சிவன்/Sivan


சிவபெருமான் திருநடனம் புரிந்தபோது, அவர் தன் கால் விரல்களால் வரைந்த கோலங்களிலிருந்து நவராத்திரி தேவியர் தோன்றினர் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த ஒன்பது தேவியருக்கும் வடநாட்டில்- குறிப்பாக காசி மாநகரில் கோவில்கள் உள்ளன. அம்பிகையான பராசக்தியை சைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சித்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி என்ற பெயர்களில் நவராத்திரி காலங்களில் வழிபடுகிறார்கள்.

இறைவனின் ஆனந்த தாண்டவத்தின்போது, வலக்காலை தரையில் ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடும் நிலையில் வரையப்பட்ட கோலம் மிகவும் போற்றப்படுகிறது. இதை ரிஷிமண்டல கோலம் என்பர். இதிலிருந்துதான் எழுத்துகள் வெளிப்பட்டன. அவற்றுக்குரியவளாக- அந்தக் கோலத்திலிருந்து வெளிப்பட்ட சக்தியை சைலபுத்ரி என்பர். அன்னையின் முதல் வடிவமான சைலபுத்ரி இமவான் மகளாகப் பிறந்து, கடுந்தவம் மேற்கொண்டு சிவபெருமானை மணந்தாள். இந்த தேவியானவள் கையில் சூலத்துடன் காளை மாட்டின்மீது அமர்ந்து காட்சிதருவாள். இவளை வழிபட மங்களகரமான  வாழ்வு கிட்டும்; திருமணத்தடை நீங்கும்.

இத்தேவிக்கு காசியிலுள்ள வருணை நதிக்கு அருகில் கோவில் உள்ளது. நவராத்திரியின் முதல் நாளில் இத் தேவியை தரிசிப்பதை மக்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள்.

பரமேஸ்வரனின் திரிபுர தாண்டவத்தின்போது, அவர் இடக்கால் பெருவிரலால் வரைந்த கோலம் அஷ்டவசுக் கோலம் எனப்படும். இதிலிருந்து பிரம்மச்சாரிணி தேவி தோன்றினாள். இவள் வெள்ளை ஆடை அணிந்து நின்ற கோலத்தில் காட்சிதருவாள். இந்த அம்பிகையை வழிபட மனதில் உறுதிபிறக்கும்; எதையும் சாதிக்கும் சக்தி கிட்டும். இரண்டாம் நாள் வழிபடப்படும் இந்த தேவிக்கு காசியில் “துர்க்காகாட்’ படித்துறையில் கோவில் உள்ளது.

திருவாலங்காடு தலத்தில் சிவனுக்கும் காளிக்கும் நடனப் போட்டி நடந்தபோது, ஒரு காலை தோளுக்கு இணையாக மேலே தூக்கி நடனமாடி தேவியைத் தோல்வியுறச் செய்தார். இந்த நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும்.

இந்த ஆட்டத்தின்போது கால்விரல்களால் வரையப்பட்ட பிரணவ ஒலிக்கோலத்திலிருந்து தோன்றிய அம்பிகை சித்திரகாண்டா. இவள் பத்து கரங்கள் கொண்டவள். புலிமீது அமர்ந்து காட்சிதருவாள். இவளை வழிபட தீயசக்திகள் அழியும்; மனதிற்கு சாந்தி கிட்டும். மூன்றாம் நாள் வழிபடப்படும் இந்த தேவிக்கு காசியில் சௌக் கடைத்தெரு அருகே கோவில் உள்ளது.

சிவபெருமான் பகலும் இரவும் கூடும் வேளையில் ஆடிய தாண்டவம் சந்தியா தாண்டவம். அப்போது இடக்கால் பெருவிரலால் இட்ட கோலத்தை சப்த ஒலிக்கோலம் என்பர். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா. எட்டுக்கரங்கள் கொண்ட இவள் வேங்கைமீது அமர்ந்திருப்பாள். சகல இடர்களையும் களைந்து செல்வம் தருபவள். நான்காம் நாள் வழிபடப்படும் இந்த அன்னைக்கு காசியில் சௌக் கடைத்தெரு பகுதியில் ஆலயம் உள்ளது.

தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அனைவரையும் காக்கும்பொருட்டு சிவபெருமான் உண்டார். அப்போது ஆடிய புஜங்க தாண்டவத்தின்போது வரையப் பட்ட கோலம் புஜங்க கோலம். இதிலிருந்து ஸ்கந்தமாதா தோன்றினாள். சிங்கத்தின்மீது அமர்ந்திருக்கும் இந்த அம்பிகையை “வாகீஸ்வரி’ என்றும் சொல்வர். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னையின் மடியில் ஆறுமுகப் பெருமான் குழந்தை வடிவில் அமர்ந்திருப்பார். இந்த தேவியை நவராத்திரி காலங்களில் ஐந்தாம் நாள் வழிபடுவர். புத்திர பாக்கியம் தருபவள் இவள். காசியில் ஜைத்புரா என்ற பகுதியில் இந்த அன்னைக்கு கோவில் உள்ளது.

பதஞ்சலி முனிவர் மிருதங்கம் வாசித்த போது, அதற்கேற்ப நடனமாடி முனிவரை மகிழ்வித்தார் சிவபெருமான். எனவே இது முனிதாண்டவம் என்று பெயர் பெற்றது. இந்த தாண்டவத்தின்போது சிவபெருமான் இருகால்களால் வரைந்த கோலத்திலிருந்து தோன்றியவள் காத்யாயினி. நான்கு கரங்கள் கொண்டவள். சிம்ம வாகனத்தில் தொடைமேல் கால்போட்டு அமர்ந்திருப்பாள். “சிம்மவாஹினி’ என்றும் சொல்வர். ஆறாம் நாள் வழிபடப்படும் இந்த தேவி எதிரிகளை நாசம் செய்யும் சக்தி கொண்டவள். இவளை வழிபட எதிரிகள் அழிவர். காசி ஆத்ம விஸ்வேஸ்வரர் கோவிலின் பின்பக்க நுழைவாயிலை அடுத்துள்ள சுவரில் காத்யாயினி கோட்ட தெய்வமாக வழிபடப் படுகிறாள்.

யானை உருவில் வந்த அசுரனைக் கொன்று, அந்த யானைத் தோலைப் போர்த்திய உடலுடன், கைகளில் பல வகையான ஆயுதங்களை ஏந்தி சிவபெருமான் ஆடியது பூத தாண்டவம். இதிலிருந்து காளராத்ரி என்ற சக்தி வெளிப்பட்டாள். இவள் புலித்தோல் ஆடையணிந்து பயங்கரத் தோற்றத்தில் காட்சிதருவாள். மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவள். இவளது வாகனம் கழுதை. இவளை வழிபட தீயவர்கள் அழிவர். காசியில் காளிகாகலி என்ற இடத்தில் இவளுக்கு கோவில் உள்ளது. ஏழாம் நாள் வழிபடப்படும் தெய்வம் இவள்.

தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர்கள், அசுரர்களால் துன்பப்பட்டு சிவபெருமானை வேண்ட, இறைவன் அந்த அசுரர்களை அழித்த பின் ஆடிய தாண்டவம் சுத்த தாண்டவம். அப்போது இறைவன் வரைந்த கோலத்திலிருந்து “மகாகௌரி’ என்ற அன்னை தோன்றினாள்.

நான்கு திருக்கரங்கள் கொண்டவள். ரிஷபத்தின்மீது அமர்ந்து திரிசூலம் ஏந்தி காட்சிதரும் இந்த தேவியை வழிபட பசிப்பிணி நீங்கும்; உடல் வளம்பெறும். இவளுக்கு காசி அன்னபூரணி ஆலயத்தில் சந்நிதி உள்ளது. இந்த தெய்வத்தை எட்டாம் நாள் வழிபடுகிறார்கள்.

கயிலைநாதன் சிருங்கார தாண்டவம் ஆடியபோது நவரசங்களையும் அழகாக வெளிப்படுத்தினார். அப்போது தன் பாதங்களால் வரைந்த கோலத்திலிருந்து சித்திதாத்ரி என்னும் தேவி தோன்றினாள். ஆதிசக்தியான பார்வதி, அயனும் அரியும் போற்றும் முழுமுதல்வி என்ற தத்துவத்தைக் காட்டுவதால் சித்திதாத்ரி என்று பெயர் பெற்றாள். தாமரை மலர்மீது நான்கு கரங்களுடன் அமர்ந்திருக்கும் இவளை வழிபட முக்தி கிட்டும்.

ஒன்பதாம் நாள் வழிபடப்படும் இந்த அன்னை காசியில் “சித்திதாத்ரி சங்கடா’ என்னும் கோவிலில் எழுந்தருளியுள்ளாள்.

மேற்கண்ட தகவல்களை காசி புராணம் விவரிக்கிறது. தென்னகத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்னும் வரிசையில் நவராத்திரி கொண்டாடுகிறோம்.

காசியில் உள்ளவர்கள், சிவபெருமான் ஆடிய தாண்டவத்திலிருந்து வெளிப்பட்ட ஒன்பது தேவியரின் சுதை விக்ரகங்களை வாங்கிவந்து கொலுவைப்பார்கள்.

பத்தாம் நாளை, பார்வதிதேவி மீண்டும் தாய் வீடான இமயத்திற்குச் செல்லும் நாளாகக் கொண்டாடுவர். அன்று சுதையினாலான அம்பாள் திருவுருவத்துக்கு அலங்காரம் செய்வர். கைகளில் வளையல்கள் அணிவித்து, கால்களுக்கு சிவப்பு சாந்து பூசி, மலர்களால் அலங்கரிப்பர். வேதவிற்பன்னரை வரவழைத்து சிறப்புப்பூஜை செய்வதும் உண்டு. பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு, தங்கள் சக்திக்கு ஏற்ப புடவை மற்றும் ரவிக்கைத் துணிகளை மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய், பழங்கள், இனிப்புப் பண்டங்களை அதற்குரிய வாழை மட்டைத் தட்டுகளில் வைத்து வழங்குவர்.

அலங்கரிக்கப்பட்ட தேவியின் திருவுருவம் கொலுவில் நடுநாயகியாகக் காட்சி தருவதால், அனைவரும் பக்திப் பாடல்களைப் பாடி மீண்டும் பூஜிப்பார்கள். பிறகு, பத்து நாட்களும் பூஜிக்கப்பட்ட அம்பிகையின் உருவச்சிலைகளை கங்கை நதியில் கரைத்து விழா கொண்டாடுவர்.

காசி வருண்காட் அருகில் துர்க்கா கோவிலிலுள்ள இந்தப் பத்து தேவியரின் பளிங்குச் சிலைகளுக்குப் பூஜைகள் செய்து நவராத்திரி விழாவினை பூர்த்திசெய்கிறார்கள்.’

12 ஜோதிர்லிங்கங்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது குஜராத்திலுள்ள சோமநாதர் லிங்கமாகும். இந்த சுயம்புலிங்கத்தை முதன்முதலில் கண்டவர் பிரம்மா என்று கூறப்படுகிறது.

தட்சப்பிரஜாதிபதியின் 27 மகள்களை மணந்த சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே மிகவும் அன்பு செலுத்திவந்தான். இதனால் வேதனையுற்ற 26 பேரும் தந்தையிடம் சென்று முறையிட, கோபம் கொண்ட தட்சன், சந்திரன் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து தேய்ந்துபோகுமாறு சபித்தான். மனம்வருந்திய சந்திரன் சிவபெருமானைச் சரணடைந்து சாபவிமோசனம் வேண்ட, அவனது கலைகள் மீண்டும் வளர அருள்புரிந்தார் ஈசன். மேலும் சந்திரனைத் தன் முடியிலும் சூடிக்கொண்டார். சந்திரன் ஈசனை வழிபட்டு தன் சாபம் நீங்கப்பெற்ற தலம் இந்த சோமநாதபுரமே.

மேலும், திருமால்- நான்முகனிடையே ஏற்பட்ட பூசலை நீக்க, சிவபெருமான் ஜோதிரூபமாகத் தோன்றி அருள்புரிந்த இடமென்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீகிருஷ்ணர் தன் யாதவகுல மக்களிடம் சோமநாதரை வழிபடுமாறு கூறினார் என்ற புராணத் தகவலும் உண்டு.

சாளுக்கியர்களின் பாணியில் கட்டப்பட்ட இவ்வாலயம் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. பக்தர்கள் கடலில் நீராடி விட்டு ஆலயம் சென்று சிவபெருமானை வழிபடுகிறார்கள். இவ்வாலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிராச்சி திரிவேணி என்னும் இடமுள்ளது. கபில நதி, சரஸ்வதி நதி, ஹிரண்ய நதி ஆகிய மூன்றும் சந்திக்கும் இடம். அங்குசென்றும் பக்தர்கள் நீராடுகிறார்கள்.

அதற்கு அருகே சூரிய நாராயணர் ஆலயம் உள்ளது. அதன் பக்கத்திலுள்ள குகையில் பவானி ஆலயமும், சித்தநாத சிவன் சந்நிதியும் உண்டு. அதற்கு அருகிலேயே ஒரு ஆலமரம் காணப்படுகிறது. அதன்கீழ் பலதேவர் சிலையுள்ளது. இங்கிருந்துதான் பலதேவர் சேஷநாதர் வடிவில் பாதாள லோகம் சென்றார் என்பது ஐதீகம்.

அதன் பக்கத்தில் பாலகதீர்த்தம் உள்ளது. இதன் கரையில் படுத்திருந்த போதுதான், ஸ்ரீகிருஷ்ணர் காலில் அம்புபாய்ந்து வைகுந்தம் சேர்ந்தார் எனப்படுகிறது. திரிவேணி மாதா, மகாகாளேஸ்வரர், ராமர், கிருஷ்ணர், பீமேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

சோமநாதர் ஆலயம் அளவுக்கு அந்நியரின் படையெடுப்பால் சேதமுற்ற ஆலயம் வேறெதுவுமில்லை என்றே சொல்லலாம். இங்கிருந்த விலைமதிப்புமிக்க ரத்தினங்களின் காரணமாக பலமுறை இவ்வாலயம் தாக்குதலுக்குள்ளானது.

கி.பி. 1024-ல் இங்கு படையெடுத்து வந்த மொகலாய மன்னன் கஜினி பெருமளவு செல்வங்களை கொள்ளையிட்டு, ஆலயத்தையும் சேதப்படுத்திச் சென்றான். அதன்பின் குஜ்ஜார் பர்மாரா என்ற இந்து மன்னன் ஆலயத்தைப் புதுப்பித்தான். சோலங்கி குமார் பால் என்ற மன்னனும் திருப்பணி செய்தான்.

1296-ல் அலாவுதீன் கில்ஜி இவ்வாலயத்தை சேதப்படுத்தி செல்வங் களைக் கொள்ளையிட்டான். அதன்பின்னர் 1326 முதல் 1351 வரை இப்பகுதியை ஆட்சி புரிந்த சந்த்சன் என்ற இந்து மன்னன் ஆலயத் தைப் புதுப்பித்தான்.

1375-ல் மொசபத் ஷா என்ற இஸ்லாமிய மன்னன் தாக்கிக் கொள்ளையிட்டான். பின்னர் மொகமஹ்பெகுடா, ஔரங்கசீப் என பலராலும் இவ்வாலயம் தாக்கப்பட்டது. பின்னர் பெஷாவர் இந்து மன்னரால் ஆலயம் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து நாக்பூர் மன்னர், குவாலியர் மன்னர்களால் ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இவ்வாலயத்தைப் பார்வையிட்ட சர்தார் வல்லபபாய் படேல், அதைப் புதுப்பிக்க உத்தர விட்டார். பின்னர் அவர் காலமாகிவிடவே, அவர் ஆணையை அமைச்சர் கே. எம். முன்ஷி நிறைவேற்றினார்.

பல்வேறு அரசியல் மாற்றங்களையும் காலமாறுதல்களையும் பார்த்துக்கொண்டு, சலனமின்றி நிமிர்ந்துநிற்கிறது சோமநாதர் ஆலயம். இவ்வாலயத்தை ஒருமுறை சுற்றி வந்தால் உலகையே சுற்றியதுபோல என்று கூறுகிறார்கள். சொர்க்க பதவி சித்திக்கும்.

தாய் சாபம் பெற்றவர்கள், தோல் நோயுள்ளவர்கள். மனநிலை சரியில்லாதவர் கள், ஜாதகத்தில் சந்திரன் நீசம்பெற்றவர்கள் மற்றும் பல்வேறு தோஷமுள்ளவர்கள் இங்குவந்து வழிபட்டு குறைகளிலிருந்து விடுபடுகின்றனர்.

காலை 6.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

சென்னையிலிருந்து அகமாதபாத் சென்று, அங்கிருந்து 465 கிலோமீட்டர் பயணித்து சோமநாதரை தரிசிக்கவேண்டும்.


மகா அன்னாபிஷேகம்- 6-11-2014

சிவபெருமான் அபிஷேகப்பிரியர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று நடைபெறும் அபிஷேக ஆராதனையில் மிகவும் போற்றப்படுவது- ஐப்பசி பௌர்ணமியில் நடைபெறும் அன்னா பிஷேகமாகும். காரணம், சிவபெருமானே அன்னமாக மாறியிருக்கிறார் என்கிறது புராணம்.

உலகில் வாழும் உயிர்களின் ஜீவநாடி அன்னம். உலக வாழ்க்கைக்கு அச்சாணி. ஒருவேளை உணவில்லாவிட்டாலும் உடல்சோர்வடையும்; மூளை சரியாக வேலை செய்யாமல் தடுமாறும்.

“அன்னமே உண்மையான பிரம்ம சொரூபம்; விஷ்ணு சொரூபம்; சிவ சொரூபம். ஆகையால் அன்னமே உயர்வானது’ என்று வேதம் சொல்கிறது.

“அன்னம் பிரஜாபிஸ்; சாக்ஷாத் அன்னம் விஷ்ணு சிவ’ என்பது வேதவாக்கு.

“அன்னம்தான் ஜீவன்’ என்கிறது சாஸ்திரம்.

“தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தான்மட்டும் யார் உண்கிறானோ, அவன் பாவ பிண்டத்தைத்தான் உண்கிறான்’ என்கிறார் பகவான் கிருஷ்ணன்.

“அன்னம் அளி! அன்னம் அளி! ஓயாமல் அன்னம் அளி’ என்கிறது பவிஷ்ய புராணம்.

“உலகில் வாழும் மானிடர்களுக்கு மட்டுமல்ல; இவ்வுலக வாழ்வை நீத்தவர்களுக்கும் பிண்டமாக அன்னம் அளிக்கப்படுகிறது’ என்று வேதநூல்கள் கூறுகின்றன.

இதனையெல்லாம் நினைவு கூர்ந்துதான் துலா மாதமான ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று, சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.

சிவலிங்கத்தில் காணப்படும் அன்னத்தின் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்தின் உருப்பெறும். அதாவது சிவரூபமாகும். இதனை தரிசிப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்குப் பஞ்சமில்லை என்பது ஐதீகம்.

இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியை ஐப்பசிப் பௌர்ணமியன்று அனைத்து சிவாலயங்களிலும் தரிசிக்கலாம். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றுத் திகழ்கிறது.

கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் எழுந்தருளியுள்ள சிவலிங்கம், ஏறக்குறைய தஞ்சை பெரிய கோவிலைப்போல் பிரம்மாண்டமாகக் காட்சி  தரும். சிவாலயமூர்த்தி பதின்மூன்றரை அடி உயரத்திலும், அதன் ஆவுடையாரின் சுற்றளவு அறுபது அடியாகவும் ஒரே கல்லிலான திருவுருவமாக உள்ளது. 13 முழ ஆடை கொண்டே சிவலிங்கத்தை சுற்றமுடியும். அவரை எதிர்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் பெரிய நந்தி கலைநுட்பம் கொண்டது.

சோழ மன்னன் விஜயாலயன் தஞ்சையைத் தலைநகரமாகக்கொண்டு ஆட்சி புரிந்துவந்தான். முதலாம் ராஜராஜசோழன் காலம்வரை தஞ்சை தலைநகரமாக விளங்கியது. ராஜராஜ சோழனின் மைந்தன் முதலாம் ராஜேந்திரன் காலத்தில்தான் கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக உருவாக்கப்பட்டது. இவனது ஆட்சி காலம் கி.பி. 1012- 1044.

ராஜேந்திர சோழன் வடக்கே கங்கைவரை தன் படை வீரர்களுடன் சென்று வெற்றி கொண்டதால் “கங்கைகொண்ட சோழன்’ என்று சிறப்புப் பட்டம் பெற்றான். அதன் நினைவாக இம்மாநகரை நிறுவி, பெரிய அளவில் மிக அற்புதமாகக் கலைநுட்பத்துடன் “கங்கை கொண்டசோழீச்சரம்’ என்ற பெயர் கொண்ட கோவிலைக் கட்டினான் என்பது வரலாறு. அதனையொட்டி விநாயகர் மற்றும் பெருமாள் கோவில்களையும் அரண்மனையையும் நிர்மாணித்தான்.

கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு சோழ வம்சத்தினர் முந்நூறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள். அப்போது ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பௌர்ணமியில் நூறுமூட்டை அரிசியில் சமைத்த அன்னத் தைக் கொண்டு அன்னாபிஷேகம் மிகச் சிறப் பாக நடைபெற்றது.

அதற்குப்பின் பாண்டிய மன்னர்கள் சோழ அரசர்களை போரில்வென்று, கோவில்களைத் தவிர அரண்மனை மற்றும் தோட்டங்களை அழித்தனர். இதனால் கோவில்களில் பூஜைகள் ஒழுங்காக நடைபெறவில்லை.

காலம் கடந்தது. ஆட்சிகள் மாறின. நாடு சுதந்திரம் அடைந்தது. மக்கள் ஆட்சி மலர்ந்தது.

ஒருமுறை காஞ்சி மகாபெரியவர் யாத்திரையாக கங்கைகொண்ட  சோழபுரத்திற்கு வந்தார். அப்போது, இந்தப் பிரம்மாண்டமான சரித்திரப் புகழ்பெற்ற கோவிலின் நிலைகண்டு வருந்தினார். கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற ஆவன செய்தார். அத்துடன் ஐப்பசிப் பௌர்ணமியில் அன்னாபிஷேக நிகழ்ச்சிகள் மறுபடியும் நடைபெற வழிகள் செய்தார்.

இந்தக் கோவில் இறைவன் பிரகதீஸ்வரர்; இறைவி பிரஹந்நாயகி. மேலும், அனுக்கிர சண்டேஸ் வரர், கஜசம்ஹாரமூர்த்தி, நடனசபாபதி, ஞானசரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி ஆகிய சிற்பங்கள் கலையம்சத்துடன் காட்சிதருகின்றன. கருவறையில் சந்திரகாந் தக்கல் பதிக்கப்பட்டிருப்பதால் கோடை காலத்தில் குளுமையாகவும், குளிர்காலத்தில் மிதமான வெப்பத்துடனும் இருக்கும். கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அருள்புரியும் நவகிரகங்களை வலம் வரமுடியாது. ஒரே கல்லில் சூரியன் முதலான ஒன்பது கிரகங்களை வடித்திருக்கிறார்கள்.

தற்போது ஐப்பசி மாதப் பௌர்ணமி போது 64 மூட்டை பச்சரிசியை சமைத்து, சிவலிங்கத்தின்மீது துணிசார்த்தி பதினாறு அர்ச்சகர்கள் அன்னாபிஷேகம் செய்வார்கள். பகல் 11.00 மணிக்குமேல் அன்னாபிஷேகம் ஆரம்பித்து மாலை 5.00 மணியளவில் மகாதீபாராதனை நடைபெறும். சுவாமி யின்மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். இப்படி அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஐந்து சதவிகிதம் நீரில் வாழும் ஜீவராசிகளுக்கும், ஐந்து சதவிகிதம் பூமியின்கீழ் வாழும் ஜீவ ராசிகளுக்கும், ஐந்து சதவிகிதம் கால்நடைகளுக்கும், ஐந்து சதவிகிதம் பறவைகளுக்குமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மீதமுள்ள அன்னம் சாம்பார் மற்றும் புளிரசம் கலந்து பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. (சில சிவாலயங்களில் காய்கறிகளுடன் அளிக்கப்படுகிறது.) கங்கைகொண்ட சோழபுரம் திருச்சியிலிருந்து 110 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

இனி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் பிரியமானது என்பது பற்றி புராணம் கூறும் தகவலைக் காண்போம்.

ஒருமுறை தேவர்களுக்கு கடும் பசிப்பிணி வந்தபோது இறைவனே அன்னமாகிவிட்டார் என்றும், இந்த நிகழ்வு ஐப்பசி பௌர்ணமியில் நடந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும், தேவியானவள் பல்வேறு கட்டங்களில் அசுரர்களை வதம்செய்து தேவர்களையும் மானிடர் களையும் காப்பாற்றினாள். அசுர வதத்தால் தேவிக்கு பல தோஷங்கள் ஏற்பட்டன. இதனை நிவர்த்திக்க இறைவனிடம் வேண்டினாள். தேவியின் வேண்டுதலை ஏற்றார் இறைவன்.

தேவியால் வதம்செய்யப்பட்ட அசுரர்கள் அட்சய லோகம் என்னும் இடத்தில் பிண்டத்துக்காக அலைந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.  அவர்களைச் சார்ந்தவர் கள், தேவியால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இறந்த அசுரர்களுக்காக நீத்தார் கடன் செய்ய முன்வரவில்லை. எனவே சிவபெருமானே அன்னமாக மாறி வதம்செய்யப்பட்ட அசுரர்களைத் திருப்திப்படுத்தினார். அதனால்தான் அன்னாபிஷேகத்தன்று அன்னத்துடன் அப்பம், வடை, புடலங்காய் முதலிய காய்கறிகளும் சில சிவாலயங்களில் படைக்கப்படுகின்றன.

சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தால் நாட்டில் பசி, பஞ்சம், பட்டினி இராது. ஆகம விதிப்படி அன்னாபிஷேகம் செய்வித்தால் நாட்டில் காலாகாலத்தில் மழைபொழிந்து வளங்கள் பெருகும்.

பொதுவாக பௌர்ணமியன்று சந்திரன் பதினாறு கலைகளுடன் முழுமையாகப் பிரகாசிக்கிறான். அன்று சந்திரனது கலை, அமிர்தகலையாகும். அதுவும் ஐப்பசி பௌர்ணமி சிவபெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால், இந்நாள் சிறப் பிக்கப்படுகிறது.

சிவன் பிரம்மரூபி. அவரது மெய்யடி யார்கள் பிரதிபிம்பரூபிகள். பிரம்மம் திருப்தியடைந்தால் பிரதிபிம்பமும் திருப்தியடையும்.

ஐப்பசி பௌர்ணமியில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுவதை யாவரும் அறிவோம். ஆனால், தில்லையில் தினமும் காலை பதினோரு மணியளவில் ரத்னசபாபதிக்கு அன்னா பிஷேகம் நடைபெறுகிறது. அந்த அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. எனவேதான் இத்திருத்தலத்தை அப்பர் பெருமான், “அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்’ என்று போற்றியுள்ளார்.

குடமுருட்டி ஆற்றின் தென்கரையில், பாடல்பெற்ற திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் செந்தலை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது.  இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகத்தன்று முதலில் பகல் 11.00 மணிக்கு திருநீறு அபிஷேகமும்,  பிறகு மற்ற அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மாலை ஐந்து மணிக்கு மேல் லிங்கத்திருமேனி முழுவதும் அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள். பூரண அலங்காரத்தில் விளங்கும் இறைவனுக்கு  ஷோடச உபசாரங்களும் சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். இரவு ஒன்பது மணியளவில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேகத் திருமேனியின்மீது பூரண சந்திரனின் ஒளி படர்கிறது. தனக்கு சாப விமோசனமளித்து தன்னை ஜடாமுடியில் சூடிய சந்திரசேகரனை, தனது அமிர்தக் கலைகளால் தழுவி வழிபடுகிறான் சந்திரன். இந்த நிகழ்வு சில நிமிடங்கள் நடைபெறும். அப்போது திரளான பக்தர்கள் இறைவனை வழிபட்டுப் பேறுபெறுகிறார்கள். இவ்வாறு அன்னாபிஷேக சிவன்மீது முழுச் சந்திரனின் ஒளிபடர்வது இத்தலத்தில் மட்டும்தான் என்று சொல்லப்படுகிறது.

சிவாலயங்களில் மட்டுமல்ல; நன்மங்கலம் வைணவத் திருத்தலத்திலும் ஐப்பசி அன்னாபிஷேக வைபவம் நடைபெறுகிறது. இத்தலத்தில் வைகுந்தவாசியான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நீலவண்ணப் பெருமாள் என்ற திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார். இத்தலம் சென்னை குரோம்பேட்டையிலிருந்து நெமிலிச் சேரி செல்லும் வழியில் உள்ளது. அன்னாபிஷேகத்தின்போது, பல வண்ணங்களில் அன்னம் பகவானுக்கு சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் அது பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனனாபிஷேகத் திருக்கோலத்தில் பெருமாளை தரிசித்தால், வாழ்நாள் முழுவதும் சுவையான உணவு பசித்த வேளையில் தேடிவருமென்பது ஐதீகம்.

ஐப்பசி அன்னாபிஷேக நிகழ்வில் பங்கு கொண்டு, தங்களால் இயன்ற பொருள் உதவி மற்றும் அரிசி, காய்கறிகளை கோவிலுக்கு வழங்கினால் செல்வச் செழிப்பு ஏற்படும்; வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.

ஐந்தொழில் வல்லான் நிலை - 'நமச்சிவாய’ என்ற சொல்லுக்கு உரிய விளக்கம்<br /><br /><br /><br /><br /><br /><br />
(நடராசர் சிலை- ஓரு தத்துவ விளக்கம்)
Induisms Foto
Induism hat 2 neue Fotos hinzugefügt.

ஐந்தொழில் வல்லான் நிலை – ‘நமச்சிவாய’ என்ற சொல்லுக்கு உரிய விளக்கம்
(நடராசர் சிலை- ஓரு தத்துவ விளக்கம்)
_________________________________________

நடராசர் சிலை – ஆடல்வல்லான் சிலை – கூத்தர்பெருமான்சிலை – பதினெண்சித்தர்களின் செயல்நிலை சித்தாந்தத்தின் தத்துவ விளக்கமே! ஆகும்.

பதினெண்சித்தர்களின் உருவ வழிபாட்டுக் கொள்கையின் மிகப் பெரிய செயல் விளக்கச் சிலையே இந்த ஆடல்வல்லான் சிலை.

இறைவனுக்குரிய ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல், என்ற ஐந்தொழில்களின் விளக்கமாகத்தான் இந்த ஆடல் வல்லான் சிலை உருவாக்கப்பட்டது.

1.வலக்கையில் உள்ள உடுக்கை ஒலி = ஆக்கல் தொழிலை விளக்குகிறது

2.இரண்டாவது வலதுகையின் வாழ்த்துகின்ற தோற்றம் = காத்தல் தொழிலைக் குறிக்கிறது.

3.மேல் இடைக்கையில் உள்ள சுடர் நெருப்பு = அழித்தலைக் குறிக்கிறது.

4.கீழ் இடக்கையும், முயலகனை மிதிக்கும் வலது காலும் மறைத்தலைக் குறிக்கிறது.

குறிப்பு:- கீழ் இடக்கை மட்டும்தான் மறைத்தலைக் குறிக்கிறது என்றும், முயலகனை மிதிக்கும் வலதுகால் கொடியனவற்றை ஒடுக்குதல் என்ற தத்துவத்தைக் குறிக்கின்றது என்றும் பதினெண்சித்தர்களின் வாக்குகளிலும், வாக்கியங்களிலும், வாசகங்களிலும், நான்மறைகளிலும் மிகத் தெளிவாக குறிக்கப்படுகின்றன.

அதாவது நமசிவாய என்ற ஐந்தெழுத்து: நமச்சிவாய என்ற ஆறு எழுத்தாக வடிவப்படும்போது இந்த நடராசர் ஆறுவகை இறைமைச் செயல் நிலை விளக்கத்தை வழங்கிறது.

5. இடக்காலின் தூக்கிய திருவடி அருளுதல் எனும் தத்துவத்தை விளக்குகிறது. இந்த இடக்கால் “தூக்கிய திருவடி” அல்லது “குஞ்சிதபாதம்” எனப்படும். வலக்கால் ‘அனைத்தையும் ஒடுக்கி மறைக்கின்ற் ‘ஆடியபாதம்’ எனப்படும். சிறப்பாக, முயலகனின் (அரக்கன்) ஆட்டங்களை எல்லாம் ‘அடக்கிய பாதம்’ ஒடுக்கிய பாதம்’ அவனால் விளந்த அச்சங்களையெல்லாம் மறைத்த பாதம் அல்லது ‘அழித்த பாதம்’ எனப்படும்.

6. இப்படி 1.ஆக்கல், 2. காத்தல், 3. அழித்தல், 4. ஒடுக்குதல் அல்லது மறைத்தல் 5. அருளல், என்று ஐந்தொழில்களை செய்யும் இறைவனின் நிலையை விளக்கும் இந்த நடராசர்சிலை ‘ஐந்தொழில் வல்லான் சிலை’ அல்லது ‘ஐந்தொழில் வல்லான் நிலை’ என்று சிறப்பிக்கப்படுகிறது.

நமசிவாய – நமச்சிவாய – என்ற சொல்லின் பொருள் விளக்கம்

இதே நடராசர் சிலையினை ‘நமச்சிவாய’ என்ற சொல்லுக்கு உரிய விளக்கமாகவும் விளக்கிக் காட்டியுள்ளார்கள் பதினெண்சித்தர்கள்.

ந – ஆக்கல் – வலது மேல் கை

ம – காத்தல் – வலது கீழ்க் கை

சி – அழித்தல் – மேல் இடக்கை

வா – மறைத்தல் – கீழ் இடக்கை

ய – அருளுதல் – தூக்கிய இடக்கால்

ச் – ஒடுக்குதல் – ஊன்றிய வலதுகால்

இப்படி ஐந்தொழில் வல்லான் சிலை, ஆறு தொழில்களை விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.

குறிப்பு:- இதைத்தான் பதினெண்சித்தர்கள் ஐந்தும் ஆறும் அறியாதவன், ஐந்தை ஆறாக்கத் தெரியாதவன், ஐந்தும் ஆறும் ஒன்றென உணரத் தெரியாதவன் .. என்று குறிக்கிறார்கள்.

ஆடல் வல்லான், கூத்தர் பெருமான், தாண்டவ மூர்த்தி, நடராசர், ஆடும்பெருமான், மன்றாடியார்,.., என்று பல பெயர்கள் பதினெண்சித்தர்களின் குருபாரம்பரியத்தில் உள்ளன.

———————————————————
உங்களுக்குத் தெரியுமா!

நடராசர் சிலையும், ஆயிரத்தெட்டு சிவாலயங்களும்

நடராசர் சிலை ஆயிரத்தெட்டு வடிவ வேறுபாடுகளைக்கொண்டு வடிக்கப்பட்டு அமைக்கப்பட்ட ஆலயங்களே ஆயிரத்தெட்டு சீவாலயங்கள்.
———————————————

-ஞானாச்சாரியார்
‘அன்பு சித்தர்’

————————————————————————————————————————————————————–

டராஜப் பெருமானின் திருநடனத்தைக் கண்டுகளிக்கும் பெரும்பேறினைப் பெற்றவர் பதஞ்சலி முனிவர். பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷன்தான் பதஞ்சலி முனிவராக அவதரித்தார் என்று புராணம் கூறும்.

ஒருசமயம் மகாவிஷ்ணு ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருந்தபோது, திடீரென்று அவரது கனம் அதிகரித்ததைக் கண்டு வியந்து அவரது முகத்தைப் பார்த்தார். ஆதிசேஷனின் ஐந்து திருமுகங்களும் மகாவிஷ்ணுவின் திருமுக மண்டலத்தைப் பார்த்தவண்ணமிருந்தன.

மகாவிஷ்ணு முகம்மலர்ந்து புன்னகை பூத்துக்கொண்டிருந்தார். “துயில் கொண்டிருக்கும் வேளையிலும்  புன்னகைப்பதேன்?’ என்னும் அடுத்த சந்தேகமும் ஆதிசேஷனுக்கு ஏற்பட்டது. “இதை எப்படி பகவானிடம் கேட்பது?’ என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, “”ஆதிசேஷா! என்ன என் முகத்தைப் பார்த்தவண்ணம் யோசித்துக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அதிசயித்த ஆதிசேஷன், “பகவான் துயில்கொண்டிருந்தாலும், எல்லாருடைய நிலையையும் அறிந்து அருள்பாலிப்பவரல்லவா’ என்று தெளிந்து, “”சுவாமி, என்மீது துயில்கொண்டிருக்கும் தாங்கள், திடீரென்று கனப்பதற்குக் காரணமென்ன? மேலும், தாங்கள் முகம்மலர்ந்து புன்னகை புரிந்ததன் காரணத்தையும் இந்த அடியேனுக்கு அருள வேண்டும். தங்களுக்கு இடையூறு செய்ததற்கு பொறுத்தருள்க சுவாமி” என்று பணிவுடன் வேண்டினார்.

அதற்கு மகாவிஷ்ணு, “”ஆதிசேஷா, தில்லையம்பதியில் ஆடலரசன் கூத்தபிரான் நடனமாடும் காட்சியைக் கண்டு ரசித்தேன்; மகிழ்ந்தேன்; புன்னகைத்தேன். அதனால் என்னுடல் சற்று கனத்துவிட்டது. அது இப்போது சமநிலை அடைந்திருக்குமே” என்றார்.

“”ஆம் சுவாமி. தாங்கள் அருளியதன் பொருளறிந்தேன் சுவாமி. தாங்கள் கண்ட தில்லைக்கூத்தரின் திருநடனக்காட்சியை தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் கிட்ட தாங்கள் அருளவேண்டும்” என்று ஆதிசேஷன் இறைஞ்சினார்.

“”ஆதிசேஷா, அதற்கு நீ சில காலம் தவமியற்றினால் உனக்கு அந்த பாக்கியம் கிட்டும்” என்றார் திருமால்.

“”தங்களைவிட்டு என்றும் பிரியாமலிருக்கும் என்னால் எப்படி சுவாமி தவம் மேற்கொள்ள முடியும்?”

“”கவலைப்படாதே. நீ மாயஉருவம் கொள்ள அருள்கிறேன். தவம் மேற்கொள்” என்றார் மகாவிஷ்ணு.

மகாவிஷ்ணுவின் அனுமதியுடன் அருளாசி பெற்ற ஆதிசேஷன் மாயத்திருவுரு கொண்டு தவமியற்றினார்.

பலகாலம்  தவம் மேற்கொண்ட ஆதிசேஷன் முன் தோன்றிய ஈசன், “”ஆதிசேஷா, எது குறித்து இத்தகைய கடுந்தவம்?” என்று கேட்டார்.

சிவபெருமானை நேரில் கண்டதில் பேருவகை கொண்ட ஆதிசேஷன், “”ஐயனே, தங்களின் திருநடனத்தை இந்த அடியவன் காண அருள்புரிய வேண்டும்” என்று பணிந்தார்.

“”உன் எண்ணம் நிறைவேறும். நீ பூலோகம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. காசிப முனிவரும் கத்ருதேவியும் என்னை நோக்கித் தவமிருந்து, ஆதிசேஷனாகிய நீயே அவர் களுக்கு மகனாக அவதரிக்க வேண்டுமென்று வரம் கேட்டுள்ளார்கள். எனவே, பாம்பாக கங்கை வழியாகச் சென்று அவர்களுக்கு மகனாகப் பிறப்பாய். பதஞ்சலி என்று பெயர் பெறுவாய். யோக சாஸ்திரங்கள் பல கற்று, உலகிற்குப் பல வியாக்கியானங் களை வழங்குவாய். நீ பதஞ்சலியாக அவதரித்ததும், நீ அவ தரித்த வியாக்ரபுரத்தில் உன் வருகைக்காக புலிக்கால்களுடனும் புலிக்கைகளுடனும் வியாக்கிரபாத முனிவர் காத்துக்கொண்டிருப்பார். அவருடன் சேர்ந்து என்னை வழிபட்டு, என் ஆனந்த நடனத்தை தரிசிப்பாய்” என்று அருளினார்.

ஆதிசேஷன், சிவனின் பாதம் வணங்கி ஆசிபெற்றார். பிறகு வியாக்ரபுரத்தில் காசிப முனிவருக்கும் கத்ருதேவிக்கும் மகனாக அவதரித்தார். அந்த நாள் பங்குனி மாத மூல நட்சத்திரம் என்று புராணம் கூறுகிறது.

வியாக்ரபுரத்தில் அவதரித்த ஆதிசேஷன், பதஞ்சலி என்ற பெயருடன் விளங்கினார். அவருக்கு வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவரின் நட்பு கிடைத்தது. இருவரும் சேர்ந்து தில்லை வந்தார்கள். அங்கே, அவர்கள் விரும்பிய ஆனந்த நர்த்தனத்தைக்கண்டு மெய்ம்மறந்து நின்றார்கள்.

“”ஐயனே, உம் ஆனந்த நர்த்தனத்தைக் காணும் பேறு பெற்றோம். தங்களின் திருநடனத்தை என்றென்றும் தரிசிக்கும் பாக்கியம் கிட்ட அருளவேண்டும். மேலும், தங்களின் திருவடி தரிசனத்தை பக்தர்கள் யாவரும் காண வகை செய்யவேண்டும்” என்று பதஞ்சலியும் வியாக்ரபாதரும் வேண்டினார்கள்.

“”உங்கள் பரந்த மனப்பான்மையை அறிந்து மகிழ்கிறோம். நீவிர் இருவரும் ஸ்ரீபுரம் செல்லுங்கள். (ஸ்ரீபுரம் என்பது திருவாரூர்). அங்கே எம் நடனங்களையும், எம் திருவடி  தரிசனத்தையும் காண்பீர்கள்” என்று அருளினார் இறைவன்.

இறைவன் அருளியதுபோல் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள். அங்கே எங்கு பார்த்தாலும் சிவலிங்கமாகவே இருக்கவே, பதஞ்சலி தன் இடுப்புக்குக்கீழே பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் இடுப்புக்குக்கீழே புலிக்கால்கள் மற்றும் புலிவால் தோற்றத்துடன் சென்று அன்னை கமலாம்பாளை வழிபட்டார்கள்.

அம்பாள், அவர்கள் பக்தியைப் போற்றி, மண்ணால் லிங்கத்தை அமைத்து வழிபட அருளாசி வழங்கினாள். விமலாக்க வைரம் என்கிற அந்த தேவலோக மண்ணால் விளமல் என்ற இடத்தில் பதஞ்சலி லிங்கத்தை அமைக்க, இருவரும் வழிபட்டார்கள்.

அப்போது, சிவபெருமான் அங்கே காட்சி கொடுத்தார். இறைவன் அஜபா நர்த்தனம் ஆடும்போது தன் ருத்ரபாதத்தைக் காட்டினார். இந்தக் காட்சியை மகாவிஷ்ணு, பிரம்மன், முசுகுந்த சக்கரவர்த்தி, தேவாதி தேவர்கள் என அனைவரும் கண்டுரசித்தார்கள்.

பதஞ்சலி முனிவருக்கு, திருவாரூர் அருகிலுள்ள விளமல் திருத்தலத்தில் தியாகராஜர் ருத்ரபாத தரிசனம் காட்டிய தினம் பங்குனி உத்திரத்திருநாள் என்று புராணம் கூறுகிறது. சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்துநின்ற இத்தல சிவாலயத்தில், பதஞ்சலி முனிவருக்கு தனிச்சந்நிதி உள்ளது. இவரை வழிபட்டால் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்பர்.

பதஞ்சலி முனிவர், நந்திதேவரிடம் உபதேசம் பெற்றார். அதன்விளைவாக யோக சூத்திரங் களையும், பாணினி சூத்திரத்திற்கு “பாஷ்யம்’ என்ற இலக்கண விவரங்களையும் மற்றும் பல நூல்களையும் இயற்றினார்.

விளமல் திருத்தலத்தில் பங்குனி உத்திரத் திருநாளில் பாத தரிசனம் கண்டதுபோல, பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் ஈசனுக்குரிய திருவாதிரைத் திருநாளில் ஆண்டவனின் திருநடனத்தைக் கண்டு பேறுபெற்றார்கள் என்று புராணம் கூறுகிறது.

ஸ்ரீநடராஜரின் தாண்டவத்தின்போது பதஞ்சலியும் வியாக்ரபாதரும் இருபக்கங்களிலும் நின்று வணங்கி, சிவதாண்டவத்தில் முழுவது மாகக் கலந்தார்கள். பதஞ்சலி முனிவர் சமாதி அடைந்ததாக சில திருத்தலங்கள் உள்ளன.

அவற்றில் ஒன்று திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவில். இவ்வாலயத்தில் பிரம்மன் சந்நிதிக்கு அருகில் பதஞ்சலி சமாதி உள்ளது. தவிர, ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதர் கோவிலில் மூன்றா வது பிராகாரத்தில் பதஞ்சலி முனிவர் சமாதியும் தனிச்சந்நிதியும் உள்ளது. சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலிலும் பதஞ்சலி சமாதி உள்ளதாகக் கூறப் படுகிறது.

பல திருத்தலங்களில் சிவபெருமானின் திருநடனத்தை தரிசித்த பதஞ்சலிமுனிவர், பல யோகக்கலை நூல்களையும், சூத்திரங்களையும் இயற்றியபின் வைகுண்டம் சென்று, தன் மாய உருவினைக் கலைத்து மகாவிஷ்ணு எடுத்த ஒவ்வொரு அவதாரத்திலும் அவருக்குத் துணை யாகச் செயல்பட்டார் என்று புராணம் கூறுகிறது.

சிவபெருமானை அபிஷேகப் பிரியர் என்பர். பொதுவாக சிவாலயங்களில், பிரதோஷத்தன்றும் விசேஷ நாட்களிலும் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதைக் காண்கிறோம். இந்த அபிஷேக வகைகளில் பலவிதங்கள் உள்ளன என்று சிவாகமம் கூறுகிறது.

பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், பழரசம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசி மாவு, நல்லெண்ணெய், புனித நதி தீர்த்தம் ஆகிய பதினாறு வகை பொருட்களை சிவலிங்கத்திற்கு அபிஷேகிக்க வேண்டுமென்று லிங்கபுராணம் கூறுகிறது.

மகாசிவராத்திரியானது நான்கு காலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு  காலத்திற்கும் ஒவ்வொரு வகை அபிஷேகங்கள், அலங்காரங்கள், நிவேதனங்கள் சமர்ப்பணம் செய்யப் படுகின்றன.

முதல் ஜாமத்தில் (மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை) இறைவனுக்கு பஞ்ச கவ்வியத்தால் அபிஷேகம் நடைபெறும். சந்தனம், வில்வம், தாமரை மலர்களால் அலங்காரம் செய்வர். சிவப்பு பட் டாடை அணிவிப்பர். அன்னம், பலகாரங்கள் நிவேதனம் செய்வர். ரிக்வேதம் ஓதுவார் கள். விளக்கெண்ணெய் தீபம் ஏற்றப்படும். அப்போது பக்தர்கள் சிவபுராணத்தைப் பாராயணம் செய்வது புண்ணிய பலன்களைத் தரும். இக்காலத்தில் சோமாஸ்கந்தரையும் வழிபடவேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் (இரவு 9.00 மணி முதல் 12.00 மணி வரை) சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால் கலந்த பஞ்சாமிர்தம் ஆகியவற்றை அபிஷேகம் செய்வர். சிவலிங்கத்தின்மீது பச்சைக்கற்பூரம் பூசுவர். மஞ்சள் நிற பருத்தி ஆடையை அணிவிப்பர். பாயசமும் லட்டும் நிவேதிப்பர். அப்போது, ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பிக்கப்படுகிறது. இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்றுவர். யஜுர் வேதம் ஓதுவார்கள். வழிபாட்டிற்கு தாமரை மற்றும் வில்வ மலர்களைப் பயன்படுத்துவார்கள். பலாப் பழத்தை நிவேதிப்பார்கள்.

மூன்றாம் ஜாமத்தில் (இரவு 12.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை) லிங்கோத்பவரை வழிபடுதல் சிறப்பாகும். இது லிங்கோத்பவ காலம் எனப்படுகிறது. திருவண்ணாமலையில் இந்த நேரத்தில்தான் லிங்கோத்பவ உற்பத்தி ஆயிற்றாம். மார்க்கண்டேயரைக் காக்க சிவபெருமான் காலசம்ஹாரராக வெளிப்பட்டதும் இந்த நேரத்தில்தான் என்று புராணம் கூறுகிறது. இந்த மூன்றாம் காலத்தில் சிவலிங்கத்திற்கு தேனாபிஷேகம் செய்வர். சந்தனம் பூசுவர். வெள்ளை நிற கம்பளி ஆடை அணிவிப்பர். மாவுடன் நெய் கலந்து செய்த பலகாரங்களும், பாயசமும் நிவேதனம் செய்யப்படும். நெய் விளக்கேற்றி, கும்ப தீபம் காட்டுவார்கள்.

அறுகு மற்றும் தாழம்பூவைப் பயன்படுத்துவர். மாதுளம்பழம் நிவேதனம் செய்யப்படும். சாமவேதம் ஓதுவர்.

மூல லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதுடன் கருவறைக்குப் பின்னுள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். நெய்யபிஷேகம் செய்தவுடன் வெந்நீரால் அபிஷேகம் செய்து, பின் கம்பளி ஆடையை அணிவிப்பர். தாழம்பூ சாற்றப்படும். பொதுவாக சிவனுக்கு தாழம்பூ சாற்றுவதில்லை. வருடத்திற்கு ஒரே ஒருமுறை மட்டும் இந்தக் காலத்தில் தாழம்பூ சாற்றப் படுவதை தரிசிக்கலாம். லிங்கோத்பவருக்கு நெய்பூசி அபிஷேகிக்கும்போது ஸ்ரீருத்ரம் ஜெபிப்பார்கள். அந்த சமயத்தில் பக்தர்கள் லிங்கபுராண திருக்குறுந்தொகையையும் ஓதுவதால் புனிதம் சேரும். லிங்கோத்பவருக்கு எள்சாதம், சிவந்த நிறமுள்ள பழங்கள், நெற்பொரியும் வெல்லமும் சேர்த்து தயாரித்த பொரி உருண்டைகள், சுண்டல் ஆகியவற்றை நிவேதிப்பார்கள்.

நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.00 மணி வரை) செய்யப்படும் பூஜை மிகவும் முக்கியமானது. கரும்புச்சாறால் அபிஷேகம் செய்து கஸ்தூரி பூசுவார்கள். பச்சை நிற மலராடைகள் சாற்றுவார்கள். கோதுமை, நெய், சர்க்கரை சேர்த்துச் செய்த பலகாரங்களை நிவேதிப்பார்கள். நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவார்கள். மகாமேரு தீபம் என்ற தத்துவதீப ஆராதனை நடைபெறும். வாழைப்பழம் உள்ளிட்ட எல்லாவிதமான பழங்களையும் நிவேதனம் செய்வர். அதர்வண வேதம் பாராயணம் செய்யப்படும். பக்தர்கள் திருநாவுக்கரசர் அருளிய போற்றித் திருத்தாண்டகத்தை பாராயணம் செய்தால் முக்திக்கு வழிகாட்டும்.

சிவராத்திரி என்பதற்கு மங்களமான இரவு, இன்பம் தரும் இரவு என்று பொருள் சொல்லப்படுகிறது.
சிவராத்திரி காலங்களில் நடைபெறும் அபிஷேகங்கள் தவிர, மேலும் சில அபிஷேகங்கள் உண்டு. சிவாகமம் கூறும் அந்த அபிஷேக நியதிகள் சற்று சிரமமாக இருந்தாலும், புகழ்பெற்ற சிவாலயங்களில் அந்த பத்தொன்பது விதமான அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த சிறப்பு அபிஷேகத்தின்போது 19 மேடைகள் அமைத்து, 19 கலசங்களில் புனித நீர் நிரப்பி, அந்தக் கலசங்களில் ஒவ்வொரு பொருட்களையும் இட்டு, மந்திரங்கள் ஜெபித்து, கலச நீரினை சிவலிங்கத்திற்கு அபிஷேகிப்பர்.

வஜ்ரம், மாணிக்கம், முத்து, இந்திர நீலம், பத்மராகம், பவளம், புஷ்பராகம், வைடூர்யம், ஸ்படிகம் ஆகியவற்றை கலசநீரிலிட்டு மந்திரம் சொல்வர். அந்தப் புனிதத் தீர்த்தமே ரத்னோதகம் எனப்படும்.

பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம், ஈயம், இரும்பு ஆகியவை இடப்பட்ட நீர் கொண்ட கலசம் லோகோதகம்.

பச்சை, நற்செங்கற்பொடி, பொன்னரிதாரம், மனோசிலை, கோரோசனை ஆகியவை கலந்த நீர் கொண்டது தாகோதகம்.

சாமை, தினை, எள், குறுவை சம்பா, அறுவாதம், யவநெல், கடுகு, செந்நெல் ஆகியவை கலந்த நீர் பீஜோதகம்.

முத்தக்காசு, கச்சோலம், சமுத்ரபச்சை, குங்குமப்பூ ஆகியவை கலந்த நீர் சுத்தோதகம்.

கடல் மண், மலை மண், ஆனைக்கோட்டு மண், புனிதத்தல மண், ஆற்று மண், தர்ப்பையடி மண், நண்டளை மண்- இப்படி புனித மண் கலந்த  நீரினை மிருதோதகம் என்பர்.

விஷ்ணுகிராந்தி, மஞ்சள், ஆனை வணங்கி, நெருஞ்சி, செங்கழுநீர், வாகையிலை, கருநெய்தல் ஆகியவை ஊறிய நீர் மார்ஜனோதகம்.

வெண்கடுகு, அறுகு, தர்ப்பை, பிள்ளைப் பூண்டு, தாமரைப்பூ ஆகியவை கொண்ட நீர் பரிமார்ஜனோதகம்.

தமால இலை, வன்னி இலை, துளசி, கரிசலாங்கண்ணி, வில்வம், நாயுருவி போன்றவை ஊறிய நீர் பத்திரோதகம்.

செண்கப்பூ, நிலத்தாமரை, புன்னைப்பூ, நந்தியாவட்டை, மகிழம்பூ, நாகப் பூ, பாதிரிப்பூ, வெள்ளெருக்கு, மல்லிகை ஆகிய மலர்கள் ஊறிய நீர் புஷ்போதகம்.

செங்கழுநீர், அகில், சந்தனம், முத்தக்காசு, வெட்டிவேர், கற்பூரம், குங்குமப்பூ ஆகியவை கலந்த நீர் மான்யோதகம்.

சூலம், வச்சிரம், கத்திமணி, துறட்டி, பாசம், பரிசை ஆகிய ஆயுதங்களைப் போட்ட நீர் அஸ்திரோதகம்.

மாம்பழம், மாதுளம்பழம், வாழை, எலுமிச்சை, பலாப்பழம், தேங்காய்த்துருவல் ஆகியவை ஊறிய நீர் பலோதகம்.

நாவல், பாதிரி, அரசு, அத்தி, பலாசு, ஆல் ஆகியவற்றின் பட்டைகள் ஊறிய நீர் காஷாயோதகம்.

தேன்மெழுகு, குறிஞ்சித் தேன்மெழுகு, பெருந்தேன் மெழுகு, கிருஷ்ணாப்பிரம், விஜ்ஜிராப்பிரம், லோகாப்பிரம், வாணக்கெந்தகம், சுரைக்காய் கந்தகம் ஆகியவை ஊறிய நீர் சுர்க்கோதகம்.

ஆனைக்கெந்தகம், சூரிய காந்தம், சந்திர காந்தம், அயக்காந்தம், ஊசிக்காந்தம், பொன் காந்தம் ஆகியவற்றுடன் சேர்ந்த நீர் காந்தோதகம்.

சந்தனவேர், நொச்சி வேர், நச்சுப்புல் வேர், வெட்டி வேர், கீழ்க்காய் வேர், நெல்லி வேர் ஆகியவை ஊறிய நீர் மூலோதகம்.

பஞ்சகவ்யம், கூருச்சப்பட்டை, குச்சலம் பட்டை, தர்ப்பை, மயிர்க் கொன்றை, நாயுருவி, கையாந்தகரை, கோரோசனை ஆகியவை ஊறிய நீர் சாந்தியோதகம்.

வெள்ளை லோத்தி கிராம்பு ஊறிய நீர் புஷ்கரோதகம் எனப்படும்.

கோதுமை, குளச்செந்நெல், சந்தனாதித் தைலம், நெல்லிமுள்ளி, மஞ்சள், மாவிலைகள் தனித்தனியாகப் போட்ட நீர் ஐந்து உதகங்களாகக் கொள்ளப்படும்.

மேற்கண்ட பொருட்களை சுத்தமான நீரில் தனித்தனி கலசத்தில் (குடம்) போட்டு, பூஜை செய்து, ஆகமங்களில் கூறியபடி வேதபாராயணம் ஓதி, பயபக்தியுடன் தெய்வத் திருமேனிக்கு (சிவலிங்கம்) அபிஷேகம் செய்வதனால் உலகமெங்கும் சுபிட்சங்கள் கூடும்; அமைதி நிலவும்.

பதினோரு ருத்ர ஜெபத்துடன் இந்த அபிஷேகத்தைச் செய்வார்கள். பூஜைக்குரிய பொருட்களை பக்தர்கள் அளித்து, இந்த வழிபாட்டில் கலந்துகொண்டால் சுகமான வாழ்வும், புனிதமும் சேரும்.

சிவராத்திரி வழிபாடு செய்வதனால் கிட்டும் பலன்கள் பற்றி சாஸ்திரங்கள் பலவாறு புகழ்கின்றன. மாசி மாத தேய்பிறை சதுர்த்த சியான மகாசிவராத்திரி நள்ளிரவு பதினான்கு நாழிகையில் செய்யும் சிவவழிபாடு கோடி பிரம்மஹத்தி தோஷங்களைக்கூட போக்குமளவு புனிதமானது.

விஷ்ணுவும் பிரம்மனும் “யார் பெரியவர்?’ என்று போட்டியிட்டபோது, சிவன் ஜோதி வடிவாக அடிமுடி காணாதவனாக நின்ற காலமே சிவராத்திரி.

பிரளய காலத்தில் உலகம் நீரில் மூழ்கியதும், மீண்டும் உலகம் தோன்ற வேண்டுமென்று ஓரிரவின் நான்கு ஜாமங்களிலும் உமையவள் விழித்திருந்து சிவபூஜை செய்து பலன் பெற்ற நாள் சிவராத்திரி. இது கிருத யுகத்திற்கு முன்னர் நடந்த நிகழ்வாகும்.

திரேதா யுகத்துக்குமுன் முருகனும், துவாபர யுகத்துக்குமுன் விநாயகரும், கலியுகத்திற்குமுன் திருமாலும் சிவபூஜை செய்து, பிரளய காலத்தில் மூழ்கிய உலகம் மீண்டும் தோன்ற வழிவகுத்தார்கள் என்று லிங்கபுராணம் கூறுகிறது.

பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்டதால் சிவபெருமான் மயங்கினார். உமையவள் பக்கத்திலிருந்து ஆசுவாசப்படுத்தி, நான்கு காலமும் கண்விழித்து தன் முந்தானையால் விசிறிக்கொண்டிருந்தாள். அதனால், சிவனின் மயக்கம் தெளிந்தது. உமையவளுடன் தேவர்களும் அப்போது சிவபெருமானைப் பூஜித்தார்கள். திரயோதசி மாலை வேளையில் சந்தியா நடனம் ஆடினார். அதைத் தொடர்ந்து வந்த சதுர்த்தசி இரவு நான்கு காலங்களிலும் தேவர்கள் ஈசனை அர்ச்சித்து பூஜை செய்தார்கள். அந்த நாள் மகாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

மாசி மாத மகாசிவராத்திரியைப்போல் ஒவ்வொரு மாதம் வரும் சிவராத்திரியும் போற்றப்படுகிறது.

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியாலும்; வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சூரியனாலும்;

ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசானனாலும்; ஆடி மாத தேய்பிறை சிவராத்திரி முருகனாலும்; ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரனாலும்; புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரி ஆதிசேஷனாலும்; ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி இந்திரனாலும்; கார்த்திகை மாத இரண்டு சப்தமி திதியும், தேய்பிறை அஷ்டமியும் சரஸ்வதியாலும்; மார்கழி மாத இரண்டு மாத சிவராத்திரிகள் மற்றும் வளர்பிறை, தேய்பிறையில் வரும் சதுர்த்தசிகள் லட்சுமியாலும்; தை மாத வளர்பிறை திரிதியை நந்திதேவராலும்; மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி தேவர்களாலும்; பங்குனி வளர்பிறை திரிதியை சிவராத்திரி குபேரனாலும் வழிபடப்பட்டது என்று லிங்கபுராணம் கூறுகிறது.

ஒருமுறை மகாசிவராத்திரி விரதமிருந்து, நான்கு காலபூஜையில் கலந்துகொண்டு, தங்களால் இயன்ற பொருளுதவி, தொண்டு செய்தால் நூறு ஏகாதசி விரதமிருந்த பலன் கிட்டுவதுடன் சிவனருளும் பெறலாம் என்று சிவாகமம் கூறுகிறது.


மும்மூர்த்திகளில் முதன்மையானவராகப் போற்றப்படும் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களில் சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையது. அன்றைய தினம் உணவை விடுத்து விரதமிருந்து, நான்கு யாமமும் உறங்காமல் விழித்திருந்து சிவபூஜை செய்தல் சிறப்புடையது. நான்கு யாமமும் விழித்திருக்க முடியாதவர்கள் லிங்கோற்பவ காலம் வரையிலாவது விழித்திருக்க வேண்டும்.

லிங்கோற்பவ காலம் என்பது, நள்ளிரவுக்கு முன்னுள்ள ஒரு நாழிகையும், பின்னுள்ள ஒரு நாழிகையும் உள்ளடக்கிய காலப் பகுதியைக் குறிக்கும். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நள்ளிரவில்தான் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றியருளினார் என்பதால், இந்த இரவில் உலகெங்கிலுமுள்ள லிங்கங்களில் தோன்றுகிறார் என்பது ஐதீகம். ஆகவேதான் அன்றைய தினம் லிங்கோற்பவ காலத்தில் சிவ வழிபாடு செய்யப்படுகிறது. சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

எல்லா சிவாலயங்களிலும் சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்றாலும், சிவராத்திரி தலங்கள் என்று ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருக்கோகர்ணம், திருவைகாவூர் ஆகிய தலங்கள் போற்றப்படுகின்றன.

கும்பகோணம்- திருவையாறு வழித் தடத்திலுள்ள சுவாமிமலையிலிருந்து வடக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவைகாவூர். பாடல்பெற்ற தலமான இது வில்வாரண்ய க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு புராண வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. அறிந்தோ அறியாமலோ சிவராத்திரியன்று விழித்திருந்து சிவனை பூஜிப்போர் முக்தி பெறுவர் என்பதை விளக்குவதாகவும் அவ்வரலாறு அமைந்துள்ளது.

தவநிதி என்ற முனிவர் இத்தலத்தில் தங்கியிருந்து இறைவழிபாடு செய்துவந்தார். ஒருநாள் அவ்வழியே வந்த வேடன் ஒருவன் மான் ஒன்றைக் கண்டு அதைத் துரத்தி வந்தான். வேடனுக்கு அஞ்சிய மான் கோவிலுக்குள் நுழைந்து முனிவரிடம் அடைக்கலம் புகுந்தது. மானைக் கொல்ல வந்த வேடன் அதற்குத் தடையாய் முனிவர் இருந்ததைக்கண்டு கோப மடைந்து அவரைத் தாக்க முயன்றான். தன்மேல் பக்திகொண்ட முனிவரைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமான் புலி வடிவம் எடுத்து வேடனைத் துரத்தினார். வேடன், புலியிடமிருந்து தப்பிப்பதற்காக கோவிலுக்குள்ளிருந்த வில்வ மரத்திலேறி அமர்ந்துகொண்டான். அவனைத் துரத்திக்கொண்டு வந்த புலி வடிவிலிருந்த சிவபெருமானும் அந்த மரத்தின் கீழே நிற்க, வேடன் மரத்தைவிட்டுக் கீழிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இரவு நேரமாயிற்று. வேடனைப் பசியும் தூக்கமும் வாட்டின. புலி அந்த இடத்தைவிட்டு நகராததால் அதை விரட்டுவதற்காக வேடன் வில்வ மரத்திலிருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து புலியின்மேல் போட்டுக் கொண்டே இருந்தான். இரவு முழுவதும் அவன் போட்ட இலைகள் புலிவடிவில் இருந்த சிவபெருமான்மீதே விழுந்தன. அன்று சிவராத்திரி நாள். இரவு முழுவதும் வேடன் பசியுடன், நித்திரையின்றி வில்வ இலைகளை சிவபெருமான்மேல் போட்டதால், அவனையறியாமலே அவனுக்கு புண்ணியம் கிட்டியது. சிவபெருமான் வேடனுக்கு காட்சிதந்து மோட்சம்  அளித்தார்.

விதிப்படி அன்று அதிகாலை வேடனுக்கு ஆயுள் முடியவேண்டிய நேரம். அவன் உயிரைப் பறிக்க எமதர்மன் கோவிலுக்குள் வந்தான். நந்தி தேவர் அவனைத் தடுக்கவில்லை. எமதர்மன் வேடனது உயிரைக் கவர வந்திருப்பது கண்டு சினந்த சிவபெருமான், கையில் கோலுடன் தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றி யமனை விரட்டினார். எமன் அங்கிருந்து அகன்றான்.

எமனைக் கோவிலுக்குள் அனுமதித்த நந்தி தேவர்மீது ஈசனின் கோபம் திரும்பியது. சிவபெருமான் கோபத்திற்கு அஞ்சிய நந்திதேவர் தன் மூச்சுக் காற்றால் எமனைக் கட்டுப்படுத்தினார். எமன் தன்னை மன்னித்தருளும்படி ஈசனை வேண்ட, அவர் எமனை விடுவித்து அருள்பாலித்தார். பின்னர் எமன் அவ்வாலயத்தின் எதிரே தன் பெயரால் தீர்த்தம் அமைத்து, அதில் நீராடி சிவபெருமானை வழிபட்டுத் தன் இருப்பிடம் சென்றான்.

இத்தலத்தில் மகா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றிரவு நான்கு கால விசேஷ பூஜைகள் நடைபெறும்.

சிவராத்திரி விரதமிருந்து சிறப்பான பலனைப் பெற்றவன் முசுகுந்தன் என்பது வரலாறு.

ஒரு வில்வமரத்தடியில் சிவபெருமானும் பார்வதிதேவியும் அமர்ந்திருந்தனர். அந்த மரத்தின்மீது உட்கார்ந்திருந்த குரங்கு தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே இரவு முழுவதும் மரத்திலிருந்து வில்வ இலைகளைப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருந்தது. அந்த இலைகள் மரத்தின் கீழே அமர்ந்திருந்த சிவபெருமான்- பார்வதி இருவர்மீதும் விழுந்தன. சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது விசேஷம். இரவு முழுவதும் விழித்திருந்து வில்வ இலையால் தனக்கு அர்ச்சனை செய்ததால் மகிழ்ந்த சிவபெருமான் குரங்கின்மீது கருணைகொண்டு, “”நீ அடுத்த பிறவியில் புகழ்மிக்க சக்கரவர்த்தியாய்ப் பிறப் பாய்” என வரமருளினார்.

வரம்பெற்ற குரங்கு, “”நான் சக்கரவர்த்தியாகப் பிறந்தாலும் என் முகம் குரங்கு முகமாகவே விளங்கவேண்டும்” என வேண்டியது. மேலும் முசுகுந்தன் என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்றும், கடைசிவரை தான் சிவராத்திரி விரதமிருக்க அருள்புரிய வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டான். அதன்படியே அவன் தொடர்ந்து சிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டதன் பலனாக சிவபதம் அடைந்தான்.

தேவர்களும் அனுஷ்டித்த இவ்விரத நன்னாளின் சிறப்புகள் அநேகம்.

அமாவாசைக்கோ பௌர்ணமிக்கோ முந்திய பதினான்காம் நாள் சதுர்த்தசி திதி. இது தேய்பிறை என்றால் மறுநாள் அமாவாசை.

அது சந்திரன் முழுமையாக மறையும் நாள். வளர்பிறை சதுர்த்தசி என்றால் மறுநாள் பௌர்ணமி. அது சந்திரன் முழுமையாகத் தெரியும் நாள். தொடக்கம்- முடிவு என இரண்டையும் நிறைவு செய்பவர் சிவ பெருமானே என்பதைக் குறிப்பதாக சதுர்த்தசி திதியில் சிவராத்திரி தினம் அமைகிறது.

துன்பங்களைத் தரும் ஆசாபாசங்களை- உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து அறுக்கும் இரவே சிவராத்திரி. இருளாகிய கொடிய ஆணவ மலத்தைக் குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதையே சிவராத்திரி நமக்கு விளக்குகிறது.

01-02-14


திசிவம் அருவுருவாய் விளங்கும் திருவுருவே லிங்கத்திருமேனி என்று கூறப் படுகிறது.

பல்வேறு லிங்கத் திருமேனிகளில் “தாராலிங் கம்’ மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது. இது உருளை வடிவில் இல்லாமல், பாணத்தில் பட்டை பட்டையாய் காட்சிதரும். இதில் பலவகை உண்டு.

பாணத்தில் நான்கு பட்டைகள் கொண்ட லிங்கத்தை வேதலிங்கம் என்று போற்றுவர். பாடல்பெற்ற சக்கரப்பள்ளி திருத்தலத்தின் மூலவர், சதுரமான பட்டைலிங்கமாகத் திகழ்கி றார். கோவை காரமடை ரங்கநாதர் ஆலயத்தில் நாற்பட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். இதில் திருமால் காட்சி தருவதாகவும் சொல்வர். நான்கு பட்டைகள் கொண்ட லிங்கம், நான்கு வேதங்களைக் குறிப்பது.

எட்டுப் பட்டைகள் கொண்ட லிங்கம் அஷ்டதாரா எனப்படும். நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியவற்றை இது குறிக்கும். மேலும் இது எட்டு பைரவர்களையும், சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களையும் குறிப்பதுடன், எண் திசை பாலகர்களையும் குறிக்கும் என்பர். காஞ்சி கைலாசநாதர் ஆலயம், திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயம், சிதம்பரம் நவலிங்க சந்நிதி போன்ற இடங்களில் அஷ்டதாரா லிங்கங்களை தரிசிக்கலாம்.

பதினாறு பட்டைகளுடன் திகழும் லிங்கத்தினை சோடஷலிங்கம் என்று போற்றுவர்; சந்திரகலா லிங்கம் என்றும் சொல்வர். சிதம்பரம் நவலிங்க சந்நிதியில் இதைக் காணலாம். மேலும் பொன்பரப்பி திருத்தலத்திலும் தரிசிக்கலாம். ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கமானது 5.5 அடி உயரத்தில், பிரம்மா, விஷ்ணு பீடங்கள்மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளும் இவ்வாறு இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இந்தத் திருமேனியை கைகளில் தட்டினால் வெண்கல ஒலி எழுவது பிரத்யேகச் சிறப்பு. சேலம்- ஆத்தூர், கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் அம்மையகரம் என்ற இடத்தில் அமைந்துள்ள சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் இந்த லிங்கம் உள்ளது. மேலும், சிறுகனூர்- திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலய வளாகத்திலுள்ள கைலாசநாதர் கோவிலில், பதினாறு பட்டைகள் கொண்ட சோடஷலிங் கம் சமதரையில் (ஆவுடையில் இல்லாமல்) உள்ளதை தரிசிக்கலாம். இந்த சோடஷ லிங்கத்தை தரிசித்தால் புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நல்ல மக்கட்செல்வம், பொன், துணிவு, ஆரோக்கியமான வாழ்வு, தானியங்கள், நற்செயல்கள், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, நீண்ட ஆயுள் ஆகிய பதினாறு பேறுகள் கிட்டுமென்பர்.

32 பட்டைகளுடன் காட்சிதரும் லிங்கத்தை தர்மதாரா லிங்கம் என்பர்; தருமலிங்கம்  என்றும் சொல்வர். காஞ்சிமாநகரிலுள்ள சிவாலயத்தில் 32 பட்டைகள் கொண்ட சிவலிங்கத்தை தரிசிக்கலாம். இதற்கு 32 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்தால் அனைத்து வகை நலன்களும் பெறலாம்.

64 பட்டைகளுடன் திகழும் அபூர்வ லிங்கத்திருமேனி மிகவும் போற்றப்படுகிறது. இது 64 கலைகள், 64 லீலாவினோதங்களைக் குறிப்பது. யோகினி லிங்கம் என்றும் இதை அழைப்பர். இந்த லிங்கத்தை காஞ்சியம்பதியில் தரிசிக்கலாம்.

தங்கத்தாலான சிவலிங்கம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிதம்பர ரகசியத்திற்குக் கீழே, ஓரடி உயரத்தில் உள்ளது. ஏகமுகலிங் கமாகத் திகழும் இதற்கு, உச்சிவேளையில் ஒருகால பூஜை மட்டும் நடைபெறும்.

வெள்ளியினாலான லிங்கம் பூஜித லிங்கம் எனப்படும். இது தமிழகத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது. நேபாளத்தில் காட்மாண்டில் பசுபதிநாதர் கோவிலுக்கு அருகிலுள்ள கோரக்கநாதர் ஆலயத்தில் இது உள்ளது.

பூவுலகில் மனிதர்கள் சிவலிங்க வழிபாடு செய்வதுபோல், தேவலோகத்திலும் தேவர்கள் லிங்க வழிபாடு செய்வதாகப் புராணம் கூறுகிறது. அதற்காக தேவலோக சிற்பியிடம் ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பிய லிங்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். இந்திரன் பதுமராக லிங்கத்தையும்; எமதர்மன் கோமேதக லிங்கத்தையும்; விஷ்ணு இந்திர லிங்கத்தையும்; வாயுதேவன் பித்தளை லிங்கத்தையும்; சந்திரன் முத்து லிங்கத்தையும்; பிரம்மன், குபேரன், சரஸ்வதி முதலானோர் சொர்ண லிங்கத்தையும்; நாகர்கள் பவள லிங்கத்தையும்; அஸ்வினி தேவர்கள் மண்ணாலான லிங்கத்தையும்; ருத்திரர்கள் திருவெண்ணீறு லிங்கத்தையும்; மகாலட்சுமி நெய்யிலான லிங்கத்தையும் பெற்றனர்.

தேவர்கள் தங்களுக்குரிய லிங்கங்களைப் பெற்று தேவலோகத்தில் வழிபட்டாலும், அவர்கள் பூலோகத்திற்கு வந்து சிவ வழிபாடு செய்த தலங்களும் பலவுள்ளன.

காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட கச்சிநெறிக்காடு தலத்தில் அருள்புரியும் சத்தியவரதேஸ்வரரை இந்திரனும் புதனும் வழிபட்டார்கள். அதேபோல் காஞ்சி தலத்திலுள்ள கச்சி அநேக தங்கவரதம் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசனை குபேரன் வழிபட்டார். சென்னை பாடியிலுள்ள திருவலிதாதேஸ்வரரை ராமபிரான், சூரியன், சந்திரன், இந்திரன் முதலானோர் வழிபட்டுப் பேறுபெற்றிருக்கிறார்கள்.

பண்ருட்டியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருத்துறையூர் பசுபதீஸ்வரரை சூரியன், நாரதர், வசிஷ்டர், அகத்தியர் முதலானோரும்; சென்னை- திருவான்மியூர் மருந்தீஸ்வரரை சூரியன், தேவர்கள், பிருங்கி முனிவர் முதலானோரும்; கடலூர் அருகேயுள்ள திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரரை அக்னி, கங்கை, அகத்தியர், வியாக்ரபாதர் ஆகியோரும் வழிபட்டுப் பேறு பெற்றிருக்கிறார்கள்.

பிரம்மன், முருகன், பிருகுமுனிவர், வசிஷ்டர், வியாசர், அகத்தியர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் அருள்புரியும் சிவலோக தியாகேசரை வழிபட்டார்கள்.

வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருப்புன்கூர் சிவலோகநாதரை பிரம்மன், இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, பதஞ்சலி, வியாக்கிரபாதர், சப்தகன்னியர்கள் வழிபட்டிருக்கிறார்கள். மயிலாடுதுறை- பொறையாறு வழியிலுள்ள செம்பனார்கோவிலில் அருள்புரியும் ஈசன் ஸ்ரீசெம்பொன்பள்ளியாரை இந்திரன், பிரம்மன், குபேரன், அகத்தியர், வசிஷ்டர் முதலானோர் வழிபட்டுப் பேறுகள் பெற்றுள்ளார்கள்.

மேலும், வண்டு, நண்டு, சிலந்தி, யானை, எலி, பசு, கருடன் போன்றவை வழிபட்ட தலங்களும் உள்ளன. இத்தல சிவலிங்கத் திருமேனியில், மேற்கண்டவை வழிபட்டதற்கான தழும்புகள் காணப்படுகின்றன.

சிவலிங்கமானது இறையியலின் மூலாதாரமான தத்துவம். சிவலிங்க வழிபாடு எல்லா நன்மைகளையும் தந்து, இறுதியில் முக்தியையும் தரும்.

ருசமயம் கயிலை மலையில் பரமசிவனும் பார்வதியும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஆண்- பெண் பூதகணங்கள், “சொக்கட்டான் ஆடி மேலும் மகிழுங்கள்’ என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

அதன்படி பரமசிவனும் பார்வதியும் எதிரெதிரில் அமர்ந்து சொக்கட்டான் விளையாடியபோது, ஒரு கட்டத்தில் பார்வதி தோற்கும் நிலையில் இருந்தாள்.

அதை சமாளிப்பதற்காக, சிவபெருமானின் கவனம் சற்றுநேரம் தன் அழகில் லயிக்கும்படி செய்தாள் பார்வதி. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சொக்கட்டான் காய்களை தனக்கு சாதகமாக மாற்றி வைத்துக்கொண்டாள்.

பின்னர் காய்களை சாமர்த்தியமாக நகர்த்தி பரமசிவனைத் தோற்கடித்தாள் பார்வதி. உடனே எழுந்துவிட்டார் பரமசிவன்.

இந்த சம்பவம் நடந்ததற்கு ஆதாரமாக, மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பைக்கு வடமேற்கே 11 கிலோமீட்டர் தூரத்தில், நடுக்கடலிலுள்ள எலிபெண்டா தீவின் குகைக் கோவிலில் பரமசிவன்- பார்வதி சொக்கட்டான் ஆடும் சிற்பம் உள்ளது.

இதேபோல் மத்தியப் பிரதேச மாநிலம், எல்லோரா குகையிலுள்ள கயிலாயநாதர் கோவிலில், பரமசிவன்- பார்வதி சொக்கட்டான் ஆடும் மிகப் பழமையான வண்ண ஓவியம் உள்ளது.

புராண நூல்களில் பரமசிவன்- பார்வதி சொக்கட்டான் ஆடியதற்கான ஆதாரங்கள் காணப்பெறவில்லை. நாயன்மார்கள் யாரும் இச்சம்பவம் பற்றி பாடியதாகத் தெரியவில்லை. இப்படி ஒரு கற்பனைக்கதை எப்படி உருவானது? செவிவழி கேட்ட இக்கதையை அக்காலக் கலைஞர்கள் சிற்பமாகவும் ஓவியமாகவும் படைத்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.

இந்த சிற்பம்- ஓவியங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், அதிர்ஷ்ட தேவதை நிலையற்றவள் என்பதையும், எதிலும் நிதானமும் சமபாவமும் தேவை என்பதையும்தான்!


மும்மூர்த்திகளில் முதன்மையானவராகப் போற்றப்படும் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களில் சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையது. அன்றைய தினம் உணவை விடுத்து விரதமிருந்து, நான்கு யாமமும் உறங்காமல் விழித்திருந்து சிவபூஜை செய்தல் சிறப்புடையது. நான்கு யாமமும் விழித்திருக்க முடியாதவர்கள் லிங்கோற்பவ காலம் வரையிலாவது விழித்திருக்க வேண்டும்.

லிங்கோற்பவ காலம் என்பது, நள்ளிரவுக்கு முன்னுள்ள ஒரு நாழிகையும், பின்னுள்ள ஒரு நாழிகையும் உள்ளடக்கிய காலப் பகுதியைக் குறிக்கும். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நள்ளிரவில்தான் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றியருளினார் என்பதால், இந்த இரவில் உலகெங்கிலுமுள்ள லிங்கங்களில் தோன்றுகிறார் என்பது ஐதீகம். ஆகவேதான் அன்றைய தினம் லிங்கோற்பவ காலத்தில் சிவ வழிபாடு செய்யப்படுகிறது. சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

எல்லா சிவாலயங்களிலும் சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்றாலும், சிவராத்திரி தலங்கள் என்று ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருக்கோகர்ணம், திருவைகாவூர் ஆகிய தலங்கள் போற்றப்படுகின்றன.

கும்பகோணம்- திருவையாறு வழித் தடத்திலுள்ள சுவாமிமலையிலிருந்து வடக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவைகாவூர். பாடல்பெற்ற தலமான இது வில்வாரண்ய க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு புராண வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. அறிந்தோ அறியாமலோ சிவராத்திரியன்று விழித்திருந்து சிவனை பூஜிப்போர் முக்தி பெறுவர் என்பதை விளக்குவதாகவும் அவ்வரலாறு அமைந்துள்ளது.

தவநிதி என்ற முனிவர் இத்தலத்தில் தங்கியிருந்து இறைவழிபாடு செய்துவந்தார். ஒருநாள் அவ்வழியே வந்த வேடன் ஒருவன் மான் ஒன்றைக் கண்டு அதைத் துரத்தி வந்தான். வேடனுக்கு அஞ்சிய மான் கோவிலுக்குள் நுழைந்து முனிவரிடம் அடைக்கலம் புகுந்தது. மானைக் கொல்ல வந்த வேடன் அதற்குத் தடையாய் முனிவர் இருந்ததைக்கண்டு கோப மடைந்து அவரைத் தாக்க முயன்றான். தன்மேல் பக்திகொண்ட முனிவரைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமான் புலி வடிவம் எடுத்து வேடனைத் துரத்தினார். வேடன், புலியிடமிருந்து தப்பிப்பதற்காக கோவிலுக்குள்ளிருந்த வில்வ மரத்திலேறி அமர்ந்துகொண்டான். அவனைத் துரத்திக்கொண்டு வந்த புலி வடிவிலிருந்த சிவபெருமானும் அந்த மரத்தின் கீழே நிற்க, வேடன் மரத்தைவிட்டுக் கீழிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இரவு நேரமாயிற்று. வேடனைப் பசியும் தூக்கமும் வாட்டின. புலி அந்த இடத்தைவிட்டு நகராததால் அதை விரட்டுவதற்காக வேடன் வில்வ மரத்திலிருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து புலியின்மேல் போட்டுக் கொண்டே இருந்தான். இரவு முழுவதும் அவன் போட்ட இலைகள் புலிவடிவில் இருந்த சிவபெருமான்மீதே விழுந்தன. அன்று சிவராத்திரி நாள். இரவு முழுவதும் வேடன் பசியுடன், நித்திரையின்றி வில்வ இலைகளை சிவபெருமான்மேல் போட்டதால், அவனையறியாமலே அவனுக்கு புண்ணியம் கிட்டியது. சிவபெருமான் வேடனுக்கு காட்சிதந்து மோட்சம்  அளித்தார்.

விதிப்படி அன்று அதிகாலை வேடனுக்கு ஆயுள் முடியவேண்டிய நேரம். அவன் உயிரைப் பறிக்க எமதர்மன் கோவிலுக்குள் வந்தான். நந்தி தேவர் அவனைத் தடுக்கவில்லை. எமதர்மன் வேடனது உயிரைக் கவர வந்திருப்பது கண்டு சினந்த சிவபெருமான், கையில் கோலுடன் தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றி யமனை விரட்டினார். எமன் அங்கிருந்து அகன்றான்.

எமனைக் கோவிலுக்குள் அனுமதித்த நந்தி தேவர்மீது ஈசனின் கோபம் திரும்பியது. சிவபெருமான் கோபத்திற்கு அஞ்சிய நந்திதேவர் தன் மூச்சுக் காற்றால் எமனைக் கட்டுப்படுத்தினார். எமன் தன்னை மன்னித்தருளும்படி ஈசனை வேண்ட, அவர் எமனை விடுவித்து அருள்பாலித்தார். பின்னர் எமன் அவ்வாலயத்தின் எதிரே தன் பெயரால் தீர்த்தம் அமைத்து, அதில் நீராடி சிவபெருமானை வழிபட்டுத் தன் இருப்பிடம் சென்றான்.

இத்தலத்தில் மகா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றிரவு நான்கு கால விசேஷ பூஜைகள் நடைபெறும்.

சிவராத்திரி விரதமிருந்து சிறப்பான பலனைப் பெற்றவன் முசுகுந்தன் என்பது வரலாறு.

ஒரு வில்வமரத்தடியில் சிவபெருமானும் பார்வதிதேவியும் அமர்ந்திருந்தனர். அந்த மரத்தின்மீது உட்கார்ந்திருந்த குரங்கு தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே இரவு முழுவதும் மரத்திலிருந்து வில்வ இலைகளைப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருந்தது. அந்த இலைகள் மரத்தின் கீழே அமர்ந்திருந்த சிவபெருமான்- பார்வதி இருவர்மீதும் விழுந்தன. சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது விசேஷம். இரவு முழுவதும் விழித்திருந்து வில்வ இலையால் தனக்கு அர்ச்சனை செய்ததால் மகிழ்ந்த சிவபெருமான் குரங்கின்மீது கருணைகொண்டு, “”நீ அடுத்த பிறவியில் புகழ்மிக்க சக்கரவர்த்தியாய்ப் பிறப் பாய்” என வரமருளினார்.

வரம்பெற்ற குரங்கு, “”நான் சக்கரவர்த்தியாகப் பிறந்தாலும் என் முகம் குரங்கு முகமாகவே விளங்கவேண்டும்” என வேண்டியது. மேலும் முசுகுந்தன் என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்றும், கடைசிவரை தான் சிவராத்திரி விரதமிருக்க அருள்புரிய வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டான். அதன்படியே அவன் தொடர்ந்து சிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டதன் பலனாக சிவபதம் அடைந்தான்.

தேவர்களும் அனுஷ்டித்த இவ்விரத நன்னாளின் சிறப்புகள் அநேகம்.

அமாவாசைக்கோ பௌர்ணமிக்கோ முந்திய பதினான்காம் நாள் சதுர்த்தசி திதி. இது தேய்பிறை என்றால் மறுநாள் அமாவாசை.

அது சந்திரன் முழுமையாக மறையும் நாள். வளர்பிறை சதுர்த்தசி என்றால் மறுநாள் பௌர்ணமி. அது சந்திரன் முழுமையாகத் தெரியும் நாள். தொடக்கம்- முடிவு என இரண்டையும் நிறைவு செய்பவர் சிவ பெருமானே என்பதைக் குறிப்பதாக சதுர்த்தசி திதியில் சிவராத்திரி தினம் அமைகிறது.

துன்பங்களைத் தரும் ஆசாபாசங்களை- உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து அறுக்கும் இரவே சிவராத்திரி. இருளாகிய கொடிய ஆணவ மலத்தைக் குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதையே சிவராத்திரி நமக்கு விளக்குகிறது.

சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார விரதம் என சிவ விரதங்கள் எட்டு வகைப்படும் என்று கந்தபுராணத்தின் உபதேச காண்டம் கூறுகிறது.

விரதங்கள் அனைத்திலும் மிகவும் மகிமைவாய்ந்தது சிவராத்திரி விரதமாகும்.

இந்த சிவராத்திரியின் சிறப்பினை சிவபெருமானே விஷ்ணு பகவானுக்குக் கூறியதாக புராண வரலாறு கூறுகிறது. சிவராத்திரி விரத மகிமை குறித்துப் பல கதைகள் உள்ளன. அவற்றிலொரு சுவாரசியமான கதையைக் காண்போமா?

மகாசிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சிவராத்திரியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. நாள் முழுவதும் அலைந்தும் ஒரு மிருகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. பசியால் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி நொந்தவாறு திரும்பிக்கொண்டிருந்த அவன், வழியிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தினான்.

ஏதாவது மிருகம் அந்த நீர்நிலைக்கு வரும்.

அதைக்கொன்று எடுத்துச்செல்லலாம் என்ற நம்பிக்கையுடன், சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரத்திலேறி உட்கார்ந்துகொண்டான். அது வில்வ மரம் என்பதும், அதன்கீழ் ஒரு சிவலிங்கம் இருப்பதும் அவனுக்குத் தெரியாது.

வேடன் உறங்காமல் மிருகத்துக்காகக் காத்திருந்தான். அப்போது ஒரு பெண்மான் நீர்நிலைக்கு வந்தது. அது முதல் சாமம் முடிவடையும் நேரம். மானைக் கண்ட வேடன் அம்பை எடுத்து வில்லில் பூட்டினான்.

அவனது அசைவினால் ஒரு வில்வ இலையும் சிறிது தண்ணீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன.

வேடன் தன்னை குறிபார்ப்பதை அறிந்த மான், “”வேடனே, என் இளம்குட்டிகள் என்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். தயவுசெய்து என்னைக் கொல்லாதே” என்று வேண்டியது.

“”மானே, என் குடும்பத்தினரின் பசியைப் போக்கவேண்டியது எனது கடமை. உன்னைக் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்றான் வேடன்.

அதற்கு அந்தப் பெண்மான், “”அப்படியென்றால் எனக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். என் குட்டிகளை இளைய பெண்மானிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். என்னை நம்புங்கள். என் குட்டிகள்மீது சத்தியம்” என்றது.

மானின் வேண்டுகோளுக்கு வேடன் இசைந் தான். மான் தன் இருப்பிடம் நோக்கி ஓடியது.

அந்த மானை எதிர்பார்த்து தூங்காமல் காத்துக்கொண்டிருந்தபோது, மற்றொரு பெண் மான் தண்ணீர் பருக வந்தது.

அதைக்கொல்ல அம்பை எடுத்த போது வில்வ இலையும் தண்ணீரும் லிங்கத்தின்மீது விழுந்தன. அது இரண்டாவது சாமம் முடிவடையும் நேரம். ஓசையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மான் வேடன் தன்மீது குறிவைப்பதைக் கண்டு திகைத்து, “”வேடனே, என்னைக் கொல்லாதீர்கள். என் மூத்தாளைத் தேடி இங்குவந்தேன். அவள் குட்டிகள் என் பொறுப்பில் இருக்கின்றன.

அவற்றை அவளிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு நீங்கள் என்னைக் கொல்லலாம்” என்றது. வேடன் அதற்கும் அனுமதி தந்தான்.

மூன்றாம் சாமம் முடியும் வேளை யில் ஒரு ஆண் மான் நீர் பருக வந்தது. அதைக்கண்ட வேடன் வில்லை எடுத்தபோது, வில்வ இலையும் சிறிது நீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின்மீது விழுந்தன.

வேடன் தன்னைக் கொல்லப் போவதை அறிந்த ஆண் மான், “”ஐயா, என் இரு மனைவிகளையும் குட்டிகளையும் தகுந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு என்னைக் கொல்லுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டது. அதற்கும் அனுமதியளித்த வேடன், அந்த மான்கள் ஒன்றின்மீது ஒன்று வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்தபடி, மான்களை எதிர்பார்த்து உறங்காமல் மரத்தில் அமர்ந்திருந்தான்.

தங்கள் இருப்பிடம் திரும்பிய மான்கள் நடந்த நிகழ்ச்சியைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டன. “”வேடனுக்கு பலியாக நான் செல்கிறேன்” என்று ஒரு மான் சொல்ல, “”இல்லை, நான்தான் போவேன்” என்றது இன்னொன்று. இப்படி மூன்று மான்களுமே விவாதித்தன.

ஒருவர் உயிரைத் தியாகம் செய்து மற்ற இருவர் உயிர் வாழ்வதைவிட தங்கள் சத்தியத் தைக் காப்பாற்ற மூவருமே வேடனிடம் செல்வ தென்று தீர்மானித்தன.

பெற்றோர்கள் பலியாகச் செல்லும்போது தாங்களும் உயிர்வாழ விரும்பவில்லை எனக்கூறி, குட்டி மான்களும் அவற்றைப் பின்தொடர்ந்து சென்றன.

நான்காவது சாமம் முடிவடையும் நேரம். மான்கள் கூட்டமாக வருவதைக் கண்ட வேடன் மகிழ்ந்து வில்லையும் அம்பையும் எடுத்தபோது, சிவலிங்கத்தின்மீது தண்ணீரும் வில்வ இலையும் விழுந்தன.

நான்கு சாமங்களிலும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத் திற்கு பூஜை செய்கிறோம் என்றோ, பூஜையின் மகிமை பற்றியோ அறியாமல் வேடன் பூஜை செய்திருக்கிறான்.

நித்திரையின்றி செய்த இந்த பூஜையின் காரணமாக சிவனருள் கிட்டி, அவனுக்கு ஞானம் பிறந்தது.

வேடன் இருக்குமிடத்துக்கு வந்துசேர்ந்த மான்கள் அவனிடம், “”எங்களைக் கொன்று உங்கள் குடும்பத்தினருடன் பசியாறி மகிழவேண்டும். நாங்கள் செய்த சத்தியத்தின்படி திரும்பி வந்திருக்கிறோம்” என்றன.

ஞானம் பிறந்துவிட்டபின் வேடனுக்கு மான்களைக் கொல்ல மனம் வருமா? ஐந்தறிவு படைத்த அந்த மிருகங்களின் பண்புக்குமுன் ஆறறிவு படைத்த தான் தாழ்ந்துபோனதை எண்ணி வெட்கித் தலைகுனிந்தான். அந்த மான்களின் சத்தியம் தவறாத தர்மத்திற்கு அடிபணிவதாகக் கூறினான்.

அப்போது சிவபெருமான்

அங்கு காட்சியளித்து, “”வேடனே, உன்னையறியாமல் செய்திருந்தாலும், சிவராத்திரி விரதமிருந்த பலன் உன்னைச் சேரும். அதன்காரணமாக உனக்கு தரிசனம் தந்தேன். நீ வேண்டும் வரத்தைக் கேட்கலாம்” என்றார்.

ஈசனைப் பணிந்த வேடன், “”ஐயனே, என் பாவங்களைப் போக்கியருள வேண்டும்” என்றான்.

அவ்வாறே அருளிய சிவபெருமான், பல செல்வங்களையும் அவனுக்கு வழங்கி, “”வேடனே, இனி உன் பெயர் குகன் என்று வழங்கப்படும். ஸ்ரீமந் நாராயணன் சிறிதுகாலத்தில் இப்பூவுலகில் பிறந்து இங்குவருவார். அவர் உன்னை சகோதரராக ஏற்றுக்கொள்வார்” என்று ஸ்ரீராமர் அவதாரத்தை குறிப்பிட்டுக் கூறி, சிவராத்திரி விரதத்தின் மகிமையை விவரித்து மறைந்தார்.

சிவ தரிசனம் கிட்டிய அந்த மான்களும் மிருக உடலை விடுத்து திவ்ய ரூபம் பெற்று சிவபதவி அடைந்தன. வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் வியாதேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக வரலாறு.

 

மாசிமகம்- 15-2-2014
ஆர். ராதாபாய்

மாசி மாதம் மகத்துவம் மிகுந்த மாதமாகும். அதிலும் மாசிமகம் சிவ பக்தர்களுக்கும் பெருமாள் பக்தர்களுக்கும் சிறப்புவாய்ந்த நாளாகும். நீருக்கடியில் ஒளிக்கப்பட்ட பூமியை, திருமால் வராக அவதாரமெடுத்து மீட்டுவந்தது ஒரு மாசிமக நாளில்தான். செல்வத்துக்கு அதிபதியாய் பேசப்படும் குபேரன், தான் இழந்த செல்வமனைத்தையும் மீளப்பெற்றது மாசிமகத்தில்தான்.

ஆண்டுதோறும் மாசிமகத்தன்று சிவ, விஷ்ணு ஆலயங்களில் உற்சவமூர்த்திகள் தீர்த்தவாரி காண்பார்கள். சக்கரத்தாழ்வார், அஸ்திரதேவர் போன்றோரும் உடன்சென்று தீர்த்தவாரி கண்டு திரும்புவர். ஹரியும் ஹரனும் இவ்வாறு கடலாடுவதற்குப் பின்புலமாய்ச் சொல்லப்படும் புராணக் கதைகளைக் காண்போம்.

ஒருசமயம் உமையவள் மீனவப் பெண்ணாக அவதரித்தாள். அவளை மணம்செய்ய விரும்பிய ஈசன் ராட்சத மீனொன்றை சிருஷ்டித்து மீனவர்களை அச்சுறுத்தினார். பின்பு தானே வல்லமைமிகு மீனவனாக வந்து அந்த மீனை வென்றடக்கி, வெற்றிப் பரிசாக மீனவத் தலைவனின் மகளான உமையை மணந்துகொண்டார். இருவரும் மீனவர்களுக்கு சிவசக்தியாக காட்சி தந்தருளினர்.

மீனவர் தலைவன், அகிலத்துக்கெல்லாம் அன்னையான பார்வதியே தன் மகளாக வந்ததில் பேருவகை அடைந்தாலும், பேணி வளர்த்த தன் பெண்ணைப் பிரிவதையெண்ணி துயரம் கொண்டார். அவரது துயராற்றும் முகமாக ஈசன், “”யாம் ஆண்டுக்கொருமுறை மாசிமகத்தன்று கடலாட வருவோம்; கண்டுமகிழலாம்” என கூறினார்.

இந்நிகழ்வு திருவேட்டக்குடியில் நிகழ்ந்ததாக நம்பப்படுவதால், மாசிமகத்தன்று ஈசனும் உமையும் மீனவப் பெண்ணாகவும் மீனவனாகவும் திருவேட்டக்குடி கடற்கரையில் எழுந்தருள்வார்கள். அச்சமயம் கடற்கரை ஊர்களான மண்டபத்தூர், காளிக்குப்பம், அகரம்பேட்டை மீனவர்கள் ஒன்றுகூடி, தங்கள்குலப் பெண்ணை மணந்த ஈசனை “மாப்ளே, மாப்ளே’ என கூவியழைத்து சொந்தம் கொண்டாடி, தீர்த்தவாரி மேற்கொள்வர்.

பாற்கடல் கடையும்போது அமிர்தத்துக்கு முன்பாக பல்வேறு அரிய பொருட்கள் தோன்றின. மகாலட்சுமியும் தோன்றினாள். அவளை திருமால் மணந்துகொண்டார். காக்கும் கடவுளான விஷ்ணுவே தனக்கு மருமகனானதில் மகிழ்ந்த சமுத்திரராஜன், இனி மகாலட்சுமி வைகுந்தம் சென்றுவிடுவாளே, அவளை எப்படிக் காண்பது என துயரமும் கொண்டார். இதையறிந்த திருமால் அவரைத் தேற்றும்விதமாக, “”ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நாங்கள் கடலாட வருவோம்; கவலைவிடுவீர்” எனக் கூறினார்.

இதன்படிதான் மயிலை கபாலீஸ்வரரும் மாதவப் பெருமாளும் அல்லிக்கேணி அச்சுதனும் கடற்கரையில் தீர்த்தவாரி காண்கின்றனர். அன்று எல்லா தலங்களிலுள்ள மூர்த்திகளும் அருகிலுள்ள கடற்கரையிலோ, ஆற்றங்கரையிலோ தீர்த்தமாட வருவார்கள்.

மாசிமகத்தன்று காந்தசக்தி மிகுந்த புதிய நீரூற்றுகள் தோன்றி கடலில் கலக்கும். எனவே அன்றைய தினம் கடலில் நீராடும்போது, அந்த காந்தசக்தி உடலில் கலந்து உடலையும் மனதையும் புத்துயிர்ப்பு கொள்ளச்செய்யும். இதை மனதில் கொண்டே நம் முன்னோர் மாசிமகத்தன்று கடல் நீராடுவதை ஆன்மிகச் சடங்காக வைத்திருக்கின்றனர்.

மாசிமகம் என்றாலே கும்பகோணம்தான் நினைவுக்கு வரும். இது ஆண்டுதோறும் நடந்தாலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம் உலகப் புகழ்பெற்ற விழாவாகும். அந்தநாளில் மகாமகக்குளத்தில் பன்னிரண்டு சிவாலய மூர்த்திகள் நீராடுவர். காவிரிக் கரையோரங்களில் ஐந்து விஷ்ணு ஆலய மூர்த்திகள் நீராடுவர். (அடுத்த மகாமகம் 2016-ல் நடக்கும்.)

புண்ணிய நதிகளில் நீராட பாவம் தொலையும் என்பது நமது ஐதீகம். புண்ணிய நதிகளுள் கங்கை தனிப்பெருஞ் சிறப்புடையது. பாவம் தொலைப்பதற்கென்றே கங்கைக் கரையிலுள்ள காசியைத் தேடிச்செல்பவர் கள் அநேகம். அத்தகைய காசி நகரத்தவரும் தேடி வந்து நீராடி பாவம் போக்கிக்கொள்ளுமிடம் கும்பகோணம் மகாமகக் குளம். குடந்தையின் மகாமகக் குளத்தில் நீராட பாவமெல்லாம் தொலையும் என புராணங்கள் கூறுகின்றன. அதிலும் மாசி மகத்தன்று இங்கு ஸ்நானம் செய்தால் கங்கையில் நூறு முறை நீராடிய பலன் கிட்டும்; கூடவே அனைத்துப் புண்ணிய நதிகளிலும் பத்தாண்டுகள் நீராடிய பலனும் கிடைக்கும் என்பர். இரண்டு முறை மாசிமகக் குளத்தில் நீராடியவருக்கு வீடுபேறே கிடைத்துவிடும்.

நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்று திருக்கோஷ்டியூர். மாசி மகத்தையொட்டி இத்தல சௌம்ய நாராயணப் பெருமாள் கோவிலில் மூன்று நாட்கள் தெப்போற்சவம் நடைபெறும். இவ்விழாவை ஜோசியர் தெப்பவிழா என்பர்.

கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள குளத்தில் முதல்நாள் முட்டுத்தள்ளுதல் விழா நடைபெறும். அன்று அதிகாலையிலேயே சந்தான கோபாலகிருஷ்ணன் வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் எழுந்தருளி, முட்டுத்தள்ளு வெள்ளோட்டம் கண்டு மாலைவரை குளக்கரை மண்டபத்தில் காட்சி தருவார்.

இரண்டாம் நாள் ஊரக மெல்லணையான் குளக்கரை எழுந்தருளி, காலை ஒருமுறையும் இரவு இரண்டு முறையும் தெப்பத்தில் உலாவருவார். மூன்றாம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இவ்விழா நாட்களில் பக்தர்கள் குளக்கரையில் ஆயிரக்கணக்கில் விளக்குகளை ஏற்றிவைத்து பிரார்த்தனை செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத் தெப்பக்குளத்தில், மாசிமகத்தன்று அப்பரை தெப்பத்தில் எழுந்தருளச் செய்து உலாவரச் செய்வார்கள். அதனால் இதற்கு அப்பர் தெப்பமென்றே பெயர்.

திருவாஞ்சியம் தீர்த்தக்குளத்திற்கு குப்தகங்கை என்று பெயர். கங்கை தன் 999 கலைகளை இக்குளத்தில் கரைத்துவிட்டு மீதி ஒரு கலையைத்தான் கங்கை நதியில் கரைத்தாளாம். இத்தகைய சிறப்புமிகுந்த தெப்பக்குளத்தில் வாஞ்சிநாதர் தெப்பவிழா கண்டபின் எமவாகனத்தில் உலாவருவார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் வள்ளாள மகாராஜாவுக்கு நீத்தார் கடன் செய்யும் சடங்கு மாசிமகத்தன்று நடைபெறும். பிள்ளைப் பேறில்லாத மகாராஜாவுக்கு ஈசனே மகனாக எழுந்தருளி, மேளதாளமில்லாமல் பள்ளிகொண்டாபட்டிலுள்ள கௌதம நதிக் கரைக்குச் சென்று இந்தக் கடன்களை நிறைவு செய்துவருவது வழக்கம்.

திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரர் ஆலயத்தில் காமதகன நிகழ்ச்சியே மாசிமக சிறப்பாகும்.

அன்றைய தினம் ஈசன் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடுவர்.

குபேரன் திருத்தண்டிகை சௌந்தரநாயகி உடனுறை சனத்குமாரேஸ்வரரை வழிபட்டு தான் இழந்த செல்வமனைத்தையும் ஒரு மாசி மகத்தன்று மீண்டும் அடைந்தான். அதனை நினைவுகூரும் விதத்தில் இங்கு மாசிமக விழா நடைபெறும்.

தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசிமக பிரம்மோற்சவ தேர்த் திருவிழா பிரபலமானதாகும். விழாவுக்கு முதல் நாள் தடம்பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில், இவ்விழாவை தொடங்கிவைத்த பராக்கிரம பாண்டியனின் உருவச் சிலையை நான்கு வீதிகளிலும் உலாவரச் செய்து, வீதிகள் சரியாக உள்ளனவா என உறுதி செய்தபின் மறுநாள் தேரோட்டம் நடைபெறும்.

நல்லூர் கல்யாணசுந்தரர் ஆலயத்தின் பின்புறமுள்ள குளத்திற்கு சப்தசாகர தீர்த்தம் எனப் பெயர். கர்ணனின் தாயான குந்தி, தன் மகனை பெட்டியில் வைத்து ஆற்றில்விட்ட பாவம் தொலைப்பதற்காக, ஏழு கடல்களின் நீர் இக்குளத்தில் பொங்கிவரவேண்டுமென ஈசனிடம் வேண்டினாள். அதனையேற்று ஈசனும் அவ்வாறே அருள குந்தி இந்த சப்தசாகர தீர்த்தத்தில் நீராடி புண்ணியம் பெற்றாள். இந்த தெப்பக்குளம் ஈசன் அருளால் சப்தசாகர தீர்த்தமானது ஒரு மாசிமக நன்னாளில்தான். குந்தி மட்டுமல்ல; நாமும் அதில் நீராடிப் பலன் பெறலாம்.

புதுச்சேரி வைத்திக்குப்ப கடற்கரையில், மாசிமகத்தன்று உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உற்சவர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக அணிவகுத்து வந்து தீர்த்தவாரி காண்பர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இவ்விழாவில் சிவன், விஷ்ணு ஆகியோரோடு தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மயிலம் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், புதுவை மணக்குள விநாயகர், அங்காளம்மன் போன்றோரும் இடம்பெறுவர்.

மக நட்சத்திரம் முருகனுக்கும் உகந்த நாளாகும். அன்று விரதமிருந்து முருகனை வழிபடுபவர்களின் பிறவிப்பிணி தீரும். மாசிமகத்தன்று நடை பெறும் பூண்டி முருகன் தேர்த்திருவிழா பிரசித்தமானது. முருகப்பெருமான் தந்தைக்கு உபதேசம் செய்ததும் மாசிமக நாளில்தான். சுவாமிமலையில் மாசிமகத்தன்று இந்நிகழ்வு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. முருகன் வள்ளியை மணந்துகொண்டது மாசிமாத பூச நட்சத்திர நாளில். அதனால் மாசி மாதம் மாங்கல்ய மாதமாக- திருமணத்திற்கு உகந்ததாகத் திகழ்கிறது. (மாசிப்பூசம் 13-2-2014).

இதேபோன்று 18-2-2014 அன்று வரும் மாசி மாத சங்கடஹர சதுர்த்தியும் விசேஷமானது. அன்று கணபதியை வழிபட வினையெல்லாம் விலகும். மறுநாள் (19-2-2014) மாசிமாத சுக்ல பஞ்சமியாகும். அன்று ஞானதேவதையான சரஸ்வதியை நறுமண மலர்களால் அர்ச்சித்து, தூபதீப நைவேத்தியம் செய்து வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

           புராண சம்பவங்களோடு தொடர்புடைய பழமையான தலங்கள் நமது நாடெங்கும் பரந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தலம் ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ரேசி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மலைகள் சூழ்ந்த இப்பகுதியில் பௌனி பிளாக் எனப்படும் குன்றுள்ளது. இந்தக் குன்றில் ஒரு குகை அமைந்துள்ளது. ஷிவ்கோரி (சிவன் குகை) எனப்படும் இந்தக் குகைக்குள்ளே சுயம்புவாகத் தோன்றிய சிவபெருமானின் திருவுருவம் காணப்படுகிறது. பொதுவாக லிங்க வடிவங்கள் சுயம்புவாய் முகிழ்த்ததைத் கண்டிருக்கிறோம். ஆனால் இங்கு சிவபெருமானின் தியானக்கோல முழு வடிவமே சுயம்புவாகக் காணப்படுவது அதிசயம். சுமார் நான்கு மீட்டர் உயரம் கொண்டது!

அருகே லிங்கம், பார்வதி தேவி, விநாயகர், முருகன், நந்தி ஆகியோரின் வடிவங்களும் காணப் படுகின்றன. எல்லாமே தான்தோன்றி வடிவங்கள்தான்; சிற்பியால் செதுக்கப்படாதவை.

இந்தக் குகையே அற்புதம் நிறைந்ததாக உள்ளது. அதாவது, சிவன் கையிலிருக்கும் உடுக்கை போன்ற வடிவில் உள்ளது. ஒரே நேரத்தில் 300 பேர் நுழையுமளவுக்கு குகையின் முன்புற வாயில் அமைந்துள்ளது. போகப்போக அகலம் குறைந்து சிறிதாகி, பிறகு மீண்டும் அகன்று சென்று குன்றின் அடுத்த பகுதியில் முடிவடைகிறது. குகைக்குள் நுழைந்து சிவனை வணங்கிவிட்டு பின்புற வாயிலில் வெளியேறிவிடலாம். இந்தக் குகையின் நீளம் சுமார் 150 மீட்டர்.

இந்தக் குகைக்குள் 33 கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். குகையின் மேற்பகுதி பாம்புத்தோல் போன்று தோற்றம் தருகிறது. சுதர்சன சக்கர வடிவம், காமதேனு வடிவம் போன்றவை இந்தக் குகைக்குள் காணப்படுகின்றன.

“நான் யார் தலையில் கைவைக்கிறேனோ, அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டு’மென்று சிவபெருமானிடம் வரம்பெற்றான் பஸ்மாசுரன். தான் பெற்ற வரத்தை சோதிக்க எண்ணி சிவன் தலைமீதே கைவைக்க முயன்றான். சிவபெருமான் அங்கிருந்து தப்பியோட, பஸ்மாசுரன் விடாமல் துரத்தினான். இதைக்கண்ட மகாவிஷ்ணுவானவர்     மோகினி வடிவம் கொண்டு அசுரனின் எதிரில் வர, மோகினியின் அழகில் மயங்கினான் அசுரன். தந்திரமாக அவனிடம் பேசி, அவன் தலைமேலேயே கைவக்கச் செய்தார் மகாவிஷ்ணு. பஸ்மாசுரன் எரிந்து சாம்பலானான். இந்தப் புராண நிகழ்வு நடந்த இடம் இதுதான் என்கிறார்கள்.

இந்தக் குகைக்குள் வேறொரு வழியும் உள்ளது. அது அமர்நாத் குகையில் சென்று முடிவ தாகக் கூறுகிறார்கள். இதன் வழியேதான் பஞ்சபாண்டவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றார்களாம். தற்போது இந்தக் குகைவழியை அரசாங்கம் தடைசெய்துள்ளது.

மகாசிவராத்திரி விழா இங்கு மிகச் சிறப் பாகக் கொண்டாடப்படும். ஏராளமான பக்தர்கள் இங்கு திரளுவார்கள். சிவன் சிலை யின்மீது, குகையின் மேற்புறத்திலிருந்து எப்போதும் நீர் சொட்டிக்கொண்டிருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறதென்று யாருக்கும் தெரியாது. சிவராத்திரியன்று இது பால்போன்ற வெள்ளை நிறத்தில் விழுந்து சிவனை அபிஷேகிப்பதும் அதிசயமே.

சித்தர்களும் ரிஷிகளும் தவமிருந்த மிகப்பழமையான இந்தக் குகைக் கோவிலை, 2003-ஆம் ஆண்டு முதல் ஒரு திருப்பணிக்குழுவை அமைத்து நிர்வகித்து வருகிறார்கள்.

குன்றின்மீது ரன்சோகௌன் என்னும் கிராமம் உள்ளது. அந்த கிராமம் வரை வாகனப் போக்குவரத்து உண்டு. அங்கி ருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்துசென்றுதான் குகையை அடையவேண்டும். பேட்டரி கார் இயக்குவதற் கான திட்டம் பரிசீலனையில் உள்ளது.

சென்னை- டெல்லி- ஜம்மு- கட்ரா வழியாக சிவன் குகை செல்லலாம். வைஷ்ணவா தேவி கோவில் வழியாகவும் செல்லலாம்.மூன்று வேளைகளுக்குரிய தேவியர்!

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யர் வேதம் இவளுக்குரியது. இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.

குரு- சிஷ்ய உறவின் பெருமை!

அன்னை- தந்தை, கணவன்- மனைவி, அண்ணன்- தங்கை, மாமன்- மாமி போன்ற மனித உறவுகள் யாவும் ஒரு பிறவியோடு முடிந்துபோகிறவை. மாறாக குரு- சிஷ்யனுக்கு இடையே யான உறவு பிறவிகள்தோறும் தொடரும் களங்க மில்லாத உறவாகும். குருவானவர் சிஷ்யனுக்கு அனைத்துமாகி, இறுதியில் பிரம்மமாகவும் ஆகிறார்.

எத்தனை பிறவிகள் எடுத்தாலும் குரு- சிஷ்ய உறவு மட்டும் மாறுவதேயில்லை.

—————————————————————————————————————–


தென்பாண்டி நாட்டின் தெற்குப்பகுதியிலிருக்கும் திருநெல்வேலி பதியின் அருமை பெருமையினை அளவிட முடியாது. “திக்கெல் லாம் புகழுறும் திருநெல்வேலிச் சீமை’ என்பது திருஞானசம்பந்த சுவாமிகளின் திருவாக்கு.

அத்தகைய திருநெல்வேலிச் சீமையின் வடக்கே அமைந்த அழகிய நதி, நிட்சேப நதியாகும்.

“அந்த நதிதன்னில் மன  விருப்போடு சித்திரை விசுவாம் அத்தினத்தில் வந்து படிந்தவர் சாயுச்சியம் பெறுவார் ஐயமில்லை- வழுத்தற் கொண்ணா நிந்தையுறும் பாதகர் காணினும் புனிதராவர் எனில் நிகழ்த்தும் அந்தச்சுந்தர நிட்சேப நதிப்புனல் படிந்தோர் பெறும்பேறு சொல்லுவ தென்னே’

என்றவாறு, நிட்சேப நதியின் பெருமையை, சங்கப்புலவர் மரபில் உதித்த  ச. திருமலைவேற் கவிராயர் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

அத்தகைய நதியின் தென்பகுதியில் கலிங்கப் பட்டி மரத்தோணி ஸ்ரீ அகிலாண்டஸ்வரி சமேத தோணிபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள் ளது.

மரத்தோணி

முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னன் போரில் வெற்றிபெற்று தனது படைகளுடன் திரும்பும்பொழுது, ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதைக்கண்ட மன்னன், தனது நாட்டிற்கு “அனைவருடனும் அகமகிழத் திரும்பவேண்டும்’ என்று ஈசனிடம் முறையிட, ஆற்றங்கரையில் நின்ற வானுயர்ந்த மரம் வேருடன் சாய்ந்து, அக்கரைக்குச் செல்ல தோணிபோல் உதவியதால், இவ்வூருக்கு மரத்தோணி என்று பெயர் வந்தது என்று கூறுகிறார்கள்.

மற்றுமொரு காரணம்

சென்ற நூற்றாண்டில் தமிழ் இலக்கியங்களில் தனித்து விளங்கிய இ.மு. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் “நெல்லை மாவட்ட கோவில் வரலாறு’ என்னும் நூலில், “ஸ்ரீராமபிரானும் சீதையும் லட்சுமணனும் இப்பகுதிக்கு வரும்போது, நிட்சேப நதி வெள்ளம் கரைபுரண்டு வர, ஆற்றைக் கடக்க தென்பகுதியிலுள்ள வேப்பமரம் தோணிபோல் வளைந்துகொடுத்த காரணத்தால் மரத்தோணி என்று பெயர் வந்தது’ என்று பதிவுசெய்துள்ளார். எப்படியிருப்பினும், ஆன்மாக்களை பிறவியெனும் பெருங்கடலிலிருந்து கரையேற்றுவது ஈசனின் கடன். இத்தத்துவத்தை உணர்த்த மரத்தோணி கிராமத்தில் சிவபெருமான் கோவில்கொண்டு திருவருள் செய்கிறார் என்பது பொருத்தமான செயல்தானே.

திருவொற்றியூரானும் திருத்தோணிபுரத்தானும்

தேவார மூவராலும் பாடல்பெற்ற திருத்தலம்- திருஞானசம்பந்த சுவாமிகள் அவதாரம் செய்த அற்புதத் தலம்- பிரம்மாவுடன் தேவர்களும், நவகோள்களும் வந்து வழிபாடு செய்த திருத்தலம் சோழநாட்டு வடகரைத் தலங்களில் ஒன்றான சீர்காழி. இதற்கு பன்னிரண்டு பெயர்கள் உண்டென்று சேக்கிழார் சுவாமிகள் அருளிச்செய்துள்ளார்.

பிரளய காலத்தில் சிவபெருமான், உமை அன்னையோடு சுத்தமாயையைத் தோணியாகக் கொண்டுவந்து, உயிர்கள் உய்யும் வண்ணம் சீர்காழித் தலத்தில் எழுந்தருளினார். எனவே, இத்தலத்திற்கு தோணிபுரம் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு தோணியப்பர் என்பது சிறப் புத் திருநாமம் ஆகும்.

சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்ட சிறப்புடைய தலம்- திருவிளக்குப் பணியின்பொருட்டு தமது கழுத்தினையே அரிய முற்பட்ட கலியநாயனார் அவதாரத் தலம் சென் னைக்கு அருகிலுள்ள திரு வொற்றியூர். மாந்தாதா என்னும் மன்னன் தனது ஆயுளைக் குறைக்கும் பொருட்டு, நாட்டிலுள்ள சிவாலய பூஜை நிகழ்வுகளைக் குறைக்கும் குறிக்கோளுடன் அரசாணை வெளியிட்டான். அதில் அந்த மன்னன் அறியாவண்ணம், “திருவொற்றியூர் நீங்கலாக’ என்று இடைச்செருகலிட்ட எழுத்தறிநாதர் அருள்பாலிக்கும் அற்புத தலம். இங்கு தியாகராஜர் சந்நிதி சிறப்புடையது. வடிவுடைய அன்னை எழுந்தருளியிருக்கும் இத்தலத்தில் மகிழமரம் தலவிருட்சமாகும். பட்டினத்தார் ஆலயத்தினை தன்னகத்தே கொண்ட திருவொற்றியூரில், மூவர் முதலிகளின் தேவாரம் தேனாமிர்தமாகும். ஆளுடைய அரசராகிய ஸ்ரீ அப்பர் சுவாமிகள் நாம் உய்யும் பொருட்டு திருவொற்றியூர் கோமானிடம்,

“மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றிச்
சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும்போது
மதமெனும் பாறை தாக்கி மறியும்போது அறிய வொண்ணா(து)
உனைஉனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே’

என்று பாடித் துதிசெய்கிறார்.

“மனமாகிய தோணியில் அறிவு எனப்படும் கோலை நாட்டி, சினம் எனப்படும் சரக்கை ஏற்றி உறவுகளுடன் செல்லும்போது, மதம் எனப்படும் தீவினை தாக்கி நிலைகுலைந்து இறுதிக்காலத்திற்கு செல்லுவது உறுதி. இதனையெல்லாம் அறியாத நான் என் உணர்விலே, உன்னை எப்போதும் உறுதியுடன் நினைத்து வாழ அருள் செய்வாய் திருஒற்றியூர் பெருமானே’ என்கிறார்.

மேற்கண்ட உயர்ந்த தத்துவங்களைக் கொண்டவர்தான் மரத்தோணி கிராமத்திலும் எழுந்தருளி திருவருள் நல்கும் தோணிபுரீஸ்வரர் பெருமான் ஆவார்.

இறைவன்

“துறையாருங் கடல் தோணிபுரத்தீசன் துளங்கும் இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே’ என்பது ஆளுடைய பிள்ளையாரின் அருள்வாக்கு. மேலும், தோணிபுரீஸ்வரரின் பெருமையை தேவார மூவர் முதலிகளும் ஏனைய அருளாளர்களும் போற்றி மகிழ்கிறார்கள். தோணிபுரீஸ்வரர், தோணியப்பர் என்றழைக்கப்பெறும் சிவபெருமானின் லிங்கத் திருமேனி, இப்பகுதியில் பிரம்மாண்டமான திருமேனியாகும். தோணிபுரீஸ்வரரை தரிசனம் செய்யும்போது “தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தருவான் தத்துவன்’ என்னும் திருமொழி இங்கு மெய்யாகிறது. நம்முடைய வினைகள் யாவும் வீழ்த்தப்பெற்று நல்வழிதனை நலமுடன் காட்டியருளுகிறார் என்பதனை தரிசிப்போர்வழி உணரலாம்.

பிழைபொறுக்கும் பித்தனின் துணையாள் தமிழக பஞ்சபூதத் “தலங்களில் அப்புத்தல மாகத் திகழ்வதும்; “திருநீற்றான் மதில்’ என்னும் புராணச் சிறப்புகொண்ட மதில்சுவர் அமையப் பெற்றதும்; தேவார மூவராலும், ஐயடிகள் காடவர்கோனும், சைவஎல்லப்ப நாவலரும், கச்சியப்ப முனிவரும், அருணகிரிநாதர் மற்றும் காளமேகப் புலவர் போன்றோரால் பாடல்பெற்றதுமான திருவானைக்கா தலத்தில் திருவருள்பாலிக்கும் அன்னையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதே.

திருவாவடுதுறை ஆதீனப்புகழ் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு “அகிலாண்டநாயகி மாலை’ என்ற புகழாரம் ஒன்றைச் சூட்டியுள்ளார். அதில் மீனாட்சி சுந்தரம்பிள்ளை வினோதமான வேண்டுகோளை வைக்கிறார்.

“அகிலாண்ட நாயகி அன்னையே, உன் கணவனுக்கு யாரை எங்கு வைப்பதென்றே தெரியவில்லை. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பித்தன் என்று உன் கணவனைப் பாடியது சரிதான்.

ஏனென்றால், நீ எத்தகைய குணம் உடையவள்! கங்காதேவி எத்தகைய குணம் உடையவள்? நீரில் யாரேனும் தவறி மூழ்கினால் மூன்று முறைமட்டுமே நீராகிய கங்காதேவி அப்பிழையைப் பொறுப்பாள். நீரும் முப்பிழை பொறுக்கும் என்பது பழமொழி. ஆனால் நல்வயல்கள் சூழ்ந்த திருவானைக்காவில் எழுந்தருளி நல்கும் நீயோ, உயிர்கள் செய்யும் பல்வேறு குற்றங் களைப் பொறுத்து அருள் செய்கின்றாயே. உனக்கு தனது உடம்பில் பாதியை மட்டும் கொடுத்துவிட்டு, மூன்றுமுறை மட்டுமே பிழைபொறுக்கும் கங்காதேவியை தலையில் சூடிக்கொண்டாரே’ என்று துதி செய்கிறார்.

“அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை
யணியுருப் பாதியில் வைத்துத்
தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
சடைமுடி வைத்தனன் அதனால்
பிளவியன் மதியஞ்சூடிய பெருமான்
பித்தென்றொரு பெயர் பெற்றான்
களமர்மொய் கழனி சூழ்திரு வானைக்
காவலகி லாண்டநாயகியே.’

அதுபோல மரத்தோணியில் உயிர்கள் செய்யும் எல்லா குற்றங்களையும் பொறுத்துக் காத்தருளும் அன்னை, அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடனே திருவருள் பாலிக்கிறாள்.

அன்னை அகிலாண்டேஸ்வரி இரண்டு திருக்கரங்களுடன் குருபீட அம்சமாக தெற்குநோக்கி எப்போதும் மங்களம் நல்கும் திருக்காட்சி தருகிறாள்.

விநாயகர், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர் ஆகியோருடன் அருள் வழங்கும் மரத்தோணி திருக்கோவிலின் மூலக்கோவில் சிதைவுற்றபிறகு, இப்பகுதியில் குலசேகரப்பேரி என்னும் கிராமத்தில் வாழ்ந்த எ. லிங்கவநாயக்கர் என்னும் பெரியவர் புனர்நிர்மாணம் செய்து, 26-5-1969 அன்று குடமுழுக்கு வைபவத்தை நடத்தியுள்ளார்.

கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீ திருமுருகன் திருப்புகழ் சபை சார்பாக தொடர்ந்து பிரதோஷ வழிபாடு நடத்தப்பெற்று வருகிறது. “பிரதோஷ தரிசனத்திற்கு வரும் அன்பர்களின் வாழ்வில் மங்களங்களை நிறையச் செய்துள்ளார் ஸ்ரீதோணிபுரீஸ்வரர்’ என்று பெருமை பொங்கப் பேசி மகிழ்கிறார்கள் ஸ்ரீதிருமுருகன் திருப்புகழ் சபைக்குழுவினர்.

ஆலயத்துக்கு முன்மண்டபம் அமைத்து மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென்பது இவ்வூர் மக்களின் எதிர்பார்ப்பு. திருப்பணியில் பக்தர்கள் பங்குபெறலாம். தோணியப்பர் அதை நிறைவேற்றி வைப்பார்.

மரத்தோணி தோணிபுரீஸ்வரர் ஆலயத் திற்கு கலிங்கப்பட்டி, திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், சுப்புலாபுரம் வழியாக வந்தடையலாம். ஆட்டோ, மினிபஸ் வசதிகளும் உள்ளன.

ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் கரிவலம் வந்தநல்லூர் திருமுருகன் திருப்புகழ் சபை சார்பாக, மாலை 3.00 மணியளவில் வேன் மற்றும் ஆட்டோக்கள் மூலம் அன்பர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

பிரதோஷ தரிசனத் தொடர்புக்கு:

செ. சுப்பையா- 04636 260500,
பெ. சண்முகம், 99947 92058,
வே. கார்த்திகேயன்- 99434 96038.

—————————————————————————————————————–

          ங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பவன் இறைவன். அவனது நிறைவினை ஆன்மாக்களாகிய நாம் எளிதில் உணர முடிவதில்லை. அதனால் இறைவன் தனது கருணைப் பெருக்கால் தானே பல இடங்களில் மிக்குத் தோன்றி விளங்குகின்றான். அவ்வாறு அவன் தோன்றி விளங்கும் இடங்களே “தலங்கள்’ எனப் பெற்றன.

அருள்சக்தி தேங்கியிருக்கும் இடத்தை முதலில் கண்டவர்கள் சித்தர்கள், முனிவர்கள் ஆவர். பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவரும் தில்லைவனத்தில் நிகழும் ஆனந்த தாண்டவத்தை தரிசித்து உலக மக்கள் அனைவருக்கும் அக்கூத்து பயன்படும்படி செய்தார்கள். தலங்களால் முனிவர்கட்கும், முனிவர்களால் தலங்களுக் கும் விளக்கம் உண்டாகியது. சிறந்த தலங்களி லெல்லாம் இன்றும் சித்தர்கள் தவம்செய்து கொண்டிருப்பதாக சமய நூல்கள் கூறுகின்றன.

அந்த வரிசையில் இளங்கார முனிவர் தவமிருந்து மெய்ஞ்ஞானம் பெற்ற பெருமை வாய்ந்ததும், காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், திருமால், சனி, இந்திரன் முதலானோர் வழிபட்டு பேறு பெற்றதும், சோழ மன்னர்கள் மட்டுமல்லாமல் பாண்டிய மன்னர், பிற மன்னர்களும் கி.பி. 7, 8-ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்ததுமான அற்புதத் தலம்தான் தில்லையாடி.

இறைவன்: சார்ந்தாரைக் காத்தநாதர், சரணாகத ரட்சகர்.

இறைவி: பெரியநாயகி அம்பாள்.

தல விருட்சம்: வில்வமரம், வன்னிமரம்.

தீர்த்தம்: சக்கரதீர்த்தம்.

திருமால் வழிபட்டது முராரியான திருமால் முன்னொரு காலத்தில் இரண்யாசுரன் என்றஅசுரனைக் கொன்றார். அதனால் அவருக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் ஈசனிடம் சக்ராயுதத்தைப் பெற்று, திருக்கடவூர் அருகிலுள்ள தில்லைவனமான தில்லையாடியைச் சார்ந்தார். தன் சக்ராயுதத்தால் இங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, புனல், மலராதி கொண்டு சார்ந்தாரைக் காத்தநாதரை யாளி (குதிரை) வடிவில் அர்ச்சித்து வழிபடலானார். சிவபெருமான் அவர்முன் தோன்றி அவருக்குண்டான வீரஹத்தி தோஷத்தை நீக்கியருளினார். திருமால் உருவாக்கிய தீர்த்தம் சக்கரதீர்த்தம் என்றாயிற்று. தில்லைவனம் என்பது தில்லையாளி என்றானது.

தேவேந்திரன் தில்லைவனநாதரை வணங்கி, “தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடியதுபோல் இந்த தலத்திலும் திருநடனம் புரிய வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டதன் பேரில், இந்திரனுக்காக ஆனந்த நடனம் ஆடியருளியதால் தில்லையாடி என பெயர் பெற்றது. தில்லைவனம், வள்ளியம்மை நகர், தில்லையாளி என்ற பெயர்கள் இருந்தாலும் தற்போது நடைமுறையில் தில்லையாடி என்றே விளங்கப் பெறுகிறது.

சனி பகவான் பூஜித்தது

நவநாயகர்களில் நீதி தவறாத நீதிபதியாக தன் கடமையைச் செய்பவர் சனி பகவான். தன் கடமையைச் செய்கின்ற சனி பகவானுக்கு அபவாதப் பெயர் தான் வருகிறது. இந்த அபவாதப் பெயர் நீங்கவும், தன்னை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் விரும்பிய சனி பகவான், தில்லையாடிக்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி எண்ணற்ற நாட்கள் தவங்கிடந்தார். எம்பெருமானும் சனி பகவானின் அன்பிற்கு எளியராகி, “தன்னை சரணடைந்த அடியார்கட்கு வேண்டுவனவெல்லாம் நல்கும் திறனை’ சனி பகவானுக்கு அருளினார்.


இளங்கார முனிவர் வழிபட்டது

சோழமன்னன் ஆட்சிக்காலத்தில், இளங்காரர் என்பவர் நம்பிக்கைக்குரிய அமைச்சராக பணி யாற்றி வந்தார். சோழமன்னன் திருக்கடையூர் சிவாலயத்தை புதுப்பிக்க எண்ணி, தன் அமைச்சரை திருக்கடையூரிலே இருக்கச் செய்து, பெரும் பொருள் அனுப்பி திருப்பணிகள் பலவும் செய்ய ஆக்ஞாபித்தான். காலை முதல் மாலை வரை திருப்பணிகள் செய்வதைப் பார்வையிட்டு, இரவு தில்லைவனத்திலே தங்கிவிடுவது அமைச்சரின் வழக்கம். அச்சமயம் அவருக்கு இனம் புரியாத உடல்வலி இருந்துகொண்டே இருந்தது. இந்த வலி நிரந்தரமாகி விடுமோ என்ற அச்ச உணர்வுடன் அவரது பணிகளைத் தொடர்ந்து செய்துவந்தார். மருத்துவம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஒருநாள் பணிக்குப் புறப் பட்டபோது மிகுந்த அசதி உண்டாயிற்று. அப்போது, வில்வ மரங்களுக்கிடையே ஒரு லிங்கம் இருப்பதைக் கண்டு, அவரை வழிபட்டு சக்கர தீர்த்தத்தில் நீராடினார். 

அதன்பின்னர் பழையன கழிந்து உடலில் புதிய ரத்தம் செலுத்தியதுபோல் புத்துணர்வு பெற்றார். ஈசனை வணங்கிவிட்டு அவரது பணிக்குச் சென்றார்.

உடல்வலியோடு தவித்த தன்னை உடல் வலிமையோடு உலாவரச் செய்த ஈசனுக்கு கோவில் எழுப்பினால் என்ன என்று சிந்தித்தார் அமைச்சர். மன்னன் தான் எவ்வளவு பணம், பொருள் கேட்டாலும் கொடுக்கிறாரே, அரசனுக்குத் தெரியாமல் இங்கு கோவில் கட்ட பயன்படுத்துவோம் என்று முடிவுசெய்து, திருக்கடையூரிலிருந்து தில்லையாடிக்கு சுரங்கப்பாதை அமைத்து, தில்லையாடி ஈசனுக்கு கோவில் கட்டினார். 

திருக்கடையூரிலும் தில்லையாடியிலும் ஒரே சமயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்றன. ஒரே நாள் ஒரே நேரத்தில் இரு கோவில்களிலும் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கு இரு தினங்களுக்குமுன் அரசரின் கனவில் ஈசன் தோன்றி, “எனது பக்தன் வில்வ வனமான தில்லை வனத்திலே ஆலயம் எழுப்பியுள்ளான். கும்பாபிஷேக நேரத்தில் அங்கும், தீபாராதனை காட்டும் நேரத்தில் திருக்கடையூரிலும் காட்சி தருவேன்’ என்றார். உறக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்த மன்னர் பொழுது விடிந்ததும் தில்லைவனத்திற்குச் சென்றான்.

அங்குள்ள மக்கள் அமைச்சர் இளங் காரரைக் காட்டி, “இவர்தான் கோவில் கட்டினார்’ என்று மன்னனிடம் கூறினர். “இவர் உண்ணும் உணவே எனது பணமாயிற்றே. இவர் எப்படி கோவில் கட்டினார்’ என்று யோசித்த மன்னனுக்கு அப்பொழுதுதான் தெரியவந்தது- ஒரு கோவில் திருப்பணி செலவில் கணக்குகள் காண்பித்து இரு கோவில்களைக் கட்டியுள்ளார் என்று. ஒருபுறம் கோபம், மறுபுறம் வெகுநேர்த்தியாக அனைத்து அம்சங்களும் அழகுற வடிவமைத்த சந்தோஷம். பிறகு மன்னன், “”எனது மூலதனத்தை வைத்து எனக்குத் தெரியாமல் கோவில் கட்டினீர். பரவாயில்லை; அந்தப் புண்ணியத்தை எனக்கு தந்துவிடும்” என்றான்.

“”மன்னா, பணம் தங்களுடையதாய் இருக்கலாம். ஆனால் புண்ணியம் எனக்குத்தான்” என்றார்.

மன்னனுக்கு மேலும் கோபம் வந்தது. ஏவலர்களைப் பார்த்து, “”என் கருத்துணராது செயல்பட்ட அமைச்சரின் கை, கால்களைச் சேதம் செய்க” என்று ஆணையிட்டான். ஏவலர்களும்அவ்வண்ணமே செய்தனர். அப்போது சிவபெருமான் அசரீரியாக, “”அமைச்சர் சிவப்பணி செய்து சிவாலயம் எடுப்பித்தார். அவர் செய்த பணியை நாம் ஏற்றோம்” என்றார். ஏவலர்கள் அமைச்சரின் கை, கால்களை சேதம் செய்தபோது மன்னனின் கண்பார்வை பறிபோனது. “”ஈசனே! எம்பெருமானே! இது என்ன சோதனை? இன்னும் 48 மணி நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமே” என்று புலம்பினான். அதற்கு அமைச்சர், “”நிருதிமூலையில் விநாயகரை நிறுவி வழிபடு; சரியாகிவிடும்” என்றார். அமைச்சர் கூறியதன் பேரில் நிருதி விநாயகரை சிறப்பு பூசனை செய்து மனதார வழிபட்டு மீண்டும் கண்பார்வை பெற்றான். 

பார்வை வந்ததும் இளங்காரருக்கு அம்மையப்பன் காட்சி தந்தார். 

இதைக் கண்டவுடன் தன் குற்றத்தினை உணர்ந்து அமைச்சரிடம் அடிபணிந்தான் மன்னன். அமைச்சரின் வெட்டுண்ட கை, கால்கள் எம்பெருமான் அருளால் மீண்டும் ஒன்றுசேர்ந்தன. இதைக் கண்ணுற்ற அரசன் மனம் மகிழ்ந்தான். 

அதன்பின் அமைச்சரை இத்தலத் திலேயே இருக்கச் செய்து வேண்டுவனவெல்லாம் நல்கி, அரசன் தன் இருப்பிடம் சேர்ந்தான். இளங்கார முனிவர் என்ற திருப்பெயருடன் அவ்வமைச்சர் இத்தலத் திலேயே இருந்துவரலானார். மணிவாசகர் அருள் பெற்றுய்ந்தது போல் இளங்கார முனிவரும் சிவனருள் நிரம்பப் பெற்றார்.

அவர் ஒருசமயம் சிதம்பரம் பொற்சபை யில் ஸ்ரீநடராஜர் திருநடனம் செய்வதை இத்தலத்தில் காணவேண்டும் என்று விரும்பினார். சிற்சபாநாதனும் “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ என்ற திருவாக்கின்படி, இளங்கார முனிவரின் விருப்பின் வண்ணம் தில்லைவனத்தில் ஸ்ரீநடராஜர் நடனமாடினார். இளங்கார முனிவரும் அந்த நடனத்தைக் கண்டு பேரின்ப வெள்ளத்தில் ஆழ்ந்தார். நாள்தோறும் அந்த ஞான நடனத்தைக் கண்டுவரலானார். இவ்வண்ணமே இருந்து இளங்கார முனிவர் குஞ்சிதசரணத்தில் இரண்டறக் கலந்தார் என்று தலபுராணம் கூறுகிறது.

இவ்வரலாற்றினால் இத்தல இறைவனுக்கு ஸ்ரீசார்ந்தாரைக் காத்த சுவாமி என்ற திருநாமம் வழங்கலாயிற்று. 1915-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் தில்லையாடிக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு

கோவிலின் முன்பு சக்கர தீர்த்தம் உள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளோடு அறுபதடி உயரத்தில் வானளாவி விளங்கு கின்றது. அதன் கீழ் இளங்கார முனிவர் ஈசனைவணங்குவதுபோன்ற சிற்பம் காணப்படு கின்றது. அடுத்து இடதுபுறம், கருவறையில் மூலவரான ஸ்ரீசார்ந்தாரைக் காத்த சுவாமி காட்சி அளிக்கிறார். மூலவருக்கு வலப்புறம் சுரங்கப்பாதை உள்ளது. நிருதிமூலையில் சோழ மன்னனுக்கு கண்ணொளி தந்த நேத்ர விநாயகர் கஜப் பிருஷ்ட விமானத்தின்கீழ் சோழ விநாயகர் என்ற திருநாமத்துடன்அருள்புரிகிறார். பொதுவாக சுவாமி சந்நிதி தான் கஜப்பிருஷ்ட விமானத்துடன் அமைந்திருக்கும். இங்கோ சுவாமி இந்திர விமானத்துடனும், சோழ விநாயகர் கஜப்பிருஷ்ட (யானையின் பின்பகுதி போல் அமைப்பு) விமானத்துடன் இருப்பது தனிச்சிறப்பு. சுப்ரமணியர் ஆலயம் தனியாக உள்ளது. சனிபகவான் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. அதற்கு பின்புறம் சூரியனும், பைரவரும் மேற்கு நோக்கி அருள்புரிகிறார் கள். திருநள்ளாறில் உள்ளது போல் சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் மத்தியில் தனிச்சந்நிதியுடன் சனி அருள் புரிகிறார். இதன் இடதுபுறம் வில்வமரம், வலது புறம் வன்னிமரம் உள்ளது. கொடிமரத்தில் திருமால் யாளி வடிவில் ஈசனை வணங்குவதுபோல் பொறிக்கப்பட்டுள்ளது.

தெற்கு நோக்கிய அம்பிகை ஸ்ரீபெரியநாயகி ஆனந்தமாய், அறிவாய், அமுதாய் இன்பம் தரும் நிலையில் அருள்புரிகிறாள். ஆடிப்பூர நாளில் வளையல் அணிவிப்பு நிகழ்ச்சியில் மணப்பேறு, மக்கட்பேறு கிடைக்க அருள்புரிவாள். அம்பாளுக்கு தனிச்சுற்றுடன் கூடிய தனிச்சந்நிதி உள்ளது. வெளி மகா மண்டபத்தில் கோஷ்டத்தில் ஆஞ்சனேயர் அருள்புரிகிறார்.

“நிறைந்த ஆயுளுடன் வாழ திருக்கடையூர்; பூரண ஆரோக்யத்துடன் வாழ தில்லையாடி; அண்ணன் எமதர்மனுக்கு காட்சி தந்தது திருக்கடையூரில்; தம்பி சனி பகவானுக்கு காட்சி தந்தது தில்லையாடியில்’ என்று இறையன்புடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகர். சரணா கதரட்சகராம் ஸ்ரீசார்ந்தாரைக் காத்த நாதர் உடனுறை ஸ்ரீ பெரியநாயகி அம்பாள், அனுக்கிரக சனீஸ்வரரை ஒருசேர தரிசிப்போம். ஒளிமயமாய் வாழ்வோம். ஓம் நமச்சிவாய!

ஆலய தொடர்புக்கு: கல்யாண சுந்தர சிவாச்சாரியார் செல்: 96007 68379.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திலுள்ள திருக்கடையூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில், திருவிடைக் கழி செல்லும் வழியில் உள்ளது தில்லையாடி.         பௌர்ணமி தினம் அம்பிகை வழிபாட்டுக்கு உகந்தது என்றால், கார்த்திகைப் பௌர்ணமி சிவ வழிபாட்டுக்கு உகந்த திருநாள். அது அண்ணாமலையில் புகழ்பெற்ற பெருநாள்!

படைப்புக் கடவுளான பிரம்மதேவனுக்கும், காக்கும் கடவுளான திருமாலுக்குமிடையே “நானே உயர்ந்தவன்’ என்ற பூசல் வந்தபோது, சிவபெருமான் நெடுஞ்ஜோதியாகத் தோன்றி அவர்களின் ஆணவ நிலையகற்றி உண்மையைக் காட்டியருளினார். பின்னர் மலையாக மாறினார். இந்த சம்பவம் கார்த்திகைப் பௌர்ணமியில்தான் நிகழ்ந்தது.

முக்தியடைவது பற்றி ஒரு சிவத்துதி உண்டு.

“தில்லையில் காண- காசியில் இறக்க-சிறக்கும் ஆரூர்தனில் பிறக்க-எல்லையில் பெருமை அருணையை நினைக்கஎய்தலாம் முக்தியென்று நடித்தீர்.’

திருவாரூரில் பிறந்தால் முக்தி கிட்டும்; ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியமில்லை. காசியில் இறந்தால் முக்தி; அதுவும் எல்லாருக்கும் இயலாத ஒன்றே. சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி; அது முயன்றால் அடையக்கூடியதுதான் என்றாலும், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் போன்றவர்களுக்கு எளிதாகாதே. ஆனால் “அருணாசல’ என்று நினைத்தாலே முக்தியாம். ஏழை- பணக்காரன், உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என யார் வேண்டுமானா லும் எங்கிருந்தும்நினைக்கலாம். அதுதான் அருணாசல தல மகிமை!

“நமசிவாய’ என்பது சிவ பஞ்சாட்சரம். “அருணாசல’ என்பதும் சிவ பஞ்சாட்சரமே. ஒருமுறை “அருணாசல’ என்று சொன்னால் ஒரு கோடி “அருணாசல’ நாமம் சொன்னதற்குச் சமம்.

அருணாசல மலையை சிவசக்தி மலை என்பர். அம்பிகை காஞ்சியில் காமாட்சியாய் எழுந்தருளி, மண்ணால் லிங்கம் அமைத்து வழிபட்டு சிவனுடன் ஒன்றிணையும் வரம்வேண்டினாள்.

சிவனோ, “அண்ணாமலையில் உன் தவம் தொடரட்டும்’ என்றார். அதன்படி தேவி தவம்புரிந்து, ஈசனின் இடப்பாகம் பெற்று அர்த்தநாரீஸ்வரியானாள். ஆணும் பெண்ணும் சரிநிகரானவர்கள் என்னும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய தலம் அண்ணாமலை.

நவராத்திரி தேவியான துர்க்கா மகிஷாசுரனை அழிக்கப் பிறந்தவள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரது சக்திகள் ஒன்றிணைந்து உருவான இவள் அண்ணாமலையை வழிபட்டு மேலும் பலம் பெற்றாளாம். மகிஷாசுரமர்தினி கோவிலையும் திருவண்ணாமலையில் தரிசிக்கலாம்.

அருணை என்றால் செம்மை. எனவே இது செந்நிறமலை. செம்மையான மலை. ஞானமலை. ஞானத் தபோதனர்களை- சித்தர்களை தன்பால் ஈர்க்கும் மலை இதுவென்பர். இங்குவந்துஅருள்பெற்றோர் பலர். அவர்களில் ஒருசிலரை சிந்திப்போமா?

 மாணிக்கவாசகர் “திருவெம்பாவை’ என்னும் தெய்வத்திரு நூலை இத்தலத்தில்தான் படைத்தார்.

 சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.

 இவ்வாலய வள்ளால கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிர்விட முயன்றார் அருணகிரிநாதர். முருகப்பெருமான் அவரை தடுத்தாட் கொண்டார். முருகனை மையமாகக் கொண்டு அறுசமயக் கடவுள்களையும் ஒன்றிணைத்து “திருப்புகழ்’ பாடினார் அருணகிரியார். “திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பதுபோல, “திருப்புகழைப் பாடார் ஒரு புகழும் அடையார்’ என்பர்.

 குகை நமச்சிவாயார் என்பவருக்கு “திருவண்ணாமலைக்கு வா’ என்று உத்தரவு கிடைத்தது. அவர் அண்ணாமலை வந்து அருள்பெற்றார். 

 உண்ணாமலை அம்மனிடம் உணவுகேட்டு, அவள் கையாலேயே பொங்கல் உணவு பெற்றவர் குரு நமச்சிவாயர். சிதம்பரம் கோவிலிலிருந்த திரைச்சீலையில் தீப்பிடித்தபோது, திருவண்ணாமலையிலிருந்தே தன் கைகளைப் பிசைந்து அணைத்தவர்.

 தன் 90 வயதுவரை அண்ணாமலையை நாள்தோறும் வலம்வந்து, அருணாசலரை தரிசிக்கும் பேறு பெற்றவர் சோணாசல தேவர்.

 ஊமையாய்ப் பிறந்து, அண்ணாமலையார் அருளால் பாடும் திறன் பெற்று, தில்லையிலே திளைத்து, திருவாரூரில் முக்தி பெற்றவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.

 திருவண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்தவர் ஈசான்ய ஞானதேசிக சுவாமிகள். இருபுறம் புலி இருக்க, தவம் செய்தவர். அப்போதைய ஆங்கிலேய கலெக்டர் ஐடனின் கடும் நோயைத் தீர்த்தவர்.

 இங்குள்ள பாதாள லிங்கம் கரிகால்சோழன் காலத்தில் நிறுவப்பட்டதென்பர். கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் இப்பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அமைத்தார். அந்தப் பணியின் போது இந்த பாதாள லிங்கத்தை அகற்றாமல் காத்தவர் ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்.

 மதுரையிலிருந்த வேங்கடரமணனை “அருணாசல’ என்னும் சொல் ஈர்க்க, திருவண்ணா மலை வந்து, பாதாள லிங்கம் அருகே தவம் செய்து, சேஷாத்ரி சுவாமிகளால் காப்பாற்றப்பட்டு, 

பின்னர் பால் பிராண்டன் என்னும் ஆங்கிலேயரால் உலகமறியப் பெற்றவர் ரமண மகரிஷி. காஞ்சியில் பிறந்து, காமாட்சியின் அவதார மென்று கூறப்பட்டு, பைத்தியம்போல அலைந்து திரிந்து அண்ணாமலை வந்து, பக்தர்களுக்கு வினோதமாக அருளியவர் சேஷாத்ரி சுவாமிகள்.

 உண்ணாமல் உறங் காமல் 12 ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து ஈசனின் அருள்பெற்றவர் ராதாபாய் அம்மையார்.

 திருநெல்வேலியில் பிறந்து, திருவருணையில் முருக தரிசனம் பெற்று, வண்ணமாகப் பல பாடல்களைப் பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

 1,008 முறை அண்ணா மலையை வலம்வந்தவர்- வலம் வரும்போது பல சித்தர்களும் யோகிகளும் சூட்சுமமாக தவம் செய்வதைக் கண்டவர் இசக்கி சுவாமிகள்.

 பூமிக்குள்ளிருந்த புதையலை ஞானக் கண்ணால் பார்த்து, அதைக்கொண்டு அரைகுறையாய் நின்ற அண்ணாமலை வடப் புற கோபுரத்தைக் கட்டிமுடித்தவர்அம்மணியம்மாள்.

 கங்கைக் கரையில் பிறந்து, பறவையை விரட்டுவதற்காக வீசிய கல் அந்தப் பறவை யைக் கொன்றுவிட்டதால் மனவேதனையடைந்து, மனசாந்தி வேண்டி பல தலங்கள், ஞானியரை தரிசித்து, இறுதியாக திருவண்ணா மலை வந்து ரமண மகரிஷி யையும் தரிசித்து, ஒரு குடுகுடுப்பைக்காரன் போன்ற தோற்றத்தில்- இறையருள் பெற்று மற்றவர்க்கும் அருளிய வர் யோகி ராம்சுரத் குமார்.

அண்ணாமலை ஈர்த்த யோகியர் அனேகம்பேர். 

அங்குள்ள செடி, கொடி, மரம், விலங்குகள், பறவைகள் யாவுமே சித்தர்கள் என்று ரமண மகரிஷி கூறியிருக்கிறார். 

ஞானக்கண்ணுள்ளோருக்கு இன்றைக்கும் சித்தர்களின் தரிசனம் கிடைக்கிறதாம்.

கார்த்திகை தீபத்திருநாளில் அண்ணாமலையை நினைப் போம்; அரனருள் பெறுவோம்!

 

மதுரையில் சுழலும் லிங்கம்!இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. நம் கண்களுக்கு புலப்படாத அணுவிலும் அணுவாக உள்ள மிகச்சிறிய பொருளிலும் கூட அவர் வியாபித்திருக்கிறார். ஒருசமயம் அவ்வைப்பிராட்டி, சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. அவ்வையிடம் வந்த பார்வதி, அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான், அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள். இதைக்கேட்ட அவ்வை சிரித்தார்.அம்பிகையிடம், தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே! அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள்! அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன், என்றார். அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது. இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல தோன்றும் என்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டி. கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும், மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு, மானசீகமாக அபிஷேகம் செய்வதாக கற்பனை செய்தபடியே வழிபட்டால், அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு, சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். புராதனமான வரலாறுகள், சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய லீலைகள், காண்போர் வியக்கும் நுணுக்கமான கட்டடக்கலை, அற்புதமான சிற்பங்கள் என கணக்கிலடங்காத சிறப்புக்களுடன், அன்னை மீனாட்சியும், தந்தை சொக்கநாதரும் ஆட்சி செய்யும் புண்ணியத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இந்த ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது.
மதுரையில் சுழலும் லிங்கம்!</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. நம் கண்களுக்கு புலப்படாத அணுவிலும் அணுவாக உள்ள மிகச்சிறிய பொருளிலும் கூட அவர் வியாபித்திருக்கிறார். ஒருசமயம் அவ்வைப்பிராட்டி, சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. அவ்வையிடம் வந்த பார்வதி, அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான், அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள். இதைக்கேட்ட அவ்வை சிரித்தார். </p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>அம்பிகையிடம், தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே! அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள்! அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன், என்றார். அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது. இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல தோன்றும் என்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டி. கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும், மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு, மானசீகமாக அபிஷேகம் செய்வதாக கற்பனை செய்தபடியே வழிபட்டால், அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு, சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். புராதனமான வரலாறுகள், சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய லீலைகள், காண்போர் வியக்கும் நுணுக்கமான கட்டடக்கலை, அற்புதமான சிற்பங்கள் என கணக்கிலடங்காத சிறப்புக்களுடன், அன்னை மீனாட்சியும், தந்தை சொக்கநாதரும் ஆட்சி செய்யும் புண்ணியத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இந்த ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது.
         சிவபெருமானை நோக்கி கயிலை மலையில் கடுந்தவம் புரிந்தான் இலங்கை வேந்தன் இராவணன். அவன் பக்திக்கு மகிழ்ந்த ஈசன் அவன்முன் தோன்றி “வேண்டும் வரம் யாது?’ எனக் கேட்க, “சுவாமி, தாங்கள் எங்கள் நாட்டில் எழுந்தருள வேண்டும்’ என்றான். அதற்கிசைந்த சிவபெருமான் ஒரு லிங்கத்தை அவனிடம் தந்து, “இதை எங்கு நீ தரையில் வைத்தாலும் அந்த இடத்திலேயே குடிகொண்டுவிடுவேன். எனவே நேராக உன் நாட்டுக்கு எடுத்துச் செல்’ என்றருளினார்.

அதைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் தன் நாடு நோக்கிச் செல்ல, அந்த சிவலிங்கத்தை இராவணன் தன் நாட்டில் ஸ்தாபித்துவிட்டால் பின்னர் இராவணனை அழிப்பதென்பது நடவாத காரியமாயிற்றே என்று தேவர்கள் அஞ்சினர். உடனே மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அவர் அவர்களுக்கு அபயம் கூறி புறப் பட்டார்.

தன் நாட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராவணனுக்கு சந்தியாகால கடமைகளைச் செய்யும் நேரம் வந்தது. லிங்கத்தையும் கீழே வைக்கக்கூடாது. என்ன செய்வதென்று அவன் தவித்தபோது, மகாவிஷ்ணு சிறுவன் வடிவில் அங்கு வந்தார். சிறுவனைக் கண்ட இராவணன் மகிழ்ந்து, சற்றுநேரம் லிங்கத்தை வைத்துக்கொண்டிருக்குமாறும்; தான் நித்ய கடமைகளை முடித்துவிட்டு சீக்கிரம் வந்துவிடுவதாகவும் கூறிச்சென்றான். அவன் அகன்றதும் மகாவிஷ்ணு லிங்கத்தை தரையில் வைத்துவிட்டு மறைந்துவிட்டார். திரும்பிவந்த இராவணன் அந்த லிங்கத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றும் இயலாமல் போக மனவருத்தத்துடன் நாடு திரும்பினான்.

இவ்வாறு உருவான லிங்கமே தேவ்கர் என்னுமிடத்தில் வைத்தியநாதர் என்னும் பெயரோடு விளங்குகிறது. தேவ்கர் என்றால் கடவுளின் வீடு என்று பொருள். ஈசனின் பெயரால் இத்தலம் வைத்தியநாதம் என்றும் வழங்கப்படுகிறது. பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் இரண்டாவது தலமாக இது விளங்குகின்றது. மேலும், பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் சக்தி பீடங்கள் அமைந்த தலங்கள் இரண்டுதான். ஒன்று, ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன ஷேத்திரம். இன்னொன்று இந்த வைத்தியநாத தலம். இது சதி தேவியின் இதயப்பகுதி விழுந்த தலமென்று சொல்லப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை பைஜூ என்ற வேடன்தான் முதன்முதலில் கண்டு வழிபட்டான் என்றும், அவன் பெயரால் இந்த சிவன் பைஜூநாத் என்று வணங்கப்பட்டு, அந்தப் பெயரே வைத்தியநாத் என்றானதாகச் சொல்லப் படுகிறது.

இங்கு ஒரு வித்தியாச மான வழிபாட்டுமுறை உள்ளது. அதாவது, ஆடி மாதத்தில் பல்லாயிரக்கணக் கான மக்கள் இங்கு வழிபட வருவார்கள். அவர்கள் கங்கை நீர் சேகரிக்கப்பட்ட கலசங்களை காவடிபோல் சுமந்துகொண்டு, சுல்தான் கஞ்ச் என்னுமிடத்திலிருந்து கால்நடையாகவே கோவிலுக்கு வருவார்கள். பயண தூரம் 105 கிலோமீட்டர்! அப்படிவரும்போது அந்தக் காவடியை எதற்காகவும் கீழே வைக்கக்கூடாது. வேண்டுமானால் அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு நம் அவசிய காரியங்களைச் செய்யலாம். உறங்குவதென்றாலும், அந்தக் காவடியை மற்றவர் வைத்துக் கொண்டு நிற்கவேண்டும். வேறு வழியின்றி தரையில் வைக்க நேர்ந்தால் மறுபடியும் புறப் பட்ட இடத்துக்கே சென்று, அங்கிருந்து தரையில் விழுந்து வணங்கியபடி வந்து பின்னர் காவடியைச் சுமந்து செல்லவேண்டும். ஒருசிலர் ஓட்டமும் நடையுமாக எங்கேயும் நிற்காமல் 105 கிலோமீட்டர் தூரத்தையும் கடப்பார்கள். இந்த வழியில் இரண்டு இடங்களில் அனுமதிச்சீட்டு வாங்கவேண்டும். அங்கும் இவர்கள் நிற்கமாட்டார்கள். ஓடியவண்ணம்தான் எல்லாமே. சூரியன் மறைவதற்குள் ஆலயத்தை அடைந்தாகவேண்டும். இவ்வாறு கொண்டுசெல்லப்படும் கங்கை நீரைக்கொண்டு வைத்தியநாத சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

மிகப் பழமையான இவ்வாலயம் 1596-ல் புரன்மலை மகாராஜா என்பவரால் விரிவாக்கம் செய்து கட்டப்பட்டது. கோபுரத்தின் உயரம் 72 அடி. 21 பரிவார தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. கங்காசரோவர் என்னும் திருக்குளம் உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது இத்தலம். ஹௌரா- டெல்லி வழியில் ஜஸ்டிகர் என்னும் ரயில்நிலையம் உள்ளது. அங்கிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் தேவ்கர் எனப்படும் வைத்தியநாதம் உள்ளது.

எல்லாப் பிணிகளையும் தீர்ப்பவராக அருள்பாலிக்கிறார் இத்தல ஈசன்!

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….


          ண்டுதோறும் திருவிசநல்லூர் ஐயாவாள் இல்லக் கேணியில் இன்றும்  கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம்.

கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள். இவர் தன் பதவி, சொத்துகளைத் துறந்துவிட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்துவிட்டார். தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங் கேஸ்வரரை தரிசிப்பார். அர்த்தஜாம பூஜையும் காண்பார். சிவன்மேல் அபார பக்தி கொண்டவர்.

இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். அத்தகைய ஒருநாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த  சமையல் தயார்செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, காவிரியில் நீராடச்சென்றார். நீராடி இல்லம் திரும்பும்போது எதிரேவந்த வயதான ஏழை ஐயாவாளிடம், “”சுவாமி, ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன்” என கேட்டார்.

அவர்மீது இரக்கம்கொண்ட ஐயா அவரை இல்லத்திற்கு அழைத்து வந்தபோது,  சிரார்த்த  சமையல் மட்டுமே தயாராக இருந்தது. பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக்கொடுத்து பசியாற்றினார்.

சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ணவேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குதான் தருவார்கள். அந்த நியதியை மீறினார் ஐயாவாள். அதனால் கோபமடைந்த அந்தணர்
கள் வெளியேறி, “பரிகாரம் செய்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம்’ என்றனர்.

“ஒரேநாளில் காசியிலுள்ள கங்கையில் நீராடி விட்டுவா’ என்பதுதான் அவர்கள் சொன்ன பரிகாரம். ஒரேநாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்பமுடியும்? இதை நினைத்து வருத்தத்துடன் படுத்தவர் அசதியில் உறங்க, கனவில் சிவன் காட்சி கொடுத்து, “உன் இல்லக் கேணியில் நாளை கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன்’ என உறுதியளித்து மறைந்தார்.

இக்கனவை ஐயா எல்லாரிடமும் சொன்னார். 

கார்த்திகை மாத அமாவாசை. ஊரே திரண்டு ஐயா வீட்டுமுன் கூடிவிட்டது. ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக “கங்காஷ்டகம்’ 

பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து, திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்! அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கங்கை நீராடினார்கள்.

இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று, 300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்ததுபோல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு  பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள்நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்! 

-ஆர். ராதாபாய்

கார்த்திகை தீபம் 17-11-2013

            திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, 

அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம்  கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம். 

நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் 

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.


மூன்று இளையனார்

இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.

அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.

அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார். 

கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான். 

ஒன்பது கோபுரங்கள்

கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்). 

சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர்.  மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

மலையளவு பயன்!

நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது.

கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்துயாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும்.

கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன.  இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும். 

தீபத் திருவிழா!

உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.


பரணி தீபம்!

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

மகாதீபம்!

மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக “அண்ணாமலைக்கு அரோஹரா’ எனக்கூறி  தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது.  3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். 

தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை  தெரியும்.

திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.

லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

 18-10-2013= மகா அன்னாபிஷேகம், துலா ஸ்தானம்


         வ்வாண்டின் ஐப்பசி மாதம் பௌர்ணமி திதியில் பிறப்ப தால் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. துலா ஸ்நானமும், அன்னாபிஷேகமும் ஒரே நாளில் நடைபெறும் வைபவங்கள் என்பதால், ஐப்பசி மாதத்திற்கு மேலும் சிறப் பைக் கூட்டுகின்றன.

ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலா மாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத் தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன.

துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். மேலும், துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள்.

அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டு மென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் பகவான் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.

தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.

காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந் தார்; அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவியானவள் காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்பது புராணம்.

ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்.

தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

துலாக் காவேரி ஸ்நானம் செய்பவர்கள், காவேரி நதிக்குப் பூஜை செய்து வழிபடுவதுடன், அருகில் அரசமரம் இருந்தால் அதற்கு நீர் வார்த்து, அதை வலம்வந்து வணங்குவது புண்ணிய பலன் தரும். மேலும், காவேரிக் கரையில் கோமாதா பூஜை செய்தால் மேன்மேலும் புனிதம் கிட்டும்.

முரன் முதலான அசுரர்களை அழித்ததால் மகாவிஷ்ணுவிற்கு “வீரஹத்தி’ தோஷம் பற்றியது. இதனைப் போக்க, காவேரியில் ஐப்பசி மாதம் நாக சதுர்த்தியன்று துலா ஸ்நானம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றார் என்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது.

ஐப்பசி மாதம் துலா ஸ்நானம் போற்றப் படுவதுபோல், ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகமும் சிவாலயங்களில் சிறப்பிக்கப் படுகின்றன.

ஐப்பசி பௌர்ணமியில் மட்டும் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் தினமும் காலை பதினோரு மணியளவில் ஸ்ரீரத்னசபாபதிக்கு அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். பூஜைகள் முடிந்ததும் அந்த அன்னத்தைப் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவர்.

ஐப்பசி பௌர்ணமியில் சிவலிங்க மேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கையும் சிவாம்சம் பெற்றது. அன்று சிவ தரிசனம் செய்து, அன்னாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டால் வாழ்நாள் முழுவதும் பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்பது ஐதீகம்.

இந்த அன்னாபிஷேக வைபவத்திற்குப் புகழ்பெற்று விளங்குவது கங்கைகொண்ட சோழபுரம் திருத்தலமாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில், திருச்சியிலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் ஏறக்குறைய தஞ்சை பெரிய கோவிலைப் போல் காட்சி தருகி றது. தஞ்சை பெரிய கோவில் விமானம் நேர் வடிவில் இருப்பதால் ஆண் அம்சம் என்றும், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் விமானம் சற்று வளைந் திருப்பதுபோல் காட்சி தருவதால் பெண் அம்சம் என்றும் கூறப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரம் மூலவர் பதிமூன்றரை அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்ட லிங்கத் திருவுருவத்தில் அருள்புரிகிறார். ஒரே கல்லாலான ஆவுடையாரின் சுற்றளவு அறுபது அடி. அவரை எதிர்நோக்கிப் பார்த்துக்கொண்டி ருக்கும் பெரிய நந்தி கலையம்சம் நிறைந்தது. மூல ஸ்தானத்தின் உட்புற விதானத்தில் சந்திரகாந்தக்கல் பதித்திருப்பதால், நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர்த்திவலை சிவலிங்கத்தின்மேல் விழுந்தவண்ணமிருக்கும். இதனால் இக்கருவறை எந்தக் காலத்திலும் குளிர்ச்சியுடையதாகக் காணப்படுகிறது. ராஜராஜன் மைந்தனான ராஜேந்திரன் காலத்தில் (கி.பி. 1012- 1044) இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இங்கு ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடை பெற்றது. அதற்குப்பின் ஏற்பட்ட போரின் விளைவால் பாண்டிய மன்னர்கள் சோழ அரசர்களை வென்று, கோவிலைத் தவிர அரண்மனை மற்றும் தோட்டங்கள், சுற்றுப்புறக் குடில்களை அழித்தனர். இதனால் கோவிலில் பூஜைகள் ஒழுங்காக நடைபெறவில்லை.

காலம் கடந்தது; ஆட்சிகள் மாறின; நாடு சுதந்திரம் அடைந்தது. மக்களாட்சி மலர்ந்தது. இருந்தாலும் கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீபிரகதீஸ்வரர் கோவிலில் பூஜைகள் ஒழுங்காக நடைபெறவில்லை.

ஒருமுறை காஞ்சி மகாபெரியவர் யாத்திரையாக கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தபோது இந்த பிரம்மாண்டமான கோவிலின் நிலை கண்டு  வருந்தினார்.

கோவிலில் தினமும்  பூஜைகள் நடைபெற ஆவன செய்தார். அத்துடன் ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேக வைபவங்கள் மறுபடியும் நடைபெற வழிசெய்தார்.

பிரம்மாண்டமான இந்த ஸ்ரீபிரகதீஸ்வரருக்கு ஐப்பசி பௌர்ணமியில் நூறு மூட்டை அரிசியில் சமைத்த அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம்- ஆகம விதிப்படி மிகச்சிறப் பாக மன்னர்கள் காலத்தில் நடைபெற்றது போல் நடைபெற ஆரம்பித்தது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் கடந்த 27 வருடங்களாக எவ்விதத் தொய்வுமில்லாமல் நடைபெறும் இந்த அன்னாபிஷேகம் ஐப்பசி முதல் தேதி, பௌர்ணமி நாளில் (18-10-2013) நடைபெறவிருக்கிறது. பகல் 11.00 மணிக்கு மேல் அன்னாபிஷேகம் ஆரம்பித்து, மாலை 5.00 மணியளவில் மகாதீபாராதனை நடைபெறும்.

இந்த அன்னாபிஷேகம் தஞ்சை பெரிய கோவிலில் அருள்புரியும் ஸ்ரீ பிரகதீஸ் வரருக்கும் வெகுசிறப்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இதேபோல், தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் அன்னா பிஷேக வைபவம் நடைபெறும். திருப்பட்டூரில் அருள்புரியும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கும், கோவில் வளாகத்திலுள்ள பதினோரு சிவலிங்கங்களுக்கும் ஒரே சமயத்தில் அன்னா பிஷேகம் நடைபெறும். இக்கோவிலிலுள்ள 12 சிவலிங்கங்களையும் பிரம்மதேவன் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டார் என்று புராணத் தகவல் கூறுகிறது. ஒரே கோவிலில் அருள்புரியும் 12 சிவலிங்கத் திருமேனிகளின் அன்னாபிஷேகத்தை ஒரே சமயத்தில் தரிசித்தால் வாழ்நாள் முழுவதும் சுகமான வாழ்வு கிட்டும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். இதேபோல் திருவண்ணாமலையில் அருள்புரியும் ஸ்ரீஅண்ணாமலையாருக்கும்- மலையைச் சுற்றியுள்ள அஷ்டலிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும். அன்று கிரிவலம் வரும் பக்தர்கள் இதனை தரிசித்து இரட்டைப் பலன்களைப் பெறுகிறார்கள். இந்த வாய்ப்பு இந்த வருடம் பக்தர்களுக்குக்  கிட்டுகிறது.

பௌர்ணமியன்று சந்திரன் முழுமையாகத் திகழ்கிறான். அன்று சந்திரனது கலை, அமிர்தகலையாகும். சிவன் பிம்பரூபி. அவரது மெய்யன்பர்கள் பிரதிபிம்பிரூபிகள். பிம்பம் திருப்தியடைந்தால் பிரதிபிம்பமும் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் அருளும் அந்த அன்னபூரணியை தன் வாமபாகத்தில் கொண்ட இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது; நாடு செழுமையுடன் திகழும்.கோவை ஆறுமுகம்

          ரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது! ஆறறிவு படைத்த மனித ஜென்மம் கிடைப்பது மிகவும் அரிதானது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறப்பு- இறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைய வேண்டுமென்ற நோக்கத்தோடு வாழ்க்கையை நடத்தவேண்டும். வேறு பல செயல்களில் மூழ்கி இந்த ஜென்மத்தை வீணாக்கிவிடக்கூடாது.

கிருதயுகத்தில் தவத்தினாலும், திரேதாயுகத்தில் யாக யக்ஞங்களாலும், துவாபரயுகத்தில் மந்திர தந்திரங்களாலும் மோட்சத்தை அடையலாம் என்றிருந்தது. ஆனால் கலியுகத்திலோ பக்தி மார்க்கத்தாலேயே மோட்சத்தை அடையமுடியும்.

நம் உள்ளம் பக்தி மார்க்கத்தில் லயிப்பதற்காகவே நமது முன்னோர்கள் ஆலயங்களை அமைத்தனர். எனவே ஆலய வழிபாடென்பது ஆன்ம முன்னேற்றத்துக்கு இன்றியமையாதது.

1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத் திற்குட்பட்டதும், காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதும், திருஞான சம்பந்தரால் பாடப்பட்டதும், உச்சிஷ்ட கணபதி, தாருகாவன முனிவர்கள், யோகநாயகி அம்பாள், மதியன், மருதவாணர், மகாவிஷ்ணு ஆகியோர் வழிபட்ட பெருமைவாய்ந்ததுமான தலம்தான் திருமாந்துறை.

இறைவன்: அட்சயநாத சுவாமி, ஆம்ரவனேஸ்வரர்.

இறைவி: யோகநாயகி அம்பாள்.

தீர்த்தம்: சந்திரதீர்த்தம்.

தலவிருட்சம்: மாமரம்.

இத்திருக்கோவிலைச் சுற்றி மாமரங்கள் சூழ்ந்திருப்பதால், இத்தலம் மாந்துறை- ஆம்ரவனம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஈசன் மாந்துறைநாதர், ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயர்களைக் கொண்டிருந்தாலும் அட்சயநாத சுவாமி என்ற திருநாமத்துடனும் அருள்புரிகிறார்.

அட்சயநாதர் என்று பெயர் விளங்க இரண்டு காரணங்கள் உண்டு. சுகக்குறைவு ஏற்பட்ட காலவ முனிவரும், நவகிரக நாயகர்களும் திருமங்கலக்குடியில் உள்ள அட்சயதீர்த்தத்தில் நீராடி, திருமாந்துறையிலுள்ள ஈசனை அனுதினமும் “அட்சயநாதரே அருள்புரிவாயே’ என்று வழிபட்டதன்  பலனாக உடல்நலம் தேறி சிவானந்தப் பெருவாழ்வு அடைந்தனர் என்பது ஒரு காரணம்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது சிலகாலம் இங்கு தங்கி ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டு, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை (அன்னபாத்திரம்) இறைவனுக்கு சமர்ப்பித்து பெறற்கரிய பேறு பெற்றனர் என்பது மற்றொரு காரணம்.

திருஞானசம்பந்தர் தலயாத்திரை செய்து பல தலங்களைப் பதிகம்பாடி வரும்போது, திருக்கஞ்சனூரை வழிபட்ட பின்பு திருமாந்துறையை அடைந்து பதிகம்பாடி வழிபட்டார். அதன்பின் திருமங்கலக்குடி அடைந்தார் என்பதனை-

“கஞ்சனூர் ஆண்டதங் கோவைக்
கண்ணுற் நிறைஞ்சிமுன் போந்து
மஞ்சணி மாமதில் சூழும்
மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி
அங்ககன் றன்பர் முன்னாகச்
செஞ்சடை வேதியர் மண்ணுந்
திருமங்கலக்குடி சேர்ந்தார்’

என்னும் பெரியபுராணச் செய்யுள் விளக்குகிறது. இப்பாடலில் கஞ்சனூருக்கும் திருமங்கலக்குடிக்கும் இடையே உள்ள திருமாந்துறைக்கு வந்து பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறியுள்ளார்.

மனதுக்குக் காரகன் சந்திரன். ஒரு வியாபாரி, “இன்னைக்கு காலை முதல் முதல்லே மகாலட்சுமி மாதிரி ஒரு அம்மா வந்தாங்க. வியாபாரம் ரொம்ப அமர்க்களம். நல்ல முகராசியப்பா’ என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் பெயர் ராசியாகட்டும்- முகராசியாகட்டும்- கைராசியாகட்டும்- ராசி என்ற சொல்லுக்கு சொந்தக்காரன் சந்திரனே! அப்படிப்பட்ட வசீகரம் உள்ள சந்திரனுக்கு க்ஷயரோகம் ஏற்பட்டது.

உடல் அங்கங்கள் நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்தன.

சந்திரன் குரு பகவானிடம் சென்று பிணி தீர வழி கேட்க, அதற்கு குரு பகவான், “”சந்திரனே! நீ தட்சயாகத்திற்குச் சென்றது மட்டுமல்லாமல் அங்கே விருந்துண்ட பாவத்தால் உடலில் ரோகம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை சிவனைத் தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாது. ஆகவே நீ பூலோகம் சென்று, காவிரியின் வடகரையிலுள்ள ஆம்ரவனத்தை  அடைந்து, அங்குள்ள ஈசனை ஒரு பட்சம் (15 நாட்கள்) வழிபடு” என்று கூறினார். சந்திரனும் அவ்வாறே ஆம்ரவனமான திருமாந்துறையை அடைந்து, அங்குள்ள குளத்தில் நீராடி, ஆம்ரவனேஸ்வரரை 15 நாட்கள் வழிபட்டு வந்தான். அதன் பயனாக ஈசனின் திருக்காட்சியைப் பெற்று நலமடைந்தான்.

அப்போது திங்களாகிய சந்திரன், “”திங்கட்கிழமை தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்து, மிளகு அன்னம் நிவேதனம் செய்து தங்களை வழிபடும் இப்பூவுலகினர் அனைவரும், நோய் விலகி குறையில்லாமல் சுகமுடன் வாழ அருள்புரிய வேண்டும்” என்று வேண்டினான். அன்றைய தினம் தை மாத முதல் நாள். சங்கராந்தி தினமான அந்த திங்கட்கிழமை மாலைப் பொழுதில், அட்சயநாதர்- யோகநாயகி  அம்பாள் மணக்கோலத்திலும், உச்சிஷ்ட கணபதி தம்பதி சமேதராகவும், மகாவிஷ்ணுவும் சந்திரனுக்காக காட்சி தந்து, “”உன் எண்ணப்படியே ஆகட்டும்” என்று அனுக்கிரகம் செய்தனர். சந்திரன் வழிபட்டு நோய் நீங்கியதால் இத்தலம் சந்திரனுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது.

ஒருசமயம் சூரியனுக்கு கிரணங்கள் குறைந்தபோது, அவனுக்கு பிரகாசத்தைத் தந்து தன் பக்கத்திலிருந்து தினந்தோறும் தரிசிக்கச் சொன்னார் அட்சயநாதர். அதன்படி சூரியன் தங்கிய கோவில்தான் சூரியனார் கோவில். ஆகவே சூரியனார் கோவில் சூரிய க்ஷேத்திரமாகவும், அதற்குப்  பின்புறமுள்ள திருமாந் துறை அட்சயநாதர் ஆலயம் சந்திர க்ஷேத்திரமாகவும் விளங்குகிறது.

சந்திரதீர்த்தத்தில் நீராடியபின் பெருமதிலின் நுழைவாயிலைக் கடந்து கொடிமரம், பலிபீடம், நந்திதேவரை வணங்கிவிட்டு ராஜகோபுரத்தின் நுழைவாயிலை அடைகிறோம். அங்கே உச்சிஷ்ட கணபதியும் மகாவிஷ்ணுவும் அட்சயநாதரை வழிபடுகின்ற காட்சி அழகிய கற்சிற்பமாய் விளங்குவதைக் காணலாம். பின்னர் மூலவரான அட்சயநாதரை அர்ச்சனைப் பொருட்களுடன் மாங்கனி கொண்டு அர்ச்சித்து வழிபடுகிறோம். உட்பிராகாரத்தில் தெற்கு நோக்கி ஹரதத்தரும், சைவசமயக் குரவர் நால்வரும் அருள்புரிகின்றனர். தலதுர்க்கை வடக்கு நோக்கி அருள்புரிகிறாள்.

உச்சிஷ்ட கணபதி தனது சாபத்தை நிவர்த்தி செய்துகொண்டு, தமது பூஜாபலத்தால் பெற்ற சகல சக்தியையும் கொண்டு பில்லி, சூன்யம், ஏவல், வைப்பு, மாந்திரீகம், ஆபிசாரப் பிரயோகம் போன்ற தீயசக்திகளை அழித்து, எல்லாவிதமான இடையூறுகளிலிருந்தும் மக்களைக் காக்க மிகுந்த வரப்ரசாதியாய் நிருதி மூலையில் தம்பதி சமேதராய் அருள்புரிகிறார்.

இது வேறெங்கும் காணமுடியாத காட்சி. அவரையடுத்து சுப்ரமணிய சுவாமி வள்ளி, தேவசேனாவுடன் அருள்புரிகிறார்.

வாயு மூலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மகாவிஷ்ணு அருள்புரிகிறார். தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். ஈசான்ய திக்கில் பைரவர், சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர் ஆகியோர் சுவாமியைப் பார்த்த வண்ணம் காட்சி தருகின்றனர்.

அம்பாள் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதி கொண்டு திருமணக் கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம், சுக்கிரக்ஷேத்ரமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயம், திருமாந்துறை ஸ்ரீஅட்சயநாதர் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களில் மட்டுமே சுவாமிக்கு வலப் பக்கத்தில் தனிச் சந்நிதி, தனிச்சுற்றுப் பிராகாரத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் சுவாமி சந்நிதி அருகிலும், அம்பாள் சந்நிதி அருகிலும் கிணறு உள்ளது. அவை சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் எனப்படுகின்றன.

திங்கட்கிழமை பிறந்தவர்கள்; 2-ஆம் எண்ணில் பிறந்தவர்கள்; மனஅழுத்தம், மனநோய் உள்ளவர்கள்; சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர்கள்; ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்தவர்கள்; தேய்பிறையில் பிறந்தவர்கள்; பௌர்ணமியில் பிறந்தவர்கள் திருமாந்துறை அட்சயநாதரை வணங்கி வந்தால், கூடுதல் பலம் கிடைப்பதோடு குறைவில்லா வாழ்வு வாழலாம் என்பது உறுதி.
நவகிரகங்களுக்கே  சாபம்  நீக்கிய  தலமாதலால் இக்கோவிலில் நவகிரகங்கள் இல்லை. இவ்வால
யத்துக்கு செம்பியன் மாதேவி திருப்பணி செய்தார் என்ற கல்வெட்டு குறிப்பு காணப்படுகிறது.

“”மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையே விளங்குகின்ற மாந்துறை மகாதேவனாம் அட்சயநாதரின் அடிபணிந்தால் அளவிலா பேறுபெற்று குறைவில்லாமல் வாழலாம்” என்று கூறுகிறார் ஆலய அர்ச்சகர் வி. சுவாமிநாதன் சிவாச்சாரியார். ஆலயத் தொடர்புக்கு: 96291 63034.

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை யிலும்; மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், ஆடுதுறை பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நகரப் பேருந்தில் சூரியனார் கோவில் சென்று அங்கிருந்து 1 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்ளலாம். அல்லது ஆடுதுறையிலிருந்து கார், ஆட்டோமூலம் திருமாந்துறை செல்லலாம்.

NADARAJAR STATUE AT THE EUROPEAN ORGANIZATION FOR NUCLEAR RESEARCH (CERN) IN MEYRIN, SWITZERLAND

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்
உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன் (பிறப்பு 9-11-1934, மறைவு 20-12-1996) சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கி யது இவரது தனிச் சிறப்பு. பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக் காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங் களை அழகுற எளிமையாக விளக்கினார்.

அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உல கெங்கும் உள்ளோர் பார்த்த ‘காஸ்மாஸ்’ என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப் பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடு களில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும். இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார்.

இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டு பிடிப்புற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந் தும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.

பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிகாச புராணங் களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும், ஹிந்து இதிஹாச புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையை படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.

இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத் தை வழங்கியவர்கள். ஒன்றுக்குப் பக்கத் தில் புஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கி றது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கத் தில் எத்தனை பூஜ்யங்களைப் போட்ட ¡லும் ஒன்று ஒன்றாகவே இருக்கி றது. இந்த வியப்பிற்குரிய அமை ப்பு கணிதத்தையே எளிமை யாக்கி எவ்வளவு பெரிய எண்ணா னாலும் எழுதுவதற்கும் கணக்கு களைப் போடுவதற்கும் செளக ரியத்தை ஏற்படுத்தியது.

ரோமா னிய எழுத்துக்களால் எழுதப்ப டும் எண் ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கி றது. சுலபமான நடை முறையில் இல்லாத அதை எழுதவே சிரமப் பட வேண்டும். இது மட்டுமின்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயி ரம், லட்சம் என்ற எண்களெல் லாம் மிக மிக சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண் களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரி கத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்.

விஞ்ஞானத்தின் முக்கிய இயல் புகளில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்ட்டிகல் பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன. கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி. வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடை சூழ நந்தி இருக்கும் இரு கோவில்களு க்கு விஜயம் செய்தார் ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது.

இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரெலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான். எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வ மான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிகையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி. டி. செனஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.

பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தை யும், ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான் ‘தி எட்ஜ் ஃபார் எவரில்’ (ஹிhலீ லீனீgலீ பிorலீvலீr) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர் னியாவில் பாஸ்டோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார். இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்கி வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்.

ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர் ‘தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்’(ஹிhலீ ஹிao oஜீ ஜிhiysiணீs) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்த னர். இன்றும் படித்து இன்புறுகின்ற னர். அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார். ‘மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார் வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று. அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது. கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப் போதும் மாறிக் கொண்டே இருக்கும்.

திரவ வடிவம் போன்ற ஒன்று தான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டி ருக்கும் பிரிக்னக முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட் டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பெளதி கத்திலும் உருவாகி வருகிறது. நவீன பெளதிகம் அணுத்துகளை தொடர்ந்து நடன மாடும் உன்றாக அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமா னது. சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது.

அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் சற்று அறிய வேண்டும் என்றார். காப்ரா அணுவில் உள்ள அசைவை நடனத்தை சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட 8!tவி! அதை அப்படியே லொஸ் ஏஞ்சலிஸில் 1977 அக்டோபர் 29ம் திகதி பிஸிக்ஸ் அன்ட் மெடா பிஸின்ஸ் என்ற பருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்.

“நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருத வில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமி டும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத் தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங் களையும் சிற்பங்களையும் படைத்துள்ள னர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உப கரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும், அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகின்றது. ஆகவே, அவை இரண் டையும் இணைத்துள்ளேன்.

நவீன உபகரணங்கள் முலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்து டன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர். விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்ட அப்படியே உலகிற்கு எடுத்து ரைப்பதன் உதாரணம்தான். அருணகிரி நாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுரு வாய், அணுவில் அசைவாய் என்ற வரி களாகும். (இருவர் மயலோ என்று தொட ங்கும் திருப்புகழ்)

இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் திகதி ஜரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையை படத்தில் பார்க்கலாம்,)

சேர்ன் (விலீrn) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவ தாக இந்திய அரசு பெருமையுடன் தெரிவித்தது. ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்கிறது அல்லவா?

http://www.thinakaran.lk/2013/09/23/?fn=r1309231

mit Tranquil Turf und 5 weitere Personen.

மகேஷ் வர்மா

            சிவபெருமானின் உக்ர வடிவங்களுள் ஒன்றாக விளங்குகிறது பைரவர் திருக்கோலம். அந்தகாசுரனை அழிக்கும்பொருட்டு சிவபெருமான் தன்னிலிருந்து காலபைரவரைத் தோற்றுவித்தார்.

பஞ்சாக்னி நடுவே பலகாலம் கடுந்தவம் செய்து சிவபெருமானிடம் அரிய பல வரங்களைப் பெற்றான் அந்தகாசுரன்.

அந்த ஆணவத்தால் வானோர்க்கு பல இன்னல்கள் புரிந்தான். அவனை வெல்ல பிரம்மா, தேவேந்திரன் முதலான யாராலும் இயலவில்லை. வேறு வழியின்றி அவர்கள் அந்தகாசுரனிடமே சென்று, “”உங்கள் கட்டளையை ஏற்று நடக்கிறோம். காத்தருள வேண்டும்” என்று சரணடைந்தனர்.
“”போரிடுவதில் ஆண்சிங்கம் போன்றவன் நானொருவனே. எனவே நீங்களனைவரும் பெண்கள்போல் வளையலணிந்து, கண்களில் மைதீட்டி, சேலையுடுத்தி வாழவேண்டும். யாரேனும் ஆண்போல் உடையணிந்தால் அழித்துவிடுவேன்” என்றான் அந்தகாசுரன்.

தேவர்கள் வேறு வழியின்றி அதற்குக் கட்டுப்பட்டனர். பின்னர் மந்தர மலையையடைந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்தனர். அவர்களுக்கு காட்சிகொடுத்த சிவபெருமான், அந்தகாசுரனின் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதாகக் கூறினார். அதன்படி தனது அம்சமாக பைரவரை உருவாக்கி அனுப்பினார். கடுங்கோபத்துடன் சென்ற பைரவர் அந்தகாசுரனின் சேனைகள் அனைத்தையும் அழித்து, முடிவில் அவனை தன் சூலத்தால் குத்தித் தூக்கினார். ரத்தம் வழியவழிய பல்லாண்டுகள் சூலத்தில் தொங்கிய அந்தகாசுரன் இறுதியில் மனம் திருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்க, அவனை விடுவித்து அருள்புரிந்தார் ஈசன்.

இவ்வாறு பல பைரவர்களை சிவபெருமான் தோற்றுவித்ததாகச் சொல்வர். பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது ஒரு தலையைக் கிள்ளியதும் பைரவ சொரூபமே. இவர் கொடுமையை அழிப்பதில் எவ்வளவு கோபம் கொள்கிறாரோ- அதேபோன்று கருணை புரிவதிலும் இணையற்றவர். பக்தர்களின் பயத்தைப் போக்கி வெற்றியைத் தேடித்தருபவர் பைரவர். கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக சத் ருத்ர  சம்ஹிதாவின் 8-ஆவது அத்தியாயம் குறிப்பிடுகிறது.அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் சந்நிதி இருப்பதைக் காணலாம். இவரே அனைத்திற்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார். இவர் தனி ஆலயங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் தலங்களும் உண்டு. அவற்றிலொன்று உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம்.

மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூர் நகருக்கு அருகேயுள்ள உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை தன்பால் இழுக்கிறது.

இவ்வாலயத்தில் அஷ்டமி திதியில் பைரவ பூஜை செய்தால் எதிரிகள் அழிவர்; எத்தகைய நோயும் குணமாகும்; இழந்தவற்றை மீண்டும் பெறலாம் என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

இவ்வாலய வளாகத்தில் மிகப்பெரிய தூண் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான விளக்குகளை ஏற்றலாம். மனம் சார்ந்த பல தொல்லைகள் அகல இங்கு பக்தர்கள் விளக்கேற்றி  வழிபடுகின்றனர். தேங்காயில் விளக்கேற்றினால் உடல் பலம்பெறும் என்றும்; பூசணியில் விளக்கேற்றினால் மாந்திரீக தோஷம் அகலும் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாலயத்தில் விசித்திரமான ஒரு வழக்கம் உள்ளது. பொதுவாக பூ, பழம் போன்றவற்றை சமர்ப்பித்து பக்தர்கள் வழிபடுகிறார்கள் என்றாலும், மதுவை சமர்ப்பிக்கும் வழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு கிண்ணத்தில் மதுவை நிரப்பி பைரவரின் வாயருகில் வைக்கிறார் பூசாரி. என்ன ஆச்சரியம். மெல்ல மெல்ல அந்த மது பாதிக் கிண்ணம் அளவுக்கு குறைந்து விடுகிறது. பக்கத்தில் எங்கும் வழிவதில்லை. பல ஆய்வாளர்கள் இந்த பீடத்தை சோதித்தும் பார்த்துவிட்டனர். மது உறிஞ்சப்படும் மாயம்தான் தெரியவில்லை. இதைக் காணவே பல வெளிநாட்டினர் இங்கு வருகிறார்கள்.

இவ்வாலயத்துக்குப் பின்னால் குகைக்குள் பாதாள பைரவி சந்நிதி இருக்கிறது. இங்கே தந்திர பூஜைகள் செய்யப்படுகின்றன.

கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இங்கே வழிபடுபவர்களின் பிரச்சினைகள் நிச்சயம் அகலுகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

———————————————————————————————————————————————————–

சிவபுராணம்
—————–
சிவபுராணத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.

பொருளடக்கம்

1 சிவபுராணத்தின் நோக்கம்

2 சிவபுராணத்தின் அமைப்பு

3 சிவபுராணத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்

3.1 இறைவன்

3.2 உயிரும், மலங்களும்

3.3 பிறவிச் சுழல்

சிவபுராணத்தின் நோக்கம்

முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. இதனாலேயே, முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம். இதன் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன.

சிவபுராணத்தின் அமைப்பு

உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.

நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன.

பதினேழாவது அடியிலிருந்து இருபது வரை நூலின் நோக்கம் பற்றியும், அதை எழுதுவதற்கு ஆக்கியோனுக்கு உள்ள தகுதியும் கூறப்படுகின்றன.

பின்னர் இறைவனைப் புகழ்ந்து, உயிர் தன்னுடைய குறைகளை இறைவனுக்குத் தெரியப்படுத்தும் அடிகள் வருகின்றன. உயிர், உலகில் பல்வேறு வடிவங்களிற் பிறந்து களைத்துப் போனதைக் கூறுவதாக இருபத்தாறு முதல் முப்பத்தோராவது வரையான ஆறு அடிகள் அமைந்துள்ளன.

இறைவன் திருவடிகளைக் கண்டதில் வீடு பேறு அடைந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் 32 ஆவது அடியைத் தொடர்ந்து மீண்டும் இறைவனின் புகழ் கூறப்படுகின்றது.

50 தொடக்கம் 55 வரையான அடிகள், உயிர், தன்னைச் சுற்றி அமைந்துள்ள மாயையினால் உருவான உடல் பற்றியும், அவ்வுடலின் ஐந்து புலன்களும் தன்னை ஏமாற்றுவதையும் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.

தொடர்ந்து 83 ஆவது அடிகள் வரை இறைவனின் புகழ் கூறப்பட்டு, 84 ஆம், 85 ஆம் அடிகளில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் உடம்பினுள் கட்டுப்பட்டிருக்க முடியாமல் இருக்கும் நிலையைக் கூறி உயிர் புலம்புகிறது.

மீண்டும் இறைவனின் புகழ்ச்சியுடன், இந் நூலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் அடையக்கூடிய பயனை இறுதி நான்கு வரிகளில் கூறி நூல் நிறைவு எய்துகிறது.

சிவபுராணத்தில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ சமயம் தமிழ் நாட்டில் சைவசித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இறைவன், உயிர், அதனைப் பீடிக்கும் மலங்கள் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகள் என்றுகூறும் சைவ சித்தாந்தம், அவற்றின் இயல்புகள், அவற்றிடையேயான தொடர்புகள் என்பன பற்றிக் கூறி, உயிர்களின் விடுதலையும் இறுதி நோக்கமுமாகிய, இறைவனை அடையும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறது.

இறைவனுடைய இயல்புகள், உயிரின் தன்மை, அவற்றை மலங்கள் பீடித்திருத்தல், உயிர்கள் திரும்பத் திரும்பப் பிறக்கவேண்டியிருத்தல், உயிர்களின் விடுதலை, உயிர்களை விடுவிப்பதில் இறைவனின் பங்கு, இறைவன் அருளைப் பெறுவதில் உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பன தொடர்பாகச் சிவபுராணத்தில் குறிப்புக்கள் வருகின்றன.

இந்து சமயத்தின் ஒரு பிரிவு என்ற வகையில் சைவம் வேதங்களை ஏற்றுக்கொண்டாலும், ஆகமங்கள் எனப்படும் நூல்களே சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்குபவை.

சிவபுராணம் தொடக்கத்திலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் என்று கூறுகிறது. இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகிறது.

இறைவன்

சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களை அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன.

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய்

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே

அளவிலாப் பெம்மானே

தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய்

உயிரும், மலங்களும்

உயிரும் உண்மைப் பொருளே, அதற்கும் அறிவு உண்டு, ஆனாலும் அதனை இயல்பாகவே பீடித்துள்ள ஆணவ மலத்தினால் அதன் அறிவு முற்றாக மறைக்கப்பட்டுள்ளது என்கிறது சைவ சித்தாந்தம். முற்பிறவியின் வினைப் பயன்கள் கன்மம் என்னும் மலமாகவும், வினைப் பயன்களை நுகர உதவும், உடல் மற்றும் உலகப் பொருட்கள் வடிவில் மாயை என்னும் மலமும் இடையில் வந்து உயிரைப் பீடிக்கின்றன. இக்கருத்துக்கள் சிவபுராணத்தின் பின்வரும் அடிகளிலே காணக் கிடைக்கின்றன.

எஞ்ஞானம் இல்லாதேன்

பொல்லா வினையேன்

வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்

பிறவிச் சுழல்

உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயன்களை நுகர்வதற்காக அவை புதிய பிறவிகளை எடுத்துப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. இச் சைவ சித்தாந்தக் கொள்கை சிவபுராணத்தின் அடிகளிலே பொதிந்துள்ளன.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்.

இச் சுழலிலிருந்து நீங்கி விடுதலை பெறுவதற்கு இறைவன் திருவருள் தேவைப்படுகிறது. பிறவிச் சுழலிலிருந்து உயிர்களை மீட்க வல்லவன் இறைவனே என்னும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பல அடிகளிலே காணப்படுகின்றன.

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்.

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்.

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்.

அல்லல் பிறவி அறுப்பானே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின

கோவில் மாநகர் என்றாலே அன்னை மீனாட்சி கொலுவிருக்கும் மதுரையம்பதியைத் தான் குறிக்கும். வருடம் முழுதும் விழாக்கள் நடைபெறும் திருத்தலமிது. கோவிலைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு வீதியும் தமிழ் மாதங்களின் பெயர்களைக் கொண்டது. குறிப்பிட்ட தமிழ் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் அந்தந்த மாதப் பெயர்கொண்ட வீதிகளில்தான் நடக்கும்.

ஆவணி மாதம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ் வரர் ஆலயத்தில், ஆவணி மூலப் பெருவிழா பன்னிரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவின்போது ஆவணிமூல வீதிகள் நான்கிலும் இறைவன் வலம் வருவார். சொக்கநாதப் பெருமான் நிகழ்த்திய 64 அருஞ்செயல்களை விவரிப்பதுதான் திருவிளையாடல் புராணம். அவற்றில் சில திருவிளையாடல்களை ஆவணி மூலத் திருவிழா நம் நினைவுக்குக் கொண்டு வருகிறது. 

முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா பன்னிரண்டாம் நாள் தீர்த்தவாரியுடன் நிறைவுபெறும்.

முதல் நாள் (10-8-2013)


கரிக்குருவிக்கு உபதேசம் செய்த லீலை. ஒருவன் வினைப் பயனால் கரிக்குருவியாகப் பிறந்தான். சிவபக்தன் ஒருவன் அந்தக் குருவியிடம், “”நீ சோம சுந்தரரை வணங்கித் தவம் செய்” என்று சொன்னான். அதன்படியே கரிக்குருவி தவம் செய்ய, சோமசுந்தரர் காட்சி தந்து மிருத் யுஞ்சய மந்திர உபதேசம் செய்தார். பின் குருவிக்கு முக்தியும் அளித்தார்.


இரண்டாம் நாள் (11-8-2013)


நாரைக்கு முக்திகொடுத்த திருவிளையாடல். ஒரு நாரை வசித்த குளக்கரையில், முனிவர்கள் மதுரைப் புராணமும் திருவிளையாடல் புராணமும் பாராயணம் செய்தனர். அந்தப் பாராயணத்தைக் கேட்ட நாரை சிவ நாமம் ஜெபித்து முக்தியடைந்தது.

மூன்றாம் நாள் (12-8-2013)


மாணிக்க வியாபாரியாக சிவன் அவதாரமெடுத்து மாணிக்கம் விற்ற லீலை. .சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதியுலா வருவார்கள்.

நான்காம் நாள் (13-8-2013)


தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை. மன்னன் சண்பகப் பாண்டியன் தன் மனைவியின் கூந்தலுக்கு உள்ள மணம் இயற்கையா, செயற்கையா என ஐயம் கொண்டான். அதை விளக்க தருமியை சிவன் அனுப்ப, தருமியின் கருத்து தவறானது என்றார் நக்கீரர். சபைக்கு இறைவனே வந்து வாதிட்டபோதும்  நக்கீரர், “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என வாதிட்டார். நக்கீரரின் திறமையை உலகறியச் செய்த சிவன், தன் அடியவனான தருமிக்கும் பொற்கிழி கிடைக்கச் செய்தார்.

ஐந்தாம் நாள் (14-8-2013)


கடும் வறுமையிலும் தவறாமல் மகேஸ்வர பூஜை நடத்திவந்த அடியார்க்கு நல்லான்- தருமசீலை தம்பதிக்கு, எடுக்க எடுக்க குறையாத உணவுப்ப