fontpage முகவுரை


இறைவனால் படைத்தருளப்பட்ட இம்மண்ணுலகில் மலர்கள்தான் எத்தனை எத்தனை வகைகள்! அவற்றில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களையும் தெய்வீக ஆற்றலையும் என்னவென்று சொல்வது! என்றும் அழியாத- நித்தியமான உயிர் உறையும் இடம் நமது உடலேயாகும். அறம்செய்ய உதவிடும் உன்னத சாதனமும் இந்த உடலே. இவ்வுடலை செயலிழக்கச் செய்யும் பலவித பிணிகளைப் போக்கி, உயிர்கள் நலம்பெற பலவகைப் பூக்களையும் இலைகளையும் இறைவன் படைத்தளித்துள்ளான். இவை இறைவழிபாட்டில் முதலிடம் வகித்து, மக்களின் உடற்பிணி, உளப்பிணி நீக்கும் மருந்தாகின்றன.

அத்தகைய சிறப்புவாய்ந்த மலர்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும்போது நாம் சில நெறிகளைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். மலர்களைக் கிள்ளியோ சிதைத்தோ இறைவனுக்கு அணிவித்தலாகாது. வில்வம், துளசி இரண்டையும் முழு இதழாகவே அணிவிக்கவேண்டும். பிற இலைகளைத் தனி இதழ்களாக அர்ச்சிக்கலாம். மஞ்சள் சாமந்தி, ரோஜா போன்ற மலர்களை தனி இதழ்களாக்கி பூஜிக்கக்கூடாது. எனினும் தானாக உதிர்ந்த ரோஜா மற்றும் செண்பக இதழ்கள் ஏற்கத்தக்கன. தாமரையை மட்டும் தனி இதழாகப் பூஜிக்கலாம். ஆனால் அது முழு இதழாக இருக்கவேண்டும்.

இறைவனுக்கு அர்ச்சனை செய்யும்போது மலர், இலை, பழம் போன்றவற்றை கீழ்முகமாக கவிழ்த்து சாற்றக்கூடாது. மலர்களை மேல்நோக்கியே சாற்றவேண்டும். பொதுவாக, அவை இயல்பாக எந்த நிலையில் விளங்கினவோ, அவ்வாறே இறைவனிடம் சமர்ப்பிக்கவேண்டும். கீழ்முகமாக வைத்துப் பூஜித்தால், அது பூஜிப்பவருக்கு துக்கத்தைத் தருமென்று ஆகமங்கள் கூறுகின்றன. புஷ்பாஞ்சலி மற்றும் லட்சார்ச் சனை செய்யும் காலத்தில் விதிவிலக்குண்டு. அக்காலத்தில் மலர் கீழ்நோக்கி விழுவது குற்றமாகாது.

மேலும், மலர்களின் நடுவேயுள்ள மகரந்தம், கேசரம் உள்ளிட்டவை இல்லாமலும் அர்ச்சிக்கக்கூடாது.

துளசியின் சிறப்பு

பூஜைக்குரிய இலைகளில் துளசி சிறந்தது. இதுவொரு தெய்வீக மூலிகையுமாகும். நீருள்ள நிலத்தில் மட்டுமல்ல; வறண்ட பூமியிலும் வளரும் தன்மையுடையது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய தனிச்சிறப்பு மிக்கது. காக்கும் கடவுள் திருமால் உறையும் ஆலயங்களில் தலத் தாவரமாக துளசி விளங்குவதைக் காணலாம். கருந்துளசி, பெருந்துளசி, ராமதுளசி, கிருஷ்ணதுளசி, சிவதுளசி, வனதுளசி, சிறுதுளசி என இருபதுக்கும் மேற்பட்ட வகைகளில் துளசி காணப்படுகிறது. கருந்துளசியே உயர்ந்த பலன் தரவல்ல தென்பர். நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குணம்கொண்ட துளசியை தமிழில் “திருத்துழாய்’ என்று வைணவ அடியார்கள் போற்றுவர்.

சமஸ்கிருதத்தில் காரணப்பெயர்களாக பலவுள்ளன. சாறுடையதாகையால் சரசா, எங்கும் எளிதில் கிடைப்பதால் சுலபா, பல பூங்கொத்துகளைக் கொண்டதால் பகுமஞ்சரி, விஷ்ணுவுக்கு உகந்ததாகையால் விஷ்ணுவல்லபா- விஷ்ணுப்ரியா, அதிக இதழ்கள் கொண்டதால் பகுபத்திரி, கிருமிகளையும் துயரங்களையும் போக்குவதால் அபேராக்ஷஸி, வயிற்றுவலியைப் போக்குவதால் சூலக்னி, இதன் அடிமண் எப்போதும் புனிதமுடையதென்ப தால் பவானி, ராம- கிருஷ்ணர் களின் அன்பைப் பெற்றதால் ஹரிப்ரியா என பலவாறு துளசி போற்றப் படுகிறது.

துளசி இலையின் சாறானது ஜலதோஷம், கபம், வயிற்று உளைச்சல், எலும்புச்சூட்டு ஜுரம், தாகம், மாந்த ஜுரம் போன்றவற்றைப் போக்கும். நாவில் ருசியற்ற தன்மையை மாற்றும். குழந்தை முதல் பெரியவர் வரை சளியை நீக்கி, நன்கு சுவாசித்து ஆரோக்கியம் பெற உதவும் உன்னத மூலிகை துளசியாகும். துளசிச் செடியை வீட்டில் வளர்த்தால் பாவங்கள் நீங்குமென்பர். தீயவர்களின் கண்பார்வை அகலும். தீய எதிரிகளின் பில்லி, சூன்யம் போன்ற ஆபிசார ஏவல்கள் துளசி இருக் கும் இடத்தை அணுகாது. துர் தேவதைகள் விலகியே நிற்கும்.

இத்தகைய துளசியை பூஜைக்காகப் பறிக்கும்போது, கொத்து கொத்தாகப் பறிக்கக் கூடாது. ஒவ்வொரு இலையாகப் பறிக்கவேண்டும். பூவை ஒரு ஈர்க்கு அளவே பறித்துப் பயன் படுத்த வேண்டும். குளித்து தூய்மையாக இருக்கும்போதே பறிக்கவேண்டும். மாலை நேரம், இரவு நேரம், ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, புண்ணியகாலம், சிரார்த்த திதி ஆகிய நாட்களில் துளசியைப் பறிக்கக்கூடாது. அதற்கு முன்னதாகவே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உலர்ந்தாலும், பூஜித்திருந்தாலும் நீரால் கழுவி மீண்டும் பூஜிக்கத்தக்க சிறப்புடையது துளசி.

துளசி நீரைப் பருகுபவர்கள் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவார்களென்பது உறுதி. கணவனைப் பெறவிரும்பும் பெண்களும், பதிவிரதாதன்மை நிலைத் திருக்கவும் தினமும் காலையில் தலைக்கு குளித்து, துளசி செடிக்கு மஞ்சள் நீரூற்றி வலம்வந்து வணங்கினால் எண்ணியது ஈடேறும். துளசியை மங்களதேவியின் அம்சமாகக் கருதி வழிபடவேண்டும். துளசியின் அடிப்பகுதியில் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும், நடுவில் எல்லா தேவதைகளும், முனைகளில் அனைத்து வேதாகம சாஸ்திர வித்தைகளும் இருப் பதாலும்; மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவளாக இருப்பதாலும் அனைவராலும் பூஜிக்கத்தக்கவள் துளசி.

துளசி துதி

யன்மூலே ஸர்வதீர்த்தானி
யன்மத்யே ஸர்வதேவதா:
யுதக்ரே ஸர்வவேதாஸ் ச
துளசீம் தாம் நமாம்யஹம்.
நமஸ் துளசி கல்யாணி
நமோ விஷ்ணுப் பிரியே சுபெ
நமோ மோக்ஷப்ரதே தேவி
நமஸ் ஸம்பத் ப்ரதாயிகே.

துளசி பிரார்த்தனை சுலோகம்
நமஸ்தே துளசீதேவி
சர்வாபீஷ்ட பலப்ரதே
நமஸ்தே திரிஜகத் வந்தியே
நமஸ்தே லோகரக்ஷிகே.

மேற்கண்ட துதிகளைக்கூறி துளசியை போற்றிவணங்குவோர் விரும்பியவற்றையெல்லாம் அடைவர் என்பது ரிஷிகளின் வாக்கு. சைவ- வைணவ ஆகமங்கள் யாவுமே, எல்லா தெய்வங்களுக்குரிய சிறப்பு பத்திரமாக துளசியைக் குறிப்பிட்டுள்ளன. விநாயகர் துளசி தேவியை தாயின் அம்சமாகக் கருதுவதால், தினசரி பூஜையில் விநாயகருக்கு துளசியை சமர்ப்பிக்கக்கூடாது. ஆவணி மாத மகாசதுர்த்தி மற்றும் உற்சவ அலங்காரம் போன்ற சிறப்பு காலங்களில் மட்டும் பயன்படுத்தலாம்.

சிவாகமங்களும் சிவபூஜையில் துளசிக்கு திங்கட்கிழமைக்குரிய சோமவார பத்திரம் எனும் சிறப்புத் தகுதியை அளித்துள்ளன. சைவாகமங்கள் வில்வத்திற்கு இணையாக துளசியையும் குறிப்பிட்டுள்ளதால், இதன் மகிமையை உணர்ந்து பயன்படுத்தவேண்டும். அதுபோல வில்வத்தால் விஷ்ணுவை வழிபடுவதும் சிறப்பாகும்.

இனி, பூஜைக்காக கொய்துவரும் மலர்களை சேமித்துவைக்கும் காலத்தைப் பற்றி அறிந்துகொள்வோம். தாமரை மலரை ஐந்து நாட்களும், அலரிப்பூவை மூன்று நாட்களும், வில்வத்தை ஆறு மாதங்களும், துளசியை மூன்று மாதங்களும், தாழம்பூவை ஐந்து நாட்களும், கருநெய்தல் என்னும் நீலோத்பலத்தை மூன்று நாட்களும், செண்பகத்தை ஒருநாளும், விஷ்ணு கிராந்தியை மூன்று நாட்களும், மஞ்சள் நிற விலாமிச்சம் வேரை ஓராண்டு வரை வைத்திருந்து  உரியமுறையில் உபயோகிக்கலாம். பூஜைக்கு பூ இல்லையெனில், அவ்வூரில் வாழும் அனைவருக்கும் சங்கடம் நேரும் என்கிறது ஆகமம். புதிய பூக்களும் மணம்மிக்கவையும் மிகவும் பயன்தருவன.

விரும்பத்தக்கவற்றை விளக்கும் ஆகமங்கள் விலக்கத்தக்கதையும் வலியுறுத்துகின்றன.

தனது வெறுங்கையில் சேர்த்துவைத்துக் கொண்டுவந்தது, துணியில் வைத்துக் கொணர்ந்தது, ஆமணக்கு, எருக்கு போன்ற இலைகளில் வைத்துக் கொணர்ந்தது போன்றவை விலக்கத்தக்கதாகும். இவை நாம் முன்னர் சேர்த்து வைத்துள்ள புண்ணியங்கள் அனைத்தையும் போக்கிவிடும்.

மேலும், தாம் உடுத்திய துணியில் வைக்கப்பட்டவை, வாசனை இல்லாதவை, தலைமுடி, புழு, பூச்சி, நோய் இவற்றால் நிந்தனைக்கு ஆட்பட் டவை, அளவுக்கு மீறிய மணமுள்ளவை, அழுக்கடைந்தவை, அசுத்தமானவை, தூய்மை யில்லாத நிலையில் உள்ளவர்களால் தொடப்பட்டவை, பூசித்த பழைய நிர்மால்யத்தின்மீது விழுந்தவை, மனிதன், கால்நடைகளால் முகரப்பட்டவை, வாடியவை, மொட்டாகப் பறித்து தன்னால் மலரச் செய்தவை, தூய்மையற்ற பாத்திரத்தில் சேமித்துக்கொண்டு வந்தவை, குளித்துவிட்டு ஈரத்துணியுடன் பறித்துக்கொண்டு வந்தவை, பிறரிடமிருந்து விரும்பி யாசித்துப்பெற்றவை, எடுத்துவைத்து உலர்ந்து போனவை போன்ற மலர்களும் விலக்கத்தக்கவை.

நிலத்தில் விழுந்திருந்தவை, வாடிவதங்கி அழுகியவை, பக்குவமடையாத சிறுமொட்டு, கொத்தாக உள்ளவை, தகாத இடத்தில் இருந்தவை, வியாதியுள்ளவர்களால் பறிக்கப்பட்டவை, நறுமணமிருந்தும்கூட புனிதத்தன்மையற்றவை, ஒரே நிறம் மட்டுமே உள்ளவை, பூக்காத மொட்டுக்களாக உள்ளவை ஒருபோதும் பூஜைக்கு ஏற்றுக்கொள்ளத்தகாத- விலக்கிடத்தக்கவையே ஆகும்.

நறுமணமே இல்லாதபோதும், தர்ப்பைப்பூ முதலிய சில பூக்கள் என்றும் புனிதமாய் விளங்குவதால் ஏற்கத்தக்கவையே என்று சிவாகமங்கள் தெரிவிக்கின்றன. புஷ்பவிதிமுறைகள் யாவும் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். கடைப்பிடிக்கத் தவறினால்,இயல்பாகவே மாசற்ற பரம் பொருளிடம், மாசை சேர்த்திட்ட குற்றம் புரிந்தவராகிவிடுவோம். எவ்வாறெனில், சுத்தமான சிவத்தை, நாம் அசுத்தமாயுள்ள பத்திர புஷ்பங்களின் சேர்க்கையால் மாசுபடுத்துவதற்கு நமக்கு உரிமையில்லை.

பூவின்றி அமையாது பூஜை. ஆயினும், அப்பூக்கள் கூறப்பட்ட வகை, நிறம், குணம், தரம், மணம் உள்ளவைகளாய் இருத்தல் மிகவும் அவசியம். உரிய வகையும், மணமும் பெற்றிருந்தாலும்கூட, அவை குற்றம், குறை தோஷமின்றி இருத்தல் மிகவும் அவசியம். எனவே, விலக்கத்தக்கவை பற்றிய விதிமுறையை முதலில் முற்றிலும் பொருத்திப் பார்த்து சோதித்திடவேண்டும்.

பொதுவாக மலர்களை அதற்கென உரிய தெய்வாம்சம் பொருந்திய பாத்திரத்தில் மட்டுமே பறித்து சேமித்திடவேண்டும். பின்பு பூஜைக்குரிய புஷ்ப பாத்திரத்தில் வைத்து சமஸ்காரத்தால் புனிதமாக்கி, அப்பூவை சோபை உள்ளவரை கையாளவேண்டும். பூஜையில் செண்பகப்பூவின் மொட்டுகள் மட்டுமே, மொட்டாக சாற்றக்கூடியவை. மற்ற மலர் வகைகளின் மொட்டுகளை ஒருபோதும் சாற்றக்கூடாது.

சுத்தமான உலோகம் அல்லது மரத்தாலான பாத்திரத்திலோ, தென்னை இலைக்கீற்றால் பின்னிய பூக்குடலை அல்லது மூங்கில் கூடைகளில் பூப்பறித்து சேமிப்பது முறையாகும்.

இது குறித்து மேலும் பல விளக்கங்களை ஆகமங்கள் கூறுகின்றன. அவையனைத்தும் எழுதினால் மேலும் இது விரியும். எனவே, ஆகமங்கள் கூறும் வேறுபல அரிய தகவல்கள் குறித்து அடுத்த இதழில் காண்போம்.

(தொடரும்)

ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஏழு திருக்கோவில்களின் மகா கும்பாபிஷேக விழாவினை, வெகுவிமரிசையாக கடந்த ஜனவரி 23-ஆம் தேதி அருப்புக்கோட்டையில் நடத்தினார்கள் புளியம்பட்டி- திருநகரம் சாலிலியர் மகாஜன பரிபாலன சபையினர். அனைத்து சமுதாய மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்ட அந்த பிரம்மாண்ட திருவிழா ஊரையே பரவசப்படுத்தியது.

ஏழு கோவில்கள் எவை எவை?

மாகாளியம்மன் திருக்கோவில், சிவன் விநாயகர் திருக்கோவில், தெப்பக்குளம் ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவில், மோதக விநாயகர் திருக்கோவில், சஞ்சீவி விநாயகர் திருக்கோவில், பழனியாண்டவர் திருக்கோவில், பிரம்ம ஸ்ரீ அய்யா கோவில் என ஏழு கோவில்களுக்கும் யாக சாலை பூஜைகள் நடத்தி, புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேம் நடந்தது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி யில் கிடைத்துள்ள சக்தியின் உருவச் சிலை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் சக்தி வழிபாடு நடந்திருப்பதை உறுதிசெய்கிறது. ஆதிசக்தியிடமிருந்தே அனைத்தும் தோன்றியதாக தேவி பாகவதம் கூறுகிறது. தெய்வத்தை தாய் வடிவில் வணங்குவதில்தான் எத்தனை இன்பம்! அவளது அருள் வடிவங்களோ ஆயிரமாயிரம்! ஊர்தோறும் பேர்மாறி அருள்மாரி பொழிகிறாள். அகிலத்தை ஆள்வதில் மீனாட்சி, அன்பர்களைக் காப்பதில் காமாட்சி, அருள் வழங்குவதில் அபிராமி, மழை பொழிவதில் மாரியம்மாள், அதர்மத்தை அழிப்பதில் மாகாளி! அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகிய முப்பெருந்தேவியரின் ஒருங்கிணைந்த அம்சம் அல்லவா துர்க்கை என்னும் மாகாளியின் வடிவம்.

சிங்க வாகனமேறி மகிஷனை வென்று தன் காலடியில் வீழ்த்திய துர்க்கையானவள் கரிய நிறத்துடன் காட்சியளித்தமையால் காளி எனப்பட்டாள். வெற்றி தெய்வம் கொற்றவை எனப்படும் அன்னை, இங்குள்ள திருக்கோவிலிலின் கருவறையில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறாள். சூலத்தால் மகிஷன் சிரம் குத்தி துஷ்ட நிக்ரகமும் சிஷ்ட பரிபாலனமும் செய்தவண்ணம் காட்சியளிக்கிறாள். இங்குள்ள சிலா விக்ரகம் உளியால் செதுக்கப்பட்டதல்ல என்றும், தானே தோன்றிய சுயம்பு என்றும் கூறுவர். ஏர்க்காலால் நிலத்தை உழுதபோது கிடைத்த இச்சிலையை வழிபட்டு வந்த பக்தர் ஒருவர், சாலிலியர் குல மக்களிடம் கொடுத்து கோவிலை நிர்மாணிக்க வேண்டினாராம். சிலையின் முழு உருவமும் செப்பமுற இல்லாததை வைத்தே இதைச் சுயம்பு என்கின்றனர்.

வானில் வட்டமிட்ட கருடன்!

கருடனை கிருஷ்ண பருந்து என்றும் சொல்வார் கள். மகாவிஷ்ணு பல்வேறு வாகனங்களில் அருள் பாலிலித்தாலும் கருடவாகனத்தில் எழுந்தருள்வதே சிறப் பாகும். விஷ்ணு தலங்களில் கருடாழ்வார் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார். கருட தரிசனம் என்பது சுப சகுனமாகக் கருதப்படுகிறது. கருடன் மங்கள வடிவினன்.  வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாகும். சபரிமலையில் ஐயப்பனின் திருவாபரணங்களைக் கொண்டுவரும்போது ஊர்வலப் பாதை முழுவதும் கருடன் வட்டமிட்டபடியே இருக்கும். அப்போது பக்தர்கள்“”கிருஷ்ணா… கிருஷ்ணா…’’’ என்று உணர்ச்சிப் பெருக்கோடு சொல்வார்கள். இத்தனை சிறப்புவாய்ந்த கருடனின் வரவை கோவில் கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் எதிர்பார்ப்பார்கள்.

அருப்புக்கோட்டையில்  ஏழு கோவில் குடமுழுக்கு நடைபெறுவதற்கு முன்பாக வானம் இருட்டியது. புனித நீர் ஊற்றும்போது மேகத்தைக் கிழித்துக்கொண்டு சூரிய ஒளி பாய்ந்தது.  கோபுர கலசம் தகதகத்தது. இத்தருணத்தில் எங்கிருந்தோ பறந்துவந்த கருடன், ஏழு கோவில்களையும் வட்டமிட்டது. பக்தர்களும் கிருஷ்ண கோஷம் எழுப்பினர்.


ஊருக்கே சோறு!

மிகப்புனித நீரின் ஒரு துளியாவது  அனைவர்மீதும் படவேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு, ஏழு கோவில்களிலிருந்தும் எடுத்து வரப்பட்ட குடமுழுக்கு நீரை தீயணைப்புத்துறை வாகனத்தின் மூலம் பீய்ச்சி அடித்தனர். சாலியர் பாவடித் தோப்பு வளாகத்தில் குறைகள் எதுவுமில்லாமல் அன்னதானம் வழங்கிய விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் போன்றவற்றை ஒரு தட்டில் வைத்து ஊர் மக்களுக்கு வழங்கினர்.

குடமுழுக்கு நடைபெற்றபோது கோவில் விமானம் வரை ஏறி வழிபட்டார் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகைச் செல்வன். ராமலிலிங்கா மில் அதிபர் டி.ஆர். தினகரன், ஜெயவிலாஸ் டிரான்ஸ்போர்ட் அதிபர் டி.ஆர். வரதராஜன், மண்ணின் மைந்தரான நக்கீரன் ஆசிரியர் நக்கீரன்கோபால், அருப்புக் கோட்டை நகராட்சி ஆணையர் மணி என முக்கிய பிரமுகர்கள் பலரும் கும்பாபிஷேக விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மிக நல்ல முறையில் செய்திருந்தார் சாலிலியர் மகாஜன பரிபாலன சபைத் தலைவரும் நடைமுறை நிர்வாகியுமான என்.ஏ. சுப்பிரமணியம்.

குழந்தைப் பேறு உண்டாக, தீராத நோய்கள் நீங்கிட, திருமணம் கைகூட, மாங்கல்ய பலம் பெற, வேலை வாய்ப்பு கிடைத்திட, வியாபாரம் விருத்தியடைய, ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்வு அமைந்திட தன்னை நாடி வருவோர்க்கு கேட்ட வரம் தந்து அருள்பாலிலித்து வருகிறார்கள் ஆயிரங்கண் மாரியம்மன், மாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள்!

படங்கள் : ராம்குமார்


தமிழ்நாட்டில், சிதம்பரத்துக்கு அடுத்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு திருவாதிரைத் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் சிவத்தலம் லால்குடி எனப்படும் திருத்தவத்துறை ஆகும்.
லால்குடி! நினைக்கும்போதே இனிக்கும் நகரம். “பால் குடிக்கும் குழவிகளும் பைந்தமிழ்த் தேன்குடிக்கும் லால்குடி’ என்றும்; “தமிழ் இலால் குடியேது’ என்றும் எழிலார்ந்த கவிதை பாடி, லால்குடியின் சிறப்பைப் படம் பிடித்துக் காட்டினார் அமரர் “புலவர் திலகம்’ கீரன்.

“தமிழ்த் தாத்தா’ உ.வே. சுவாமி நாதய்யரின் ஆசான், மகாவித்வான் “திரிசிரபுரம்’ மீனாட்சி சுந்தரம்பிள்ளை, “திருத்தவத்துறை பெருந்திருப்பிராட்டி (அம்பாள்) பிள்ளைத்தமிழ்’ பாடி தரிசனம் செய்த நிகழ்வும் குறிப்பிடத்தக்கது.

தற்போதும் “இலக்கிய ஆய்வாளர்’ ஜி. கனகசபை, மிகவும் சிறப்பாக திருத்தவத்துறை (லால்குடி) அறநெறிக்கழகம் மூலம் ஆன்மிகத் தமிழ்ச் சொற்பொழிவுகள், இலக்கியப் பெருவிழாக்கள் சிறப்பாக நடத்திவருவதும் அறியத்தக்கது.

மேலும் பேரறிஞர் அ.ச. ஞானசம்பந்தனின் தந்தையாரான பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியார், பெரிய புராணச் சொற்பொழிவில் தனி முத்திரை பதித்தவர். இவர் லால்குடி அரசுப் பள்ளித் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.

செம்பை வைத்தியநாத பாகவதர், செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர், மதுரை மணி அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், ஜி.என்.பி., முசிறி சுப்ரமணிய அய்யர் ஆகியோரின் தரமான இசைக்குத் தக்கதோர் பக்கவாத்தியமாக- வயலின் வாசிப்பில் சாதனை படைத்த “வயலின்மேதை’ ஜெயராமன் லால்குடியில் பிறந்தவரே ஆவார்.

“திருக்குறள்வேள்’ ஜி. வரதராஜ பிள்ளை, திருக்குறள் நெறி பரப்பிய ஆறுமுகனார் ஆகியோரின் பிறப்பிடமும் லால்குடியே.

இளைஞர்களை ஆன்மிகப் பாதையில் திருப்பிய பெருமைக்குரிய புலவர் திலகம் கீரன், முதன்முதலில் தன் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவை- முன்னாள் மாவட்டத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பெருவளநல்லூர் பி.பி.கே. ராஜா சிதம்பரம்ரெட்டியார் தலைமையில், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் தொடங்கிவைத்த திருத்தலம் திருத்தவத் துறையாம் லால்குடியே.

லால்குடி பெருந்திருப்பிராட்டி அம்பாள்மீது அளவற்ற பக்தி கொண்ட புலவர் கீரன், “மாயூரம் வைத்தியநாதன்’ என்ற தன் பெயரை, “லால்குடி புலவர் கீரன்’ என மாற்றிக்கொண்டதும் அறியத்தக்கது.

தமிழ் எழுத்துலகில், தரமான புதினங்களையும், சிறுகதைகளையும் ஆழமான தத்துவ நோக்குடன் படைத்த “எழுத்துத் திலகம்’ லா.ச. ராமாமிர்தம் லால்குடியில் பிறந்தவரே ஆவர்.

லால்குடி அரசுப் பள்ளியில் தமிழ் கற்பித்த பெரும்புலவர்கள் நடேச முதலியார், இராமசாமிக் கோனார், புலவர் ப. அரங்கசாமி ஆகியோரின் தரமான தமிழ்ப்பணியையும் மறக்கமுடியாது.

லால்குடியை அடுத்த சிவத்தலம் பூவாளூரில் பிறந்த தியாகராஜ செட்டியாரும், தமிழ்த்தாத்தா உ.வே., சுவாமிநாதய்யரும், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நன்மாணாக்கர்களாய் விளங்கியது தமிழ் வரலாற்றில் இடம்பெறத்தக்கது.

வைணவப் பேரறிஞர் பெருவளநல்லூர் பத்மநாபரெட்டியார், வைணவ இலக்கியம் தழைத்திடச் சிறப்பாகப் பணிபுரிந்ததை மறக்க இயலாது.

இவ்வாறு தமிழ்ச் சான்றோர்கள் ஆன்மிகத் தமிழ்ப் பணியாற்றிய திருத்தவத்துறை என்ற லால்குடி, நமது தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்ததோர் இடம்பெற்ற திருத்தலமாகும்.

சப்த ரிஷிகள் தரிசித்த தலம்

அத்ரி, பிருகு, புலத்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரசர், மரீசி என ஏழு (சப்த) ரிஷிகள் மனமுருக தரிசனம் பெற்றதால், இத்தல சிவபெருமானுக்கு “சப்தரிஷீஸ்வரர்’ என்ற திருநாமமும் உண்டு.

அறம் வளர்த்த நாயகியாம் பெருந்திருப் பிராட்டியார் என்பதே அம்பாளின் திருநாமம்.

லால்குடி என்ற பெயர் வந்த வரலாறு

“மாலிக்காபூர்’ என்னும் முஸ்லிம் படைத்தளபதி மதுரை மாநகரை கபளீகரம் செய்யச் சென்றபோது திருத்தவத்துறைக் கும் வந்தான். அப்போது, திருத்தவத்துறை சிவாலய ராஜகோபுரம் சிவப்பு வண்ணம் தீட்டப் பெற்றிருப்பதைப் பார்த்த மாலிக் காபூர், “”இது என்ன லால்குடி?” என உருதுமொழியில் வினவினான்.

உருதுமொழியில் “லால்’ என்றால் “சிவப்பு’ என்றும், “குடி’ என்றால் கோவில் கோபுரம் என்றும் பொருள். மாலிக்காபூர் அன்று “லால்குடி’ என்று வழங்கிய சொல்லே நிலைத்துவிட்டது.

சிவலிங்கத் திருமேனியில் ஏழு புள்ளிகள்- ஏன்?

ஏழு ரிஷிகள் கடுந்தவம் புரிந்ததால், அவர்களுக்கு அருள்செய்ய தன் சிவப்பேரொளியில் அவர்களை ஐக்கியப்படுத்திக்கொண்டார் ஈசன். தன் லிங்கத் திருமேனியில் ஏழு ரிஷிகளும் ஐக்கியமானதால், இத்தலத்தி லுள்ள சிவலிங்கத் திருமேனியில் ஏழு புள்ளிகள் தோன்றின. மேலும் ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே தவத்துறை ஆயிற்று.

திருமண வரம்

இத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பெருந்திருப்பிராட்டி- சப்த ரிஷீஸ்வரர் திருமணக் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இவ்விழாவைக் கண்டால், திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் கைகூடுமென்பது ஐதீகம்.

பைரவி வனம்

திருத்தவத்துறையாம் லால்குடிக்கு பைரவி வனம் என வேறு பெயரும் உண்டு. பெருந்திருப்பிராட்டி சந்நிதியில் அபூர்வமான காளி வடிவம் காணப்படுகின்றது. நடராஜப் பெருமான், பைரவியான இந்தக் காளியின் ஆணவத்தை நடனமாடி அடக்கியதால், இத்தலம் பைரவ வனம் எனப்பட்டது.

வீணை ஏந்திய குரு பகவான்!

இங்கு வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக் கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை “வீணா தட்சிணாமூர்த்தி’ என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. ஏழிசையாய், இசைப்பயனாய் இருக்கும் சிவபெருமானின் மற்றோர் வடிவமே தட்சிணாமூர்த்தி.

புகழ்பெற்ற பல சிவாலயங்களில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது போல, இத்தலத்திலும் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் செய்து, சிறப் பாக விழா நடக்கிறது. வினை தீர்க்கும் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வளங்கள் பலவும் பெறலாம்.

சூரியனை நோக்கும் நவகிரக சந்நிதிஇங்கு சற்றே வித்தியாசமான கோணத்தில் நவகிரக சந்நிதி வடிவமைக்கப் பெற்றுள்ளது. ஆம்! இத்தலத்தில் சூரிய பகவானை நோக்கி  நவகிரக சந்நிதி அமைந்திருப்பது தனிச்சிறப் பாகும்.  தோஷங்களால் பாதிக்கப்பட்டோர் நெய் விளக்கேற்றியும், விசேஷ பூஜைகள் செய்தும், நவகிரக சந்நிதியை ஒன்பதுமுறை வலம்வந்து வழிபடுகின்றனர். இதனால் சகல தோஷங்களும் நீங்கப் பெற்று, வாழ்வில் வளம் காண்கின்ற மாட்சியும் உண்டு.

தமிழாலும் இறையுணர்வாலும் சிறந்து விளங்கும் இத்தலத்தை தரிசிப்பது கிடைத் தற்கரிய பேறு!ஆழி என்றால் சக்கரம். அது ஒரு படைக்கலம்.

அதேசமயம் அது அழிக்கும் கருவி மட்டுமல்ல; காக்கும் கருவி; தீயோரை அழிக்கும்! நல்லோரைக் காக்கும்.  காக்கும் கடவுளாகிய திருமாலின் திருக்கரத்தில் விளங்குவது அந்தத் திருவாழி. திரு என்பது திருமகளைக் குறிக்கும். திருவுறைமார்பன் திருமால். மார்பில் திருவை வைத்திருக்கும் திருமாலின் திருக்கரத்தில் விளங்குவதால் திருவாழி என்ற சிறப்பு பெற்றது. வைணவர்கள் திருமாலுக்கு நிகராக திருவாழியை வழிபடுவர். அதனால் அதனை சக்கரத்தாழ்வார் என்றும் போற்றுவர். சக்கரத்தைத் தாங்கியிருப்பதாலேயே எம்பெருமானுக்கு சக்கரபாணி, சக்கரதாரி என்று திருநாமங்கள் அமைந்தன.

பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனிச் சந்நிதியே உண்டு.  அதில் சக்கரத்தாழ்வாரின் உருவம் ஒருபுறம் இருக்கும். பின்புறத்தில் யோக நரசிம்மர் உருவம் இருக்கும். (கருவறையில் பின்புறம் அமைந்திருக்கும் பலகணி வழியே நரசிம்மரை தரிசிக்கலாம்.) திருமாலின் சக்தியே இந்த சக்கரம்தான். திருமால் சக்கரத்தை இழந்து சங்கடப்பட்டதும் உண்டு.

திருமாலின் பத்து அவதாரங்களில் கிருஷ்ணாவதாரத்தில் மட்டுமே அவர் கையில் சக்கரம் இருந்தது. நரசிம்மர் கையிலும் இருக்கும். ஆனால் இரண்ய வதத்திற்கு அவர் சக்கரத்தைப் பயன்படுத்தவில்லை. ஆனால் நரசிம்மத்தின் விரல் நகங்களில் சக்கரத்தின் சக்தி மறைமுகமாக இருந்தது என்பர். கிருஷ்ணாவதாரத்திலும், “பாரதப்போரில் நான் படை (ஆயுதம்) எடுக்கமாட்டேன்’ என்று துரியோதனனிடம் சத்தியம் செய்துவிட்டார். ஜயத்ரதனை துரியோதனாதியர் மறைத்து வைத்தனர். அவனை சூரிய அஸ்தமனத்துக்குள் வெளிப்படுத்தினால்தான் அர்ஜுனன் செய்த சபதப்படி அவனைக் கொல்லமுடியும். அப்பொழுது சூரியனை மறைத்து பொய்யான அஸ்தமனம் ஏற்படுத்த சக்கரத்தைப் பயன்படுத்தினார்.

(அவர் கையால் சக்கரத்தைக் கொண்டு யாரையும் தாக்கவில்லை. எனவே சத்தியம் மீறியதாகாது என்பது வாதம்.)

ஒருசமயம் இந்திரன், சிவபெருமானை தரிசிக்க கயிலை வந்துகொண்டிருந்தான். காணும் பொருளிலெல்லாம் இறைவன் உள்ளான் என்பதை இந்திரன் உணர்ந்திருக்கிறானா என்று சோதிக்க எண்ணினார் சிவன். ருத்ரவடிவில் இந்திரன்முன் தோன்றினார்.

யாரோ ஒரு அரக்கன் தன்னை வழிமறிப்ப தாக எண்ணி சினமுற்ற இந்திரன் வஜ்ராயுதத்தை ருத்ரன்மீது ஏவினான். அது எம்பெருமான்மீது பட்டது. உடனே அவர் உடல் சிலிர்த்தது. கோபக்கனல் வியர்வைத் துளிகளாயின. அவை கடலில் விழுந்தன. ருத்ரவடிவில் வந்தது சிவபெருமானே என்றறிந்த இந்திரன், அவர் திருவடிகளில் விழுந்தான்.

கடலில் விழுந்த ருத்ரனின் வியர்வைத் துளிகள் ஓர் அசுரனாக உருவெடுத்தது. பிரம்மதேவனால் ஆசிர்வதிக்கப்பட்டது. சமுத்திரராஜனால் அவ்வசுரன் வளர்க்கப்பட்டான். ஜலந்திரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.

ருத்ரனின் வியர்வையில் தோன்றி பிரம்மனிடம் வரங்களும் பெற்றதால், அசுரர்களுக்கே உரிய ஆணவம் அவனைச் சூழ்ந்தது. எவராலும் தன்னை அழிக்க முடியாதென்ற எண்ணமும் வந்தது. இந்திரனை அடிமையாக்கினான். திருமாலையும்கூட வென்றான். கயிலைநாதனையும் வெல்வேனென்று புறப்பட்டான். அப்போது சிவபெருமானே ஒரு வேதியர் வடிவில் அவன்முன் தோன்றினார்.

“”நான் சிவபெருமானுக்கு அடுத்த நிலையிலுள்ளவன். நீ சிவனை வெல்லப் புறப்பட்டிருக்கிறாய். அதற்குமுன் என்னால் உருவாக்கப்படும் ஒரு யந்திரத்தை உன்னால் அழிக்கமுடியுமா பார்” என்று சொல்லி, சிவபெருமான் தனது கால்விரல்களால் தரையில் வரி வடிவமாக மகா சுதர்சன சக்கரத்தை வரைந்தார். “”எங்கே, இந்த சக்கரத்தை எடுத்து உன் தலைமீது வைத்துக் கொள் பார்க்கலாம்” என்றார்.

ஜலந்திரன் சுதர்சன சக்கரத்தை தூக்கித் தன் தலையில் வைத்தான்; அவ்வளவுதான். அவனது உடல் இருகூறாய்ப் பிளந்தது. உடல்தான் அழிந்தது. ஆனால் உயிராய் அவனிடமிருந்த ருத்ரசக்தி அழியாவரம் பெற்றதல்லவா? அதனால் அந்த சக்தி சக்கரத்தில் ஐக்கியமாகிவிட்டது. மகாசுதர்சனம் சிவபெருமான் கரத்தையடைந்தது.

கோலோகத்தில் திருமாலின் தொண்டில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவள் துளசிதேவி. அவள் ஒரு சாபத்தால் பூவுலகில் காலநேமி எனும் அசுரனின் மகளாய்ப் பிறந் தாள். இப்பொழுது அவளது பெயர் பிருந்தா. இவளே ஜலந்திரனுக்கு மனைவியானாள். இவளது பதிவிரதாசக்தியால்தான் ஜலந்திரன் அழியா வரம்பெற முடிந்தது. ஆனால் கொடுமைகள் புரிந்ததால் சிவபெருமானாலேயே அழிந்தான். அப்பொழுது பிருந்தை தீக்குளித்து உயிர்நீத்தாள். எப்போதும் திருமாலுடனே வசிக்கும் வரம்பெற்று மீண்டும் துளசியாகி திருமாலின் சேவையைத் தொடர்ந்தாள். அதனால் “திருத்துழாய்’ என்று வைணவர்களால் போற்றப்பட்டாள். துளசி மாலை சூடிய திருமாலும், “திருத்துழாய் மார்பன்’ எனப்பட்டார்.

அதுமட்டுமல்ல; சத்யபாமா ஸ்ரீகிருஷ்ணனை தராசுத் தட்டில் (துலாபாரம்) ஏற்றிய போது, மறுதட்டில் ருக்மணி பக்தியுடன் வைத்த ஒரு துளசி தளம் தான் கிருஷ்ணனுக்கு (எடைக்கு) நிகரானது.

சத்யபாமா வைத்த பொன்னும் பொருளுமல்ல.

மேலும் தர்மத்தை நிலைநாட்டவும் அதர்மத்தை அழிக்கவும் சுதர்சனம் தேவையென்பதை திருமால் உணர்ந்தார். சிவபெருமானிடமிருந்து அதனைப் பெற தவம்புரிந்தார். ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சிப்பதாக முடிவுசெய்தார். யாராயிருந்தாலும் உண்மையான பக்தி இருக்கவேண்டும். அது திருமாலிடம் உள்ளதா என்பதை சோதிக்க நினைத்தார் சிவபெருமான். எனவே ஒரு தாமரை மலரை மறைத்துவிட்டார். 999 மலர்களால் பூசித்துவிட்டு ஆயிரமாவது மலரைக் காணாமல் திருமால் சற்று திகைத்தார்.

ஆனால் சிறிதும் தயங்காமல் தன் கண்ணாகிய ஒரு மலரையே பறித்து பூஜித்து முடித்துவிட்டார். ஆம்; செந்தாமரைக் கண்ணன்தானே! உடல், உயிர், உலகம் அனைத்துப் பொருளும் இறைவனுடையவை என்பதை திருமாலே எடுத்துக்காட்டிவிட்டார். பக்தியில் தியாகத்திற்கு முக்கிய இடமுண்டு. சைவத்தில் ஒரு கண்ணப்பன்; வைணவத்தில் ஒரு கூரத்தாழ்வான்.

திருமாலின் தியாக பக்திக்கு மகிழ்ந்த சிவபெருமான் மகாசுதர்சனத்தை திருமாலிடமே தந்து, உமது காக்கும் தொழிலுக்கு இது பேருதவியாயிருக்கும் என்று ஆசிர்வதித்தார்.

“உலகில் எந்த தீய சக்தியையும் அழிக்கவல்லது சுதர்சனம்’ என்று சுதர்சன மூல மந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லவர்களுக்கு எதிராகச் செயல்படும் யந்திரம், தந்திரம், மந்திரம், அஸ்திரம், சஸ்திரம் அனைத்தையும் அழித்து அவர்களைக் காக்கவல்லது சுதர்சனம்.

ருத்ரனால் உருவாக்கப்பட் டதால் அதில் ருத்ரசக்தியும் விஷ்ணுசக்தியும் இணைந்தேயுள்ளன. இதுதான் ஒரே திருவாழியில்  இரு தெய்வங்கள் உள்ள அபூர்வ சக்கரம்.

மகாபாரதப் போர்க் களத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அப்பொழுது தனது விராட் விசுவரூப தரிசனமும் தந்தார். அதில் அண்ட சராசரங்களையும் சகல தேவர்களையும் கண்டு வியந்தான் அர்ஜுனன். அப்பொழுதே அனைத்து சக்திகளையும் திரட்டி சுதர்சன சக்கரத்தை (யந்திரத்தை) உருவாக்கினார். அங்கேயே முளைத்திருந்த நாயுருவி சமித்துகளைக் கொண்டு மஹாசுதர்சன ஹோமத்தையும் நடத்திய பின்பு போரை தொடங்கச்செய்தார். அதனாலேயே பாண்டவர்கள் பெருவெற்றி பெறமுடிந்தது.

இராவணனை வெல்ல ஒரு ஆதித்ய ஹ்ருதயம், துரியோதனாதியர்களை வெல்ல சுதர்சன ஹோமம்! எனவே சுதர்சன ஹோமம் செய்பவர்கள் இரு தெய்வங்களின் அருளால் பெரும்வெற்றி பெறுவர்.

புரட்டாதி சனி விரதம் சிறப்புக்கள்,பெருமைகள்

புரட்டாதி சனி விரதம்
=================
“புரட்டாசி சனி” என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்
;

8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் (மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் அதனால்) கூறுவர். சனீஸ்வரர் மந்தகதி உடையவர்.

இவர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக இத்தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம்.

இவையாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என கூறப்பெறுகின்றது. சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை, கேடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது.இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.

சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி வழிபட வேண்டும். பின் வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருத வேண்டும்.

அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாசி மாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவியிடம் சனிபகவான் தோன்றினார்.

சாவர்ணிமனுவும், பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.


நாம் பின்பற்றும் இந்துமத தர்மம் சனாதன தர்மம் எனப்படுகிறது. அதாவது, இது எல்லாருக்கும் பொதுவானது.

எல்லா காலங்களிலும் இருப்பது. நேற்றும் இருந்தது; இன்றும் இருப்பது; நாளையும் இருக்கப்போவது. எளிமையாகச் சொன்னால் ஒரு தண்ணீரின்- தீயின் அனுபவம்போல எனலாம். நம் மூதாதையர், நாம், நமது வம்சாவழி என வெவ்வேறு தலைமுறைகள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தாலும், தண்ணீரின் அனுபவம் எல்லாருக்கும் ஒன்றுதானே. அதுபோல சனாதன தர்மமென்பது என்றைக்குமானது; மனித குலத்துக்கு நன்மைதரக் கூடியது. அதன் அடிப்படையில்தான் எங்கும் நிறைந்த இறைவனுக்கு ஆலயங் கள் அமைத்தார்கள். ஆகம விதிகளை வகுத்தார்கள்.

எனவே ஆலய வழிபாடென்பது மிகவும் அவசியமான ஒன்று. அது மனதிலிருக்கும் கவலைகளை விரட்டும். தைரியத்தைத் தரும். தன்னம்பிக்கையைத் தந்து வெற்றிப் பாதையில் நம்மை அழைத்துச்செல்லும்.

ஒரு ஆலயத்துக்குள் செல்லும்போது வாகனத்துக்கு முன்னால் பலிபீடம் இருப்பதைக் காண்கிறோம். அங்கே பலிகொடுத்து விட்டுதான் உள்ளே செல்ல வேண்டும். எதை பலியிடவேண்டும்? “நான்’ என்ற உணர்வை பலியிடவேண்டும். வெளியில் நாம் யாராகவும் இருக்கலாம். மிகப்பெரிய பணக்காரராக- தொழிலதிபராக- அரசில் உயர்பதவி வகிப்பவராக- மக்களிடையே செல்வாக்குபெற்ற பிரபலங்களாக என யாராகவும் இருக்கலாம். அந்த எண்ணம் நம் மனதில் ஆழப்பதிந்து, அதற்குரிய அதிகார பாவனையை நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும். அந்த எண்ணத்தை- உணர்வை பலியிடவேண்டும்.

கிராம தெய்வங்களுக்கு உயிர்பலி கொடுப்பார்கள். அது அதற்குரிய வழிமுறை. ஆகம முறைப்படி வழிபாடு நடக்கும் ஆலயங்களில் பலியிட வேண்டியது “நான்’ என்ற உணர்வை. அதை விட்டுவிட்டு ஆலயத்துக்குள் சென்றுபாருங்கள். மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் உணரமுடியும்.

ஆலயத்துக்குள் நுழையும்போது ஆண்டான்- அடிமை, பெற்றோர்- பிள்ளை என்ற எண்ணத்தில்தான் செல்லவேண்டும். “நீயே என் தாய்; நீயே என் தந்தை. உன் பிள்ளை நான்’ என்று நம்மை இறைவனிடம் முற்றிலுமாக ஒப்புவித்துவிடவேண்டும். அப்போது நம்மிடம் பணிவு வந்துவிடும்.

பலிபீடத்துக்கு அருகிலுள்ள வாகனத்தைப் பாருங்கள். அவை பணிந்திருக்கும். கர்வத்தோடு இருக்காது. சிங்கம்கூட பணிவுடன் இருக்கும். காளையும் பணிந்து காணப்படும். அண்ட சராசரங்களுக்குத் தலைவனாக விளங்கும் இறைவனின் வாகனமே பணிவுடன் இருக்குமானால் நாம் எப்படியிருக்க வேண்டும்?

சிவனை பசுபதி என்பார்கள். அதாவது இறைவன் பதி. நாம் பசு. இந்தப் பசு பதியைக் காணாமல் மறைப் பது மாயை எனப்படும் பாசம். அந்த மாயையை நாம் இந்த பலிபீடத்தில் அகற்றிவிட்டால், அடுத்து இறை தரிசனத்தைப் பெற்றுவிடலாம்; பதியை அடைந்துவிடலாம்.  இத்தகைய அற்புத தத்துவத்தை விளக்குவதே ஆலயம். ஆலயத்தை பூஜை செய்யுமிடம் என்று மட்டும் எண்ணி விடக்கூடாது. இந்த உலகுக்கு நன்மை செய்யும் அனைத்துவிதமான சக்திகளையும் தரக்கூடிய இடம்தான் ஆலயம். ஆன்மாக்கள் லயம் பெறக் கூடிய இடம்.

ஆலயத்தில் நுழைந்தவுடன் கொடிமரத்தினருகே வடக்கு நோக்கி வழிபடவேண்டும். வடக்கிலிருந்து மின்காந்த அதிர்வுகள் வருவதாக இன்றைய அறிவியலார் உறுதி செய்திருக்கிறார்கள். அதை முன்னமேயே உணர்ந்தே நம் முன்னோர்கள் இவ்வாறு நெறிப்படுத்தியுள்ளனர். அதன்பின்னர் அனைத்து சந்நிதிகளையும் வணங்கிவந்தபின் கொடிமரத்தருகே மீண்டும் வணங்கவேண்டும். அப்போது, நாம் வணங்கிய தெய்வங்களின் திருவுருவங்களையும், அங்கு நாம் வைத்த கோரிக்கைகளையும் மீண்டும் நினைவுகூர்ந்து வணங்கவேண்டும்.

பொதுவாக வணங்குதல் என்பது மிக உயர்ந்த பண்பு. அதனால்தான் பெரியவர்களைக் கண்டால் வணங்கவேண்டுமென்று கூறினர். வணங்கும்போது நமக்கு பணிவு வந்துவிடும்; அடக்கத்தைத் தரும். மேலும் கொடிமரத்தினருகே எல்லா தேவதைகளின் சக்தியும் இருக்கும். அது ஒரு முக்கியமான மையம். பல மின்விளக்குகள் எரிகின்றன. அவற்றின் மின்வடங்களை ஓரிடத்தில் ஒன்றிணைக்கும் மெயின் பாக்ஸ் உண்டல்லவா? அதுபோன்ற இடமே கொடிமரம்.

ஆலயத்திலுள்ள சந்நிதிகளில் வழிபடும்போது, அந்தந்த தெய்வங்களுக்குரிய துதியைச்சொல்லவேண்டும். சமஸ்கிருதத்தில்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. பக்தர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழி எதுவோ அதில் சொல்லலாம். (ஆலய குருக்கள் சொல்வதென்பது வேறு.) மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்ல, உங்கள் மனதிலிருக்கும் குழப்பங்கள், பாரங்கள் அனைத்தும் விலகுவதைக் காண்பீர்கள். முயற்சித்துப் பாருங்கள். “ஓம் விநாயகாய நமஹ, ஓம் விக்னராஜாய நமஹா, ஓம் கௌரீ புத்ராய நமஹா’ என்றோ, “ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை’ என்றோ எந்த மொழியில் வேண்டுமானாலும் கூறுங்கள். உங்கள் மனதிலிருக்கும் அழுத்தம்- இறுக்கம்- அமைதியற்ற தன்மை போன்றவை விலகும். இந்த மன அழுத்தத்தால்தானே பல்வேறு தவறுகள் நிகழ்கின்றன. ஆக, இவைபோன்றவை விலகுமிடம் ஆலயம். “மந்’ என்றால் உச்சரித்தல்; “த்ரா’ என்றால் காப்பாற்றுதல். நாம் உச்சரிக்க உச்சரிக்க எது நம்மைக் காப்பாற்றுகிறதோ அதுதான் மந்திரம்.

ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு தெய்வங்கள் உள்ளன. அதை அறிந்து அதற்குரிய வழிபாட் டைச் செய்யவேண்டும். விநாயகரை வணங்கு கிறோம் என்றால், “விக்னங்களைப் போக்குபவர்’ என்றுணர்ந்து வணங்கவேண்டும். மனம்போல் வாழ்வென்பார்கள். அந்த எண்ணம் மிகவும் முக்கியம். “பிள்ளையாரை நாம் வணங்குகிறோம்.

இவருக்கு கணபதி என்று பெயர். இவருக்குள் அனைத்து ஜீவராசிகளும் அடக்கம். கணம் என்றால் குழு. நமது குடும்பம் நலமாக இருக்கவேண்டும். அனைத்துவிதமான தடைகளும் விலகவேண்டும்’ என்று உணர்ந்து வணங்கவேண்டும்.

இந்த எண்ணம் மிகவும் முக்கியம். “உயர்ந்ததையே நினை; வானத்தையே உன் இலக்காகக் கொள்’ என்று விவேகானந்தர் சொன்னதுபோல, திடமான எண்ணம் வேண்டும். நம்மால் முடியுமென்று நினைக்கவேண்டும். இந்த வேண்டுதல் நிறைவேறும் என்று முழுமையாக நம்புங்கள்.

முன்சொன்னதுபோல, எந்த இறைவனை வணங்குகிறோமோ, அதன் வடிவை நன்றாகக் கண்டு அதன் தத்துவத்தை அறிதல் அவசியம். இங்கு வீரபத்திரர் சந்நிதி இருக்கிறது. பத்ரம் என்றால் நன்மை. வீரத்தால் நன்மையைத் தருபவர் வீரபத்திரர் என்று உணர்ந்து முழு கவனத்தோடு வணங்கவேண்டும். ஒவ்வொரு உருவத்தையும் நீங்கள் கூர்ந்து பார்த்தீர்களானால் உங்கள் கவனம் சிதறாது. உங்கள் மனம் அங்கு லயிக்கும். அப்போது உங்கள் வேண்டுதலும் பலிக்கும்.

ஆக, ஆலயம் என்பது அனைவருக்கும் சக்தியை அளிக்குமிடம். அந்த அமைப்பில்தான் ஆலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையல்லவா! இதுபற்றி சொல்ல இன்னும் நிறைய விவரங்கள் உள்ளன. அவற்றைப் பின்னர் பகிர்ந்துகொள்வோம். இப்போது இந்த காளிகாம்பாள் அற்புதம் குறித்து ஒரு செய்தி சொல்கிறேன். இது 1984-ல் நடந்த சம்பவம்.

என் தந்தை சாம்பமூர்த்தி சிவாச்சாரியார்பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். உலகநாடுகள் பலவும் சென்று நூற்றுக்கணக்கான கும்பாபிஷேகங்கள் செய்தவர். பலராலும் அறியப்பட்டவர். திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் இன்று மிகப் பிரசித்திபெற்று விளங்குவதற்குக் காரணமானவர் ராமதாச சுவாமிகள். இவ்விருவரும் ஹைதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர். இரவு நேரம். திடீரென்று அந்த பயங்கர சம்பவம் நடந்து விட்டது. சாலை நடுவேயிருந்த தடுப்புச் சுவரில் கார் மோதி, டிரைவர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். என் தந்தைக்கும் ராமதாச சுவாமிகளுக்கும் பலத்த காயம். விபத்து நடந்த சில விநாடிகளிலேயே இன்னொரு கார் வருகிறது. என் தந்தை இருந்த கார் அருகே நிற்கிறது. அதிலிருந்து அவசரமாக ஒருவர் இறங்கி, உடனடியாக காரிலிருந்தவர்களைக் காப்பாற்ற வேகமாக உத்தரவுகளைப் பிறப் பிக்கிறார். சரியான நேரத்தில் மீட்கப்பட்டதால் அவ்விருவரும் உயிர்பிழைத்தனர். அப்படி காரிலிருந்து இறங்கியவர் யாரென்று நினைக்கிறீர்கள். அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள். டெல்லி செல்வதற்காக அவர் அப்போது வந்திருக்கிறார். அவர் சற்று தாமதமாக வந்திருந்தால் என் தந்தை காப்பாற்றப்படாமல்கூட போயிருக்கலாம்.

இறங்காமல் போயிருந்தால்கூட என்னாவது? அதன்பின்னர் ஒரு மாதகாலம் மருத்துவமனைக்கு வந்து என் தந்தை உடல்நலம் தேற பேருதவி புரிந்தார். அப்போது நாங்கள்எங்கள் தந்தையை இழந்திருந்தால் இப்போது உள்ளதுபோல் பல விஷயங்களைக் கற்றிருக்கமுடியாது. அந்த காலத்தில் இந்த ஆலயத்துக்கு மிகச்சில பக்தர்களே வருவார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு பெரிய வளர்ச்சி! மண்டபம் கட்டியது, ராஜகோபுரம் கட்டியது என மிகப்பெரிய வளர்ச்சி. இதற்கெல்லாம் காரணம் எம்.ஜி.ஆர்.தான். அவருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். எம்.ஜி.ஆருக்கு சந்ததியில்லை. இப்போதும் நான் தர்ப்பணம் செய்யும்போது அவரை நினைத்து தர்ப்பணம் செய்கிறேன். நாங்கள் எப்போதுமே தாயே என்று இந்த அம்பாளையே அழைப்போம். இந்த காளிகாம்பாளே எம்.ஜி.ஆர். வடிவில் வந்ததாகவே நினைக்கிறோம். தெய்வம் மனித வடிவில் வரும் என்பார்களல்லவா! ஒவ்வொரு மனிதருமே கடவுள் வடிவங்கள்தானே.

(பின்னர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். அந்த மருத்துவமனைக்குப் பின்புறம் கருமாரியம்மன் கோவில் இருக்கிறது. அங்கே அப்பா மிருத்யுஞ்சய ஹோமம் செய்து, அந்த ரட்சையை தினமும் காலையில் எம்.ஜி.ஆருக்கு அணிவித்தார். வேறு யாரையுமே எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்காத காலகட்டம் அது என்பது உங்களுக்குத் தெரியும்.)

அதற்குப் பிறகு 1999-ல் அப்பாவுக்கு உடல்நலம் மிகவும் பாதித்தது. ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழக்கத் தொடங்கியது. மருத்துவர்கள் 24 மணி நேர கெடு விதித்தார்கள். உறவினர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி விட்டோம். இந்த வாழ்க்கை என்பது அம்பாள்போட்ட பிச்சை. அதை அவள் தீர்மானிக்கிறாள். பிரார்த்திப்பது மட்டுமே நாம் செய்யக்கூடியது. 24 மணி நேரம் கடந்தது. மருத்துவர்களே வியக்கும்படி அவர் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டே அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில்- பல நாடுகளின் மதத்தலைவர்களும் பங்குகொண்ட கூட்டத்தில் இந்தியா சார்பாக சென்றவர்களில் என் தந்தையும் கலந்துகொண்டார். 2003-ல் அம்பாளின் சரணங்களில் சேர்ந்தார். இந்த சம்பவங்களை நுட்பமாக கவனித்தோமென்றால், காளிகாம் பாளின் கருணையையும் அற்புதத்தையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

(தொடரும்)


ஆடிப்பௌர்ணமி- 10-8-2014

தட்சிணாயனம் எனும் தெற்குதிசைநோக்கி சூரியன் பயணிக்கத் தொடங்கும் கடக மாதமான ஆடி மாதத் தினை அம்மனுக்குரிய மாதமென்று  போற்றுவர். இம்மாதத்தில் வரும் சிறப்பு நாட்கள் ஒவ்வொன்றும் திருநாட்களாகும். அந்தவகையில் ஆடிப்பௌர்ணமி மிகவும் போற்றப்படுகிறது சந்திரனை மனோகாரகன் எனச் சொல்கிறது ஜோதிட நூல். மனிதனின் மனதில் நல்ல சிந்தனை, தீயகுணங்கள் என இரண்டும் எழுவதற்கும், அந்த குணங்களை செயல்படுத்துவதற்கும் சந்திரனின் ஆதிக்கமே காரணமென்பது ஜோதிட வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இந்நாளில் இறைவழிபாட்டின் மூலம் நம் சிந்தனையை ஒருமுகப் படுத்தினால், மனோகாரகனான சந்திரன் சகல நன்மைகளையும் தந்தருள்வான் என்கின்றன வேத நூல்கள்.

சந்திரனுக்கு அதிபதி அம்பிகை. ஆகவே, இந்நாளில் அம்பிகையை தரிசித்து வழிபடுவதால் பூரண அருளும் ஆரோக்கியமும் கிட்டுவதுடன், மனதை அலையவிடாமல் ஒருநிலைப்படுத்தவும் உதவும். மனம் ஒருமைப்பட்டால் உடலில் குருதி சீராக ஓடும். இதன் விளைவால் படபடப்பு, கோபம், ஆக்ரோஷம் ஆகியவை நீங்கும். இதனால் மேன்மேலும் உடல்நலம் வளம்பெற்று, ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றன தியான வழிகாட்டி நூல்கள்.

அன்னை பராசக்தியை நிறைமதி நாளில் போற்றி ஆனந்தம் கண்டார்கள் ஞானிகள். அந்த நாட்களில் அம்பிகையை வழிபாடு செய்தால் ஞானம் எனும் புத்திக்கூர்மை சிறந்து விளங்குமென்று நமக்கும் வலியுறுத்தினார்கள். பெண்கள் பௌர்ணமி பூஜையை செய்துவந்தால், அன்னை தன் பரிபூரண அருளை அக்குடும்பத்திற்கு வாரிவழங்குகிறாள்.

அம்பாளை வழிபட பல கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் புகழ்பெற்ற அம்மன் கோவில்கள் ஏராளம். அந்தவகையில், பஞ்சபூதத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் அம்பாளை வழிபட, அனைத்து அம்பிகையையும் வழிபட்ட பலன் கிட்டும் என்பர்.

பஞ்சபூதங்களில் நிலம் எனும் பூதத்தின் தலமாகத் திகழ்கிறது காஞ்சி. இங்குள்ள காமாட்சியம்மன் கோவிலில் ஐந்து காமாட்சிகள் அருள்புரிகின்றனர்.

கருவறையில் அருள்புரியும் தேவியை மூலகாமாட்சி என்பர். இந்த தேவியின் வலப்புறம் காட்சி தருபவள் தபஸ்காமாட்சி. ஒற்றைக்காலில் முள்முனையில் நின்று தவம் செய்கிறாள் இந்த தேவி. கருவறையின் கீழ்ப்பகுதியில் குகை போன்ற அமைப்புடைய பிலாத்துவாரம் ஒன்றுண்டு. இதனுள் அருள்புரிவது பிலாகாச காமாட்சி. இங்குள்ள ஸ்ரீசக்கர ரூபத்தை ஸ்ரீசக்கர காமாட்சியாக வணங்குவர். அடுத்து, பாததரிசனம் மட்டும் அருளும் காமாட்சியென்று ஐந்து காமாட்சிகள் அருள்புரிகின்றனர்.

காஞ்சியில் அன்னை எழுந்தருளக் காரணமென்ன?

ஒருசமயம் கயிலையில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் அன்னை. அதனால் உலகங்கள் யாவும் இருண்டன. இதனால் கோபம் கொண்ட ஈசன், தேவியை பூவுலகில் தவமியற்றுமாறு பணித்தார். அதன்படி பூவுலகில் காஞ்சிக்கு வந்த அம்பிகை, வேகவதி ஆற்றங்கரையில் மணலால் லிங்கம் பிடித்து ஈசனை வணங்கித் தவமிருந்தாள். அம்பிகையை சோதிக்க எண்ணிய சிவபெருமான் வேகவதி ஆற்றில் வெள்ளம் பெருக் கெடுக்க வைத்தார். நீரின் வேகத்தில் மணல் லிங்கம் கரைந்துவிடுமோ என்ற அச்சத்தில், அதைத் தழுவிக்கொண்டாள் அன்னை.

அம்பிகையின் பக்தியில் மகிழ்ந்த ஈசன் அவளுக்குக் காட்சி கொடுத் தருளினார். இவ்வாறு தவமிருந்த ஆதிசக்தியான அன்னையே ஸ்ரீகாமாட்சியானாள். இந்த தேவியை பௌர்ணமியன்று தரிசித்தால் மாங்கல்ய பலம் நீடிக்குமென்பது ஐதீகம்.

திருவானைக்கா நீர்த்தலமென்று போற்றப்படுகிறது. இங்கு ஜம்புகேஸ்வரர்-  ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அருள்புரிகிறார்கள். இங்குள்ள ஈஸ்வரி தனித்தன்மை பெற்றவ ளென்று புராண வரலாறு கூறுகிறது. ஆதிகாலத்தில் அசுரன் ஒருவனை வதம் செய்த ஈஸ்வரி இங்கு எழுந்தருளியதால், உக்கிரத்துடன் காட்சி தந்தாள். இதனால் பக்தர்கள் இந்த அம்பாளை வழிபட அஞ்சினர். இந்த நிலையில் இத்தலத்திற்கு யாத்திரையாக வந்த ஆதிசங்கரர், அம்பாளது உக்கிரத்தைத் தணிக்க விரும்பினார். அம்பாளின் காதுகளில் ஏற்கெனவே தோடுகள் இருந்தாலும், முறைப்படி மந்திரப் பிரயோகம் செய்து ஸ்ரீசக்கர ரூபமான இரு காதணிகளை அம்பாளுக்கு மேற்கொண்டு அணிவித்தார். மேலும், அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீவிநாயகப் பெருமான் திருவுருவத்தையும் பிரதிஷ்டை செய்ய, அம்பிகையும் சாந்தரூபமாகக் காட்சிதந்தாள். இன்று அம்பாள் காதுகளில் இரண்டு தாடங்கங்கள் இருப்பதை தரிசிக்கலாம். ஒன்று ஆதிகாலத்தில் அணிந்திருந்த தாடங்கம்.

மற்றொன்று ஆதிசங்கரர் அணிவித்த ஸ்ரீசக்ரரூபமான தாடங்கம்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி இங்கு மகாதுர்க்கா, மகாலட்சுமி, மகாசரஸ்வதி ஆகிய மூன்று தேவியர் இணைந்த அகிலத்தின் நாயகியென போற்றப்படுகிறாள். சக்தி பீடங்களில் திருவானைக்கா வாராஹி பீடமென்பர். சதிதேவியின் முகவாய்க்கட்டை விழுந்த இடம். இங்கு ஒவ்வொரு நாளும் காலையில் பார்வதி அலங்காரத்திலும், நண்பகலில் மகாலட்சுமி அலங்காரத்திலும், இரவில் வெண்ணிறஆடை அணிந்து சரஸ்வதி கோலத்திலும் காட்சிதருகிறாள் ஈஸ்வரி.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மூலவருக்கு ஆடி மாதப் பௌர்ணமியன்று, காலை 10.15 முதல் 12.15 வரை நடக்கும் உச்சிக்காலப் பூஜையின்போது பூணூல் சாற்றப்படுகிறது. இது தனிச்சிறப்பு என்பர். இந்தக் கோலத்தில் ஈஸ்வரியை வழிபட, பெண்கள் தீர்க்கசுமங்கலி பாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம்.

உச்சிக்கால பூஜையின்போது, அர்ச்சகர் புடவை கட்டிக்கொண்டு ஈசனைப் பூஜிப்பது வழக்கம். அதாவது அகிலாண்டேஸ்வரியே பூஜை செய்வதாக ஐதீகம். ஆடிப்பௌர்ணமியன்று இத்திருக்கோவில் விழாக்கோலம் காணும்.

ஆகாயத்தலமென்று போற்றப்படுவது சிதம்பரம். இந்த திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப்பெருமான் அருள்புரிகிறார். இத்திருக்கோவிலில் அன்னை சிவகாமசுந்தரி, சின்னஞ்சிறு பெண்போல் சிற்றாடை இடையுடுத்தி சிவகங்கை குளத்திற்கு மேற்கே, இரண்டு பிராகாரங்களுடன் தனிக்கோவில் கொண்டுள்ளாள். இதுதவிர, பஞ்சாட்சரப் படிகளின்மீது ஸ்ரீநடராஜப் பெருமான் ஆனந்த நடனம் புரியும் சித்சபையிலும், உற்சவ விக்ரகமாய் அருளாசி வழங்குகிறாள் அன்னை.

ஸ்ரீநடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம், மார்கழித் திருவாதிரை போன்ற திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடந்தாலும், ஆடிப் பௌர்ணமியன்று சிவகாம சுந்தரிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதால், அன்று பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

இந்த நாளில் சிவகாம சுந்தரியை தரிசித்தால், வீட்டுக்கு அடங்காத கணவர்கள் மனம்திருந்தி மனைவியை மதித்து நடப்பார்கள் என்பது ஐதீகம். இதன்காரணமாக இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் பெருமளவில் அன்னையை வணங்க வருவார்கள்.

பஞ்சபூதத் தலங்களில் வாயு (காற்று) தலமாகப் போற்றப்படுவது ஸ்ரீகாளஹஸ்தி (திருக்காளத்தி).

இத்திருக்கோவிலின் அம்பிகை ஞானப் பூங்கோதை  என்றும், ஞானப்பிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பிகையின்முன், சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட “அர்த்தமேரு’ உள்ளதைக் காணலாம். அம்பிகையின் இடுப்பிலுள்ள ஒட்டியாணத்தில் கேது பகவானின் உருவம் காணப்படுகிறது.  சந்நிதிக்கு வெளியில், பிராகாரத்தின் மேல்விதானத்தில் ராசிச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தங்கப்பாவாடை அணிவிக்கப்படுகிறது.

இத்தலம் சக்தி பீடங்களில் புவனேஸ்வரி பீடமாகப் போற்றப்படுகிறது. இங்கு ஆடிப்பௌர்ணமியன்று அம்பிகைக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெறுவதுடன், வைரமூக்குத்தியும் தங்கப்பாவாடையும் அணிவிப்பார்கள். இந்த திருக்கோலத்தினை தரிசித்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும்; பதினாறு வகையான பேறுகளும் பெற்று வளமுடன் வாழலாம்.

இத்திருக்கோவிலின் இறைவன் ஸ்ரீகாளத்தீஸ்வரநாதரின் கருவறையில், மற்ற தீபங்களெல்லாம் நின்று ஒளிவிடும்போது, ஒரு தீபம் மட்டும் ஆடிக்கொண்டே இருக்கும். கருவறையின் கதவுகளை காற்றுப் புகாவண்ணம் மூடினாலும் அந்த தீபம் மட்டும் அசைந்துகொண்டிருக்கும் அற்புதத்தைக் காணலாம். மேலும், இங்கு தீர்த்தப் பிரசாதம் வழங்குவது வழக்கத்தில் உள்ளது. இத்தலம் நாகதோஷ (ராகு- கேது) பரிகாரத்தலமாகத் திகழ்வதால், தினமும் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடுகளும், யாகங்களும் அம்பிகையின் முன் நடைபெறுகின்றன. அதற்குரிய கட்டணத்தைக் கோவிலில் செலுத்தி பக்தர்கள் அந்த தோஷப் பரிகாரப் பூஜையில் கலந்துகொண்டு நலம் பெறுகிறார்கள். மேலும் ஆடிப்பௌர்ணமியன்று ஸ்ரீஞானப் பூங்கோதை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

திருவண்ணாமலை, பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலம். இங்கு ஸ்ரீஅண்ணாமலையார் புகழ்பெற்றுத் திகழ்கிறார்.

இங்கு அருள்புரியும் அபிதகுஜாம்பாள் என்னும் உண்ணாமுலை அன்னை ஈசனைக் குறித்து தவமிருந்தாள். அதனால் மகிழ்ந்த இறைவன், கார்த்திகைத் தீபத்திருநாளில் ஜோதி உருவாய் மலைமீது காட்சிதந்து, அம்பிகைக்கு தன் இடப்பாகத் தினை அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

இத்தலத்தில் ஒவ்வொரு பௌர்ணமியும் சிறப்பிக்கப்படுவது யாவரும் அறிந்ததே. அம்பிகைக்குரிய ஆடிப்பௌர்ணமியன்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெறும். இந்நாளில் தம்பதி சமேதராக அம்பாளை வழிபட்டால் கணவன்- மனைவிக்குள் அன்பு மேலிடுவதுடன், குடும்பத்தில் ஒற்றுமையும் ஏற்பட்டு, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வில் மகிழ்ச்சி காண்பர் என்பது ஐதீகம்.

மேற்கண்ட ஐந்து தலங்களில் அருள்புரியும் அம்பாளை ஆடிப்பௌர்ணமி நாளில் தரிசிக்க இயலாதவர்கள், தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்று அம்பாளை வழிபட்டாலும், சகலபாக்கியங் களும் பெற்று நலமுடன் வாழலாம்.ஆவணி மாத தேய்பிறையில், அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தவன் கண்ணன். மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம். ஒருத்தி மகனாய்ப் பிறந்து மற்றொருத்தி மகனாய் வளர்ந்தவன் மாயக்கண்ணன். பெற்றவள் தேவகி; வளர்த்தவள் யசோதை!

கண்ணன் பிறந்தது கோகுலாஷ்டமி என்று ஒரு பிரிவினர் கொண்டாடுவர். அதாவது திதியை முதன்மையாகக் கொள்வர். இன்னொரு பிரிவினர், கண்ணன் பிறந்த நட்சத்திரமான ரோகிணியை முதன்மையாகக் கொண்டு ஸ்ரீஜெயந்தி என்பர். அது என்ன ஸ்ரீஜெயந்தி?

பொதுவாக வைணவர் வழிபாட்டில் முதலிடம் திருமகளாகிய மகாலட்சுமி தாயாருக்கே. அதாவது பிறவி எடுத்தவர் களுக்கெல்லாம் கடைசியாக பரமபதம் எனும் மோட்சத்தை அடைவதே குறிக்கோள்.

அதற்கு பரமனிடம் சிபாரிசு செய்பவள் தாயாரே! ஆகவேதான் அவர்கள் கண்ணன் பிறந்ததை தாயாரின் ஞாபகமாக ஸ்ரீஜெயந்தி என்றே குறிப்பிடுகின்றனர். வைணவக் கோவில்களுக்குச் சென்றால் முதலில் தாயாரை வணங்கியபின்பே எம்பெருமானை வழிபடுவது மரபு.

கண்ணன் பிறந்தநாளில் அவனது அரிய குணம் ஒன்றைச் சிந்திப்போம்.

துயில், உறக்கம்- இவை இரண்டுமே தூய தமிழ்ச்சொற்கள். ஆனால் நாம் உறக்கத்தைத் தொலைத்துவிட்டு தூக்கத்தைப் பிடித்துக்கொண்டோம். மலையாளத்தில் உறக்கம் என்னும் சொல் இன்றும் வழங்கிவருகிறது. திருப்பாவை எனும் தமிழ்மாலை முப்பதும் பாடியவள் (கோதை) ஆண்டாள். அவளது பாவைப் பாடல் வரியில் “துயின்ற’ என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறாள். அதுவும் பரந்தாமனின் குணமாக சிறப்பித்துப் பாடியிருக்கிறாள். “பாற்கடலில் பையத்துயின்ற பரமனடி பாடி’ என்பது ஒரு பாடல் வரி. இதில் “பையத் துயின்ற’ என்பதற்கு ஆழமான பொருளுண்டு.

இருபெருந்தெய்வங்கள்

சைவர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரம்; வைணவர்களுக்கோ திருவரங்கம்.

சிவபெருமானாகிய தில்லை நடராசர் சிதம்பரத்தில் எப்பொழுதும் ஆனந்த நடனம் புரிந்துகொண்டே இருக்கிறார்.

அதேபோல் காவிரி- கொள்ளிடம் நதிகளுக்கிடையேயுள்ள திருவரங்கமெனும் தீவில் எப்பொழுதும் பள்ளிகொண்டிருக்கிறார் பரந்தாமன்.

தில்லையம்பலத்தானின் இடைவிடாத ஆட்டம்தான் இந்த உலகங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. அவரது ஆட்டம் நின்றுபோனால் உலகின் இயக்கமும் நின்றுபோகும்.

அதேபோல் பாம்பணையில் துயில்கின்றதுபோல் பாவனை செய்யும் பரமனின் அறிதுயில்தான் உலகை காவல்புரிந்துகொண்டிருக்கிறது. அவர் உண்மையாக உறங்கிவிட்டால் உலகம் அழிந்துபோகும்.

 


இந்த அரிய தத்துவத்தைக் கேட்கும் மேல்நாட்டினரும் நாத்திகவாதிகளும், “ஆடுகிற தெய்வமும் உறங்குகின்ற தெய்வமும் எப்படி உலகைக் காக்கும்?’ என்று வினா எழுப்புவர். சிந்தனைக்கு ஆழமுண்டு என அறியாத வர்கள்.

“பையத் துயின்ற’ என்னும் இரு சொற்களுமே அழகிய தமிழ்ச்சொற்கள். “துயில்’ என்பது உறக்கம். “பைய’ என்றால் மெதுவாக. இன்றும் நெல்லை மாவட்டத்தில் “பையப்போ’ என்றால் மெதுவாய்ப் போ என்றும், “வெரசாய் வா’ என்றால் வேகமாய் வா என்றும் வழங்குகிறது. ஆக பையத் துயிலுதல் என்றால் மெதுவாக உறங்குதல். அது என்ன மெதுவாக உறங்குதல்? சிலர் தூங்கும்போதும் மற்றவர்களுக்குத் தொல்லைதருவர். அவர்களது குறட்டை ஒலி அருகே இருப்பவர்களைத் தூங்கவிடாது. இப்படித் தூங்குபவர்களை எளிதில் எழுப்பிவிட முடியாது! இப்படிப்பட்ட கும்பகர்ணனின் தூக்கத்தை வர்ணிக்க கம்பனுக்கு பல பாடல்கள் தேவைப்பட்டதே! திருமாலின் உறக்கம் இதுபோன்றதல்ல.

சொல்லப்போனால் அது உறக்கமே அல்ல.

உறங்குவதுபோன்ற நிலை. அதனை “அறிதுயில்’ என்பர். அதாவது அறிவுடன் விளங்கும் துயில். எனவே காக்கும் கடவுளான பரந்தாமன் தூங்குவதுபோல் எந்நேரமும் விழித்திருக்கிறான்.

“மெய்மறந்து தூங்குவது’ என்பார்களே, அதுபோன்ற தூக்கமல்ல பரந்தாமனின் தூக்கம். அப்படி அவரால் தூங்கவும் முடியாது. காரணம் அவர் படுக்கையும், படுத்திருக்கும் இடமும்.

அவர் வசிப்பதோ ஓயாது அலைவீசும் திருப்பாற்கடல். ஆகவே அலை ஒலி ஒரு பக்கம்! படுக்கையோ ஆதிசேஷனாகிய ஆயிரம்தலைப் பாம்பு! அந்தப் பாம்பின் மூச்சொலி பரந்தாமன் காதுகளுக்கருகே! அந்தப் பாம்பு புரண்டுகொண்டே இருப்பதால் ஓயாத அசைவு. வருமா உறக்கம்? ஆகவே அவ்வப்பொழுது கண்ணை மூடித் தூங்குவதுபோல் அனைத்தையும் அறிந்தபடி இருப்பார். அதைத்தான் “பையத் துயின்ற பரமன்’ என்று பைந்தமிழ்ப் பாவால் பாடினாள் ஆண்டாள்.

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் என்ற நான்கு கோலங்களில் காட்சி தருபவர் திருமால். இருப்பினும் அவர் பெரிதும் விரும்புவது கடல் அலை தாலாட்டும் பள்ளிகொண்ட கோலமே. வேலூர் மாவட்டத்தில் ஒரு திருத்தலம் பள்ளிகொண்டா என்ற பெயரிலேயே உள்ளது.

வாத்சல்யம் என்றால் கருணை. பரந்தாமன் பக்தர்களிடம் கொண்ட கருணையால்தான் பள்ளிகொண்டான். எனவே அவனை பக்தவத்சலன் என்கின்றனர்.

பையத்துயின்ற பரமனடி பாடிப் பணிவோம்

தென்தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலங்களுள் ஒன்று சங்கரநயினார் கோவில் எனும் சங்கரன்கோவில் நகரமாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்புகளையும் உடையது.

சிவஞான முனிவரின் முதன்மைச் சீடர்களில்  ஒருவராகிய காஞ்சிபுரம் சிதம்பரமுனிவர் அருளிச்செய்த சேத்திரகோவைப் பிள்ளைத்தமிழில் இடம்பெற்ற சிறப்புத் தலம் இதுவாகும்.

தமிழ் இலக்கிய உலகின் முடிசூடா மன்னன் உ.வே. சாமிநாத ஐயருக்கு பிரியமானது இத்தலம். மக்களின் உடற்பிணி, மனப்பிணி போன்றவற்றை நீக்கும்பொருட்டு கோமதி அன்னையின் திருச்சந்நிதி முன்பு ஸ்ரீ வேலப்பதேசிக சுவாமிகளால் ஸ்ரீசக்கரபீடம் அமைக்கப்பட்டுள்ளது. சீவலமாறபாண்டியன், முத்துவீரக்கவிராயர் இயற்றிய சங்கரநயினார் கோவில் தலபுராணம் மற்றும் சங்கர சதாசிவமாலை, சங்கர நயினார் கோவில் அந்தாதி, சங்கரலிங்க உலா போன்ற நூல்கள் யாவும் சங்கரன்கோவில் நகரின் மாண்பை விளக்கும். புளியங்குடி முத்துவீரக் கவிராயரின் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ், சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயரின் கோமதி அந்தாதி, பொ. சுப்பிரமணிய பிள்ளை இயற்றிய கோமதியம்பிகை பேரில் சந்தவிருத்தம், பதிகம், கள்ளிக்குளம் சு. சுப்பையா ஆக்கிய கோமதி அந்தாதி, கோமதி மும்மணிமாலை, கோமதி வாரதுதி, கோமதி திருவெழுக்கூற்றிருக்கை மற்றும் பாரதியாரின் பாடல்கள் உள்ளிட்ட பலவும் கோமதியம்பிகையின் அருட்கருணையை விவரிக்கும் அற்புத நூல்களாகும்.

இத்தலத்தில் சென்ற நூற்றாண்டில் சிறந்த சைவசித்தாந்தவாதியாக வாழ்ந்தவர் பேட்டை ஆ. ஈஸ்வரமூர்த்திப் பிள்ளையாவார். இவர் இயற்றிய கோமதி சதரத்னமாலை என்னும் நூல் என்றும் வாடாமாலையாக அன்னையின் திருவடியில் மிளிர்கின்றது.

சைவசமய பாரம்பரியம்மிக்க குடும்பத்தில் தோன்றிய ஆ. ஈஸ்வரமூர்த்திப் பிள்ளை, தன்வாழ்நாள் முழுவதும் கொள்கைப்பிடிப்போடும், ஈடிணை யற்ற சைவவாழ்விலும் தன்னை முழுமையாக கரைத்துக் கொண்டவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிப் புலமைகொண்ட இப்புலவரை கடைசிக்காலம்வரை புரந்தருளிய நகரமாக சங்கரன்கோவில் திகழ்கிறது.

எழுத்து, சொல், செயல் இம்மூன்றி லும் ஒரே நேர்க்கோட்டைக் கொண்ட இவரின் சிவப்பணியை தெரிந்துகொண்ட அன்றைய துறைசை ஆதீனகர்த்தா 22-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீஅம்பலவாணதேசிகர், 30-5-1968-ல் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி கிளைமடத்தில் இவரை ஆதீன வித்வானாக ஆக்கியருளினார். அரன்பணி, ஆசிரியர்பணி, ஆதீனப்பணி ஆகிய இம்மூன்று பணிகளையும் மேற்கொண்ட ஆ. ஈஸ்வரமூர்த்தி, மாணவர்களுக்கு ஆசிரியராகவும்; திருமுறை, சாஸ்திர, புராண பாடங்களை நடத்தும் குருகுலக் கல்வியின் போதகாசிரியராகவும்; செய்யுளியற்றும் நூலாசிரியராகவும்;

முன்னோர் மொழிந்த அருள்நூல்களுக்கு பதவுரை, குறிப்புரை எழுதும் உரையாசிரியராகவும்; சமய பத்திரிகை நடத்தும் மாதாந்திர பத்திரிகையாசிரியராகவும்; பதிப்பாசிரியராகவும்; சமய உண்மைகளை அனைவரும் உணரும்பொருட்டு பல்வேறு கருத்துகளை ஒரே பெட்டகமாக ஆக்கி நூல்களை வெளியிட்ட நூல்வெளியீட்டாளராகவும் பன்முகத் தோற்றத்தில் பரிணமித்தவர்.

ஈஸ்வரமூர்த்தி பிள்ளையின் சமகாலச் சான்றோர்கள், அவருடைய சைவத்தமிழ்த் தொண்டினைப் பாராட்டி வாழ்த்துகளும் ஆசிகளும் நல்கினர். பழனி காசிவாசி ஈசான சிவம், திருவாவடுதுறை ஆதீனம் 22-ஆவது குருமகா சந்நிதானம், கூனம்பட்டி ஆதீனம் 55-ஆவது குருமகா சந்நிதானம், மகாபெரியவர் என்றழைக்கப்பெறும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், தருமபுரம் ஆதீனப் புலவர், கே. வஜ்ஜிரவேல் முதலியார், திருவாசகமணி கே.எம். பால சுப்பிரமணியம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஜி. சுப்பிரமணிய பிள்ளை, பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், டி. இராமலிங்கம் பிள்ளை, எஸ். சச்சிதானந்தம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கோமதியன்னையின் அருமை பெருமையை அழகுற எடுத்துச்சொல்லும் கோமதி சதரத்ன மாலை வெண்பாக்களால் ஆனது. சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த இந்நூல் சொல்சுவை, பொருட்சுவை கொண்டதாகும்.

வேதசாரங்கள், ஆகமப்பிழிவுகள், தேவார- திருவாசக சாயல்கள் நிறைந்ததாக கோமதி சதரத்ன மாலை விளங்குகிறது.

அன்னையின் அருளுக்குப் பாத்திர மாகாதவர்களும், அன்னையின் திருவீதியுலாவைக் கண்டால் பக்திப் பெருக்கோடு வணங்கி மகிழ்வார்கள் என்பதனை-

“அணியாரும் உன் விழா நாளில் அலங்காரம் பல கொண்டு
மணிவீதி முழக்கோடு வருநின்னைக் கண்டக்கால்
பணியாத தலை பணியும் பாடாத வாய்பாடும்
தணியாத சிந்தையும் தான் தணிந்து ஒடுங்கும் கோமதியே’

என்று பாடிப் பரவுகிறார். “அன்னையே, உனதருளை முழுமையாகப் பெற்றவர்கள் எப்படியெல்லாம் அளவளாவி மகிழ்வார்கள் தெரியுமா’ என்றவாறு-

“சொன்னாலும் வாயினிக்கும் சொலக்கேட்டால் காதினிக்கும்
பன்னாளும் சிந்தித்தால் பரந்தினிக்கும் சிந்தையெல்லாம்
பொன்னாளும் கலையாளும் புவியாளும் புகழ்ந்தேத்தும்
அன்னாயுன் சரிதங்கள் அற்புதமாம் கோமதியே’

என்று புகழ்ந் தேத்துகிறார் கோமதி சதரத்ன மாலை ஆசிரியர்.

தற்போது நம்முடைய நல் வினைக்கும் தீவினைக்கும் நாம் செய்த பூர்வ புண்ணியப்பயனும், நம்முடைய முன்னோர்களின் இருவினைப்பயனும் காரணமாகும் என்பது நமது சமய கோட்பாடுகளில் ஒன்று. அதனை வலியுறுத்தி,

“சிவபூஜை என்முன்னோர் செய்பயனால் நாயேனும்
அவமே நாள் போக்காமே ஆன மட்டினின்
நின் புகழைத்தவறாமல் படித்திடுவேன் சாற்றிடுவேன் எழுதிடுவேன்
உவமானம் கடந்தாளே உய்யக் கொள்வாய் கோமதியே’

என்கிறார்.

அன்னையின் திருச்சந்நிதிக்குச் சென்று மனமுருகி வழிபாடு செய்தால் என்ன நிகழும் என்பதனை-
“தொழவேண்டும் உனை என்றும் தூமலர் தூஉய்ப் பாடிஉன்முன்அழவேண்டும் உன்அடியில் அடியற்ற மரமேபோல்விழவேண்டும் இவை செய்து உன் விளங்கருளில் திளைத்தாடிஎழவேண்டும் என்பதுவே எனக்காசை கோமதியே!

என்கிறார். “உரை சேரும் எண்பத்து  நான்கு நூறாயிரமாம் யோனி பேதங்களை நிரைசேரப் படைத்து, அவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்’ என்பது ஸ்ரீதிருஞான சம்பந்த சுவாமிகளின் திருவாக்கு. “எல்லா உயிருக்கும்தான் ஈசன்’ என்பது திருமூலதேவ நாயனாரின் சத்திய வரிகள். “அன்னை ஸ்ரீமீனாட்சியம்பிகை அண்ட சராசரங்களையும் ஈன்றாள்’ என்பார் பரஞ்சோதி முனிவர். “அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே’ என்பார் ஸ்ரீதாயுமான சுவாமிகள். இவ்வுத்தம கருத்துகளையெல்லாம் தம் மனதில் கொண்ட பிள்ளையவர்கள்-

“பன்றிமுதல் எவ்வுயிர்க்கும் பரமசிவன் பரமபிதா
பன்றிமுதல் எவ்வுயிரும் பார்க்கிலுடன் பிறந்தன
வாம்
பன்றிமுதல்  எவ்வுயிர்க்கும் பார் முழுக்கப் பொதுவுடமை
பன்றிமுதல் எவ்வுயிர்க்கும் பரிவுடையாய் கோமதியே.’

என்கிறார். பிரம்மா, விஷ்ணுவாலும் காணமுடியாத சிவபெருமான், பன்றிக்குட்டிகளுக்காக  பன்றிரூபம் எடுத்துப் பால்கொடுத்துக் காப்பாற்றிய திருவிளையாடல் புராண நிகழ்வினை நம் கண்முன்னே படம்பிடித்துக் காட்டுகிறது இப்பாடல். பரம்பொருளின் கருணையை நினைக்கும்தோறும் உள்ளத்தை குழையச் செய்கிறது.

இதுபோன்ற சிறப்புமிக்க பாடல்களைக் கொண்ட பனுவலாக கோமதி சதரத்ன மாலை திகழ்கிறது. சங்கரன்கோவிலில் அன்றைய உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த புளியரை பொ. சதாசிவ சுப்பிரமணிய பிள்ளை 1958-ஆம் ஆண்டு முதன்முதலில் இந்நூலை அச்சிட்டு வெளிவர பேருபகாரம் செய்தார். பின்னர், இவ்வூர் சைவ சித்தாந்த சபையினர் இலவசமாக வெளியீடு செய்துள்ளனர். மற்றும் கோமதி அம்பாள் ஆடித்தபசு திருநாள் அன்னம் பாலிப்பு திருப்பணி அமைப்பினரும் இலவசமாக வெளியீடு செய்துள்ளனர். ஆ. ஈஸ்வரமூர்த்தி பிள்ளையைப் பெருமைப்படுத்தும் விதமாக திருக்கோவில் நிர்வாகத்தினரும் மூலநூலை வெளியிட்டுள்ளனர். கோமதி சதரத்ன மாலையானது, ஸ்ரீகோமதியம்பிகை சமேத சங்கரலிங்கப் பிரபுவின் திருவருளை எளிதில் பெறுவதற்கு வழித்துணையாய் அமைந்துள்ளது என்பதனை எண்ணி மகிழ்வோமாக.

புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் அருகில்  அமைந்துள்ளது சோலைக் கன்னியம்மன் திருக்கோவில்.பழமைவாய்ந்த இத்திருக்கோவிலின் கருவறையில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அருள்புரிகிறாள் சோலைக்கன்னியம்மன். அம்மனின் இடப்புறத்தில் சோலை பெரியகன்னியம்மனும், வலப்புறம் நாகக்கன்னியும் வீற்றிருக்கிறார்கள். சுதை வடிவிலான இம்மூன்று தெய்வங்களின் திருவுருவங்கள் சுமார் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகின்றன.

சோலை பெரியகன்னியம்மன் திருமணத்தடைகளை நீக்கி நல்வாழ்க்கையைத் தந்தருள்கிறாள். செவ்வாய் தோஷம், நாகதோஷம், சுக்கிர தோஷம், ராகு தோஷம் மற்றும் பல தோஷங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் இக்கோவிலுக்கு வந்து சோலை பெரியகன்னியம்மனுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்குடன் திருமாங்கல்யச் சரடு வைத்து அர்ச்சனை செய்கிறார்கள். திருமாங்கல்யச் சரடினை பெரியகன்னியம்மனுக்கு பூசாரி அணிவிக்கிறார். பிறகு திருமணத்தடையுள்ளவர்களுக்கு கையில் மஞ்சள் நூலால் காப்பு கட்டப்படுகிறது. இந்த வழிபாடு முடிந்த ஆறு மாதங்களுக்குள் அந்தப் பெண்ணுக்கு திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் மகிழ்ச்சியான அனுபவம். திருமணம் முடிந்ததும் கணவன்- மனைவி சமேதராக வந்து மீண்டும் இந்த அம்மன்களை வழிபடுகிறார்கள். அப்போது, நல்ல குழந்தை பிறக்கவேண்டுமென்பதற்காக, குழந்தையை மடியில் வைத்திருக்கும் சோலைக்கன்னியம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அவர்கள் பிரார்த்தனையையும் அன்னை நிறைவேற்றி வைக்கிறாள். பல வருடங்களாக குழந்தைச் செல்வம் இல்லாமல் வருந்துபவர்களுக்கும் அன்னை அருள்புரிகிறாள். அவர்கள் வெள்ளிக்கிழமையன்று அம்மனை வழிபட நல்ல பலன் கிட்டுகிறது என்கிறார்கள். நாகதோஷமுள்ளவர்கள் நாகக்கன்னிக்கு அர்ச்சனை செய்து, கோவிலின் பின்புறமுள்ள பாம்புப்புற்றுக்கு முட்டை, பால் நிவேதித்து பூஜை செய்து நாகதோஷம் நீங்கப்பெறுகிறார்கள்.

குழந்தைப் பேறில்லாதவர்கள், “பால்முடி’ கொடுப்பதாக வேண்டிக்கொண்டு, தங்களால் இயன்ற காசினை மஞ்சள் துணியில் முடிந்துவைத்தால், குழந்தை பாக்கியம் நிச்சயமுண்டு என்பது நம்பிக்கை மட்டுமல்ல; பலருடைய அனுபவம். குழந்தை பிறந்ததும் அக்குழந்தை தாய்ப் பால் குடிக்கும் பருவத்திலேயே இக்கோவிலுக்கு வந்து குழந்தையின் முடிகாணிக்கையை சமர்ப்பிக்கிறார்கள்.

ஒரே சந்நிதியில் அருள்புரியும் மூன்று அம்மன்களால் தோஷ நிவர்த்தி ஏற்பட்டு, திருமணத் தடைகள் விலகி, குழந்தைச் செல்வமும், மங்களகரமான வாழ்வும் கிட்டுகிறது என்பதால், இத்திருக்கோவிலுக்கு திங்கள், வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு வருபவர்கள், இந்த மூன்று அம்மன்களையும் தரிசித்துப் பயன்பெறுகிறார்கள்.

சிறுவாச்சூர் திருத்தலம், திருச்சி- பெரம்பலூர் வழியில், திருச்சியிலிருந்து 45 கிலோ மீட்டர்; பெரம்பூரிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன. தரிசன நேரம் காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரை; மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை.

எங்கும் நீக்கமற நிறைந்து, அண்டசராசரங்கள் அத்தனையையும் ஒரே லயமாக இயங்கச் செய்பவள் அன்னை ஆதிபராசக்தி.

இந்த தேவி சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்போது பவானி என்றும்; அவளே ஆண் வடிவம் கொள்ளும்போது விஷ்ணு என்றும்; அசுரர்களை அழிக்க கோப ரூபத்துடன் தோன்றும்போது காளி என்றும்; தீமையை அழித்து வெற்றிவாகை சூடிய நிலையில் துர்க்கா என்றும் அழைக்கப்படுகிறாள். இவற்றை சக்தியின் சதுர்த்த வடிவங்கள் என்பர்.

காளியை பிரகிருதி, பராசக்தி, மகாமாயை என்று தேவி பாகவதம் உள்ளிட்ட பல நூல்கள் கூறுகின்றன. “க்லீம்’ என்பது இவளது பீஜ மந்திரம். காளி என்பவள் ரௌத்ர ரூபிணியென்று பலர் நினைப்பர். தீமை செய்பவர்களுக்குதான் அவள் பயங்கரி. அன்பர்களுக்கோ அவள் ஆனந்த ஸ்வரூபிணி. பேராபத்துகளிலிருந்து பக்தர் களைக் காப்பவள் இவளே. எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பவள் இவளே. தடைகளைப் பொடியாக்கி வெற்றி மாலை சூட்டுபவளும் இவளே.

அத்தகைய காளிதேவி சிறப்புடன் வீற்றுள்ளவொரு தலம் தான் சென்னை காளிகாம் பாள் கோவில்.

இந்த காளிதேவியின் சிறப்பை வார்த்தைகளால் சொல்லமுடியாது. நம்பிப் பணிந்தவர்களை இவள் ஒருநாளும் கைவிட்டதில்லை. இதற்கு, இங்கு திரளும்  பக்தர்களே சாட்சி. இந்த தேவியின் பரிபூரண கடாட்சத்துக்கு இலக்காகி அருள்பெற்றவர்கள் பலர்.

ஆன்மிகத்தின் அடிப்படை நம்பிக்கையில்தான் தொடங்குகிறது. இறைவனை முழுமனதோடு நம்பவேண்டும். இறைவனின் திருவடிகளில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து சரணாகதி அடையவேண்டும். எவருக்கு சந்தேகம் அழிந்துவிடுகிறதோ, அவர் பக்குவ நிலையை அடைந்துவிட்டார் எனலாம்.

இவ்வாறு முழு நம்பிக்கையோடு செய்யப் படும் பிரார்த்தனை அதற்குரிய பயனை நமக்குத் தரும்.  ஒரே சமயத்தில் இரண்டு பெண்கள் இறைவனை வேண்டுகிறார்கள். இருவர் கோரிக்கையும் ஒன்றுதான்- குழந்தை வரம் வேண்டுமென்பது. ஒரு பெண்ணுக்கு உடனே அது நிறைவேறிவிட்டது; இன்னொரு பெண்ணுக்கு சற்று தாமதமாக நிறைவேறியது. இது ஏன்?

பிறவிக் கடன் என்பார்கள். அதாவது கர்மா.

ஒருவருக்கு நூறு ரூபாய் கடன் இருக்கிறது. அவர் ஒரு மாதத்தில் கடனைத் தீர்க்கிறார்.

இன்னொருவருக்கு ஆயிரம் ரூபாய் கடன்.
அவரால் மாதம் நூறு ரூபாய்தான் கொடுக்கமுடியும். எனவே அவரது கடன் தீர பத்து மாதங்களாகும். அதுபோல நமது கர்மவினைகளை நாம் தீர்க்கவேண்டும். ஒருமுறை வழிபட்டால் போதுமென்று இருந்துவிடக்கூடாது. நமது கர்மத்தைப் பொறுத்து காலம் மாறுபடும். நீங்கள் வைத்திருக்கும் கடன் சுமையைப் பொறுத்தது அது.

எனவே நம்பிக்கையோடு வழிபடுதல் அவசியம். மீண்டும் மீண்டும் சிரத்தையோடு வழிபடுதல் அவசியம்.

ஆலய வழிபாட்டின் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் தத்துவம் உள்ளது. இறைவனே அறிவின் வடிவானவன்தான். “அறிவின் முதல்வன்’ என்று இறைவனைப் போற்றுகிறது சங்கத் தமிழ் இலக்கியம். கால்களில் செருப்பு அணியாமல் ஆலயத்தை வலம்வர வேண்டுமென்பது விதி. இதிலென்ன விசேஷம்? நமது உடலிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாதங்களோடு தொடர்புள்ளது. வெறுங்காலுடன் வலம் வரும்போது உடலின் அத்தனை பாகங்களும் புத்துணர்வு பெறுகின்றன. இது இப்போது ஒரு சிகிச்சை முறையாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது.

நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் தரிக்கிறோம். ஆக்ஞை எனப்படும் ஆறாவது சக்கரம் நாம் திலகமிடும் அந்த இடத்தில்தான் இருக்கிறது. நாம் விரலால் அந்த இடத்தைத் தொடும்போது ஆக்ஞை சக்கரம் தூண்டப் படுகிறது. இது விழிப்புணர்வை உருவாக்கும்.

விநாயகர் முன் தோப்புக்கரணம் போடுவதும் இதே அடிப்படையில்தான். ஐந்துமுறை தோப்புக்கரணம் போடவேண்டும். இதை பஞ்சவாரஹம் என்பர்கள். அப்போது “சுக்லாம் பரதரம் சசிவர்ணம்…’

என்று சொல்லி தலையில் குட்டிக்கொள்வார்கள். இது ஏன்? நமது தலைக்குள் அமிர்த கலசம் உள்ளது. நாம் குட்டிக் கொள்ளும்போது அதிலிருக்கும் அமிர்தம் மெல்ல வழிந்து மூலாதாரம்வரை சென்று பரவும். இதனால் நமக்கு மனோ பலம் பெருகும்.

ஆலயத்துக்குச் செல்லும்போது வெறுங்கையோடு போகக்கூடாது. “யாவர்க்குமாம் இறைவர்க்கொரு
பச்சிலை’ என்று திருமூலர் சொல்வதுபோல, ஒரு பச்சிலை யேனும் கொண்டுசென்று இறைவனை அர்ச்சிக்கவேண்டும்.

வேறொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, “உங்கள் மதத்தில் ஏன் இத்தனை கடவுள்கள் இருக்கின்றன? உங்களுக்கு குழப்பமாக இல்லையா?’ என்று கேட்டார்கள். “ஒரு குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். பரப்பிரம்மம்  ஒன்றே. அதுவே பல வடிவங்களில் வெளிப்படுகிறது. என் தாய்- தந்தைக்கு மகனாகவும், அண்ணனுக்கு தம்பியாகவும், தம்பிக்கு அண்ணனாகவும், மனைவிக்கு கணவனாகவும், பிள்ளைகளுக்குத் தந்தையாகவும், இன்னும் பலருக்கு அவரவர் உறவுநிலைக்கேற்பவும் நான் இருக்கிறேன். இங்கே அந்த நபர்களுக்கேற்ப என் பெயர் மாறுபடுகிறதே தவிர, நான் நானாகவே இருக்கிறேன். அதுபோல அவரவர் இயல்புக்கேற்ற வடிவங்களில் இந்துமதக் கடவுள்கள் உள்ளனர். நதிகள் எங்கு தோன்றினாலும் அவை கடலில் சென்று சங்கமிப்பதைப் போல, நாங்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும், அது ஒரே பரம்பொருளிடம் சென்று சேரும் என்பதை நாங்கள் அறிவோம்’

என்று கூறினேன். இதை ஏன் இங்கே சொல்கிறேனென்றால், நம்மில் சிலருக்கும் இந்த ஐயப்பாடு இருக்கலாம். அது தேவை யில்லை. நம்பிக்கையோடு வழிபடுவதுதான் அவசியம்.

நம் அன்றாட வாழ்விலும் சிறிய சிறிய தர்மங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவுதல் என்பதை முடிந்த மட்டும் மேற்கொள்ளுங்கள்.

இப்போது காளிகாம்பாள் அற்புதத்துக்கு வருவோம். அவள் எப்படிப்பட்டவள்? இந்த அன்னையை பாரதியார், “யாதுமாகி நின்றாய் காளி’ என்று போற்றித் துதித்தார். “யாதுமாகி’ என்ற சொல்லில் அனைத்தும் அடக்கம். கண்ணுக்குத் தெரியாத உயிரினங்களிலிருந்து கோடானுகோடி பிரம்மாண்டங்கள்வரை எல்லாமே அடக்கம். இப்படி அனைத்துமாகி நின்று விளையாடுபவள் அவள். அவள் விளையாட்டு மனிதர்கள் விளையாட்டு போன்றதா? எல்லையில்லாதது; முடிவற்றது. அவளால் செய்ய முடியாததென்று எதுவுமே இல்லை. சாதாரண மனிதர்களாகிய நமது தேவைகளெல்லாம் அவளுக்குத் துரும்பு.

கடும் பிணிகளிலிருந்து பலரைக் காத்திருக்கிறாள்.

குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்திருக்கிறாள்.

விபத்து போன்ற கண்டங்களிலிருந்து விடுபட்டோர் பலர். மனிதர்களுக்குத் தேவையான முதல் சொத்து தைரியம் என்பார்கள். அந்த தைரியத்தை வழங்கி நம் நெஞ்சில் உரமேற்றுபவள் இந்த காளிகாம்பாள். நல்லவர்களுக்கும் எதிரிகள் தோன்றுவர். அத்தகைய எதிரிகளை விரட்ட இவளைவிட வேறு கதியில்லை. காளிகாம்பாளின் மஞ்சள் பிரசாதம் குழந்தை பாக்கியத்தை நிச்சயம் பெற்றுத் தரும்.

தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வில் அவள் நிகழ்த்திய அற்புதங்களை தொடர்ந்து சொல்ல இருக்கிறேன். அவற்றினூடே நமது இந்து மதத்தின் சிறப்பான பல விஷயங்களையும் பரிமாற விழைகிறேன். மீண்டும் சந்திப்போம்…

(தொடரும்)
படங்கள் : எஸ்.பி.சுந்தர்

ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்குரிய தினமென்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்தபிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் முன்னோர் கூற்று.

விரதம் சரி… அது என்ன கதை? அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமமிக்க அவன் வாரிசு இல்லாத காரணத்தால் மிகுந்த துயரத்திலிருந்தான். எனவே அவன் தன் மனைவியோடு தீர்த்தயாத்திரை மேற்கொண்டான். அதன்பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி வாக்கு, “உனது மகன் இளமைப் பருவத்தை எட்டும்போது இறந்துபோவான்’ என்று கூறியது. அதைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோவில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளிகோவில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, “உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர்பெறுவான்’ என்ற குரல் கேட்டது.

இளமைப்பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம்முடிக்க பெண் தேடியபோது யாரும் அதற்கு முன்வரவில்லை. அரசன் நிறைய பொன் தருவதாக அறிவித்தான். அப்போது,  பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம்பெண்ணை, அவளது உறவினர்கள் ஏமாற்றி இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.

அப்பாவியான அந்தப்பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடியும்வரை அவனருகிலேயே கண்ணுறங்காமல் காத்திருந்தாள். விடிந்தபின் தன் கணவன் இறந்துவிட்டானென்ற உண்மை தெரியவந்தது. அழுதாள்… அரற்றினாள்… தவித்தாள்… தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். ஈசனின் அனுமதியோடு இறந்துகிடந்த இளவரசனை உயிர்பெற்றெழச் செய்தாள்.

இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண், “இருண்டுபோன என் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே, இந்த நாளில் தங்களை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினாள். மகிழ்ந்த அம்பிகை, “ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் உனது கதையைப் படித்துவிட்டு, மறுநாள் விரதமிருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து என்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். அவர்கள் இல்லத்தில் அஷ்டலட்சுமி கடாட்சம் நிலவும்’ என சொல்லி மறைந்தாள்.

ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது.

அக்னி தேவனே நீராடிய தினம் என்பது நம்பிக்கை. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்தநொடியே அக்னிதேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல் அவனை சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்துக்கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது.

எனவே அக்னி தீர்த்தம் எனப் பெயர் வந்தது. “அக்னி நீராடிய கடலில் நீராடுவோரின் பாவங்கள் தீரும்’ என ஆசியளித்தாள் சீதாதேவி.

இன்றும் ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன்னுள்ள கடல் நீரில் அலையே இருக்காது. சீதாதேவிபோல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு. அதிலும் ஆடி அமாவாசையன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது.

இராவணனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் சிவபெரு மானை வழிபட்ட திருத் தலம் ராமேஸ்வரம். சிவபெருமானின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் இதுமட்டுமே. மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோவிலுக்குள் உள்ளன. “ராமேஸ்வரம் சென்றும் குளிக்காததுபோல’ என்றொரு சொல்வழக்கு உண்டு. வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும், இங்கு புனித நீராடுவது அவசியமென்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இங்கு ஆடி மாதத்தில் அம்பிகை  பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதம் முழுவதும் இங்கு நீராடுவது சிறப்பாகும். பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாகவும் இது விளங்குகிறது.

தட்சிணாயன காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். முன்னோர் வழிபாட்டை ஆடி அமாவாசையன்று காலையே துவங்கிவிட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தக்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்துவரவேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்கவேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்தபிறகு, காகத்திற்கு உணவிடவேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிடவேண்டும்; அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்தால் முன்னோர் மகிழ்ந்து, நம்மை ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.

அமாவாசையின் முக்கியத்துவம் பற்றிய ஒரு சம்பவத்தைக் காண்போமா… குருக்ஷேத்ர யுத்தத்திற்குமுன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக சகாதேவனிடம் ஜோதிடம் கேட்கச் சென்றான் துரியோதனன். “போரில் வெற்றிபெறவேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்கவேண்டும்?’ எனக் கேட்டான்.

துரியோதனன் தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், “பூரண அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி’ என்றான். துரியோதனனும், அதேநாளில் களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென அமாவாசைக்கு முதல் நாளே ஒரு குளக்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்தார். இதைப் பார்த்து ஆச்சரியம் கொண்ட சூரியனும் சந்திரனும் பூலோகத்திற்கு வந்தனர். “நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேரும் நாள்தானே அமாவாசை! ஆனால் நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களே… இது முறையானதா?’ என்றனர்.

அதற்கு கிருஷ்ணன், “இப்போது நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே இன்றுதான் அமாவாசை…’ என சமயோசிதமாக பதில் சொல்லிவிட்டார். சகாதேவன் சொன்னபடி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய்விட்டது. இதனால் நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது.

ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல; தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள செதலபதி எனப்படும் திலதர்ப்பணபுரி முக்தீஸ்வரர் கோவில். முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.

எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை நித்ய அமாவாசை தலம் என்பர். இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்துகொள்ளலாம்.

ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது. திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 22 கிலோமீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் கிராமம் உள்ளது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கூத்தனூர் சென்று, அருகிலுள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோவிலும், அங்கிருந்து சற்று தூரத்தில் சிவபார்வதி திருமணத்தலமான திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவிலும் உள்ளன. ஆடி அமாவாசையன்று, நம் இதயத்தில் இருக்கும் முன்னோரை வழிபடுவதுடன், தீர்த்த தலங்களுக்கும் சென்றுவரலாம்.

அறம்வளர்த்த நாயகியோடு ஐயாறப்பர் அருள்புரியும் திருத்தலம் திருவையாறு. நால்வராலும் பாடப்பெற்ற புண்ணியத்தலம். நாவுக்கரசர் இக்கோவிலைப்பற்றி மட்டும் 126 பாடல்கள் பாடியுள்ளார். கயிலை தரிசனம் பெறுவதற்காக வடதிசை நோக்கிச் சென்ற நாவுக்கரசரை, அங்குள்ள நீர்நிலையில் மூழ்கும்படி சிவன் கட்டளையிட்டார். மூழ்கிய அவர், திருவையாறில் உள்ள திருக்குளத்தில் எழுந்தார். இக்குளத்திற்கு உப்பங்கோட்டை பிள்ளையார் குளம் என்றும் சமுத்திர தீர்த்தம் என்றும் பெயருண்டு. அங்கே அம்மையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று இரவில் நடக்கும். இதை அப்பர் கயிலாயக் காட்சி என்பர். நாவுக்கரசருக்கு அப்பர் என்றும் பெயருண்டு. கயிலாயக் காட்சியின்போது நாவுக்கரசர் பாடிய “மாதர்பிறைக் கண்ணியானை’ என்று தொடங்கும் பதிகத்தை பக்தர்கள் பாடுவர். இப்பதிகத்தைப் பாடுவோர் கயிலைநாதனை தரிசிக்கும் பேறுபெறுவர் என்பது ஐதீகம். “ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே’ என்ற நாவுக்கரசரின் வாக்கை நிரூபிக்கும்விதத்தில், இங்கு கோவில் பிராகாரத்தில் “ஐயாறப்பா’ என்று ஒருமுறை அழைத்தால் ஏழுமுறை எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

சந்திரனுடைய தேர் மூன்று சக்கரங்களைக் கொண்டது. அதில் முல்லைப்பூ நிறத்திலான பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். அந்த தேரினைச் செலுத்தும்போது சந்திரனிடமுள்ள அமுதத்தினை தினமும் தேவர்கள் அருந்துவதால் சந்திரன் படிப்படியாகத் தேய்ந்து ஒரு கலையோடு காட்சிதரும் நிலையில் இருப்பான். அந்தக் குறையை ஒரு நாளைக்கு ஒரு கலையாக சூரியன் நிறைவு செய்கிறான். இதுவே வளர்பிறைக் காலமாகும். பௌர்ணமிக்குப் பிறகு 15 நாட்களில் சந்திரனின் உடலிலிருந்து அமுதத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் மறுபடியும் ஈர்த்துக்கொள்கின்றனர். அதனால் தேய்ந்து ஒளியிழந்த சந்திரன் “அமை’ என்ற ஒற்றைக் கிரணத்தில் வாசம் செய்வதால், அந்த நாள் அமாவாசை என வழங்கப்படுகிறது.

அமாவாசையன்று முன்னோர்களுக்குரிய வழிபாட்டினைப் பற்றி முதன்முதலில் பராசர முனிவர், மைத்ரேய மகரிஷிக்கு விளக்கிச் சொன்னதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஒருசமயம் கவுசிக முனிவர் மற்ற ரிஷிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, “இப்பிறவியில் ஒரே நாளில் யாரும் பதின்மூன்று புனித கங்கைகளில் நீராட முடியாது. அது தேவர்களால் மட்டுமே முடியும்’ என்று ரிஷிகள் கூறினார்கள். ஆனால் கவுசிக முனிவர், “என்னால் பதின்மூன்று கங்கைகளில் நீராட முடியும்’ என்று கூறி, ரிஷிகளின் கூற்றினைப் பொய்யாக்கும்விதத்தில் பல திருத்தலங்களுக்குச் சென்று தவம் புரிந்தார். பல வருடங்கள் தவம்புரிந்தும் இறைவன் காட்சி தரவில்லை. இறுதியில் திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் வந்து பல வருடங்கள் தவம் மேற்கொண்டார். கவுசிக முனிவரின் உறுதியான தவத்தினைப் போற்றிய இறைவன் ஓர் ஆடி அமாவாசை நாளில் அன்னை விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராகக் காட்சி தந்தருளினார்.

முனிவரின் வேண்டுகோளின்படி காசி உட்பட பதின்மூன்று புனிதத்தலங்களில் பாயும் கங்கைகளும் அங்கு ஒரே சமயத்தில் பதின்மூன்று இடங்களில் பீறிட்டு வந்தன. உடனே கவுசிக முனிவர், பதின்மூன்று கங்கைகளின் தீர்த்தத்தையும் எடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து தானும் நீராடி இறைவனுடன் கலந்தார்.

ஆடி அமாவாசையில் இறைவன் இத்தலத்தில் தோன்றியதால், அந்தப் புனித நாளில் திருப்பூந்துருத்தி தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி இறைவனுக்கும் இறைவிக்கும் செய்யப்படும் அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டு, முன்னோர்களுக்கான பூஜையும் அன்னதானமும் செய்தால், நம் பக்தியை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள்புரிவதாக ஐதீகம். இத்தலம் தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் வழியில்- திருக்கண்டியூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது

 

கே. சுவர்ணா

இறைவனின் அம்சமாகக் கருதப்படும் ஒரு பொருளே பல சமயங்களில் இறைவனை நினைவுபடுத்தப் போதுமானதாயிருக்கும். வேல் எப்படி முருகனின் அம்சமாகக் கருதப் படுகிறதோ, திரிசூலம் எப்படி சிவனின் அம்சமாகக் கருதப்படுகிறதோ அப்படியே சாளக்கிராமமும் திருமாலின் அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சாளக்கிராமங்கள் இயற்கையாகத் தோன்று பவை. சாளக்கிராமக் கற்கள் நேபாள நாட்டில் ஓடும் கண்டகி நதியில் கிடைக்கின்றன. சாளக் கிராம மலையிலிருந்து கண்டகி நதி ஓடிவரும் பகுதியில் சாளக்கிராமம் என்னும் கிராமத்தில் இக்கற்கள் கிடைக்கின்றன.

சாளக்கிராமம் கூழாங்கல் போன்ற ஒரு கல் வகையைச் சார்ந்தது என்றும், ஒருவகைப் பூச்சியின் மேல்ஓடு கெட்டிப்பட்டு உருவானவை என்றும் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

சாளக்கிராமக் கற்களில் சங்கு, சக்கரம், அம்பு, வில், கலப்பை, வனமாலை, கோடுகள், புள்ளிகள் போன்ற பல சின்னங்கள் காணப்படுகின்றன. விஷ்ணு பகவானின் சின்னங்கள் இக்கற்களில் காணப்படுவதால், அவை விஷ்ணு பகவானின் அம்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வழிபாட்டில் முக்கிய இடம்பெறுகின்றன. சாளக்கிராமங் களில் லட்சுமிதேவியுடன்கூடிய மகாவிஷ்ணு உறைந்திருக்கிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அருட்செல்வம், பொருட்செல்வம் வேண்டி தெய்வாம்சம் பொருந்திய இக்கற்களை வழிபடுகிறார்கள்.

சாளக்கிராமக் கற்கள் திருமாலின் அம்சம் என்பதை புராணத்தின்மூலமும் அறியமுடிகிறது. விதேஹ தேசத்தில் பிரியம்வதை என்ற பெண், திருமாலே தனக்கு மகனாகப் பிறக்கவேண்டுமென்று தவம் மேற்கொண்டாள். அவளது தவத்திற்கு இரங்கிய பகவான், “அடுத்த பிறவியில் நீ கண்டகி நதியாக உருவெடுப்பாய். அந்நதியில் நான் சாளக்கிராமக் கற்களாகத் தோன்றுவேன்’ என்று வரமருளினார். இந்த வரலாற்றின் அடிப்படையில் சாளக்கிராமங்கள் திருமாலின் திருச்சின்னமாகக் கருதப்படுகின்றன.

சாளக்கிராமங்கள் பல வண்ணங்களும், பல வடிவங்களும்கொண்டு விளங்குகின்றன. அவற்றின் வடிவம், அவற்றில் காணப்படும் சின்னங்கள் ஆகியவற்றைக்கொண்டு அவை எந்த தெய்வ வடிவைச் சார்ந்தது என அறியப்படுகின்றன. இந்த அடிப்படையில் வராகமூர்த்தம், லட்சுமி நரசிம்ம மூர்த்தம், வாமன மூர்த்தம், பரசுராம மூர்த்தம், பலராம மூர்த்தம், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தம், கிருஷ்ண மூர்த்தம், சந்தான கோபால மூர்த்தம் என அவை வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றுள் சந்நியாசிகளும் பிரம்மச்சாரி களும் வழிபடுவதற்கேற்றது நரசிம்ம மூர்த்தம் எனப் படுகிறது. குழந்தைப்பேறு வேண்டுவோர் சந்தான கோபால மூர்த்தத்தை வழிபடலாம்.

சாளக்கிராமத்தை நேரிடையாக கற்களாகவோ, சிலைகளாகச் செய்தோ வழிபட லாம். கற்களாகவே வழிபடும்போது அவற்றின் புனிதத்தன்மை மாறாமலும் குறையாமலும் இருக்கும். வழிபடவும் மிகவும் எளிமையானதாக இருக்கும் என்பதால், பலர் தங்கள் வீடுகளில் இந்த கற்களை பூஜையறையில் வைத்து, அதற்குரிய முறையில் அபிஷேக, ஆராதனைகள் செய்வார்கள்.

இமயமலையில் பத்ரிநாத் ஆலயத்திலுள்ள விஷ்ணு சிலையும், உடுப்பியிலுள்ள கிருஷ்ணர் சிலையும் சாளக்கிராமக் கற்களால் செய்யப்பட்டவை.

வீடுகளில் சாளக்கிராமக் கற்களை வைத்திருப்பவர்கள் அவற்றை உரிய முறையில் பாதுகாத்து வைத்திருப்பார்கள். சங்கு, துளசி போன்றவற்றை அவற்றுக்கு அருகில் வைத்திருப்பதால் அவற்றின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படுகிறது. இவை வைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிலும் தெய்வீக அலைகள் பரவுவதால் தீயசக்திகள் உள்ளே நுழையாது.

சிவபெருமானைக் குறிக்கும் வெள்ளைநிறக் கற்களையும் சாளக்கிராமங்களோடு வைத்து வணங்கலாம். வெள்ளைநிறக் கற்கள் துவாரகை யில் கிடைக்கும்.

சாளக்கிராமம், துளசி இரண்டையும் ஒன்றாக வைத்து வழிபடுவது சிறந்த பலனைத் தரும். சாளக்கிராமத்தின்மீது வைக்கப்பட்டிருக் கும் துளசியை எடுப்பதற்குரிய முறை ஒன்றும் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. சாளக்கிராமங்களின்மீது வைக்கப்பட்டி ருக்கும் துளசியை எடுக்கவேண்டுமானால் மற்றொரு துளசியை வைத்துவிட்டுதான் முதலில் வைத்த துளசியை எடுக்கவேண்டும்.

இந்தக் கற்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வைத்து வழிபடக்கூடாது. இரட்டைப்படை எண்ணிக்கையில் வைத்து தான் வழிபடவேண்டும்.

சாளக்கிராமங்களை விலைகொடுத்து வாங்குவதைவிட, வயதில் மூத்தவர்கள் மற்றும் துறவிகள் போன்றவர்களிடமிருந்து அவர் களுடைய ஆசிகளுடன் பெற்று அவற்றை வழிபடுவதே நன்மையளிப்பதாக இருக்கும்.

சாளக்கிராமத்தை அதன் எடைக்குச் சமமான பால் அல்லது அரிசியில் வைத்து எடையைக் காணும்போது அதன் எடை மாறாமலிருந்தால் அது மகிமைவாய்ந்தது என்று கூறியுள்ளனர். அதனால் சிறப்பு வகை சாளக்கிராமங்களைக் கண்டறிந்து அவற்றை வழிபடுவதே சிறந்த பலனை அளிக்கும்.

தனக்காக மட்டுமல்லாமல், மற்றவர்கள் தங்கள் குறைகள் நீங்கி நன்மை பெறவேண்டும் என்பதற்காகவும் சாளக்கிராமங்களை வழிபடலாம்.

சாளக்கிராம வழிபாடு- புண்ணிய தலங்களனைத்திலும் நீராடிய பலன், அனைத்து வகை யாகங்களைச் செய்த பலன், விரதம், தவம், நாம பாராயணம் ஆகியவற்றால் கிடைக்கும் பலனனைத்தையும் கொடுக்கவல்லது.

சாளக்கிராமத்தை அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அருந்துவது தெய்வ அனுக்ரகத்தைப் பெற்றுத் தரும். நம் பாவங்கள் அனைத்தும் நீங்குவதோடு, நம் மூதாதையர்களுக்கும் முக்தியைக் கொடுக்கும்.
“சாளக்கிராம பூஜை செய்பவன் பொய் சொல்வானேயானால் அவன் நிரந்தர நரகத்தை அடைவான்’ என ஞான நூல்கள் கூறுகின்றன.

விஷ்ணு ஆலயங்களிலும், புனித மடாலயங் களிலும் வழிபாட்டில் மகிமை வாய்ந்த சாளக் கிராமங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றைத் தரிசித்து நற்பலன்களைப் பெறலாம்.

 

வைகாசி விசாகம் 12-6-2014
மும்பை ராமகிருஷ்ணன்

வைகாசி விசாகப் பௌர்ணமி என்றாலே, முருக பக்தர்களுக்கு முருக அவதாரம் நினைவுக்கு வரும். எல்லா முருகன் ஆலயங்களிலும் அன்றைய தினம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா புறப் பாடு, காவடி எடுத்தல், திருப்புகழ் பாடுதல் என்று கோலாகலமாக இருக்கும்.

முருக அவதாரத்துக்கு காரணமென்ன?

கச்யப முனிவர்- மாயை ஆகியோருக்குப் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், கிரௌஞ்சன் ஆகிய அசுரர்கள். அதேசமயம் ஆழ்ந்த சிவபக்தர்கள். சுக்ராச்சாரியார், மாயை ஆகியோரின் தூண்டுதலினால், சிவனைக் குறித்து கடுந்தவம் செய்து, சிவனின் மறுவுரு வாலன்றி அழிவு நேரக்கூடாதென்று வரம் பெற்றனர்.

வரத்தால் ஏற்பட்ட அகந்தையால் எல்லா உலகங்களையும் கைப்பற்றி, தேவர்களையும் அடிமையாக்கி சிறையிலிட்டனர். அனைவரும் சிவபெருமானை வேண்ட, பரமன் தனது ஈசானம், தத்புருஷம்,அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுடன் அதோமுகமும் சேர்த்து, ஆறுமுகங்களிலிருந்து ஜோதியைத் தோற்றுவித்தார். அதை அக்னியும் வாயுவும் கங்கையில் சேர்ப்பித்தனர். கங்கையானவள் நாணற்காட்டிலிருந்த  சரவணப்பொய்கையில் தாமரையில் சேர்த்தாள். அந்த ஜோதியே ஓருடல், இரு கால்கள், ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன் முருகப்பெருமானாக திரு அவதாரம் கொண்டது.

தமிழில் கந்தபுராணம் எழுதிய கச்சியப்ப சிவாச் சாரியார் இந்த நிகழ்ச்சியை-
“அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டு                         கொண்டே
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய’

என்று பாடுகிறார்.

ஆறு குழந்தைகள் ஒன்றானதால் கந்தன்; அக்னியும் வாயுவும் ஏந்தியதால் அக்னிபூ, வாயுகுமாரன்; கங்கையில் இட்டதால் காங்கேயன்; சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவண பவன்; விசாக நட்சத்திரத்தில் உதித்ததால் விசாகன்; கார்த்திகை மாதர் பாலூட்டியதால் கார்த்திகேயன்; ஆறுமுகமானதால் சண்முகன்; இளையோனாதலால் குமரன்; விரும்பியவற்றை அருளுவதால் சுப்ரமணியன்; பக்தர்களின் இதயக்குகையில் இருப்பதால் குகன்; தந்தைக்கு பிரணவ உபதேசம் செய்ததால் சிவகுருநாதன், தகப்பன்சாமி, சுவாமிநாதன்; சிவ- உமை பாலனானதால் சிவகுமாரன், சக்தி பாலன், உமாகுமாரன்… இவ்வாறு பல பெயர்கள் முருகனுக்கு. இந்தப் பெயர்களைத் துதித்து கார்த்திகை, விசாக விரதமிருந்தால், பிள்ளைப் பேறில்லாத வர்க்கு அந்த பாக்கியம் கிட்டும்.

ஏகாதச ருத்ரர்களை ஆயுதங் களாக, பராசக்தியை வேலாக ஏந்தி, தாரகன், கிரௌஞ்சன் ஆகியோரை அழித்தான் குமரன். பின்னர் நாரதர், பிரகஸ்பதி கூற, திருச்செந்திலில் சூரபத்மாதியரை ஐப்பசி ஸ்கந்த சஷ்டியன்று வேலால் அழித்தான்.

அந்த முருகனை அனைவரும் எவ்வாறு துதித்தனர்?

“கந்தன் நம ஐந்துமுகர் தந்த
முருகேச நம கங்கை உமைதன்
மைந்த நம பன்னிரு புயத்த நம
நீப மலர்மாலை புனையும்
தந்தை நம ஆறுமுக ஆதி நம
சோதி நம நற்பரமதாம்
எந்தை நம என்றும் இளையாய் நம
குமார நம என்று தொழுதார்’

என்கிறார் கச்சியப்பர்.

அத்தகைய முருகனுக்குப் பெருமைசேர்க்கும் அதே வைகாசி விசாக நன்னாளில் சமாதியடைந்து திருப்போரூர் முருகனில் கலந்தவர் சிதம்பர சுவாமிகள்.

திருச்சியருகேயுள்ள வயலூர் முருகனை நினைத்தால் கிருபானந்த வாரியாரும், மருதமலையை நினைத்தால் சாண்டோ சின்னப்பா தேவரும் நினைவுக்கு வருவர். அது போல திருப்போரூர் என்றால் சிதம்பர சுவாமிகள் எண்ணத்தில் தோன்றுவார்.

முருகப்பெருமான் நீரில் (கடலில்) போர்புரிந்த இடம் ஜெயந்திபுரம் என்னும் திருச்செந்தூர். நிலத்திலே போர்புரிந்த இடம் திருப்பரங்குன்றம். விண்ணில் போர்செய்த இடம் திருப்போரூர். அசுரர்களின் ஆணவம் அழித்து ஞானம் அருளிய தலமிது. சுமார் 650 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த அருணகிரிநாதர் இத்தலத்தை குறித்து நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.

ஆயினும் நாளடைவில் ஆலயம் மறைந்துபோனது. பின்னர் மதுரை மீனாட்சி, முருகன் அருளால், சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் சிதம்பர சுவாமிகள் இவ்வாலயத்தைப் புதிதாகக் கட்டினார்.

அதுவே இன்று நாம் காணும் திருப்போரூர் முருகன் கோவில். எழில்மிகு கோபுரங்கள், வியக்கவைக்கும் சிற்பங்கள், வள்ளையார் ஓடை எனப்படும் வற்றாத பெரிய திருக்குளம் என சிறந்து விளங்குகிறது ஆலயம்.

இவ்வாலயத்தை அமைத்த சிதம்பர சுவாமிகள் மதுரையைச் சேர்ந்த புலவர்க் குடிமகன். 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரது தாய்- தந்தை, பிறந்தநாள் போன்றவற்றை அறிய இயலவில்லை. அவர் சில குழந்தைகளுக்கு தமிழ்ப்பாடம் சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரென முருகப்பெருமானின் திருக்காட்சி கிட்டிற்றாம். அதையடுத்து சைவ ஆகம முறைப்படி 21 தீட்சைகள் பெற்றார். மதுரை மீனாட்சியின் அத்யந்த பக்தரான அவர், மீனாட்சிமீது கலிவெண்பா பாடியுள்ளார்.

திருப்போரூர் சென்று முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்குமாறு மதுரை மீனாட்சி சிதம்பர சுவாமிகளுக்கு உணர்த்தினாள். அதன்படி சுவாமிகள் திருப்போரூர் வந்தபோது அங்கு கோவில் எதுவும் காணப்படவில்லை. பனங்காடுதான் இருந்தது.

முருகன் இருக்கும் இடத்தைக் காட்டி யருளுமாறு அங்கேயே தவத்தில் ஈடுபட்டார் சுவாமிகள். ஒரு பெண்பனையின்கீழ் சுயம்புமூர்த்தியாக- புற்றினால் சூழப்பட்ட நிலையில் முருகன் இருப்பதை அறிந்தார். மிகவும் எச்சரிக்கையோடு புற்றுமண்ணை அகற்றி, முருகனின் சிலையை எடுத்து சிறு குடில் அமைத்து வழிபட்டார்.

அப்போது முருகன் அவர் கனவில் தோன்றி தனக்கு எவ்வாறு கோவில் அமைக்க வேண்டுமென்று உணர்த்தினாராம். அதன்படி செல்வந்தர்களிடம் சென்று நிதி சேர்த்தார். வரும் பக்தர் களுக்குத் திருநீறு அளித்து, அதன்மூலம் அவர்கள் நோய் நீக்கினார்; கோரிக்கைகளை நிறைவேற்றினார். அப்படிப் பயன்பெற்றவர்களும் காணிக்கை செலுத்தினர். அதைக்கொண்டு கட்டப்பட்டதே தற்போது நாம் காணும் கோவில். மீனாட்சி பணிக்க- முருகன் காட்டியருளிய அற்புதமான கோவில் இது!

புரசைவாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார் இயற்றிய திருப்போரூர் தலபுராணம் என்ன சொல்கிறது?

கன்வ முனிவரால் திருமாலும் திருமகளும் சபிக்கப்பட, அவர்களுக்கு சாபவிமோசனமளிக்க சிவபெருமான் தோன்றிய இடம். அருகேயுள்ள மலைமீது கயிலாசநாதர் பாலாம்பிகையுடன் எழுந்தருளிய தலம். மகாலட்சுமி வேப்ப மரமாக இருந்து தவம்செய்த தலம். முருகன் சிவபெருமானுக்கு பிரணவ உபதேசம் செய்த தலம் சுவாமிமலை என்றால்- அருணகிரியாருக்கு உபதேசித்தது திருவருணை என்றால்- அகத்தியருக்கு முருகன் பிரணவ உபதேசம் அருளிய தலம் திருப்போரூரே.

புதிய கோவிலானாலும் புராதனத்திற்குச் சான்றாக தூண்களில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மனின் பட்டப்பெயர்களான “அத்யந்தகாமன்; “அதிரண சண்டன்’ போன்றவை காணப்படுகின்றன.

கருவறையில் முருகப் பெருமான் வள்ளி, தேவசேனையுடன் சுயம்புமூர்த்தியாக அருள்புரிகிறார். இவருக்கு புனுகு சாற்றி, கவசம், திருவாபரணம், வேல், சேவற்கொடி அணிவிக்கிறார்கள். கீழே பஞ்சலோகத்தாலான சிறிய விக்ரகங்கள் உள்ளன. முருகன் ஜெப மாலை, கமண்டலம், அபய, வரத ஹஸ்தத்துடன் உள்ளார். சிதம்பர சுவாமிகளால் அபிஷேகம் செய்து ஆராதிக்கப்பட்டவை.

விநாயகர், முருகன், வள்ளி, தேவசேனா, சிவன், உமை, சண்டிகேஸ்வரர், அஷ்ட திக் பாலகர், பைரவர் ஆகியோருக்கு உகந்த பீஜாட்சரங்களுடன் ஒரு யந்திர ஸ்தாபனமும் செய்துள்ளார் சிதம்பர சுவாமிகள். தினசரி பூஜை, கந்தசஷ்டியின்போது சிறப்பு அபிஷேகத்துடன் மந்திரமாலா பூஜையும் நடக்கிறது.

எங்கெங்கும் எழில்வாய்ந்த விக்ரகங்கள். மானும் மழுவும் ஏந்தி சிவபெருமான் வாய்பொத்தி விநயத்துடன் நோக்க, முருகன் அவர் மடியிலமர்ந்து பிரணவ உபதேசம் செய்யும் காட்சியை வேறெங்கும் காணவியலாது. அவ்வளவு அற்புதம்!

அருணகிரியார் இத்தல முருகனை “சமரமாபுரி மேவிய பெருமாளே’ என்றும்; “திருப்போரூர் அமர்ந்த பெருமாளே’ என்றும் போற்றுகிறார். திருத்தணிகைத் திருப்புகழில்- “சொந்துவள் குரவு அடியினும்; அடியவர் சிந்தை வாரிஜ நடுவினும்; நெறிபல கொண்ட வேதநன் முடியிலும் மருவிய குருநாதா’ என்கிறார். அதாவது குரா மரத்தின்கீழ் என்று திருவிடைக்கழி தலத்தையும்; அடியவர்கள் சிந்தையில் நடுநாயகமாக விளங்கும் சிறுவாபுரி தல முருகனையும்; வேதத்தின் முடியில் (உச்சி) போற்றப்படும் திருப்போரூர் முருகனையும் ஒருங்கே புகழ்கிறார்.

புரசை சபாபதியார் தலபுராணம் மட்டுமின்றி, கலம்பகம், அலங்காரப் பஞ்சகம், அந்தாதி, நான்மணிமாலை, குறவஞ்சி, வெண்பாமாலை, பிரணவாசல சதகம் என பல பாடல்கள் திருப்போரூர் முருகன்மீது பாடியுள்ளார். திருமயிலை ராகவதாசர் கந்தர் கழலணிமாலை இயற்றியுள்ளார். மேலும் பல புலவர்களும் பாடி யுள்ளனர்.

சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் சந்நிதி முறை என்று 726 துதிகள் பாடியுள்ளார். 1659-ஆம் ஆண்டு வைகாசி விசாகத்தன்று, அருகிலுள்ள கண்ணுவர்பேட்டையில் சமாதியடைந்தார். சமாதிமேல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

அதேநேரத்தில் கோவிலில் தன் உருவம் காட்டி, உச்சிமேல் கைகுவித்த வண்ணம் சென்று மூலஸ்தான முருகனுடன் கலந்தாராம்.

(தற்போது 14-ஆவது பட்டம் சிதம்பர சிவஞான சுவாமிகள் தலைமையில் அறப் பணிகள் தொடர்கின்றன.)

சிதம்பர சுவாமிகளின் சில துதிகளைப் பாடி முருக பக்தியில் திளைப்போமா?

“முருகா என உனை ஓதும் தவத்தினர் மூதுலகில்
அருகாத செல்வம் அடைவர்; வியாதி அடைந்து
நையார்;
ஒரு காலமும் துன்பம் எய்தார்; பரகதி யுற்றிடுவார்;
பெரு காலன் நாடு புகார்; சமராபுரி புண்ணியனே.’

“உள்ளக் கவலையெலாம் ஒழிந்தேன்; ஒழியாது
செய்யும்
கள்ளக் கருமங்கள் யாவும் விண்டேன்;
கலைவாணியுடன்
வள்ளக் கமலமாது தந்தருள் வாழ்வடைந்தேன்;
தெள்ளத் தெளிந்தனன் போரூர் முருகனை
சேவை செய்தே.’

“ஆறுமுகம் வாழி ஆறிரண்டு தோள் வாழி
தேறுபதம் வாழி இரு தேவியர்- வீறுபடை
வாழி வேல் வாழி மயில் வாழி போரூரார்
வாழி சகம் வாழி மகிழ்ந்து.’

சிவாலயத்தில் சிவன் சந்நிதிக்கு தென்புறம் எழுந்தருளியிருப்பவர், தென்முகக் கடவுள் என்று போற்றப்படும் தட்சிணாமூர்த்தி. அவரை வழிபடும்போது வடக்குப் பார்த்து அமர்ந்து “ஓம் நமசிவாய’ எனப்படும் திருவைந்தெழுத்தை தியானிக்கவேண்டும் என்பது ஆகமவிதிகளில் ஒன்று.

ஆன்மாக்கள் வடக்கு நோக்கிச் செல்வதை சரண யாத்திரை என்றும், தெற்கு நோக்கிப் போவதை மரண யாத்திரை என்றும் ஞானநூல்கள் கூறுகின்றன. ஆன்மாக்கள் தன்னை நோக்கி சரணடைய விரும்புவதால், அவர்களை ரட்சிப்பதற்காக தட்சிணாமூர்த்தி தெற்குநோக்கி அருள் புரிகிறார். தட்சிணாமூர்த்தியை வழிபட குரு கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். கல்வி, கேள்வி, ஞானம், புதிய- அரிய கலைகளில் தேர்ச்சி பெறலாம். மேலும், புகழையும் பொருளையும் ஒருசேர அடைய தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறந்தது. எழுத்தாளர்கள், பத்திரிகைத் துறையில் ஈடுபாடுள்ளவர்கள், நீதித்துறையில் உள்ளவர்கள், அதிகார மையத்தில் பணிபுரிபவர்கள் இவரை வழிபட்டால் புகழ், செல்வம், அறிவுத் திறன் மேம்படும். நியாயத்திற்கு தட்சிணா மூர்த்தியே தலைவராதலால் இவரை வழிபட வழக்குகளில் நல்ல தீர்ப்பினைப்   பெறலாம். தவிர, உடல் வளம் பெறவும், வலுவுடன் திகழவும் தட்சிணாமூர்த்தியின் அருள் அவசியம் தேவையென்று ஆகமங் கள் கூறுகின்றன. மங்களகரமான மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் அருளிருந்தால் வாழ்நாள் முழுவதும் மங்களம் நிறைந் திருக்கும்; மனம் ஒருநிலைப்படும்; ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்; இறையருள் நிறைந்திருக்கும்; மனம் சலனப் படாது.

சிவசொரூபத்தின் ஓர் அங்கமாக விளங்கும் தட்சிணாமூர்த்தி ஒவ்வொரு தலங்களிலும் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளியிருப் பதை தரிசிக்கலாம். அதில் சில…

பொதுவாக, ஆலமர்ச்செல்வன் என்று போற்றப்படும் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்கள் நான்கு பேர்களுக்கு கல்லால மரத்தடியில் உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சிதருவார். ஆனால் இதில் சற்று மாறு பட்ட கோலத்திலும் சில தலங்களில் அருள் புரிகிறார்.

மதுரை அருகிலுள்ள திருத்தலம் திடியன் மலை. இங்கு அமைந்துள்ள ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி நந்திமீது அமர்ந்த கோலத்தில், பதினான்கு சித்தர் களுடன் காட்சிதருகிறார். இதேபோல் மயிலாடுதுறை வள்ளலார் கோவில், சென்னை திரிசூலம் திருக்கச்சானம், திருவாய்மூர் ஆகிய இடங்களில் ரிஷபத்தின்மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

மேலும், ஆந்திர மாநிலத்திலுள்ள சித்தூர் ஸ்ரீசோமநாதேஸ்வரர் கோவிலில் ரிஷபத்தின்மீது அமர்ந்து வீணை மீட்டும் தட்சிணாமூர்த்தியையும்; நாகலாபுரம் சிவன் கோவிலில் சமபத வீணாதர தட்சிணா மூர்த்தியையும்;  சென்னை மகாபலிபுரத்தில் சுவஸ்திகாசன நிலையில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியையும்; கர்நாடக மாநிலம் நஞ்சன்கோடு ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் “உத்கடியாசன யோக’ நிலையிலும்; ஆந்திராவிலுள்ள அனந்தப்பூர் மாவட்டத்தில், ஹேமாவதி என்ற இடத்தில்  ஐயப்பன்போல் குத்துக்காலிட்ட நிலையில் யோகமூர்த்தியாகவும் காட்சிதருகிறார்.

தஞ்சை திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக அருள்புரியும் தட்சிணாமூர்த்தியின் காலின்கீழ் ஆமை ஒன்றுள்ளது. இதுபோன்ற அமைப்பு வித்தியாசமானது. இதேபோல் குடந்தையிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள தேப்பெருமாநல்லூர் என்ற தலத்தில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முனிவர்கள் இல்லை. அதற்கு பதில் நாகம் ஒன்று படம் எடுத்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர். இவருக்கு பழைய சோறு- அதாவது முதல் நாள் சமைத்து இரவு தண்ணீர் ஊற்றிய அன்னம் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

சில திருத்தலங்களில் வீணை வாசிக்கும் நிலையில் காட்சிதரும் தட்சிணாமூர்த்தி, கழுகுமலை வெட்டுவான் கோவில் விமானத்தின் தென்திசையில் மிருதங்கம் வாசிக்கும் தோற்றத்தில் காட்சிதருகிறார்.

சிவாலயங்களில் கோஷ்டத்தில் ஒரு காலை மடக்கி, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி காட்சி தரும் தட்சிணாமூர்த்தி திருமயி லாடி ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோவிலில் இரண்டு கால் களையும் மடக்கி பத்மாசன நிலையில் அமர்ந்தபடி அருள் புரிகிறார். இத்தலம் நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகிலுள்ளது. இதேபோல் கடலூருக்கு அருகிலுள்ள தீர்த்தனகிரி ஸ்ரீசிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் முயலகன் இல்லாத தட்சிணா மூர்த்தியை தரிசிக்கலாம். இரண்டு கால் களையும் மடக்கி பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார்.

நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத் திலும், பத்மாசன கோலத்திலும் காட்சிதரும் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரராக- அதாவது ஒருபாதி ஆண், மறுபாதி பெண் உருவமாக முயலகனை பாதத்தால் மிதித்தபடி அருளும் கோலத்தை புதுக்கோட்டை, திருவேங்கைவாசல் சிவாலயத்தில் தரிசித்து மகிழலாம். இதேபோல் கும்ப கோணத்திலிருந்து நாச்சியார் கோவில்- பூந்தோட்டம் செல்லும் வழியிலுள்ள திருப்பெருந்துறை ஸ்ரீசிவானந்தேஸ் வரர் ஆலயத்தில், சிவ-சக்தி இணைந்த வடிவில் அர்த்த நாரீஸ்வரர் தோற்றத் தில் கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றுள்ளார். மேலும் ஊத்துக் கோட்டை அருகிலுள்ள சுருட்டப்பள்ளி தலத்தில், தாம்பத்திய தட்சிணா மூர்த்தியாக- அம்பி கையை அன்புடன் தழுவிய வண்ணம் காட்சியளிக்கிறார்.

தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சில தலங்களில் திசைமாறியும் எழுந்த ருளியுள்ளார். திசைமாறியும், வித்தியாசமான திருக்கோலத்திலும் தட்சிணாமூர்த்தியை வழிபட நினைத்த நல்ல காரியங்கள் உடனே நிறைவேறும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூரையடுத்த பட்டமங்கலம் திருத்தலத்தில் வழக்கத்திற்கு மாறாக கிழக்கு திசைநோக்கி அருள்புரிகிறார். இதேபோல் சந்திரன் தலமான திங்களூரில் கிழக்கு திசை நோக்கி அருள்புரியும் இரண்டு தட்சிணாமூர்த்தியை தனித்தனி சந்நிதியில் தரிசிக்கலாம்.

மேற்கு திசை நோக்கி அருள்புரியும் தட்சிணாமூர்த்தியை செவ்வாய்த் தல மாகக் கருதப்படும் வைத்தீஸ்வரன் திருக்கோவிலில் தரிசிக்கலாம்.

வடக்கு திசை

நோக்கி அருள்புரியும் தட்சிணாமூர்த் தியை சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலய கோபுர வாசலுக்கு முன்னுள்ள மண்டபத் திற்கு அருகில் காணலாம். இவர் ஒன்பது அடி உயரமும் ஐந்தடி அகலம் கொண்ட பிரம்மாண்ட வடிவில் காட்சிதருகிறார். இங்கு இவரது வாகனம் சிம்மம்.

தட்சிணாமூர்த்தியை எந்தத் திருக்கோலத்தில் தரிசித்து வழிபட்டாலும் கல்வி, கேள்வி, ஞானம் அளித்து சுகமான வாழ்வருள்வார் என்பது நிச்சயம்!

முத்தொழில் தெய்வங்கள் முதன்மைக் கடவுளர்களாகத் திகழ, பலநூறு தெய்வங்கள் அணிசெய்யும் மதம் இந்து மதம். காசி முதல் ராமேஸ்வரம் வரை பக்தர்கள் தத்தம் இஷ்ட தெய்வங்களைத் தேடிச்சென்று வணங்கி மகிழும் தேசம் நமது பாரத தேசம். நம் மக்கள் பிரம்மாண்டமான கோபுரங்களின் நிழலில் அருள்புரியும் இறைவனிடம் பக்தி செலுத்துவதுபோலவே, எளிய கட்டடங்களிலும், கூரையின்றி வெறும் பீடத்தில் நிற்கும் சிறுதெய்வங்களிடமும்  பக்தி செலுத்துகின்றனர்.

பிழைப்பைத் தேடுவதிலேயே வாழ்க்கை முழுவதையும் செலவிடும் எளிய மக்களுக்கு, தன் ஊரின் எல்லையிலும், வீட்டுக்கு அருகிலும் கோவில் கொண்டிருக்கும் அய்யனாரையும், சாஸ்தாவையும், மாரியம்மனையும் அணுகி வழிபடுவதே எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது. விதைக்கும்போதும் அறுக்கும்போதும் ஒரு நடைபோய் “நல்ல விளைச்சலைக் கொடு’ என்றும், “இந்த வருடம் போதுமான மழையைக் கொடு’ என்றும், “இது என் குடும்பத்தின் முதல் வாரிசு; அவன் தலைமுடியை உனக்கு காணிக்கையாக்க வந்திருக்கிறேன். எங்களை நல்லமுறையில் வாழ வைக்கவேண்டும்’ என்றும் உரிமையோடு வேண்டிக் கொள்கிறார்கள்.

இப்படி காலங்காலமாக கிராம மக்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து வணங்கி வரும் தெய்வங்களில் ஒன்றுதான் குமாரமங்கலம் அய்யனார். உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டைக்கு மேற்கே ஐந்தாவது கிலோமீட்டரில், சாலையின் வலப்புறம் இயற்கையான சூழலில் அருள் புரிந்துவருகிறார் அய்யனார்.

ஆங்கிலேயருக்கு முன்பாக அலையலையாகத் தொடர்ந்த முஸ்லிம் மன்னர்களின் படை யெடுப்பின்போது, பல்வேறு இந்துக் கோவில்கள் அவற்றின் செல்வத்துக்காகவும் அந்நிய மதம் என்ற பேதத்தாலும் சூறையாடப்பட்டன. அப்படி இஸ்லாமிய தளகர்த்தர் ஒருவரால் சேதத்துக்கு ஆளான கோவில்களில் குமாரமங்கலம் அய்யனார் கோவிலும் ஒன்று. ஒரே கல்லில் பூரணி, பொற்கலையோடு வடிக்கப் பட்டிருந்த அய்யனாரின் தலைப்பகுதி சேதத் துக்குள்ளானது. (பின்னர் புதிதாக அய்யனார் சிலை ஸ்தாபிக்கப்பட்டது. சேதமான அய்யனார் சிலை இப்போதும் கோவிலில் காணப்படுகிறது.)

அந்தத் தளபதி அய்யனாருக்கு மட்டுமின்றி, அவ்வூர் மக்களின் துன்பத்துக்கும் காரண மானான். குமாரமங்கலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருத்தியின் அழகை வியந்து, அவளைத் தன் மனைவியாக்கிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறான் அந்தத் தளபதி. இதனை அந்தப் பெண்ணோ, அவளது பெற்றோரோ, அந்த ஊர் மக்களோ எவரும் விரும்பவில்லை. அந்நிய மதத்தவனிடம் வாழ்க்கைப்பட்டு தங்களது பெண் துன்பப்படுவதா என்று நினைத்தனர்.

படைபலம்மிக்க தளபதியை எதிர்க்கமுடியாது என்பதால், இரவோடு இரவாக ஊரைவிட்டு வெளியேறிவிடுவதென தீர்மானித்து, மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் மேற்குநோக்கிக் கிளம்பினர்.

அப்படிச் சென்றவர்கள் வழியில் ஆங்காங்கே குடியேறினர். காலம்கடந்து நிலைமை சீரடைந்தபோது, கொஞ்சம்பேர் திரும்பிவந்து மீண்டும் குடியமர்ந்தனர்.

 

சென்ற இடத்திலேயே காலூன்றி விட்டவர்கள் அய்யனாரை வழிபடுவதற்காக வந்துசெல்ல ஆரம்பித்தனர். இப்படி இன்று திருச்சி, கடலூர், புதுச்சேரி, சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், சேலம் என பல்வேறு ஊர்களிலிருந்தும் குடும்பத்தோடு வந்து அய்யனாரை வழிபடுகிறார்கள்.

கடலூர் மாவட்டம், எம். பரூரில் இருந்து அய்யனாரை வழிபடவந்த சின்னப்பிள்ளை என்ற பெண்மணி கூறும்போது- “”அய்யனார் வெறும் காவல் தெய்வம் மட்டுமல்ல; தொலைந்த, களவுபோன பொருட் களை கண்டுபிடிச்சுத் தரும் நிஜ காவலரும்கூட சில மாசத்துக்கு முன்னால வீட்டு வாசல்ல எல்லாரும் தூங்கிக்கிட்டிருந்தோம். என் தம்பி மக அகிலா ரெண்டு பவுன் தாலிக்கொடியோட தூங்கிக்கிட்டிருந்தா. நடுராத்திரியில திருடங்க அந்த தாலிக் கொடியை அறுத்துக்கிட்டு ஓட,  “திருடன் திருடன்’னு கத்திக்கிட்டே துரத்தினோம். ஆனா திருடங்களைப் பிடிக்கமுடியலை. வேறென்ன செய்ய?

காவல் தெய்வம் அய்யனார்கிட்ட போய் முறையிட்டோம். சில நாட்களுக்குப் பின்னால மங்கலம்பேட்டை போலீசார் ரெண்டு திருடங்களைப் பிடிச்சு விசாரிச்சாங்க.

அப்போ பரூர்ல தாலிக்கொடியை அறுத்ததையும் ஒத்துக்கிட்டாங்க. தாலிக் கொடி திரும்பக் கிடைச்சது. இப்படி பல பேரோட பிரார்த்தனையைக் கேட்டு, காணாமபோன எத்தனையோ பொருட்களை திரும்பக் கிடைக்கச் செஞ்சிருக்கார் இந்த அய்யனார்” என்றார்.

உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டபோது சாலையோரமிருந்த கோவிலின் மதில்சுவர்களையும் பரிவார தெய்வங்களையும் அப்புறப் படுத்தச் சொன்னார்கள் அதிகாரிகள். தெய்வங்களை இடம்மாற்றி வைக்க சில ஆகமவிதிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியபோதும், உரிய அவகாசம் வழங்கவில்லை அதிகாரிகள். கோவில் சுற்றுச்சுவரை இடிப்பதற்கு பொக்லைன் எந்திரத்தோடு வந்தார்கள். ஆனால் பொக்லைன் ஓட்டுநருக்கு உடல்நலக் குறைவு, இயந்திரக் கோளாறு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் அவர்களால் சுவரை இடிக்கமுடியவில்லை. உரிய கால அவகாசத்தை அய்யானார் ஏற்படுத்திக்கொடுத்தார். முறைப் படி பரிவார தெய்வங்கள் இடம் மாற்றப்பட்ட பின்னரே அவர்களால் வேலை செய்யமுடிந்தது. இந்த நிகழ்ச்சியை வியப்போடு சொல்கிறார்கள் ஜெயராமும், இப்பகுதி மக்களும்.

தேசிய நெடுஞ்சாலையில் விரையும் பல்வேறு வாகனங்களை கோவில்முன் நிறுத்தி, விபத்தில்லாத பயணம் அமையவேண்டுமென்று வேண்டிச் செல்கின்றனர். நீண்ட பயணத்தால் ஏற்படும் அசதியில் கண்ணயர்ந்தவர்கள் பலர் இக்கோவிலருகே வரும்போது, யாரோ தம்மைத் தட்டியெழுப்பியது போல் உணர்ந்து, அய்யனாரே தங்களை எச்சரித்திருக்கிறார் என்பதை அறிந்து பக்தியோடு இவரை வணங்கிச் சென்றிருக்கிறார்கள். இத்தகைய பல சம்பவங்களை சலிப்பின்றிச் சொல்கிறார் கோவில் பூசாரி ரமேஷ்.

முனீஸ்வரர், வீரனார், தட்சிணாமூர்த்தி, பிடாரியம்மன், தண்டோரா போடும் வாயிற்காவலன் என பரிவார தெய்வங்கள் சூழ, கம்பீரமாக அருள்புரிந்துவருகிறார் குமாரமங்கலம் அய்யனார்.

“”எங்கள் ஊரில் யாரும் காவல் நிலையத்திற்குப் போகமாட்டோம். அய்யனாரே காவல் தெய்வமாகவும் எங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பவராகவும் விளங்குகிறார்” என்கிறார் குமாரமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அரசன்.

சிறப்புகள் பல மிகுந்த அய்யனாரின் அருளுக்குப் பாத்திரமாக, நாமும் ஒருமுறை குமாரமங்கலம் போய்வரலாமே!

……………………………………………………………………………………………………………………..

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?௧. கல்வி
௨. அறிவு
௩. ஆயுள்
௪. ஆற்றல்
௫. இளமை
௬. துணிவு
௭. பெருமை
௮. பொன்
௯. பொருள்
௧0. புகழ்
௧௧. நிலம்
௧௨. நன்மக்கள்
௧௩. நல்லொழுக்கம்
௧௪. நோயின்மை
௧௫. முயற்சி
௧௬. வெற்றி
—————————————————-
கலையாத கல்வி
கபடட்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்
அன்பான துணை
தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தடையற்ற கொடை
தொலையாத நிதி
கோணாத கோல்
துன்பமில்லா வாழ்வு…
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?</p><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
<p>௧. கல்வி<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௨. அறிவு<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௩. ஆயுள்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௪. ஆற்றல்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௫. இளமை<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௬. துணிவு<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௭. பெருமை<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௮. பொன்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௯. பொருள்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௧0. புகழ்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௧௧. நிலம்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௧௨. நன்மக்கள்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௧௩. நல்லொழுக்கம்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௧௪. நோயின்மை<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௧௫. முயற்சி<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
௧௬. வெற்றி<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
----------------------------------------------------<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
கலையாத கல்வி<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
கபடட்ற நட்பு<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
குறையாத வயது<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
குன்றாத வளமை<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
போகாத இளமை<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
பரவசமான பக்தி<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
பிணியற்ற உடல்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
சலியாத மனம்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
அன்பான துணை<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
தவறாத சந்தானம்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
தாழாத கீர்த்தி<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
மாறாத வார்த்தை<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
தடையற்ற கொடை<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
தொலையாத நிதி<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
கோணாத கோல்<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />
துன்பமில்லா வாழ்வு...

ன்மிகம் உயர்வுகளைத் தருமா? பிரச்சினைகளைத் தீர்க்குமா? வசதிகளை உண்டாக்குமா?

ஆன்மிகம்  நேரடியாக உயர்வுகளைத் தராது.

அது நேரடியாக எதையும் உங்கள் கைகளில் வந்து கொடுக்காது.

அது நாமாக  உயர்வை அடையும் வண்ணம் அது நம்மைத் தயார்படுத்தும்.

ஆன்மிகம் நமது பிரச்சினைகளை நேரடியாகத் தீர்த்து வைக்காது.

நாமே நமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நம்மை உள்ளத்தால் பலமுடையவனாக ஆக்கும்.

ஆன்மிகம் வசதிகளை உண்டாக்காது. எது வசதி என நமக்கு உணர்த்தி நம்மை நிரம்பித் ததும்ப வைக்கும்.

உயர்வு என்பது பதவிகளில் இல்லை.

பதவியில் உயர்வு இருக்குமானால் உயர் பதவியில் இருப்போர் எல்லாரும் உயர்ந்த மனிதர்களாக ஆகியிருப்பார்கள்.

உயர்ந்த பதவியிலும் சின்ன மனிதர்கள், அற்ப மனிதர்கள் இருக்கிறார்கள்.

தாழ்வான நிலையில் வாழ்பவர்களிலும் அபூர்வமான உயர்ந்த மனிதர்கள் உண்டு.

உயர்வு என்பது செல்வாக்கிலோ வசதி யிலோ  விளம்பரத்திலோ இல்லை.

இங்கே செல்வாக்கானவர்களிலும் வசதி யானவர்களிலும் அற்பர்கள் இருக்கிறார்கள்.

எளிமையானவர்களிலும் உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

உயர்ந்த மனிதரான மகான் இராமகிருஷ்ண பரமஹம்சர் எத்தனை கோடிகளை வைத்திருந் தார்?

சுவாமி விவேகானந்தர் எத்தனை ஏக்கர் நிலங்களை வளைத்து, எந்தெந்த வங்கியில் கோடிகளை இருப்பு வைத்தி ருந்தார்?

இவர்கள் உலகில் எதையும் அபகரிக்கவில்லை; மக்களின் அன்பான இதயங்களைத் தவிர.இவர்கள் தங்கள் ஆன்மிக அன்பை மக்கள்மீது கருணை யோடு இறைத்தனர்.

அவர்களின் உயர்ந்த பண்பு அவர்களை உயர்வான இடத்திற்கு அழைத்துச் சென்று அமரவைத்தது.

ஆன்மிகம், நமக்குள் இருக்கும் நமது குப்பைப் பகுதிகளை வெளியேற்றுகிறது; துப்புரவு செய்கிறது.
ஆன்மிகம் நமது முட்களை எல்லாம் வெளியே அறுத்தெறிகிறது; மனதை மலர்களாக்குகிறது.

ஆன்மிகம் நமது பாறைகளை உடைத் தெறிகிறது; நம்மை மிருதுவாக்குகிறது.

ஆன்மிகம் நமது வனப்பிரதேசங்களை சீர்திருத்தி நம்மை நந்தவனமாக்குகிறது.

ஆன்மிகம் நமது விலங்குகளை வெளியேற்றி விட்டு நமக்குள் இறைத்தன்மையை நறுமணம் கமழக் கமழ குடியேற்றுகிறது.

அவ்வாறாயின் அத்தகைய ஆன்மிகத்தை நாம் எப்படி அடைவது?

அதை நீங்கள் பரிசுத்த உணர்வோடு தேடி நடந்தால், அது உங்களை நோக்கி நடந்து வருவதைப் பார்க்கலாம். ஏனெனில் அது உங்களுக்கு நேர்கோட்டில்தான் இருக்கிறது.

அதனால் அதைத் தேடி அங்கும் இங்குமாய் நீங்கள் அலைபாயத் தேவையில்லை.

நீங்கள் அதை நோக்கி நடக்கத்தொடங்கும் போதே உங்களின் வேண்டாத பகுதிகள் உதிரத் தொடங்கிவிடும்.

ஆன்மிகம் நமது  மனதை ஒளிபெறச் செய்கிறது.

அவ்வாறாயின் இருட்டுக்கு அங்கே வேலை இல்லை.

ஆன்மிகம் நமது மனதை விசாலமாக்குகிறது. அங்கே குறுகிய விஷயங்களுக்கு இடமிருக்காது. அங்கே சின்னத்தனங்களுக்கு சிம்மாசனம் கிடைக்காது.

வாழ்க்கை நமது கிண்ணங்களை இரவாலும் பகலாலும் நிரப்புகிறது.

ஆன்மிகமோ அவற்றை நிம்மதியால் நிரப்புகிறது.

சாந்தத்தின் சந்நிதியாக நம்மை மாற்றுகிறது.

சலனங்களும் சஞ்சலங்களும் அண்டாத ஒரு இடத்தில் நம்மை நிறுத்துகிறது.

ஆன்மிகம் நமது எந்த சந்தோஷங்களையும் இழக்கச் சொல்லவில்லை.

ஏனெனில் ஆன்மிகமே சந்தோஷத்துக்கான மார்க்கம்தான்.

அது தரும் சந்தோஷம் நிரந்தரமானது.

ஆன்மிகம் அழகிய உலகம். அது புத்தியையும் வாழ்க்கையையும் அழகாக்குகிறது.

ஆன்மிகத்தை எந்த மதத்தில், எந்த மார்க்கத்தில், எந்தக் கோவிலிலில், எந்த விதத்தில் தேடுவது?

               திசங்கரர் வகுத்த அறுசமய வழிபாடுகளில் ஒன்றான சக்தி வழிபாடு நம் பாரத தேசமெங்கும் சிறப்பாக விளங்கிவருகிறது. நம் தமிழகத்தில் சக்தி வடிவத்தை அம்பிகையாகவும், மாரியம்மனாகவும், நாகம்மனாகவும், அங்காள பரமேஸ்வரியாகவும், இன்னும் பல பெயர்களிலும் வணங்கி வருகிறோம்.

அவ்வகையில் அம்மனின் நாகரூபம் சுயம்புவாக முகிழ்த்து பக்தர்களுக்கு அருளிவரும் தலம்தான் தும்பூர்தாங்கல் கிராமம். இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே அம்மன் எழுந்தருளிய விதமே அற்புதம்.

இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் திருவாமாத்தூர் என்னும் பழமையான திருத்தலம் உள்ளது. இங்குள்ள முத்தாம்பிகை சமேத  அபிராமேஸ்வரர் ஆலயம் தேவார மூவரால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்தது. அங்கே திருவட்டப்பாறை ஒன்று உள்ளது. ஆயிரம் சாட்சிகளை விசாரித்தும் உண்மை விளங்காத வழக்குகளை இந்தத் திருவட்டப்பாறை தீர்த்துவைக்கும் என்பர். சத்தியத்தை நிலைநாட்டும் பாறை. ஒரு சமயம், தன் தம்பியின் சொத்துகளை அபகரிக்க எண்ணிய அண்ணன் ஒருவன், இப்பாறைமுன் பொய்யுரைத்தான். பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். சில கல் தொலைவு சென்றதும், அவன் அம்மனை ஏமாற்றிவிட்டதாக நினைத்து, “திருவட்டப்பாறை தெய்வம் சீறிக்கொத்துமோ?’ என்று ஏளனமாகக் கேட்டான். அவ்வளவில் பூமியிலிருந்து வெளிப்பட்ட கருநாகம் ஒன்று சீறி அவனைக் கொத்தியது. அனைவரும் வியந்து நிற்க, அந்த நாகத்தின் தலை மட்டும் பூமிக்கு மேலே தெரியும் நிலையில் கல்லாக மாறியது. அந்த நாகம்மனை மக்கள் வழிபடத்தொடங்கினர்.

அவளே தும்பூர்தாங்கலில் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறாள்.

(இதன் வால் திருவாமாத்தூர் அம்மனிடம் உள்ளதாகக் கூறுகிறார்கள்).

ஆலயக் கருவறையில் நாகம்மன் எழுந்தருள, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டலட்சுமி மற்றும் நவகிரக சந்நிதிகளும் எழிலுடன் விளங்குகின்றன. கடந்த 16-9-2013 அன்று இங்கு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

“”இந்த நாகம்மனை உள்ளன்போடு வழிபட்டால், கண்ணிமைபோல நம்மைக் காத்தருள்வாள்” என்கிறார் ஆலய அர்ச்சகர் வெ. அபிராம சர்மா.

ஒலி அறிவியலும், மந்திரங்களும், எந்திரங்களும்..பல்லாயிரம் ஆண்டுகளாக, பலவாறு வரையப்பட்ட செம்பு தகடுகளை நாம் வழக்கத்தில் காண்கிறோம். கோவில் சிலை பிரதிஷ்ட்டை செய்யும்போது, அதனடியில் மந்திரங்கள் ஒலித்து பூஜிக்கப்பட்ட செப்பு எந்திர தகடு வைக்கப்படும். அவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மந்திரங்களின் மாற்றாக கருதப்படும். அதைப்பற்றி அடுத்த பதிவில்…

இங்கே தகடுகளின் மீது வரையப்பட்ட படத்தில் என்ன ஆச்சர்யம்? ஹான்ஸ் ஜென்னி என்ற அறிவியல் மேதை தான் கண்டுபிடித்த கருவியன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஒலியின் அதிர்வுகளைக்கொண்டு அதை ஒரு இரு பரிமாண வடிவமாக மாற்றினார். அப்போது நமது ஓம் மந்திரத்தை ஒலித்து சோதித்தபோது அது செப்பு தகடுகளில் வரையப்பட்டுள வடிவத்தை ஒத்து வந்தது.

அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட மந்திரத்திற்கும் தனித்தனியாக வரையப்படும் எந்திரங்களின் வடிவமும் அதன் ஒரு பரிமாண வடிவமே. TONOSCOPE என்ற கருவி இல்லாமலே மந்திர ஒலிகளின் வடிவத்தை நம் முனோர்கள் கண்டது எப்படி !!!

விடை தேடுவோம். முடிந்தவரை எல்லாரும் இப்பதிவை பகிர்ந்து எல்லோருக்கும் நமது வழிபாட்டு முறைகளின் அறிவியலை உணர்த்தி பயன்பெறுவோம்.


 

 

திருமாலின் பத்து அவதாரங்களில், அவர் கடைசியாக எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இதை பூரண அவதாரம் என்பர். “க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்’ என்கிறது சுலோகம். அவர் பகவத் சொரூபமே.

மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி ஆகியவை தசாவதாரங்கள் எனப்படுகின்றன.

ஸ்ரீமத் பாகவதம் 24 அவதாரங்களைக் குறிப்பிடுகிறது. சனகாதி முனிவர்கள் நால்வர், கூர்மம், வராகம், நாரதர், நரநாராயணர், கபிலமுனி, தத்தாத்ரேயர், ஆகுதி, ரிஷபதேவர், ப்ருகு, மத்ஸ்யம், தன்வந்திரி, நரசிம்மர், வாமனர், பரசுராமர், வியாசர், ராமர், பலராமர், கிருஷ்ணர், புத்தர், கல்கி ஆகியவையே அவை. இதில் கல்கி அவதாரமானது கலியுக முடிவில் எடுக்கப்படும்.

கம்சனால் சிறையில் அடைக்கப்பட்ட வசுதேவர்- தேவகி தம்பதி வேண்டிக் கொண்டபடி சிராவண மாதம் (சாந்த்ரமான கணக்குப்படி) கிருஷ்ணபட்ச அஷ்டமியில், நள்ளிரவு 12.00-க்கு  குழந்தையாக அவதரித்தார் கண்ணன். அவர் கர்ப்பவாசம் புரியவில்லை. அப்போது அவர், “”என்னை ஒரு கூடையில் வைத்து, கோகுலத்திலிருக்கும் நந்தகோபர் இல்லத்தில், யசோதையின் அருகே விட்டுவிடுங்கள். யசோதையருகே இருக்கும் பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்துவிடுங்கள்”  என்று சொன்னார்.

அதன்படியே வசுதேவர் குழந்தைக் கண்ணனுடன் புறப்பட, சிறைக்கதவுகள் தானாகத் திறந்தன. சிறைக்காவலர்கள் ஆழ்ந்து உறங்கினர். வெளியே மழைபொழிய, ஆதிசேடன் குடைபிடித்தது. யமுனை நதி இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. கண்ணன் கோகுலம் சேர்ந்தான். அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு வசுதேவர் சிறைச்சாலை திரும்பினார். கதவுகள் தாழிட்டுக் கொண்டன. காவலர்கள் கண்விழித்தனர்.

அப்போது வசுதேவர் கொண்டுவந்த குழந்தை வீறிட்டழுதது. அதைக்கேட்ட காவலர்கள் ஓடிச்சென்று கம்சனிடம் சொல்ல, கோபத்தோடு புறப்பட்டு வந்தான் கம்சன். “இந்த எட்டாவது குழந்தையால்தானே எனக்கு மரணமென்று அசரீரி கூறியது? இப்போதே இந்தக் குழந்தையைக் கொல்கிறேன்’ என்று சீறிய கம்சன், குழந்தையின் கால்களைப் பிடித்து மேலே தூக்கி வீசினான். மேலே சென்ற குழந்தை துர்க்கையாக மாறி, “மூடனே! உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறிடத்தில் இருக்கிறான்’ 

என்று கூறி மறைந்தாள். (இதனாலேயே நவராத்திரியின்போது துர்க்காஷ்டமி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.)

காலையில் கண்விழித்த நந்தகோபரும் யசோதையும் குழந்தையைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர். கோகுலத்தோர் யாவரும் கொண்டாடினர். ஆனால் அவர் பிறந்த மதுராவில் ஒரு கொண்டாட்டமும் இல்லை. ஏனெனில் அதற்கு வழியில்லை.

இதை ஆண்டாள் தன் திருப்பாவையில்,

“ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர…”

என்று பாடுகிறாள்.

கம்சனுக்கு குருவான கர்காச்சாரியரே நந்தகோபருக்கும் குரு. அவர் கிருஷ்ணாவதார ரகசியத்தை அறிந்தவர். அதனால்தான் அவர் குழந்தைக்கு “க்ருஷ்ண’ என்று பெயர் சூட்டினர். 

“க்ருஷ்ண’ என்பதன் பொருளை கர்க சம்ஹிதை கீழுள்ளவாறு கூறுகிறது.

க- கமலாகாந்த (லட்சுமியின் கணவன்).

ரு- ராமன்.

ஷ- அறுவகை ஐஸ்வர்யத்தின் தலைவன்.

ண- நரசிம்மன்.

அ- அக்னிதேவன்.

பிரம்மசவர்த்த புராணம் கூறுவதென்ன?

க்ருஷ்- பக்தி; ண- அடிமை. அதாவது அவன் பக்திக்கு- பக்தனுக்கு அடிமை.

க்ருஷ்- விதை; ண- எல்லாம். 

அவன் அனைத்துக்கும் வித்தாக- பரப்பிரம்மமாக இருப்பவன்.

க்- கமலத்தில் உதித்த பிரம்மன்.

ரு- ருத்ரன் அல்லது சிவன்.

ண- மகாவிஷ்ணு.

எனவே, படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று பிரதான செயல்களையும் செய்பவன் கண்ணன் என்கின்றன புராணங்கள்.

இனி கந்தனைக் காண்போமா….

சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் மற்றும் அதோமுகம் எனும் ஆறுமுகங்களிலிருந்து தீப்பொறி வெளிப்பட, அதை அக்னியும் வாயுவும் கொண்டு சென்று கங்கையில் (சரவணப் பொய்கையில்) இட, அங்கே ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக கந்தன் அவதாரம் நிகழ்ந்தது. பின்னர் அன்னை பார்வதி அணைப்பால் பன்னிரு கரங்களும் ஆறு தலைகளும் ஓருடலும் கொண்டவனானான் முருகன்.

கண்ணன் கண்டவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவன்.

முருகன்- முருகு என்றாலே அழகு. எனவே, இருவரும் மனதைப் பறிக்கும் அழகர்கள்.

கண்ணன் தன் அவதார நோக்கத்தின் பொருட்டு, கம்சன் அனுப்பிய எல்லா அசுரர்களையும் அழித்ததோடு கம்சனையும் அழித்தான்.

கந்தனும் அவ்வாறே சூரபத்மாதியர் அனைவரையும் அழித்தான்.

கண்ணனுக்கு தலைமேல் மயிற்பீலி என்றால், கந்தனுக்கு மயிலே வாகனம்.

கண்ணன் குழலேந்தியவன். அவன் குரலோசைக்கு மயங்காதார் இல்லை.

கந்தன் வேலேந்தியவன். அது ஞானவேல்- வீரவேல்- வெற்றிவேல். அந்த வேலையே முருகனாக எண்ணி வழிபடுவர்.

கண்ணன் யசோதைக்கும் அர்ஜுனனுக்கும் கர்ணனுக் கும் தன் விஸ்வரூபத்தைக் காட்டினான்; அதைக் காண ஞானக்கண்ணையும் அவர் களுக்கு அருளினான்.

கந்தனின் மகிமையை விவரிக்க நூறு ஆண்டுகள் போதாது என்று உமையிடம் கூறினார் சிவபெருமான். கந்தன் போர்க்களத்தில் சூரபத்மனுக்குத் தன் விஸ்வரூபத்தைக் காட்டி, அதைக் காண ஞானக் கண்ணையும் அருளினான்.

கண்ணன் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து, ஜெகத்குரு என்று பெயர் பெற்றான்.

கந்தன் தன் தந்தை ஈசனுக்கு பிரணவ உபதேசம் செய்து, தகப்பன்சாமி என பெயர்பெற்றான்.

கண்ணனுக்கு பாமா, ருக்மிணிபோல கந்தனுக்கும் வள்ளி, தேவசேனை என இரு மனைவிகள்.

இவ்வாறு கண்ணனுக்கும் கந்தனுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன.

கண்ணனின் அவதார நாளாம் ஸ்ரீஜெயந்தி தினத்தில் அவன் பாதம் பணிவோம். அவன் மருகனாம்  முருகனையும் பணிவோம். ஒன்றே தெய்வமென்று உணர்வோம்.

 

ஆடி மாதம்… அம்மன் தரிசனம்!

சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும் மாதம், ஆடி. பக்தர்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள். பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் வீறு கொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் பாம்பின் புற்றினூடேவும் சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும் நட்டு வைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள். ‘‘அதோ அந்த புற்றினுள் நான் தவமிருக்கிறேன். அங்கு வந்து என்னைப் பார், எனக்கு ஆலயம் உருவாக்கு’’ என்று பக்தர் கனவில் பேசியிருக்கிறாள். எந்த பிரச்னை ஆனாலும் ‘‘அம்மா, தாயே, மகாசக்தி, தயாபூரணி…’’ என்று கைகூப்பி குறை தீர அருள் கேட்டு கண்ணீர் மல்கி நிற்கிறது பக்தர் குழாம். பால்குடம் சுமந்தும் மஞ்சள் பூசியும் குங்குமம் சாற்றியும் பொங்கல் வைத்தும் வேப்பிலை சேலை அணிந்தும் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறது. ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமே ‘உன்னை இயக்கும் அதே சக்தி தான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன்’ என்பதுதான். எனவே, ஆடி மாதம் முழுவதும் அம்மனின் அருள் பெருக்கும் ஆலயங்களை தரிசிப்போம். குங்கும, சந்தன, மஞ்சளாக வாழ்வு கமழ்வதை அனுபவத்தில் உணர்வோம்.

சமயபுரம் மாரியம்மன்

வைணவி எனும் திருப்பெயரோடு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வீற்றிருந்தாள் அம்பிகை. உக்கிரமாக இருந்ததால் அங்கிருந்து கண்ணனூரிலுள்ள மேட்டின் மீது கோயில் கட்டி வைத்தார்கள். இந்த கண்ணனூர் அம்மன்தான் சமயபுரத்து மாரியம்மனாக இன்று பேரருளை பொழிகிறாள். விஜயநகர மன்னர் ஒருவர், ‘‘தென்னாட்டுப் போரில் வெற்றி பெற்றால் உனக்கு இங்கு கோயில் எழுப்புவோம்’’ என்று வேண்டிக்கொண்டு, அந்த மாரியின் அருளால் போரில் வெற்றியும் பெற்றார். உடனே, அம்மனை கோயிலுக்குள் கொலுவிருத்தி அழகு பார்த்தார். பரிவார தெய்வங்களாக விநாயகரும் கருப்பண்ணசாமியும் அமைந்தனர். சமயபுரம், தமிழகத்தின் முக்கிய சக்தித் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோயிலில் எப்போதும் பக்தர் மயம்தான். மாவிளக்கு ஏற்றுதல், மொட்டை போடுதல், உடல் உறுப்புகள் உரு காணிக்கை செலுத்துதல் என்று பலவித பிரார்த்தனைகளையும் இங்கு நிறைவேற்றுகிறார்கள். சமயபுரத்து மாரியம்மன் பேரருளும், பேரழகும் பொலிய வீற்றிருக்கும் மகாசக்தியாவாள். கைகூப்பி மனதில் நினைத்த கணத்திலேயே வரங்களை ஈனும் வரப்பிரசாதி. திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

வீரபாண்டி கௌமாரி

தேனி மாவட்டத்தில் முல்லையாறு பாய்ந்தோடும் பகுதியான வீரபாண்டியில் வீற்றிருக்கிறாள், கௌ மாரியம்மன். இந்த அன்னை, இந்த மாவட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். மதுரையை ஆண்ட மன்னன் வீரபாண்டியனுக்கு இரு கண்களும் பாதிப்படைந்தன. அரசன் பார்வை பெறவேண்டி ஈசனை நோக்கி தவமிருந்தான். ஈசனும் ‘‘புள்ளைநல்லூரில் கண்ணுடைய தேவி தவமிருக்கிறாள். அவளுக்காக கோயில் எழுப்பு’’ என்று அருளாணையிட்டார். மன்னனும் அதை ஏற்று கோயில் கட்டினான்; கண் பார்வை பெற்றான். வீரபாண்டி கௌமாரி என்று அன்று முதல் அம்மன் வழிபடப்பட்டு வருகிறாள். இன்றும் பார்வைக் கோளாறு உள்ளவர்கள் இத்தலத்தை நோக்கி வந்து நலம் பெறுகிறார்கள். தேனி-கம்பம் வழியில் தேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் வடபத%E