான நடைபாதை அமைக்கப் பட்டுள்ளது. உள்பிராகாரத்தில் 63 நாயன்மார்கள், விநாயகர், சுப்பிரமணியர், சாரதா; ஸ்ரீதேவி, பூதேவியுடன் மகாவிஷ்ணு சந்நிதிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய சிவலிங்கங்கள், சஹஸ்ரலிங்கம் ஆகியவையும் உள்ளன.

பார்வதிதேவி நான்கு திருக்கரங்களுடன் மூலவருக்கு அருகிலேயே தனிச்சந்நிதியில் வீற்றிருக்கிறாள். ஸ்ரீதாண்டேஸ்வரர் என்ற பெயரில் நடராஜப் பெருமானும் காட்சியளிக்கிறார்.

ராஜகோபுரத்தைக் கடந்ததும் கறுப்புக் கல்லாலான பிரம்மாண்டமான நந்திதேவர் மூலவரைப் பார்த்த நிலையில் வீற்றிருக்கிறார்.

இக்கோவிலில் மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது கர்நாடக மாநிலம் தவிர மற்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நஞ்சுண்டேஸ்வரரை வழிபடுகின்றனர்.

நஞ்சுண்டேஸ்வரரை நம்பினோர்க்கு நாளும் நல்லதே நடக்கும். நேற்று- இன்று- நாளை எனும் முக்காலத்திலும் இதுவே சத்தியம்!

 

இந்த வார விசேஷங்கள் (12-2-2013 முதல் 18-2-2013 வரை)

இந்த வார விசேஷங்கள் (12-2-2013 முதல் 18-2-2013 வரை)
12-ந்தேதி (செவ்வாய்) * குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் அம்மன் திருமாலை உற்சவம்.
* நத்தம் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு.
* கல்லிடைக்குறிச்சி சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
* கீழ் நோக்கு நாள்.13-ந்தேதி (புதன்) * சதுர்த்தி விரதம்.
* பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் பிரகாரத்தில் பவனி.
* நத்தம் மாரியம்மன் பவனி வரும் காட்சி.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* கோமதீஸ்வரர் திருக்கோவில் உருத்திராபிஷேகம்.
* மேல் நோக்கு நாள்.

14-ந்தேதி (வியாழன்) 
* முகூர்த்த நாள்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* நத்தம் மாரியம்மன் பவனி.
* சம நோக்கு நாள்.15-ந்தேதி (வெள்ளி) * சஷ்டி விரதம்.
* முகூர்த்த நாள்.
* கல்லிடைக் குறிச்சி சிவபெருமான் பவனி.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* நத்தம் மாரியம்மன் பால் காவடி உற்சவம், மின்விளக்கு அலங்கார தங்க ரதத்தில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* கோமதீஸ்வரர் திருக்கோவில் திருநந்தி தேவர், திருமூலர் புறப்பாடு. * சமநோக்கு நாள்.

16-ந் தேதி (சனி) 

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, பாவூர்சத்திரம் வென்னி மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி உற்சவம் ஆரம்பம்.
* மதுரை நன்மை தருவார் உற்சவம் ஆரம்பம். சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி வரும் காட்சி.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
* காங்கேயநல்லூர், திருச்செந்தூர், பெருவயல் ஆகிய இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் உற்சவம் ஆரம்பம்.
* நத்தம் மாரியம்மன் பவனி.
* சமநோக்கு நாள்.

17-ந் தேதி (ஞாயிறு) 

* திருப்பதியில் ரத சப்தமி திருவிழா.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் பவனி.
* நத்தம் மாரியம்மன் பவனி வருதல்.
* கீழ் நோக்கு நாள்.

18-ந் தேதி (திங்கள்)

* திருப்போரூர் முருகப்பெருமான் பிரணவ உபதேசம் செய்தருளிய காட்சி. * திருச்செந்தூர் முருகப்பெருமான் பூங்கோவில் சப்பரத்திலும், அம்பாள் கேடயத்திலும், இரவு தங்கமுத்து கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் பவனி.
* கீழ் நோக்கு நாள்.


 

கே. சுவர்ணா

தியும் அந்தமுமில்லா பரம்பொருள் உலகோர்க்கு அருள் செய்யும் வண்ணம், தன் அருவ நிலையிலிருந்து இறங்கி இப்பூவுலகில் ஆங்காங்கு பல தலங்களில் அருவுருவத் திருமேனியான சிவலிங்க வடிவம் கொண்டும், உருவத் திருமேனியாக பல மூர்த்திகளின் வடிவம் கொண்டும் அருள்பாலித்து வருகிறது.

ஆலயங்களில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கு நித்திய வழிபாடு களும், திருவிழாக் காலத்தில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

திருவிழா நாட்களில் கொடி யேற்றம் முதல் கொடியிறக்கம் வரை உற்சவமூர்த்திகளை வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளச் செய்து கோவில் பிராகாரங்களிலும் வீதிகளிலும் உலாவரச் செய்வர். இதனால் கோவிலுக்கு வர இயலாதவர்களும் இருந்த இடத்திலிருந்தே மூர்த்திகளை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது.

திருவிழா தொடங்குவதற்கு முன்பாக மண் எடுத்தல், முளையிடுதல் ஆகியவை நடைபெறும். திருவிழாவின் முதல் நாள் துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றம் நடைபெறும். அந் தந்த ஆலயத்தில் அருள்பாலித்து வரும் மூர்த்தியின் வாகன உருவத்தை ஒரு கொடியில் எழுதி, கொடிமரத்தில் கயிறு கொண்டு மேலேற்றுவர். சிவாலயமெனில் ரிஷபக் கொடியும், முருகன் கோவிலெனில் சேவல் கொடியும், பெருமாள் கோவிலெனில் கருடக்கொடியும் ஏற்றப் படும். தர்மம், ஆத்மா ஆகிய இரண்டின் வடிவமாகக் கொடி கருதப்படுகிறது. தர்மத்தையும், மும்மலங்களில் கிடந்துழலும் உயிர்களையும் மேல்நிலைக்கு உயர்த்தும் இறைவனின் கருணையே கொடியேற்றத்தின் மூலம் விளக்கப்படுகிறது.

தேவலோகத்திலுள்ள ஐந்து மரங்களில் ஒன்று கற்பக மரம். நினைத்ததைத் தரக்கூடிய இம்மரத்தின்கீழ் சிவபெருமான் வீற்றிருந்து அருள்வதை விளக்குவது விருட்ச வாகனம். அடியார்கள் நினைத்ததை இறைவன் கற்பக மரம்போன்று நிறைவேற்றுவான் என்பதையே விருட்ச வாகனம் உணர்த்துகிறது.

சூரிய பிரபை, சந்திரப் பிரபையில் எழுந்தருள்வது, இறைவன் சூரிய சந்திரர்கள் மூலம் மக்களுக்கு அருள்பாலிக்கும் தன்மையைக் குறிக்கிறது. சூரியன் உலகத்திற்கு வெப்பம், மழை ஆகியவற்றை அளித்து, நவதானியங்களை விருத்தி செய்கிறான். சந்திரன் தன் குளிர்ச்சியான ஒளிக்கதிர்கள் மூலம் உலகிற்கு இன்பம் அளிப்பவன். சூரிய வெப்பத்தால் உலகோர்க்கு வளத்தையும், சந்திரனின் தண்ணொளியால் அமைதியையும் அளித்துக் காக்கும் இறைவனின் கருணையையே இது விளக்குகிறது.

இறைவனுக்கு பல பூதகணங்கள் உண்டு. நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு என்ற ஐம்பூதப் பொருள்களாகவும்; ஐம்பூதங்களின் பரிணாம உருவான உடலை இயக்குகின்றவனாகவும் இறைவன் விளங்குகிறான் என்பதை உணர்த்துவது பூத வாகனம்.

நான்கு தோள்கள், மான், மழு, முக்கண்கள் கொண்டு சாரூபப் பதவி பெற்றவர் அதிகார நந்தி. திருக்கயிலையின் வாயில் காவலராக விளங்கும் இவரது அனுமதி பெற்றே சிவபெருமானை தரிசிக்கவேண்டும். இவரது பெருமையை விளக்கும் விதமாகவே இறைவன் நந்தி வாகனத்தில் எழுந்தருள்கிறார்.

சர்வசம்ஹார காலத்தில் எல்லாப் பொருட்களும் அழிந்துவிட, தர்மதேவதையாகிய அறக்கடவுள் தான் அழியாதிருக்கும் பொருட்டு வெண்மை நிறக் காளை வடிவெடுத்து தன்னை இறைவனின் வாகனமாக்கிக் கொள்ளும். இறைவன் தர்மத்தின் வடிவாக விளங்குகிறார் என்பதையே அம்மையப்பராக காளையின் மேல் வீற்றிருந்தருளும் கோலம் உணர்த்து கிறது.

ஆணவத்தின் குறியீடாகவும், அடக்கமுடியாத ஐந்து இந்திரியங்களின் குறியீடாகவும் யானையைக் குறிப்பிடுவர். இறைவன் யானைமீது அமர்ந்து வருவதானது- அருளென்னும் அங்குசத்தால் உயிர்களின் ஆணவத்தையும், இந்திரியங்களின் செயல்பாடுகளையும் அடக்குவதைக் குறிக்கிறது. பாகன் காலால் இடும் வேலையை யானை தலையால் அறிந்து செய்வதுபோல, இறைவன் உயிர்களுக்குப் பரிபாகனாய் இருந்து திருவடி ஞானத் தால் அறிவிக்கும் குறிப்புகளை, உயிர்கள் அறிந்து செயல்பட வேண்டுமென்பதைக் குறிக்கிறது.

இராவணனின் உடம்பின் மேலுள்ள கயிலை மலையில் இறைவன் எழுந்தருள் வதைக் குறிப்பது கைலாச வாகனம். இராவணன்- ஆணவமலம் நிறைந்த உயிர்; கயிலாய மலை பிரபஞ்சம். இராவணன் தன் ஆணவத்தால் கயிலை மலையைத் தூக்குவதென்பது- ஆணவம் பிரபஞ்சத்தை அறிந்து இன்புற முயல்வதைக் குறிப்பதாக உள்ளது. சிவபெருமான் தன் கால் கட்டைவிரலால் மலையை அழுத்தியபோது, ஆணவம் அழிந்த இராவணன் சாமகானம் பாடி இறைவன் அருளைப் பெற்றான். அதாவது ஆணவமலம் நிறைந்த உயிர் இறுதியில் ஆணவத்தை இழந்து, கடவுளை தியானித்து அவன் திருவடிகளை அடைகிறதென்பதை இது உணர்த்துகிறது.

விலங்குகளில் வேகமுடையது குதிரை. மனித மனமும் அதிவேகமுடையதாக இருப்பதால் இரண்டையும் ஒப்பிடலாம். குதிரையின்மீதேறி அதை அடக்குவதுபோல், வேகமாகச் செல்லும் மனக்குதிரையையும் அடக்கவேண்டும் என்பதையே குதிரை வாகனம் விளக்குகிறது. வேதமாகிய குதிரையில் இறைவன் எழுந்தருள்கிறான் என்பதைக் குறிப்பதாகவும் ஒரு கருத்துண்டு.

ஆணும் பெண்ணும் செய்துகொள்வது கல்யாணம்; இறைவனும் இறைவியும் செய்துகொள்வது திருக்கல்யாணம்.

உலகத்து உயிர்கள் சிற்றின்பத்தைக்கொண்டே பேரின்பத்தை அடைய வேண்டுமென்பதற்காக, உயிர்களுக்கு போகத்தை அருளும் பொருட்டு இறைவன்- இறைவி திருமணம் நடைபெறுகிறது. பக்தியில் பக்குவப்பட்ட உயிர்களாகிய பெண்களை, இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிகிறான் என்பதையே திருமணச் சடங்கு உணர்த்துகிறது.

தாருகாவனத்து முனிவர்களும், முனி பத்தினிகளும் ஆணவ மலத்தால் இறைவனை மறந்தனர். இதனை அவர்களுக்கு உணர்த்துதற் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனர் வடிவத்திலும், திருமால் மோகினியாகவும் தாருகாவனம் சென்றனர். முனிவர்கள் மோகினியின் அழகிலும், முனிபத்தினிகள் பிட்சாடனர் வடிவிலும் மயங்கினர்.

இவ்வாறு அவர்கள் தங்கள் நிலைபிறழ்ந்து நின்றபோது தங்கள் தவறையுணர்ந்து இறைவனிடம் பக்தி பூண்டொழுகினர். இவ்வனுக்கிரகக் கோலமே பிட்சாடனர் திருக்கோலமாக திருவிழாவில் காட்சி தருகிறது.

சிவபெருமான் முப்புரத்தை எரித்தபோது தேரில் சென்று அசுரர்களைக் கொன்று தேவர்களைக் காத்தார் என்பது வரலாறு. தேவர்கள் தேரின் அங் கங்களாக இடம்பெற்றனர். சிவபெருமான் புறப் பட்டபோது, தங்கள் உதவியால்தான் இறைவன் திரிபுரத்தை எரிக்கப் போகிறார் என்று ஆணவம் கொண்டனர். இதனையுணர்ந்த சிவபெருமான், பல போர்க்கருவிகளுடன் சென்றிருந்தாலும் தன் புன்னகையாலேயே முப்புரங்களையும் எரித்து தேவர்களின் ஆணவத்தை அடக்கினார்.

முப்புரங்களையும் எரித்ததென்பது உட்பகை களாகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங் களையும் சுட்டெரித்தல் என்பதையே குறிக்கிறது.

தீர்த்தவாரி என்பது பரிசுத்தப்படுத்துவதைக் குறிக்கும். தீர்த்தவாரியன்று நடராஜர் வீதியுலா வருவது பஞ்ச கிருத்தியங்களைக் குறிக்கும். படைப்புத் தொழிலை உடுக்கையும், காத்தலை அபயகரமும், அழித்தலை அக்னியும், அருளலை தூக்கிய திருவடியும், மறைத்தலை ஊன்றிய பாதமும் குறிக்கின்றன. ஆக, நடராஜரின் திருவுருவம் இறைவனின் ஐந்தொழில்களைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

உற்சவர் ஆறு அல்லது திருக்குளத்திற்குச் சென்று தீர்த்தவாரி நடைபெறும்போது, பக்தர்களும் நீராடி அகமும் புறமும் தூய்மை யடைந்து இன்புறுவர். இவ்வாறு இறையின்பவாரியில் ஆன்மாக்கள் ஆழ்ந்து ஆனந்திப்பதை தீர்த்தவாரி உணர்த்துகிறது.

அழகாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இறைவியுடன் இறைவன் எழுந்தருளி, 5, 7, 9 என ஒற்றைப் படை எண்ணிக்கையில் சுற்றிவந்து, குளத்தின் மைய மண்டபத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சிதருவது தெப்போத்சவம்.

பிறவிக்கடலில் அமிழ்ந்து கரை காணமுடியாமல் உழலும் உயிர்களை, இறைவன் அருளாகிய தெப்பத்திலேற்றி முக்தியாகிய கரையில் சேர்க்கிறான் என்பதையே இது குறிக்கிறது.

இவ்வாறு கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் பல தத்துவங்களை உள்ளடக்கியதாக உள்ளன. அவற்றை அறிந்துகொண்டு திருவிழாக்களைக் கண்டுகளிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

“இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்’ என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார். நான், எனது என்ற எண்ணத்தை அடியோடு ஒழித்து, எல்லாம் ஈசனே என்று பக்குவம் பெற்றவர். யார் வந்து எது கேட்டாலும் இல்லையென்று சொல்லாதவர். இவர் பிறந்த புண்ணிய பூமி காவிரிப்பூம்பட்டிணம் என்ற புகார். காவிரி கடலோடு சங்கமிக்கும் இடம். கண்ணகி, மணிமேகலை, ஆதிரை போன்றவர்கள் அவதரித்த இடம். “புகார்’ என்ற பெயரே காரணப் பெயர். அந்நகரில் வாழ்பவர்கள் பொன்னையோ பொருளையோ வேண்டி வேறு ஊருக்குள் புகமாட்டார்கள்.

அதனால் “புகார்’ எனப் பெயர் வந்ததாக வரலாறு சொல்கிறது.

வணிகர்கள் நிறைந்த ஊர் புகார்.

அந்த வணிக மரபிலே தோன்றியவர் இயற்பகை நாயனார். அளவில்லாத செல்வத்திற்கு அதிபதி. ஆனாலும் செல்வத்திற்கு அடிமையாகாமல், எப்போதும் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதையே தம் கடமையாகக் கொண்டவர். “அடியார் தொண்டே சிவத் தொண்டு; அடியார்களின் பூஜையே ஆண்டவன் பூஜை’ என்று தீர்மானமான முடிவோடு இருந்தவர். எல்லாம் சிவமயம் என்று, உலகப்பொருட்கள் அனைத்தும் உதறி “தனது’ என்ற மமகாரத்திலிருந்து வேறுபட்டு வாழ்ந்தவர். உலக இயல்பிற்குப் பகையாக இருந்ததால் “இயற்பகை’ என்ற பெயர் பெற்றவர். இதை சேக்கிழார் பெருமான் பாடும்போது,

“அக்கு லப்பகுக் குடிமுதல் வணிகர்
அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண்பிறைச் சடையர் அடிமைத்
திறத்தில் மிக்கவர் மறைச் சிலம்படியார்
மிக்க சீரடியார்கள் யாராரினும்
வேண்டும் யாவையும் இல்லையென் னாதே
இக்கடற்படி நிகழும்முன் கொடுக்கும்
இயல்பில் நின்றவர் உலகியற் பகையார்’

என்று சொல்வார்.

இயற்பகை நாயனாரின் சிறப்பை உலகறியச் செய்ய எண்ணினார் சிவபெருமான். ஒரு அடியாரைப்போல உருக்கொண்டு இயற்பகையின் இல்லம் அடைந்தார். அடியாரைக்கண்ட இயற்பகை ஆனந்தமடைந்து எதிர்சென்று வணங்கினார்.

சிவனடியாராக வந்த இறைவன் இயற்பகை நாயனாரைப் பார்த்து, “”சுவாமி, நான் தங்களுடைய சிவ பக்தியையும், அடியார்களுக்குச் செய்யும் தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்டேன். யார் எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்கும் குணம் தங்களுக்குண்டு என்றறிந்தேன். ஒரு பொருளை வேண்டி தங்களிடம் வந்தேன்” என்றார்.

இதைக்கேட்ட நாயனார் மகிழ்ந்து, “”தங்கள் உள்ளம் மகிழும் வகையில், என்னிடமுள்ளது எதுவானாலும் தங்களுக்களிக்க சித்தமாயுள்ளேன். தங்கள் சந்தோஷமே எனது சந்தோஷம். தங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்” என்றார்.

அடியார், “”அப்பனே, நான் தங்களுடைய மனைவியை யாசித்துப்பெற வந்தேன்.

வேறெதுவும் வேண்டாம்” என்றார்.

அதைக்கேட்ட இயற்பகை நாயனார் சிறிதும் முகம் கோணாமல், “”சுவாமி, எங்கே, என்னிடம் இல்லாத பொருளைக் கேட்டுவிடுவீர்களோ என்று அஞ்சினேன். என்னிடம் உள்ள பொருளைக் கேட்டதற்கு மகிழ்ச்சி” என்று கூறி, தன் மனைவியை அழைத்தார். “”கற்புடைய உத்தமியே, இன்று நம் இல்லம் தேடிவந்த சிவனடியார் உன்னை விரும்பி யாசித்தார். நான் உன்னை இவ்வடியாருக்குக் கொடுத்துவிட்டேன்” என்றார்.

இதைக்கேட்ட அம்மையார் கலங்கினார். எதற்காகக் கலங்கினார்? இதனால் தன் கணவருக்கு ஏதாவது தீங்கு வருமோ என்ற தவிப்பு. பின்னர் தன் கணவர் எதையும் வெல்வார் என்று மனம் தெளிந்து, சிவனடியார் பக்கம் சென்று நின்றார். அம்மையார் கணவனை வணங்கினார்; நாயனார் எதிர்வணக்கம் செய்தார். அந்த விநாடியிலிருந்து அவர் தம் மனைவி அல்ல என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

இந்த இடத்தில், இயற்பகை நாயனார் செய்தது சரியா என்ற எண்ணம் பலருக்கு உண்டாகும். நாயனாரோ தன்னை முழுவதுமாக சிவபெருமானிடத்தில் அளித்தவர். அவருக்கென்று இவ்வுலகில் எதுவுமில்லை. இறைவன்பால் அன்பு வயப்பட்டு தன்னை மறந்தவர்களின் எண்ணம், செயல் எல்லாமே உலக இயல்பிற்கு மாறாகவே தெரியும். நம் போன்ற மக்களால் அவர்களைப் புரிந்துகொள்ள இயலாது. மனைவியை சிவனடியாருக்குத் தந்துவிட்டு, “”ஐயா, நான் வேறென்ன செய்யவேண்டும்?” என்றார் பணிவோடு.

“”இயற்பகையாரே, இனிமேல்தான் பெரிய ஆபத்து எனக்கு. இம்மங்கையை நான் அழைத்துச் செல்லும்போது, உனது ஊர்ப் பகையும் உறவுப்பகையும் வரும். எனவே இந்த ஊர் எல்லையைத் தாண்டும்வரை நீ எனக்குத் துணையாக வரவேண்டும்” என்றார் ஈசன். இதைக் கேட்டவுடன் நாயனார் கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

முன்னே சிவனடியார், பின்னே அம்மையார், காவலாக இயற்பகை நாயனார் என்று ஊர்வலம் தொடங்கியது. அதற்குள் இந்த விவரம் உறவினருக்கும் ஊர்க்காரர் களுக்கும் தெரிந்துவிட்டது. எல்லாரும் ஒன்று கூடி, “இவனுக்கு அடியார் பைத்தியம் முற்றிவிட்டது. எது செய்யத் தகுந்தது- தகாதது என்று அறியாதவன். தாலி கட்டிய மனைவியை யாரோ ஊர் பேர் அறியாத அடியாரிடம் கொடுப்பார்களா? இந்த செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று, எல்லாரும் சேர்ந்து ஆயுதங்களுடன் வந்து வழிமறித்தார்கள். சிவனடியாராக வந்தவர் இயற்பகையின் மனைவியைப் பார்க்கிறார்- பயந்தவர்போல. அந்த உத்தமி அடியாரை நோக்கி, “”நீங்கள் பயப்பட வேண்டாம். இயற்பகையார் எல்லாரையும் வென்றுவிடுவார்” என்று சமாதானம் சொல்கிறாள். சேக்கிழார் பெருமான் பாடுகிறார்- இறைவன் இயற்பகை நாயனாரை அழைக்கும் அழகை!

“இயற்பகை முனிவா ஓலம்
ஈண்டு நீ வருவாய் ஓலம்
அயர்ப்பிலா தானே ஓலம்
அன்பனே ஓலம் ஓலம்
செயற்கரிய செய்கை செய்த
தீரனே ஓலம் என்றான்
மயக்கறு மறையோ விட்டு
மாலயன் தேட நின்றான்.’

இந்த உலகத்தையே படைத்து, காத்து, அழித்து திருவிளையாடல் புரியும் ஈசன்- அரியும் அயனும் காணமுடியாத அளவு நின்ற பரமேஸ்வரன் நாயனாரை துணைக்கு அழைக்கிறான். என்னே அவன் லீலை. “இடர் செய்வோரைக் களைவேன்’ என்று கத்தியை எடுத்து சுழற்றினார் இயற்பகையார். பலர் அஞ்சி அங்கிருந்து ஓடினார்கள். தன்னை எதிர்த்தவர்களை வெட்டி வீழ்த்தினார். பின்னர் அடியாரை வணங்கி, “”இனிமேல் எந்தத் தடையுமில்லை. நீங்கள் இவளோடு செல்லலாம்” என்று வழியனுப்பினார்.

ஒரு சிவனடியாருக்காக தன் மனைவி, உற்றார், உறவினரை இழந்தும் சிறிதும் வருத்தமடையாமல் இல்லம் திரும்பினார்.

மீண்டும் சிவனடியார் அழைக்கும் குரல் கேட்டது. இயற்பகை நாயனார் திரும்பிவந்தபோது அங்கு அடியாரைக் காணவில்லை. மனைவி மட்டுமே நிற்கிறாள். நான்கு பக்கமும் தேடுகிறார்.

அப்போது வான்வெளியிலே ரிஷப வாகனத்தில் உமையோடு காட்சியளித்தார் ஈசன். இயற்பகை நாயனார் கண்களில் நீர் மல்கி, மேனி சிலிர்த்துப் பலவாறு துதிக்கிறார்.

“சொல்லுவது அறியேன் வாழி
தோற்றிய தோற்றம் போற்றி
வல்லை வந்தருளி என்னை
வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம்
எனக்கருள் செய்தாய் போற்றி
தில்லை யம்பலத்தே ஆடும்
சேவடியே போற்றி.’

“அன்பனே உனது அளவற்ற அன்பிற் கும் பக்திக்கும் மகிழ்ந்தோம். நீ, உன் மனைவியுடன் கயிலை வருக’ என்று அன்புடன் அழைத்தார். நாயனார் ஈசனைப் பலமுறை வணங்கித் தொழுது, இன்னும் சிலகாலம் பூமியில் சிவத்தொண்டு செய்யவேண்டும் என்ற தன் விருப்பத்தைக் கூற, அவ்வண்ணமே ஈசன் அருளினார். இயற்பகையின் உறவினர்களும் உயிர்பெற்றெழுந்தனர். நாயனாரின் சிவபக்தியை உணர்ந்து அவரை வணங்கினார்கள். அவர்களுக்கும் இறைவன் தரிசனம் தந்து அருள்புரிந்தான். நாயனார், மனைவியுடன் நீண்ட காலம் சிவத்தொண்டு புரிந்துவிட்டு, இறுதியில் ஈசனோடு இருவரும் கலந்தனர்.

மார்கழி 10-ஆம் நாள் (25-12-2013) இயற்பகை நாயனாரின் திருநட்சத்திரம்.

சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகி, இடையில் பல ஓடைகளையும் சிற்றாறு களையும் இணைத்துக்கொண்டு கடலூர் அருகே பரங்கிப்பேட்டையில் கடலில் கலக்கிறது வெள்ளாறு. இந்த ஆற்றின் இரு கரைகளிலும் சிறப்புமிக்க பல்வேறு ஆலயங்கள் அமைந்துள்ளன. அத்தகைய ஆலயங்களில் ஒன்றுதான் நெய்வாசல் பூமாலையப்பர், முத்துக்கருப்பையா திருக்கோவில்.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாறு தனது போக்கை மாற்றிக்கொள்ள, ஆறு புதிதாக சென்ற இடத்தின் வடகரையில் நெய்வாசல் என்ற ஊரும், தென்கரையில் சன்னாசி நல்லூரும் உருவான தாகச் சொல்லப்படுகிறது. இந்த ஊர்களின் எல்லையில் தென்மேற்கிலிருந்து வரும் சின்னாறு வெள்ளாற்றில் கலக்கிறது. இவ்விரண்டும் சேருமிடம் கூட்டாற்று மூலை எனப்படுகிறது. இவ்விடத்தில்தான் பூமாலை யப்பர் கோவில் அழகுறஅமைந்துள்ளது.

இக்கோவிலில் பூமாலை யப்பர், செம்மலையப்பர் (இவ்விருவரும் சகோதரர்கள்), முத்துக்கருப்பன் ஆகியோர் பிரதான தெய்வங்களாகத் திகழ, கொங்கா கருப்பு, சித்தாநாதர், குள்ள கருப்பு, பச்சையம்மன், முருகன் போன்றோர் பரிவார தெய்வங்களாகவும்; கோவிலுக்கு வெளிப்புறம் காவல் தெய்வமாக வீரனார் சாமியும் இருக்கின் றனர். அக்கரையில் அமைந்துள்ள சன்னாசி நல்லூரிலும் இதே பெயரில் கடவுள்கள் இருக்கின்றனர்.

சன்னாசி நல்லூர், நெய்வாசல், காளிங்கராய நல்லூர் என அப்பகுதியி லுள்ள காவல் தெய்வங்க ளெல்லாம் இரவு நேரங்க ளில் நட்பு முறையில் ஒன்றுகூடுவது வழக்கமாம். கூட்டாற்று மூலைவெளியில் கையில் தீவட்டிகளோடு, பரிவார தெய்வங்கள் கூடி சந்தோஷக்களிப்புடன் ஓடியாடி விளையாடுவார் களாம். இரவு நேரங்களில் வாய்க்கால் காவலுக்கு, நீர் பாய்ச்சுவதற்குச் சென்றவர்கள் இந்த அரிய காட்சி யைக் கண்டு மெய் சிலிர்த் துப் போயுள்ளனர்.

இக்கோவிலில் உள்ள ஏழு மீனவர்களின் சிலை இந்த தெய்வங்களை நேரில்  கண்டதற்கான சாட்சியாகத் திகழ்கின்றன. இந்த நிகழ்ச்சி குறித்து விவரித்தார்கள் இவ்வாலய பரம்பரை அறங் காவலர்களான பன்னீர் செல்வமும், செல்வராசும்.

“”பெண்ணாடத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் அதிகாலை என எண்ணிக்கொண்டு இரவு நேரத்திலேயே கூட்டாற்று மூலைக்கு மீன்பிடிக்க வந்துவிட்டனர். இரு ஆறுகளும் ஒன்று சேருமிடம் என்பதால் அங்கு மீன்கள் அதிகமாகக் கிடைக்கும்.

அந்த சமயம் வேட்டைக்காகவும், விளையாட வும் வந்த தெய்வங்கள் இவர்களைப் பார்க்க, மீனவர்களும் தீவட்டியுடன் இருக்கும் தெய்வங்களைப் பார்த்துவிட்டனர். “நாம் விளையாடும் இடத்தில் இந்த இரவு வேளையில் வந்து நிற்கிறார்களே’ என்று தெய்வங்கள் கோபம் கொள்ள, மீனவர்களின் பார்வை பறிபோய்விட்டது. இரவு முழுக்க அங்கேயே கண் தெரியாமல் அவர்கள் தடுமாறித் தத்தளித்தனர். தங்கள் பார்வை பறிபோனதற்கு தெய்வ கோபம்தான் காரணம் என்பதை உணர்ந்து, “நாங்கள் அறியாமல் உங்கள் வழியில் குறுக்கிட்டுவிட்டோம். இனி இதுபோன்று ஒருபோதும் வரமாட்டோம். எங்களுக்கு கண் பார்வையைத் திருப்பிக் கொடுங்கள்’ என கதறியழுதனர். தெய்வங்கள் மனமிரங்கி அந்த ஏழு மீனவர்களுக்கும் கண் பார்வையைத் திரும்பக் கொடுத்தனர். இதன் நினைவாகவே அந்த மீனவர்களின் வாரிசுகள்

அவர்களது சிலைகளை கோவிலில் நிறுவியுள் ளனர். இன்றும் அவர்களது வாரிசுகள் இங்கு வந்து பூமாலையப்பரை வணங்கிச் செல்வதோடு, ஆண்டுக்கு ஒருமுறை புது மீன் வலையை காணிக்கையாகச் செலுத்திச் செல்கின்றனர்” என்றனர்.

பூமாலையப்பர், செம்மலையப்பர் போன்றே முத்துக்கருப்பனும் மகிமை யுடன் திகழ்கிறார். முரட்டு மீசை, கையில் துப்பாக்கி, மருளச் செய்யும் விழி களோடு கம்பீரமாக நிற்கும் முத்துக்கருப்பன், தன்னை நாடி வருவோரின் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைக்கிறார். “”சொத்தை இழந்தவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், பிள்ளைப் பேறு இல்லாத வர்கள், பொருட்களைக் களவு கொடுத்தவர்கள் இவரிடம் வந்து பிராது கொடுத்தால் பிரச்சினை தீரும். களவுபோன பொருள் திரும்பக் கிடைக்கும். ஆயிரக்கணக்கான பேர் இவரிடம் முறையிட்டுப் பலனடைந்திருக்கின்றனர்” என்கிறார்கள் பக்தர்களான களத்தூர் துரைசாமி- பவுனாம்பாள் தம்பதியினர்.

கோவிலுக்கு முன்னால் ஐம்பது மீட்டர் தூரத்திலேயே கம்பீரமாக நிற்கிறார் வீரனார். மக்கள் முதலில் தீபம் ஏற்றி இவரை வணங்கிய பிறகே கோவிலுக்குள் நுழைகின்றனர். மேலும் கோவில் திருவிழா, சாமி புறப்பாடு போன்ற சமயங்களிலும் இவருக்கே முதலில் தீப வழிபாடு செய்யப்படுகிறது. சாதிபேதங்களை நீக்குவதிலும் இக்கோவில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

“”வீரனாருக்கு எங்கள் முன்னோர்களான தலித் மக்கள்தான் பூசாரிகளாக இருந்துவந்தனர். அந்த வழியில் நான் இப்போது பூஜை செய்கி றேன். வெளியூரிலிருந்துகூட, மக்கள் இங்கு வந்து எந்தப் பாகுபாடுமின்றி ஐயனாரை வழிபடுகிறார்கள்” என்கிறார் அம்பேத்கர்.

சேலம், நாமக்கல், தஞ்சை, நாகை, திருச்சி, பெரம்பலூர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் இங்குவந்து வழிபடுகின்றனர். திங்களும், வெள்ளியும் இங்குள்ள தெய்வங்களை வணங்க உகந்த நாட்களாகும்.

ஆற்றையொட்டி இருபது ஏக்கர் நிலப்பரப் பில் வேம்பு, கருவேலம் மற்றும்  இன்ன பிற மரங்கள் சூழ்ந்த இடத்தில் அழகுற அமைந் துள்ளது இக்கோவில். தெய்வக் குற்றமாகி விடுமென்பதால், இப்பகுதியில் அடுப்பெரிக் கவோ, வீட்டு உபயோகத்துக்கெனவோ மக்கள் மரங்களை வெட்டமாட்டார்கள். நூற்றாண் டுப் பழமைவாய்ந்த மரங்கள் உள்ளன. அற்புத மான இந்த இயற்கைச் சூழலில் மான்களும் மயில்களும் நடமாடுவதை நாம் சாதாரணமாகக் காணலாம். இக்கோவிலுக்கு வருகை தருவதே மனதுக்கு நிறைவான அமைதியை அளிக்கும்.

விருத்தாசலம்- தொழுதூர் நெடுஞ்சாலையில் ஆவின்குடி பஸ் நிறுத்தத்திலிருந்து தென் கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பூமாலையப்பர் கோவில் அமைந்துள்ளது. சென்றுவர வாகன வசதிகள் உள்ளன.


தி.இரா. பரிமளரங்கன்

புனிதத் திருத்தலமான அலகாபாத்- திரிவேணி சங்கமத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா மிகமிகப் பிரசித்தம் பெற்றதாகும்.

பூரண  கும்பமேளா எனப்படும் இவ்விழா, இவ்வாண்டு 15-1-2013 முதல் 25-2-2013 வரை சுமார் 40 நாட்கள் நடைபெறும். என்றாலும் தை மாதப் பௌர்ணமி நாள் பிரயாகையில் நீராட மிகச் சிறந்த நாள் என்பதால், 27-1-2013 முதல் இங்கே லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வர். மாசி மாத பௌர்ணமி வரை இது தொடரும்.

லட்சக்கணக்கான பக்தர்கள்- துறவிகள் கலந்துகொள்ளும் இந்த விழாவில் நிர்வாண சாமியார்களும் பைராகிகளும் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமமாகும் திரிவேணித் தீர்த்தம் மிகவும் புனிதமானது என்று வேத காலத்திலிருந்தே புகழப்பட்டி ருக்கிறது.

இந்தப் புனிதத்தலத்தில் படைப்புக் கடவுளான பிரம்மதேவன் ஒரு பெரும் வேள்வியை மேற்கொண்டிருக்கிறார். தான் படைத்த மக்களின் கருமத்தோடு, அவர்களைப் படைத்த தன்னுடைய கர்மமும் நீங்க வேள்வி செய்தாராம். அவற்றின் சிகரமாக அசுவமேத யாகமும் செய்தாராம். பிரம்மனைத் தொடர்ந்து அங்கு வேள்வி செய்த சந்திரன் திரிவேணிக்கு அருகில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார். அந்த லிங்கம் சோமேஸ்வரநாதர் என்று புகழ்பெற்றுத் திகழ்கிறது. பிரம்மதேவனையும் சந்திரனையும் தொடர்ந்து பல ரிஷிகளும் முனிவர்களும் உலக நன்மைக்காக யாகங்கள் செய்த புண்ணிய பூமி திரிவேணித் திருத்தலம்.

பகீரதனின் கடும் தவத்தால் வானிலிருந்து இறங்கி வந்த கங்கை, அவன் முன்னோர்கள் பாவம் போக்க நதிரூபமாக ஓடிவரும்போது பிரயாகையில் சற்று நிற்க வேண்டிவந்தது. ஏன்?

“”கங்கையே, சற்று நில். நானும் உன்னுடன் வருகிறேன்” என்ற குரல் கேட்டது. குரல் கொடுத்தவள் யமுனை.

“”நிற்பதென்பது இனி எனக் கில்லை. பகீரதன் பலகாலம் தவமிருந்து என்னை பூமிக்கு வரவழைத்திருக்கிறான். அவன் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்; சகர புத்திரர்களைக் கரையேற்ற வேண்டும்.”

“”கங்கையே, உன் புனிதமான சேவைக்கு மகிழ்ச்சி. நானும் உன்னைப்போல் வானுலகத்தைச் சேர்ந்தவள்தான். சூரியனின் மகள். உன்னை அழைத்தது போல் யாரும் என்னை அழைக்க வில்லை. என்றாலும் உலக மக்களின் நலனை உத்தேசித்து இறங்கி வந்திருக்கிறேன். நாம் இருவரும் ஒன்று சேர்ந்தால் மக்களின் பிறவிப் பிணி தீரும். நம் பிறவிப்பயனும் உலகம் உள்ளவரை புகழப்படும்” என்றாள் யமுனை.

யமுனையின் சுயநலமில்லாத தியாக மனப்பான்மையில் மகிழ்ந்த கங்கை, “”அக்கா” என்றழைத்து யமுனையைத் தழுவிக் கொண்டாள். அப்பொழுது அவ்விருவரும் குளிர்ச்சியான ஒரு உணர்ச்சி பரவுவதை உணர்ந்தார்கள். மூன்றாவது நபர் யாரோ தங்களிடம் கலப்பதை அறிந்தார்கள். யார் அது? “அந்தர்வாகினி’யாக- உள்ளோட்டமாகப் பிரவேசித்தாள் சரஸ்வதி.

“”உங்கள் இருவரிடமும் பாசப்பிணைப்பை உருவாக்கியவள் நான். என்னையும் நீங்கள் சேர்த்துக்கொண்டால்தான் நீங்கள் திரிவேணியாக முடியும். உலகம் உள்ளவரை போற்றப் படுவீர்கள்” என்றாள்.

கங்கை, ஸ்படிக வெள்ளை நிறம் கொண்டவள். களங்கமில்லாத உருவம் படைத்தவள். யமுனை, சூரிய நிழல் படுவதால் சற்று கறுப்பு நிறம் கொண்டவள். வெள்ளை மனம் கொண்டவள் சரஸ்வதி. கம்பீரம் மிக்கவள். என்ன நிறமென்று கூறமுடியாதவள். இந்த மூவரும்கூடி பிரயாகையைப் புனிதப்படுத்தினார்கள். தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் “திரிவேணி’ என்று பாராட்டிப் போற்றினார்கள்.

இங்கு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறக் காரணம் என்ன?

தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, இந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு அவசரம் தாங்கவில்லை. பறவை வடிவில் வந்து அமுதக் கும்பத்தைத் தூக்கிக்கொண்டு பறந்தான். அசுரர்கள், வாயு வேகத்தில் அவனைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் இடையே பன்னிரண்டு நாட்கள் (அதாவது பன்னிரண்டு வருடங்கள்) இழுபறிப் போர் நடந்தது. அந்த சமயம் சந்திரன் கும்பத்திலிருந்து அமுதம் சிந்தாமல் தடுக்க முயற்சி செய்தான். சூரியன், கும்பம் உடைந்து விடக்கூடாதே என்று வருத்தப்பட்டான். பிரகஸ் பதி அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிடாமல் காப்பாற்ற முயன்றான். சனி பகவானோ, ஜயந்தன் ஒரே மிடறில் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான். இப்படி நால் வரும்கூடி முயன்றும் நான்கு இடங்களில் அமுதம் சிந்திவிட்டது.

அதன் விளைவால் அந்த இடங்களின் புனிதம் பலமடங்கு உயர்ந்தது. அந்த இடங்கள்தான் ஹரித்வார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக் ஆகியவை.

தேவர்களின் ஒருநாள் மனிதர்களுக்கு ஒருவருடம். அந்தக் கணக்குப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கூறிய திருத்தலங்களில் கும்பமேளா நடைபெறுகிறது.

பிரயாகையில் கிழக்குக்கரைப் பகுதியிலுள்ள அட்சயவடம் என்னும் வானுலக ஆலமரமும்; கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளின் சங்கமமும் பிரயாகையின் புகழை மேன்மேலும் உயர்த்துகின்றன.

திரிவேணி என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் என்று சொல்லப்பட்டாலும், இங்கு இரண்டு நதிகள் (கங்கை, யமுனை) மட்டுமே நம் கண்களுக்குத் தெரியும். இதற்கு ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது.

“ஒரு பெண்ணின் கூந்தலில் சடை பின்னும்போது, மூன்று கால்களாக (பகுதியாக) பிரிப்பார்கள். மூன்று கால்களையும் இணைத்துப் பின்னும்போது “சடை’ அழகாக உருவாகும். ஆனால் பார்ப்பதற்கு இரண்டு கால்கள் உள்ளது போல் தெரியும். மூன்றாவது கால் தெரியாது. அது போல்தான், பிரயாகையில் கங்கை, யமுனையுடன் சரஸ்வதி கூடியிருந்தாலும் கண்களுக்குத் தெரியாமலிருக்கிறாள்’ என்பதே அது.

பிரயாகையின் கிழக்குக் கரைப்பகுதியில் செங்கோட்டை உள்ளது. அக்பர் காலத்தில் கட்டப் பட்டது. இக்கோட்டைக் குள் அட்சயவடம் என்னும் புனிதமான ஆலமரம் உள்ளது. இதன் வேர்ப்பகுதி பிரயாகையிலும், நடுப்பகுதி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகிலும், நுனிப்பகுதி கயையிலும் ஒரே நேர்கோட்டில் இருப்பதாகச் சொல்கிறார் கள்.

வங்கக் கலவரத்தை அடக்குவதற்கு வந்த அக்பர் பிரயாகையில் முகாமிட்டார். கங்கை, யமுனை சங்கமத்தைக் கண்டு வியந்தார். அங்கே ஒரு அரண்மனையை உருவாக்க திட்டமிட்டு பெரிய கோட்டையைக் கட்டினார். அந்தக் கோட்டையின் எல்லைக்குள் அட்சய வடம் என்னும் ஆலமரம் அகப்பட்டுக் கொண்டது.

பிரயாகையைத் தலைநகரமாக மாற்ற விருப்பம் கொண்ட அக்பர் “அல்லாஹ்- ஆபாத்’, “இலாஹி- ஆபாத்’ என்று பெயர் சூட்டினார். அப்பெயரில் இறையாண்மை மிகுந்திருந்தது. “ஆண்டவன் குடிகொண்ட இடம், ஆண்டவன் குடியேறிய இடம்’ என்று பிரயாகையின் புனிதத்துக்கு பங்கம் ஏற்படாமல் பெயர் சூட்டினார். அதுவே அலகாபாத் என்று பெயர் பெற்றது.

அக்பருக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர்கள், கோட்டைக்குள் இருந்த ஆலமரத்தை வெட்டி வீழ்த்தினார்கள். அது அழிந்துவிட்டது என்று நினைத்தபோது மீண்டும் துளிர்விட்டு வளர்ந்தது. பெரிய இரும்புச் சட்டத்தை நெருப்பில் காய்ச்சி, அதை வெட்டப்பட்ட இடத்தில் வைத்து மரம் கருகும்படி செய்தார் கள். வெந்நீரை வேர்ப்பகுதியில் ஊற்றினார்கள். சில நாட்கள் பட்டுப்போனதுபோல் காட்சி தந்தாலும், ஒரு மழை பெய்ததும் மீண்டும் துளிர்த்தது. இவ்வாறு அழியாமல் செழுமையாக வளர்ந்து, இன்று கோட்டைக்கு வெளியே படர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிறது.

இந்த அட்சயவடம் உள்ள கோட்டைப் பகுதிக்குள் சிறு கோவில்களும் உள்ளன.

அட்சயவடம் ஆலமரத்தைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் பாதுகாப்பு வளையம் போடப் பட்டிருப்பதுடன், காவலுக்கு பாதுகாப்பு வீரர்களும் உள்ளார்கள்.

திரிவேணி சங்கமத்தில் நீராடிவிட்டு படகில் வரும்போது பெரிய கோட்டையையும், கோட்டைக்குள்ளிருந்து வெளியே படர்ந்திருக்கும் ஆலமரத்தையும் காணலாம். இந்த மரத்தைத்தான் பரத்வாஜ முனிவரின் ஆலோசனைப்படி வனவாசத்தின்போது சீதாதேவி பூஜித்தாள் என்று புராணம் கூறுகிறது.

கோட்டைக்குள்ளிருக்கும் அட்சயவடத்தை தரிசித்தபின் ஐந்து நிமிடம் நடந்தால், ஓரிடத்தில் சயனகோல அனுமனையும், மற்றொரு இடத்தில் நின்ற கோல அனுமனையும், இரட்டை அனுமன் சந்நிதியையும், ஸ்ரீராமர், சீதை, ஸ்ரீலட்சுமணன் எழுந்தருளி யுள்ள கோவிலையும் தரிசிக்கலாம்.

சயனத் திருக்கோலத்தில் காட்சி தரும் அனுமன், பதினைந்து அடி நீளத்தில், பத்தடி ஆழத்தில் மல்லாந்து படுத்த நிலையில் அருள்புரிகிறார். அவரது தோளில் ஸ்ரீராம- லட்சுமணர் உள்ளனர். இந்த அனுமனை முழுமையாக தரிசிக்க முடியாமல் செந்தூரம் பூசப்பட்டு, அவர்மேல் மலர்களைக் குவியலா கத் தூவியிருக்கிறார்கள். மலர் குவியலுக்குள் காட்சி தரும் அனுமனது பிரம்மாண்டமான உருவத்தின் தலை வடக்கு திசையிலும், கால் தெற்கு திசையிலும் உள்ளன. அவரது இடது காலின் கீழ் காமதாதேவியும், வலது காலுக்குக்கீழே அஹிராவணனும் அழுத்தப் பட்டுக் கிடக்கிறார்கள். அதுபோல் வலது தோளின் கீழே மகரத்வஜனும், இடது தோளில் கதையும் உள்ளன. இடது கையால் ராம- லட்சுமணர்களைத் தாங்கிப் பிடித்துள்ளார்.

இங்கு  பண்டிட் ராமலோசன் என்பவர் பிரதிஷ்டை செய்த அனுமன் பிரம்மச்சாரியாக வெண்ணிற ஆடை அலங்காரத்தில் திகழ்கிறார்.

மூன்றாவது அனுமன் கோவில் “ராம்பாக்’ என்ற இடத்தில் உள்ளது.

இக்கோவிலுக்கு அருகில் வேணிமாதவன் கோவிலும், சந்திரன் வழிபட்ட சோமேஸ்வர் மகாதேவர் கோவிலும் உள்ளன. இதற்கு சற்று தூரத்தில் அலகாபாத்தில் குடிகொண்டுள்ள சக்தி பீடங்களில் ஒன்றான லலிதாதேவி ஆலயம் உள்ளது.

திரிவேணிக்கரை அருகிலுள்ள ஸ்ரீசங்கரமடம் மூன்று அடுக்குக் கோவிலாகும். முதல் அடுக்கு, ஸ்ரீகாஞ்சி காமாட்சியை நடுநாயகமாக எழுந்தருளச் செய்து, ஐம்பத்தோரு சக்தி பீடங்களையும் நினைவில் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆதிசங்கரர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தர, பல பெண் தெய்வங்கள், அவர் பாடிய வடிவம் எடுத்து நிற்பதையும் காணலாம்.

இரண்டாவது அடுக்கில் திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி அருள்புரிகிறார்.

மூன்றாவது அடுக்கில் ஸ்ரீசகஸ்ரலிங்கர் எழுந்தருளியுள்ளார். அதன் கருவறை ருத்ராட்சங்களில் வேயப்பட்டது. வலம் வரும் போது நூற்றியெட்டு சிவத்தலங்களின் சிவலிங்கங்களையும் தரிசிக்கலாம்.

அலகாபாத் நகரில் காணவேண்டிய பல இடங்கள் உள்ளன. தகுந்த வழிகாட்டியின் உதவியுடன் காண்பது நலம் தரும். பிரயாகையில் நடைபெறவிருக்கும் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திரிவேணி சங்கமத்தில் நீராடி புனிதம் பெறும் பக்தர்கள், பிரயாகைக் கரையோரமுள்ள புனிதக் கோவில்களில் அருள்புரியும் தெய்வங்களையும் தரிசித்து மேன்மேலும் புனிதம் பெறலாம்.

-அமாசோம விரதம்- 15-10-2012

சூரியனும் சந்திரனும் இணையும் நாளான அமாவாசையன்று செய்யப்படும் வழிபாடுகள், தவம் போன்றவை நல்ல பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறும். அன்று மறைந்த நம் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் தருவது மிகவும் போற்றப்படுகிறது.

அமாவாசையன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பாகப் பேசப்படுவதற்குக் காரணம், சூரிய சந்திர கிரணங்களின் உந்துதலால் கடலின் ஆழ்பகுதியில் அமிழ்ந்திருக்கும் சங்கு, பவளம் மற்றும் கடல்வாழ் ஜீவசக்திகள் மேலே வருகின்றன. அப்போது கடல்நீருக்கு  ஒருவித சக்தி ஏற்படுவதால், அந்த நீரில் குளிக்கும்போது தோஷங்கள் விலகும்; உடல் நலம்பெறும்.

அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்பர். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமே அரச மரம்.

மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு.

அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும்பொழுது  அதனிடமிருந்து வெளிவரும் புகை பல நோய்களை நீக்கவல்லது. இது ஹோமம் செய்யும் இடத்தை சுத்தம் செய்வதுடன்,

அங்குள்ளவர்களின் உடல்நலத்தையும் சீர்படுத்துகிறது. இம்மரத்தை அச்வத்தம் என்றும் கூறுவர். அச்வத்தம் என்ற சொல்லிற்கு “இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை’ என்று பொருளாகும். கபம், பித்தம் போன்ற நோய்களையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களையும் போக்கக்கூடிய குளிர்ச்சி தரும் மரம் அரச மரமாகும். அரச மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது; தொடக்கூடாது. ஆனால், சனிக்கிழமை மட்டும் அரச மரத்தைத் தொட்டு வழிபடலாம். அரச மரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்திவாய்ந்த ஓசோனின் தாக்கம் அதிகமிருக்கும். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்கில விருத்தி அதிகமாகி குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும்.

அரச மரத்தை ஞாயிறன்று வலம் வந்தால் நோய் அகலும்; திங்களன்று வலம் வந்தால் மங்களம் உண்டாகும்; செவ்வாய்- தோஷங்கள் விலகும்; புதன்- வியாபாரம் பெருகும்; வியாழன்- கல்வி வளரும். வெள்ளி- சகல சௌபாக்கியங் களும் கிட்டும்; சனி- சர்வ கஷ்டங்களும் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும்.

மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும்; ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும்; ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும்; பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும்; நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்குமென்று நூல்கள் சொல்கின்றன.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை யும், அவனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமன் நாராயணனாக பாவித்து பின்வரும் சுலோகத்தைச் சொல்லி  108 முறை வலம் வரவேண்டும்.

“மூலதோ பிரம்ஹரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினி
அக்கிரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம:’

இந்த சுலோகத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வரும்போது, தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின்முன் சமர்ப்பிக்க வேண்டும். நூற்றியெட்டு சுற்றுகள் முடிந்ததும் அப்பொருட்களை ஏழைகளுக்கு  தானமாக அளிக்கவேண்டும். இந்த வழிபாட்டை அமாசோமவார விரதமென்று கூறுவர். அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்; ஆடைகள் வாங்கி வழங்கலாம்; மூத்த சுமங்கலிகளின் கால்களில் வணங்கி ஆசிர்வாதம் பெறலாம்.

குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண் களுக்கு விரைவில் திருமணமும், சுமங்கலிகளுக்கு கர்ப்பப்பைக் கோளாறு நீக்கமும் உடல்நலமும், வயதானவர்களுக்கும் ஆடவர்களுக்கும் பித்ருசாப தோஷ நிவர்த்தியும் தருவது அரச மர வழிபாடு.

அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம்பெறுவோம்.

சித்திரை நந்தன ஆண்டு

13-4-2012,  வெள்ளிக்கிழமை, சித்திரை மாத முதல்நாளன்று நந்தன வருடம் பிறக்கிறது.

அன்று வீட்டின் மூத்தோர் புதிய பஞ்சாங்கத்தை பூஜையறையில் வைத்துப் பூஜித்து அனைவர் முன்னிலையிலும் படிப்பார்.  பூஜை முடித்து ஆலயம் சென்று வழிபட்டு பின் வீட்டில்அறுசுவை உணவு உண்பர். அதில் வசந்த காலத்தில் பூக்கும் வேப்பம் பூவும் முக்கனி களும் கண்டிப்பாக இடம்பெறும். கோவில் களிலும் இந்த பஞ்சாங்கம் படித்தல் நடை பெறும்.

சித்திரை மாதத்தில்  புத்தாண்டு விழா, ஆதிசங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, மச்சாவதார ஜெயந்தி, வராக ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, வாசவி ஜெயந்தி, ரமணர் ஆராதனை விழா, காமன் பண்டிகை, ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம், தேர்த் திருவிழா, சமயபுரம் மாரி பூச்சொரிதல் விழா, காரைக்குடி கொப்புடையம் மன் தேர்த் திருவிழா, சித்திரை அன்னா  பிஷேகம், சப்த ஸ்தான விழா, ராசிபுர திருமணம், தேர்விழா, மகாலட்சுமி அவதார தினம், பாபநாசம் சிவ- பார்வதி திருமணக் கோல காட்சி, தங்கத்தேர், சித்திரகுப்த பூஜை, குருவாயூர் விஷுக்கனி, நெல்லுக்கடைமாரி செடல் விழா, கூத்தாண்டவர் விழா, கன்னியா குமரியில் சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் கண்டு நிலாச்சோறு என்ற சித்திரான்னம் உண்ணும் விழா, அட்சய திரிதியை கனகதாரா யாகம், மகாலட்சுமி  எட்டு நாள் காட்சி தரும் விழா என பற்பல விழாக்களைக் காணலாம். எதைப் பார்ப்பது எதை விடுவது? எல்லாமே நன்மை தரும் விழாக்கள்!

அக்னி நட்சத்திரம் என்ற கொடிய வெயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 21 நாட்கள் நம்மை வாட்டி வதைக்கும். இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். இது சித்திரை மாத இறுதி பத்து நாட்களும்; வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இருக்கும். சில வருடங்களில் 25 நாட்கள்கூட இருக்கும்.

இந்நாட்களில் சூரியனுக்கு மிக அருகே பூமி இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி. கார்த்திகை நெருப்பைக் கக்கும் நட்சத்திரம். எனவே இதை அக்னி நட்சத்திரம் என்பர்.

இந்த அக்னி நட்சத்திர நாட்களில், வெயிலில் இருந்து விடுபட மகா விஷ்ணுவையும், மகா மாரியம்மனையும் சாந்தப்படுத்த வேண்டும். மகாவிஷ்ணுவின் திருநாமங்களை ஜெபித்து வழிபட வேண்டும். நாராயண மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். மாரியை பால், தேன், சந்தனத்தால் அபிஷேகம் செய்து குளிர் விக்க வேண்டும்.

இந்நாட்களில் தான- தர்மம் செய்வது சிறந்த பலனைத் தரும். தண்ணீர்ப் பந்தல் அமைக்கலாம். நீர் மோர், பானகம் விநியோகம் செய்யலாம். விசிறி, காலணி கொடுக்கலாம். சீதாஷ்டக சுலோகம் சொல்லலாம்.

அக்னி நட்சத்திரம் பிறந்த கதைமுன்னொரு காலத்தில் சுவேத யாகத்தை  12 வருடங்கள் இடைவிடாது செய்தனர். தொடர்ந்து அக்னி குண்டத்தில் நெய் ஊற்றப் பட்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. நோயினின்று விடுபட, காண்டவ வனத்தை எரித்து உண்ண திட்டமிட்டான் அக்னி.

இதை அறிந்த காண்டவ வன உயிரினங்கள் வருண தேவனின் உதவியை வேண்டினர். வருணன் கனமழை பெய்வித்தான். இதனால் வருந்திய அக்னி திருமாலின் உதவியை வேண்டி னான். திருமால் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சு னன்  வான் நோக்கி அம்புகளை எய்து சரக்கூடு கட்டி, மழை நீர் வனத்தில் விழாமல் தடுத்தான். அக்னி வனத்தை எரிக்கலானான்.

அப்போது கண்ணன், “அக்னியே’! உனக்கு 21 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் உன் பசியையும் பிணியையும் போக்கிக் கொள்’ என்றார். அதன்படி அக்னி 21 நாட்கள் வனத்தை எரித்து விழுங்கினான். இந்த நாட்களைத்தான் நாம் அக்னி நட்சத்திர நாட்கள் என்கிறோம்.

அக்னி நட்சத்திர நாட்களில் முருகனையும்; பரணிக்கு உரிய துர்க்கை, ரோஹிணிக்கு உரிய பிரம்மன், கார்த்திகையின் அதிதேவதை அக்னி ஆகியோரையும் வழிபடலாம். அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து, கடவுள்
அருளைப் பெறலாம்.

மதுரை சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா என்றாலே மதுரைதான் நினைவிற்கு வரும். மதுரை மீனாட்சியம்மை திருமண விழாவும் அதையொட்டி கள்ளழகர் வைகையில் இறங்கும் விழாவும் உலகப் புகழ்பெற்றவை.

முற்காலத்தில் இவ்விழா பங்குனி மாதத் தில்தான் நடைபெற்று வந்தது. இவ்விழாவை சித்திரை மாத விழாவாக மாற்றியமைத்தவர் மதுரை மன்னன் திருமலை நாயக்கர்தான். பங்குனி மாதம் மக்கள் விவசாய வேலையில் ஈடுபடும் காலம். அப்போது மக்கள் கையில் பணப்புழக்கமும் குறைவாக இருக்கும்.

எனவே மீனாட்சி திருமணத்திற்கும், தேர்த் திருவிழாவுக்கும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அப்போது சைவ- வைணவ பேதமும் இருந்த காலம். எனவே மன்னர் திருமலை நாயக்கர் யோசனை செய்து, பங்குனியில் நடைபெற்ற விழாவை சித்திரைக்கு மாற்றி, கள்ளழகர் விழாவையும் அத்துடன் இணைத்து விட்டார். மன்னரின் உத்தரவை மக்களும் ஏற்றனர்.

அவர் எண்ணியபடி, மீனாட்சி திருமணம், தேர் விழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி மதுரை குலுங்கியது. சைவ- வைணவ பேதமும் நீங்கி அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவை இன்றளவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

சிறுத்தொண்டர் விழா

நரசிம்ம பல்லவ மன்னரிடம் படைத் தலைவராகப் பணியாற்றியவர் பரஞ்சோதி. அவரது சிவத்தொண்டின் மேன்மையறிந்த மன்னன், “தொண்டு புரியுங்கள்’ எனக் கூறி அனுப்பிவிட்டார்.  பரஞ்சோதி தன் பிறந்த ஊரான திருச்செங்காட்டங்குடி (கணபதியீஸ்வரம்) சென்று, திருவெண்காட்டு நங்கையை மணந்துகொண்டு, சிவநெறியில் வாழ்ந்து வந்தார். இவர்கள் பிள்ளையின் பெயர் சீராளன்.

பரஞ்சோதி தினமும் ஒரு சிவனடியாருக்கு அமுது படைத்த பின்னரே குடும்பத்துடன் உணவு அருந்தும் வழக்கம் உடையவர்.

அவரது பக்தியை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் சிவபெருமான். ஒரு சந்நியாசிபோல வேட மிட்டு மரத்தடியில் அமர்ந்துகொண் டார்.

வழக்கம்போல சிவனடியாரைத் தேடி வந்த பரஞ்சோதி, மரத்தடியிலிருந்த ருத்ராபதி என்னும் அந்த சந்நியாசியைக் கண்டு மகிழ்ந்து, உணவுண்ண வருமாறு அழைத்தார்.

அந்த சந்நியாசியோ, “”நான் ஆறு மாதங்களுக்கு  ஒருமுறைதான் உண் பேன். இன்று உணவு உண்ணும் நாள்தான். ஆனால் நான் நரபாகம் உண்பவன். அதை உன்னால் ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

திடுக்கிட்டார் பரஞ்சோதி.

“”இன்னொரு நிபந்தனை. அவன் தாய்க்கு ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும். அவன் தலையை தாய் பிடித் துக்கொள்ள, தந்தை அரிய வேண்டும். அப்படி சமைத்ததைத்தான் உண்பேன்” என்றார் சந்நியாசி.

திகைத்து நின்ற பரஞ்சோதிக்கு திடீரென்று மனதில் ஒரு ஒளி தோன் றியது. “”உங்கள் எண்ணப்படியே ஆகட் டும்” என்று சொல்லி முனிவரை அழைத்துக்கொண்டு இல்லம் சேர்ந்தார்.

தன் மனைவியிடம் விவரத்தைக் கூறி, தன் ஒரே மகன் சீராளனைச் சமைத்து சந்நியாசிக்கு உணவாகப் படைத்தார். அப்போது சந்நியாசி, “”நான் தனியாக உண்ணுவதில்லை. உன் மகனை வரச்சொல்” என்றார்.

“”சுவாமி! அவன் இப்போது வர மாட்டான்” என்று கூற, “”அவன் பெய ரைச் சொல்லி அழை!” என்றார் சந்நி யாசி. அதன்படியே பரஞ்சோதி அழைக்க, சீராளன் உயிரோடு வந்தான். திரும்பிப் பார்த்த போது சிவனடியாரைக் காணவில்லை. அப்போது சிவன்- பார்வதிதேவியுடன் காட்சி தந்து அம்மூவருக்கும் முக்தியளித்தார்.

சிவன் அவர்களுக்கு முக்தியளித்தது சித்திரை மாத பரணி நட்சத்திரத்தன்று என்பதால், அந்த நாளில் திருச்செங்காட்டங்குடியில் இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். திட்டச்சேரி, கண்கொடுத்த வனிதம் ஆகிய தலங்க ளிலும் இவ்விழா சிறப்பாக நடை பெறும்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் உள்ள வீர அழகர் திருக் கோவிலில் சித்திரைத் திருவிழா மதுரையில் நடைபெறுவதுபோலவே நடைபெறுகிறது. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் (வைகை) இறங்குவார். இங்கு பேரழகர் தென்வடலாக ஓடும் நதியில் இறங்குவார். இவ்வாலய அனுமன் மகுடம் அணிந்த கோலத் தில் காட்சி தருகிறார்.

காரைக்குடி

சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும்தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருப்பர். அதுபோல அம்மன் தலங்களில் மூலஸ்தான அம்மனே உற்சவராக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவிலில் மட்டும்தான். இது ஆதி சங்கரர் வழிபட்ட தலம். இங்கு துர்க்கை புதுமை யாக கிழக்கு பார்த்து வீற்றுள்ளாள். அதுபோல வேறெங்கும் இல்லாத கோலமாக கருப்பண்ண சுவாமி குதிரையில் அமர்ந்தபடி அருள் பாலிக் கிறார்.

இக்கோவிலில் செவ்வாய் பெருந்திருவிழா தேரோட்டம் விசேஷம். இது சித்திரை மாத கடைசி செவ்வாயன்று தொடங்கி, பத்து நாட்கள் வைகாசி முதல் வாரம் வரை நடைபெறும். சித்திரையில் நான்கு செவ்வாய் வந்தால் இரண்டாவது செவ்வாயிலும், ஐந்து செவ்வாய் வந்தால் மூன்றாவது செவ்வாயிலும் கொப்புடை யம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்துவார்கள். புத்தாண்டு அன்றும் சிறப்பு வழிபாடு உண்டு. தேர் ஊர்வலத்தில் ஆலய மூலஸ்தான அம்மனே பவனி வருவது சிறப்பு.

ஸ்ரீரங்கம்

சித்திரையில் சிறப்பாக நடைபெறும் தேர்த்திருவிழாவை விருப்பண்ண திருநாள் என்று அழைப்பதுண்டு. மாலிக்காபூரின் தென்னக முற் றுகையின்போது, ரங்கநாதர் 1310-ல் அகற்றப்பட் டார். பின் 1371-ஆம் ஆண்டு விருப்பண்ண உடையார் என்ற நாயக்க வம்ச மன்னரால் மீண்டும் கொண்டு வரப்பட்டார் ரங்கர். 60 ஆண்டுகள் நடைபெறாத சித்திரைத் தேர்விழாவை இம்மன்னர் மீண்டும் ஏற்பாடு செய்ததால், இவ்விழாவை விருப்பண்ண திருநாள் என்று அழைக்கின்றனர்.

சமயபுரம்

சித்திரை மாத முதல் செவ்வாயன்று நடைபெறும் தேர்த் திருவிழாவில் பக்தர்கள் வேப்பிலை கட்டிக் கொண்டு பால்குடம், பலவகை காவடிகள் எடுத்த படி, ஈரத்துணியுடன் அலகு குத்திக் கொண்டு மாரியம்மனை வழிபட வருவார்கள்.

மற்ற எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. உற்சவ அம்மனின் பஞ்சலோகத் திருவுருவம் இரண்டு உள்ளன. சித்திரைத் தேர் விழாவின் முதல் நாள் இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் ஒரு அம்மன் வீதியுலா வருவாள். மறுநாள் திருத்தேரில் மற்றொரு அம்மன் பவனி வருவாள்.

சீர்காழி

இத்தலத்தில் ஞானசம்பந்தருக்கு அம்பிகை பாலூட்டிய உற்சவம் சித்திரை மாதத்தில் சிறப் பாக நடைபெறும்.

திருக்கடையூர்

தன் பக்தனான மார்க்கண்டேயனை எமனிட மிருந்து காத்த சிவபெருமான், காலனையும் சம்ஹாரம் செய்தார். அதனால் காலசம்ஹாரமூர்த்தி என பெயர் பெற்றார். இந்த நிகழ்ச்சி பெரும் திருவிழாவாக திருக்கடையூரில் சித்திரை மாதத்தில் நடக்கிறது.

திருவாரூர்

இத்தலத்திலுள்ள ஆழித்தேர், “திருவாரூர் தேரழகு’ என்னும் சிறப்பினைப் பெற்றது. சித்திரை மாதத்தில்தான் திருவாரூர் தேரோட்டம் நடக்கும்.

திருவையாறு

சப்த ஸ்தான விழா என்னும் ஏழு நாள் திருவிழா திருவையாறில் சித்திரை மாதம் சிறப்பாக நடக்கும். திருவையாறிலிருந்து
அம்மனுடன் ஊர்வலமாகப் புறப்படும் ஐயாறப்பர், திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப் பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய தலங் களுக்குச் சென்று திரும்புவார். இது சுமார் 20 கிலோமீட்டர் தூரம் இருக்கும். அம்ம னும் பெருமானும் இவ்வாறு வலம் வரும் போது, எல்லா ஊர்களும் சிறப்பாக அலங் கரிக்கப்பட்டிருக்கும். எல்லா வீடுகளிலும் சிறப்பான விருந்து உபசாரங்கள் நடைபெறும்.

காஞ்சி

காஞ்சி காமாட்சியம்மன் தங்கத்தேரில் மாதப்பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமைகள், காஞ்சிப் பெரியவர் பிறந்த தினம் ஆகிய நாட்களில் ஆலயப் பிராகாரத்துக்குள்ளேயே வலம் வருவாள். ஆண்டுக்கொருமுறை சித்திரை முதல் நாள் மட்டுமே தங்கத்தேரில் வீதியுலா வருவாள்.

சிறுவாச்சூர்

இங்குள்ள மதுரகாளியம்மன் ஆலயம் திங்கள், வெள்ளி மற்றும் சிறப்பு விழா நாட்களில் மட்டுமே திறந்திருக்கும். இங்கு அமாவாசையை அடுத்த செவ்வாயன்று காப்பு கட்டி, தொடர்ந்து 15 நாட்கள் சித்தி ரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவார்கள்.

தூத்துக்குடி

பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி மாதம்தான் அன்னாபிஷேக விழா நடை பெறும். ஆனால், தூத்துக்குடியிலுள்ள சங்க மேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை முதல் நாளன்று அன்னாபிஷேக விழா நடத்துகிறார்கள். மூலவருக்கு மட்டுமின்றி, ஆலயத்திலுள்ள எல்லா சந்நிதி மூர்த்தங்களுக்கும் அன்னா பிஷேகம் செய்வர். சித்திரை மாத பிரம்மோற் சவம் பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடக்கும்.

சித்திரை மாதத்தில் பல்வேறு திருவிழாக் கள் நடக்கின்றன. அவற்றில் பக்தியுடன் கலந்துகொண்டு இறையருள் பெறுவோம்.

Leave a Reply