மகாமக விரதம்

 

மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில், பாரதத்திலுள்ள புனித நதிகள் யாவும் கலந்துகொள்கின்றன. இத்திருக்குளத்திலுள்ள இருபது தீர்த்தக்கிணறுகளில் மகத்தன்று புதிய ஊற்றுகள் ஏற்பட்டு, நீராடுபவர்களுக்கு புத்துணர்ச்சியையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றன.

பௌர்ணமியுடன்கூடிய இந்த மாசிமக நன்னாளில் புனித நீராடியபின் பிதுர்பூஜை செய்து அன்னதானம் அளித்தால், பிதுர்களின் ஆசியுடன் வளமான வாழ்வு கிட்டுமென்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இந்த மாசி மக நீராடல் குடந்தையில் மட்டுமல்ல; தமிழகத்திலுள்ள அனைத்து திருத்தலங்களிலும் தீர்த்தவாரி உற்சவங்கள் நடைபெறும். சில தலங்களில் தெப்போற்சவம் நடைபெறுவதையும் காணலாம்.

இந்த நாளில் கடலில் நீராடுவதும் போற்றப் படுகிறது.

மாசி மகத்தன்று பூமியில் காந்த சக்தி உண்டாவதால் நீர்நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தியையும் ஏற்படுத்து கிறது. இது இயற்கை தரும் கொடை. அச்சமயத்தில் கடலில் நீராடுவோரின் மனமும் உடலும் ஆரோக்கியத்துடன் திகழ்வதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் கூடும். இதை விஞ்ஞானமும் கூறுகிறது.

அதனால், கடற்கரையையொட்டிய திருத்தலங்களில் உள்ள கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு புராணக்கதை ஒன்று சொல்லப்படுகிறது.

பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்தார். அதனால் கடலரசன் திருமாலுக்கு மாமனார் ஆனார். லட்சுமியுடன் திருமால் வைகுண்டம் சென்றுவிட்டதால், “நாம் எப்போது மீண்டும் மகாவிஷ்ணுவைக் காண்பது’ என்று கவலைப்பட்டார் சமுத்திரராஜன். இதனையறிந்த மகாலட்சுமி திருமாலைப் பார்க்க, “நான் ஆண்டுக்கு ஒருமுறை கடற்கரைக்கு வந்து தரிசனம் தருகிறேன்’ என்று அருளினார்.

அந்த நாள்தான் மாசிமகம் என்கிறது புராணம். அதனால்தான் கடற்கரையையொட்டிய திருத்தலங்களில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களில் மாசி மகத்தன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. அந்தவகையில் சென்னை திருவல்லிக்கேணியில் அருள்புரியும் ஸ்ரீபார்த்த சாரதி கருடவாகனத்தில் புறப்பட்டு, தெற்கு மாட வீதி, துளசிங்கத் தெருவில் திரும்பி மெரீனா கடற்கரைக்கு அதிகாலைவேளையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார்.

இதேபோல் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் மூலவர் தீர்த்தபாலீஸ்வரரும் மாசி மகத்தன்று அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரியுடன் சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தம்பாலித்து அருளாசி வழங்குவது வழக்கம். மேலும், மயிலை கபாலீஸ்வரர், அம்பாள் ஸ்ரீகற்பகாம்பிகை ஆகியோரும், மயிலையிலுள்ள சிவாலயங்களில் அருள்புரியும் தெய்வங்களும் கடற்கரைக்கு வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்கள்.

நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் ஒன்று கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம். இங்குள்ள கடலில் நீராடுவது ராமேஸ்வரம் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடுவதற்கு சமம். இங்கு தலசயனப்பெருமாள் கிழக்குமுகம் நோக்கி சயனக் கோலத்தில் கோவில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீநிலமங்கை நாச்சியார்.

புண்டரீக மகரிஷி தாமரை மலர்களைப் பறித்து ஒரு கூடையில் வைத்துக்கொண்டு, பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பெருமாளுக்கு சமர்ப்பிக்க எண்ணி கடற்கரைக்கு வந்தார். மலர்க்கூடையை கரையில் வைத்துவிட்டு, கடல்நீரை இறைத்து விட்டால் பெருமாளைக் கண்டுவிடலாம் என்றெண்ணி, கைகளால் கடல்நீரை இறைக்கத் தொடங்கினார். அப்போது, “நாராயணா நாராயணா’ என்றபடியே ஸ்ரீமன் நாராயணன் முதியவர் வேடத்தில் அங்கே வந்தார். அவர் புண்டரீக மகரிஷியிடம், “”எனக்கு பசியாக இருக்கிறது. நீங்கள் ஊருக்குள் சென்று ஏதேனும் உணவு வாங்கிவாருங்கள். அதுவரை கடல்நீரை நான் இறைத்துக்கொண்டி ருக்கிறேன்” என்றார்.

சிறிது நேரத்தில் உணவு வாங்கிவந்த முனிவர் கடல் நீர் உள்வாங்கியிருப்பதைக் கண்டார். அந்த வயோதிகரைக் காணவில்லை. அந்த சமயத்தில் ஓர் ஒலி கேட்டது. அந்த திசையில் முனிவர் பார்த்தபோது, அங்கே முனிவர் கடற்கரையில் வைத்துச் சென்ற தாமரை மலர்கள் அடங்கிய கூடையிருந்தது. அதிலிருந்த மலர்களை தனது திருவடிகளில் சேர்த்துக்கொண்டு சயனக் கோலத்தில் சேவை சாதித்தார் ஸ்ரீமன் நாராயணன். திருமால், தன் திருக்கரங்களால் கடல்நீரைத் தொட்டு இறைத்ததனால் இத்தலம் அர்த்தசேது என்று போற்றப்படுகிறது.

முனிவருக்கு பெருமாள் அருள்புரிந்த நன்னாள் மாசிமகம் என்பதால், இத்தல பெருமாள் மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி காண்கிறார்.

அன்று இக்கடலில் நீராடி, தலசயனப் பெருமாளை தரிசித்தால் சகலபாக்கியங்களும் கிட்டுமென்பது ஐதீகம்.

புகழ்பெற்ற வைணவத் திருத்தலமான ஸ்ரீமுஷ்ணத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். இத்தலம் விருத்தாசலத்திற்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மூலவர் ஸ்ரீபூவராகர்; தாயார் ஸ்ரீஅம்புஜவல்லி.

இங்கு, மாசி மகத்தன்று பெருமாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். இத்தலத்திற்கு கிழக்கே சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் சமுத்திரம் உள்ளது. கடற்கரையிலுள்ள தைக்கால் என்ற கிராமத்திற்கு பூவராக சுவாமி புறப்பாடு நடைபெறும். அப்போது அந்த ஊரில் வசிப்பவர்கள் சீர்வரிசையுடன், மேளதாளங்களுடன் பெருமாளை எதிர்கொண்டு அழைப்பார்கள். பட்டு, பீதாம்பரம், மாலைகள் அணிவிப்பார்கள். வீதியில் எழுந்தருளிச் செல்லும்போது, நவாப் அடக்கம் செய்யப் பட்டிருக்கும் மசூதியின் மேற்புற வாசலின் எதிரில் பெருமாளை நிறுத்தி, சுவாமிக்கு மாலை அணிவித்து சர்க்கரை, பழங்கள் நிவேதனம் அளித்து மரியாதை செய்வார்கள். இதேபோல ஹாஜியா சமாதியின்மேல் மாலை அணி வித்து மரியாதை செலுத்திய பிறகு, கிள்ளை மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கே கடற்கரையில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறும்.

மாசி மகத்தில் மாமனாரான சமுத்திரராஜனுக்கு மகாவிஷ்ணு கடற்கரையில் காட்சி தந்ததுபோல, ஈசனும் மீனவர் தலைவனுக்கு மாப்பிள்ளையானதாக புராணம் கூறுகிறது. ஒரு காலகட்டத்தில் அம்பிகையானவள் மீனவ குலத்தில் அவதரிக்க நேர்ந்தது. இறைவன், அம்பிகையை மணக்க தகுந்த காலம் கனிந்தபோது, மீனவர் வேடமிட்டு அம்பிகையின் இருப்பிடத்திற்குச் சென்றார். அங்கு அவரால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிலங்கத்தை தானே அடக்கி மீனவர் தலைவனுக்குக் காட்சி தந்ததுடன், மீனவப் பெண்ணாக இருந்த அம்பிகையை மணம்புரிந்தார்.

மீனவர் தலைவன் ஈசனிடம், “தாங்கள் அடிக்கடி தரிசனம் தர அருள்புரியவேண்டும்’ என்று வேண்டவே, அதன்படி ஈசன், “மாசி மகத்தன்று கடல்நீராட வருவேன்’ என்று அருளினார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி. இத்தலம் காரைக்காலிலிருந்து பொறையார் செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு அருகில் இன்னொரு தலம் உள்ளது. அது திருவேட்டங்குடி என்று பெயர் பெற்றிருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் திருமேனியழகர்;

அம்பாள் சாந்தநாயகி. சம்பந்தர் பாடிய திருத்தலம். இத்தலத்திற்கு அருகிலுள்ள கடற்கரைக்குதான் ஈசன் மாசி மகத்தன்று மீனவ வேட மூர்த்தியாகவும் அன்னை மீனவப் பெண்ணாகவும் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். அப்போது காளிக்குப்பம், மண்டபத்தூர், அக்கம்பேட்டை ஆகிய கடலோர ஊர்களில் வசிக்கும் மீனவர்கள் தங்கள் இன மாப்பிள்ளையாக வரும் ஈசனுக்கு சீர்வரிசைகள் அளித்து சிறப்பு வழிபாடுகள் செய்வர்.

மீனவர் தலைவனுக்கு ஈசன் மாப்பிள்ளை யானதுபோல், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரி ராஜப் பெருமாளும் “மாப்பிள்ளை’ அந்தஸ்தை மாசி மகத்தில் பெறுகிறார்.

நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியிலுள்ளது திருப்புகலூர். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருத்தலம் திருக்கண்ணபுரம். மூலவர் சௌரிராஜப் பெருமாள்; தாயார் கண்ணபுரநாயகி. மாசி மகத்தையொட்டி, கிழக்குக் கடலிலுள்ள கருடபர்வதத்திற்கு காட்சி தரும் வகையில், திருமலைராயன் பட்டினக் கடற்கரையில் எழுந்தருள்கிறார் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள். அப்போது அவருடன் சுற்றுவட்டாரக் கோவில்களிலுள்ள பெருமாள்களும் வீதியுலா வருவார்கள்.

திருக்கண்ணபுரத்திலிருந்து அதிகாலையில் தங்கப் பல்லக்கில் புறப்படும் சௌரிராஜப் பெருமாள், திருமருகல் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச் செல்வார். வழியெங்கும் வெண்பட்டு மற்றும் ரோஜா மாலையுடன் பக்தர்கள் காத்திருப்பார்கள். அங்கே திருமலைராயன் பட்டினம் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், ஸ்ரீரகுநாதப் பெருமாள், ஸ்ரீவிழிவரதராஜப் பெருமாள், நிரவிஸ்ரீ கரிய மாணிக்கம் பெருமாள், காளைக்கோவில்- பத்து ஸ்ரீநித்தியப்பெருமாள் முதலான பெருமாள்கள் காத்திருப்பார்கள். பிறகு, அனைவரும் ஒன்றுகூடி மாலை 5.00 மணிக்கு கடலில் தீர்த்தவாரி காண்பர். இதை ஒரு பெருந்திருவிழாபோல கொண்டாடுவர்.

ஒருசமயம், இந்திரனின் நண்பனான உபரிசிரவசு எனும் வேந்தனுக்கு திருமகள் மகளாக அவதரித்தாள். அப்போது திருமகள் பெயர் பத்மினி. இந்த பத்மினியை திருமால் திருமணம் செய்துகொண்டதால், ராமபிரானை மிதிலை நகரத்து மக்கள் மாப்பிள்ளையாகக் கொண்டாடி மகிழ்ந்ததுபோல், திருமலை ராயன் பட்டினத்து மீனவர்கள் ஸ்ரீசௌரிராஜப் பெருமாளை “மாப்பிள்ளை’ என்று அழைத்து சீர்வரிசைகள் செய்து மரியாதை செய்கின்றனர்.

ஈஸ்வரனும் பெருமாளும் இணைந்து மாசி மகத்தில் தீர்த்தவாரி காணும் திருத்தலங்களும் உள்ளன.

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திருக்கோவிலூர் ஸ்ரீஉலகளந்த பெருமாள், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் இருவரும் ஒன்றுகூடி தீர்த்தவாரி காண்பது தனிச்சிறப்பாகப் போற்றப்படுகிறது. இதே போல புதுவையில் மாசி மகத்தன்று நூற்றுக் கணக்கான ஆலயங்களில் அருள்பாலிக்கும் தெய்வங்கள் வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருள்வார்கள். அன்று கடற்கரை திருவிழா கோலம் காணும். அனைத்து சுவாமி களும் வந்ததும், தீர்த்தவாரி விழா நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, கடலில் நீராடி புனிதம் பெறுவர்.

நாகை மாவட்டம், பொறையார் தலத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீகோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. மூலவராக ஸ்ரீகோதண்டராமர் அருள்புரிய, சயனக் கோலத்தில் ஸ்ரீரங்கநாதரும் காட்சிதருகிறார். அவருடன் ஸ்ரீதேவியும் எழுந்தருளியுள்ளார். அடுத்த சந்நிதியில் பூதேவி சமேதராக ஸ்ரீவரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார்.

இத்தலத்தில் மாசி மக நன்னாளில் தீர்த்தவாரி மிகச் சிறப்பாக போற்றப்படுகிறது. அந்நாளில் பொறையார் ஸ்ரீகோண்டராமர், அதே திருத்தலத்திலுள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத விஸ்வநாதர், தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பெருமாள் ஆகியோர் சூழ்ந்துவர, தரங்கம்பாடி கடற்கரையில் தீர்த்தவாரி விழா மூன்று தலத்து உற்சவமூர்த்திகளுடன் நடைபெறும். ஒரே சமயத்தில் இவர்களை வழிபட பாவங்கள் நீங்கி புனிதம் சேரும் என்பர்.

சிவபெருமானும் திருமாலும் கடற்கரையில் தீர்த்தவாரி காண்பதுபோல், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலிலும் மாசி மகத்தன்று தீர்த்தவாரி விழா நடைபெறும். இதனையொட்டி ஸ்ரீசெந்திலாண்டவர் மற்றும் ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இந்த விழாவினையொட்டி நடைபெறும் உருகுசட்ட சேவை பிரபலம். மேலும், பச்சை சார்த்துதல், சிவப்பு சார்த்துதல், வெள்ளை சார்த்துதல் என விதவிதமான அலங்காரங்களில் அருளும் செந்தூர்முருகன், மாசி மகத்தன்று கோவில் எதிரேயுள்ள கடற்கரையில் தீர்த்தவாரி காண்பார். அப்போது பக்தர்களும் நீராடி புனிதம் பெறுவர்.

பொதுவாக மாசிமகத்தன்று கும்ப கோணத்தில் அமைந்துள்ள அமிர்தகுளமான மாமாங்கக் குளத்தில் நீராடுவது சிறப்பு. அதுவும் இந்த வருடம் மகாமகம் என்பதால் மிகவும் போற்றப்படுகிறது. அங்குசெல்ல இயலாதவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு சகல பாக்கியங்களைப் பெறலாம்.

 


“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’

என்றார் அடியார். எந்நாட்டவருக்கும் உள்ள இறைவன் ஒருவனே என்றாலும், தென்னாட்டில்தான் நாயன்மார்களும், ஆழ்வார்களும் அவதரித்து இறைவனைப் பாடிப்பாடி உள்ளம் உருகி அவனோடு ஐக்கியமானார்கள்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று பல பெருமைகளையுடைய ஆலயங்கள் பல நம் தென்னகத்தில் உண்டு. ஆலயங்களிலுள்ள மூர்த்திகளை தரிசிப்பதாலும், புண்ணிய தடாகங்களிலும் நதிகளிலும் நீராடுவதாலும் நமது பாவங்கள் ஒழிந்து, புத்திசுத்தியும், சித்தசாந்தியும், புண்ணியமும் கைகூடும் என்பது இந்து மதத்தில் காணும் ஒரு சிறப்பான கொள்கையாகும்.

இன்றளவும் கோடானுகோடி மக்கள் காசி யாத்திரை சென்று கங்கா ஸ்நானம் செய்துவருவதைக் காண்கிறோம். மேலும் கும்பமேளா, மகாமகம் போன்ற பல ஆண்டு களுக்கு ஒருமுறை வரும் விழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடி நீராடுவதைப் பார்க்கிறோம்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் இவ்வாண்டு மகாமக விழாவைக் காணும் பேறு நமக்குக் கிட்டியுள்ளது.

தேவகுருவாகிய பிரகஸ்பதி சிம்ம ராசியில் நிற்க, சிம்ம ராசிக்கு உடையவராகிய சூரியன் அதற்கு ஏழாம் இடமாகிய கும்ப ராசியில் சேர, சந்திரன் குரு பகவானோடு சேர்ந்து சமநோக்காக நிற்கும் பௌர்ணமியானது மாசி மாதத்தில் அமைவது சிறப் பாகும்.

மகாமகம் என்னும் மகோன்னதமான விசேஷம் நடக்கும் திருக்குடந்தை பற்றி புராண வரலாறு வாயிலாக நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். யுக முடிவில் இந்த உலகமானது பிரளயத்தால் அழியும் காலம் சமீபித்தது. இதை சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மா அறிந்து, உலகம் அழிந்தபின் மீண்டும் அதை எப்படி சிருஷ்டிப் பது என்று யோசித்து எதுவும் தோன்றா மல் கவலையடைந்தார். இறுதியில் கயிலை சென்று பரமேஸ்வரனைப் பணிந்து தன் கவலையைச் சொன்னார். அதைக்கேட்ட சிவபெருமான், “”பிரம்மதேவரே, கவலை வேண்டாம். கொஞ்சம் மண்ணெடுத்து அதை அமுதமிட்டுப் பிசைந்து ஒரு கலசம் செய்து, அந்த கலசத்தில் அமுதம் நிரப்பி, அதில் சிருஷ்டி பீஜத் தைப் புதைத்து, சுற்றிலும் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலியவற்றை வைத்து, பின்னும் அமுதம் ஊற்றி, அந்த கலசத்தை மகாமேருவின் தென்பாகத் தில் ஒரு உறியில் வைத்து விடுங்கள். பிரளயம் உண்டாகும் காலத்திலும் அந்த உறி அழியாது. அந்த கலசமே பழையபடி இந்த உலக சிருஷ்டிக்குக் காரணமாகும்” என்று சொன்னார்.

பிரம்ம தேவனும் மகிழ்ச்சியடைந்து ஈசன் சொன்னபடியே கலசம் செய்து அமுதம் நிரப்பி சிருஷ்டி பீஜத்தை நாட்டி, அதன்மீது மாவிலை, தேங்காய் வைத்து, பூணூல், தர்ப்பை சாற்றி, வில்வம், சந்தனம் முதலியவற்றால் பூஜை செய்து மேருவின் தென்பாகத்தில் உறிகட்டி வைத்தார்.

சிறிது காலத்தில் பிரளயம் உண்டாகி உலகமே அழிந்துவிட்டது. பிரம்மன் கட்டிய உறியும், கலசமும் மட்டும் அழியாமல், பிரளய நீரிலேயே மிதந்து தென்பாகமாக நெடுந்தூரம் சென்று கும்பகோணத்திற்கு அருகே வந்தது.

அக்கலசத்தில் வைக்கப்பட்டிருந்த மாவிலையும் தர்ப்பையும் கீழே விழுந்தன. பிரளயம் அடங்கியபின் அந்த மாவிலை ஒரு வன்னி மரமாகவும், தர்ப்பை அந்த மரத்தடியில் லிங்க வடிவமாகவும் தோன்றியது. அந்த இடத்திற்கு சமிவனம் என்றும், லிங்கத்திற்கு சமிவனேசர் என்றும் பெயர் உண்டாயிற்று.

அமுத கலசம் இந்த தலத்திற்கு அப்பால் சிறிது தூரம் சென்று அக்கினி மூலையில் தங்கிற்று. அப்போது அங்கே பிரம்ம தேவனும் வந்துசேர்ந்தார். இந்த கலசம் வைத்திருந்த உறி சற்று கீழ்பாகத்தில் விழுந்து ஒரு சிவ க்ஷேத்ரம் ஆயிற்று. அது தற்பொழுது சோமநாதர் கோவில் என்று வழங்குகிறது. கலசத்தின்மேல் இருந்த தேங்காய் அக்கினி மூலையில் விழுந்து பதிந்து ஒரு லிங்க வடிவமாயிற்று. அந்த லிங்கம் நாரிகேள லிங்கம் எனப் பெயர் பெற்றது.

உறி விழுந்த இடத்திற்கு சிறிது தூரத்திற்கு அப்பால் வில்வம் விழுந்து வில்வவனமாயிற்று. அந்த இடமே இப்பொழுது நாகேசுவரர் கோவில். கலசத்தின்மேல் சாற்றியிருந்த பூணூல் ஓரிடத்தில் விழுந்தது. அது ஒரு லிங்கமாகி உபவீதேசர், கௌதமேசர் என்று பெயர் பெற்றுள்ளது. இதன்பின் சிவபெருமானே கலசத்தைத் தேடிக்கொண்டு திருவிடைமருதூர் வந்தார். ஈசன் மேற்றிசை நோக்கிப் பார்க்கும்போது கலசம் தெரிந்தது. அதிலிருந்த அமுதம் எல்லா பக்கமும் வழிந் தோட வேண்டுமென்று கலசத்தை ஒரு அம்பால் எய்தார்.

உடைபட்ட கலசத்தின் விளிம்பு ஆகாயத்தில் கிளம்பி ஒரு யோசனை தூரத்தில் விழுந்து லிங்கமாயிற்று. அந்த இடம் இப்பொழுது குடவாயில் என்ற தலமாக உள்ளது. சிவபெருமான் அம்பு பிரயோகித்த இடம் பாணபுரி என்றும், ஈசன் பாணபுரீஸ்வரர் என்றும் அருள்பாலித்து வருகிறார்.

இதன்பிறகு கலசம் குப்புறக் கவிழ்ந்து, அதிலிருந்த அமுதம் சுற்றிலும் பெருகி ஐந்து யோசனை தூரம் சென்றது. அது இரண்டு இடத்தில் தேங்கி இரண்டு அமுதவாவிகளாயின. அவை இரண்டும்தான் தற்பொழுது மகாமகக் குளம், பொற்றாமரைக் குளமென்று விளங்குகிறது.

மீண்டும் சிவபெருமான் இந்த இடத்தில் வந்து அமுதம் கலந்த மண்ணைப் பிசைந்து லிங்கமாக்கி, அந்த லிங்கத்தை உடைந்த கலசத்தின் மேல் வைத்து பூஜித்து பின் அந்த லிங்கத்துள் மறைந்து அருளினார்.

அதுவே கும்பேஸ்வரர். இந்த லிங்கம் கும்பம்போன்றே உள்ளது. உடைந்த கலசத்தில் அமுதம் இட்டு மண்ணால் பிடிக்கப்பட்டதால் தங்கக் கவசம் சாற்றியே அபிஷேகம் நடக்கிறது.

இதன்பின் பிரம்மன் முதலான தேவர்கள் வந்து, கும்பேஸ்வர லிங்கத்தின் இடது பாகத்தில் உமாதேவியை எழுந்தருளச் செய்து, உலகத்திற்கு மங்களம் உண்டாக வேண்டுமென்று அம்மனுக்கு மங்களாம்பிகை என்ற திருநாமம் இட்டு பூஜித்து உற்சவம் நடத்தினார்கள். ஆதிகும்பேஸ்வரர் சமேத மங்களாம்பிகை இன்றும் கும்பேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு விநாயகர், சுப்ரமண்யர், சூரியன், சந்திரன், சப்தமாதர்கள், கிராதமூர்த்தி, வீரபத்ரர், அபிமுகேஸ்வரர், லக்ஷ்மிநாராயணன், நவநீத விநாயகர் போன்ற தெய்வமூர்த்தங்கள் உள்ளன.

இந்த சம்பவங்கள் அனைத்தும் மாசி மாதத்தில் நடந்தன. பிரம்மதேவன் மாசி மாத மக நட்சத்திரத்திரத்தன்று சுவாமியை எழுந்தருளச் செய்து, மகாமகக் குளத்தில் மஞ்சனம் செய்வித்துப் பூஜித்தார். அதுமுதல் மாசி மகம் விசேஷமாகக் கொண்டாடப் பட்டுவருகிறது.

இந்த ஆண்டு 22-2-2016-ல் நடக்கவிருக்கும் மகாமகத்துக்கு குடந்தை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. திருக்குடந்தையிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் குடமுழுக்கு விழா நடந்தேறியுள்ளது. அரசுத் துறையும் திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறது. பக்தர்கள் பொறுமையுடன் சென்று, யாருக்கும் இடையூறு நேராத வண்ணம் நீராடி இறையருள் பெறவேண்டும்.மகாமக சிறப்புக் கட்டுரை-5
கே. குமார சிவாச்சாரியார்

புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் நாம் செய்கின்ற பாவங்கள் முழுவதும் விலகுகின்றன என்ற நம்பிக்கை முற்காலத்திலிருந்தே உள்ளது. மாணிக்கவாசகப் பெருமான் தீர்த்த நீராடலின்போது சொல்லவேண்டிய பாடலைத் தன் திருநாவால் பாடியுள்ளார். இதனை மகாமகத் தீர்த்தவாரி சமயத்தில் பாடிவிட்டு முழுகியெழுவது புண்ணியம் பல சேர்க்கும்.

“ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கழல்கள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோ ரெம்பாவாய்!’

மகாமக விரதம்

இந்த விரதத்தை ஐந்து தினங்கள் கடைப் பிடித்தல் வேண்டும். முதல் நாளன்று கன்யா தீர்த்தத்தில் நீராடுதல் முறையாகிறது. பிறகு கலசம் வைத்து வருணனை ஆவாஹனம் செய்து, புண்யாகவாசனம் செய்து, கும்பகோணத்தில் தங்குமிடத்திலிருந்து நீர் தெளித்துக் கொண்டு, மூன்று முறை (ஆசமனம்) நீர் அருந்துதல் வேண்டும். குரு பூஜை நடத்தி, பசுவின் பால், தயிர், நெய், கோமயம், கோசலம் கலந்து, சிவனது பஞ்ச பிரம்ம மந்திரம் (ஈசானம் முதல் அகோரம் வரை) கூறி உட்கொள்ளவேண்டும். ஒருவேளை மட்டும் உணவுண்டு தரையில் படுத்து உறங்குதல் வேண்டும்.

இரண்டாவது நாள்: அதிகாலை பிரம்மமுகூர்த்த காலத்தில் எழுந்து நீராடி, சிவன், விஷ்ணு ஆலயங்களை தரிசனம் செய்து அன்னதானம் செய்தல் வேண்டும்.

மூன்றாம் நாள்: காலையில் கன்னியா தீர்த்தத்தில் நீராடி, தீர்த்தத்திலுள்ள தேவதைகளை வணங்கி, நவகன்னியர்களை பூஜை செய்து, அரசமரப் பிரதட்சணம் செய்யவேண்டும். பின்னர் ஒன்பது கன்னிப் பெண்களை அழைத்து ரவிக்கைத்துணி, குங்குமம், தாம்பூலம் தந்து அன்னதானம் செய்யவேண்டும். தொடர்ந்து சாரங்கபாணி, சக்கரபாணி, கும்பேசுவரர் சந்நிதிகளுக்குச் சென்று ஆலய வலம் வந்து வழிபட்டபிறகு, ஒருவேளை மட்டும் உணவுண்ணல் வேண்டும்.

நான்காம் நாள்: நமது முன்னோர்களை வணங்கி சங்கல்பம் செய்து ஆலய தரிசனம் செய்துவிட்டு பால், பழம் உண்ணவேண்டும். விரதமிருப்பதால் அதிகாலையில் குளிக்கும் முன்பு தலைமுடி எடுத்துக்கொண்டு முகக்ஷவரம் செய்துகொள்ளலாம்.

ஐந்தாவது நாள்: அதிகாலை எழுந்து நீராடியபின் பித்ருக்களை நினைத்து மகாசங்கல்பம் (அன்றைய நாள், நட்சத்திரம், திதி சொல்லி) செய்துவிட்டு, மகாமகப் புனித நீராடல் செய்வதற்கு முன் பிரதான வழிபாடாகிய தீர்த்தத்தால் அர்க்கிய தர்ப்பணம் விடுதல் வேண்டும். இங்கே பதினாறு தலைமுறை பித்ருக்களை நினைத்து பொறுமையாக தீர்த்த சிரார்த்த முறை செய்யலாம். தொடர்ந்து சூரியனை வணங்கிவிட்டு மகாமகத் தீர்த்தக் குளத்திற்குள் இறங்கி, கும்பேஸ்வரர் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு புனித நீராடல் செய்யவேண்டும். இப்படி மகாமக விரதமிருந்து இந்நாளில் வழிபடுவோர் சகல போகபாக்கியங்களையும் அடைவர் என்பது நீராடல் விதி.

கும்ப லிங்க துதி!

“திருக்குடந்தை’ என்று புகழப்படும் கும்பகோணத்தின் சிறப்பை அறிந்த பிரம்மதேவர், மகாமகத் தீர்த்தத்தில் நீராடி கும்பேஸ்வரரை துதித்த அபூர்வ துதி இது. இதைச் சொல்லி வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் குரு, சூரியன், சுக்கிரன் முதலிய கிரகங்கள் தோஷ மடைந்திருந்தால் அவை விலகும். அற்பாயுள் தோஷம் நீங்கி, ஆரோக்கியம், புத்திரலாபம் போன்ற நலன்கள் கிடைக்கும்.

ஸ்ரீகுருப்யோ நம:
நமோ நம: காரண காரணாய
ஸ்ரீமத் ஸுதா கும்பக விக்ரஹாய/
கல்யாண ஸாந்த்ராய குணாகராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

பீமாய பீமாதிஹராய சம்பவே
நாகாய சாந்தாய மநோஹராய/
மஹாஜடாஜுட தராய பூதயே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸர்வாகமாம்நாய சரீரதாரிணே
ஸோமார்க்க நேத்ராய மஹேஸ்வராய/
யக்ஞாய யக்ஞேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

காத்யாயனீ காமித தாயகாய
துர்க்கார்த்த தேஹாய க்ருதாகமாய/
காலாய காலேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

விபூதி தாநேக சரீர தாரிணே
கல்பாய கல்பாந்தகராய சம்பவே/
விஸ்வாய வைஸ்வாநர லோசநாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

மாயா ப்ரபஞ்சாய மனோஹராய
மாயா கடேசாய மஹாதிஹாரிணே/
மாயா ப்ரபஞ்சைக நிதான மூர்த்தயே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

போகீந்த்ர ஸம்பூஜித விக்ரஹாய
போகீந்த்ர பூஷாய பவாந்தகாய/
ஸ்ரீபாரதி சங்கர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

தாம்ராய சாமீகர பூஷிதாய
ஸ்ரீசோம கோடீர விபூஷிதாய/
ஸமஸ்த ஸத்க்ஷேத்ர கலாவராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸ்ருஷ்டி ஸ்திதி த்வம்ஸன காரணாய
ஸ்ரீஸ்ருஷ்டி பீஜாங்க மனோகராய/
ஸச்சாஸ்த்ர வேதாந்த களேபராய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஷட்வர்க்க ஸம்பேதன தீக்ஷிதாய
ஷடானனாதித்ய பலப்ரதாய/
ஸமஸ்த மந்த்ரார்த்த நிதான ரூபிணே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

கும்போத்பவ ப்ரமுக பூஜித விக்ரஹாய
வீராய வீராந்தகராய மாயினே/
பக்தேஷ்டதான நிபுணாய பவாப்தி போத்ரே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

மூலாய மூலாகம பூஜிதாய
பாதாள மூலாய நிதீஸ்வராய//
நித்யாய ஸித்தேஸ்வர பூஜிதாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

ஸமஸ்த கல்யாண வரப்ரதாய
ஸமஸ்த கல்யாண நிதான மூர்த்தயே/
ஸ்ரீமங்களாம்பார்ச்சித பாதபத்மிநே
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

லக்னாதி பேசாய க்ரஹார்ச்சிதாய
ஸ்ரீகாமதேநு சுரஸங்க சுபூஜிதாய/
பஞ்சாநநாய பரமார்த்த நிதர்ஸகாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

தீர்த்தாதி நாதாய பலப்ரதாய
பலஸ்வரூபாய பலாங்கதாரிணே/
ஸ்ரீமந்த்ரபீடேஸ்வரீ வல்லபாய
ஸ்ரீகும்பலிங்காய நமசிவாய//

பஞ்ச குரோச தல யாத்திரை: மகாமகப் புனித நீராடலுக்கு முன்பாக விரதமிருந்து யாத்திரை சென்று வரவேண்டிய ஐந்து தலங்களாக திருவிடை மருதூர், சுவாமிலை, தாராசுரம், திருநாகேஸ்வரம், கருப்பூர் என்னும் திருப்பாடலவனம் ஆகியவை விளங்குகின்றன.

அஷ்டாதச தல யாத்திரை: பதினெட்டு சிவஸ்தலங்களுக்கு மகாமகக் காலத்தில் யாத்திரை சென்றுவருதல் முக்கியம். அவை:

திருவிடைமருதூர் என்ற மத்யார்ஜுனம், திருப்புவனம், அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம், செம்பியவரம்பல் (அய்யாவாடி), சிவபுரம், சாக்கோட்டை, மருதாநல்லூர், பட்டீஸ்வரம், திருச்சக்திமுற்றம், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, இன்னம்பூர், திருப்புறம்பியம், கொட்டையூர், கருப்பூர், வாணாதுரை.

பஞ்ச குரோச தலங்களையும், அஷ்டாதச ஸ்தானம் என்னும் தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பவர்கள், பூமியை வலம் வந்த பலனை அடைவார்கள் என்பது ஐதீகம். பழங்கால கல்வெட்டுச் செய்திகளின்படி இத்தகவல் உள்ளது. இடைச்செருகலாக வரும் மடங்கள், பீட தரிசனம் போன்றவற்றை நம்பிச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஸ்ரீ மங்களாம்பிகை சடாதார மங்கள துதி

ஸமஷ்டி மந்த்ர ரூபாம் தாம்
மஹாயாக ப்ரியாம் சிவாம்/
மூலதார ஸ்திதாம் வந்தே
அமிர்தேச ப்ரியாம் தலாம்//

மங்களாம் மாத்ருகாம் தேவீம்
ஸர்வ மங்கள ரூபிணீம்/
ஸ்வாதிஷ்டான ஸ்திதாம்
வந்தே ஸர்வ மங்கள தாயிம்//

ஸர்வகாமப்ரதாம் திவ்யாம்
ஸர்வக்ஞாம் ஞானதாம் சுபாம்/
துர்கடார்த்த ப்ரதாம் வந்தே
மணிபூரக வாஸினீம்//
கணபீத ஹராம் காளீம்
காருண்யாம்ருத ரூபிணீம்/
கணாம்பிகா மஹம் வந்தே
அநாஹத நிவாஸினீம்//
ஸர்வரோக ஹரீம் கௌரீம்
ஸர்வ தாரித்ரிய நாஸினீம்/
ருக்விபேதிநீ மஹம் வந்தே
விசுத்தே ஸ்தேதித காமிநீம்//
ஸர்வைஸ்வர்ய ப்ரதா தாத்சீம்
ஸர்வானந்த ப்ரதாயினீம்/
ஸர்வேப்ஸித ப்ரதாம் வந்தே
ஆக்ஞா சக்ர நிவாஸிநீம்//
மங்களம் தேஹி மந்த்ரேசி
சர்வ மந்த்ர ஸ்வரூபிணி/
கும்பேச வாமபாகஸ்தே
கும்பகோண நிவாஸினி//
மங்களாம்பிகா துதி நித்யம்
ய படேத் பக்தி மாந்நர:/
சர்வ சௌபாக்ய மவாப்னோதி
ஸகல கார்ய சித்திதம் ஸதா//

துதியின் சிறப்பு: மங்களாம்பிகை தேவி 51 அட்சரங்களுடன் கூடிய சக்தி வடிவினளாகவும், மகாயாகம் என்று வர்ணிக்கப்படுகின்ற ஸ்ரீவித்யா பூஜையில் விருப்பம் கொண்டவளாகவும், அமுதேச சிவபெருமானின் அன்புக்குப் பிரியமானவளாகவும், 64 கலைகளோடு கூடிய மூலாதார சக்கரத்தில் வீற்றிருப்பவளாக வும் விளங்குகிறாள்.

சர்வமங்கள ரூபிணியாகவும், ஞானத்தை அளிப்பவளாகவும், நமது மனவிருப்பத்தை அறிந்து கிடைப்பதற்கரிதான பொருளைத் தருபவளாகவும், நோய்கள், தோஷங்களை அகற்றி, தரித்திரங்களை விலகச் செய்து, நாம் விரும்புகிற அனைத்து ஐஸ்வர்யங்களையும் அருள்பவளாகவும் காட்சி தருகிறாள். மந்திர அட்சரங்கள் எல்லாம் அவளுக்குள் ஒடுங்கியிருப்பது போற்றுதலுக்குரியது என இத்துதி அம்பிகையின் சக்தியை எடுத்துச் சொல்கிறது. மகாமகத் திருவிழா நாளில் இந்த சக்தியுள்ள சடாதாரத் துதியைக் கூறுபவர்க்கு சர்வ வல்லமையும் கூடுவது சாத்தியமே.