ஆழ்வார்கள்

 

 

Click Here


எம்.என். ஸ்ரீனிவாசன்

நான்முகக் கடவுளான பிரம்மன், திருமாலைக் காண வேண்டித் தவம் செய்தார். அப்போது, “தொண்டை நாட்டிலுள்ள காஞ்சிபுரம் சென்று அஸ்வமேத யாகம் செய். அந்த வேள்வியின்  பலனாக திருமாலை தரிசிக்கும் பாக்கியம் பெறுவாய்’ என்று அசரீரி வாக்கு ஒலித்தது. அதைக் கேட்ட நான்முகன் விஸ்வகர்மாவை அழைத்து, “”ஒரு யாக சாலையையும் மணி மாடங்கள் சூழ அழகான தோர் நகரத்தையும் தோற்றுவிப்பாயாக” என்று பணித்தார். விஸ்வகர்மாவும் செய்து முடித்தார்.

யாகம் ஆரம்பிப்பதற்குமுன் பிரம்மனிடம் பிரஹஸ்பதி, “”வேள்வியை நடத்த உங்களுடைய  துணைவியார் கலைமகளும் உடனிருக்க வேண்டும்” என்றார். இதையடுத்து நதி தீரத்தில் தவம் செய்து கொண்டிருந்த சரஸ்வதியை அழைத்து வருமாறு வசிஷ்ட முனிவரை அனுப்பினார் பிரம்மன்.

முன்னொரு காலத்தில் சரஸ்வதியின் பக்தர்களுக்கும் லட்சுமியின் பக்தர்களுக்கும் இடையே சொற்போர் நடந்தது. அப்போது, “”இருவரில் யார் சிறந்தவர்?” என்று பிரம்மனிடம் கேட்க, “”லட்சுமியே சிறந்தவர்” என்றார் நான்முகன். அதில் வருத்தமுற்ற சரஸ்வதி, “”நான் நதிகளில் சிறந்தவள் என்றாவது ஒப்புக் கொள்ளுங்கள்”  என்றாள். ஆனாலும் பிரம்மன், “”நதிகளிலும் கங்கையே உயர்ந்தவள்” என்று சொல்லிவிட, சொல்லொணா சினத்தோடு வெகுண்டெழுந்த சரஸ்வதி, நதியிலேயே தங்கி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மனின் கட்டளைப்படி தன்னை அழைக்க வந்த வசிஷ்ட முனிவரிடம், “”நான் வர இயலாது; வேண்டு மானால் என் கணவர் நானிருக்கும் இடத்திற்கு வந்து வேள்வியை நடத்தட்டும்” என்று கோபத்தோடு கூறிவிட்டாள்.

இதனால் தேவி சரஸ்வதி இல்லாமலேயே மற்ற முனிவர்களின் ஆலோசனைப்படி காயத்ரிதேவியைக் கொண்டு வேள்வியை ஆரம்பித்தார் நான்முகன். யாகத்தில் தேவர்களுக்கு முதல் மரியாதை கொடுப் பதைக் கண்டு  சீற்றம் கொண்ட அசுரர்கள் வேள்வியைத் கலைக்க நினைத் தனர். அதற்காக சரஸ்வதியிடம் சென்றவர்கள், “”கலைமகளே, தீய முனிவர்களின் சதியால் உமது கணவர் உங்களைத் தவிர்த்து மற்றவர்களுடன் யாகம் செய்யத் தொடங்கிவிட்டார். இந்த அநீதியைப் பொறுக்க முடியாமல் தங்களிடம் வந்துள்ளோம். எந்த வகையிலாவது தாங்கள் இந்த வேள்வி நடைபெறாத வண்ணம் தடை செய்தீர்களானால் எங்களுக்கும் மகிழ்ச்சி உண்டாகும்” என்று முறையிட்டனர்.

இதைக் கேட்ட சரஸ்வதி வேள்வியைத் தடை செய்யும் பொருட்டு வேகவதி என்னும் நதியாகப் பெருக்கெடுத்து காஞ்சியை வந்தடைந்தாள். அந்த நதியின் வேகத்தைப் பார்த்து எல்லாரும் அச்சமடைந்தார் கள். “இது அசுரர்களால் தூண்டப்பட்ட சரஸ்வதியின் செயல்தான்’ என உணர்ந்த பிரம்மன் ஸ்ரீமன் நாராயணனை வணங்கித் தொழுதார். உடனே எம்பெருமானும் அந்த நதியின் வெள்ளைப் பெருக்கைத் தடை செய்யும் பொருட்டு தானே அணையாகப் படுத்துக்கொண்டார். மகாவிஷ்ணு வின் அந்த சயனத் திருக்கோலத்தைக் கண்ட சரஸ்வதியும் பணிந்து, வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அந்தர்வாஹினியாய் சென்று கடலில் கலந்தாள்.

பிறகு வசிஷ்டர் போன்ற முனிவர் களெல்லாம், பிரம்மனது சொற்படி சரஸ்வதியை வணங்கினர். “”இப்போதேனும் மனமுவந்து நான்முகனோடு  சேர்ந்து வேள்வியை நிறைவேற்றி அருளவேண்டும். எல்லா நதிகளிலும் சரஸ்வதி நதிக்கே மிக்க சிறப்பு உண்டென நான்முகனே ஒப்புக் கொண்டார்” என்று வேண்ட, கலைமகளும் மனமுவந்து நான்முகக் கடவுளோடு சேர்ந்தாள்.

பிரம்மனின் வேள்வியைக் காக்கும் பொருட்டு வேகவதி ஆற்றின் குறுக்கே- வலது கையைக் கீழே வைத்து அணையாக சயனித்துக் கொண்டிருக்கும் இப்பெருமாள் புஜங்க சயனன் என்று வட மொழியிலும்; திருவணைப் பள்ளி கொண்ட பெருமாள் என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார். இத்தல நதிக்கு வேகாஸேது என்றும் பெயர் ஏற்பட்டது. பிறகு வெஃகா என்று மருவிய இந்த க்ஷேத்திரம் திருவெஃகா என்று இன்று அழைக்கப்படுகிறது. ஆழ்வார்களின் மங்களாசாஸனம் பெற்ற நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் காஞ்சி மாநகரத்தில் பதினான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. அவற்றில் திருவெஃகாவும் ஒன்று.

ஒருநாள் திருமழிசை ஆழ்வார் நெற்றியில் திருமண் சாற்றிக் கொள்ள முனைந்த போது, வைத்த இடத்தில் திருமண் காணப்படாமல் வருத்தமுற்றார். அன்று அவர் கனவில் திருவேங்கடமுடையான் தோன்றி அருளியபடி, திருவெஃகாவை அடுத்த பொய்கைக் குளத்தில் திருமண்ணைக் கண்டெடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டார். அதன் கரையில் எழுந்தருளியுள்ள திருவணைப் பள்ளி கொண்ட பெருமாளை சேவித்தார். இந்த ஆழ்வாரை குருவாகக் கொண்டு கணிகண்ணன் என்ற செந்நாப் புலவரும்அப்பெருமாளையே சேவித்து வந்தார்.

ஒருமுறை தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த பல்லவ அரசனின் மனைவி, திருமழிசை ஆழ்வாரின் அருளால், முதுமை நீங்கி இளமையடையும் ஆசையால், கணிகண்ணனைப் பாடப் பணித்தாள். அவரோ, “திருவணைப் பள்ளி கொண்ட பெருமாளைத் தவிர வேறொருவரையும் பாட மாட்டேன்’ என்று மறுக்க, பல்லவ அரசன் அவரை காஞ்சியை விட்டே வெளியேறும்படி கட்டளையிட்டார். இதனைத் தன் குருவான திருமழிசை ஆழ்வாரிடம் கணிகண்ணன் தெரிவிக்க, இருவரும் பெருமாளையும் தம்முடனேயே வந்துவிடும்படி விண்ணப்பித் தனர். பெருமாளும் தன் பைந்நாகப் பாயை (பாம்பணையை) சுருட்டிக் கொண்டு இவர்கள் பின்னே சென்றுவிட்டார். நகரம் இருளடைந்தது.

மூவரும் காஞ்சிக்கு அருகிலுள்ள பாலாற்றைங்கரையில் அன்றிரவு தங்கினர்.

அவர்கள் தங்கிய அந்த இடம் “ஓர் இரவு இருக்கை’ என்று அழைக்கப்பட்டு பிறகு மருவி ஓரிக்கை என ஆயிற்று. (இதை முன்னிட்டு தை மாத மக நட்சத்திரத்தன்று விசேஷ வைபவங்கள் நடந்து வருகின்றது.) பல்லவ அரசனும் தன் தவறை உணர்ந்து திருமழிசை ஆழ்வாரையும் கணிகண்ணனையும் மீண்டும் காஞ்சிக்கே அழைத்து வந்தார். பெருமாளும் மனமிரங்கி மீண்டும் திருவெஃகாவு வந்து பைந்நாகப் பாயைக் கிடத்தி சயனித்தார். அதனால் இப்பெருமாள் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று தமிழிலும்; யதோத்காரி என்று வடமொழியிலும் திருநாமம் பெற்றார்.

இந்த தலத்தின் தாயார் பெயர் ஸ்ரீகோமளவல்லி நாச்சியார். இவர் இத்தல தீர்த்தமான பொய்கை புஷ்கரணியில், பொற்றாமரை மலரில், ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர்.

பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. இந்தக் கோவிலின் தலவிருட்சம் மகிழ மரம்.

சங்க இலக்கிய பத்துப் பாட்டினுள் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில் திருவெஃகா என்னும் இந்தத் திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் இயற்றிய பெரும்பாணாற்றுப்படைப் பாடலில், அரசன் தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசு பெற்றுத் திரும்பி வரும் யாழ்ப்பாணன் ஒருவன், தன் எதிரே வந்த மற்றொரு பாணனுக்கு வழி கூறி, “இந்த திருவெஃகா என்னும் சோலை சூழ்ந்த நல்லிடத்தில் இளைப்பாறி, பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் சொன்ன வண்ணம் செய்த பெருமாளை வழிபட்டுச் செல்வாயாக’ என்று கூறுவதாகக் காணப்படுகிறது.

விஷ்ணுகாஞ்சி என்றழைக்கப்படும் சின்ன காஞ்சிபுரம் ரங்கசாமிக் குளத்தினருகில்அமைந்துள்ள இந்தக் கோவிலில், ஐப்பசி மாதம் பொய்கையாழ்வார் அவதார உற்சவம் பத்து நாட்களும்; பங்குனி மாத ரேவதி நட்சத்திரத்தில் தீர்த்தவாரி பிரம்மோற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

இப்பெருமாள் ஆழ்வார் சொன்னபடி செய்ததால் இவருக்குச் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்றே பெயர் அமைந்துவிட்டது. இவரை பக்தியுடன் வழிபட்டால் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்.

வட இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசத்திற்கும் உத்திரப் பிரதேசத்திற்கும் நடுவில் உள்ளது விந்திய மலை. அதிலிருந்து உற்பத்தியாகி ஓடிவரும் மந்தாகினி நதிக்கரையில்தான் ராமாயணகால புண்ணிய க்ஷேத்திரமான சித்திரகூடம்அமைந்துள்ளது.

வனவாசத்தின்போது, ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் இங்குள்ள காமாக் கிரி மலைமீதுதான் அதிக காலம் தங்கி இருந்தனர். இம்மலை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவதால் இதன்மீது பக்தர் கள் ஏறுவதில்லை. கிரிவலம் மட்டுமே வருகிறார்கள்.

இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் காந்தநாத் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வட இந்திய பாணியில் செதுக்கப்பட்ட ராமர்- சீதை கருங்கல் சிற்பங்கள் அழகிய பெரிய கண்களுடன் நின்ற நிலையில் உள்ளன.

துளசி ராமாயணம் எழுதிய துளசி தாசருக்கு இந்த காந்தநாத் சுவாமி ராமர்- சீதையாக இருமுறை காட்சி அளித்திருக்கிறார். இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் மந்தாகினி நதியின் கிளை நதியான யஸ்வினி நதிக் கரையை அடையலாம். இங்கு தான் ராமர் தினமும் நீராடினா ராம். இவ்விடம் ராம்காட் எனப் படுகிறது. இதன் அருகிலேயே ஜானகி குண்ட் (ஜானகி குளம்) உள்ளது. இது சீதை நீராடிய இடம்.

தொடர்ந்து சென்றால் அடர்ந்த காட்டுப் பகுதி யில் அத்திரி மகரிஷி- அனுசூயா தம்பதியரின் ஆசிர மம் உள்ளது. அனுசூயாவின் கற்பின் சக்தியால் இந்த ஆசிரமத்திற்கே வந்த மந்தாகினி நதி, அங்கேயே இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. தத்தாத்ரேயரின் புதிய அவதாரத்திற்குக் காரணமான- பிரம்மா, விஷ்ணு, சிவன் குழந்தைகளாக்கப்பட்ட சம்பவம் இங்குதான் நிகழ்ந்தது.

இந்த ஆசிரமத்திலிருந்து 18 கிலோமீட்டர் தூரம் சென்றால், உலக அதிசயமாகப் போற்றப்படும் கோதா வரி நதி ஓடும் இரண்டு குகைகளைக் காணலாம். ஒன்று பெரியது; ஒன்று சிறியது. இந்த கோதாவரி யானவள் ராமபிரானின் திருப்பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசிபெற விரும்பி ரகசியமாக வந்து அவரை தரிசித்தாள். இதற்கு அடையாளமாக பெரிய கோதாவரி ஓடும் குகைக்குள் ஒரு மேடையில் ராமர், சீதை, லட்சுமணன் காட்சி தரும் சிலைகள் நின்ற நிலையில் காணப்படுகின்றன.

ராமநவமியன்று சித்திரகூடப் பகுதி யிலுள்ள எல்லா ராமர் கோவில் களிலும் விசேஷ பூஜைகள் நடை பெறும். அப்போது இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரை தரிசித்து புண்ணிய மும் மற்ற நலன்களும் பெறுகிறார்கள்.

-எம்.கே. இராதாகிருஷ்ணன்


எம்.என். ஸ்ரீனிவாசன்

ஆழ்வார்களின் ஈரச் சொற்களால் போற்றப்பட்ட எம்பெருமான்கள் காட்சி தரும் திருத்தலங்களை, திவ்ய தேசங்கள் என்று திருமாலடியார்கள் குறிப்பிடுவார்கள். ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் என்ற வரிசையில் விளங்குபவர்கள் முறையே பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் ஆவர்.

பொய்கையாழ்வார் துவாபரயுகத்தில், சித்தார்த்தி வருடத்தில், ஐப்பசி மாதத்தில், சுக்லபட்ச அஷ்டமி திதியும் செவ்வாய்க் கிழமையும் கூடிய திருவோண நட்சத்திர  தினத்தில் அவதரித்தார். திருமாலின் சங்கான பாஞ்சஜன்யத்தின் அம்சமாக காஞ்சியில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் இவர் தோன்றினார்.

அதற்கு மறுநாள் பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லையில் (தற்போதைய மகாபலிபுரம்) நீலோத்பல மலரில், அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் கதையின் அம்சமாகஅவதரித்தார்.

அதற்கும் மறுநாள் சதய நட்சத்திரத்தில், திருமயிலையில் உள்ள ஒரு கிணற்றில், நெய்தல் நில செவ்வல்லிப் பூவில்  தோன்றினார் பேயாழ் வார். திருமாலின் வாளான நந்தகத்தின் அம்சமாக இவர் அவதரித்தார்.

இந்த மூவரும் அயோனிஜர்கள் எனப்படுவர்.

அதாவது ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறவாதவர்கள். மூவரும் திருமால் அருளால் அவனுக்கே அடிமை பூண்டு, அவன் புகழ் பாடி, அவனடியார்க்குத் தொண்டுகள் செய்து… என்றிவ்வண்ணம் ஓரிடத்திலும் தங்காது திரிந்தனர். திருமால் பக்தியால் பூதமாய்- பேயாய் அலைந்தனர் என்பதால் அவர்களின் திருநாமங்களும் அவ்வாறே ஆயின.

ஒரு மழைக்காலத்தில் யதேச்சையாக இவ்மூவரும் ஒன்று கூடினர். இவர்கள் கூடின இடம் திருக்கோவலூர் என்ற திருத்தலம்.

அங்கு கோவிலருகில் ஓர் இடைக்கழியில், இருட்டில் மழைக்காக ஒதுங்கிய இவர்களின் மனமோ மாலவன் நினைவிலேயே இருந்தது.

மூவரும் மாலவனைப் பற்றி அளவளாவி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட திருக்கோவலூர் எம்பெருமாளும் அவர் களிடையே புகுந்து நெருக்கினான்.

அவ்விருட்டில் மூவரைத் தவிர வேறு ஒருவரும் நெருக்குவதை உணர்ந்து பொய்கையார் இருட்டை நீக்கும்விதமாக, “வையம் தகழியா’ என்ற பாடல் மூலம் விளக்கேற்றினார். பூதத்தாழ்வாரோ, “அன்பே தகழியாய் ஆர்வமே நெய்யாக’ என்ற பாடல் மூலம் ஞான விளக்கேற்றினார். இவர்கள் இருவரும் ஏற்றிய விளக்கின் வெளிச்சத்தில் திருமாலின் தரிசனம் கிடைத்திட, பேயாழ் வாரோ தன் பாடலின் மூலம் திருமாலின்

தரிசனத்தை, “திருக்கண் டேன் பொன்மேனி கண்டேன்’ என்றவாறு விவரித்துப் போற்றினார்.

மகாபலியிடம் மூன்றடி மண் கேட்ட மாலவன், இப்படி மூன்று ஆழ்வார்களின் இடையே சிக்கி 300 அந்தாதிகளைப் பெற்று விட்டான். இதன் பெருமையை முன்னிட்டு வைணவப் பெரியார்கள் திருவந்தாதி என்ற இப்பாடல்களை நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாயிரத்தில் இணைத்தனர்.
இந்த ஆழ்வார்களின் புகழ்பாடும் பெரிய ஜீயர் மணவாள மாமுனிகள், “ஐப்பசியில் ஓணம், அவிட்டம், சதயம் ஆகியவை ஒப்பிலா நாட்கள்’ என்று உலகத்தாருக்குத் தெரிவித்தார்.

மேலும், “மற்றுமுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்வித்தவர்கள்; அதனா லேயே முதலாழ்வார்கள் என்றே இவர்களுக்குப் பெயர் நிலைத்துவிட்டது’ என்றும் போற்றுகிறார்.

முதலாழ்வார்களிடையே சிக்குண்ட திருமாலோ மூன்றடி மண் கேட்டு ஓங்கி உலகளந்த உத்தமன். அதனால் நமக்குக் கிடைத்தது 300 பாசுரங்கள். இந்த இறைவனை ஆண்டாளும் தன் திருப்பாவையில் மூன்று இடங்களில் குறிப்பிடுகிறாள்.

ஓங்கி உலகளந்த உத்தமனாய் திருமால் முறையே மூன்று விதமாய் சீர்காழியில் தாடாளனாகவும், காஞ்சியில் உலகளந்த பெருமாளாகவும், திருக்கோவலூரில் திரிவிக்ரமனாகவும் காட்சியளிப்பதையும் இங்கு நினைவு கொள்ளலாம்.

ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்களை    மனதினால் சிந்தித்து, வாயினால் பாடி மகிழ்வோமாகில், வையம் அளந்த ஹரி, மாணிக்குறளனாய் வந்து நம் மனதிலும் அடையப் புகுவான் என்பது திண்ணம்.

அவதார நன்னாட்கள்

3-11-2011- பொய்கை யாழ்வார்.
4-11-2011- பூதத்தாழ்வார்.
5-11-2011- பேயாழ்வார்.

படங்கள்: எம்.என்.எஸ்.

Leave a Reply