தீபாவளி

தீபாவளியன்று அதிகாலை 4.00 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்துவிட வேண்டும். நீர் நிரப்பும் பண்டிகையை தீபாவளிக்கு முதல்நாள் கொண்டாடுவார்கள். பெரிய அண்டாவை தூய்மைசெய்து பொட்டிட்டு நீர் நிரப்புவார்கள். பின் அதில் ஆல், அத்தி, அரசு, பலா, மாவிலங்கை என ஐந்து மரப்பட்டைகளை ஊறவிடுவார்கள். தீபாவளியன்று அதிகாலை மூன்று மணிக்கே சுடவைத்துவிடுவார்கள்.

இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெய்விட்டு, அதில் ஓமம், பூண்டு, வேப்பிலை, வெற்றிலை, புழுங்கல் அரியைப் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயைத்தான் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

தீபாவளி மருந்தை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கலாம். வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். வேப்பிலை, வெற்றிலை, ஓமம், மிளகு, சீரகம், வெல்லம் ஆகியவற்றை அரைத்து, அதில் நெய்விட்டுக் கிளறி தேன்கலந்து, கங்கா ஸ்நானம் முடிந்தபின் நெல்லிக்காயளவு விழுங்க வைப்பார்கள். இப்படி தீபாவளி வெந்நீர், எண்ணெய், லேகியம் யாவும் சளி, ஜுரம் வராமல் தடுக்கும். சாப்பிடும் தீபாவளி பட்சணத்தால் வரும் வயிறு உபாதையையும் தடுக்கும்.

அன்றுமட்டும் எல்லா நீர் நிலைகளிலும் விடியற்காலைக்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை ஆவிர்பவித்திருப்பாள். எங்கு நீராடினாலும் கங்கா ஸ்நானம்தான்.

பாற்கடலைக் கடைந்தபோது பல பொருட்கள் தோன்றின. அப்போது மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானும் தோன்றினார். கையில் அமுத கலசம், மருத்துவ ஓலைச்சுவடிகளுடன் காட்சிதந்தார். தீபாவளியன்று அவரை வணங்கி தீபாவளி லேகியம் சாப்பிட்டால் நோய் அண்டாது.

தீபாவளி பூஜைகள்மகாலட்சுமி பூஜை

கங்கா ஸ்நானம் முடிந்தபின் பூஜையறையில் மகாலட்சுமி விக்ரகம் அல்லது படம் வைத்து அலங்கரித்து, இருபுறமும் விளக்கேற்றி, இனிப்புப் பண்டம் வைத்து, வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடவேண்டும். பூஜை முடிந்தபின் சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழவேண்டும். இதனால் செல்வம் பெருகும். கன்னிகளுக்குத் திருமணம் கைகூடும். பிள்ளைப்பேறு கிட்டும். சுமங்கலிகள் மேன்மையடைவார்கள்.

லட்சுமி குபேர பூஜை

தீபாவளிக்கு மறுநாள் செய்யலாம். இப்பூஜையில் குபேர படத்துடன் மகாலட்சுமி படம் வைத்துப் பூஜிக்கவேண்டும். “சுக்லாம் பரதரம்’ என்று கணபதி பூஜை ஆரம்பித்து, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை குங்கும அர்ச்சனை செய்து, “ஓம் குபேராய நம, ஓம் மஹாலட்சுமியே நம’ எனக் கூறி பூஜை செய்யவேண்டும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து அனைவருக்கும் வழங்கவேண்டும். சென்னை அருகிலுள்ள ரத்தினமங்களத்தில் லட்சுமி குபேரனுக்கு தனி ஆலயம் உள்ளது. இங்கு தீபாவளிக்கு மறுநாள் மிக சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.

குலதெய்வ வழிபாடு

நம் வீட்டு குலதெய்வத்தை- குறிப்பாக பெண் தெய்வங்களை நினைத்து, அவர்களுக்குப் பிடித்த உடை, நிவேதனங்களுடன் வணங்கவேண்டும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மேலும் சிறப்பாகும்.

முன்னோர் வழிபாடு

நம் வீட்டில் இறந்துபோன முன்னோர்களுக்குப் பிரியமானவற்றைப் படைத்து அவர்கள் ஆசியைப் பெறவேண்டும். இதனால் நம் குடும் பத்திற்கும் வம்சத்திற்கும் நன்மை கிடைக்கும்.

 

கேதாரகௌரி நோன்பு

இவ்விரதத்தை ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் பெண்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நோன்பினை பார்வதிதேவி கடைப்பிடித்து ஈசனின் பாதி உடலைப் பெற்றாள். இப்பூஜை செய்வதால் கணவருடன் இணைபிரியாது வாழலாம்.

நோன்பு நோற்கும் முறை: பூஜையறையில் சுவாமி படத்தின்முன் 21 இழை மஞ்சள் சரடு வைத்து, 21 அதிரசம் வைத்து கௌரி பூஜை செய்து, பின்னர் கணவனை வணங்கி சரடு கட்டிக்கொள்ளவேண்டும். மாங்கல்ய பலம் கூடுவதுடன் கணவனின் ஆயுளும் விருத்தியடையும்.

காஞ்சி அருகே உத்திரமேரூரில் உள்ள கேதார கௌரீஸ்வரர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தீபாவளியன்று ஏராளமான பெண்கள் இந்த நோன்பினை மேற்கொள்வர். ஆலய லிங்கத்தின்மீது சரடுகளை வைத்து அர்ச்சகர் பூஜித்துக் கொடுக்க, பெண்கள் 21 அதிரசம் வைத்துப் படைத்துவிட்டு அந்த சரடைப் பெற்றுக்கொண்டு இல்லம் வந்து, கணவன் காலடியில் நமஸ் காரம் செய்தபின் சரடைக் கட்டிக்கொள்வார்கள்.

காசியில் தீபாவளி

காசியில் உள்ளோர் நிஜமாகவே கங்கா ஸ்நானம் செய்துவிட்டு அன்னபூரணியை வழிபடுவார்கள். அன்று அன்னை தங்கமயமாக ஜொலிப்பதை முழுமையாக தரிசிக்கலாம். அன்றிரவு, தங்க அன்னபூரணி லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் ஊர்வலம் வருவாள். அவளுக்குமுன் தங்க காலபைரவர் வலம்வருவார். இவரை கருவூலப் பெட்டகத்திலிருந்து எடுத்து வந்து ஊர்வலம் நடத்துவார்கள். முடிந்தபின் மீண்டும் கருவூலப் பெட்டகத்திலேயே பாதுகாப்பாக வைத்துவிடுவார்கள். ஊர்வலம் முடிந்தபின் லட்டுத் தேர் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

அன்னலிங்கம்

இதை தென்னாட்டவர்கள் காசியில் ஆண்டுதோறும் கொண்டாடுவார்கள். காசி கங்கைக்கரையில் மீராகாட் பகுதியை தூய்மை செய்து கோலமிட்டு, தலைவாழை இலையைப் பரப்பி, அதன்மீது சுத்த அன்னத்தால் அன்னலிங்கம் அமைப்பார்கள். மூன்று சதுர அடி பரப்பில் இரண்டு அடி உயரத்தில் லிங்கம் அமைத்து, அதன்முன் சிறிய அன்ன நந்தி அமைப்பர்.

அன்னலிங்கத்தை லட்டு, வடை, பலகாரங்கள், காய்கறிகளால் அலங்கரித்து பூமாலையும், ருத்திராட்ச மாலையும் அணிவிப்பார்கள். பின் 11 மணிக்கு யாத்ரீகர் முன்னிலையில் பூஜை செய்து, பின் 200 பிச்சைக்காரர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பார்கள். பின் 31 ரூபாய் தட்சணை தருவார்கள். இது தீபாவளியன்று நடைபெறும். முன்பெல்லாம் பிராமணர்களுக்குத் தந்த விருந்தை இப்போது பிச்சைக்காரர்களுக்குத் தருகின்றனர்.

துளசி கல்யாணம்

தீபாவளிக்குப்பின் வரும் துவாதசியன்று துளசி கல்யாணம் செய்வார்கள். மணப்பெண் துளசி; மணமகன் நெல்லிக்கொம்பு. (திருமால்). அன்று துளசி மாடத்திற்கு செம்மண் இட்டு, செடிக்கு மாலை போட்டு, மாடத்தின்முன் கோலமிட்டு விளக்கேற்றி, துளசிக்கும் நெல்லிக் கொம்பிற்கும் ஆடை அலங்கரித்து பெண்கள் பூஜை செய்வார்கள். இதனால் சுமங்கலி பாக்கியம்
கூடும் என்பர்.


ரங்கன் பெறும் சீர்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் மாமனார் பெரியாழ்வார்; ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை. இவரிடம் தீபாவளியன்று ரங்கர் சீர் பெற்றுக்கொள்வார்.

கோவில் சிப்பந்திகளுக்கு கோவில் சார்பில் முதல் நாள் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள் கொடுப்பார்கள். மறுநாள் தீபாவளியன்று நீராடியபின் ஆலயம் வருவார்கள். அங்கு அவர்களுக்கு புத்தாடைகள் வழங்குவார்கள். அத்துடன் ஆலயத்திலுள்ள ஆழ்வார்கள் சந்நிதிகளில் திருமஞ்சனம் செய்வித்து புத்தாடை அணிவிப்பார்கள்.

அதன்பின் அனைவரும் கிளிமண்டபத்திற்கு வந்துசேர்வார்கள். ரங்கநாதர் திருமஞ்சனமானபின் புத்தாடை அலங்காரத்துடன் சந்தன மண்டபம் வந்தடைவார். அங்கு மாமனார் சீர்வரிசை தர காத்துக்கொண்டிருப்பார். ரங்கர் வந்ததும், 1,000 ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புத்தாடைகளில் கட்டி ரங்கனின் காலடியில் வைப்பார்கள். மாமனாரிடம் சீர்பெற்றபின் ரங்கர் ஒரு ரூபாய் நாணயத்தை பக்தர்களுக்குத் தருவார். இதைக் காண்பவர்களும் பெறுபவர்களும் பணத்தட்டுப்பாடின்றி நன்கு வாழ்வார்கள்.

சிரார்த்தம் செய்யும் சாரங்கன்

ஒவ்வொரு தீபாவளி அமாவாசையன்றும் குடந்தை சாரங்கபாணி கோவிலில் ஆராவமுதன் வலது மோதிர விரலில் பவித்திரம் அணிந்து, அர்ச்சகர் கையில் தர்ப்பை அளித்து சிரார்த்தம் செய்ய உத்தரவிடும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமிக்கு அன்று சிரார்த்த சமையல்தான் நிவேதனம் செய்யப்படும். பின் இரண்டு பிராமணர்களுக்கு சிரார்த்த திதி போஜனம் அளிப்பார்கள்.

சாரங்கபாணி கோவிலுக்கு 140 அடி உயர ராஜகோபுரம் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் லட்சுமி நாராயணன் எனும் பக்தர். பலரிடமும் உதவிபெற்று செய்து முடித்தார். இதற்காக அவர் திருமணம்கூட செய்துகொள்ளவில்லை. ஒரு தீபாவளியன்று அவர் பரமபதம் சேர்ந்தார். பிள்ளையில்லாத அந்த பக்தருக்காகவே சாரங்கபாணி சிரார்த்தம் கொடுக்கிறார்.

தீபாவளியன்று நடந்தவை

ஆதிசங்கரர் ஞானபீடம் நிறுவினார். ராமர் வனவாசம் முடிந்து திரும்பிய நாள். விக்ரமாதித்தன், மகாபலி, நரகாசுரன் மகன் பகதத்தன் ஆகியோர் முடிசூட்டிக் கொண்டு அரியணை ஏறிய நாள். ஜைனகுரு மகாவீரர், சீக்கியகுரு குருநானக், ஆரிய சமாஜ தயானந்த சரஸ்வதி ஆகியோர் முக்திபெற்ற தினமும் தீபாவளிதான். பாண்டவர்கள் வனவாசம் முடித்து இந்திரப் பிரஸ்தம் திரும்பிய நாளும் இதுதான்.

பாற்கடல் கடைந்தபோது லட்சுமி தேவி தோன்றினாள். தோன்றிய அன்றே திருமாலை மணந்துகொண்டாள். குபேரன் தான் இழந்த தன் நிதிகளை திரும்பப்பெற்றதும் தீபாவளி தினத்தில்தான்.

வரலாற்றில் தீபாவளிமதுரை மாநகரில் திருமலைநாயக்கர் ஆட்சியில்தான் தீபாவளிப் பண்டிகை அறிமுகமானது என்பர்.

கி.பி. 1117-ல் சாளுக்ய திரிபுவன மன்னன், தன் கன்னட கல்வெட்டில் ஆண்டுதோறும் தீபாவளியன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளிப் பரிசு தந்ததாக குறிப்புகள் உள்ளன. தென்னிந்திய தீபாவளியின் முதல் குறிப்பு இதுதான். குடந்தை சாரங்கபாணி ஆலய கல்வெட்டில் தீபாவளியன்று இறைவனுக்கு விசேஷ பூஜை செய்ய மானியம் அளித்த தகவல் உள்ளது.

அதுபோல காளஹஸ்தி ஆலயத்திலுள்ள கல்வெட்டில் தீபாவளியன்று விசேஷ பூஜைகள் நடைபெற்றது குறிக்கப்பட்டுள்ளது.

மொகலாயப் பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து சமபந்தி போஜன முறை செய்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் குறிப்புகள் உள்ளன.

பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளி என்றும், காமசூத்ராவில் கூராத்திரி என்றும், காலவிவேகம், ராஜமார்த்தாண்டம் ஆகிய நூல்களில் தீபாவளியை சுக்ராத்திரி எனவும் கூறியுள்ளனர்.

தஞ்சை சரஸ்வதி மகாவிலிலுள்ள ஆகாச பைரவர் ஜல்பம் என்ற ஓலைச் சுவடியில் வாண வேடிக்கை பற்றிய குறிப்புகள் உள்ளன.

சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம் பிக்கப்பட்டது.

தீபாவளி பட்டாசு வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப என்ற உருதுச் சொல்லே மத்தாப்பு ஆனது.

………………………………………………………………………………………………………………………………..

 

தமிழகத்தில் தீபாவளியைக் கொண்டாடும் கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் திருக்கொள்ளம்புதூர் என்னும் தலமும் ஒன்று.

பாவங்கள் போக்கும் பஞ்சாரண்ய திருத்தலங்களுள் ஒன்று திருக்கொள்ளம்புதூர் எனப்படும் வில்வவனம். மற்றவை திருக்கருகாவூர் எனப்படும் பாதிரிவனம்; அவனியநல்லூர் என்ற முல்லைவனம்; அரித்துவாரமங்கலம் என்னும் வன்னிவனம்; திருஇரும்பூளை என்னும் ஆலங்குடி. இவை ஐந்தும் தொன்மையான தலங்களாகும்.

மேற்கண்ட தலங்களனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த காலபூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், இந்த ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.

பஞ்சாரண்ய தலங்களில் முதல் தலம் திருக்கருகாவூர். இது தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலிருந்து தெற்கே ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. வாகன வசதிகள் உள்ளன. விடியற்காலையில் தரிசிக்கவேண்டிய தலமாகும். சோழ நாட்டில் போர் நடந்தபோது கர்ப்பிணிப் பெண்கள் திருக்கருகாவூருக்கு அனுப்பி பாதுகாக்கப்பட்டார்கள் என்பது வரலாறு.

இங்குள்ள சிவலிங்கத்திருமேனி சுயம்புலிங்கம். முன்பு இப்பகுதி முல்லைக்காடாக இருந்தபோது, லிங்கத்திருமேனியின்மீது முல்லைக்கொடிகள் படர்ந்திருந்தன. அதனால் ஏற்பட்ட தழும்பினை லிங்கத்திருமேனியில் இப்போதும் காணலாம். இந்தச் சுயம்புமூர்த்திக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது.

கௌதமர், கார்கேய முனிவர்கள் இங்கு தவம் செய்தபோது, அவர்களுக்கு நித்ருவர் என்ற சிவபக்தரும், அவருடைய மனைவி வேதிகையும் பணிவிடை செய்துவந்தனர்.

பிள்ளைப்பேறு இல்லாத அவர்களின் ஏக்கத்தை அறிந்த முனிவர்கள், இறைவன் முல்லைநாதரையும் இறைவியையும் வேண்டிக்கொள்ளுமாறு உபதேசம் செய்தார்கள். அதன் பலனால் வேதிகை கருவுற்றாள்.

ஒருசமயம், வேதிகையின் கணவர் வெளியே சென்றிருந்த போது, கர்ப்பிணியான வேதிகை மயக்கநிலையில் சோர்ந்து படுத்திருந்தாள். அந்த வேளையில் ஊர்த்துவபாதர் எனும் முனிவர் அங்குவந்து பிட்சை கேட்க, மயக்கநிலையிலிருந்த வேதிகையால் எழுந்து பிட்சையிட முடியாமல்போனது. அதனால் கோபமடைந்த முனிவர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வருந்திய அவள் அம்பாளிடம் கதறியழுதாள். உடனே தேவியானவள் கர்ப்பரட்சகியாகத் தோன்றி, சிதைந்த கருவை ஒரு குடத்திலிட்டுப் பாதுகாத்து, பத்து மாதம் கழித்து “நைநுருவன்’ எனும் குழந்தையாக அவளிடம் கொடுத்தருளினாள்.

மகிழ்ச்சியடைந்த வேதிகை தன்னைப்போல மற்றவர்களையும் காத்தருளவேண்டுமென்று தேவியிடம் வேண்டினாள். அன்னையும் இசைவுதந்தாள். அன்றிலிருந்து இந்த அன்னை கர்ப்பத்தை ரட்சிக்கும் அன்னையாக ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை என்று போற்றப்படுகிறாள். இந்த அம்பிகையை வேண்டிட, குழந்தைச் செல்வம் கிட்டும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவமும் நடைபெறும். உஷத் காலமாகிய காலை 5.00 மணிமுதல் 6.00 மணிக்குள் இத்தல இறைவனையும் இறைவியையும் தரிசிக்கவேண்டும்.

அடுத்து, பஞ்சாரண்ய தலங்களில் இரண்டாவதான அவனியநல்லூர் செல்லவேண்டும். அங்கு காலை 8.30 மணிமுதல் 9.30 மணிக்குள் சௌந்தரநாயகி சமேத பாதிரிவனேஸ்வரரை தரிசிக்கவேண்டும். இத்தல இறைவன், இறைவியை வழிபட கண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். பார்வை நன்கு தெரியும். தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் இக்கோவில் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன. இத்தல இறைவன் பாதிரி மரத்தடியில் சுயம்புமூர்த்தியாக விளங்கியதால், பாதிரி மரமே இத்தல விருட்சமாகக் கருதப்படுகிறது.

பஞ்சாரண்ய திருத்தலங்களில் மூன்றாவது தலம் அரித்துவாரமங்கலம். கும்பகோணத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. உச்சிக்காலமாகிய காலை 11.00 மணிமுதல் 12.30 மணிவரை இத்தல இறைவனை வழிபடவேண்டும். இறைவன் ஸ்ரீபாதாளேஸ்வரர்; இறைவி அலங்கார அம்மை. கருவறையில் லிங்கத்திருமேனியின்முன் பெரியபள்ளம் இருக்கிறது. பள்ளத்தை பாழி என்றும் சொல்வர். இத்தலத்திற்கு திரு அரதைப் பெரும்பாழி என்ற பெயரும் உண்டு.

இத்தலத்தில் இறைவனின் திருவடியைக் காண திருமால் பன்றியாகத் தோன்றி பாதாளத்தை ஏற்படுத்தினார் என்றும்; இறைவன் அந்த பள்ளத்தை கல்லால் மூடினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட, மனஆழத்தில் பதிந்திருக்கும் கவலைகள், குழப்பங்கள், மனஅழுத்தம் ஆகியவை நீங்குமென்பது ஐதீகம்.

அடுத்து தரிசிக்கவேண்டிய தலம் ஆலங்குடி. இங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர்; இறைவி ஏலவார்குழலி. நவகிரகத் தலங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில், நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது, துர்வாச ரிஷி சிவபூஜை பிரசாதமாகிய மாலையைக் கொண்டுவருகையில், வழியில் இந்திரனைக் கண்டு அவனிடம் கொடுத்தார். அதை இந்திரன் அலட்சியமாக வாங்கி யானைத்தலையில் வைத்தான். அது அந்த மாலையைக் கீழேபோட்டு காலால் மிதித்து நாசமாக்கியது. இதனைக் கண்ட துர்வாசர் கோபம் கொண்டு, “”உன் பதவி, செல்வம் எல்லாம் அழியட்டும்” என்று சாபமிட்டார். முனிவரின் சாபம் உடனே பலித்தது. அவன் அமர்ந்திருந்த ஐராவதம் யானை மறைந்தது. பிச்சைக்காரன்போல் நடுவீதியில் நின்றான் இந்திரன். பின்னர் தன் தவறை உணர்ந்து வருந்தி, இத்தல இறைவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக தலபுராணம் குறிப்பிடுகிறது.

இத்தல இறைவனை மாலை நேர பூஜையில் தரிசித்தால் குரு தோஷம் நீங்கும். குருவின் திருவருளால் வேண்டியது கிட்டும். மேலும், தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் விசேஷமானதால், வியாழக்கிழமைதோறும் வழிபட தடைகள் நீங்கி, விரைவில் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். நல்ல பதவிகிட்டும்; கல்வியில் சிறந்து விளங்கலாம்.

ஐந்தாவதாக தரிசிக்கவேண்டிய திருத்தலம் திருக்கொள்ளம்புதூர். இது தீபாவளித் திருநாளுடன் தொடர்புடையது. தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் கொரடாச்சேரிக்கு அருகில் இத்தலம் உள்ளது. இறைவன் வில்வவனேஸ்வரர்; அம்பாள் சௌந்தராம்பிகை. இங்கு அர்த்தஜாம வழிபாடு புகழ்பெற்றது. இத்தலத்தின் மேற்கில் அகத்திய காவேரி என்கிற வெட்டாறு ஓடுகிறது. இதற்கு முள்ளியாறு என்ற பெயரும் உண்டு. ஓடம்போக்கி ஆறு என்று உள்ளூர் மக்கள் அழைப்பர். இத்தலத்தில்தான் இறைவன் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கி அருள்புரிந்தார் என்று புராணம் கூறுகிறது.

கொள்ளாம்புதூர் ஆலயத்தில், தீபாவளித் திருநாளன்று நள்ளிரவில் நடைபெறவேண்டிய அர்த்தஜாம பூஜை அதற்கு அடுத்த நாள் காலையில் நடைபெறுகிறது. இதற்குக் காரணமானவர் திருஞானசம்பந்தர்.

திருக்கருகாவூரில் உஷத்காலபூஜை, அவனியநல்லூரில் காலசந்தி, அரித்துவார மங்கலத்தில் உச்சிக்காலபூஜை, ஆலங்குடியில் சாயரட்ச பூஜை என்று கலந்துகொண்டு, திருக்கொள்ளம்புதூர் சென்று அர்த்தஜாம பூஜையில் கலந்துகொள்ள விரும்பினார் திருஞானசம்பந்தர்.

அன்று ஐப்பசி மாத அமாவாசை தீபாவளி தினம். இருள்சூழ்ந்த அந்த வேளையில் தம் அடியார்களுடன் புறப்பட்டார் திருஞானசம்பந்தர். வழியில் முள்ளியாற்றைக் கடந்து செல்லவேண்டும். ஆனால் ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தருடன் வந்த சீடர்கள் எல்லாம் வெள்ளத்தைக் கண்டு அஞ்சினர்.

பூஜை நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் படகுகள் இருந்தாலும் துடுப்புகள் இல்லை.

ஞானசம்பந்தர் துணிச்சலுடன் படகை அவிழ்த்து ஏறியமர்ந்து, சீடர்களையும் அழைத்தார். வெள்ளத்தையும் திக்கு திசை அறியமுடியாத அமாவாசை இருளையும் கண்டு சீடர்கள் தயங்கினர். உடனே சம்பந்தர் திருப்பதிகம் பாட, அவர்கள் தைரியம் பெற்று ஓடத்தில் அமர்ந்தனர்.

ஓடம் நீரில் இப்படியும் அப்படியும் அசைந்துகொண்டிருந்தது. துடுப்பில்லாமல் எப்படி ஓடத்தை சரியாக செலுத்தமுடியும் என்று சீடர்கள் யோசித்தனர். அப்போது சம்பந்தர், “கொட்டமே கமழும்’ என்ற பதிகத்தைப் பாடினார். இறையருளால் ஓடம் அமைதியாக நகர்ந்துகொண்டிருந்தது.

திருக்கொள்ளம்புதூர் கோவில் அர்ச் சகர்கள், திருஞானசம்பந்தர் வருகையை முன்னரே அறிந்திருந்ததால் அவரை வரவேற்க கோவில் வாசலில் காத்திருந்தார்கள். நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. அர்த்தஜாம பூஜைக்கான நேரம் கடந்துவிட்டது. சம்பந்தர் வராதால் அர்ச்சகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். சிறிது நேரத்தில் சூரியன் உதித்துவிடுமே என்று வருந்தினார்கள்.

அதேபோல் அதிகாலை நேரத்தில் சீடர் களுடன் திருஞானசம்பந்தர் கோவிலுக்கு வந்தார். அவருக்காக அர்த்தஜாம பூஜை உஷத்காலத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வு இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஐப்பசி அமாவாசையன்று துவங்கும் தீபாவளித் திருவிழா மறுநாளும் நீடிக்கப் படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வருகைதந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் ஓடத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

மேலும், இத்தலத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், இந்த ஊரில் இறப்பவர்களுக்கு சிவபெருமான் பஞ்சாட்சார மந்திரத்தை வலது செவியில் தாமே ஓதி முக்தியளிப்பதாக ஐதீகம்.

பஞ்சாரண்ய திருத்தலங்களை ஒரே நாளில் தரிசித்தால் முற்பிறவிப் பாவங்கள், வினைகள், இப்பிறவி தோஷங்கள் அனைத் தும் விலகுமென்பது ஐதீகம்.