தைப்பொங்கல்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றபடி, இயற்கையோடு இயைந்த வழிபாடாக- மக்களின் மகிழ்ச்சி விழாவாகக் கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். கண்கண்ட தெய்வமான சூரியனை வழிபடுவது இதன் சிறப்பம்சமாகும்.

உத்ராயன காலமான தை மாத அமாவாசைக்குப்பின் வரும் ஏழாம் நாளான சப்தமி திதியை, ரதசப்தமி என்று போற்றுவர். இந்நாளில்தான் சூரியன் அவதரித்தார் என்கிறது புராணம்.

ஸ்வேத வராக கல்பகாலத் தொடக்கத்தில், விராட் புருஷனுடைய கண்களிலிருந்து சவித்துரு (சூரியன்) அவதரித்தார் என்கிறது வைவஸ்சதமன் என்னும் மந்திரநூல். உலகம் தோன்றியதும் “ஓம்’ என்ற ஒலி எழுந்தது. அதிலிருந்து சூரியன் தோன்றினார் என்கிறது சூரியபுராணம்.

பிரபவ ஆண்டு, மகா சுக்ல சப்தமி, விசாக நட்சத்திரத்தில் கச்யபரின் பத்தினி அதிதியிடம் தோன்றிய பிண்டத்திலிருந்து பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். அவர்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு, சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களுடன் உலாவருகிறார் என்கிறது சாம்பபுராணம்.

முதலில் இருளான அண்டம் தோன்றியது.

அதன் மத்தியிலிருந்து, பிரம்மன் அதைப் பிளந்தார். அப்போது “ஓம்’ என்ற ஒலி உண்டாயிற்று. அதிலிருந்து பூ: புவ: சுவ: எனும் வியாவிருதி திரயம் உண்டாயிற்று. பின்பு, ஓங்காரத்தால் சூட்சும உரு உண்டாயிற்று. அதுவே சூரியன் என்கிறது பிரம்மபுராணம். சிவபெருமானின் வலக்கண் சூரியன் என்றும், இடக்கண் சந்திரன் என்று கூறுகிறது சிவபுராணம்.

மகாவிஷ்ணுவே சூரிய நாராயணராக சித்தரிக்கப்படுகிறார் என்கிறது ரிக்வேதம்.

“நானே சூரியனாகத் திகழ்கிறேன்’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார். ஆரோகன், பிராஜன், படான், பதங்கன், ஸ்வர்னரன், ஜோதிஷிமான், லிபாசன், காஸ்யபன் என்று எட்டு சூரியன்கள் உண்டு என்றும்; இதில் எட்டாவதான காஸ்யபனைச் சார்ந்தே இதர சூரியன்கள் அமைந்துள்ளன என்று விவரிக்கிறது முண்டக உபநிடதம்.

அறிவியல் கூற்றின்படி, பல்லாயிரங்கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பிரபஞ்சத்தில் மேகம் போன்ற தோற்றத்துடன் வேகமாகச் சுழலும் ஓர் தீப்பிழம்பு இருந்தது. காலப்போக்கில், அதிலிருந்து சில துண்டுகள் சிதறின. அவ்வாறு சிதறிய துண்டுகள் நாளடைவில் குளிர்ந்து திண்மையான கோள்களாயின. இந்தப் பிழம்பின் மையப் பகுதியே சூரியனாகும்.

பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் சூரியன். பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் சூரியன் உள்ளதாம். நம் பூமியைப்போல் 12,000 மடங்கு மேற்பரப்பும், 13,00,000 மடங்கு கன அளவும் உடையது என்கிறது அறிவியல்.

சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைந்தாலும், அதன் கோணமானது ஆறு மாதங்களுக்கு சற்று வடக்குநோக்கி நகர்ந்தும், ஆறு மாதங்களுக்கு சற்று தெற்குநோக்கி நகர்ந்தும் இருக்கும். இவ்வாறு தெற்கு- வடக்காக சூரியன் நகர்வதைக் குறிப்பதே தட்சிணாயனம், உத்தராயனம்.

அயனம் என்றால் பயணம். தை மாதம் தொடங்கி ஆனி மாத வரையிலான ஆறு மாத காலம் உத்தராயனம். ஆடி தொடங்கி மார்கழி வரையிலான ஆறு மாதம் தட்சிணாயனம். உத்தராயன புண்ணிய காலத்தின் முதல் மாதம் தை. சனீஸ்வரன் வீடான மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இதில் தை அமாவாசையிலிருந்து வளர்பிறை ஏழாம் நாள் சூரிய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத் தில்தான் சூரிய பகவான் தனது ரதத்தை வடக்கு நோக்கித் திருப்பி பயணிக்கிறார்.

சூரிய பகவான், தன் ஏழு குதிரைகளைக் கொண்ட ஜாதவேத பூஷணத் தேரினை சிவபெருமானிடமிருந்து பரிசாகப் பெற்றார்.

இந்த ரதத்தை ஓட்டி வருபவர்தான் கருட பகவானுடைய சகோதரர் அருணன். இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. உடலின் மேல் அங்கங்களுடன் மட்டும், வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஹ்ருக், அனுஷ்டுப், பங்கி எனும் ஏழு வகையான சந்தங்களே குதிரைகளாக சித்தரிக்கப்பட்டு, அவை சூரியனின் பொன்னிறத் தேரினை இழுக்கின்றன. இந்த ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள்.

பொதுவாக, தேரென்றால் இரண்டு சக்கரங்கள் அல்லது நான்கு சக்கரங்கள் இருக்கும். ஆனால் சூரியனின் தேருக்கு ஒரே ஒரு சக்கரம்தான் உண்டு.

இந்த ரதத்தை ஓட்டும் அருணனுடைய ஒளிதான் காலையில் முதலில் வெளிப்படும். இதைத்தான் அருணோதயம் என்கிறோம். அதற்கும்முன் தோன்றுவது அதிகாலை நேரத்திற்குரிய பெண் தேவதை உஷஸ் என்று ரிக்வேதம் கூறுகிறது.

அதனால்தான் அதிகாலை நேரத்தை உஷத் காலம் என்று வேதம் கூறுகிறது. இந்த நேரத்தில் உஷஸின் சிறப்பான கிரணங்கள் பூமியின்மீது பாய்வதால் நீர் நிலைகள் வெதுவெதுப்பாக இருக்கும். மேலும் கண்களுக்குத் தெரியாத கிருமிகளும் அழிந்துவிடும். எனவே, உஷத் காலத்தில் நீராடினால் உடல்நலம் சீராகும். புத்துணர்ச்சி ஏற்படும்.

அதிகாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணிவரையிலான உஷத் காலத்தில் மேற்கொள்ளப்படும் நீராடல், தியானம், வழிபாடுகள், பாடங்கள் படித்தல் ஆகியவை நல்ல பலன்களைத் தரும்.

அருணோதயத்திற்குப்பின் சூரியன் உதயமாகும்போது, அதிலிருந்து சக்தி வாய்ந்த ஏழு வண்ணங்கள் வெளிப்படுகின்றன. இந்த ஏழு வண்ணங்களும் உலகில் வாழும் ஜீவன்களுக்கும் தாவரங் களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்ச்சியையும் தருகின்றன. மேலும், பூலோகத்திற்கு உரித்தான ச, ரி, க, ம, ப, த, நி என்ற தெய்வீக ஸ்வர சப்தங்களையும் குறிக்கின்றன. இந்த ஏழு சப்தங்கள் மட்டும் விண்வெளியில் பரவியிராவிட்டால் இவ்வுலகில் மொழிகளே ஏற்பட்டிருக்காது. உஷத்கால தேவதையின் அருளால் சூரிய சக்தி மேன்மேலும் வலிமை பெறுகிறது.

சூரியனின் ஆதாரசக்திக்கு தீப்தா கௌரி என்று பெயர். தீப்தா கௌரியின் பெருமைகளை புராணங்கள் பலவாறு போற்றுகின்றன.

இந்த தீப்தா கௌரிதான் சூரியனுக்கு வெம்மையையும், ஒளியையும், வண்ணங் களையும் தருகிறாள். சூரியனின் அந்தராத்மாவில் பிரகாசிப்பவள் இவளே. இவளை சவிதா என்றும் போற்றுவர். இவள் ஆயிரம் முகங்கள் கொண்டவள். இவளது விழிகளின் கருணை வெள்ளமே சூரியனின் கிரணங்களாக வெளிப்பட்டு, மற்ற கிரகங்களை பிரகாசிக்கச் செய்வதுடன் பூமியையும் வாழவைக்கிறது என்றும் புராணம் கூறுகிறது.

சிவபெருமான் அருளாலும், மகாவிஷ்ணுவின் அருள்பார்வையாலும், உஷத்தேவதை, தீப்தா கௌரி ஆகியோரின் சக்தியாலும் மேன்மேலும் ஒளிபெற்று பூவுலகத்தை வாழவைக்கிறது சூரியன். நம் உடலிலுள்ள ஏழு சக்கரங்களையும் சக்தியுடன் இயங்க உதவுகின்றது.

மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப் பூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகிய ஏழு சக்கரங்களும் நல்ல வலுவுடன் மேன்மேலும் இயங்க எருக்கன் இலைகள் உதவுவதால், சூரிய ஜெயந்தி என்று போற்றப்படும் ரதசப்தமி நாளில் ஏழு எருக்கன் இலைகளுடன் சிறிது அட்சதையையும், விபூதியையும் தலையில் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நீராடவேண்டும் என்பது விதியாகும். அப்பொழுது சூரியனை நோக்கி அர்க்கிய வழிபாட்டினை மேற் கொள்ளவேண்டும். பெண்கள் மஞ்சளையும் சேர்த்து நீராடவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

உலோகக் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து செல்வதுபோல, சூரியனின் ஏழு வகை கிரணங்களும் எருக்கன் இலையின் மூலமாக இழுக்கப்பட்டு, விரைவில் ஊடுருவிச் சென்று நம் உடலிலுள்ள சக்கரங்களுக்கு வலிமை கொடுக்கிறது. உடலில் நோய் இருந்தாலும் விரைவில் குணமாகும். எனவேதான் நம் முன்னோர்கள் ரதசப்தமி நாளில் இந்த வழிபாட்டினை மேற்கொண்டார்கள். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் அனைத்து சுபகாரியங்களும் வெற்றியைத் தரும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

ரதசப்தமி நாளில் சூரியனை வழிபடும்போது கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபிப்பது நல்லது.

சூரிய காயத்திரி மந்திரம்

“ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹோத்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்.’

“பாஸ்கரனை (சூரியனை) அறிவோமாக- ஒளியைத் தருபவனாகிய அவன்மீது தியானம் செய்கிறோம். ஆதித்தனாகிய அவன், நம்மைக் காத்து அருள்புரிவானாக’ என்பது இதன்பொருள்.

ரதசப்தமிக்கு அடுத்த நாளான அஷ்டமி அன்றுதான் கங்கையின் மைந்தன் என்று போற்றப்படும் பீஷ்மர் முக்தியடைந்தார். அதனால் இந்நாளினை “பீஷ்மாஷ்டமி’ என்று போற்றுவர். பீஷ்மருக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால், அன்று அவருக்காக புனித நீர்நிலையில் தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களையும் வழிபட்ட பலன் கிட்டும்.


தைப்பூசம்- 24-1-2016
எஸ்.ஆர்.எஸ். ரெங்கராஜன்

தைப்பூசம் என்றாலே முருகன் கோவில்களிலெல்லாம் பக்தி ரசம் பெருகும். ஆறுமுகனின் அழகிலும் கருணையிலும் கரைந்துருகுவார்கள். வள்ளல் பெருமான் காட்டியருளிய ஜோதி தரிசனமும் பிரசித்தம். அதுபோல பெருமாள் கோவிலில் இருக்கிறதா?

கும்பகோணம்- குடவாசல்- திருவாரூர் செல்லும் வழியில், சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை உள்ளது. இத்திருத்தலத் திற்கு சார க்ஷேத்திரம், வளநகர் ஆகிய பெயர்களும் உண்டு. வடக்கே முடிகொண்டான் ஆற்றுக்கும், தெற்கே குடமுருட்டி ஆற்றுக்கும் இடையே பரந்த நிலப்பரப்பில் இந்த கோவில் அமைந்துள்ளது.

நான்கு வேதங்களையும் நமக்கு அருளியவர் ஸ்ரீமந் நாராயணன். வேதத்தின் மூலம்தான் நாம் முன்ஜென்ம வினைகளைக் கரைத்துக்கொண்டிருக்கிறோம். வேத கோஷங்களின் மூலம்தான் இறைவனைக் காணமுடியும். அப்படிப்பட்ட வேதத்துக்கும் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய ஆபத்து வந்தது. ஒரு கல்ப காலத்தின் முடிவில் பிரளயம் ஏற்பட்டபோது, வேதங்களும் அழிந்து போய்விடும் நிலையிலிருந்தன.

அதுகுறித்து மகாவிஷ்ணு யோசித்தபோது, “திருச்சேறைத் திருத்தலத்திலுள்ள மண்ணைக் கொண்டு செய்த பானையில் வேதங்களை வைத்து மூடிவிட்டால், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வேதம் அழியாது’ என்று பிரம்மதேவன் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்குச் சொல்ல, அவரே சாரநாதப் பெருமாளாக அவதாரம் செய்து, திருச்சேறை வந்து பானை தயாரித்து, அதில் வேதத்தை வைத்துக் காப்பாற்றினார் என்கிறது தல புராணம்.

இத்தகைய அதிசய சம்பவம் நடந்த இந்தத் தலம் பஞ்சசார க்ஷேத்திரம் என்றும் அழைக்கப் படுகிறது. இக்கோவிலின் ராஜகோபுரம் அழகிய வேலைப்பாடுகளுடன் தொண்ணூறு அடி உயரம் கொண்டது. ஏழு நிலைகளுடன் விளங்குவது. மூலவர் திருநாமம் சாரநாதப் பெருமாள்; தாயார் சார நாயகி. விமானம் சாரவிமானம். சார புஷ்கரணி காவிரிக்குப் பிரத்யட்சமாகத் திகழ்கிறது.

முற்காலத்தில் வராகமாய் அவதரித்து உலகை எடுத்துக் காத்த பெருமாளே, திருச்சேறையில் சாரநாதப் பெருமாளாகவும் அவதரித்துள்ளார் என்கிறது பிரபந்தம்.

திருமங்கை ஆழ்வார் இக்கோவிலைப் பற்றி பதின் மூன்று பாசுரங்கள் பாடியிருக்கிறார். ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலம்.

ஒருமுறை காவிரியானவள் தனக்கு கங்கையைவிட அதிக பெருமை வேண்டுமென்று, சார புஷ்கரணியின் மேற்கரையில் அரச மரத்தடியில் அமர்ந்து, சாரநாதப் பெருமாளை வேண்டி கடுமையாகத் தவம் செய்தாள். அவள் தவத்துக்கு மகிழ்ந்த சாரநாதப் பெருமாள், கருட வாகனத்தில் பூமாதேவி, நீளாதேவி, சாரநாயகி, மகாலட்சுமி, ஸ்ரீதேவி சகிதம் வந்து தரிசனம் தந்து, காவிரி கேட்ட வரத்தை அளித்தார். காவிரி அன்னைக்கு இறைவன் வரமருளிய நாள் தைப்பூசம்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாத பூச நட்சத்திரத்தில், சாரநாதப் பெருமாள் ஐந்து தேவிகளுடன் தரிசனம் அளிக்கிறார். இதைக் காண்பது மகாமகப் புண்ணியத்திற்கு ஒப்பாகும். இத்தரிசனம் கண்டு, சார புஷ்கரணியில் தைப்பூசத்தன்று புனித நீராடுவது மிகவும் புண்ணியத்தை அளிப்பதாகும்.

தைப்பூசம் நடக்கும் ஒரே வைணவக் கோவில் இதுதான்.

தைப்பொங்கல் அன்று தமிழகத்தில் சூரிய பகவானுக்கு வழிபாடு நடைபெறும். வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தாம்பூலம், பழங்கள், கரும்பு, மஞ்சள், இஞ்சிக் கொத்துகளை வைத்து சுபவேளையில் கிழக்குதிசை நோக்கி சமர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். வடநாட்டில் காலதேவன் எனப்படும் எமதர்மனுக்கு அந்நாளில் பூஜை செய்கிறார்கள்.

சூரிய பகவான் வடதிசைப் பயணமாக தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிக்கும் மகரசங்கராந்தி நாளில், எமகண்ட வேளையில் அவரது உருவபொம்மைக்கு சந்தனமிட்டு, மலர்சூடி, கற்கண்டு பொங்கல், கருப்பு எள் இனிப்பு உருண்டைகளைப் படைப்பார்கள். எமனுக்குரிய தென்திசை நோக்கி இந்த வழிபாடு நடைபெறும். (எமதர்மனின் படம், உருவ பொம்மைகள் அங்கு கடைகளில் கிடைக்கும்.)

வடநாட்டில் மஹோதயபூர் என்ற ஊரில், ஒவ்வொரு மாதமும் விரதங்கள் கடைப்பிடித்து நல்வாழ்வு வாழ்ந்துவந்த பெண்ணொருத்தி ஒருநாள் உலக வாழ்வு நீத்தாள்.

எமலோகத்தில், சித்திரகுப்தன் அந்தப் பெண் செய்த புண்ணியங்களையும், கடைப்பிடித்த விரதங்களையும் கூறிக்கொண்டே வந்தான்.

ஆனால், அதைக் கேட்டுக்கொண்டிருந்த எமதர்மனின் முகத்தில் மகிழ்ச்சியில்லை.

எமதர்மன் அந்தப் பெண்ணைப் பார்த்து, “”குணவதியே, நீ எத்தனையோ விரதங்கள் மேற்கொண்டிருந்தாலும் என்னை நினைத்து ஒருநாள்கூட விரதம் கடைப்பிடித்து வழிபடவில் லையே. அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றார்.

“”தர்மராஜாவே, தங்களை நினைத்து எப்படி விரதம் இருப்பது? அந்த விவரங்கள் பூலோகத்தில் வாழ்பவர்களுக்குத் தெரியாதே” என்றாள் அவள்.

“” தை மாத முதல் நாள் பொங்கல் தினத்தில், என் தந்தை சூரிய பகவானை கிழக்கு திசை நோக்கி வழிபாடு செய்யும் மக்கள், அதே நாளில் எனக்குரிய எமகண்ட வேளையில் தென்திசை நோக்கி வழிபாடு மேற்கொள்ளவேண்டும். எனக்குப் பிடித்தமான எருமைப்பாலில் கற்கண்டுப் பொங்கலும், கருப்பு எள் இனிப்பு உருண்டைகளையும் படைத்து பூஜை செய்யவேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் கடைப்பிடித்து பூஜித்தால் நான் மகிழ்வேன். அந்த பக்தர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கமாட்டேன். இப்பொழுது, உன்னை மீண்டும் பூலோகத்திற்கு அனுப்புகிறேன். நான் சொன்னதுபோல விரதம் கடைப்பிடித்து பூஜை செய்வாயாக” என்று சொன்னார் எமதர்மன்.

பூலோகத்தில் குணவதியை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்யும் நேரத்தில், தூக்கம் கலைந்தவள்போல் உயிர்பெற்றெழுந்தாள். அனைவரும் வியந்தனர்.

எமதர்மன் சொன்னபடி விரதம் மேற்கொண்ட அவள், அனைவரிடமும் இந்த விரதத்தின் மகிமையைக் கூறி வழிபடச் செய்தாள். பல ஆண்டுகள் வாழ்ந்து பின் சுவர்க்கம் சென்றாள் என்பது புராணச்செய்தி.

தை முதல் நாளன்று எமதர்மராஜனை நினைத்து பூஜை செய்து வழிபட்டால் அகால மரணம் நேராது; இறுதிக்காலத் தில் எமபயம் இல்லை என்று சாஸ்திரம் கூறுகிறது.

எமதர்மராஜனைக் கண்டு பயப்படத் தேவையில்லை. பூலோகத்தில் மானிட ராகப் பிறந்தவர்கள் ஒருநாள் மாண்டுபோகும் நிலை தவிர்க்க முடியாதது. காலை, நண்பகல், மாலை என மூன்று காலங்களிலும் தெற்கு திசை நோக்கி எமனுக்கு நமஸ்காரம் (யமாய நமஹ) என்று தினமும் யமவந்தனம் செய்தால் எமபயம் விலகும். எமன் அருளால் ஆரோக்கியமான விபத்தில்லா வாழ்வு கிட்டுமென்று வேதம் கூறுகிறது.

எமனின் உலகம் எமலோகம். எமனது நகரின் பெயர் பிரேதபதேபுரம். அதாவது இறந்தவர்களின் அதிபதி நகர். தெற்கு திசைக்கு உரியவரான எமதர்மராஜன், தன் விருப்பப்படி யாரையும் தண்டிக்கமாட்டார். அவரது சபையில் மானிடர்களின் பாவ- புண்ணியங்களை உடனுக்குடன் குறித்து வைக்கும் சித்ரகுப்தன் பக்கத்தில் இருப்பார். அந்தக் கணக்குகளின் அடிப்படையில் ஒருவர் இறந்ததும் எமலோகம் வந்தடைந்தபின், இறைவன் வகுத்துக் கொடுத்த விதிகளின்படி, பாரபட்ச மின்றி தீர்ப்பு வழங்குவார். அதற்கு ஏதுவாக மனு, ப்ரஜாபதி, வியாசர், அத்ரி, உத்தலாகி, ஆபஸ்தம்பர், ப்ரஹஸ்பதி, சுக்கிரன், கவுதமர், சங்கா, லிகிதர், ஆங்கிரஸர், பிருகு, புலஸ்தியர் உள்ளிட்ட முனிவர்கள் சபையில் அமர்ந்திருப்பார்கள்.

எமனின் நெருங்கிய சகாக்கள் காலனும் மிருத்யுவும் ஆவர். காலத்திற்கு அதிபதியின் காலன்தான் நாள், வாரம், மாதம், ஆண்டு என்று கணித்து, அனைவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தை தீர்மானிக்கிறார். மிருத்யு என்பவர் ஆணாகவும் பெண்ணாகவும் வர்ணிக்கப்படும் தெய்வம். உயிரை எடுத்து வரச்சொல்லும் வேலை அவருடையது. அவருக்கு கிங்கரர்கள் என்ற உதவியாளர்கள் உள்ளனர்.

எமனுக்கு இரண்டு உருவங்கள் உள்ளதாக வேதநூல்கள் கூறுகின்றன. உயர்ந்த நிலையடைந்த ரிஷிகளையும் முனிவர்களையும், சுயநல மின்றி வாழ்ந்து புண்ணியம் செய்த மானிடர்களையும் அவர்களது இறுதி நாளில் காணும்போது, எமன் மகிழ்ச்சியடைந்து அழகான நாராயண ரூபத்தில் அவர் களுக்குக் காட்சியளிப்பாராம். அதனால் எமவாதனையின்றி உயிர்பிரியும். பிறர் சொத்துகளை அபகரிக்கும் பேராசைக்காரர்களையும் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்ட தீயவர்களையும் காணும்பொழுது, எமவாதனையைக் கொடுத்து, இடிபோன்ற குரலுடன் பிரம்மாண்டமான கோரரூபத்தைக் காட்டி அச்சப்பட வைக்கிறார். எமனுடைய வேலைக்கு உதவுவது பாசக்கயிறு. இது புனிதர்களுக்கு மலர் மாலையாகவும், பாவிகளுக்கு முட்கள் நிறைந்த சாட்டையாகவும் மாறிவிடுமாம்.

“தீயவர்களுக்கு நான் எமன்; மற்றவர்களுக்கு நான் தர்மராஜன்’ என்று எமன் கூறியதாக கந்தபுராணம் சொல்கிறது. திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் எமன் குழந்தை வடிவில் இறைவன் காலடியில் கிடக்கிறார். மேலும், இங்கு எமனுக்கு தனிச்சந்நிதியும்  உள்ளது. இங்குள்ள எமதீர்த்தத்தைத் தெளித்துக்கொண்டு எமதர்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எமபயம் நீங்கும்; விபத்தில்லாத வாழ்வு அமையுமென்று கூறப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம், கும்பகோணம்- நன்னிலம் சாலையில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம்.

இங்குள்ள வாஞ்சிநாதர் ஆலயத்தில் எமனுக்கு தனிச்சந்நிதி உள்ளது; க்ஷேத்திரபாலகனாக எழுந்தருளியுள்ளார். மேலும் வாஞ்சிநாதருக்கு வாகனமாக எமன் விளங்குகிறார்.

எமனுக்கு இங்கு நரன்தான் (மனிதன்) வாகனம்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் எமன் சண்டேஸ்வரர் பதவியை வகிக்கிறார். ஜடை, தாடி முதலியவற்றுடன் ஒருகாலை ஊன்றி முழந்தாளில் முகத்தை வைத்த நிலையில் காட்சிதரும் இவரது முகம் சாந்தமாகத் திகழ்கிறது. வழக்கமாக சிவன் கோவிலில் காணப்படும் சண்டிகேஸ்வரர் இங்கு ஆதிசண்டராகக் காட்சிதருகிறார்.

இத்தலத்தில் மூலவரை தரிசித்தபின் பிராகாரத்தை வலம்வந்தால், ரிண ஈஸ்வரரை தங்க ரூபத்தில் தனிச்சந்நிதியில் தரிசிக்கலாம். தெற்கு திசை நோக்கிய இவரது இடப்பக்க தனிச்சந்நிதியில்தான் அமைதிதோய்ந்த எமதர்மராஜனை தரிசிக்கலாம். ஈஸ்வரனை வலம்வரும்போது இந்த எமதர்மராஜனையும் சேர்த்தே வலம்வரும் நிலையில் எமன் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்ற தோற்றத்தில் எமதர்மராஜனை தமிழகத்தில் மட்டுமல்ல; வேறெங்கும் தரிசிக்க இயலாது என்று கூறப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் என்னும் கிராமத்தில் எமனுக்கு தனிக்கோவில் உள்ளது. இங்கு எருமை வாகனத்தில் எமதர்மராஜன் மேற்கு திசையைப் பார்த்தவண்ணம் மூலவராக நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகிறார். கீழ்வலக்கையில் தீச்சுடரும், இடக்கையில் ஓலைச்சுவடிகளும், மேல்வலக்கையில் சூலாயுதமும், இடக்கரத்தில் கதையுடனும் காட்சிதருகிறார். அமைதியான திருவடிவில் காட்சியளிக்கும் இவரை தரிசிக்கும்போது பயத்திற்கு பதில் பக்தியே வரும். இங்கு பரிவார தெய்வங்களாக பாம்பாட்டி சித்தரும் அய்யனாரும் உள்ளனர். இத்திருக்கோவில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில், சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற ஊரின் வயல்வெளியில் உள்ளது.

பொதுவாக தினமும் காலையில் இறைவழிபாட்டினை முடித்துக்கொண்டு, தெற்கு திசை நோக்கி எமதர்மராஜனை நினைத்து “யமாய நமஹ’ என்று வணங்கினால் எமன், தர்மமாக மாறி நம்மைத் தொடர்ந்து காப்பார்.

வடநாட்டில் எமதர்மராஜனை வழிபடுவதுபோல் தமிழகத்தில் இல்லை என்பதால், தைப்பொங்கல் அன்று எமகண்ட வேளையில் எமனுக்குரிய சுலோகமான “யமாய நமஹ’ என்று மூன்று முறை பக்தியுடன் சொல்லி தென்திசை நோக்கி கைகூப்பி வணங்கினால் எமதர்மராஜன் மகிழ்வார். இதனால் விபத்தில்லாத, சுகமான வாழ்வு கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.

 


மனிதர்களோடு வாழ்வின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், குருவினுடைய அருளால், அவருடைய தீண்டுதலால் உள்மன வெளிச்சம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஆனால், “என்னை ஏன் காப்பாற்றிக்கொள்ள முடிய வில்லை. எதனால் நான் அடிக்கடி தண்டிக்கப்படுகிறேன்’ என்று கேட்டதற்கு, “”பூர்வஜென்ம வினை என்று ஒன்று உண்டு. ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் மற்றொன்று நடக்கிறது. ஒரு ஊசல் இடப்பக்கம் போவதால்தான் வலப்பக்கம் பயணிக்கிறது. வலப்பக்கம் போவதால்தான் இடப்பக்கம் நகர்கிறது. ஏதோ ஒரு கணத்தில் இந்த ஊசல் எதனாலேயோ நின்றாகவேண்டும். நீ, உன்னுடைய வாழ்வு, உன்னுடைய வாழ்வின் தொடர்ச்சி, உன் போனஜென்மத்து வினை, அதற்கு முந்திய ஜென்மத்து வினை என்று மட்டும் யோசிக்காதே. இந்த ஊசல் விஷயத்தை பிரபஞ்சத்தினுடைய எல்லா அசைவுகளுக்கும் ஒப்புமை வைத்துப் பார். அதோ, அந்த மாடு, இந்த நாய், அந்த பாறாங்கல்லைப் புரட்டினால் அதற்கு அடியில் இருக்கின்ற தேள் குடும்பம் எல்லாமும் முன்வினையைத் தொட்டுத்தான் உருவாகியிருக்கின்றன. இதுதான் பரிணாம வளர்ச்சி. இதுதான் சுழல். இதுதான் சக்கரம். உன்னைக் காட்டிலும் கடுமையாக தண்டிக்கப்பட்டவர் எத்தனை பேர். நேற்று கொடிபறக்கப் போய்விட்டு, இன்றைக்கு தோல்வியுற்று துணிப்பையோடு மல்லாந்து கிடக்கிறவர் எத்தனை பேர். எது வெற்றி, எது தோல்வி, எது தண்டனை, எது பாராட்டு. இது மிகப்பெரிய கணக்கு பால்குமார். மிகப்பெரிய பிரம்மிப்பை கொடுக்கின்ற கணக்கு.

ஆனால் இது அறிந்துகொள்ள முடியாத விஷயமல்ல. தன்னை விட்டுவிட உலகம் தெரியும். உலகத்தை விட்டுவிட பிரபஞ்சம் புரியும். இதற்குப்பிறகு வேறு என்னென்னவோ புரியும்.” அவர் வெறுமே பேசவில்லை. செயலிலும் காட்டினார்.

வலப்பக்கம் அந்த ஏழரை மணி நேரம் ஒரு சந்திர உதயம் நடந்துகொண்டிருந்தது. அநேகமாக அது பௌர்ணமிக்குப் பிறகான பிரதமையாக இருக்கலாம். இரண்டு பனை உயரத்திற்கு சந்திரன் பால்போல காய, ஊர் அடங்க, நான் அவருக்கு நிலவை சுட்டிக்காட்டினேன். “”பகவான், இட்ஸ் மூன். அங்கே நிலவு” என்பதாகப் பேசினேன். “”ஆமாம். நிலவு” என்று அவர் எதிரொலித்தார். வேறேதோ பேச்சில் ஈடுபட்டு கிழக்கிலிருந்து மேற்குப் பக்கம் பார்வை திரும்ப, மலைக்கு சற்று மேலே இன்னொரு நிலவு இருந்தது. நான் அதிர்ந்துபோனேன். கண்ணில் ஏதாவது கோளாறா. இரண்டு நிலவுகள் தோன்றுகின்றனவே. பார்வை பிரிவுபட்டுவிட்டதா என்று கிழக்கும் மேற்குமாகப் பார்க்க, அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். “”இன்னொரு நிலவு தெரிகிறது. அனதர் மூன் பகவான்.” நான் உரக்க கத்தினேன். “”தேர் ஆர் செவன் பால்குமார்.” அவர் பதில் சொன்னார். எவருமே அருகே இல்லாத அந்த இருள் கவிழ்ந்த மாலைப்பொழுதில், அவர் வீட்டு வாசற்படியில் அமர்ந்துகொண்டு, கிட்டத்தட்ட என் கையை அவர் முழங்காலில் பதித்துக்கொண்டு ஒரு நண்பரைப்போல அவரோடு உரையாடினேன்.

“”நான் முன்பு வெகுகாலம் தங்கியிருந்த புன்னை மரத்தடிக்குப் போய் பார்த்துவிட்டு வா.” அவர் துரத்துவார். வேறொரு இடம் நோக்கி பார்த்துவிட்டு வரச் சொல்வார். வராண்டாவில் ஒருக் களித்துப் படுத்துக் கொள்வார். நான் கால் பிடித்துவிடுவேன். விரலால் ஒவ்வொரு இடமாக மிகச் சரியான விகிதத்தில் அழுத்துவேன். அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணைபிரியாதவை. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அக்கறை இருக்கும். எங்கு அக்கறை இருக்கிறதோ அங்கு அன்பு இருக்கிறது என்று அர்த்தம். என்னுடைய விரல்களின் அசைவில் அவர் ஆழ்ந்து தூங்குவார். “சகலமும் அறிந்த சாந்தம் யோகி ராம்சுரத்குமாரம்’ என்ற வரிகளோடுதான் நான் அவரை பார்ப்பேன். சென்னை பற்றிய எந்த செய்தியும் திருவண்ணாமலையில் இருக்கும் எனக்கு எட்டாது. எட்டாதவாறு அவர் பார்த்துக்கொண்டார் என்றே தோன்றுகிறது.

ஆனால் அவர் விடை கொடுத்து சென்னைக்கு கிளம்பும்போதே, அங்கே போய் ஈடுபடவேண்டியவற்றில் மனம் தத்தளிக்கும். இந்தப் படம், அந்தப் படம், இந்த வேலை, அந்த வேலை என்று எழுத்துப் பணியும், திரைப்படத்துறையில் வசனகர்த்தா வேலையும் மிக விரைவாகவும் முழுதாகவும் நடைபெற்றன. உழைப்புக்கேற்ற ஊதியம் என்று சொல்ல முடியாது. டிராக்டர் கம்பெனியைவிட அதிகமான ஊதியம் கிடைத்தது.

வீட்டில் குருவின் படங்களே முக்கியமாக இடம்பெற்றன. எல்லா பக்கமும் அவர் முகமே அலங்கரித்தன.

குருவே தெய்வம். தெய்வம் என்பது குருவே என்று என் வீடு மாறிற்று. பல பண்டிகைகள் வருகின்றன. கொண்டாடுவதற்கு விருப்பம் இருக்கிறது. குழந்தைகளை அது குதூகலப்படுத்துகிறது. வீட்டிலுள்ள பெண்களும் விருப்பப்படுகிறார்கள்.

குரு என்று வந்தபிறகு இந்த மாதிரியான கொண்டாட்டங்கள் என்ன அர்த்தப்படும். எல்லா கேள்விகளுக்கும் எந்தவித தயக்கமுமின்றி உடனடியாக பதில் சொல்வார். “”எந்த பண்டிகை வேண்டுமானாலும் கொண்டாடு. ராமா, கிருஷ்ணா, இயேசு, அல்லா, சிவன், முருகன் என்று ஏதாவது சொல். ஆனால் மனம் மிகப்பெரிய அந்த சக்தியை நோக்கி வியப்போடு இருக்கட்டும். அவர் தொழக்கூட சொல்லவில்லை. அந்த பெரும் சக்தியை வியப்போடு அவதானிப்பதே மிக முக்கியம்” என்றார். அதுவே உன்னுள் இருப்பது என்றும் சுட்டிக்காட்டினார்.

உன்னைப் பார்க்கிறபோது நீ உன்னை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறாயோ அது அழியும். அது அழிந்தபிறகு உண்மை தோன்றும். கண்டதைக் கண்டு கண்டதை அழி. எது பார்க்கிறதோ அதைப் பார். அப்போது பார்க்கவேண்டாதது அழிந்துபோகும். எது பார்க்கிறது. எது சிந்திக்கிறது. எது யோசிக்கிறது. எவரால் இந்த எண்ணங்களெல்லாம் எழுகின்றன. இந்த எண்ணங்களின் மூலகாரணம், இருப்பு எது. ஒவ்வொரு முறையும் விதம்விதமாக இந்த விஷயத்தை பேச்சாலும் செய்கையாலும் அவர் தொட்டுக் காட்டினார்.

எனக்கு நெருங்கிய நண்பரிடம், நான் வீடு வாங்க ஆறு லட்ச ரூபாய் முன்பணமாகக் கொடுத்தேன். இன்னும் பத்து லட்ச ரூபாய் தரவேண்டும். இரண்டு பெரிய படுக்கை அறைகள், ஒரு நீண்ட ஹால், ஒரு டைனிங் டேபிள் போடக்கூடிய இடம், சிறிய கிச்சன், இரண்டு சிட் அவுட், கார் பார்க்கிங் என்று பல்வேறு விஷயங்கள் இருந்தன. வீடு ஈசான்யத்தில் இருந்தது. கிழக்குப் பக்கம் திறந்து மேற்குப் பக்கம் மூடியிருந்தது. வடக்கத்தி காற்று அழகாக உள்ளே வந்தது. கிழக்குப் பக்கம் திறந்து தெற்குப் பக்க அறைக்கதவையும் திறந்து வைத்தால் காற்று உள்ளுக்குள்ளே சுழன்று வெளியேறிற்று. தரையில் சலவைக்கல் போடப்பட்டிருந்தது. நல்ல கண்ணாடி அலமாரிகள், பீரோக்கள் இருந்தன. பதினாறு ரூபாய் என்பது சரியான விலை. மலிவு என்றுகூட சொல்லலாம். நான் அடுத்தபடியாக பத்து ரூபாய் புரட்ட எனக்கு நாக்கு தள்ளிப்போயிற்று. எந்த வங்கியும் கடன் கொடுக்க முன்வரவில்லை. சினிமாக்காரனுக்கு எப்படி கடன் கொடுப்பதென்று மறுதலித்தார்கள். கொஞ்சம் கூடுதல் வட்டியோடு ஒரு தனி நபருடைய கம்பெனிக்குப் போக, அங்கு பத்து ரூபாய் கிடைத்தது. பத்திரங்கள் கைமாறின.

ஒருமுறைகூட கடனை அடைப்பதில் நான் தாமதம் செய்ததில்லை. ஒரு மாதம்கூட பிணங்கியதில்லை. மிகச் சரியாக ஐந்து தேதிக்குள் திரைப்படத்தில் வேலை செய்ததால் அடைத்தேன். சிறிய படமோ, பெரிய படமோ- மிக உயர்ந்த டைரக்டரோ, புதுமுகமோ, நான் அந்த வேலையை மிக உண்மையாகச் செய்தேன். “பாலகுமாரனை கூப்பிடுங்க. நல்லா சீன் சொல்லுவாரு, வேற ஒன்னுமே பண்ண வேணாம்.

அவுட் லைன் கொடுத்துட்டா போதும். கதை போட்டுக் கொடுத்துடுவாரு’ என்று திரைப்படத்துறையில் பேசினார்கள். அதற்காகவே அழைத்தார்கள்.

“ஹீரோ ஒரு பொறுக்கி. கதாநாயகி அந்த ஊரில் இருக்கிற பணக்கார வீட்டுப் பொண்ணு. அந்தப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஒரு அரசியல்வாதி பையனுக்கு ஆசை. அந்த அரசியல்வாதிக்குக்கூட பையனுக்கு அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிவைக்க ணும்னு எண்ணம். சம்பந்தம் பேச வர்றாங்க.

ஆனா அந்த அரசியல்வாதி பையனை அவளுக்குப் பிடிக்கல. அவன் அலட்டல் பிடிக்கல. நல்லவனதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறபோது அவ கண்ணுக்கு ஹீரோ தென்படறான். அவன் பொறுக்கி மாதிரி இருந்தாலும் ரொம்ப நல்லவன்னு அவளுக்குப் புரியுது. எப்படி லவ் பண்றாங்க. எப்படி மீட் பண்றாங்க. எப்படி கதை போகுது. நீங்கதான் தீர்மானம் செய்யணும்.’

மொட்டை அடித்து காது குத்திய குழந்தையை, வீறிடும் மழலையை மடியில் போட்டுவிட்டுப் போவார்கள். சமாதானப்படுத்தி மெல்ல மெல்ல அலங்காரம் செய்யவேண்டும். “மொட்டை குட்டி, பார்க்க அழகா இருக்கியே’ என்று பேசும்படியாகவும் வைக்கவேண்டும். நான் செய்திருக்கிறேன். அறையில் நான் காட்சியை விவரித்துச் சொல்ல, என்னிடம் கேட்டுவிட்டு உடனே ஹாலுக்குப் போய், “”இன்னிக்கு காலைல ஒரு சீன் புடிச்சேன். சொல்லட்டுமா” என்று தானே அந்தக் காட்சியை உருவாக்கியதாய் சொல்லக்கூடிய இளைஞர்களையும் நான் அங்கு பார்த்திருக்கிறேன். இதுதான் விதி. அதுதான் அங்கு ரூல். அப்படித்தான் அங்கு நியமம். இப்படி சொல்வதற்குத்தான் எனக்கு காசு.

கார் வாங்க முடிந்தது. ஆனால், “”கார் ஓட்டக்கூடாது. அப்படியென்றால் கார் வாங்கலாம். நீ கார் ஓட்டத்தான் வேண்டுமென்றால் இந்தப் பிச்சைக்காரனிடம் வந்து அனுமதி கேட்க வேண்டாம்.” கடைசி வரை நான் கார் ஓட்ட அவர் அனுமதிக்கவே இல்லை. “”கார் ஓட்ட ஆளா கிடைக்காது.

அதுபற்றி கவலைப்படாதே. நீ உன்னுடைய வேலையில் மூழ்கிக் கொண்டிரு. பயணப்படு” என்று ஆறுதலாகச் சொன்னார்.

உள்ளே கவனிப்பதற்கு கார் பயணம் ஒரு நல்ல வழி. கண்கள் எதிரே இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் பயணப்படும்போது கடந்து போனவற்றைப் பார்த்துக்கொண்டி ருக்கும். பார்வை எதன்மீதும் நிற்காது. எதிலும் நிலைக்காது. ஆனால் பார்வையிலிருந்து எதுவும் மறையாது. கண் என்ன பார்க்கிறதோ அது மனதில் பதியாது. மனம் என்ன செய்கிறதோ அது மூளையில் பதியும்.

தியானத்தில் ஏற்பட்ட இந்த நிலை உட்கார்ந்து எதிரே இருக்கின்ற விஷயத்தைப் பார்க்கின்றபோது ஏற்பட்டது. ஆழ்ந்து உள்ளே ஏதோ சிந்திக்கின்ற ஒரு சுகம் இதில் இருந்தது. ஒரு கதையை கோர்வையாக நெய்கின்ற திறன் இருந்தது. அதைத் தாண்டி எதுவும் இல்லாமல் ஒரு வெறுமையில் மனம் உட்கார்ந்துகொள்ளும். நினைப்புகள் அத்தனையும் மடங்கி, சுருங்கி, சுருண்டு காணாதுபோய் வெறுமே கண் பார்த்துக் கொண்டிருக்கும். இது விழிப்பில் தூக்கம். நான் கார் ஓட்டியிருந்தால் இந்த விழிப்பில் தூக்கம் எனக்கு எளிதில் லபித்திருக்காது. முட்டி மோதி மற்றவரையும் கொன்று நானும் செத்துதான் போயிருப்பேன். “நீ ஓட்டக்கூடாது’ என்று அதட்டியதன் அர்த்தம் பிற்பாடுதான் தெரிந்தது. மனம் உறங்குவது போல அமைதியாய் இருந்தது. ஆனால் விழித்துக்கொண்டிருந்தது. எப்படி விழிப்பில் தூக்கம் இருந்ததோ, அதேபோல தூக்கத்தில் விழிப்பு இருந்தது. உடம்பு தூங்கியது நன்றாகத் தெரிந்தது. ஆனால் மனம் தூங்கவில்லை. மனம் தூங்குகின்ற உடம்பை, அந்த வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தது. எல்லா சாதகர்க்கும் இது ஒரு முக்கியமான விஷயம். இதை தாண்டாது தியானத்திற்குள் நகரவே முடியாது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் எனக்கு செய்த உதவிகள் அனந்தம். இது என்னுடைய பயிற்சியினால் அல்லது என்னுடைய முயற்சியினால் வரவில்லை. சட்டென்று என்னுள் நான் கரைந்து காணாமல் போவதென்பது அவருடைய அருளினால்தான் நடைபெற்றிருக்கவேண் டும். அவர்தான் என்னை ஆழ அமிழ்த்தி யிருக்கவேண்டும். அலையலும், மனக் குழப்பமும், ஓயாத பேச்சும் கொண்டிருந்த என்னை அவர் அமைதியாக்கினார்.

நண்பர்களிடமிருந்து நான் விலகியிருந்தது உண்மை எனினும், நண்பர்கள் இல்லையே என்ற ஏக்கமும் அவ்வப்போது கொண்டி ருந்தேன். உயிர் நண்பன் என்று ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டும், பாராட்டிக் கொண்டும் இருப்பதைப் பார்த்து, “இது ஏன் நமக்கு லபிக்கவில்லை’ என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு சத்திய சந்தனுக்கு நண்பர்கள் தேவையே இல்லை. எந்த உறவும் அவசியம் இல்லை. ஆனால் எல்லா உறவுகளோடும் சௌஜன்யமாக இருக்கலாம். “தாமரை இலையில் தண்ணீர்’ என்பது சாதாரண உவமானமாயினும் மிகச் சரியான உவமானம். ஒட்டாத மனம் என்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம்.

ஒரு மடாலயத்தில் சிஷ்யன் இறந்து போனான். குரு விம்மி விம்மி அழுதார். ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு சன்னியாசி, ஒரு மடாதிபதி இப்படி அழுகிறாரே என்று வருத்தப்பட்டார்கள். சரியா என்று விவாதித்தார்கள். அவரிடம் விசாரித்தார்கள். “”எனக்கு அழுகை வருகிறது. அழுகிறேன், அவ்வளவே” என்று பதில் சொன்னார். அவர் அழுதாலும், சிரித்தாலும், அமைதியாக இருந்தாலும் ஒன்றுதான். உள்ளுக்குள் நாடகம் இல்லாது இருக்கிறார்.

பொய்த் தோற்றம் தருவதில்லை. பொய்த் தோற்றம் தருகின்ற புத்திசாலித்தனத்தை அவர் ஏற்கவில்லை.

ஒரு மடாலயத்திலிருந்து ஒரு குரு வருகிறார்.

சீடனை அழைத்து அந்த மடாலயத்தின் குரு தோட்டத்தை செப்பனிடச் சொன்னார். சீடன் ஓடினான். ஒரு இலை, ஒரு சுள்ளிகூட இல்லாது தோட்டத்தை சுத்தம் செய்தான். ஓடிவந்து குருவிடம் “”சுத்தமாகிவிட்டது” என்றான். குரு எட்டிப் பார்த்துவிட்டு, “”இல்லை. மறுபடியும் சரி செய்” என்றார். அவன் மறுபடியும் ஓடினான்.

இரண்டு, மூன்று இலைகள் விடுபட்டிருந்தன. மறுபடி வந்து நின்று, “”சுத்தம் செய்தாகிவிட்டது” என்றான். எட்டிப் பார்த்து மிக கவனமாக ஒவ்வொரு இடமாக உற்றுப் பார்த்து, “”இல்லை. தோட்டம் சரியாக இல்லை” என்று குரு சொல்ல, அவன் மறுபடியும் ஓடினான்.

ஒரே ஒரு பழுத்த இலை புற்களுக்கு நடுவே இருந்தது. அவர் கண்ணுக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியத்தோடு, இலையை எடுத்து குப்பைக் கூடைக்குள் போட்டான். வந்து நின்றான். குரு கொஞ்சம் கோபமான நடையோடு தோட்டத்திற்கு வந்தார். ஒரு மரத்தை உலுக்கினார். பனித்துளிகள் கீழே விழுந்தன. இலைகள் உதிர்ந்தன. பூக்களை மரம் சொரிந்தது. இன்னொரு மரத்தை உலுக்கினார். வேறொரு மரத்தை உலுக்கினார். எல்லா மரமும் பூக்களையும் இலைகளையும் பனித்துளிகளையும் உதிர்த்திருந்தன. தோட்டம் வாசனையாக இருந்தது. அவர் ஆழ்ந்து மூச்சுவிட்டுக்கொண்டு, “”இப்போது விருந்துக்கு தோட்டம் தயாராகிவிட்டது” என்று உரக்கச் சொன்னார். இயல்பாக இருத்தலே மிக முக்கியம். அதுவே அழகு. வலுக்கட்டாயமான, முரட்டுத்தனமான ஒழுக்கம் உன்னை எங்கேயும் கொண்டுபோய் சேர்க்காது.

இன்னொரு சந்திப்பில் பகிர்ந்துகொண்டபோது அவர் மிகுந்த குதூகலத்தோடு என்னோடு பேசத் துவங்கினார். அப்பொழுதெல்லாம் சன்னிதித் தெரு வீட்டில் பேசுவதில்லை. வேறொரு லாட்ஜில் அந்த அறையிலுள்ள நாற்காலி, கட்டில்களை அப்புறப்படுத்திவிட்டு, தரையில் பாய் விரித்தபடி அமர்ந்து எங்களையும் உட்காரச் சொல்வார். என்னுடைய மலர்ச்சியை உணர்ந்த என் தாயார் தன்னுடைய அலட்டலைவிட்டு அவரிடம் சரணடைந்தார். என் குடும்பமே அவரை உள்ளங்கையில் தாங்கிற்று. நானும் பகவான் யோகி ராம்சுரத்குமாரும் நிறைய பேசினோம். எனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களை அவர் பேசியும் பேசாமலும் தீர்த்திருக்கிறார். அயண் ராண்ட்டை மறுத்ததும், ரமணரைப் பாராட்டியதும் அந்த மாதிரியான இடத்தில் நடந்தன. “”இன்றைக்கு பிரபந்தம் தொடர்ந்து படிப்போம்” என்று உட்கார்ந்து என்னை படிக்கச் சொல்லி, ஸ்ரீகௌரியை பாடச்சொல்லி கேட்பார். இன்னொரு நாள் தேவாரம் என்று போவோம். சித்தர்கள் பாடல் பற்றி பேசுவோம். இவற்றை விளக்கினால் கட்டுரை வெகுவாக நீளும். அதுமட்டுமல்லாது, அப்படி பேசி சல்லாபித்தது மேலும் ஆழ்ந்துபோக உதவி செய்ததே தவிர, சம்பாஷணைகள் முற்றிலுமாய் என் ஞாபகத்தில் இல்லை. அது எங்கோ வழுக்கி காணாமல் போய்விட்டது. தேவையில்லை என்பதால் மூளையினுடைய பதிவிலிருந்து நகர்ந்துவிட்டது. சந்திப்பில் பலமுறை பலமுறை அவரால் தீண்டப்பட்டு, முதுகு தடவப்பட்டு, தலையில் கை வைக்கப்பட்டு நான் அலறியிருக்கிறேன். குண்டலினி உச்சியில் எழுந்து, மேல் கபாலத்தைப் பிளந்துகொண்டு வெளியேறிய வேதனையையும் அனுபவித்திருக்கிறேன்.

எதிரே உட்கார்ந்திருந்த ஒரே கூட்டிற்குள் இருந்த உயிர்த் துளியை உணர்ந்திருக்கிறேன்.

அவர் இன்னார் என்று தெரிந்து, அவரை நோக்கி ஆறுதலாகவும் பிரியமாகவும் சிரித்திருக்கிறேன். இந்த மனிதன் கோழைதான். என்ன செய்வது. பாவம். நசுக்கப்பட்டவன். எனக்குத் தெரிந்தது. “என்ன பொய்களடா பாவி. எதற்கு சொல்கிறாய். என்ன கர்வம். எல்லாம் அழியுமடா.’ இன்னொருவரைப் பார்த்தும் சிரித்திருக்கிறேன்.

என்ன வேண்டும் உனக்கு. உனக்கு கேட்கவே தெரியவேயில்லை. உன்னை நீ கேட்டுக்கொள்ளவே இல்லை. மனைவி கேட்டதை, தாய் கேட்டதை, மைத்துனன் கேட்டதை, மைத்துனி கேட்டதை, தங்கை கேட்டதை இங்கு கொண்டுவந்து கொட்டுகிறாய். உனக்கு என்ன வேண்டும் தெரியவே இல்லை.

“”மாம்பலத்துல ஒரு வீடு இருக்கு. மைலாப்பூர்ல ப்ளாட் இருக்கு. கும்பகோணத்துல நாலு ஏக்கர் நிலம் இருக்கு” என்று ஒருவர் சொல்லிக்கொண்டே வர, மகா பெரியவர், “”உனக்குன்னு என்ன சம்பாதிச்ச” என்று கேட்க, அவர் மறுபடியும் வேறு சில சொத்து களைச் சொல்ல, “”நான் கேட்கறது உனக்குன்னு நீ சம்பாதிச்சது என்ன” என்று கேட்க, அவருக்குப் புரிந்துபோய் விக்கி விக்கி அழ, “”எதுவுமே சம்பாதிக்கவில்லை” என்று கைவிரிக்க, “”போ. போய் உனக்குன்னு ஏதாவது சம்பாதி” என்று அவர் திருப்பி அனுப்பிய கதை எனக்கு ஞாபகம் இருக்கிறது.

“”மகாபெரியவா இந்த பிச்சைக்காரனைப் பார்த்து, “நீ சூரிய வம்சமா’ என்று கேட்டார். நான் “ஆமாம்’ என்று பதில் சொன்னேன். அவர் முன்பு சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தேன். அப்படியே காணாமல் போனேன். நான் எழுந்திருக்கவே இல்லை. என்னைப் பார்த்து பெரியவா மெல்ல சிரித்தபடி நகர்ந்து போய்விட்டார் என்று பிற்பாடு கேள்விப்பட்டேன். யாரோ சிரமப்பட்டு எழுப்பி உட்காரவைத்து சுவரோரம் சாய்த்து வைத்தார்கள். நான் அப்படியே இருந்தேன்.” பகவான் பேசினார்.

“”பால்குமார், குரு நமஸ்காரம் என்பது காணாமல் போவதுதான்.” எனக்கு அழுவதைத் தவிர, வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை. இன்னும் என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறேனே என்ற வெட்கம்தான் என்னைத் தாக்கியது. “”இட் ஈஸ் இன்னர் சர்கிள் பால்குமார். நீங்களெல்லாம் நெருங்கியவர்கள். இது முந்தைய ஜென்மத்து தொடர்பு. மறுபடி மறுபடி தொடர்பு கொள்வோம். அதுதான் விதி. அப்படித்தான் நடக்கும். பால்குமார், இஃப் அட் ஆல் தேர் ஈஸ் எனி ரீ பர்த், திஸ் பெக்கர் ஈஸ் லைக் டு வித் பாலகுமாரன்” என்று பத்து பன்னிரண்டு முறை முணுமுணுப்பாகவும், உரத்த குரலிலும் என்னிடமும், அங்குள்ள நண்பர்களிடமும் சொன்னார். “ஒருவேளை இந்த பிச்சைக்காரனுக்கு மறுஜென்மம் என்று இருந்தால், அவன் பாலகுமாரனோடு இருக்க விரும்புகின்றான்’ என்று பறையறிவிப்பதுபோல பேசினார். அது ஒரு சத்தியவாக்குபோல எல்லார் முன்பும் வைக்கப்பட்டது.

அவருக்கு மறுபிறவி உண்டா. இல்லை. இருக்காது. எனக்கு பிறவி உண்டு. அந்த பிறவியின் ஆரம்பத்தில் நான் அவருடைய விஷயத்தை உள்வாங்கி, வேறுவிதமான ஒரு உன்னதமான வாழ்க்கையை நடத்துவேன் என்று தோன்றியது. அதற்கான பயிற்சிகள்தான் இந்த ஜென்மத்தில் நடந்துகொண் டிருக்கின்றன என்ற எண்ணம் ஏற்பட்டது.

“எப்போதோ நடந்த காரியம். முழுவதும் உண்மை. ஒரு பொல்லாப்பும் இல்லை’ என்ற யாழ்ப்பாணத்து யோகர் ஸ்வாமிகளின் மகாவாக்கியங்கள் என்னுள் கத்தியைப்போல சொருகப்பட்டன. அந்த வாக்கியங்களின் முழு கனம் எனக்கு முற்றிலும் புரிந்தது.

(தொடரும்)


கிடைப்பதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்றவர் யாவரும் சதாசிவனைப் பூஜிப்பதாலேயே பிறவிப் பயனை அடைவர் என்று ஐந்தாவது வேதமாகிய மகாபாரதம் கூறுகிறது.

“துர்லபம் ப்ராப்ய மானுஷ்யம் யே
அர்ச்சயந்தி ஸதாசிவம்
தேஷாம் ஹி ஜன்ம சாபல்யம்
க்ருதக்ருத்யா நராஸ்து தே.’

“பிறவாமைவேண்டும் மீண்டும் பிறப் புண்டேல் உனை என்றும் மறவாமை வேண்டும்’ என தமிழ்மூதாட்டி ஔவையும் வேண்டுவார்.

உலகில் மனிதன் பிறக்கும்பொழுதே மூவகைக் கடமைகளை- கடன்களை உடையவனாகவே பிறக்கிறான். அவை தேவகடன், ரிஷிக்கடன், பித்ருக்கடன் என்பவை. இவற்றில் ஒன்றையும் விட்டுவைக்காது, தனது வாழ்நாளில் செய்து முடித்துவிடவேண்டும். அதேசமயம் எல்லாரும் யாகமும் நித்யபூஜையும் செய்துவிடமுடியாது. எனவே இவற்றைச் செய்யமுடியாதவர்களுக்கு பொதுவாக தேவகடன் தீரவும், தெய்வங்களை மகிழ்வித்திடவும் ஒரு வாய்ப்பாக சாந்தி ஹோமங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றைச் செய்வதனால் கடமை தவறியதால் ஏற்படும் குற்றம் நம்மைப் பற்றாதிருப்பதுடன், நற்பயனும் ஏற்படுகிறது.

மேலும் அறம் வளர்த்திடவும், மகனைப் பெற்றிடவும் என இரு காரணங்களுக்காகவே மனிதன் திருமணம் செய்துகொள்வது அவசியமாகிறது; போகத்திற்கு மட்டுமல்ல. மகனைப் பெறுவதனால் ஒரு மனிதன் வாழ்வில் நிறைவு பெறுகிறான் என்கிறது வேதம். ஒருவன் புலன் வழியே மட்டும் வாழாது, நன்னெறியில் வாழ்வதே முறையாகும்.

உலகில் பெண்களே அறம் வளர்க்கும்- படைக்கும் சக்திகள். எனவேதான் மனைவி மட்டும் தர்மபத்தினி எனப்படுகிறாள். புனித சமஸ்காரம் செய்துகொண்ட ஒருவர், அந்த சமஸ்காரம் செய்துகொள்ளாத பெண்ணோடு வாழுதல் முறையாகாது என்பதாலேயே, பெண்களுக்கும் அவர்களுக்கு பதியாகிய ஆடவர்க்கும் சடங்கு செய்யப்படுகிறது. ஒரு சமயத்தின் வழியாக, குருவருளால் இறைவனின் திருவருளைப் பெற்றிடவும், ஆன்மா நித்யகர்மானுஷ்டானத்திற்கான தகுதியை இழக்காமல் பாதுகாத்திடவும், அறநெறியில் வாழ்ந்திடவும், புனிதமும் புண்ணியமும் பெற்றிடவும் செய்யப்படும் உடலுக்கான கிரியைகளே சடங்குகள். ஆனால் குறிப்பிட்ட ஒரு பயனைப் பெறும் நோக்கிலும், குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தின் காரணமாகவும், தாம் விரும்பாதபோதிலும் செய்துகொள்ள வேண்டியவை உக்ரரத, பீமரத, விஜயரத சாந்திகள். பூஜை அல்லது பரிகாரம் என்பவை ஹோமமின்றியும் செய்யபடலாம். ஆனால் விசேஷ சாந்திகள் ஜெபம், ஹோமம், தானம் இவற்றுடன் மட்டுமே செய்யத்தக்கவை என்பதை அறிந்திடவேண்டும்.

சாந்தி வகை

பெண்களுக்கு முதலாவது பூப்பு (ரஜஸ்) ஏற்படும்போது, அத்தருணத்தின் திதி, வாரம், நட்சத்திரம் முதலானவற்றால் தோஷங்கள் ஏற்பட்டு, அவர்களுக்கு பலவகையில் தீமைகள் விளையலாம். அவை ஏற்படாதவாறு தடுப்பதற்குச் செய்யப்படும் முதற்சாந்தி ருதுசாந்தி ஹோமமாகும்.

பெண்களுக்கு திருமணம், கர்பாதானம், பும்ஸவனம், சீமந்தம் போன்ற சமயங்களிலும், வால்நட்சத்திரம் முதலான தீய சகுனம் ஏற்படும் காலங்களிலும்; பூத- ப்ரேத- பைசாசங்களால் தொல்லை ஏற்படும்பொழுதும்; மனிதர்களாலும் மிருகங்களாலும் இடையூறு உண்டானபொழுதும், அனைத்து தோஷப் பரிகாரமாக, ஒரு கலசநீரில் உரிய வேதமந்திரங்களால் மந்திரித்து, மந்திரித்த மூன்று மணிநேரத்திற்குள் நீராட்டி, மாலையில் செய்யப்படுவது உதகசாந்தி எனப்படும்.

குழந்தை பிறக்கையில் அதன் தொப்புள்கொடி அதன் கழுத்தில் மூன்று சுற்றாக சுற்றிக்கொண்டு பிறந்தால், அக்குழந்தையை கெடுதலிலிருந்து காத்திடவும்; பலவாறாக அமைந்த நாபிக்கொடியுடன் பிறந்தால் தாய்மாமன் முதலானோருக்கு ஏற்படும் தீமையிலிருந்து பாதுகாப்பதற்காகவும் குழந்தையின் தகப்பனால் செய்யப்படுவது நாளவேஷ்டன சாந்தி எனப்படும்.

குழந்தையானது ரோகிணி, கேட்டை, மூலம் உள்ளிட்ட சில நட்சத்திரங்களின் குறிப்பிட்ட பகுதியில் பிறந்தால், அதனால் குழந்தையின் தாய்மாமன் முதலான உறவினர்களுக்கு ஏற்படக்கூடிய தீமையிலிருந்து காத்திடவும்; உறவையும் சிசுவையும் பராமரித்திடவும், 11-ஆம் நாளிலோ, ஆறு மாதத்திற்குள்ளோ செய்யப்படுவன நட்சத்திர சாந்திகள் ஆகும்.

ஒரு குழந்தையானது, தாய் அல்லது தந்தை மற்றும் உடன்பிறந்தவர்கள் ஆகியோருடைய நட்சத்திரத்தில் பிறந்தால், அதே நட்சத்திரமுடைய உறவினர்களுக்கு ஊறுவிளையலாம்.

அவ்வாறு ஏற்படாமல் இருக்க செய்யப் படுவது ஏக நட்சத்திர சாந்தியாகும்.

ஒரு குழந்தை, தேய்பிறை, சதுர்த்தசி திதியில் பிறந்தால் பலருக்கு பலவகையில் தீமையை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க செய்யப்படுவது கிருஷ்ண சதுர்த்தசி ஜனன சாந்தியாகும்.

ஒரு குழந்தை, அமாவாசையன்று முன்பாதியில் பிறந்தால் தகப்பனாருக்கும், பின்பாதியில் பிறந்தால் தாயாருக்கும் கெடுதி நேரலாம். உடன்பிறந்தவர்களுக்கும் கெடுதி ஏற்படலாம். எனவே அவ்வாறு வராமலிருக்க செய்யப்படுவது அமாவாஸ்ய ஜனனசாந்தியாகும்.

தினக்ஷயம், வியதீபாதம், வியாகாதம், வைதிருதி, சூலம், கண்டம் போன்ற கெட்ட காலத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அக்குழந்தையின் உறவினர்களுக்கு தீமை நேராமலிருக்க செய்யப்படுவது தினக்ஷயாதி ஜனனசாந்தியாகும்.

ஒருவர் வாழ்நாளில் பாம்பை அடித்தா லும் பிரித்தாலும் கொன்றாலும் பல ஜென்ம காலங்களுக்கான பெரும் தோஷம் ஏற்பட்டு, அந்த வம்சம் அழிந்துபோகின்றது என்று சிவாகமங்கள் விளக்குகின்றன. முன்ஜென்ம ஜென்மாந்திரத்தில் பாம்பைக் கொன்றிருந் தாலும் அத்தகையவருக்கு குழந்தை பிறப்பதில் தடை உண்டாகும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். எனவே குழந்தை பிறப்பதற்காகச் செய்யப்படுவது சர்ப்ப சாந்தி எனப்படும்.

ஒரு குழந்தை இறந்து பிறந்தாலோ, பிறந்தவுடன் இறந்தாலோ, ஒரு வருஷத்திற்குள் இறந்தாலோ, ஐந்து ஆண்டுகள் வளர்ந்து இறந்தாலோ, அக்குழந்தையின் தாயைத் தூற்றுவார்கள். எனவே அத்தகைய தோஷம் நீங்குவதற்காக செய்யப்படும் சாந்தி ஹோமம் சிம்சுமாரக சாந்தி எனப்படும்.

குழந்தை பிறந்து ஓராண்டு நிறைவுபெற்றதும், குழந்தை தீர்க்காயுள் பெறும் பொருட்டாகச் செய்யப்படுவது அப்த பூர்த்தி சாந்தி எனப்படும்.

ஒருவர் ஐம்பத்தொன்பது ஆண்டு வளர்ந்து, அறுபதாவது ஆண்டு பிறக்கும் போது செய்யப்படுவது உக்ரரத சாந்தி.

அறுபது ஆண்டு நிறைவடைந்து, அறுபத்து ஒன்றாவது ஆண்டு பிறக்கும் நாளன்று செய்யப்படுவது ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி எனப்படும். இச்சாந்தியின் முடிவில், தம்பதியர் சாந்தி கலசாபிஷேகத் திற்குப் பின்பு மாங்கல்யதாரணம் (தாலி அணிவிப்பு) செய்துகொள்வர்.

ஒருவருக்கு அறுபத்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து எழுபதாவது ஆண்டு தொடங்கும்பொழுது ஒரு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, பிள்ளையின் மகனான பேரனது பிள்ளையை (ப்ரபௌத்ரனை) காண்பதற்காகவும், ஆயிரம் பூர்ணசந்திரனைக் கண்டுமுடிப்பதற்காகவும், நூற்றாண்டு காலம் வாழவேண்டும் என்பதற் காகவும் செய்யப்படும் சாந்திஹோமம் பீமரத சாந்தியாகும். இதில் மாங்கல்யதாரணம் விதிக்கப்படவில்லை. உக்ரர், பீமர் இவர்கள் ருத்ரமூர்த்திகள் ஆவர்.

எழுபத்தி எட்டாவது வயது தொடங்கும் பொழுது செய்யப்படுவது விஜயரதசாந்தி எனப்படும். இதனை செய்துகொள்வதால், ஒரு தசாப்தம் எனப்படுகிற ஒன்பது கிரகங்க ளின் முழுமையான காலதசையாகிய நூற்றிருபது ஆண்டுகள் நன்கு வாழ்வர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எழுபத்து எட்டாவது வயதில் செய்யப் பட்ட விஜயரத சாந்திக்குப் பிறகு- அதாவது எண்பது ஆண்டுகளைக் கடந்து மேலும் எட்டு மாதங்கள் முடியும் காலகட்டத்தில் செய்யக்கூடியது ஸஹஸ்ர சந்திர தரிசன சாந்தியாகும். இங்கு சிலர் பிறைச்சந்திரனைக் காண்பதாகக் கூறுகின்றனர். முழுநிலவு தினமான மாதப்பௌர்ணமியே கண்டு தியானித்து வழிபடத்தக்கது. எனவே முழுநிலவைக் காண்பதாக கணக்கிடுவதே சிறந்ததாகும். சிலர் அன்றே சதாபிஷேகம் செய்துகொள்கின்றனர்.

80 வயதுமுதல் 100 வயது வரையுள்ள காலகட்டத்தில், அத்தம்பதியை சிவன்- பார்வதியாகவே கண்டு, அவர்கள் தீட்சை பெறாதிருந்தாலும்கூட அதனை செய்து முடித்து, சிவசக்தி ஸ்வரூபமாகக் கருதி கலசநீரால் முழுக்காட்டி ஆசிபெறுவதே சதாபிஷேகம் எனப்படும். இது மற்றதைப்போல் சாந்திவகை ஆகாது. சதாபிஷேகம் என்பது தம்பதிக்கு சிவனாரின் தகுதியை அங்கீகரித்து, சிவத்துவ சம்பாதக பட்டாபிஷேகமாக செய்யப்படுவதாகும்.

இத்தகைய வழிமுறைகளெல்லாம், மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து பிறவிப் பயனை அடைவதற்காகவே வகுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறியவேண்டும்.

(தொடரும்)