அனுமன்வானிலே பறந்துசெல்லும் வல்லமை படைத்த அனுமன், அளப்பரிய ஆற்றல்கொண்ட சூரியதேவனிடம் கல்வி கற்க விரும்பினான். சூரிய பகவானும், அனுமன் வருங்காலத்தில் மக்களின் துன்பங்களைப் போக்கும் சக்தி கொண்டவன் என்பதையறிந்து, அனுமனை சீடனாக ஏற்றுக்கொண்டு ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

தனது தேரின் ஓட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் ஒரு கணம்கூட நிறுத்த இயலாது என்றும், அனுமனது முகத்தைப் பார்த்துதான் தன்னால் உபதேசிக்க இயலும் என்றும் சொன்னார்.

அந்த நிபந்தனைக்கு உடன்பட்டு, சூரிய பகவானைப் பார்த்தபடி தேரின் ஓட்டத்திற்கேற்ப பின்புறமாக ஓடிக்கொண்டே கல்வி பயின்றான் அனுமன்.

தன் மாணவன் பின்னோக்கி ஓடி சிரமப்படுகிறானே என்று பரிதாபப்பட்டாலும், தன் தேரோட்டத்தை நிறுத்தினால் உலகமே ஸ்தம்பித்து கோடிக்கணக்கான உயிர்கள் துன்பப்படுமே என்ற கவலையும் சூரியன் மனதில் எழுந்தது.

ஒருசமயம்…

கற்புக்கரசியான நளாயினியின் கணவன், ஒரு முனிவர் சொன்ன அறிவுரைகளைக் கேட்காமல் தாசி வீடு சென்று உல்லாசமாக இருந்தார். கோபம்கொண்ட முனிவர், “”நாளை சூரியன் உதிக்கும்போது நீ காலமாகக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.

இதையறிந்த நளாயினி, சூரியன் உதித்தால்தானே என் கணவர் மரணமடைவார் என்று, “”சூரிய பகவானே, நாளை நீ உதிக்காதே” என்று ஆகாயத்தைப் பார்த்துக் கட்டளையிட்டாள். பதிவிரதையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டார் சூரியன்.

ஓயாது ஓடிக்கொண்டிருந்த சூரிய ரதம் ஒரே ஒருநாள் நின்றது. பூலோகம் செயலற்றுப் போனது.

ஜீவன்கள் துன்பப்பட்டன. உடனே தேவர்கள், நளாயினியை சமாதானப்படுத்தினர். சாபம் கொடுத்த முனிவரும் தன் சாபத்தை மாற்றிக்கொண்டு கானகம் சென்றார்.

இவ்வாறு சூரியனின் ரதம் நின்றதும் பல நிகழ்வுகள் நடந்தன.


சூரியனின் தேரோட்டியான அருணன், வெகுநாட்களாக தேவலோகம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காண விருப்பம் கொண்டிருந்தான். இந்த ஒருநாள் விடுமுறையை அதற்குப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினான்.

அதே உருவத்தில் இந்திர லோகத்திற்கு சென்றால் அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த அருணன், அழகான அப்சரக்கன்னி வடிவெடுத்து இந்திரலோகம் சென்றான். அங்கே காவலர்கள் அவனைத் தடுத்தார்கள்.

“”நான் மேனகையின் தோழியான அருணாதேவி. மேனகைக்கு ஒப்பனை செய்பவள். இன்று அவசரத்தில் சரியாக ஒப்பனை செய்யவில்லை. அதனால் முகம் களையிழந்துவிடும்” என்று காவலர்களைப் பார்த்து புன்னகைத்தாள் அருணாதேவி.

அவளது புன்னகையில் மயங்கிய காவலர்கள், “இவள் மேனகையைவிட மிக அழகாக இருக்கிறாளே’ என்று அவளது அழகை ரசித்தபடி உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அங்கே மேனகையின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த இந்திரன், சபையினுள்ளே வந்தமர்ந்த அருணாதேவியைக் கண்டு, அவள் அழகில் நிலை குலைந்தான்.

நடனம் முடிந்ததும் எல்லாரும் சென்றுவிட, அருணாதேவியைப் போக விடாமல் அவள் முன்வந்து நின்றான். பெண்களை வசப்படுத்தும் கலையில் நிபுணனான இந்திரன், அவளைக் கட்டி யணைத்தான். அதன் விளைவாக அழகான குழந்தை ஒன்று பிறந்தது.

(தேவலோகத்தில் இனக்கவர்ச்சிக்குக் கட்டுப்பட்டால் பத்து மாத கர்ப்பம் இல்லை.)

“”மேனகையின் நடனத்தைக் காணும் ஆவலில் இங்கே வந்தேன். உண்மையில் நான் பெண்ணல்ல. சூரிய தேவனின் தேரோட்டியான அருணன். அழகிய பெண் வடிவில் வந்தது இப்போது வினையாகிவிட்டது. நாளை மீண்டும் நான் ஆணாகி தேரோட்டும் பணியைத் தொடரவேண்டும். அப்போது இது தாயில்லாத குழந்தையாகிவிடுமே. என் செய்வேன்?” என்று வருந்தினான் பெண்ணாக இருந்த அருணன்.

அதற்கு இந்திரன், “”கவலைப்படாதே அருணாதேவி. இந்தக் குழந்தையை அகல்யா தேவியிடம் ஒப்படைத்துவிடு. அவள் வளர்த்துக்கொள்வாள்” என்று ஆலோசனை கூறினான்.

அதன்படியே அகல்யாதேவியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அருணாதேவி மீண்டும் அருணனாக மாறி சூரியலோகம் வந்தடைந்தான்.

மறுநாள் தேர் ஓட்டுவதற்கு வந்தான் அருணன். அவன் முகத்தில் ஏதோ கவலை சூழ்ந்திருப்பதைக் கண்ட சூரிய பகவான், “”எங்கே நேற்று முழுவதும் உன்னைக் காணவில்லை?” என்று கனிவுடன் கேட்டார்.


அருணன், வெட்கத்துடன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொன்னான்.

“”அப்படியா?” என்று வியந்த சூரியன், “”நீ எடுத்த பெண் உருவத்தை நான் காணவேண்டுமே” என்று சொல்ல, வேறு வழியின்றி அருணன் மீண்டும் அருணாதேவியாக மாறினான்.

அவளது அழகில் மயங்கிய சூரியன் அருணாதேவியை நெருங்கி ஆலிங்கனம் செய்தார்.

இப்போது இன்னொரு குழந்தை அங்கே அழ ஆரம்பித்தது.

மீண்டும் ஆணாக மாறிய அருணன் சூரியனிடம், “”தேவனே, இந்திரனும் நீங்களும் உணர்ச்சிவசப்பட்டதால், இப்பொழுது இரண்டு தாயில்லாத குழந்தைகள் அவதரித்துவிட்டன. இந்தக் குழந்தையையும் அகல்யா தேவியிடம் ஒப்படைத்துவிடுகிறேன்” என்று சொல்லி, அப்படியே ஒப்படைத்தான்.

கௌதம ரிஷியின் மனைவியான அகல்யா, இரு குழந்தைகளையும் வளர்த்துவந்தாள். இந்த நிலையில், அகல்யாதேவி தவம் மேற்கொள்ள விரும்பினாள்.

இந்திரனுக்கும் சூரியனுக்கும் மகனாக அவதரித்த பிள்ளைகளால் தன் மனைவியின் தவம் கெட்டுவிடக்கூடாது என்றெண்ணிய கௌதம ரிஷி, அதற்கு என்ன செய்வதென்று யோசித்தார்.

வனத்தில், குரங்கு முகமுடைய வனராஜன் ஒருவன் மகப்பேறுக்காக ஒற்றைக்காலில் நின்று நெடுங்காலம் தவம் செய்வதை அறிந்த கௌதம ரிஷி, அந்த இரு குழந்தைகளின் முகங்களையும் வானரவடிவத்தில் மாற்றி அவன்முன் சமர்ப்பித்தார். குழந்தைகள் அழும் குரலைக் கேட்டு தவம் கலைந்த வனராஜன், தன்னைப்போல முகம் கொண்ட இரு குழந்தைகளைக் கண்டு, இறைவன் கொடுத்த வரம் என்று அன்புடன் அரவணைத்து எடுத்துச் சென்றான்.

அந்த இரு குழந்தைகளும் கிஷ்கிந்தை என்ற கானகத்தில் வளர்ந்தன.

இந்திரனின் புதல்வன்தான் வாலி. சூரியனின் மகன்தான் சுக்ரீவன்.

ராமகாவியத்தில் இந்த இருவரும் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள்.

“”அனுமனே! நீ என் மகன் சுக்ரீவனுக்கு என்றென்றும் துணையாக இருக்கவேண்டும். உன் ஞானம், பராக்கிரமம் அனைத்தும் அவனுக்கே பயன்படவேண்டும். இதுவே நான் எதிர்பார்க்கும் குருதட்சணை” என்று சூரியன் சொல்ல, அதை மனமார ஏற்றுக்கொண்டான் அனுமன்.

கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் அனுமனுக்குக் கற்றுத்தந்தார் சூரியன்.

அனைத்தையும் கற்றுணர்ந்த அனுமன் “நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டமும் பெற விரும்பினான். ஆனால், ஒரு குறிப்பிட்ட வியாகரணத்தைக் கற்கவேண்டுமானால் குடும்பஸ்தனாக இருக்கவேண்டும் என்பது நியதி. ஆகவே, அனுமன் மணம் புரியவேண்டும்.

சூரியதேவன், நவவியா கரணத்தை முழுவதும் கற்றுக் கொடுக்க விரும்பினார். அதற்காக தன் மகள் சுவர்ச்சலாதேவியை தன் மாணவனுக்குத் திருமணம் முடித்துவைத்தார் என்கிறது சூரியபுராணம்.

பிரம்மச்சாரி என்று பெரும்பாலோர் போற்றும் அனுமனின் திருமணக்கோலத்தை, சென்னை- செங்கல்பட்டு சாலையில், தைலாவரம் என்னும் திருத்தலத்திலுள்ள ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர் கோவிலில் தரிசிக்கலாம். இங்கு மூலவராக சுமார் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இதே கோவிலில் தனிச்சந்நிதியில் உற்சவராக சுவர்ச்சலாதேவி யுடன் பத்மபீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில், சுவர்ச்சலா சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சனேயர் என்ற திருநாமத்தில் பக்தர்கள் வேண்டுவதை அளித்து மகிழ்விக்கிறார்.

ஆக, அனுமனுக்கு குருவான சூரியனே மாமனாராகவும் ஆனார் என்கிறது புராணம்.


அனுமன் ஜெயந்தி 9-1-2016


பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களின் பிரார்த்தனையாலும், அயோத்தி மாநகர மக்களின் நற்பயனாலும், தசரத மகாசக்கரவர்த்தியின் புத்திர காமேஷ்டி யாகத்தின் பயனாகவும் பூலோகத்தில் சூரிய வம்சத்தில் ராமன் என்கிற பெயரில் மகாவிஷ்ணு அவதரித்தார் என்பதை இராமாயணம் நமக்கு சொல்லுகிறது. நல்லவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு அருளாசி தரவும், தீயவர்களைத் திருத்தவும் அல்லது அழிக்கவும் இந்த அவதாரம் நிகழ்ந்தது. இராமநாமத்தை ஜெபிப்பதால் கிட்டும் அதே பயன் இராமாயணத்தைக் கேட்டாலோ, படித்தாலோ, பாராயணம் செய்தாலோ கிட்டுமென்பது நம் முன்னோர்களின் வாக்கு.

திரேதாயுகத்தில், வாழ்க்கையை எப்படி அறநெறியுடன் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை செயல்வடிவில் விளக்குவதற்காகவே மகாவிஷ்ணு மானிட வடிவில் பிறந்தார். இராமன் காட்டிய வழி எது என்பதை விளக்குவதுதான் ஸ்ரீமத் இராமாயணம்.

“ராமாயணேதி யந்நாம
ஸ்க்ருதப்யுச்யதே யதா
ததைவ பாபநிர்முக்தா
விஷ்ணுலோகம் ஸ கச்சதி’

என்று இராமாயண மாகாத்மிய சுலோகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இராமாயணம் என்ற பெயரை எப்பொழுது ஒருவன் சொல்கிறானோ அப்போதே அவன் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு விஷ்ணு லோகத்தை (வைகுண்டம்) அடைகிறான் என்பது இதன் பொருள்.

இராமன், சீதையைத் தேடி கிஷ்கிந்தை எனும் காட்டில் செல்லும் வழியில், அனுமனின் நட்பு இராமனுக்குக் கிட்டியது. இராமனுக்காக செயற்கரிய செயலைச் செய்த- கம்பீரமான உருவம் கொண்ட அனுமனை நினைத்தாலே நம் மனதிற்குள் உற்சாகம் பெருகும். சரஸ்வதியை வணங்கினால் கல்வி, ஞானம் கிட்டும்; லட்சுமியை வணங்கினால் செல்வ வளம் கிட்டும் என்கிற நம்பிக்கையைப்போல தைரியம், வீரம் கிட்ட அனுமனை வணங்குதல் என்பது ஓர் நம்பிக்கை.

 


இராவணனால் சிறைப்பட்ட சீதையைத் தேட சம்பாதி, ஜாம்பவான் உள்ளிட்ட பல மாவீரர்கள் கடல்தாண்டி இலங்கைக்குச் சென்றுவரத் தயங்கியபோது தம்முடைய வீர தீரத்தை உணர்ந்து, தன்னால் இக்காரியத்தை நிறைவேற்ற முடியும் என்கிற அபரித தன்னம்பிக்கையில் துணிந்து அனுமன் ஏற்றுக்கொண்டது அனுமனின் தைரியத்திற்கு ஒரு சான்றாகும்.

இராமனுக்கு நிகரான பலத்தைப் பெற்றிருந்த பராக்கிரமசாலியான இலங்கை மன்னன் இராவணனை, சிங்கத்தின் குகைக்குள் சென்று அதன் பிடரியை உலுக்கியதுபோல இராவணனின் அரண்மனைக்கு தனியாக நேரில் சென்று அவனிடம் வாதிட்டது அனுமனின் வீரத்திற்கு சான்றாகும்.

வீரத்தையும் தைரியத்தையும் ஒருங்கே பெற்ற அனுமனின் முக்கிய மூன்று  அகப்பண்புகளான அன்பு காட்டியமை, சாதுர்ய திறமை, சக்தியுடன் கூடிய வீரம் என்பதை இராமாயணத் தின் சுந்தரகாண்டம் மூலம் அறியலாம்.

சுந்தரகாண்டத்தின் கதாநாயகனான அனுமன், சீதையின் இருப்பிடத்தை சம்பாதி எனும் பட்சிராஜன் (கழுகு) மூலம் அறிந்து இலங்கைக்குச் செல்ல ஆயத்தமானார் என்பதை சுந்தரகாண்டத்தின் கீழ்க்கண்ட முதல் சுலோகம் நமக்குத் தெரிவிக்கிறது.

“ததோ ராவணநீதாயா:
ஸீதாயா: ஸ்த்ருகர்சந:
இயேஷ பத மந்வேஷ்டும்
சாரணாசரிதே பதி:’

மகேந்திர மலையிலிருந்து (திருநெல்வேலி அருகே) கிளம்பி இலங்கைக்கு ஆகாயமார்க்கமாகச் செல்லும்போது அவருக்கு மூன்று இடைஞ்சல்கள் தொடர்ந்து வந்தன. அவற்றைத் தமது மதிநுட்பத்தாலும், அகப்பண்புகளாலும் தகர்த்து இராமகாரியத்தைச் செவ்வனே நிறைவேற்றினார். வீறுகொண்டு மிக வேகமாகப் புறப்பட்ட அனுமன் கடலைக் கடக்கும் போது மைநாக மலையால் முதல் தடை ஏற்பட்டது. இதைக் கம்பன்,

“இந்நாக மன்னா னெறிகாலென வேகும் வேலைத்
திந்நாக மாவிற் செறிகீழ்த்திசை காவல் செய்யும்
கைந்நாக மந்நாட் கடல்வந்ததொர் காட்சி தோன்ற
மைந்நாக மென்னு மலைவானுற வந்த தன்றே’

என்கிறார்.

சமுத்திரராஜனின் உதவி யால், கடலுள்ளே இருந்த மைநாகம் என்னும் மலை கடலிலிருந்து மேலே வந்து அனுமனை தன்மீது சற்று நேரம் அமர்ந்து இளைப் பாறுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டது. அங்ஙனம் ஓய்வெடுத்தால், தான் எடுத்த காரியம் நிறைவேறாது என்பதை உணர்த்தி, மலையைக் கைகளால் கட்டித் தழுவி புன்னகை புரிந்தவாறே அன்பு பாராட்டி, மைநாக மலையிலிருந்து விடுபட்டு மீண்டும் விண்ணில் பறந்தார்.

அனுமனின் வைராக்கியத்தை சோதிக்க தேவர்கள் இரண்டாம் தடையாக நாகங்களின் தாயான சுரசை என்கிற நாகர்கண்ணியின் உதவியை நாடினர்.

“மூன்றுற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்றுற்று வந்தான் வலியெம்மை யுணர்ந்து நீயென்
றான்றுற்ற வானோர் குறைநேர வரக்கி யாகித்
தோன்றுற்று நின்றாள் சுரசைப் பெயர்ச் சிந்தை தூயாள்’

என்று கம்பன் இதை விவரிக்கிறார்.

சுரசை எனும் பெயர் கொண்ட நாகமாதா நீண்ட நெடிய உருவம் எடுத்து வான்வெளியில் சென்ற அனுமனைத் தடுத்து, “நீ எனது வாய்க்குள் சென்று வெளியே வந்தால், உன்னை எனது இரையாகக் கொள்ளாமல் விட்டுவிடுவேன்’ எனக் கூறியது. இந்த சவாலை ஒருகணம் யோசித்த அனுமன் சரியென ஒப்புக்கொண்டு, சுரசையை வாய் திறக்குமாறு கூறி தனது உடலைப் பெருக்கிக் கொண்டார். அதற்கேற்ப சுரசை தனது வாயைத் திறந்தாள். இப்படியே இருவரும் போட்டிபோட்டு வளர்ந்து கொண்டிருந்த சமயத் தில், சட்டென்று தனது உருவத்தை சிறிய குரங்காக மாற்றிக்கொண்டு சுரசையின் வாய்க்குள் சென்று நலமுடன் வெளியே வந்து விட்டார். வாமன அவதாரத்தில், மகாவிஷ்ணு சிறிய குழந்தை வடிவில் வந்து பின்னர் எப்படி நீண்ட நெடிய உருவம் எடுத்தாரோ, அதுபோல நீண்ட நெடிய உருவம் கொண்ட அனுமன் பின்னர் சிறு குரங்குக் குட்டியின் உருவத்தை எடுத்தார்.

சுரசையின் சவாலை தனது சாதுர்ய திறமையால் கணநொடியில் வென்றார். இவரது மதிநுட்பத்தை தேவர்கள் போற்றி அனுமனை வாழ்த்தினர்.

இரண்டாம் தடையைத் தகர்த்த அனுமன் மீண்டும் பறந்து செல்லும்போது ஸிம்ஹிகை (தமிழில் அங்காரதாரை) எனும் அரக்கியால் மூன்றாம் தடை உண்டாயிற்று.

“வெங்கார் நிறப்புணரி வேறேயு மொன்றப்
பொங்கார் கலிப்புனல் தரப்பொலிவ தேபோல்
இங்கார் கடத்திரெனை யென்னா வெழுந்தாள்
அங்கார தாரைபிறி தாலால மன்னாள்’

என்பது கம்பர் வாக்கு.

ஆகாயத்தில் பறந்தாலும், கடல்மேல் படும் அனுமனின் நிழலைப் பிடித்து, மேற்கொண்டு பறக்கவிடாமல் தடுத்து, சாயாக்ராஹி என்கிற ஸிம்ஹிகை அரக்கி தனக்கு உணவாக வேண்டுமெனக் கூறினாள்.

அவளை சமாளிப்பதற்காக, அகலமான அவளின் வாய்வழியாக சிறிய வடிவம் கொண்டு உள்ளே புகுந்தார். உள்ளே சென்ற அதே வேகத்தில் தனது முழு பலத்துடன் (சக்தி) அரக்கியின் உடலைப் பிளந்துகொண்டு வெளியே வந்தார். நீண்ட, நெடிய அரக்கியை ஆற்றலுடன் கொன்ற அனுமனின் சக்தியுடன் கூடிய வீரத்தை தேவர்கள் போற்றினார்கள்.

சிலருக்கு வேகம் இருக்கும்; விவேகம் இருக்காது. சிலருக்கு விவேகம் இருக்கும்;

ஆனால் வேகம் இருக்காது. இந்த இரண்டு பண்புகளையும் ஒருங்கே கொண்ட செயல்திறன் அனுமனிடம் இருப்பதைக் காணலாம்.

இப்படியாக மூன்று தடைகளையும் தனது மதிநுட்பத்தால் தகர்த்து பெருங்கடலின் அக்கரையான இலங்கையை அடைந்தார்.

மேற்கண்ட மூன்று சம்பவங்கள் மூலம் நாம் அறியவேண்டியது என்னவென்றால், நம் வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் தடைகளைக் (இடைஞ்சல்) கண்டு மனம் வருந்தி, அதைப் பற்றி நினைத்து மனதையும் உடலையும் வருத்திக்கொள்ளாமல், பார்த்தவுடன் உற்சாகம் தரும் அனுமனை மனதார துதித்தால், சூரியனைக் கண்ட பனிபோல் எல்லா தடைகளும் நம்மைவிட்டு விலகும்.


மகேஷ் வர்மா

சக்தி, வீரம், உறுதி, துணிவு என்று பேராற்றலுக்கான சொற்களைப் பட்டியிலிட்டால், அவையனைத்துக்கும் ஓருருவமாக நமக்குள் தோன்றுபவர் ஆஞ்சனேயர். இவர் பல தலங்களில் கோவில்கொண்டு, அன்பர்களுக்கு எளியோனாய் ஓடிவந்து அருளுவதை பல பக்தர்களும் தங்கள் அனுபவத்தில் கண்டுள்ளனர். அத்தகைய அனுமன் கோவில்கொண்டுள்ள தலம்தான் சலாசர் பாலாஜி கோவில்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அந்தப் பகுதிகளில் பாலாஜி என்னும் சொல் அனுமனையே குறிக்கும். 1754-ல் இவ்வாலயம் அமைக்கப்பட்டதாம். இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு.

அசாட்டோ என்னும் கிராமத்தில் விவசாயி ஒருவர் வயலில் உழுதுகொண்டிருந்தார். அப்போது அவர் கலப்பையில் ஏதோ தட்டுப்பட, என்னவென்று பார்த்தபோது ஆஞ்சனேயர் சிலை. அச்சமயம் அவரது மனைவி அவருக்கு உணவுகொண்டுவர, விஷயத்தை மனைவியிடம் சொன்னார். இதை உடனடியாக கிராமத் தலைவரிடம் சொல்லவேண்டுமென்று அவள் சொல்ல, இருவருமே புறப் பட்டுச் சென்று கிராமத் தலைவரிடம் விவரம் கூறினர். ஆச்சரியப்பட்ட அவர், முதல் நாள் இரவே இதுபற்றி தனக்கு கனவு வந்ததாகவும், சிலையை சலாசர் பகுதியில் பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவானதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நேரத்தில் அங்குவந்த மோகனதாஸ் மகாராஜ் என்பவர், “”இந்த ஊரில் அனுமன் சிலை ஏதேனும் கிடைத் திருக்கிறதா?” என்று கேட்க, இவர்கள் மேலும் திகைத்தார்கள். “”அந்த சிலையை சலாசர் பகுதியில் பிரதிஷ்டை செய்யும்படி அனுமன் கனவில் கூறினார்” என்று அவர் சொல்ல, இறையருளை எண்ணி உருகிநின்றனர். பின்னர் அந்த சிலை அனு மன் உத்தரவுப்படியே சலாசரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வயலில் அனுமன் சிலை கிடைத்த நாள், ஒரு சிராவண மாதம் சனிக்கிழமை, வளர்பிறை நவமி திதியில்.

இந்த சிலை நிறுவப்பட்டபோது சாதாரணமாக இருந்த அப்பகுதி பின்னர் ஊராகிவிட்டது. பிற்காலத்தில் ராஜா தேவிசிங் என்ற மன்னன் இவ்வாலயத்தை மேலும் விரிவாகக் கட்டினான்.

இந்த அனுமன் விக்ரகம் அரைவட்ட வடிவில் காணப்படுகிறது. அனுமனுக்கு மீசையும் தாடியும் உள்ளது. தாதிஜ் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணர்களே இங்கு அர்ச்சகராகப் பணிபுரிகின்றனர். ஆலய நிர்வாகத்தை அனுமன் சேவா சமிதி என்னும் அமைப்பு கவனித்துவருகிறது. காலை 4.00 மணிமுதல் இரவு 10.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். அனுமன் ஜெயந்தி போன்ற முக்கிய விழா நாட்களில் எப்போதும் திறந்திருக்கும்.

ஆலய வளாகத்தில் தினமும் ராமாயண பாராயணம் செய்யப்படுகிறது. சுந்தரகாண்டமும் படிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் பஜனைக் கீர்த்தனைகள் நடக்கும்.

பல்வேறு கோரிக்கைகளுக்காக பக்தர்கள் இங்கேவந்து வேண்டிக்கொள் கிறார்கள். அப்படி வருபவர்கள் ஒரு முழுத் தேங்காயை மஞ்சள்நிறக் கயிறில் சுற்றி, அதை அங்குள்ள மரத்தில் கட்டி பிரார்த்தனையை சொல்லிவிட்டு வந்துவிடுவார்கள். அவர்கள் கோரிக்கை நிறைவேறியதும் மீண்டும் ஆலயத்துக்கு வந்து, ஐம்பது கிலோ பிரசாதத்தை வாங்கி தானம் செய்கிறார்கள். இந்த தேங்காய் வழிபாட்டு வழக்கம் ராஜா தேவிசிங் காலத்திலிருந்து வழக்கத்திலுள்ளதாம். பிள்ளைப் பேறின்றி வருந்திய தேவிசிங் ஒரு முனிவரின் ஆலோசனைப்படி தேங்காய் வழிபாடு செய்து வேண்டிக்கொள்ள, பிள்ளைப்பேறு கிடைத்ததாம். எனவே மன்னன், “இப்படி வழிபடும் மக்களின் கோரிக்கையையையும் நிறைவேற்ற வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள, அப்படியே அருளினாராம் அனுமன்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பிரசாத தானம் செய்வதை பரவலாகக் காணமுடிகிறது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலிருந்து சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் (என்எச்65) உள்ளது சலாசர். அருகிலுள்ள ரயில் நிலையம் சஜங்கார். இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

வால்மீகி முனி வழிகாட்ட, ராமன் சரிதையைப் பாடி அழியாப் புகழும் அமரத்துவமும் பெற்ற ஆன்றோர் பலர். இவர்களுள் ராமபிரானை இசையால் பாடி மிக உன்னதமான ஒரு ஸ்தானத்தை வகிப்பவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்.

வால்மீகி முனிவர் ராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் இயற்றினார். இதை முதல்நூலாகக்கொண்டு பிற்காலத்தில் நூல் யாத்தவர் களில் பலர் ஒருசில இடங் களில் ஒட்டியும் விலகியும், விரித்தும் குறைத்தும் தம் மனோபாவத்திற்கேற்ப தம் காவியத்தை நடத்திச்சென்றனர்.

உதாரணமாக, சீதாதேவியை இராவணன் சிறையெடுக்குமிடம்.

அன்னையின் திருமேனியைத் தொட்டு எடுத்துப்போனான்  என்பது வால்மீகியின் போக்கு.

அரக்கர்கோன் அன்னையைத் தொடாமல் மண்ணோடு கொண்டு போனான் என்று கூறுகிறார் கம்பர்.

துளசிதாசரோ இராவணன் தொட்டது என்னவோ உண்மை. ஆனால் அங்கே உண்மையான சீதாதேவி இல்லை. லோகமாதா மறைந்துவிட்டாள்; மாயா சீதைதான் அங்கே இருந்தாள் என்று கூறுகிறார்.

ராமபிரானைப் பற்றி பேசும்போதெல்லாம் “அழகன், வீரன்’ என்பதோடு “செப்பருங் குணத்து ராமன்’ என்று சொல்வது கவிஞர் மரபு. இந்த செப்பருங்குணங்களில் எல்லாம் பிரசித்தமானது- முதலிடம் பெறுவது, தஞ்சமென்று வந்தவர்களுக்கு “அஞ்சேல்’ என்று அபயமளிக்கும் அருள்தன்மை. கருணாமூர்த்தியான இறைவனின் பண்பும் இதுதானே. இறைவனின் பிரதானமான பணியென்பது “துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம்’ என்பதுதான். அந்த இறைவனே “அபயம்’ என்ற மந்திரத்தில் மயங்குபவனாக இருந்தால் உலகில் முத்தொழில் எப்படி நடக்கும்? ஒருவனிடமுள்ள நல்ல பண்பே சில சமயங்களில் அவனுக்கு சத்ருவாக அமைவதைக் காணலாம். சர்வ வல்லமை படைத்த எம்பெருமான் வாலியை மறைந்து நின்று வதைத்து- “வாலியைப்  படுத்தாய் அல்லை; மண் அறவேலியைப் படுத்தாய்’ என்ற பழிச்சொல்லை ஏற்றதும் இக்காரணம் பற்றித்தானோ?

எப்படியிருந்தாலும் சரணாகதி அடைந்த வர்களுக்கு அபயமளிக்கும் அருங்குணத்தை அணிகலனாக அணிந்தவன் அயோத்திராமன். செந்தாமரைச் செல்வியை அசோகவனத்தில் சிம்சுபா மரத்தடியில் சிறைவைக்கிறான் இராவணன். பேராற்றல்கள் பல பெற்றிருந்த தமையனுக்கு, பிறர் மனை விரும்பாத பேராண்மையை போதிக்கிறான் விபீஷணன். தீய எண்ணம் கொண்ட இராவணன் விபீஷணன் கூறிய அறிவுரைகளை ஏற்காமல் அவனை நாடுகடத்துகிறான்.

ராமபிரானிடம் சரணடையச் செல்கிறான் விபீஷணன். அவன் ஆகாயத்தில் நின்றபடியே வானரர்களை நோக்கி, “என் மனைவி, மக்கள், உறவினர்கள் எல்லாரையும் துறந்து ராமனைச் சரணடைந்துவிட்டேன்’ என்கிறான்.

அப்போது  வானர அரசனான சுக்ரீவன் மற்றும் வானர வீரர்கள் எல்லாரும் விபீஷணனை சேர்த்துக்கொள்வது பற்றி பலவிதமாக ஆட்சேபிக்கிறார்கள்.

ராமபிரானோ சரணாகதி என்று வந்தவர்களுக்கு அபயமளிப்பதை விரதமாகக் கொண்டவனாக இருப்பதால் யார் பேச்சையும் பொருட்படுத்தாமல் விபீஷணனுக்கு அபயமளித்ததோடு, அவனை தன் உடன்பிறப் பென்றும் கொண்டாடி தசரத சக்கரவர்த்தியின் பிள்ளைகள் “நின்னோடும் எழுவரானோம்’ என்று ஆனந்தக் களிப்பெய்துகிறான்.

அத்துடன் விபீஷணனுக்கு இலங்கை அரசின் ஏக சக்ராதிபதியாக முடிசூட்டுவதாகவும் கூறுகிறான்.

ராமபிரான் வீராதி வீரன். அவன் லோக நாயகன். அவன் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. அதர்மவாதியான இராவணனை தண்டித்து, சற்குணவானான விபீஷணனுக்கு இலங்கையின் ராஜபீடத்தை அளிப்பது ராமனுக்கு எளிதானது. ஆனால் அந்த இராவணனும் பின் சீதாதேவியை ராமனிடம் ஒப்படைத்துவிட்டு சரணாகதி அடைந்துவிட்டால், கருணாமூர்த்தியான ராமன் அவனுக்கும் நிச்சயம் அபயமளிப்பார்.

அப்படி அளித்தபின்பு இராவணனுக்கு அரசபதவி தரவேண்டும். இலங்கை அரசைத் தருவதாக ஏற்கெனவே விபீஷணனுக்கு வாக்களித்தாகிவிட்டது. அப்படியானால் இராவணனுக்கு எதைத் தருவது? இந்த இடத்தில்தான் ராமபிரானின் வாய்மையும், சரணாகதி தத்துவமும் பிரகாசிக்கிறது. தந்தையின் வாய்மையைக் காக்க தம்பிக்கு நாட்டை ஈந்து வனவாசம் புகுந்த தசரத ராமனாயிற்றே!

வாய்மையும் மரபும் காக்க மன்னுயிர் துறக்கும் சூரிய வம்சமாயிற்றே அவன் குலம். இந்த இடத்தில் வால்மீகியும், கம்பரும் இதை அப்படியே விட்டுவிட்டனர். ஆனால் இதற்கான பதிலைத் தந்து பக்தர்களையும், இலக்கிய ரசிகர்களையும் பரமானந்தப்படுத்துகிறார் ஸ்ரீதியாகபிரும்மம்.

இந்தக் கேள்வியில் நாம் தடுமாறும்போது, ராமனுக்கு சொந்தமான- தற்சமயம் பரதாழ்வாரின் ஆட்சிக்குள்ளிருக்கும் ஒரு சுந்தரபூமியை நினைவுபடுத்துகிறார். அத்துடன் சிக்கலையும் அவிழ்த்துவிடுகிறார். “சரச சாமதான’ என்ற கீர்த்தனையைப் பாடி பரவசமாகிறார் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். முதன்முதலில் இலங்காபுரி அரசை விபீஷண னுக்கு அளித்தாகிவிட்டது. இராவணனுக்கு கோசல நாட்டை அளிப்பதன்மூலம் ராமனின் வாய்மையும் சரணாகதி தத்துவமும் காக்கப்படுகிறது. இராவணனுக்கு அயோத்தி அரசை அளித்தபிறகு ராமபிரான் இருப்பது எங்கே என்று கேள்வி எழுகிறது. அதற்கும் தியாகராஜ சுவாமிகள் அழகாக பதில் தருகிறார்.

இந்த உலகமே அவனது சாம்ராஜ்ஜியம். இந்த சாம்ராஜ்ஜியத்தில், ராமநாமத்தை தாரக மந்திரமாகக் கொண்ட பக்தகோடிகளின் நெஞ்சக்கோவிலில் நிலைத்திருப்பான் ராமன். ஆடாத உயிரனைத்தையும் ஆட்டுவிக்கும் அண்ணல், அன்பு நெஞ்சத் துள்ளே அடங்கியிருப்பான் என்கிறார் தியாகபிரும்மம். இதையே ஆழ்வாரும்,

“உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன்
வெள்ளத்து உன்னால் வேங்கடத்து மேயவனே
உள்ளத்து உள்ளான் என்று ஓர்’

என்று உருகிப்பாடுகிறார்.

ராமாயணம் என்ற மாபெரும் இதிகாசத்தில் சரணாகதி என்பது அச்சுறு ஆணியாக கோக்கப்பெற்றுள்ளது. ராமாயணம் ஒரு பெரிய ரதம். ரதம் நிற்க வேண்டுமானால் சக்கரங்கள் அவசியம். சக்கரத்திற்கு கடையாணி மிக முக்கியம். ராமாயணத்திற்கு கடையாணியாகக் கோத்து நிற்பது சரணாகதி தத்துவமே!

ராமாயணத்தில் பாலகாண்டம்

தொடங்கி, உத்தரகாண்டம்வரை சரணாகதி நிறைந்து இருப்பதைக் காணமுடிகிறது. பாலகாண்டத்தில் பகவானிடம் தேவதைகள் அடைந்த சரணாகதி, அந்த பாலகாண்டத்திலேயே தசரதர் பரசுராமரிடத்தில் அடைந்த சரணாகதி, அயோத்யா காண்டத்தில் ராமரிடத்தில் லக்ஷ்மணன் அடைந்த சரணாகதி, ஆரண்ய காண்டத்தில் மகரிஷிகள் எல்லாரும் ராமனிடத்தில் அடைந்த சரணாகதி, கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்கிரீவன் ராமனிடத்தில் அடைந்த சரணாகதி, சுந்தர காண்டத்தில் திரிசடை சீதாதேவியிடத்தில் அடைந்த சரணாகதி, யுத்த காண்டத்தில் விபீஷணன் ராமரிடத்தில் அடைந்த சரணாகதி, உத்தர காண்டத்தில் எல்லா தேவதைகளும் ராமனிடத்தில் அடைந்த சரணாகதி.

இப்படியாக “சரணாகதி’யானது ராமாயணத்தில் அச்சுறு ஆணியாக கோக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் பலன் இருந்தது. ஸ்ரீராமன் பூலோகத்தில் வந்து அவதாரம் செய்ததால் பலன் இருந்தது. அதனால்தான் கொல்லத்தகுந்த குற்றம் புரிந்தாலும் சரணாகதி அடைந்தவர்களைக் காட்டிக்கொடுப்பதில்லை என்று சாஸ்திரங் கள் சொல்கின்றன. “சரணாகதி’ அடைந்தவன் எப்படிப்பட்ட குற்றங்கள் செய்திருந்தாலும் அவனை காப்பாற்றியே தீரவேண்டு மென்று வேதம் வலியுறுத்துகிறது. இதை மெய்ப்பிக்கவே பகவான் ராமாவதாரம் எடுத்தான்.

இதையே தேசிகன் சுவாமிகளும் “அபயப்ரதான ஸாரம்’ என்று எழுதியுள்ளார். தர்மமே ராமனாக அவதாரம் எடுத்தது.

அந்த சக்கரவர்த்தி திருமகனின் பரிபூரண அனுக்ரகம் எல்லாருக்கும் இருக்கவேண்டும். வேதங்கள் ராமநாமத்தின் பெருமையைக் கொண்டாடுகிறது. ஸ்ரீஆதிசங்கரரும் “பரமமான உயர்ந்த பிரம்ம ரூபமான ராமநாமாவை பஜிக்கிறேன்’ என்று நான்கு முறை சொல்கிறார். “காச்யாம் மரணம் முக்தி’ என்பார்கள். (காசியில் மரணமுற்றால் முக்தி அடையலாம்.) எதனால் முக்தி? காசி க்ஷேத்திரத்தில் உறையும் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் அங்கு மரிப்பவர்களுடைய செவியில் ராமநாத்தைச் சொல்வதனாலே.

ராமநாமத்தின் மகிமையை கம்பன் வாலிவதைப் படலத்தில் மிக அழகாகச் சொல்கிறார்.

ராமபிரான் அம்பில் அவன் நாமத்தைக் கண்டதை அழகாக விவரிக்கிறார்.

“மும்மை சால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப்பெரும் பதத்தை தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்.’

ஸ்ரீராமபிரானிடத்தில் சரணடைந்து அவனுடைய அருளைப் பெறுவோம்.

 

அர்ஜுன் கட்டும் ஆஞ்சநேயர் கோவில்!

 

 

 

[ Monday, 07 October 2013, 12:46.19 PM GMT +05:30 ]
திரையில் அதிரடி ஆக்ஷனாக வலம் வந்த அர்ஜீன் தற்போது கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொரு பக்கம் இருக்கும்.திரையில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் உள்ளார், அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவில் நடந்து கொண்டிருக்கிறது.சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் ஆஞ்சநேயருக்கான கோவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.ஏறக்குறைய 35 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை கர்நாடக மாநிலத்தில் உள்ள கொய்ரா என்ற ஊரில் ஒரே கல்லில் சிலையாக வடிக்கப்பட்டதுடன், அந்த சிலையை சென்னைக்கு வரவழைத்து பீடத்தில் பொருத்தினார்கள்.அதற்கான கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள், அதை பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது.தஞ்சாவூர் பெரிய கோபுரத்தின் உள்ளிருந்து அபிஷேகம் செய்யும் அதே முறையை பயன்படுத்தி இந்த கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் 2006ம் ஆண்டிலிருந்து இந்த கோவில் கட்டும் திருப்பணியை செய்துகொண்டிருக்கிறோம் என்றும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம் என அர்ஜுன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


ராமதாசரிடம் இப்போது நிறைய சீடர்கள் இருந்தனர். தத்தாத்ரேயன், அக்காபாய், அம்பாஜி என்று அவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. ஒருபுறம் ராமதாசரின் புகழ் மகாராஷ்டிர தேசம் முழுக்க பரவியபோதிலும், மறுபுறம் பொறாமை மிகுந்தவர்களும் தோன்றியபடி இருந்தனர்.

கலியுகத்தைப் பொறுத்தவரை எதிர்ப் பில்லாத வெற்றியை கடவுளால்கூட பெறமுடியாதென்பதே நிதர்சனமாக இருந்தது. அதேசமயம் உண்மையான அருளாளர்கள் கலியின் குணம்பற்றி தெரிந்திருந்த காரணத் தால், எதிர்ப்பைக் கண்டு அஞ்சுவதோ சலனப்படுவதோ கிடையாது. மாறாக, எதிர்ப்பு வரும்போது தங்கள் செயல் சரியானதென்கிற முடிவிற்கே வந்தனர்.

ராமதாசரும் அப்படித்தான் வந்தார். அதோடு காலத்தை ஊடுருவும் அநேக சக்திகளையும் கைவரப்பெற்றார். அந்த சக்திகளால் அவரிடம் துளியும் தன்னலம் பெருகவில்லை. தன்வரையில் அவர் உடம்பால் வந்த கஷ்டங்களை அனுபவிக்கவே செய்தார்.

ஒருமுறை அவருக்கு விஷக்காய்ச்சலே வந்துவிட்டது. படுத்தே கிடந்தார். உடம்பும் அனலாய் கொதித்தது. தாசர் மனது வைத் திருந்தால் அனுமனே அவருக்கான மருந்தினைக் கொடுத்து, நொடி களில் அவரது காய்ச்சலை குணப்படுத்தியிருப்பான். ஆனால் தாசர் உடம்பின் வாதனையை அதன்போக்கில் போய் அனுபவிக்கவே முற்பட்டார். அதற்காக கடவுளை வேண்டவோ மருந்தை உண்ணவோ அவர் விரும்ப வில்லை. சொல்லப்போனால் இன்பத்தை அனுபவிப்பதுபோல வேதனையை அனுபவித்தார். இப்படி ஒரு பக்குவம் உடைய வர்களுக்கு அபூர்வ  சக்திகள் சித்தியாகும். இந்த அபூர்வ சக்திகள் வெளியேயிருந்து வருவதில்லை. இது நம் ஒவ்வொருவர்வசமும் உடம்பினுள்ளேயே ஒளிந்துள்ளது. அப்படி ஒளிந்திருப்பதை  நமக்கு கண்டறிந்து பயன்படுத்தத் தெரிவதில்லை.

ஆனால் தாசருக்கு அது தெரிந் திருந்தது. ஒருமுறை சீடர்களுடன் ஒரு மலைத்தலத்தில் தங்கி தியானத்தில் ஈடுபட்டுவந்தார்.

அப்போது அங்கொரு மலைச் சுனை இருந்தது. அந்த சுனை எவ்வளவு ஆழமானதென்று யாராலும் கூறமுடியவில்லை.

அதனுள் தாசரின் பிரதான சீடனான அம்பாஜி தவறி விழுந்துவிட்டான். விழுந்தவனை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. அந்த சுனை அந்த அளவுக்கு தாழ்வாகவும் நாற்புறமும் பிடிப்பே இல்லாமல் ஒரு பாதாளக்கிணறுபோலவும் இருந்தது.

சீடர்கள் அவ்வளவுபேரும் அம்பாஜிக்காக துடித்தனர். தாசரிடம் வந்து முறையிட்டு அழுதனர். தாசர் அதைக்கேட்டு அதிர்ந்தவராக கண்களை மூடி தியானித்தார். சிறிது நேரம் தியானித்தவர், “போய் வேலையைப் பாருங்கள்’ என்று கூறவும் சீடர்களிடம் அதிர்ச்சி.

அம்பாஜிக்காக ஏதாவது செய்வார் என்று பார்த்தால், “போய் வேலையைப் பாருங்கள்’ என்கிறாரே என்று மனம் வருந்தினர்.

அவர்களால் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் மன்னன் சிவாஜி ராமதாசரைப் பார்க்கவந்தான். சீடர்கள் துக்கத்தோடு இருப்பதை வைத்து விசாரித்தான். அம்பாஜி சுனைக்குள் விழுந்துவிட்டது தெரியவந்தது. உடனேயே தன் வீரர்களை அனுப்பி சுனைக்குள் இறங்கித் தேடச் சொன்னான்.

அவர்களும் சிரமப்பட்டு அதனுள் இறங்கினர். எவ்வளவு தேடியும் அவர்களுக்கு அம்பாஜியின் உடல் கிடைக்கவில்லை. மாறாக உள்ளே மூழ்கித் தேடியபோது வேத மந்திரசப்தம் காதுக்குள் ஒலித்ததாகக் கூறினர். சிவாஜிக்கு எல்லாமே புதிராக இருந்தது. தண்ணீருக்குள் காது கேட்கும் என்பதே தவறு. அதிலும் மூழ்கிய சுனைக்குள் வேத மந்திரங்கள் காதில் ஒலிக்கின்றன என்பதை எதைவைத்து நம்புவது? சிவாஜி குழம்பிப்போய் தாசரைப் பார்த்துப் பேசினான்.

“”குருவே… உண்மையில் இங்கே என்ன நடக்கிறது? எனக்குப் புரியவில்லை” என்றான்.

“”மன்னா, அம்பாஜி விழுந்த சுனை அபூர்வமானது. அந்தநாளில் சாபம் பெற்ற கந்தர்வர்கள் முதலைகளாக இதிலிருக்க, அர்ஜுனன் தன் தீர்த்தயாத்திரையில் இங்கே நீராடியே அந்த முதலைகளின் சாபத்தை நீக்கினான். அதன்பின் இதில் வனத்து ரிஷிகள், முனிவர்கள் நீராடினர்.

அவர்கள் எப்போதும் வேதம் ஓதி வந்தமையால் அந்த சப்தம் இச்சுனை நீரிலும் கலந்துவிட்டது. இப்படியொரு சப்தத்தை சாதாரண உடலமைப்பு கொண்டவர்களால் கேட்கமுடியாது. அம்பாஜி ஜாதக ரீதியாக மிக அபூர்வ மானவன். அதனாலேயே அவன் எனக்கு சீடனாகவும் முடிந்தது. இப்போதுகூட நீரின் அடியாழத்தில் தவம் புரிந்தபடிதான் அவன் இருக்கிறான். அவன் அந்த வேதமந்திரங்களைக் கேட்டுத் தெளிவுறட்டுமென்றே நான் ஏதும் செய்யவில்லை” என்றார்.

சிவாஜிக்கு அது வியப்பாகவும், அதேசமயம் மறுப்பாகவும் இருந்தது.

“”மன்னா… என்ன யோசனை. நான் கூறியதை நம்பமுடியவில்லையா?”

“”மன்னிக்கவேண்டும் குருநாதா… நான் தற்போது சற்று குழப்பத்தில் உள்ளேன்.

அப்படியானால் அம்பாஜி உள்ளே உயிரோடுதான் இருக்கிறானா?”

“”அதிலென்ன சந்தேகம். வேண்டுமானால் வரச் சொல்லவா?” என்று கேட்க,  அனைவரிடமும் அடுத்தகட்ட அதிர்ச்சி.

“”எங்கே, சொல்லுங்கள் பார்ப்போம்” என்ற சிவாஜி அந்த அதிசயத்தைக் காண தயாராக நின்றான்.

“”அம்பாஜி… வெளியே வா…” என்று தாசர் அழைக்கவும். அந்த சுனை நீரிலிருந்து மேலேவந்து, பின் பக்கவாட்டுச் சுவரிலேறி அனைவர் முன்னாலும் வந்து நின்றான் அம்பாஜி.

“”என்ன, கல்யாணமாயிற்றா?” என்று கேட்டார் தாசர்.

“”ஆயிற்று சுவாமி” என்றான்.

இது அங்குள்ளோரை ஆச்சரியப்படுத்தியது. சுனையில் மூழ்கிய வனிடம் கேட்கும் கேள்வியா இது?

ஆனால் ஆமோதித்த அம்பாஜியின் தோளில் பூணூல் இருந்தது. தாசர் கேட்டது பூணூல் கல்யாணத்தை!

அம்பாஜி ஆமோதித்ததும் அதைத்தான். உள்ளே அம்பாஜிக்கு பூணூல் போட்டு மந்திர உபதேசமும் செய்யப்பட்டுவிட்டிருந்தது.

சீடர்கள் பூரித்துப்போக, சிவாஜி அனைவரையும் பார்த்து வெற்றிச் சிரிப்பு சிரித்தான். அப்படியே, “”தாசரே, தாங்கள் மனது வைத்தால் இறந்தவர்க்கும் உயிர்தருவீர்கள் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நீங்கள் எனக்கு குருவாக கிடைத்தமைக்காக நான் பூரித்துப்போகிறேன். தாங்கள் எனக்கு நல்லாட்சி குறித்து உபதேசிக்கவேண்டும்” என்றான். ராமதாசரும் அவனுக்கு உபதேசித்தார். அன்றுமுதல் அம்பாஜியும் “கல்யாண கோஸ்வாமி அம்பாஜி’ என்றானான்.

இச்சம்பவத்திற்கு பின் சீடர்களுக்கு தாசர்மேல் பெரிதும் பக்தி உருவாகியது. நம் குருநாதர் நம்மை எந்த நிலையிலும் கைவிட்டுவிட மாட்டார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது.

சிவாஜியும் ராமதாசர் சொன்ன கருத்துகளை அசைபோட, அதை ராமதாசர் தனியே ஓலைச்சுவடிகளில் எழுதி சிவாஜியிடம் அளித்தார். அதன் பெயர் “தாசபோதம்’ என்பதாகும்.

“”இதை நீ படிப்பாய்… அப்போது உன்னுள் பெரும்தெளிவு ஏற்படும். உனக் குள்ளும் அரிய சிந்தனைகள் தோன்றும். ஆழ்ந்து இதில் கூறியுள்ளபடி நீ நடந்தால், என் குருவான அனுமனும் உனக்கு எல்லா உதவிகளும் நேரில் தோன்றிச் செய்வார்” என்றார்.

சிவாஜியும் வாசித்தான்.

தாசர் சொன்னபடி புதிய பல சிந்தனைகள் அவனுக்குள் எழுந்தன. அதை யெல்லாம் குறித்துக் கொண்டான். சக அமைச்சர்களிடமும் பகிர்ந்து கொண்டான். சிவாஜியின் இந்த போக்கு அரசவைப் பண்டிதரான “காகாஜி’ என்பவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர் சிவாஜியிடம், “”மன்னா… நாட்டில் அறநூல்களும், நீதிநூல்களும் எவ்வளவோ உள்ளன. ஆனால் நீங்கள் இந்த ராமதாசர் தந்ததை பெரிதாகக் கருதி பின்பற்றுகிறீர்கள். இதனால் மற்ற நூல்கள் மதிப்பில்லாததுபோல கருதப்படும். நீர் செய்வது பிழை” என்றார்.

ஆனால் அதை சிவாஜி ஏற்கவில்லை.

“”பண்டிதரே… நீங்கள் பொறாமையால் பேசுகிறீர்கள். இதை நீங்கள் மனம் ஒருமித்து வாசியுங்கள்; தெரியும்” என்றான் சிவாஜி. ஆனால் காகாஜி பண்டிதர் அதை கேட்காமல் சிவாஜியைவிட்டே பிரிந்துவிட்டார். இந்த செய்தி ராமதாசருக்குப் போய்ச்சேர்ந்தது. மனம் வருந்திய ராமதாசர் ஒரு பெரும் பக்தமேளாவுக்கு ஏற்பாடு செய்து, அதற்கு காகாஜியை வரும்படி கூறி ஓலை அனுப்பினார்.

காகாஜியின் அந்த ஓலையை லட்சியம் செய்யவில்லை. இந்நிலையில் யார் அழைத் தால் காகாஜி வருவார் என்று ராமதாசர் யோசித்தபடி இருக்க, அவர்முன் அனுமன் தோன்றினான்.

“”ராமதாசா… கவலையைவிடு. நானே நேரில் சென்று பண்டிதனை அழைக்கி றேன். அவன் உன்மேல்தான் பொறாமை கொண்டவன். உண்மையில் அவனொரு நல்ல ராமபக்தன். ராமபக்தர்கள் எனக்கும் பக்தர்கள். அவர்கள் தம்முள் பிரிந்துகிடக்கக் கூடாது” என்று கூறிவிட்டு, ஒரு பண்டிதன் வேடத்தில் அனுமன் காகாஜி வீட்டை அடைந்தான். ராமதாசர் அனுப்பியதாகவும் கூறினான்.

காகாஜி காதுகொடுத்தே கேட்கவில்லை.

காகாஜியின் செயல் அனுமனுக்கு கோபத்தை வரவழைக்கவே, அங்குள்ள ராமபிரான் படத்தைப் பார்த்து அவர்முன் அனுமன் வடிவில் தோன்றி, “”ப்ரபோ… என் சீடனுக் காக அவன் குருவான நான் வந்தும் இந்த பண்டிதன் கேட்கவில்லை. எனக்காக நீங்கள் வந்தாலே இவன் கேட்பான். அருள் கூர்ந்து வாருங்கள்” என்ற மாத்திரம், அங்கே ராமன் கோதண்டத்தோடு பிரசன்னமானான்.

அதைக்கண்ட காகாஜி பண்டிதர் வெலவெலத்துப் போனார்!

(தொடரும்)


மகேஷ் வர்மா

தென்னாட்டிலுள்ளவர்கள் “பாலாஜி’ என்றால் திருமலை வேங்கடேசனைத்தான் எண்ணுவார்கள். ஆனால் வட மாநிலங்களான ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதியிலுள்ளவர்களுக்கு “பாலாஜி’ என்றால் ஆஞ்சனேயர்தான் கண்முன் தோன்றுவார்.

அப்படி அவர்களால் பக்தியுடன் வணங்கப்படும் கோவில்- மெஹந்திப்பூர் பாலாஜி (அனுமன்) கோவிலாகும். இது ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஜெய்ப்பூரிலிருந்து ஆக்ரா செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 100 கிலோமீட்டர் சென்றால் “பாலாஜி மோட் ஜங்ஷன்’ என்ற இடம் வரும். அங்கிருந்து பிரிந்துசெல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

இவ்வாலயம் அமைந்துள்ள மலைப் பகுதியை ஆரவல்லிமலை என்கிறார்கள். இது எப்போது கட்டப்பட்டது என்பதை அறிய இயலவில்லை. மிகப்பழமையான இவ்வாலயம் தோன்றிய வரலாறு ஆச்சரியமானது.

முற்காலத்தில் அடர்ந்த கானகமாக இருந்ததாலும், திருடர்கள் தொல்லைகள் இருந்ததாலும் இப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரமாட்டார்களாம். இந்த நிலையில், அருகே இருந்த ஊரில் அபயஞ்சி என்பவர் வசித்துவந்தார். ஒருநாள் இரவு அவர் கனவு கண்டவாறே தூக்கத்தில் எழுந்து நடந்துசென்றார்.

அப்படியே காட்டுக்குச் சென்றவர் ஓரிடத்தில் நின்றார். அவரது தூக்கம் கலைந்தது. அப்போது அவர் கண்ட காட்சி வியப்பூட்டுவதாக இருந்தது. ஒரு படைப்பிரிவினர் குதிரையில் வருகிறார்கள். அங்கே ஒரு சிலை தென்படுகிறது. அதனருகே தீபம் எரிந்துகொண்டிருக்கிறது. அந்த படையின் தளபதி குதிரையிலிருந்து இறங்கி அந்த சிலையின்முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறான். பின்னர் படையுடன் திரும்பிச்செல்கிறான்.

இவற்றையெல்லாம் கண்டு அதிசயித்த அபயஞ்சி திரும்ப கிராமத்துக்குச் சென்றார். அதன்பிறகு அவரது கனவில் மூன்று சிலைகள் தோன்றின.  அதன் பின்னணியில் ஒரு ஆலயம் தெரிந்தது.

அப்போது ஒரு அசரீரி வாக்கு, “உன்னை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்றது நான்தான். அங்கேவந்து எனக்கு சேவை செய். வேண்டும் வரங்களை அனைவருக்கும் தருவேன்’ என்று ஒலித்தது. ஆஞ்சனேயரின் திருவுருவமும் தோன்றிமறைந்தது.

விழித்தெழுந்த அபயஞ்சி ஊர் மக்களிடம் விவரத்தைச் சொல்லி அந்த கானகப்பகுதிக்கு அவர்களை அழைத்துச்சென்றார். அவர்கள் சிலா மூர்த்தத்தை நெருங்க நெருங்க மேளதாள ஓசையைக் கேட்டனர். ஆனால் அங்கே எவருமில்லை. அதிசயித்த மக்கள் ஒன்றுகூடி அங்கு ஆலயம் அமைத்தனர்.

இப்படி உருவானதே இந்த பாலாஜி ஆலயமாகும். இங்கு ஆஞ்சனேயருடன் பைரவர், பிரேதராஜ் ஆகிய தெய்வங்களும் பிரதானமாக விளங்குகிறார்கள். ஆஞ்சனேயர் சிலையருகே வற்றாத ஒரு ஊற்று காணப்படுகிறது.

பல்வேறு வேண்டுதல்களுடன் இங்கு பக்தர்கள் வந்தாலும், பேய், பிசாசு, பில்லி, சூன்யம் போன்றவை நீங்கு வதற்காக வருபவர்களே அதிகம். மனநோய் நீக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலமாக இது திகழ்கிறது.

இங்குள்ள மூன்று தெய்வங்களுக் கும் லட்டு பிரசாதம் முதன்மையாக இடம்பெறுகிறது. பக்தர்கள் கொண்டுவரும் லட்டுகளில் இரண்டை மட்டும் பிரசாதமாக அவர்களுக்குத் தருவார்கள். மீதமுள்ள லட்டுகளை ஓரிடத்தில் கொட்டிவிடுவார்கள். அந்த பிரசாத லட்டை அங்கேயே சாப்பிடவேண்டும். அப்படி உண்டதும் பேய் பிடித்திருப்பவர்கள், பில்லி சூன்யத்துக்கு ஆளானவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் அங்கும் இங்குமாக ஓடுவார்கள். சிலர் மரத்தின்மீதும் ஏறுவார்கள். தரையில் படுத்தும் உருளுவார்கள். சற்று நேரத்தில் பிணிகள் நீங்கி குணமடைவார்கள். அதன்பின் அவர்கள் திரும்பிப் பார்க்காமல் அவ்விடத்தைவிட்டுச் சென்றுவிடவேண்டும். இவ்வாறு குணமடைந்தவர்கள் லட்டுகளை காணிக்கையாக அளிக்கின்றனர்.

இந்த லட்டுகளை வீட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது என்பதும் ஐதீகம்.

இவ்வாலயத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட முஸ்லிம் மன்னன் ஒருவன், ஆஞ்சனேயரின் பாதத்துக்குக் கீழ் தோண்டும்படி உத்தரவிட்டானாம். எவ்வளவு ஆழம் தோண்டியும் அதன் அடிப்பகுதியைக் காணமுடியவில்லையாம்.

வடநாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ்வாலயத்திற்கு வந்து வணங்கிச் செல்கின்றனர். தங்கள் தொல்லைகள் எதுவாயினும் நீங்குவதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

இத்தொடரின் வாயிலாக அனுமனது சாகசங்களையும் பக்தர்களுக்கு அவன் எந்த அளவு நெருக்கமாகவும், அணுக்கமாவும் இருக்கிறான் என்பதையும் அறிந்துவருகிறோம். அவன் தெய்வமாக இருந்து வழிகாட்டுவதோடு, ராமநாமத்தை உலகில் நிலைபெறச் செய்வதற்காக மானுடப் பிறப்பெடுத்தும் வந்திருக்கிறான்.

அந்தவகையில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமர்த்த ராமதாசரை அனுமனின் அம்சமென்றும் அவதாரமென்றும் கூறுவார்கள். ராமதாசர் எனும்போது இன்னுமொரு ராமதாசரும் இருக்கிறார்; அவர் பத்ராசல ராமதாசர்.

இந்த இருவராலும் பாரத மண்ணில் ராமபக்தி வேர்விட்டுத் தழைத்தது. பத்ராசல ராமதாசரால் தென்பகுதியிலும், சமர்த்த ராமதாசரால் வடபகுதியிலும் ராமபக்தி பேணப்பட்டது. இந்த ராமபக்திக்கு அடியுரம் அனுமனென்றால் அது துளியும் மிகையல்ல.

ஸ்ரீராமன் தன் அவதார நோக்கம் முடிந்து விண்ணுலகை நோக்கிச் செல்லும் சமயம் அனுமனையும் தன்னுடன் அழைக்கிறான்.

“”அனுமா… புறப்படு. என்னோடு பரமபதத்தில் நீ சிரஞ்சீவியாக இருக்க லாம்” என்கிறான். யாருக்கு கிடைக்கும் இப்படியொரு வாய்ப்பு?

ஆனால் அனுமன் அதை மறுக்கிறான்.

“”ப்ரபோ… என்னை மன்னியுங்கள். பரமபதத்தில் நான் சிரஞ்சீவியாக இருக்கலாம். அங்கே உங்கள் நாமத்தைச் சொல்லிக்கொண்டிருக்க சந்தர்ப்பமே கிடைக்காதே. ஒருவேளை நான் எனக்குள் சொல்லிக்கொண்டாலும் பயன் எனக்கு மட்டும்தானே? ஆனால் பூவுலகில் நான் இருந்துகொண்டு உங்கள் நாமத்தைச் சொன்னாலோ அதை மானுடர்கள் கேட்பார்கள். அவர்களின் மனங்களில் உங்கள் நாமம் பதியும். இதனால் அவர்களுக்கெல்லாம் விமோசனமும் கிடைக்கும்.

இப்படி உங்கள் நாமத்தால் பிறருக்குப் பயன்படும்படி வாழ்வது வாழ்வா… இல்லை பரமபதத்தில் எவ்வித கடப்பாடுமின்றி சுகத்திலே மட்டும் இருப்பது வாழ்வா?”

என்று ராமனையே கேட்டுத் திகைக்க வைக்கிறான்.

ராமனும், “”உன் விருப்பம்போல பூவுலகில் நீ வாழ்வாயாக. உனக்கு எப்போது பரமபதம் வரத்தோன்றுகிறதோ அப்போது வரலாம்” என்று வரமளிக்கிறான். ஆனால் அனுமன் இன்றுவரை பரமபதம் குறித்து சிந்திக்காமல் பூவுலகில் ராமநாமத்தை இடையறாது ஜெபித்துக்கொண்டும், அப்படி ஜெபிக்கின்றவர்களுக்கு தன் தரிசனத்தைத் தருவதோடு, அவர்களுக்கு எல்லாம் தருபவனாகவும் விளங்கிவருகிறான்.

இடையே அவன் அம்சத்தில் சிலர் பிறந்து பெரும் பக்திச் சாதனை புரிந்துள்ளனர். அவர்களில் ஒருவரே சமர்த்த ராமதாசர்.

இவரை மையமாக வைத்துக் கொண்டாடப் படுவதே தாசநவமி! நமக்கெல்லாம் ராமநவமி தெரியும்; தாசநவமி தெரியாது. காரணம், இது மகாராஷ்டிரத்தில்தான் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இப்படி ராமநவமிக்கு சமமாக தாசநவமி கொண்டாடக் காரணமான சமர்த்த ராமதாசரின் வாழ்க்கை வழியாக அனுமனின் மகிமையைக் காண்போம்.

சமர்த்த ராமதாசரின் இயற்பெயர் நாராயணன்.

இவர் பிறந்த விதமே அலாதியானது.

மிகுந்த தவச்சிறப்பும் உடையது. நாராயணனின் தாய்- தந்தையராக அமைந்தவர்கள் சூர்யாஜி பண்டிதர் மற்றும் ராணுபாய் என்னும் மாதரசியாவாள்.

இவர்களுக்கு மகனாக ஜான்புரி எனும் ஊரில் நாராயணன் பிறந்தான். முன்னதாக சூர்யாஜி பண்டிதருக்கும் ராணுபாய்க்கும் திருமணமாகி பல ஆண்டுகள் பிள்ளைப்பேறில்லை. அந்தநிலையில் கோவில் கோவிலாக ஏறி இறங்குவதுதானே மானுடர்களின் வழக்கம்.

அப்படித்தான் சூர்யாஜியும் ராணுபாயும் ஏறி இறங்கினார்கள். அப்படிச் சென்ற இடத்தில்- குறிப்பாக காசிக்குச் சென்ற இடத்தில் கங்கைக்கரையில் ஒரு சந்நியா சியை தரிசித்தனர். அவருக்கு ராணுபாய் எதுவும் கூறாமலே அவளுடைய சிக்கல் விளங்கிவிட்டது.

“”என்ன, வம்ச விருத்தியில்லையா… உன்னை மலடி என்று உலகம் சொல்கிறதா?”

என்று கேட்டார்.

இருவரும் ஆமோதித்தனர்.

“”வம்ச விருத்தியில் பிரச்சினை என்றாலே அதை ஏதோ பாவமென்று நினைக்கிறார்கள்.

பாவம் காரணமல்ல… பாவத்தை பெரும்பாலும் வாழும் நாளில் கணக்கு தீர்த்துவிடலாம். மொத்த பாவத்தையும் ஒரு கங்கை நீராட்டு போக்கிவிடும். இவ்வளவு தூரம் வரமுடியாதவர்கள் ஒரு கோவில் கும்பாபிஷேகத்தைப் பார்த்தால்போதும். அப்போது அவர்கள் சிரசின் மேல் விழும் அபிஷேக தீர்த்தம் பாவத்தைப் போக்கிவிடும். போகாதது எது தெரியுமா?” அந்த சந்நியாசி கேட்டார்.

சூர்யாஜி பண்டிதரும், ராணுபாயும் திருதிருவென விழித்தனர்.

“”நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள். இப்பிறப்பில் தொலைக்கமுடியாதது, அனுபவித்து மட்டுமே தீர்க்கவேண்டியது சாபங்களைத் தான்” என்று அவர் சொல்லவும்தான், பாவத்துக்கும் சாபத்துக்கும் அவர்களுக்கு வேற்றுமை புரிந்தது.

இந்நிலையில் சூர்யாஜி அந்த சந்நியாசி யிடம், “”ஸ்வாமி… நாங்கள் சாபத்துக்கு ஆளானதால்தான் எங்களுக்குப் பிள்ளையில்லையா?” என்று உடனேயே கேட்டார்.

“”ஆமாம்…”

“”என்றால் அது தீரவே தீராதா?”

“”தீராதது ஒன்றுதான்… அது பஞ்சமா பாதகம்! பெற்ற தாய்- தந்தையரை பட்டினி போட்டுக் கொல்லுதல், கன்னிப் பெண்களைக் கற்பழித்தல், பசுமாட்டை வதைசெய்து அதைப் புசித்தல், பிராமணர்களுக்கு இடையூறு செய்து அவர்கள் சாபத்துக்கு ஆளாகுதல், குருவுக்கு துரோகம் செய்தல்- இவையே பஞ்சமா பாதகங்கள். இந்த பாதகம் செய்தவன் ஏழு ஜென்மம் எடுப்பான். ஏழிலும் இதற்கான தண்டனையை அனுபவிப்பான்; தப்பவே முடியாது. மற்ற சாபத்துக்கு ஆளானவர்கள் அதற்குரிய சரியான பரிகாரத்தைத் தெரிந்துசெய்தால் விடுபடலாம்.”

“”என்றால் எங்களுக்கு பிள்ளை இல்லாமல் போக எது காரணம்?”

“”அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நாகத்தைக்  கொல்லுதல், கர்ப்பிணியை வேலை வாங்குதல், சிறு குழந்தைகள் மனம்நோக நடந்து கொள்ளுதல், திருமணமானவர்களை திட்டம்போட்டுப் பிரித்தல்- இப்படிப்பட்ட பாவங்களே சாபங்களாகிவிடுகின்றன.”

“”இதிலிருந்து விடுபட வழி?”

“”சொல்கிறேன்… உலகில் கண்ணுக்குத் தெரிந்த கடவுளாக விளங்கும் சூரிய பகவானுக்குரியது ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம். இதை இன்று முதல் பாராயணம் செய்யுங்கள். ஒருநாள் இருநாளல்ல; 12 வருடங்கள் பாராயணம் செய்யவேண்டும்.”

அவர் அப்படிச் சொன்ன மாத்திரத்தில், “”ஸ்வாமி… நான் கடந்த பத்து வருடங்களாக அதைப் பாராயணம் செய்துவருகிறேன்” என்றார் சூர்யாஜி.

“”அந்தப் புண்ணியமே உங்களை இங்கு அழைத்துவந்து என் முன்னாலும் நிறுத்தி யுள்ளது. இன்னும் இரண்டு வருடங்கள் விடாது பாராயணம் செய்யுங்கள். அதனால் உங்கள் சாப இருள் விலகி உங்களுக்கு பிள்ளைகள் பிறப்பார்கள். ஒருவருக்கு இருவர் பிறப்பார்கள். அதில் மூத்தவன் சூரிய அம்சம்; அடுத்தவன் அனுமனின் அம்சமாய் விளங்குவான். இதை நீங்கள் அவன் பிறக் கும்போது உணர்வீர்கள்” என்றார்.

அதன்பின் அவர் சொன்னதுபோலவே மேலும் இரண்டு வருடகாலம் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தனர். நம்பிக்கையோடும்  தீவிரமாகவும் சூரிய பகவானை அவர்கள் வழிபட்டதன் பயன், முதலாவதாக அந்த சந்நியாசி சொன்னதுபோல சூரிய அம்சமாக முதல் பிள்ளை பிறந்தான். அவனுக்கு கங்காதரன் என்று பெயர் வைத்தனர். கங்கைக்கு போய்வந்ததால் பிறந்தவனல்லவா? அடுத்து சில ஆண்டு இடைவெளியில் மாருதி அம்சமாய் ஒரு குழந்தை பிறந்தது. அது அனுமனின் அம்சம் என்பதற்கு சாட்சிபோல பின்பாகத்தில் ஒரு சாண் நீளத்துக்கு வால் இருந்தது.

ராணுபாய் அனுமனே வந்து பிறந்து விட்டதாகக் கருதி பூரித்துப்போனாள். அந்த வால் சில நாட்களில் உதிர்ந்தும்போனது.

இவன் அனுமனின் அம்சம் என்பதை உணர்த்தவே அவனுக்கு வால் இருந்தது என்பதாக உணர்ந்துகொண்டனர்.

ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அஞ்சனை வயிற்றில் பிறந்த அந்த பால அனுமன் என்னவெல்லாம் சேட்டை செய்தானோ அதையெல்லாம் இவனும் செய்தான். குறிப்பாக மரங்களில் ஏறுவது, தாவுவது என்று குரங்குகளோடு போட்டி போட்டான். ஒருமுறை ஒரு பெரும் குரங்குக் கூட்டம் ஜான்புரிக்குள்  நுழைந்துவிட்டது. அதைக்கண்டு எல்லாரும் கதவுகளைத் தாழிட்டனர். அந்த குரங்குகள் காட்டுக்குள் வசித்துவந்தன. மழையின்மையால் அவற்றுக்கு காட்டில் உணவு கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் அவை பக்கத்தில் நகரத்துக்குள் புகுந்துவிட்டன. சிலர் அந்த குரங்குகளை வேட்டையாடவும் செய்தனர். இதைக்கண்ட எட்டு வயதேயான நாராயணன் துணிந்து அவற்றுடன் கலந்து, அவை தன்னைத் துரத்தும்படி செய்துகொண்டான். தாவிக்குதித்து காட்டுக்குள் ஓடத் தொடங்கினான். அவையும் பின்தொடர்ந்தன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் நூறு மீட்டர் அகலத்தில் வலை செய்து விரித்திருந்தான். அந்த வலைக்குள் அவ்வளவு குரங்குகளும் விழவும், அதனை அப்படி உயரே தூக்கிவிட, அந்தக் குரங்குகள் வெளியே வரமுடியாமல் அதில் சிக்கிக்கொண்டன. அந்த வலையை அப் படியே கட்டி நகருக்குள் இழுத்துவந்தான். ஜான்புரியே இதைப் பார்த்து வாய்பிளந்தது. பின் அந்தக் குரங்குகளிடம் அதன் பாஷையில் பேசி, காட்டுக்குத் திரும்பிப் போகச்சொன்னான். அப்படிச் சென்றவை அதன்பிறகு இன்றுவரை வரவேயில்லை.

இவையெல்லாம் மிக இளம்வயதிலேயே நாராயணன் எப்படிப்பட்டவன் என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டவையாகும். நாராயணனுக்கும் இப்படிப்பட்ட சாகசங்களே பிடித்தன. அண்ணன் கங்காதரன் திருமணம் செய்யும் பருவம் வந்தது. திருமணம் செய்துகொண்டாலே பித்ருக்களுக்கான கர்ம காரியங்களைச் செய்ய முடியுமென்பதால் கங்காதரன் திருமணத்துக்கு சம்மதித்தான். இப்படியொரு நிலையில் அடுத்து நாராயணனுக்கும் திருமணம் பற்றிப் பேசவும், அவனுக்கு சுத்தமாக அது பிடிக்கவில்லை. இறுதியில் அப்படித்தான் முடிந்தது. பெற்றோர் நாராயணனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து சம்மதம்பெற விழைந்தபோது, நாராயணன் வீட்டைவிட்டே ஓடிவிட்டான்.

இப்படித்தான் பிரம்மச்சாரிகள் நடந்துகொள்வார்கள். நாராயணனின் செயல் பெற்றோரை பெரிதும் பாதித்தது.

அனுமனுடைய அம்சமாக இருந்தவன் காட்டுக்குச் செல்லவா பிறந்தான்? அவனால் சமூகத்துக்கு நன்மை ஏற்படவேண்டுமல்லவா? அதற்கேற்ற சூழல் காட்டுக்குள் அவனுக்கு ஏற்படத் தொடங்கியது. எந்த குரங்குக் கூட்டத்தை அவன் காட்டுக்குள் திருப்பி விட்டானோ அவை அந்தக் காட்டில் இருந்தன. மழை வரும் சமயம் அவை குகைகளுக்குள் ஒளிந்துகொண்டன. அந்தக் குகையிலும் ஒரு சந்நியாசி இருந்தார். அவர் யாரோ அல்ல… கங்கைக்கரையில் சூர்யாஜிக்கும் ராணுபாய்க்கும் வழிகாட்டியவர்தான்!

அவர் அங்கு ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்முன் சென்று நின்ற நாராயணன், “”சுவாமி… வீட்டில் திருமணம் செய்யமுனைந்தனர். ஓடிவந்துவிட்டேன்” என்றான்.

“”நீ ஓடி வரவேண்டுமென்பதற்காகத்தானப்பா அவ்வாறு அவர்கள் செய்ய முற்பட்டனர்” என்றார் சந்நியாசி.

“”ஒரே பதில்தான்- ஆனால் நீங்கள் மாற்றிச்சொல்கிறீர்கள்.”

“”எப்படிச் சொன்னாலும் விளைவு ஒன்றுதான். நீ உண்மையில் யார் என்பதையும், இந்த பிறப்பு எதற்காக என்பதையும் தெரிந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது. நீ மாருதியின் அம்சம். அந்த மாருதியை நீ காணவேண்டுமா?” என்று கேட்டார் சந்நியாசி.

“”நிச்சயமாக… நானும் அவரைப்போலவே தாவுவேன், குதிப்பேன்.”

“”அதுபோதாது. நீ அவரைப்போலவே ராமதாசனாக வேண்டும். அதுதான் முக்கியம்… உன்னால் முடியுமா?” என்று கேட்டார்.

“”நிச்சயம் என்னால் முடியும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” நாராயணன் ஆவலோடு கேட்டான்.

…………………………………………………………………………………………………………………………..

ரசிம்மாவதாரத்தை நுட்பமாக சிந்தித்தோம். இந்த நரசிம்மர்தான் நாமக்கல்லில் சந்நிதிகொண்டு சேவை சாதிக்கிறார். இந்த நரசிம்மர் ஆலயம் ஒரு குடைவரைக் கோவிலாகும்.

குடைவரைக் கோவிலென்றால், மலை யின் ஒரு பக்கம் அதன் ஒரு பாகத்தை செதுக்கி கோவிலாக்குவது என்பதாகும். இதை சற்று மாற்றி, அந்த மலையையே கோவிலாக்குவது என்றும் சொல்லலாம்.

ஒரு மலையைக் கோவிலாக்குவது என்பது அவ்வளவு சுலபமா என்ன? அதன் ஒரு பகுதியில் கோவில் அமைக்கும்போது மலையும் கோவிலாகிவிடுகிறது. உடம்பின் எந்த பாகத்தை தீண்டினாலும் மூளை அதை உணர்வதோடு, அந்த தொடு உணர்வு உடம்பெங்கும் பரவுகிறமாதிரி- இங்கே கோவிலில் பூஜை நடக்கும்போது மொத்த மலையே அதன் சாந்நித்யத்துக்கு ஆளாகிறது. இதன்காரணமாக இந்த மலையையேகூட நரசிம்மமாகக் கருதி வணங்கலாம். அதில் கொஞ்சமும் பிசகில்லை. அதுமட்டுமல்ல… இப்படிப் பட்ட மலையுள்ள ஊரும் காலத்தால் மேல்நோக்கி வளருமேயன்றி கொஞ்சமும் தாழ்வைச் சந்திக்காது.

இந்தக் கருத்தோடு நாமக்கல்லைப் பார்க்கும்போது இது எவ்வளவு பெரிய உண்மை என்பது புலனாகும். இப்படி ஒரு குடைவரைக் கோவில் நாமக்கல்லில் மட்டு மல்ல; மதுரை ஆனைமலையிலும் இருக்கி றது. இங்கேயும் நரசிம்மமூர்த்திதான் சேவை சாதிக்கிறார். இவரும் மிகப் பிரசித்தம். இந்த ஆனைமலை தலம் ஒரு க்ஷேத்திரமும்கூட.

பொதுவாக இதுபோன்ற குடைவரைக் கோவில் கொண்டமலைகளை- அந்த மலைகளே பெரும் தெய்வசாந்நித்யம் கொண்டிருப்பதால் தூய்மை யாகப் பேணவேண்டியது அவசியம்.

இப்படிப்பட்ட மலைகளின்மீது ஏறுவதுகூட பாவம். ஏனென்றால் நம் கால்கள் மலைமேல் பட்டு மலை தோஷமடைகிறது. அதோடு- மலைமேல் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்ளுதல், தவறான செயல்களுக்காக ஒதுங்குதல் என்று, மலையின் சிறப்பைத் தெரிந்துகொள்ளாமலும் புரிந்துகொள்ளாமலும் இந்த நாட்களில் நிறையவே நாம் தவறுகள் புரிகிறோம்.

நரசிம்மம் பெரும் உக்ரமான தெய்வம்.

இதன் வருகையே அசுர வதத்துக்காகத்தான்.

எனவே நரசிம்மத்திடம் நயம்பட நடந்துகொள்ளவேண்டும். கருணை மிகுந்ததுதான் தெய்வம். அசுரவதம்கூட ஒரு வகை கருணைதான்… குறிப்பாக அசுரனால் பாதிக்கப்படுவோர்மீது காட்டப்படும் கருணை அது. அந்த அசுரன்மீதும் கருணை கொண்டதால்தான் வதம் நடக்கிறது. விட்டால் அவன் பாவமூட்டை இன்னும் இன்னும் என்று பெரிதாகியபடியே அல்லவா போகும்?

நாமக்கல் வரையில் அது பெயருக்கேற்ப கல்வியில் சிறந்து விளங்கும் அதேசமயம், எய்ட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோயும் அதிகம் கொண்டதாக உள்ளது. நோயில் கொடியது எய்ட்ஸ். மெல்ல மெல்ல மனிதர்களைக் கொன்றுவிடும். இதற்கு எதிராக உலகமே போராடிவருகிறது. எப்படி இளம்பிள்ளைவாதத்துக்கு எதிராக போலியோ சொட்டு மருந்து இயக்கத்தை இடைவிடாமல் அரசாங்கம் செய்துவருகிறதோ, அதேபோல எய்ட்ஸுக்கு எதிராகவும் செயல் பட்டு வருகிறது.

கல்வியில் மிகச் சிறந்து விளங்கிடும் ஒரு மண்ணில் இப்படி ஒரு பின்னடைவு ஏனென்றால், அந்த மலையையே கோவிலாகக் கருதாமல் அதன்மேல் அசுத்தம் புரிவதால்தான்… அதேசமயம் அவ்வப்போது பெய்திடும் மழையே அபிஷேகமாக மாறி, மலை குளிர்ந்து போவதால் ரட்சிக்கப்படுகிறோம்.

இப்போது அந்த நரசிம்மத்தை அனுமன் தொழுதபடி இருக்கும் அவன் ஆலயத்துக்கு வருவோம். அனுமனுக்கு சிறிய திருவடி என்றொரு பெயருண்டு. பெருமாளுக்கு சேவை செய்வதில் கருடனும் அனுமனும் பெரும் போட்டியாளர்கள்.

ராமன் பிறக்கும்போதுதான் அனுமனுக்கும் பிறப்பு நிகழ்கிறது. ராமன் பிறக்கக் காரணமான புத்திர காமேஷ்டி யாகப்பிரசாதத்தை தசரத பத்தினிகள் உண்ணும் முன்பே, அது கருடனால் கொண்டு வரப்படும் சமயம் அதன் ஒரு திவலை கீழே சிந்திட, அது திருப்பதி ஏழுமலையின் ஒரு மலையில் தவம் செய்தபடி இருந்த அனுமனின் தாயான அஞ்சனையின் உதட்டில் படுகிறது. அவளும் என்னவோ ஏதோவென நாவினால் அதைச் சுவைக்கப்போய் புத்திரப் பிராப்தி அவளுக்கும் ஏற்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் புத்திரப் பிராப்திக்காகத்தான் அஞ்சனை அந்த மலையில், வாயுவை கும்பகத்தில் நிறுத்தி தவம்செய்தபடி இருந்தாள். அவள் விருப்பத்தை பின் வாயுவானவன் சிவசக்தி ஸ்கலிதத்தோடு போய் அவளுக்குள் புகவும் அஞ்சனை கருவுற்றாள். அதற்குக் காரணமான வாயுவும் அனுமனின் தந்தை என்றானான்.

இப்படிப் பிறந்த அனுமன் எவ்வாறெல் லாம் குறும்புகள் செய்து வளர்ந்தான்- வரசித்திகள் பெற்றான் என்பதை எல்லாம்தான் முன்பு பார்த்தோம். இறுதியாக காட்டுக்குச் சென்ற ராமன் மீண்டும் நாடு திரும்பி அயோத்தி அரசனாக முடிசூட்டிக்கொண்ட நிலையில், அனுமனை தன் மார்போடு அணைத்து தன்னையே பரிசாக அனுமனுக்கு அளிக்கிறான்.

இறுதியாக ராமவதாரம் முடிந்து ராமன் வானுலகு செல்லும்போது தன்னை உற்ற அனைவர்க்கும் மோட்சகதி கிடைக்கச் செய்கிறான்.

ஆனால் மூன்று பேர் மட்டும் ராமனுடன் மோட்சகதிக்கு இலக்காக மறுத்துவிடுகின்றனர்.

அவர்கள்தான் ஜாம்பவான், விபீஷணன், அனுமன் ஆகியோர்.

இவர்கள் மறுத்ததற்கு ஒரே ஒரு காரணம் தான்.

விண்ணுலகில் ராமபிரானுக்கு கோவில்கள் இல்லை. அங்கே ராமநாமத்தை ஜெபிக்கும் அவசியமோ நாம ஸ்மரணைக்கான தேவையோ இல்லை. அவசியமும் தேவையும் பக்திபுரிவதற்கு எதற்கென்று கேட்கலாம். அவர்கள் மூவரின் நோக்கமும் பூவுலகில் ராமநாமத்தை எப்போதும் ஜெபித்துக்கொண்டு, மானுடர்கள் உய்ய வழிகாட்டவேண்டும் என்பதுதான். சேவையில் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்வதே உயர்ந்த மானுட தேவலட்சணமாகும். விண்ணகத்தில் அதற்கு இடமேது?

விண்ணகத்தில் அவன் திருவடியை அடைந்து அவனோடு கலந்துவிட்டபின் எப்படி சேவையாற்ற முடியும்? உண்மையில் முக்தியை வேண்டுபவர்களைவிட இப்படி சேவையாற்றுபவர்களையே உலகம் பெரிதும் கொண்டாடுகிறது.

அனுமனும், “நான் பூவுலகில் சிரஞ்ஜீவியாக இருந்துகொண்டு, ராமநாம ஸ்மரணை என்னும் ஜீவசக்தியும் ஆன்ம சக்தியுமான இயக்கம் என்றும் தொடர்ந்தபடி இருக்க விரும்புகிறேன்’ என்கிறான். அதனாலேயே ராமபிரானும் அவனுக்கு அந்த வரத்தை அளிக்கிறார். இதனால் பூவுலகில் நித்ய சஞ்ஜீவியாக அதாவது பக்தி மூலிகையாக- அப்படியே நித்ய சிரஞ்சீவியாக- அதாவது அழிவேயில்லாதவனாக அனுமன் வாழ்ந்துவருகிறான்.

இமயத்தின் ஒரு பாகத்தில் இன்றும் அவனது ராமநாம ஸ்மரணை ஒரு அழிவில்லாத தவமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதே சான்றோர் கருத்தாகும்.

இப்படி பூவுலகில் தன் கடமையைத் தொடரும் அனுமனை, வைணவ ஆலயங்கள் அனைத்திலும் ஒரு உபசந்நிதியில் காணலாம். குறிப்பாக நரசிம்மர் ஆலயத்தில் அனுமனின் திருச்சந்நிதி கட்டாயமிருக்கும். காரணம், அனுமனுக்கும் நரசிம்மத்துக்கும் உள்ள பலவிதமான ஒற்றுமைகள்.

இருவருமே விலங்கு முகமும் மனித உடலுமானவர்கள்.

இருவருமே பெரும் வரசித்தி உடையவர்கள்.

இருவருமே அசுரவதம் புரிந்தவர்கள்.

நரசிம்மம் அழித்தது ஹிரண்யனை என்றால்,

அனுமன் அழித்தது ராவண சேனையை…

நரசிம்மம் பிரகலாதனால் குளிர்ந்தது.

ஸ்ரீராமன் அனுமனால்தான் குளிர்ந்தான்.

நரசிம்ம மூர்த்திக்கும் யோக நிஷ்டையுண்டு.

அனுமனும் யோக நிஷ்டையுடையவன்.

இருவருமே பெரும் பலசாலிகள். இதனாலேயே இருவரையும் ஒரே ஆலயத்தில் “பிரதானம்- உபம்’ என்று ஸ்தாபித்தார்கள்.

நரசிம்மம் நல்ல வழிகாட்டும். தீய சக்திகளை விரட்டும். அனுமன் மனோபலம் தருவான். நம்மை பலவீனப்படுத்தும் தீய சக்திகளை அழித்து நல்லவழியில் நாம் நடக்க மனோபலம் பெரிதும் தேவைதானே?

இதனாலேயே நாமக்கல்லிலும் அனுமன் அசுரவதம் புரிந்த நரசிம்மத்தை சதா வணங்கிய படி இருக்கிறான். எப்படி அந்த குடைவரை மலை கூரையின்றி, மலையே கோவிலாக உள்ளதோ, அப்படியே தன் ஆலயத்தையும் அமைத்துக்கொண்டுவிட்டான்.

எதிரில் மலையாகிய நரசிம்மம் மழையிலும் வெய்யிலிலும் அதை அபிஷேகமாகக் கருதி ஏற்கும்போது, தான் கோவிலுக்குள் ஒரு கூரைக்குள் அடங்கிவிடுவதை அவன் விரும்பவில்லை. இதனால்தான் நாமக்கல்லில் அனுமனின் சிரசுக்குமேல் திறப்பு காணப்படுகிறது. மழை பெய்திடும்போது அது காலாபிஷேகம் என்றா கிறது. அனுமன்மேல் விழும் மழைநீர் பல தோஷங்களை நீக்கவல்லது. அதேபோல நாமக்கல் மலைமேல் படும் மழைநீர் தேங்கிடும் குளமும் பல தோஷங்களை நீக்கக்கூடியது. இந்த குளத்துநீர் மனோபயத்தைப் போக்கி பெரும் துணிவையும் அச்சமற்ற மனஅமைப்பையும் தரவல்லதாகும்.

குறிப்பாக நம்மையும் அறியாமல் நாம் பிற உயிர்களுக்குச் செய்த துன்பங்களும், அதனால் உண்டான தோஷமும் இந்தக் குளத்தில் நீராட நீங்கும். இன்றுள்ள நிலையில் குளத்தில் நீராடுவது, குளத்தை மேலும் மாசைதான் ஏற்படுத்தும். எனவே இக்குளத்து நீரையெடுத்து தலையில் தெளித்துக்கொள்ளலாம். “நரசிம்மாமிர்தம்’ என்று கூறியபடி ஒரு வாய் பருகலாம்.

இப்படி இந்த நாமக்கல்லில் சேவை சாதிக்கும் அனுமனின் பெரும் கருணைக்குக் காரணமான ஒரு சம்பவத்தையும் இனி சிந்திப்போம். இந்த நாமக்கல் தலத்தில் இட்லிக்கடை வைத்து பிழைப்பு நடத்திய புவனேஸ்வரி எனும் ஒரு பெண்மணி என் பெரியப்பாவிடம் சொன்ன சம்பவம் இது. இன்று புவனேஸ்வரி உயிரோடு இல்லை. என் பெரியப்பாவும் இல்லை. ஆனால் புவனேஸ்வரிக்கு அனுமன் புரிந்த கருணை என் நெஞ்சில் அப்படியே உள்ளது.

புவனேஸ்வரி ஊழ்வினை காரணமாக கணவனை இழந்துவிட்ட ஒருத்தி. ஆனாலும் ஒரு பிள்ளை. இந்தப் பிள்ளைதான் இவள் வரையில் எல்லாம்! இந்தப் பிள்ளைக்கு அனுமனின் இஷ்ட நாமமான ராமன் பெயரையும், சந்திரனின் பெயரையும் சேர்த்து ராமச்சந்திரன் என்று வைத்து வளர்த்து வந்தாள்.

ராமச்சந்திரனும் படித்துப் பட்டம் பெற்றான்.

நல்ல வேலைக்குப் போய் தாய்க்கு ஓய்வு தரத் துடித்தான். ஆனால் வேலை என்ன மரத்திலா தொங்குகிறது? விண்ணப்பம் எழுதிப்போடுவது ஒருபுறம்- அம்மாவின் இட்லிக்கடையில் ஒத்தாசையாக இருப்பது மறுபுறம். இப்படியொரு நிலையில்தான் ஒருநாள் காரிலிருந்து ஒருவர் இறங்கிவந்தார். அவர் பேண்ட், சட்டையெல்லாம் சேறு. அவர் ராமச்சந்திரனிடம் தண்ணீர் கேட்டு வாங்கி அதைக் கழுவிக்கொள்ள முனைந்தார். ராமச்சந்திரனோ அதைக் கேட்டுவாங்கி, துவைத்தே தந்துவிட்டான். அதுவரை தன் வேட்டி, துண்டு ஒன்றை அவர் அணியத் தந்தான். அந்த இடைவெளியில் இட்லி, சாம்பார் வாசத்தில் தன்னை மறந்த அவர், இட்லி வாங்கிச் சாப்பிட்டு பசியாறியும் முடித்தார்.

திண்ணைக் கடையாக இருந்தாலும் அதன் சுவை அவரை மிகக் கவர்ந்துவிட்டது. மொத்தத்தில் ராமச்சந்திரன் அவரை மிகக் கவர்ந்துவிட்டான். அவனிடம் அவர் “நீ என்ன செய்கிறாய்?’ என்று கேட்கப்போய், அவனும் தான் வேலை தேடிக்கொண்டிருப்பதைக் கூறினான். உடனேயே தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, குறிப்பிட்ட ஒரு நபரைப் போய் பார்க்கச் சொன்னார் அவர்!


7

ந்த வழக்கறிஞர் அடுத்து சொன்ன விஷயம் உண்மையில் என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. எந்தக் கணவன் அந்தப் பெண்ணிடம் இயற்கைக்கு மாறாக நடந்துகொண்டு, அந்தப் பெண்ணையும் பாடாய்ப்படுத்தி விவாகரத்துபெறக் காரணமானானோ அதே நபர், விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் புரிந்துகொண்டு வாழ்ந்த அந்தப் பெண்ணின் வீட்டுக்கே கார் டிரைவராக வந்து வேலைக்குச் சேர்ந்ததுதான் விந்தை!

டிரைவராக வந்தவன்தான் தன் மனைவியின் முன்னாள் கணவன் என்பது அப்பெண்ணின் கணவனுக்கு முதலில் தெரியாது. தெரியவரவும், அவனே வேறிடம் பார்த்துக்கொண்டு போய் விட்டான். போகும்முன் அவன் அந்தப் பெண்ணையும் அவளின் இரண்டு குழந்தைகளையும் பார்த்த பார்வையில் அவ்வளவு பரிதாபம்.

காலம் அனுமன் வடிவில் அந்தப் பெண்ணுக்கு கருணை காட்டிவிட்டது. அவனையோ நடுத்தெருவுக்குக் கொண்டுசென்றுவிட்டது. இது ஒரு பக்தி அனுபவம் என்றால், நாமக்கல் ஆஞ்சனேயர் கோவிலை மையமாக வைத்த ஒரு பக்தி அனுபவம்- எது பக்தி என்பதற்கு இலக்கணமானது. முன்னதாக நாமக்கல் குறித்தும் அந்த ஆஞ்சனேயர் குறித்தும் தெரிந்துகொள்வோம்.

இன்று நாமக்கல் நகரம் பெரும் கல்விச் சிறப் புடைய நகரமாக விளங்கி வருகிறது. வருடா வருடம் பத்தாம் வகுப்பு தேர்விலும், +2 தேர்விலும் இந்த நகரத்துப் பள்ளிகளில் இருந்து பலர் எப்படியோ முதலிடத்தையும் இரண்டாவது இடத்தையும் பெற்று வருவதைப் பார்க்கிறோம். நாமக்கல் கல்வியில் இப்படி சிறந்துவிளங்கக் காரணமே அந்நகரின் ஆன்மாவாகத் திகழும் ஆஞ்சனேயர் ஆலயம்தான் என்றால் மிகையே கிடையாது.

அந்த ஆஞ்சனேயரை வெகு தொலைவில் இருந்தும்கூட நெஞ்சு நிரம்ப சேவிக்கலாம். சரியாக தரிசனம் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்படத் தேவையே இல்லை. காரணம், ஆஞ்சனேயரின் நெடிதுயர்ந்த பதினெட்டு அடிக்கும் மேலான உயரமும் கம்பீரமும்தான்… இங்கே அனுமன் சந்நிதிக்கு மேல் கூரை கிடையாது. இங்கே என்றில்லை… பெரும்பாலான இடங்களில் அனுமன் சிரத்துக்குமேல் கோபுரக்கூரைக்கு இடமில்லை. அதற்கு அவன் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுவார்கள். என்ன காரணம் என்று சிந்தித்துப்பார்த்தால், அங்கெல்லாம் அவன் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான் என்பது ஐதீகம்.

விஸ்வரூபத்தை கூரை கொண்டு தடுப்பதோ அடக்குவதோ கூடாது என்பது ஒரு காரணம். அடுத்து அனுமன் விண்ணில் தெரியும் நட்சத்திரக்கூட்டங்களைப் பார்த்தபடி ராமநாமம் ஜெபித்தபடி இருக்கிறான். பெரும் மழை பெய்யும்போது அந்த மழைநீரை அவன் அபிஷேகமாகக் கருதுகிறான். இப்படி பல காரண காரியங்கள் விஸ்வரூப ஆஞ்சனேயன் பின்னால் உள்ளன.

இப்படிப்பட்ட விஸ்வரூப ஆஞ்சனேயனை நாம் தரிசிக்கும்போது நம் மனதிலும் ஒரு பெரும் பரவச உணர்ச்சி விஸ்வரூபமெடுக்கும்; பெரும் சிந்தனையும் தோன்றும்.

அனுமனிடம் குரங்கின் தன்மைகள் உண்டு. முகத்திலும் வாலிலும் அவன் குரங்கினத்தவன் என்று அறியலாம். குரங்கு தாவும் இயல்புடையது. அதேசமயம் விலங்கினமாக இருந்தாலும் காய், கனி, பழம் என்றுதான் உண்ணும். எக்காரணம் கொண்டும் மாமிசத்தை சாப்பிடாது.

இப்படிப்பட்ட குரங்கை தாவும் மனதுக்கு சான்றோர்கள் ஒப்பிடுவார்கள். இதைவைத்து “மனம் ஒரு குரங்கு’ என்கிற சொலவடையும் தோன்றியது. இப்படிப்பட்ட குரங்கு மனதை தியானத்தால் மட்டுமே கட்டுப்படுத்தி அடக்கமுடியும். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை. நாம் தியானம் செய்யலாம் என்று அமரும்போது தான், நமக்குள் அடங்கிக்கிடந்த அத்தனை எண்ணங் களும் ஆர்ப்பரித்து எழுந்து வரிசைகட்டி வெளியேறும். நாமும் சில நிமிடங்கள்கூட தியானம் புரிய இயலாமல் அதைவிட்டு விலகி, நம்மால் முடியாது என்கிற முடிவினுக்கும் வந்துவிடுவோம். ஆனால் முனைந்து தியானம் செய்து அதில் வெற்றி பெறுகிறவர்களைப் பார்த்தாலோ அவர்கள் முகத்தில் ஒரு பெரும் பொலிவு இருப்பது நன்கு தெரியும். அவர்களிடம் மனோ சக்தியும் மிகுந்திருக்கும்.

இத்தனை விளக்கங்களை இங்கே கூறக் காரணம் இருக்கி றது. அனுமன் வடிவில் அலைபாயும் குரங்கினத்தவனாக இருப்பினும், மனதளவில் அவன் ஒரு மாபெரும் யோகி. மிகுந்த கட்டுப்பாடும் தன்னடக்கமும் உடையவன். அதுதான் அவனது அளப்பரிய சக்திக்குக் காரணம். அவனை வணங்குபவர்க்கும் இந்த சக்தி கிடைக்கிறது என்பதுதான் அனுமன் வழிபாட்டில் உள்ள சூட்சுமமான விஷயம். நாமக்கல்லிலும் இதுதான் நடக்கிறது. அதனால்தான் அங்கே பிள்ளைகள் மனம் ஒருமித்துப் படித்து கல்வியில் பெரும் வெற்றிபெற்றிட முடிகிறது. நாமக்கல் நகரம் முழுக்கவே அனுமனின் ஞானப்பேரலை பரவிக்கிடக்கிறது.

அதுமட்டுமல்ல; நாமக்கல் நகரின் மையத்தில் ஒரு பெரும் குன்று உள்ளது. எப்போதுமே குன்றுள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சக்தி இயற்கையாகக் குடிகொண்டிருக்கும். அதற்கு குன்றினுடைய பிரமிடு போன்ற வடிவம் ஒரு காரணம்.

பிரமிடுகள் தங்களுக்குள் சக்தியை வெகுவாகக் கொண்டிருப்பவை. மிக விஞ்ஞானப் பூர்வமானவை. ஒரு பிரமிடு வடிவ பெட்டிக்குள் நானும் சில பரிசோதனைகளைச் செய்துபார்த்தேன். ஒரு பிரமிட் வடிவ பிளாஸ்டிக் பாக்ஸ்- கையில் அடங்கிவிடக் கூடியது. அதில் ஒரு தக்காளிப்பழம், ஒரு பச்சை மிளகாய், ஒரு நெல்லிக்காய் என்று மூன்றை வைத்து மூடினேன். ஒரு தட்டையான பிளாஸ்டிக் டப்பாவில் இதே மூன்றை வைத்து மூடினேன். சரியாக ஒரு வாரம் கழித்துத் திறந்து பார்த்தேன். முன்னதாக ஒரு தாம்பாளத்தில் பச்சை மிளகாயைப் பரப்பி வைத்து, அதன் நடுவில் பிரமிடு வடிவ டப்பாவை வைத்தேன். இன்னொரு தாம்பாளத்தில் அதேபோல பச்சைமிளகாயைப் பரப்பி வைத்து, தட்டை வடிவ டப்பாவை வைத்திருந்தேன். இந்த தட்டை வடிவ டப்பாவைத் திறந்து பார்த்தபோது, தக்காளி சுருக்கம் விழுந்து கன்றிப்போயிருந்தது. பச்சை மிளகாய் சிவப்பாக மாறியிருந்தது. நெல்லிக்காயும் நிறம் மாறியிருந்தது. அதுமட்டுமல்ல; தட்டை வடிவ டப்பா வைக்கப்பட்டிருந்த தாம்பாளத்திலுள்ள பச்சை மிளகாய்கள் அவ்வளவும் பழுத்து சிவப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. இது இயல்பாக நடப்பதுதான். தட்பவெப்பநிலை காரணமாக இப்படித்தான் நடக்கும். ஆனால் பிரமிடு வடிவ டப்பாவுக்குள் இருந்த தக்காளி, மிளகாய், நெல்லிக்காய் மூன்றும் அப்படியே இருந்தன. அந்த பிரமிடை சுற்றி வெளியே தாம்பாளத்தில் இருந்த பச்சை மிளகாய்களும் பெருமளவு பச்சையாகவே இருந்தன. மொத்தத்தில் பிரமிடு வடிவம் உள்ளேயும், வெளிப்புறத்திலும்கூட தன் ஆற்றலால் தட்பவெப்ப நிலையிலிருந்து பொருட்களுக்கு புத்துணர்ச்சி தருவதை உணரமுடிந்தது.

ஒரு கையளவுள்ள பிரமிடு டப்பாவைச் சுற்றியே இப்படியென்றால், பெரும் மலையைச் சுற்றி அதன் ஆற்றல் எந்த அளவு இருக்குமென்று எண்ணிப் பாருங்கள்; அதிலும் நாமக்கல் குன்று நகரின் மையப்புள்ளியாக உள்ளது. திருச்சியிலும் மலைக்கோட்டை மையத்தில் உள்ளது. திண்டுக்கல்லிலும் மையத்தில் உள்ளது. இப்படி நிறைய உதாரணங்களை அடுக்கலாம். இதுபோன்ற மலைகளைக் கொண்ட ஒரு ஊர்கூட வரலாற்றில் இடம் பெறாமல் போகவில்லை. இன்றளவும் சுறுசுறுப்பான செயல்பாடுகள் அந்த மலை நகரங்களில் நடந்தபடியேதான் இருக்கின்றன. இதற்குப் பின்னால் ஆய்வுக்குரிய பிரமிட் சக்தி இருக்கிறது என்பது ஆய்வாளர்கள் நம்பிக்கை.

அந்த நம்பிக்கை நாமக்கல்லில் பளிச்சென தெரிகிறது. நாமக்கல் என்னும் வார்த்தையை சிலர் “நாமம் போட்ட கல்’ என்று தவறாக விளக்குவார்கள். உண்மையில் “நாமம் விளங்கக் கல்’ என்பதே சரியான பொருளாகும். அதாவது பெயர் எடுக்கும் விதமாகவும் உன் பெயர் மதிக்கப்படும் விதமாகவும் நன்றாகப் படி என்கிறது அந்தப் பெயர். அதை கோடிக்கணக்கானோர் திரும்பத்திரும்ப சொல்லும் போது அதன் சக்தி அலையாக உருவாகி பெரும் சக்தியாக மாறுகிறது. இதுவும்கூட நாமக்கல் பெரும் கல்வி நகரமாகத் திகழக் காரணமாகும்.

இப்படிப்பட்ட நாமக்கல்லில் அந்த மலையின்கீழ் குடைவரைக் கோவிலாக உள்ள நரசிம்மர் ஆலயமும் நாமகிரித் தாயார் சந்நிதியும் பெரும் கீர்த்தி பெற்றதாகும்.

வைணவ ஆலயங்களில் நரசிம்மர் சந்நிதி தனித்த தன்மைகள் பல உடையது. அங்கே மிக கவனமாகவும் ஆசாரமாகவும் இருக்கவேண்டும். நரசிம்மம் பெரும் கோபமுடையது. அதனால்தான், அதனால் ஹிரண்யனை வதம் செய்ய முடிந்தது. அடுத்து நரசிம்மமூர்த்தி ஒரு அதிசயம். மனித உடம்பு, சிங்கத்தின் தலை என்கிற இணைப்பால் மட்டும் அதிசயமானதல்ல; நரசிம்மம் புத்திசாலித்தனத்தின் உச்சம். அந்த புத்திசாலித்தனத்தை நாம் எங்கும் எந்த விஷயத்திலும் கேள்விப்பட்டிருக்க முடியாது.

அதை நுணுக்கமாக அணுகிப் பார்த்தால் தான் புரிந்துகொள்ள முடியும். நரசிம்மாவ தாரத்துக்குக் காரணமே ஹிரண்யன் என்னும் அசுரகுணம் கொண்ட அரசன்தான். இவன் தன்னையே கடவுளாக அறிவிக்கிறான். அதற்குக் காரணம் எவராலும் எதனாலும் இரவிலும் பகலிலும் அவனுக்கு அழிவில்லை என்பதுதான்.

இந்த உலகில் பிறப்பு- இறப்பைக் கடந்து நித்ய சூரியனாக ஜொலிப்பவன் இறைவன் மட்டுமே. மற்ற யாராக- எதுவாக இருந்தாலும் அழிந்தே தீரவேண்டும். இது உயிர்களுக்கான விதிமட்டுமல்ல; அண்டசராசரங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

இந்த உலகமும் உயிர்களும் காலங்காலமாக மாற்றங்களைக் கண்டுகொண்டேதான் வருகின்றன. இன்று கடலோரம் உள்ள நகரான கன்னியாகுமரி, ஒரு பெரும் ஊழி ஏற்படும்முன் கடற்கரையிலிருந்து நூறு கிலோமீட்டர் அப்பாலுள்ள நகரமாக இருந்தது. ஊழியால் அந்த நூறு கிலோமீட்டர் நிலப்பரப்பும் கடலுக்குள் சென்றுவிட்டது. அதேபோல குஜராத் மாநிலத்து துவாரகை எனும் கண்ணன் ஆட்சி செய்த நகரமும் கடல்கொண்ட நகரமாகிவிட்டது. கடலுக்குள் இன்றும் துவாரகை அரண்மனைக் கட்டடம் இடிபாடுகளுடன் இருப்பதை அகழ்வாராய்ச்சி செய்வோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதிலிருந்து உலகமும் உயிர்களும் இன்று இருப்பதுபோல நாளை இருப்பதில்லை என்பது நிரூபணமாகி, மாற்றம் ஒன்றே மாறாதது என்பதும் தெளிவாகிறது. ஆனா லும் இந்த மாற்றம் இறைவனிடம் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது. இறைவனை மேலான சக்தி என்றும், மாறாத சக்தி என்றும், உலகின் ஒரே இயக்க சக்தி என்றும் பலவாறு கூறுவார்கள். “இந்த சக்தி நான்தான்’ என்று ஹிரண்யன் அறிவித்தான். “எனக்கு அழிவில்லை. என்னை அழிப்பாருமில்லை’ என்று ஆர்ப்பரித்தான். அத்துடன் நின்றா னில்லை. சிவபூஜை, விஷ்ணு பூஜையைத் தடை செய்தான். கோவில்களில் தன் உருவத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கும்படி கட்டளையிட்டான். தேவலோகத்தை தனக்கு அடிமையாக்கினான். இந்திரனை அழைத்து தன் கால் பிடித்துவிடச் சொன்னான்.

சப்தரிஷிகளை- நவநாயகர்களை- சித்தர் பெருமக்களை- மற்றுமுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களை- இவர்கள் தவிர மேலுமுள்ள கின்னரர், கிம்புருடர், யவ்வனர், யட்சர், கந்தர்வர், நாகர் என்று சகல இனத்த வரையும் தனக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று அறிவித்து அவர்களைப் படாதபாடு படுத்தினான்.

இவ்வளவுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். பிரம்மதேவனிடம் அவன் பெற்ற புத்திசாலித்தனமான வரம்.

அந்த வரம்தான் வரங்களிலெல்லாம் தலையாய வரமாக இன்றும் எல்லாராலும் கருதப்படுகிறது. காரணம், அதைவிட புத்திசாலித்தனமான ஒரு வரத்தை அதற்கு முன்பும் அதற்குப் பின்பும்கூட ஒருவரும் கேட்டதில்லை.

அது என்ன வரம்?

“இந்தப் பூவுலகில் மட்டுமல்ல; விண்ணில் இருக்கும் ஈரேழு பதினான்கு உலகங்களிலும் எனக்கு மரணம் நேரக்கூடாது.

உலகில் பிறந்த எந்த உயிர்களாலும்- அதாவது பறப்பன, நடப்பன, ஊர்வன, நீந்துவன என்று எதனாலும் மரணம் நேரக்கூடாது.

அடுத்து பஞ்ச பூதங்களாலும், சூரிய சந்திரர்களாலும், ஏனைய தேவர்களாலும், இப்போதுள்ள மும்மூர்த்திகளாலும் மரணம் நேரக்கூடாது.

இதுமட்டுமின்றி தேவர்கள் நீங்கலாக உள்ள எவராலும், அதி தீய நஞ்சாலும், அவ்வளவு ஏன், ஆண்- பெண்- அலி என்று மூன்று இனம் சார்ந்தவராலும்கூட மரணம் நேரக்கூடாது’ என்று அவன் கேட்டு முடிக்கவும் வரமளிக்க வேண்டிய பிரம்மாவுக்கே கண்ணைக் கட்டிவிட்டது. இனி புதிதாக ஒரு உயிர் தோன்றினால்தான் என்னுமளவு அவ்வளவு பேரையும் குறிப்பிட்டு இவர்கள் யாராலும் மரணம் நேரக்கூடாது என்றவன், இறுதியாய்க் கேட்டதுதான் புத்திசாலித்தனத்தின் உச்சம். “நானாய் அழைத்தாலன்றி மரணம் என்னைத் திரும்பிப் பார்க்கக் கூடாது’ என்றவன், “இரவு- பகல் எனும் இருகால அளவிலும்கூட நிகழக்கூடாது’ என்றும் கேட்டு வாங்கிக் கொண்டான்.

பிரம்மாவும் “ததாஸ்து’ என்று கூறி மறைந் தார். அவருக்கு வேறு வழி தெரியவில்லை. “வரம் கேள்; தருகிறேன்’ என்று கூறிவிட்டு, “இப்படியெல்லாம் கேட்டால் தரமாட்டேன்’ என்றெல்லாம் அவரால் கூறவும் முடியாது. கூறினால் அவர் பிரம்மா கிட