சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

 

சனி பகவானை நம்பினார் கெடுவதில்லை

சனீஸ்வரர் என்றவுடன் எல்லாருக்கும் அச்சம் வருகிறது. ஆனால் அவர் எல்லாருக்கும் நல்லவர். நீதி, நேர்மையை நிலைநாட்டுபவர். மகான்கள், மகாராஜா என்றோ, சாதாரண மக்கள் என்றோ பாகுபாடில்லாமல் தன் கடமையைச் செய்கிறவர். தவறு செய்யாதவர்களை அவர் எப்போதும் தண்டித்ததில்லை.

நீதி, நேர்மையுடன் வாழ்கின்றவர்களுக்கு அவர் அள்ளிக்கொடுப்பவர். எனவேதான் “சனி பகவானைப்போல் கொடுப்பவர் யாருமில்லை; 30 ஆண்டுகளுக்குமேல் ஓகோவென்று வாழ்ந்தவருமில்லை; 30 ஆண்டுகளுக்குமேல் கெட்டுப்போனவரும் இல்லை’ என்பார்கள்.

சனி பகவான் அவரவர் செய்த தவறுக்கு ஏற்றவாறு கண்டிக்கக்கூடியவர். திருந்தியவர்களை உயர்த்திவிடுவார். மிகவும் கொடியவர்களை மட்டுமே அவர் தண்டிப்பார்.

ஒரு மாவட்டத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் காவல்துறை அதிகாரி வந்துவிட்டாரென்றால், அவரைக்கண்டு எல்லாரும் பயப்படுவதில்லை. குற்றச்செயலில் ஈடுபடுகிறவர்கள், கொள்ளையடிப்பவர்கள் போன்றவர்கள்தான் தண்டனை கிடைத்துவிடுமே என்று அவரைக்கண்டு பயப்படுவார்கள். நல்லவர்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் அவர் நல்ல நண்பராக விளங்குவார். அதுபோலதான் சனி பகவானும். எனவே நல்ல உள்ளத்தோடும், நீதி, நேர்மையுடனும் வாழ்ந்து அவரை வணங்கி வந்தால் நன்மைகளை அடையலாம்.

சந்திரன் நின்ற ராசிக்கு 12-ல் சனி பகவான் வரும்போது ஏழரைச் சனி ஆரம்பம். அந்த இடத்தில் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். இது விரயச் சனியாகும். அடுத்து இரண்டரை வருடங்களுக்கு ராசிக்கே வருவார். இதை ஜென்மச் சனி என்கிறோம். பிறகு அங்கிருந்து மாறி, ஜென்ம ராசிக்கு 2-ல் இரண்டரை ஆண்டு தங்குவார். இது பாதச்சனி- வாக்குச் சனி என்று அழைக்கப்படும்.

ராசிக்கு 4-ல் சனி வரும்போது அர்த்தாஷ்டமச் சனி என்றும்; 7-ல் வரும்போது கண்டச் சனி என்றும்; 8-ல் வரும்போது அஷ்டமச் சனி என்றும் கூறுகிறோம்.

சனி பகவானின் இந்தச் சுழற்சியில் மனிதர்கள் தங்களைத் திருத்திக்கொள்கிறார்கள். கொடுமையானவர்கள் சனி பகவானால் தண்டிக்கப்பட்டு, உலகைவிட்டு மறைந்துவிடுகிறார்கள். நல்லவர்கள் சனி பகவானால் உயர்த்தப்பட்டு நல்வாழ்க்கை வாழ்கிறார்கள்.

சனி பகவான் வரலாறு

புராணங்கள் வாயிலாக பார்க்கும்போது, சப்த ரிஷிகளில் முதலாவது ரிஷியான மரீசியின் புத்திரர் காசிப மகரிஷியின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் சூரிய பகவான். சூரியனுக்கு சமுக்ஞா, பிரபை, ரைவத நாட்டு இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் இருந்தனர். அவர்களில் சமுக்ஞாவிற்கு, வைவஸ்தமனு, யமன், இரட்டையர்களான அசுவினி ஆகியோர் பிறந்தனர். பிரபைக்கு பிரதவன் பிறந்தார். ரைவத நாட்டு இளவரசிக்கு ரைவதன் பிறந்தார். சாயாதேவிக்கு தபதி, விரட்டி என்ற இரண்டு பெண்களும்; சாவர்ணி, சனி ஆகிய ஆண்களும் என நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இதில் சனி பகவான் சிவபெருமானின் அருள்பெற்று, ஈஸ்வர பட்டம் பெற்று, ஆயுளை நிர்ணயிக்கிறவராக நவகிரகங்களுள் ஒன்றானார். தர்மத்தின் நிலைக்கு பக்கபலமாக நின்று, நீதி தவறாமல் சனீஸ்வரர் என்ற பெயருடன் விளங்கினார்.

பின்னாளில் அவர் நீலா எனப்படும் நீலாவதியை மணந்தார். சனி பகவானுக்கு குளிகன் என்ற ஒரு பிள்ளையும் உண்டு. இந்த குளிகன் நவகிரகங்களில் ஒன்றினார். குளிகன் காலத்தில் செய்யும் காரியங்கள் நல்ல காரியங்களாக இருந்தால், அடுத்தடுத்து நல்ல காரியங்கள்அமையும். அசுபகாரியங்கள் செய்யக்கூடாது.

சனி பகவான் முரட்டுத்தனமான மூடர்களிடமிருந்து எளியவர்களைக் காப்பாற்ற கலியுகக் கடவுளாக எழுந்தருளியுள்ளார்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி நிகழும் ஜய வருடம், மார்கழி மாதம், 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16-12-2014 அன்று மதியம் 2.16 மணிக்கு விசாக நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில், துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். விருச்சிக ராசியில் வக்ரம் மற்றும் வக்ர நிவர்த்தியில் மூன்று வருடம், இரண்டு நாட்கள் வரை சனி உலா வருகிறார்.

இதற்குமேல் சனி பகவான் 18-12-2017-ல் மாலை 4.04-மணிக்கு தனுசு ராசிக்கு மாற்றமாகிறார்.

ஜனன ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் அமையப் பெற்றவர்களுக்கும், தசாபுக்திகள் நல்லநிலையில் உள்ளவர்களுக்கும் தற்போதைய சனிப்பெயர்ச்சியால் பாதிப்பு எதுவும் வராது.

அனைத்து ராசிக்காரர்களும் சனிப்பெயர்ச்சியின்போது அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று சனி பகவானை வணங்கி வரவேண்டும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை வழிபட்டு வரலாம். அல்லது குச்சனூர் சென்று சனீஸ்வரரை வழிபட்டு வரலாம். அல்லது சிவகங்கை நகரத்தில் அமைந்துள்ள சனீஸ்வரரை வழிபட்டு வரலாம்.

இந்த கோவில்களுக்கு செல்லமுடியாதவர்கள் நாட்டுக்கருவேல மரத்தின் இலைகள் மற்றும் அதன் பூவை சேகரித்து, ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு உங்கள் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். அதில் சனி பகவான் அருள்பாலித்து தீமைகளிலிருந்து காப்பாற்றுவார். இது அனுபவப் பரிகாரம்.

திருநள்ளாறு சனீஸ்வரர்

திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம் புதுச்சேரி மாநிலம், காரைக்காலுக்கு அருகிலுள்ளது. இங்குள்ள நளதீர்த்தத்தில் நீராடி, விநாயகரை வணங்கி, பின்பு சனீஸ்வரை வணங்கி வரவேண்டும். இங்கு வந்துசெல்லும் பக்தர்களை சனி பகவான் எப்போதும் காத்துவருகிறார்.  சனியின் தாக்கம் வரும்போதுதான் வணங்க வேண்டுமென்பது ஒரு சிலரது கருத்து. சனி பகவானை எப்போதும் வணங்கிவருபவர்களை, ஏற்படவிருக்கும் கஷ்டங்களிலிருந்து காத்தருள்வார்.

குச்சனூர் சனீஸ்வரர்

இந்த திருத்தலம் தற்போதைய தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. குச்சனூர் சனீஸ்வரர் சுயம்புவாகத் தோன்றியவர். இந்த திருத்தலத்துக்கு தேனி வழியாகவும் செல்லலாம்; சின்னமனூர் வழியாகவும் செல்லலாம். குச்சனூர் சனீஸ்வரர் ஆலயம் எதிரில் ஆற்றுப்படுகை உள்ளது. இந்த ஆற்றில் குளித்துவிட்டு சனீஸ்வரரை வணங்கிவரலாம். கஷ்டத்தைப் போக்கி நல்ல பலன்களை வழங்குவார்.

சிவகங்கை சனீஸ்வரர்

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகரில் 20 ஆண்டுகளுக்கு முன்னர், முத்துக்கருப்பன் ஆசாரி என்பவரின் பெரும் முயற்சியால், சனீஸ்வரர் ஆலயம் நிறுவப்பட்டது. இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து சனீஸ்வரரின் அருள்பெற்றுச் செல்கின்றனர். இந்த ஊரில் சனி கலியுகக் கடவுளாக உள்ளார்.

இந்த சனீஸ்வரர் ஆலயத்தில் நீராட குளம் எதுவுமில்லை.

எனவே பக்தர்கள் இங்கு வரும்போது நீராட வேண்டிய நிலை வராது. சனீஸ்வரர் ஆலயம் வந்து தரிசனம் செய்துசெல்பவர்கள், சனீஸ்வரர் அருளையும் பெற்றுச்செல்கின்றனர்.

 

 

மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

அன்பான மேஷ ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ல் கண்டச் சனியாக இருந்த சனி பகவான், இனி உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து அட்டமத்துச் சனியாக வரவுள்ளார். 8-ஆம் இடம் ஆயுள் குற்றம் மற்றும் தீங்குகளைக் கொடுக்கும் ஸ்தானமென்றாலும், சனி விருச்சிக ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. உங்களது சுயஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் அமர்ந்திருந்து சுபகிரகப் பார்வையும் பெற்றிருந்தால் இந்த அட்டமத்துச் சனி காலத்தில் பெரிதாக பாதிப்பு எதுவும் வராது. 

இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் வாகனங்களை மெதுவாக ஓட்டிச்செல்ல வேண்டும். ஆயுளைப் பொறுத்தவரை எந்த கெடுபலன்களும் இல்லை. வீண் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். சமூகத்தில் வேலையும் கையுமாக இருப்பவர்களுக்கு வேலைப் பளு கூடுமே தவிர கண்டங்கள் ஏற்படாது. அரசுப் பணியில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனங்களில் அமைதியாகச் செயல்பட்டால் துன்பங்களைத் தவிர்க்கலாம். வியாபாரம் செய்பவர்கள் போட்டி வியாபாரிகளிடம் ஒதுங்கியிருக்கவேண்டும். அஷ்டமத்தில்  சனி பகவான் வந்துவிட்டாரே என்று பயந்துவிடக்கூடாது. சனி பகவான் நல்லவர்களை தண்டித்ததாக புராணங்களில்கூட எந்த இடத்திலும் இல்லை. கொடுமைக்காரர்களையும் தீயவர்களையும், வீண்சண்டை இழுப்பவர்களையும் மற்றவர்களின் குடிகெடுப்பவர்களையும், கட்டைப்பஞ்சாயத்து செய்து ஓரவஞ்சகம் செய்பவர்களையும், அடுத்தவர்களுக்குத் தீங்கு விளைவித்து பணம் சம்பாதிப்பவர்களையும்தான் தண்டிப்பார். மேற்கண்டவாறு நீங்கள் ஒரு பாவமும் செய்யாது தானுண்டு, தன் வேலையுண்டு என்று வாழ்ந்தால், சனி பகவான் இந்த அஷ்டமத்துச் சனியில் உங்களை நல்ல நிலைக்கு உயர்த்துவார்.

சனி பகவான் விருச்சிக ராசியில் அமர்ந்து 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்க்கும்போது, உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் ஏற்படும் என்பதை இனி காண்போம்.

சனி பகவான் 3-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10-ஆம் இடமான மகர ராசியைப் பார்க்கிறார். பொருளாதாரத்தில் சிக்கனமாக வாழ்பவர்கள் புதிய கடன்களைப் பெறமாட்டார்கள். தொழில் ஸ்தானத்தில் சனி பார்வை விழுவதால், வேலைபார்க்கும் இடத்தில் நிதானமாகச் செயல்படவேண்டும். உங்களுக்கு வேண்டாதவர்கள் உங்களைப்பற்றி அதிகாரிகளிடம் கோள் சொன்னாலும் கண்டுகொள்ளாமல் செல்லவேண்டும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு காலம்தாழ்த்தி வரும். ஒருசிலருக்கு பணியில் இடமாற்றம் ஏற்படலாம். பொறுப்புகள் கூடும். வேலைப்பளு கூடுவதால் உடலுழைப்பு கூடுமேதவிர, சனி பகவானின் தாக்கம் வராது. 

அதேபோல இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அலையநேரிடலாம். தெய்வம் கொடுக்கவில்லை என்றாலும், உண்மையான உங்களது உழைப்பில் கடும் முயற்சிகளைச் செய்து வேலைவாய்ப்பைப் பெறுவீர்கள். 70 வயதுக்கு மேலுள்ள தாய்- தந்தையருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். தாய், தந்தை இருவரில் யாரேனும் ஒருவருக்கு, உங்கள் இறுதிக் கடமையைச் செய்யநேரிடும்.  இது எல்லாரது பெற்றோருக்கும் அல்ல. பெற்றோர்களின் சுய ஜாதகம் வலிமை பெற்றிருந்தால்  மருத்துவச் செலவுகள் மட்டுமே கூடும். 

அரசு ஊழியர்கள் பணியில் இடமாற்றம் வரும். விரும்பாத இடமென்றாலும் பணியில் சென்று சேர்பவர்களுக்கு வேலையில் பாதிப்பு வராது. எதையும் சிந்தித்து நிதானமாகச் செயல்பட்டால், இந்த அட்டமத்துச் சனியில், சனி பகவான் அருள்பெற்று நன்மைகளை அடையலாம்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான ரிஷப வீட்டை 7-ஆம் பார்வை பார்க்கிறார். அதனால் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரலாம். சிலர் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றுவிடுவார்கள். குடும்பத்தைப் பிரிந்திருப்பவர்களுக்கு அதுவே சனி பகவானின் திருவிளையாடலாக மாறி, மற்ற பாதிப்புகள் எதுவும் வராது. குடும்பத்திலும் சரி; மற்ற உறவுகளிடமும் சரி உங்கள் கருத்தை மற்றவர்கள் கேட்கமாட்டார்கள். நீங்கள் மற்றவர்களுக்கு கருத்து சொன்னால்தானே இந்த நிலை? பேசாமலேயே “நமக்கு ஏன்?’ என்று இருந்துவிட்டால் இத்தகைய சம்பவங்கள் நடக்காது. மற்றபடி பிள்ளைகள் படிப்பில் மந்தம் வரலாம். ஆனால் அவர்கள் தேர்வில் வெற்றிபெற்றுவிடுவார்கள்.

சனி பகவான் 10-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5-ஆம் வீடான குலதெய்வம், புத்திரர்கள், பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடக்கவில்லையே என்ற கவலை ஏற்படலாம். குலதெய்வத்தை தவறாமல் நினைத்தவாறு வணங்கிவருபவர்களுக்கு குலதெய்வ அருள் கிடைக்கும். குலதெய்வத்தை வணங்கிவந்தால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நிதானமாகச் செயல்படுத்தும் காரியங்களில் நல்ல வருவாயையும் பெறுவீர்கள். பொருளாதாரத்தை நேர்மையான வழிகளில் பெறுவீர்கள். வளர்ந்துவிட்ட பிள்ளைகள் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்படவில்லையே என்று நீங்கள் கவலைகொள்ளாத அளவுக்கு, அவர்கள் வெளிநாடு சென்று வேலைவாய்ப்போடு, நல்ல வருவாயையும் பெறுவார்கள்.

இனி சனி பகவான் வக்ரம், வக்ரநிவர்த்திக் காலங்களில் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதைக் காண்போம்.

பணவிஷயத்தில் எச்சரிக்கை

சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ஆம் இடத்தில் 16-12-2014 முதல் 24-1-2015 வரை குருசாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருகின்றார். இந்த காலங்களில் உங்களுக்கு வரவேண்டிய பூர்வீக சொத்துகள் நிலையாக வந்துசேரும். பங்காளிகள் சொத்துகளை ஒற்றுமையாகப் பகிர்ந்துகொள்வார்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், “என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்று வேலையில் மூழ்கிவிடுவார்கள். குடும்பத்தில் தடைப்பட்டுவந்த திருமணம் நடக்கும். அதன் நிமித்தம் புதிய கடன்பட நேரிடலாம். கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள். அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள். பொறுமையுடன் செயல்பட்டால் நன்மை காணலாம்.

தீய உறவுகள் தேடிவரும் காலம்!

24-1-2015 முதல் 17-3-2015 வரை சனி பகவான் தன் சுயசாரம் பெற்று நேர்கதியில் உலாவருகின்றார். இந்த காலகட்டத்தில் குடும்பத்தை சீராக நடத்திச் செல்லும் உங்களுக்கு, அருகிலுள்ளவர்கள் தேவையற்ற சிரமத்தையும், அதனால் சில நெருக்கடிகளையும் கொடுப்பார்கள். மற்ற மதத்துப் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாகப் பழகவேண்டும். இதேபோல் அனைத்து பணியாளர்களும் வேலைபார்க்கும் இடத்திலுள்ள பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இதுவரை உங்களைக் காணாமலிருந்த உறவுகள் பகையை மறந்து வந்துசேர்வார்கள். தீய செயல்புரிபவர்களின் பேச்சைக்கேட்டு பிள்ளைகளின் திருமணப் பேச்சை முடித்துவிடாதீர்கள். சிரமம் கைமேல் வந்துசேரும்.

வார்த்தைகளில் கவனம் தேவை

சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரமாகி, விருச்சிக ராசியில் அமர்ந்திருப்பார். இந்த நேரத்தில் நீங்கள் நாகாக்க வேண்டும். “அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற வள்ளுவரின் கூற்றை நினைவுபடுத்தி அடக்கமாக வாழவேண்டும். பெண்களிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். ஒருசிலருக்கு கையூட்டு  பெறும் எண்ணம் மேலோங்கிக் காணப்படும். அப்படிப்பட்டவர்கள் காவல்துறை நடவடிக்கை ஆட்பட நேரிடும். வேலையில் பாதிப்பும் ஏற்படும். ஒருசிலருக்கு இடமாற்றம் வரும். உடன்பிறந்தவர்கள் சொத்துப் பிரச்சினைகளை ஏற்படுத்தப் பார்ப்பார்கள். சனி பகவானை வணங்கி வருபவர்களுக்கு எந்த பாதிப்பும் தரமாட்டார். கடுமையான, சூடான வார்த்தைகளை மற்றவர்களிடம் பேசாதீர்கள்.

கூட்டுத் தொழில் பாதிப்பு

சனி பகவான் 13-6-2015 முதல் 1-8-2015 வரை வக்ரகதியிலேயே குரு சாரம் பெற்று, துலா ராசியில் உலாவருகிறார். இந்த நேரத்தில் தொழிற்சாலைகளில் பங்குதாரர்களாக உள்ளவர்கள் ஏதோ ஒரு காரணம்சொல்லி, தங்கள் பங்கை விலக்கிக்கொள்வதாகத் தெரிவிப்பார்கள். உங்கள் கனிவான பேச்சால் அவர்களை நீங்கள் வெல்லலாம். வியாபாரிகள் போட்டி வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்கநேரும். அரசுப் பணியாளர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டாது. குடும்பத்திலும் ஒற்றுமைக்குறைவு வரும். எனவே நீங்கள் இறைவனை நினைத்து எந்த வேலையையும் துவங்குங்கள். எதையும் சாதிப்பீர்கள். சனி பகவானும் நம்பியவர்களைக் கைவிடமாட்டார்.

செலவுகள் கூடும் காலம்

சனி பகவான் 1-8-2015 முதல் 6-9-2015 வரை வக்ரநிவர்த்தி பெற்று, விருச்சிக ராசியில் குரு சாரத்தில் அமர்ந்திருப்பார். 

இந்த நேரத்தில் அரசுப் பணியிலுள்ளவர்கள் சந்தித்துவந்த பிரச்சினைகளில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். நல்ல அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவார்கள். ஒருசிலர் குடும்பசுபச்செலவுக்காக கடன்பெறுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும். திருமணப் பேச்சுகளும் கைகூடும். உறவுகளால் தொல்லைகள் அதிகமுண்டு. எனவே உற்றார்- உறவுகள், அடுத்தவர் யாராக இருந்தாலும் கருத்து கூறாதீர்கள். பிள்ளைகளின் மேல்படிப்பில் பாதிப்பு எதுவும் வராது. கட்டணம் செலுத்துவதில் மந்தநிலை ஏற்பட்டு, பின்பு நல்லவர்கள் நட்பால் தேவை பூர்த்தியாகும். அவரசப்படாத காரியம் எப்போதுமே சிறப்பாக இருக்கும். எனவே அவசரத்தைத் தவிர்த்து காரியத்தை சாதிக்கவேண்டும்.

குடும்பத்தைப் பிரியநேரும்

சனி பகவான் 6-9-2015 முதல் 18-10-2015 வரை வக்ரநிவர்த்தியுடன், குரு சாரம் பெற்று, விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்த நேரத்தில் தொழிலதிபர்கள் புதிய விரிவாக்கத்தை செய்யக்கூடாது. தொழிற்சாலையில் வருமானம் குறைந்து, தொழிலாளர்களுடன் பிரச்சினை ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் மற்றும் பொதுத்துறையினர், கட்டாய இடமாற்றத்தை சந்திப்பார்கள். மாற்றம் வருமிடத்தில் பணியில் சேரவேண்டும். ரத்து செய்ய முயற்சிப்பவர்கள் தலைமையால் தண்டிக்கப்படும் சூழல் உள்ள நேரம். குடும்பத்தைப் பிரித்துவைத்து சனி பகவான் நல்லதைச் செய்கிறாரென்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருசிலர் வேலைவாய்ப்போடு, குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு சென்று வாழ்வார்கள். பணப்
பற்றாக்குறை ஓரளவு குறையும்.

சனி பகவான் பரிசு வழங்கும் காலம்

சனி பகவான் 18-10-2015 முதல் 28-3-2016 வரை சனி சாரம் பெற்று, விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்த நேரத்தில் அரசுப் பணியாளர்கள் வேண்டிய இடத்துக்கு மாறுதல்கிடைக்கும். வேலையில் தடை ஏற்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். வரவேண்டிய பாக்கி நிலுவைத் தொகைகளைப் பெறுவீர்கள். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பிரிந்த கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியம் இனிதாக நடைபெறும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். தொழிலதிபர்களிடம் பிணக்காக இருந்த பங்குதாரர்கள் ஒன்றுசேர்வார்கள்.  பிள்ளைகள் வெளிநாடு சென்று வேலை செய்வார்கள். ஒருசிலருக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்புகள் கிட்டும். ஆலய தரிசனம் மனநிறைவைத் தரும். புதிய சொத்துகள் வாங்க சந்தர்ப்பம் கூடிவரும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் தொழில் உயர்ந்து, லாபகரமான விளைவுகளை சந்திப்பீர்கள். உங்கள் அடக்கத்துக்கும் நேர்மைக்கும் சனி பகவான் பரிசாக பலவித நன்மைகளைச் செய்வார்.

எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை

இதுவரை உங்களுக்கு சாதகமாகச் செயல்பட்ட சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை வக்ரம் பெற்று, தன் சுயசாரத்தில் விருச்சிக ராசியில் அமர்ந்திருப்பார். முந்தைய காலங்களில் இடமாற்றம் இல்லாமல் தப்பித்துக்கொண்ட அரசுத்துறை மற்றும் இதர துறை பணியாளர்கள் இடமாற்றத்தைச் சந்திப்பார்கள். ராணுவத்தில் பணிபுரிகின்றவர்கள் மலைசார்ந்த பகுதிகளுக்கு கட்டாய மாற்றத்தில் செல்வார்கள். ஒருசிலர் கட்டாய ஓய்வினையும் பெறுவார்கள். லாகிரி வஸ்துகள் விற்பனை செய்பவர்கள், உற்பத்தியாளர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலதிபர்களை அனுசரித்துச் செல்லும் தொழிலாளிகள் குறைவில்லாத வருமானத்தைப் பெறுவார்கள். மருத்துவச் செலவுகள் கூடும். உடன்பிறந்தவர்களால் தொல்லையுண்டு. இந்த காலகட்டத்தில் எங்கும், எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்.

தடைப்பட்ட காரியங்கள் சுபமாகும்

இதுவரை உங்களுக்கு பாதகமாகச் செயல்பட்ட சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை சனி சாரத்தில் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார். இப்போது, எல்லாரும் நன்மைபெறும் வகையில் சாதகமான நிலைகளைத் தருவார். வரவேண்டிய தொகைகள் வந்துசேரும். ஒருசிலர் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெற்று அதிகமான பணப்பலன்களைப் பெறுவார்கள். முக்கியமான கடன்களை அடைக்கும் காலம். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். திருமணத்தடை நீங்கும். சொத்துப் பிரச்சினைகளில் பங்காளிகள் மத்தியில் சுமுக முடிவு கிட்டும். வழக்குகள் சாதகமாகும். மத்திய அரசில் பணிபுரிபவர்கள் வேண்டிய இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். சனி பகவான் நீதியை நிலைநாட்டும் காலம். தடைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும்.

சனி பகவான் வழங்கும் வசந்தகாலம்

இதுவரை சனி பகவான் ஓரளவு சாதகமாகச் செயல்பட்டு வந்தார். அவர் 17-11-2016 முதல் 10-4-2017 வரை வக்ரம் இல்லாமல், புதன் சாரம் பெற்று, விருச்சிக ராசியில் உலாவந்து, உங்கள் வாழ்க்கையில் வசந்த காலத்தை ஏற்படுத்துவார். பிரிந்துசென்ற கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். திருமணமாகாத இளைஞர்கள், பெண்கள் நல்ல வரன்களைப் பெறுவார்கள். மனைவி வழியில் பெறவேண்டிய சொத்துகளை ஒருசிலர் பெறுவார்கள். வேலைதேடும் இளைஞர்களில் சிலர் வெளிநாடு செல்வார்கள். சிலர் தகுதிக்கேற்ப நல்ல வேலையை மத்திய, மாநில அரசில் பெறுவார்கள். அரசுப்பணியாளர்கள் எதிர்பார்த்தபடி வேண்டிய இடத்துக்கு மாறுதலை அடைவார்கள்.

ஒற்றுமைக் குறைவை ஏற்படுத்தும் காலம்

இதுவரை உங்களுக்கு சாதகமாகச் செயல்பட்ட சனி பகவான் 10-4-2017 முதல் 6-8-2017 வரை வக்ரமாகி புதன் சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருகிறார். எனவே எல்லா துறைகளிலும் பணிபுரியும் அன்பர்கள் மிகவும் அடக்கமாகப் பணியாற்ற வேண்டும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். மாமியார், மருமகள் சண்டை அதிகமாக வரும். இருதரப்பினரும் விட்டுக்கொடுத்து செல்லமாட்டார்கள். தனிக்குடித்தன எண்ணம் மேலோங்கும். தம்பதியர்களிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். ஒருசில கணவர்கள் தாய், மனைவி சண்டைக்காக இருக்கும் இடத்தைவிட்டு விருப்ப மாறுதலில் செல்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் எண்ணம் நிறைவேறுவதில் தாமதமுண்டு. மருத்துவச் செலவுகள் கூடும். இந்த காலகட்டத்தில் சனி பகவான் ஒற்றுமைக் குறைவை ஏற்படுத்துவார். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். “விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை; கெட்டுப்போகின்றவர் விட்டுக்கொடுப்பதில்லை’ என்ற தத்துவத்தை உணர்ந்து செயல்படுபவர்கள் நல்ல பலன்களை அடைவர்.

சனி பகவான் அருள்பார்வைக் காலம்

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரை வக்ரநிவர்த்தி பெற்று, புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்த காலகட்டத்தில் லாகிரி வஸ்துகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்கின்றவர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். வெளிநாடு சென்று வேலைசெய்ய போட்ட திட்டம் நிறைவேறும். 

அந்நிய நாட்டில் அதிக லாபத்தைப் பெறுவீர்கள். சனி பகவானின் அருள்பார்வை கிடைக்கும் காலம்.

அதிக வருமானத்தைப் பெறுவீர்கள். காலத்தே கைகொடுக்காத சனி பகவான் இப்போது உங்கள் சொத்துகளின் வாயிலாகவும், பூர்வீக சொத்துகள் வாயிலாகவும் கூடுதல் லாபத்தைத் தருவார். விலகிய சொந்தங்கள் விரும்பிவந்து சேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். பொன்னும், பொருளும் வாங்கிக்குவிப்பீர்கள். எல்லா துறைகளிலும் பணியாளர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலைப் பெறுவார்கள். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து பணத்தை கைநிறைய அனுப்புவார்கள். தாய்- தந்தை வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் நீங்கும். சனி பகவான் தாக்கம்  குறைந்துவிடும். தென்றல் காற்று வீசுவதுபோல் குடும்பத்திலும் நிம்மதிக் காற்று வீசும். தாய்மார்கள் கஷ்டத்தை சனி பகவான் அருள்பாலித்து தீர்த்துவைத்துவிட்டார். அட்டமத்துச் சனியும் முடிவுற்றது. அவரால் வந்த கஷ்டங்களும் முடிவுற்றது.

பணியாளர்களுக்கு 

அரசு ஊழியர் மற்றும் இதர துறைகளில் பணிபுரிவோர் வேலைப் பளுவை அடைவர். ஊதியத்திலும், பதவி உயர்விலும் நல்ல நிலையிலேயே இருப்பீர்கள். எந்த அளவுக்கு நீங்கள் அதிகாரி சொல்லைக் கேட்கிறீர்களோ, அந்த அளவுக்கு உயர்வு கிடைக்கும். ஒருசிலருக்கு மாறுதல் உண்டு. அந்த மாறுதலால் நல்ல பலன்களையே அடைவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

பெண்களுக்கு

சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கூடுதல் செலவுகள் ஏற்படுவதால் குடும்பச் சண்டை ஏற்படும். குடும்பத்திலுள்ள அனைவரிடமும் சுமுக நிலையைப் பின்பற்றவேண்டும். கோபத்தை ஜெயிக்கவிட்டால் வாழ்க்கையில் ஜெயிப்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே விட்டுக்கொடுத்து சிந்தித்துச் செயல்படவேண்டும்.

மாணவர்களுக்கு

வேடிக்கை பழக்கத்தைத் தவிர்த்து கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஒருசில மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றே தேர்ச்சி பெறுவார்கள். சிலர் நினைத்த படிப்பை அடையமுடியாமல் தவிப்பார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நண்பர்கள் சேர்க்கையைத் தவிர்க்கவேண்டும். 

அவர்களால் நீங்கள் கேம்பஸ் செலக்ஷன் ஆவது தள்ளிப்போக நேரும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரத்தை விரிவுபடுத்தும் திட்டத்தைத் தள்ளிவைக்கவேண்டும். வாடிக்கையாளர்கள் அடுத்த கடைக்குச்  செல்லாத வகையில் நீங்கள் அனுசரித்துச் செல்லவேண்டும். அதிக கடன் கொடுக்காதீர்கள்; போட்ட முதல் போய்விடும். வேலைசெய்யும் பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். பொருட்களை வாங்கி தேக்கிவைக்கக் கூடாது; அதனால் நஷ்டத்தை சந்திக்க நேரும். புதிய வாடிக்கையாளர்கள் வந்துசேர்வார்கள். எண்ணெய், நெய் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

தொழிலதிபர்களுக்கு

தொழிலாளர்களின் ஒற்றுமையுண்டு. தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அவர்கள் ஒத்துழைப்போடு உற்பத்தியும் பெருகும். புதிய தொழில் ஆரம்பிக்கும் உத்தேசத்தை தள்ளிவைக்க வேண்டும். பங்குதாரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். ஷேர் மார்க்கெட் தொழில் சிறப்பு தராது.

விவசாயிகளுக்கு

புதிய ரக நெல் உற்பத்தியைவிட, இதற்கு முன்னர் நீங்கள் செய்த விவசாயத்தையே செய்யவேண்டும். மகசூல் கூடுதலாகும். கால்நடை வளர்ப்போர் புதிய கால்நடைகளை வாங்காமல், பழைய கால்நடைகளைக் கொண்டே பலன்களை அடையமுடியும். பயிர் பாதுகாப்பு செய்து நஷ்டத்தை சமாளிக்கலாம். தாழ்வான பகுதி விவசாயிகள் குறுகியகால வித்துக்களைப் பயிரிட்டு லாபத்தைப் பெறுங்கள்.

கலைத்துறையினருக்கு

படவாய்ப்புகள் கூடுதலாக வரும். புதிய கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். பழைய கலைஞர்கள் தங்கள் நிலையை விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.அரசியல் பிரமுகர்களுக்குஉங்களை தலைமை புரிந்துகொள்ள சிலகாலம் ஆகும். பொதுமக்களும் உங்களைப் புரிந்துகொள்ள காலதாமதம் ஆகும். 

தன்னலம் கருதாத உழைப்பால், சனிப்பெயர்ச்சி நடந்த ஓராண்டுக்குப் பின்னர், புதிய பதவிகளை அடைவீர்கள். பொதுமக்களும் உங்களைப் பாராட்டுவார்கள்.

பரிகாரம்

அவசியம் சனிப்பெயர்ச்சி ஆரம்பித்த சில மாதங்களுக்குள், திருநள்ளாறு, குச்சனூர், சிவகங்கை ஆகிய இடங்களில் அமைந்துள்ள சனீஸ்வரரை ஒருமுறையாவது தரிசித்து வரவேண்டும்.

தினசரி காலையில் காக்கைக்கு பழைய சாதம் வைத்து வரவும்.

சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயருக்கு நெய் தீபமேற்றி வழிபட்டு வரவும்.

எந்த பரிகாரத்தையும் செய்யமுடியாத நிலையிலுள்ளவர்கள் உங்கள் அருகிலிருக்கும் நாட்டுக்கருவேல மரத்தின் (சீமைக்கருவேலம், வேலிக்கருவேல மரம் கூடாது) தோலை எடுத்து, அதனை பையில் வைத்து வணங்கிவர, சனி பகவான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருந்து அருள்பாலிப்பார்.

இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்.

 ——————————————————————————————————————–
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

அன்பார்ந்த ரிஷப ராசி நேயர்களே!

சனி பகவான் 16-12-2014 வரை ராசிக்கு 6-ஆம் இடத்தில் இருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களுக்கு நல்ல பலன்களையே செய்தார்.  கடன் தொந்தரவுகளைக் குறைத்தார். யோசிக்காமல் செய்த காரியத்திலும் வெற்றியைக் கண்டீர்கள். பெரிய பிரச்சினைகளும் எளிய பிரச்சினைகளாயின. குடும்ப சீர்திருத்தமும் செய்தீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு இழைத்த அநீதிகளையும் புரிந்துகொண்டீர்கள். தற்போது 16-12-2014 முதல் 18-12-2017 வரை உங்கள் ராசிக்கு 7-ஆவது ராசியான விருச்சிக ராசியில் சனி சஞ்சாரம் செய்யவுள்ளார்.

“கண்டச் சனி வந்துவிட்டதே’ என்று பயம்கொள்ள வேண்டாம். யாருக்கு கண்டச் சனி தீயபலனைக் கொடுப்பார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். பிறரை மோசம் செய்தவர்கள், பிறர் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள், வழிப்பறி செய்தவர்கள் எளியவரை வாட்டிவதைத்து பணம் சம்பாதித்தவர்கள், மீட்டர் வட்டிக்கு ஏழைகளுக்குப் பணம் கொடுத்தவர்கள், சதா உற்சாக பானத்தில் திளைத்து தன் மனைவி, மக்களை  வதைத்தவர்கள், பிறர் சொத்தை அபகரித்தவர்கள், மற்றவர்களை சித்திரவதை செய்து அதனால் அவர்கள் படும் சிரமத்தை ரசித்தவர்கள் என்று வரிசைப்படுத்தலாம். இப்படிப்பட்ட பாவச் செயல்களை செய்தவர்கள்தான் கண்டச் சனியால் பாதிக்கப்படுவார்கள்.

அவர்களைத் திருத்துவதற்காகவே சனி சிரமங்களைக் கொடுப்பார்.

நிதானமான போக்குடனும், எப்போதும் நீதி, நேர்மையுடனும் வாழ்பவர்களை சனி பகவான் ஆதரிப்பார். அவர்களுக்காக ஆதரவுக்கரமும் நீட்டுவார். நல்லவர்களாக வாழ்ந்துவருபவர்கள் குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பணம் எப்படி வருமென்று சிந்திக்கிற நேரத்தில், சனி பகவான் திடீரென பணவரவுகளைக் கூட்டுவார். செய்யும் தொழில் உயரும். பிள்ளைகளால் இருந்துவந்த மனச்சங்கடங்கள் தீரும். குடும்ப சீர்திருத்தம் செய்வீர்கள். திருமணத்திற்குக் காத்திருக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் திருமணத்தை நடத்தி முடிப்பீர்கள். மனதில் புதிய உற்சாகத்தை சனி பகவான் ஏற்படுத்துவார்.

கண்டச் சனியில் ரிஷப ராசி அன்பர்கள் கடைப்பிடிக்க வேண்டியது என்னவென்றால், கடன் கேட்கும் அன்பர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்களின் கடனுக்காக பிணையம் போடக்கூடாது. அப்படிப் போட்டால் அவர்கள் வாங்கிய கடனை நீங்களே அடைக்க வேண்டியது வரும். பொதுவாக எந்தவொரு காரியத்துக்கும் பொறுப்பேற்பதைத் தவிர்க்கவேண்டும். குடும்பச் சுமைகளை ஒழுங்குபடுத்துவதில் மட்டும் உங்கள் கவனம் சென்றால், அதற்கு சனி பகவான் நூறு சதவிகிதம் ஒத்துழைப்பார். மாறாக உங்கள் கவனத்தை குறுக்குவழியில் செலுத்தி பணம் சம்பாதிக்க முற்பட்டால், அவர் மரணத்துக்குச் சமமான கண்டத்தைக் கொடுத்துவிடுவார்.

மிகவும் பொறுமையுடன் செயல்படுபவர்களை சனி பகவான் கௌரவத்துடன் நடத்துவார். கடந்தகாலத்தில் உங்கள் சொத்துகளை சிலர் ஏமாற்றிப் பெற்றிருப்பார்கள். பிரச்சினைகள் உருவாகி வழக்கு அல்லது பேச்சுவார்த்தை நிலையிலிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இனி சுமுகமான தீர்வு கிடைத்து, உங்கள் சொத்து உங்களுக்கே வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும். சுய கௌரவம், குடும்ப கௌரவம் எந்த சூழலிலும் பாதிக்காது. சனி பகவான் சோதிப்பார்.

அளவுக்கு மிஞ்சிய ஆசைகளைக் கொடுப்பார். நாம் நிதானித்து நடந்தால் சனி பகவானே நமது தேவைகளைப் பூர்த்திசெய்வார். கண்டச் சனி என்றவுடன் விபத்து வந்துவிடும் என்று பயம் கொள்ளலாகாது. வாகனங்களை நிதானமாக இயக்குவோருக்கு சனி பகவான் விபத்தை தரமாட்டார்.

பெற்றோர் வழியில் சிறிய மருத்துவச் செலவுகளைக் கொடுப்பார். மரண கண்டத்தைக் கொடுக்கமாட்டார். தசாபுக்தி நன்கு அமையப் பெற்றவர்களுக்கும், பிறப்பு ஜாதகத்தில் சனி பகவான் அருள் பெற்றவர்களுக்கும் பிரச்சினைகள் குறையும். செய்யும் தொழில்மூலம் நல்ல வருவாயையும் பெறுவார்கள். சிலர் புதிய வீடுவாங்க போட்ட திட்டமும் நிறைவேறும். உங்களது ராசியை சனி பகவான் 7-ஆம் பார்வையாகப் பார்க்கின்றார். இதனால் சிலருக்கு கழுத்துவலி, முதுகுவலி போன்ற உபாதைகளைத் தருவார். அதிகமான மருத்துவச் செலவுகளைத் தரமாட்டார்.
ரிஷப ராசி நேயர்களே! உங்களது ராசிக்கு 4-ஆம் வீடு சிம்மம். இந்த வீட்டின் நிலைப்படி உங்களுக்கு தாய் மாமன், வீடு, தோட்டம், வாகனம், செல்வம் போன்றவற்றைக் குறிக்குமிடம். அதை சனி பகவான் 10-ஆம் பார்வையாக பார்க்கிறார். எனவே நீங்கள் தினசரி சனி பகவானை வணங்கிவருவதைப் பொறுத்து அவர் உங்கள் வீட்டில் சுபச்செலவுகளை ஏற்படுத்துவார். அதற்காக பொருளாதார வரவுகளையும் மேம்படுத்தித் தருவார். மாமன், மைத்துனர்வழி உறவுகளில் உங்களுக்கு உதவி கிடைக்காது. அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். செய்யும் தொழிலில் நல்ல பலன்கள் ஏற்படும்.

அலைச்சலைக் கொடுப்பார். அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்யவைத்து பொருளாதாரத்தை உயர்த்துவார். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பவர்கள் நிம்மதியாக வாழலாம்.

சுப நிகழ்ச்சிகன் நடக்கும்

சனி பகவான் 16-12-2014 முதல் 24-1-2015 வரை விருச்சிக ராசியில், நேர்கதியில் குரு சாரம் பெற்று உலாவருகிறார். இந்த காலகட்டத்தில் உத்தியோக விருத்தி ஏற்படும். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்தபடி வருமானம் வரும். மருத்துவச் செலவுகள் குறைந்து ஆரோக்கியம் கூடும். சிலர் புதிய வீடுகட்டத் தொடங்குவார்கள். சனியால் பாதிப்பு எதுவுமில்லை. குரு பகவானால் குடும்பத்தில் திருமணத்தடை நீங்கி சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழிலில் நல்ல வருமானமும் ஏற்படும்.

அமைதி அவசியம்

சனி பகவான் 24-1-2015 முதல் 17-3-2015 வரை தன் சுயசாரத்தில் நேர்கதியில் உலாவருகிறார். இது சற்று சோதனையான காலம். உழைப்பு அதிகமாக இருக்கும். அதனால் உடலில் அசதி ஏற்படும். விரக்தி ஏற்படும். எனவே அமைதிகாத்திட வேண்டும்.

ஆடம்பரம் தவிர்க்கவும்

சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை விருச்சிக ராசியில் வக்ரகதியடைந்து குருசாரம் பெற்று சஞ்சரிக்கிறார். இந்த நேரத்தில் அனாவசியமான ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தால், புதிய கடன்கள் ஏற்படாது. எனினும் வருமானத்திற்குக் குறைவிருக்காது.

எல்லாமே சாதகம்

சனி பகவான் 13-6-2015 முதல் 1-8-2015 வரை வக்ரகதியில் குரு சாரத்தில் துலா ராசியில் சஞ்சரிப்பார்.  இதற்கு முன்னர் ஏற்பட்ட வம்பு வழக்குகள் அனைத்தும் சாதகமாகும். தேவையை மிஞ்சி வருமானம் கிடைக்கும். உடல்ரீதியாக இருந்த உபாதைகள் மாறும். பிரிந்த தம்பதியர், பிரச்சினை எல்லாவற்றையும் மறந்து ஒன்றுசேர்வார்கள். கடன் தொந்தரவுகள் மாறும்.

வசந்த காலம் 

சனி பகவான் வக்ரநிவர்த்தியடைந்து, 1-8-2015 முதல் 6-9-2015 வரை குருசாரம் பெற்று துலா ராசியில் சஞ்சரிப்பார். இதுவொரு வசந்த காலம். ரிஷப ராசி நேயர்களே! உங்கள் தேவைகள் முழுவதையும் சனி பகவான் இந்த காலகட்டத்தில் பூர்த்திசெய்வார்.

சிந்தித்துச் செயல்படுக

சனி பகவான் 6-9-2015 முதல் 18-10-2015 வரை குரு சாரத்தைப் பெறுகின்றார். தொழிலை முன்போல அளவோடு செய்யவேண்டும். புதிய வாகனங்கள் வாங்குவதைத் தவிர்க்கவேண்டும். சிந்தித்துச் செயல்பட்டால் நஷ்டத்தை தவிர்க்கலாம். புதிய தொழில் கூடாது.

குடும்பத்தில் கவனம் தேவை

சனி பகவான் 18-10-2015 முதல் 28-3-2016 வரை வக்ரமாகி சனிசாரம் பெற்று உலாவருவார். இந்த காலகட்டத்தில் பெற்றோர்களின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குழந்தைகளின் கல்விச் செலவு கூடும். குரு பகவான், ராகு- கேதுக்களின் ஒத்துழைப்பும் இல்லை. எனவே எல்லா செயல்களிலும் அமைதிகாத்துச் செல்லவேண்டும். வீண் சண்டைகள் வருவதைத் தவிர்க்கலாம்.

சிக்கல்கள் விலகும்

சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை வக்ரகதியில் சனி சாரத்தில் சஞ்சரிக்கிறார். இதற்கு முன்னர் ஏற்பட்ட எல்லா பிரச்சினைகளையும் ஒழுங்குபடுத்துவார். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்குகள் வெற்றியாகும்.

பொருள் சேரும்

சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை சனி சாரத்தில் சஞ்சாரம் செய்கின்றார். இந்த காலகட்டத்தில் பொன், பொருள் சேர்க்கை கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கான திருமணப் பேச்சுகளை நிதானித்துச் செய்யவேண்டும். தொழில்துறை உயரும். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.

உறவினர் பகை

சனி பகவான் 17-11-2016 முதல் 10-4-2017 வரை புதன் சாரத்தில் இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உறவினர்கள் பகை வர வாய்ப்புள்ளது. உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒருசிலருக்கு வேலையில் இடையூறுகள் வந்தாலும் பாதிப்பு வராது.

நிதானம்…

சனி பகவான் 10-4-2017 முதல் 6-8-2017 வரை வக்ரமாகி புதன் சாரத்திற்கு வருகிறார். இந்தக் காலகட்டத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.  அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கவேண்டாம். எனவே அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்திலுள்ளவர்களிடம் கவனமாகப் பழகவேண்டும். பேச்சில் நிதானம் தேவை.

அடுத்தவரிடம் எச்சரிக்கை

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரை வக்ரநிவர்த்தி பெற்று புதன் சாரத்தில் உலாவருகிறார்.
ராகு- கேது நல்ல பலன்களை வழங்கிட முன்வருகின்றார்கள்.

அடைமழை ஓய்ந்தது. ஆர்ப்பரித்த தொல்லைகள் அனைத்தும் நீங்கி சனி பகவான் அருளால் உங்கள் இல்லத்தில் சுபிட்சம் நிலவும். வழக்குகள் சாதகமாகும். எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்ற நல்ல நிலை உருவாகி குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும்.

பணியாளர்களுக்கு

கவனத்துடன் பணியாற்ற வேண்டும். வேலைப்பளு குறையும். இடமாறுதல் உண்டு. பதவி உயர்வு, வருவாயில் எந்த பாதகமும் வராது.

பெண்களுக்கு

திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். உடன்பிறந்தோரிடையில் இருந்துவந்த  பிணக்குகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீங்கள் ஆசைப்பட்ட பொன், பொருளை வாங்கிச் சேர்ப்பீர்கள். நல்ல கணவர், நல்ல பிள்ளைகளோடு வாழ்வீர்கள்.

மாணவர்களுக்கு

கல்வியில் பெருமுயற்சியெடுத்துப் பயிலவேண்டும். மந்தநிலையை மாற்றியமைக்க வேண்டும். இதனைச் செய்தால் முதல் மாணவனாக வருவீர்கள். செய்யாவிட்டாலும் தோல்வியடையாமல் வெற்றி பெற்றுவிட்டோம் என்று வந்துவிடுவீர்கள்.

வியாபாரிகளுக்கு

இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்கிறவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கூட்டாளிகளைச் சேர்க்காமல் செய்வது நல்லது. இதர வியாபாரங்கள் இயல்பான நிலையிலிருக்கும்.

தொழிலதிபர்களுக்கு

தொழிலாளர்களின் நல்ல உழைப்பைப் பெறுவார்கள். பொருளாதார உயர்வும் அடைவார்கள். சனி பகவான் தொழிலை உயர்த்தித் தருவார். சோம்பலை அகற்றுவார்.

விவசாயிகளுக்கு

சனி பகவான் வக்ரகதியாக துலாமில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுக்கு அதிக உழைப்பைத் தருவார். நல்ல மகசூலையும் தருவார். மாடு கன்றுகள், பால் பாக்கிய அபிவிருத்திகள் கிடைக்கும்.
அரசாங்க சலுகைகள் கிடைக்கும். வீண் வாதங்களைத் தவிர்த்து வயலில் உழைப்பைச் செலுத்துவீர்கள். பொன்னும் பொருளும் சேரும்.

கலைத்துறையினர்

பிரபலங்களைவிட புதிய கலைஞர்கள் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். புதிய படங்களை லாபத்துக்கு விற்பீர்கள். சாதனை படைத்து பொன்னும் பொருளும் சேர்ப்பீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

அரசியல் பிரமுகர்கள்

பொதுமக்களால் போற்றப்படுவீர்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும், மரியாதையையும் பெறுவீர்கள். உங்களது நேர்மையான செயல்கள் தலைமையால் பாராட்டப்பட்டு, புதிய பதவிகள் தேடிவரும்.

பரிகாரம்

ரிஷப ராசி அன்பர்களே! நீங்கள் தினசரி கீழ்க்கண்ட பாடலை ஒரே நேரத்தில் ஒன்பது முறை சொல்லி சனி பகவானை இருந்த இடத்திலிருந்தே வணங்குங்கள். சனி பகவான் பாதுகாப்பார்.

“மந்தனாம் சனியே உந்தன்
மகத்துவம் அறிந்து கொண்டேன்
வந்ததோர் துயரம் நீக்கு
மனதினில் அமைதி கூட்டு.’

நாட்டுக்கருவேல மரத்தின் இலைகள் மற்றும் அதன் பூவைக் காயவைத்து சருகாக்கி பாலிதீன் பையில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். சனி பகவான் இடர்ப்பாடுகளை நீக்குவார்.

திருநள்ளாறு சென்று சனீஸ்வரரை ஒருமுறை வணங்கி வாருங்கள். முடியாதவர்கள் குச்சனூர் (தேனி மாவட்டம்) சென்று சனீஸ்வரரை தரிசித்து வாருங்கள். அல்லது சிவகங்கை சென்று வணங்கிவாருங்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் ரிஷப ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்.

 

——————————————————————————————————————–

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

அன்பார்ந்த மிதுன ராசி நேயர்களே!

16-12-2014 முதல் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். இதற்கு முன்னர் பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் இந்த சனிப்பெயர்ச்சியில் மாறும். கடன் தொந்தரவுகள் மறைந்து புதிய லாபங்களைப் பெறுவீர்கள். முந்தைய காலகட்டம் முடித்து, தற்போது உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சாரம் செய்யவுள்ளார். சனி பகவான் தீய நினைவுகளோடு உலா வருகின்றவர்களை மட்டுமே தண்டிக்கிறார். மற்றவர்களை தட்டிக்கொடுத்து சமூகத்தில் உயர்த்துகிறார். மனைவி சொல்லை மந்திரமாகக் கருதுகிறவர்கள், மனைவியின் வழிகாட்டுதலால் சில சிரமங்களை அடையநேரும். எனவே சுயசிந்தனையோடு செயல்பட்டு சனி பகவான் அள்ளித் தரும் நன்மைகளைப் பெறவேண்டும்.

விருச்சிக ராசியில் அமரும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ஆம் இடத்தை 3-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். இதனால் ஒருசிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெற்றோர் வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். இந்தக் காலகட்டத்தில் உங்கள் வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் நடைபெறும். அதனால் சுபச்செலவுகள் கூடும். பிள்ளைகளுக்குத் திருமணம் கைகூடும். வேலைவாய்ப்புக்காக பிள்ளைகள் அயல்நாடு செல்வதால், கூடுதல் செலவுகள் ஏற்படும். மிதுன ராசியில் பிறந்து 75 வயதுக்குமேல் உள்ளவர்கள் வெளியூர் பயணத்தைத் தவிர்க்கவேண்டும். திடீர் அசௌகரியங்களை ஏற்படுத்தும். எனவே உடல்ரீதியாக ஓய்வெடுப்பவர்கள், இறைவன் தரும் நீண்ட ஓய்வைப் பெறுவதிலிருந்து தப்பித்துவிடலாம்.

மிதுன ராசிக்கு 3-ஆம் இடமான சிம்ம ராசியை சனி பகவான் 10-ஆம் பார்வையாகப் பார்க்கின்றார். அவர் உங்கள் உடன்பிறந்த இளையவர்களின் முன்னேற்றத்திற்காக உங்களை செலவுசெய்ய வைப்பார். கடன்பட நேரிடும். இதனால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே உடன்பிறந்த இளையவர்களுக்காக செலவிடுவதை நன்கு யோசித்து அவசியமானதைச் செய்யவேண்டும்.

நிதானம் தேவை

16-12-2014 முதல் 24-1-2015 வரை சனி பகவான் விருச்சிக ராசியில் குரு சாரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த காலம் முழுவதும் செலவுகளைக் குறைக்கவேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் அவசர முடிவுகளால் புதிய கடன்கள் ஏற்படும். எனவே புதியகாரியமனைத்தும் தள்ளிவைத்தால், கடன் தொந்தரவிலிருந்து மீளலாம்.

கையிருப்பு கூடும்

சனி பகவான் 24-1-2015 முதல் 17-3-2015 வரை சனி சாரத்தில் உலாவருகிறார்.  இந்த நேரத்தில் உங்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகைகள் அனைத்தும் வந்துசேரும். கையிருப்பு கூடும்.

உடன்பிறந்தவர்களிடையே இருந்த பிரச்சினைகள் சுமுகமாகும். புதிய வீடுவாங்க, கட்ட போட்ட திட்டம் நிறைவேறும்.

எதிர்பாராத திருப்பங்கள்

சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரமாகி குரு சாரத்தில் விருச்சிக ராசியில் உலாவருகிறார். இது உங்களைப் பக்குவப்படுத்தும் காலம். இதுவரை வீண்செலவுகளை செய்துவந்த நீங்கள் புதிய வீடு, வாகனம் வாங்க திட்டம் போடுவீர்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த உடல்நிலையில்  முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளில் உரிய பங்குகளைப் பெற்று, அதனை வீண் செய்யாமல் வீடு, பொன், பொருள் என மாற்றுவீர்கள்.

நடக்காதா என்று ஏங்கிய காரியங்கள் நடக்கும்

சனி பகவான் 13-6-2015 முதல் 1-8-2015 வரை வக்ரகதியில் துலா ராசியில் தங்கியிருப்பார். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கவில்லையே என்று ஏங்கித் தவிக்கும் பெற்றோர்களின் கவலை தீரும். பிள்ளைகளுக்கு நல்ல வரன்களாக அமையும். தொல்லை கொடுத்துவந்த பிள்ளைகளும் நல்லவர்களாக மாறுவார்கள். பொருளாதார கஷ்டமும் குறையும். குரு பகவான் அருளும் கிடைக்கும். நடக்காது என்று நினைத்த காரியங்களும் தடையின்றி நடக்கும்.

சிக்கனம் தேவை

சனி பகவான் 1-8-2015 முதல் 6-9-2015 வரை குரு சாரம் பெற்று துலா ராசியில் உலாவருவார். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் செலவினங்களைச் சுருக்கி, சிந்தித்துச் செய்யவேண்டும். இல்லையென்றால் புதிய கடன்களை ஏற்படுத்துவார். உங்கள் உறவுகளின் சுபகாரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். புதிய வீடு கட்ட- வாங்க போட்ட திட்டத்தைத் தள்ளிவைப்பது நல்லது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

அதிக பொருளாதாரம் கிடைக்கும் காலம் 

சனி பகவான் 6-9-2015 முதல் 18-10-2015 வரை குரு சாரம் பெறுகிறார். அதேநேரத்தில் 21-6-2014-ல் நடைபெற்ற ராகு- கேது பெயர்ச்சியால் நன்மையுண்டு. இந்த நேரத்தில் நீங்கள் பூர்வீக சொத்துகள், புத்திரர்களால் நல்ல பலன்களை அடைவீர்கள்.

வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் இனி நல்ல முறையில் நடக்கும். நல்ல வரன்கள் அமையும்.

பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும். இதுவரை இழுபறியாக இருந்துவந்த பதவி உயர்வு தேடிவரும். வேலை தேடும் அன்பர்களுக்கு நல்ல வேலைகள் கிட்டும். அரசுப்பணி வராதா என்று ஏங்கிய ஒருசிலர் உயர்பதவிக்கான உத்தரவுகளைப் பெறுவார்கள்.

வசந்த காலம்

சனி பகவான் 18-10-2015 முதல் 28-3-2016 வரை சனி சாரத்தில் விருச்சிக ராசியில் இருக்கின்றார். இந்தக் காலம் உங்களுக்கு வசந்த காலம். அதிர்ஷ்ட பாக்கியங்களை அள்ளிப் பருகுவீர்கள். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். காதல் திருமணம் செய்து பிரிந்த தம்பதியரும் ஒன்றுசேர்வார்கள். ராணுவம், காவல்துறையில் பணிபுரிவோர் பதவி உயர்வு பெற்று விரும்பிய இடத்துக்குச் செல்வார்கள். மனைவி, மக்கள் தேவைகள் பூர்த்தியாகும். சினிமா தயாரித்து அதனை வெளியிட முடியவில்லையே என்று ஏங்குபவர்கள், பிறர் உதவியால் படத்தை வெளியிடுவார்கள். நல்ல லாபமும் கிடைக்கும். கலைத்துறையில் வாய்ப்பு தேடுபவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். அதிக பணம் புரளும் காலமென்பதால், சிலர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தவறிவிடுவார்கள். அதனால் பெண்கள் பிரச்சினை வந்துசேரும்.

எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பானை பிடித்தவள் பாக்கியசாலி

சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை சனி சாரம் பெற்று வக்ரத்தில் விருச்சிக ராசியில் உள்ளார். இந்தக் காலகட்டத்தில் மனைவியை அனுசரித்துச் செல்பவர்கள் பெரும் செல்வத்தை அடைவார்கள். மனைவி வழியில் இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நீங்கும். திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணமாகும். வரும் மனைவியின் யோகத்தால் நல்ல வேலை, வருமானம் கிட்டும். உற்சாகமாக இருப்பீர்கள்.

உச்சகட்ட வருமானம்

சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை சனி சாரத்தில் விருச்சிக ராசியில் இருப்பார். இந்தக் காலகட்டத்தில் ஒருசிலருக்கு உச்சகட்ட வருமானத்தை சனி பகவான் கொடுப்பார். புதிய வீடு, மனை சொத்துகள் வாங்கிக் குவிப்பீர்கள். பணியாளர்கள் அனைவரும் மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு, பதவி உயர்வும் பெறுவார்கள். குடும்பத்தில் வேலை தேடுபவர்களுக்கு பதவி கிடைக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். வழக்குகள் வெற்றியாகும்.

உடன்பிறந்தோர் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி, சொத்துப் பிரச்சினைகளிலும் சுமுகம் ஏற்படும். பெற்றோர் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும்.

எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

சனி பகவான் 17-11-2016 முதல் 10-4-2017 வரை புதன் சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருவார். மாற்று மதத்தவர், மாற்று மொழியினர், கறுப்புநிறமுள்ளவர்கள் ஆகியோர்களை இனம்கண்டு எச்சரிக்கையாகப் பழகவேண்டும். அவர்களை நம்பி எந்தக் காரியத்தையும் செய்துவிடக்கூடாது. அரசுப்பணியில் இருப்பவர்களில் நேர்மையற்றவர்கள் ஊழல் வழக்கை சந்திக்க நேரிடும். அதிகாரிகளுக்கு சாதகமாகச் செயல்பட்ட பணியாளர்களை அந்த அதிகாரிகளே காட்டிக்கொடுப்பார்கள். அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையாக இருந்தால் சிரமத்திலிருந்து தப்பிக்கலாம்.

அந்நியநாட்டு தொடர்புகள் வரும்

சனி பகவான் 10-4-2017 முதல் 6-8-2017 வரை வக்ரம் பெற்று புதன் சாரத்தில் விருச்சிகத்தில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் வேலைதேடும் இளைஞர்கள் வேறு மாநிலத்தில் வேலைவாய்ப்பை அடைவார்கள். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். உள்ளுரில் இருப்பவர்கள் பொருளாதாரத்தை சிக்கனமாக வைத்திருக்கவேண்டும். வீண் சிரமத்தையும் சிக்கலையும் தவிர்க்க, அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டிய காலம்.

வேலையில் இடையூறு 

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரை வக்ரநிவர்த்தி பெற்று புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் உள்ளார். இந்தக் காலகட்டம் உங்களுக்கு சாதகமாக இல்லை. பழைய வேலைகளைச் செய்து பலன்பெறவேண்டும். புதிய காரியங்களைச் செய்யக்கூடாது. வேலை செய்யும் இடங்களில் சகஊழியர்களால் பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருசிலர் பதவியைத் துறந்து, வேறு பதவிக்குச் செல்ல முற்படுவார்கள். அவர்களும் யோசித்துச் செயல்படவேண்டும்.

பணியாளர்களுக்கு

நேர்மையான பணியாளர்கள் பதவி உயர்வு மற்றும் அனைத்து பலன்களையும் அடைவார்கள். நேர்மையற்றவர்கள் வம்பு, வழக்குகள், காவல்துறை நடவடிக்கையில் சிக்குவார்கள்.

பெண்களுக்கு

பெண்களுக்கு இது பொற்காலம். நினைத்த காரியம் தடையின்றி நடக்கும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு

படிப்பில் நன்கு கவனத்தைச் செலுத்தவேண்டும். உயர்கல்வி பயில்பவர்கள் கடின முயற்சியுடன் படிக்கவேண்டும். ஒருசில மாணவர்கள் அலட்சியப்போக்கால் தோல்வியைத் தழுவுவார்கள்.

வியாபாரிகளுக்கு

இதுவரை உங்களுக்குப் போட்டியாக இருந்த வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய கிளைகள் தொடங்குவதைத் தவிர்த்தல் வேண்டும்.

விவசாயிகளுக்கு

கலப்பை வைத்து உழுபவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். டிராக்டர் வைத்து உழுவதைத் தவிர்க்கவேண்டும். வேலையாட்கள் பற்றாக்குறை வராது. மகசூல் அதிகமாகும்.

தொழிலதிபர்களுக்கு

தொழிலில் மந்தமான நிலை காணப்படுகிறது. எனவே புதிய தொழிலை தொடங்கக்கூடாது. செய்யும் தொழிலில் முழு கவனம் செலுத்தி, தொழிலாளர்களை அனுசரித்துச் சென்றால் சமாளித்துவிடலாம்.

கலைத்துறையினருக்கு

அரசின் கெடுபிடிகளுக்கு ஆளாவார்கள். புதிய வாய்ப்புகளுக்கு குறைவிருக்காது. வருமானம் கூடும்.

அரசியல் பிரமுகர்களுக்கு

எப்போதும் நிதானத்துடன் செயல்படவேண்டும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் வரும். சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் ஏற்படும்.

பரிகாரம்

தினசரி காலை எழுந்தவுடன் காக்கைக்கு சாதம் வைக்கவேண்டும். (பழைய சாதம் வைத்தாலே போதும்).

ஒருமுறை திருநள்ளாறு சென்று வணங்கிவருவது நல்லது. திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று சனி பகவானை தரிசித்து வாருங்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுன ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்.

——————————————————————————————————————–

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

அன்பார்ந்த கடக ராசி நேயர்களே!

சனி பகவான் 16-12-2014 முதல் 18-12-2017 வரை, உங்கள் ராசிக்கு 5-ஆம் இடமான குலதெய்வம், குழந்தை பாக்கியம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்கிறார். இந்தக் காலம் முழுவதும் உங்களுக்கு பிள்ளைகளால் பெருமைகள் வந்துசேரும். வேலைதேடும் பிள்ளைகள் அனைவரும் நிரந்தர வேலையில் அமர்ந்து, நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். வயதானவர்கள், பிள்ளைகள்வழியில் எதிர்பார்த்த நல்ல பலன்கள் கிட்டும். இந்த சனிப்பெயர்ச்சியுடன் கேது பகவானும் உங்களுக்கு யோகத்தைத் தருகிறார். பதவி உயர்வு மற்றும் நல்ல இடமாறுதலைத் தருவார். தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் நிறைவாகி, நல்ல வரனாக அமைந்துவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஏனோதானோவென்று இருந்த பிள்ளைகள்கூட நல்ல பிள்ளைகளாக மாறுவார்கள். மகாலட்சுமி உங்கள் பக்கம்இருக்கிறார். தடைப்பட்டுவந்த கோவில் காரியங்கள் இனிதே நடக்கும். ஒருசிலர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் அந்தஸ்தையும் பெறுவார்கள்.

அதை நல்ல முறையில் செய்து உற்றார்- உறவினர்களின் பாராட்டையும் பெறுவார்கள். குலதெய்வ தரிசனம் தள்ளிக்கொண்டேபோன நீங்கள் இனி குலதெய்வத்துக்கு செய்யவேண்டிய வேலைகளை நல்லபடி முடிப்பீர்கள்.

சனி பகவான் 7-ஆம் இடமான களஸ்திர ஸ்தானத்தை 3-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். இதனால் வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். சனி பகவான் நம்மை பாதிக்கமாட்டார் என்றெண்ணி சிக்கனத்தை மறந்துவிடக்கூடாது. 2015-ஆம் ஆண்டு துவக்கத்தில் ஒருசிலரது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் கூடும். பிறப்பு ஜாதகத்தில் சனி பகவான் நன்கு அமையப்பெற்றவர்களுக்கும், நல்ல தசை நடப்பவர்களுக்கும் பாதிப்பு வராது. வாகனத்தை மெதுவாக ஓட்டிச் செல்லவேண்டும். பிள்ளைகள்மீது ஒரு கண் வைத்திருங்கள். அவர்கள் காதல் திருமணம் என்று சொல்லி உங்களை நெருக்குவார்கள். அதனால் புத்திர சோகம் ஏற்படும். உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் விரிசல் வர அதுவே காரணமாகும். வயதான தம்பதியர் பிள்ளைகளால் பலன்பெற வேண்டுமென்றால் நிதானமாகப் பேசுங்கள்.

உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தை- சுக்கிரன் வீட்டை சனி பகவான் 7-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி காலம் முடியும்வரை உங்கள் உடன்பிறந்த மூத்த சகோதர- சகோதரிகள் எதிராக செயல்படக்கூடும். சொத்துகளில் பிரச்சினையை உருவாக்குவார்கள். எனவே சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை முடக்கிவையுங்கள்.

உங்கள் ராசிக்கு 2-ஆம் இடமான சிம்மத்தை சனி பகவான் 10-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். எனவே பொருளாதாரத்தை தன் மக்கள், தன் மனைவி என்று மட்டும் செலவு செய்யுங்கள். இந்த காலத்தில் இரண்டு மனைவி உள்ளவர்கள், சின்னவீடு வைத்திருப்பவர்கள் சனி பகவானால் தண்டிக்கப்பட உள்ளார்கள். எனவே கவனத்தோடு குடும்பத்தை நடத்தவேண்டும்.

உடன்பிறந்தவர்கள் எச்சரிக்கை

16-12-2014 முதல் 24-1-2015 வரை சனி பகவான் குரு சாரத்தில் சஞ்சரிக்கிறார். எல்லா தரப்பு மக்களும் ஓரளவு வருமானத்தோடு வாழ்வார்கள். பாகப்பிரிவினையை தாமதம் செய்யவேண்டும். சகோதரர்களிடம் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்.

நீதிமன்றம் செல்லும் காலம்

24-1-2015 முதல் 17-3-2015 வரை சனி பகவான் சனி சாரத்தில் உள்ளார். எனவே சொத்து விற்கும்- வாங்கும் முயற்சிகளைத் தள்ளிப்போடுங்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் வாங்கிய சொத்துகளை விற்பனை செய்வதைத் தாமதப்படுத்துங்கள். ஏனோ தானோவென்று செயல்பட்டால் வழக்குகளை சந்திக்க வேண்டிவரும்.

இனம்தெரியாத அச்சம்

17-3-2015 முதல் 13-6-2015 வரை சனி பகவான் வக்ரம் பெற்று குரு சாரத்தில் விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்த நேரத்தில் எதைத் தொட்டாலும் பயம் உங்களைத் தொற்றிக்கொள்ளும்; மனம் பேதலிக்கும். வரவுகளிலும் திருப்தியிருக்காது. பிள்ளைகள்மூலம் வந்த வரவும் தாமதமாகும். எனவே எதற்கெடுத்தாலும் கோபப்படாமல்நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். இழப்புகள் வராது; மருத்துவச் செலவும் அதிகமாகாது.

குடும்பத்தில் எதிர்ப்பு

13-6-2015 முதல் 1-8-2015 வரை சனி பகவான் வக்ரம் பெற்று குரு சாரத்தில் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இது பெண்களால் தொல்லை ஏற்படும் காலம். எனவே ஒழுக்கமாக வாழவேண்டும். ஒழுக்கத்தோடு வாழ்கிறவர்களுக்கு பாதிப்பில்லை. அரசு ஊழியர்கள் பொறுமையாக செயல்படவேண்டும். சக பணியாளர்களால் இடையூறு வரும். தான் உண்டு. தன் வேலையுண்டு என்று செல்வோருக்கு பாதிப்பில்லை. கூடுதல் வருவாயை எதிர்பார்ப்பவர்களுக்கு
ஏமாற்றமே மிஞ்சும். அளவான வருமானமுண்டு.

வெளிநாட்டுத் தொடர்புகள் கூடும்

1-8-2015 முதல் 6-9-2015 வரை சனி பகவான் துலா ராசியில் குரு சாரம் பெற்று நேர்கதியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டு உதவிகள், அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் உதவிகள் கிட்டும். சிலசமயம் ஆதாயம் இல்லாத அலைச்சல் ஏற்படும். எனவே குடும்பத் தேவைக்கான செலவுகளை மட்டும் செய்யுங்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டத்தைத் தள்ளிப்போட வேண்டும். மருத்துவர்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இளைஞர்கள் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் கைகூடும். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

நிதானமாகச் செயல்படவேண்டிய காலம்

சனி பகவான் 6-9-2015 முதல் 18-10-2015 வரை குரு சாரத்தில் விருச்சிக ராசியில் இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் ஏற்கெனவே செய்துவரும் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய வேலைகளைத் தாமதப்படுத்தவேண்டும். ஊழியர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் நிதானமான போக்கை கடைப்பிடிக்கவேண்டும். பழைய வழக்குகளை நடத்தாமல் வாய்தா போடுங்கள். எதிலும் நிதானித்துச் செல்ல வேண்டும். 30 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் வாகனத்தை நிதானமாக இயக்கினால் விபத்திலிருந்து மீண்டுவிடலாம்.

வாழ்க்கையில் வசந்தம்

18-10-2015 முதல் 28-3-2016 வரை சனி பகவான் சனி சாரத்தில் உலா வருகின்றார். இந்தக் காலம் உங்களுக்கு வசந்தகாலம். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிதாக வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிட்டும். ஏற்கெனவே வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். உடல்நிலையும் சீராகும். ரியல் எஸ்டேட் தொழில்புரிவோர் சந்தித்துவந்த மந்தநிலை மாறும். குடும்பத்தில் அமைதி வரும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். நீண்ட நாட்களாக வசூலாகாத பழைய பாக்கிகள் வசூலாகும்.

எல்லாரும் எல்லாமும் பெறுவார்கள்

சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை விருச்சிக ராசியில் சனி சாரம் பெற்று வக்ரகதியில் உலாவருகிறார். புதிய வீடு கட்ட எடுத்த முயற்சிகள் கைகூடும். சொத்து பாகப்பிரிவினையில் இருந்துவந்த பிரச்சினைகள் சுமுகமாகும். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிரிந்த சொந்தங்கள் வந்துசேரும். உடன்பிறந்தோர் உற்றார்- உறவினர் அனைவரும் உதவியாக இருப்பார்கள்.

தீமைகள் இல்லாத காலம்

சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை சனி சாரம் பெற்று விருச்சிகத்தில் அமர்ந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் இறைவழிபாடு அதிகரிக்கும். வருவாயைக் கூட்டுவீர்கள். தீமைகள் விலகும். தீயவர்களும் உங்களைவிட்டு விலகிச்செல்வர்.

எண்ணங்கள் ஈடேறும்

சனி பகவான் 17-11-2016 முதல் 10-4-2017 வரை வக்ரமாகி புதன் சாரத்தில் உள்ளார். இளைஞர்கள் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் கலைத்துறையில் நடிப்பு வாய்ப்பைப் பெறுவார்கள். பெண்களால் நன்மையுண்டு. எல்லாமே நல்ல பலன்களாக இருக்கும். வருமானத்திற்குக் குறைவில்லை. அதிகாரிகளின் கெடுபிடி இருக்காது.

பதவி உயர்வும், பதட்டம் இல்லாத வாழ்வும்

சனி பகவான் 10-4-2017 முதல் 6-8-2017 வரை புதன் சாரம் பெற்று வக்ரத்தில் விருச்சிக ராசியில் உலாவருகிறார். அரசுப் பணியாளர்கள் தடைப்பட்ட பதவி உயர்வுகளையும், ஊதிய நிலுவைகளையும் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களின்  தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் சேரும். இதுவரை உங்கள் மனதில் குடிகொண்டிருந்த இனம்புரியாத பயம் நீங்கும். உற்சாகமாகச் செயலாற்றுவீர்கள்.

அழுதவர் சிரிக்கும் காலம்

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரை புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் உலாவருகிறார். குடும்பத்திலும், உடன்பிறந்தோர் வகையிலும் எல்லா நன்மைகளையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த இல்லாமை யாவும் மறைந்து, எல்லாமே இருக்கும். மழலைச் செல்வங்களோடு வாழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பொறுமையுடன் காத்திருந்த உங்களை சனி பகவான் உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்து வைத்துவிடுவார். நாளெல்லாம் வறுமையை நினைத்து அழுத உங்களை, பொன் நகையுடனும் புன்னகையுடனும் இருக்கச்செய்வார்.

பணியாளர்களுக்கு

பணியாளர்கள் தங்கள் பணியில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். சக ஊழியர்களிடம் எப்போதும் சுமுகமாக நடப்பவர்கள், பதவி உயர்வு, ஊதிய நிலுவை வரவு போன்ற நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதிய இடமாற்றம் வந்தால் போகலாம். நீங்கலாக மாற்றத்தைக் கோராதீர்கள். மற்றவர்களின் வைராக்கியத்துக்காளாக நேரும்.

பெண்களுக்கு

பெண்களைப் பொறுத்தவரை சனி பகவான் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார். பிள்ளைகளால் நன்மைகளைப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் ஒருசிலருக்கு கிட்டும். தடைப்பட்ட திருமணம் இனிதே நடக்கும். அண்டை, அயலாரைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்கவேண்டும்.

மாணவர்களுக்கு

மாணவர்களைப் பொறுத்தவரை ஞாபகசக்தி கூடும். நியாயத்துடன் செயல்படும் மாணவர்கள் உயர்படிப்பில் நல்ல வெற்றியை அடைவார்கள். தீய வழிகளைப் பின்பற்றும் மாணவர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். எனவே நல்வழியில் வாழப் பழகவேண்டும்.

வியாபாரிகளுக்கு

சனி பகவானின் அருளுண்டு. புதிய வியாபாரம் துவங்குவதைவிட இருக்கும் வியாபாரத்தை மட்டும் விரிவாக்கம் செய்யவேண்டும். சந்தை வியாபாரிகள் நல்ல லாபத்தை அடைவார்கள். அயல்நாட்டு வணிகம் செய்கிறவர்கள் நிதானத்துடன் செயல்படவேண்டும்.

விவசாயிகளுக்கு

கலப்பை வைத்து உழுபவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். டிராக்டர் வைத்து உழுவதைத் தவிர்க்கவேண்டும். வேலையாட்கள் பற்றாக்குறை வராது. மகசூல் அதிகமாகும்.

கலைத்துறையினருக்கு

புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பேரும் புகழும் அடைவார்கள். ஒருசில கலைஞர்களின் குடும்பத்தில் பெரும் பிரச்சினைகள் வரும். எச்சரிக்கை தேவை. வருவாய்க்கு குறைவில்லை.

தொழிலதிபர்களுக்கு

சனி 5-ல் வரும் இந்த நேரத்தில், குலதெய்வ அருள்பெற்று உங்கள் தொழிலைத் தொடங்க வேண்டும். தொழிலாளர்கள் ஒற்றுமை ஏற்படும். உற்பத்தி கூடும்.

அரசியல் பிரமுகர்களுக்கு

எப்போதும் நிதானத்துடன் செயல்படவேண்டும். இருக்கும் பதவியைவிட்டு, புதிய பதவியைத் தேடுபவர்களின் எண்ணம் தாமதமாகும். தலைமையால் கண்காணிக்கப்படுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு சனி பகவான் பக்கபலமாக இருக்கமாட்டார்.

நிதானத்துடன் செயல்படுபவர்கள் சமூக மதிப்பைப் பெறுவார்கள்.

பரிகாரம்

“ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது சகாய நமக’ என்று தினசரி சொல்லிவாருங்கள். சனி பகவானின் அருள்கிட்டும்.

ஒருமுறை திருநள்ளாறு சென்று வரலாம். திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைதோறும் நெய்விளக்கேற்றி வேண்டிவாருங்கள். சனி பகவான் நன்மைகள் அருள்வார்.

ஆலயத்துக்குச் செல்லமுடியாதவர்கள் நாட்டுக்கருவேலமர இலைகள் மற்றும் அதன் பூவை பாலிதீன் பையில் அடைத்து உங்கள் கைவசம் எப்போதும் வைத்திருங்கள். சனி பகவான் எப்போதும் அருள்புரிவார்.

இந்த சனிப்பெயர்ச்சியில் கடக ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்.

———————————————————————————————————————
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

அன்பார்ந்த சிம்ம ராசி நேயர்களே!

சனி பகவான் 16-12-2014 முதல் 18-12-2017 வரை விருச்சிக ராசியில் அமர்ந்து உங்களுக்குச் செய்யவுள்ள பொதுப்பலன்களை முதலில் அறிவோம். சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ஆம் வீடான தாய், வீடு, வாகன வசதி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். விருச்சிகத்தில் அவர் உலாவரும்போது உங்களுக்கு நல்ல பலன்களையே வழங்குவார். வீடு, வாகன வசதிகள் உங்களுக்குக் கிடைக்கும். நீண்டநாட்களாக திருமணமாகாமல் தடைப்பட்டுவந்த நிலை மாறி நல்லபடியாக திருமணம் முடியும்; நல்ல வரனாகவும் அமையும்.  குடும்பத்தில் ஏற்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தாய், தந்தையரிடையே இருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகளால் நன்மையான பலன்களைப் பெறுவீர்கள். பிள்ளைகளும் கல்வியில் உயர்வார்கள். உடன்பிறந்தோர் மத்தியில் நிலவிவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். அரசுப்பணிக்காகக் காத்திருப்போருக்கு பணி அமையும். மந்தச் சனி மாறி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மாமன்வழி உறவுகளால் இருந்துவந்த தொல்லைகள் நீங்கும். மாமன் அல்லது மாமனார்க்கு மருத்துவச் செலவுகளும், ஒருசிலருக்கு கண்டமும் ஏற்படக்கூடும்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ல் அர்த்தாஷ்டமச் சனியாக வரும் இந்த வேளையில் எந்தவிதமான செயல்பாடுகளை தன் பார்வையில் நடத்துவாரென்று பார்ப்போம். சனி உங்கள் ராசிக்கு 6-ஆம் இடமான தன் வீட்டை 3-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். இதுவரை உங்கள் சொத்துகளை அடாவடித்தனமாக அபகரித்து வைத்திருப்பவர்கள், அதனை உங்களிடம் சேர்ப்பார்கள். கைவிட்டுப்போன பொருட்கள் வந்துசேரும். சனி பகவான் உங்கள் விஷயத்தில் நியாயத்தை நிலைநாட்டுவார்.

சனி உங்கள் ராசிக்கு 10-ஆம் இடமான ரிஷப ராசியை 7-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். எனவே அரசுப் பணியில் உள்ளவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். சிம்ம ராசியில் பிறந்துள்ள நீங்கள் தாய்- தந்தையர் உடல்நிலையை கவனமாகப் பார்க்கவேண்டும். 70 வயதுக்கு மேலுள்ள தாய், தந்தையருக்கு மருத்துவச் செலவுகள் கூடும். தங்கள் பெற்றோர்களை பாதுகாப்பாக இருக்கச்செய்ய வேண்டும். இதனால் இழப்பு நிலைகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் கட்டுக்கடங்கியிருக்கும்.

சனி உங்கள் சிம்ம ராசியை 10-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். அதனால் தொழிலில் நிலவிய மந்தகதி மாறும். உறவினர்களின் தொல்லையும் மாறும். சனி பகவானைப் பூஜிப்பவர்களுக்கு அவர் என்றும் தீங்கு செய்யமாட்டார். தீயவர்கள் மட்டுமே சனி பகவானின் பார்வையால் பாதிக்கப்படுவார்கள். மற்றவர்களுக்கு சனி பகவான் நல்ல வழிகாட்டிச் செல்வார்.

வரவுக்கு மிஞ்சிய செலவுகள்

சனி பகவான் 16-12-2014 முதல் 24-1-2015 வரை குரு சாரத்தில் விருச்சிக ராசியில் உள்ளார். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு வரவும் செலவும் சரிசமமாகவே இருக்கும். சில நேரத்தில் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் வரும். எனவே சிக்கனமாக வாழவேண்டியது அவசியம்.

வருமானக் குறைவு

சனி 24-1-2015 முதல் 17-3-2015 வரை விருச்சிக ராசியில் சனி சாரம் பெற்று நேர்கதியில் உலாவருகிறார். இந்த காலம் முழுவதும் நிதானித்து- யோசித்துச் செயல்படவேண்டும். சொத்துச்சண்டை வந்துசேரும். அதனால் வழக்குகளும் வரும். அரசுப்பணியில் இருப்பவர்களில் நியாயமானவர்களை எதுவும் செய்யாது. கையூட்டு பெறும் அரசு ஊழியர்கள் பணியை இழக்கவேண்டி வரும். எனவே நிதானித்துச் செயல்படவேண்டும்.

பகைமை அகலும்

சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரகதியில் விருச்சிக ராசியில் குரு சாரத்தில் உள்ளார். இந்தக் காலகட்டத்தில் உடன்பிறந்தோர் மத்தியில் இருந்துவந்த பூசல்கள் நீங்கும். புதிய சொத்துகள், வீடு, மனை அமைப்பதை சனி தடுப்பார். எனவே அந்த திட்டத்தை இந்தக் காலகட்டத்தில் நீங்கள் தள்ளிப்போட வேண்டும்.

உடன்பிறந்தவர்களின் திருமணத் தடை அகலும்; பணப்பிரச்சினைகளும்
அகலும்.

திருப்தியான நிலை

சனி பகவான் 13-6-2015 முதல் 1-8-2015 வரை குரு சாரம் பெற்று வக்ரத்தில் துலாமில் உலாவருகிறார். இந்த நேரத்தில் ராகு- கேதுவும் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரவுள்ளார்கள். கலைஞர்கள் ஏற்றம்பெறுவார்கள். அந்நியநாடு செல்ல திட்டமிட்டவர்கள் நினைத்தபடி சென்று பொருளீட்டுவார்கள். அரசுப்பதவியை எதிர்பார்த்திருப்பவர்கள் பதவியை அடைவார்கள். நிலுவை பாக்கிகளைப் பெறுவார்கள். தாய்- தந்தையர் வழியில் மருத்துவச் செலவுகள் கூடும். உங்கள் குடும்பத்துக்கு வேண்டாதவர்கள் உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள். வருமானம் திருப்தியாக இருக்கும்.

மாமன்வழி தொல்லைகள்

சனி பகவான் 1-8-2015 முதல் 6-9-2015 வரை நேர்கதியில் குரு சாரம் பெற்று துலா ராசியில் உலாவருகிறார். நிதானமான போக்குடன் செல்லவேண்டும். கறுப்பாக உள்ளவர்களால் குடும்பத்தில் கோளும், கலகமும் உண்டாகும். அவர்களிடம் எச்சரிக்கை தேவை. ஒருசிலருக்கு பிள்ளை பாக்கியம் கிட்டும். மாமன்வழி உறவுகள் வலிய சண்டைக்கு வருவார்கள். அவர்களிடமிருந்து விலகியிருக்கவேண்டும். மாமன்வழி உறவுப் பெண்களிடம்- அதாவது மாமன் மகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் சூதுசெய்து உங்களை மருமகனாக்கி விடுவார்கள். கட்டாயத் திருமணம் நடந்துவிட வாய்ப்புகள் அதிகம். ஒதுங்கி வாழ்ந்தால் மாமன்வழித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

வருவாய் குறைவான காலம்

6-9-2015 முதல் 18-10-2015 வரை சனி பகவான் குரு சாரம் பெற்று விருச்சிகத்தில் நேர்கதியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் அனைத்து காரியங்களையும் தாமதப்படுத்துங்கள். தூண்டில் போடும்போது காத்திருந்தவர்தான் மீனைப் பிடிப்பார். அதுபோல நீங்களும் பொறுமையுடன் அனைத்து காரியத்தையும் நிதானித்துச் செய்யுங்கள். நஷ்டத்தைத் தவிர்க்கலாம். பிள்ளைகளை கண்காணியுங்கள். தவறான பாதையைத் தவிர்க்கலாம். வருவாய் குறைவான இந்தக் காலகட்டத்தில் புதியதாய் எதையும் தொடங்காதீர்கள்; தாமதியுங்கள்.

வரும்முன் காக்கவேண்டும்

18-10-2015 முதல் 28-3-2016 வரை சனி பகவான் சனிசாரம் பெற்று விருச்சிகத்தில் உலாவருகிறார். இந்தக்காலகட்டத்தில் திருமண வயதில் மகன், மகளை உடையவர்கள் விழிப்போடு இருங்கள்.

அவர்களால் தலைக்குனிவு ஏற்படக்கூடும். சில பிள்ளைகள் உங்கள் செல்வாக்கை இழக்கச்செய்வார்கள். தகுதியில்லாதவர்களுடன் நட்பை கொண்டிருப்பார்கள். யாருக்கும் உத்தரவாதம் கொடுக்கக்கூடாது.

அப்படிக் கொடுத்தால் அதனை நீங்களே நிறைவேற்றவேண்டி வரும். புதிய நண்பர்கள் அறிமுகத்தைத் தவிர்க்கவேண்டும். வரவு- செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

வசந்தகாலம் வந்துவிட்டது

சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை விருச்சிக ராசியில் சனி சாரம் பெற்று வக்ரகதியில் உலாவருகிறார். இப்போது நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். அரசர் முதல் ஆண்டி வரை வருமானம் கூடும். நினைத்தபடி குடும்பத்தில் நிம்மதி பெருகும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்துக்கு மாறுதல் கிட்டும். புதிய வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்ற மனைவி நீங்கள் அழைக்காமலேயே வந்துசேர்வார். கடன் பாக்கிகள் வசூலாகும். பெண்கள் புன்னகையோடும், பொன் நகையோடும் நல்ல காரியங்களில் கலந்து உற்சாகம் அடைவார்கள். இந்தக் காலத்தில் சனி பகவான் உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தை அள்ளித்தருவார்.

அமைதியாக காலம்தள்ள வேண்டும்

சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை நேர்கதியில் சனி சாரத்தில் விருச்சிக ராசியில் இருப்பார். இந்தக் காலகட்டத்தில் அனைத்து நிலைகளிலும் தடை, தாமதங்கள் ஏற்படும். வழக்குகள் பைசல் ஆகாது. நிதானமாகச் செயல்படவேண்டும். பிள்ளைகள் சொல்வதை நம்பி பிறரிடம் சண்டை போடக்கூடாது. அரசு ஊழியர்கள் காவல்துறை நடவடிக்கை வராமல் கவனமாக இருங்கள். கையூட்டு பெறாதீர்கள். கம்பி எண்ணவேண்டி வரும். நிதானமாகச் செயல்படுபவர்களை சனி பகவான் பாதுகாப்பார்.

மன அழுத்தம்

சனி பகவான் 17-11-2016 முதல் 10-4-2017 வரை நேர்கதியில் புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் உலாவருகிறார். பொதுவாக மாற்று மதத்தவர், அந்நிய மொழியினர், கறுப்பு நிறமுள்ளவர்களிடம் நெருங்கிப் பழகாதீர்கள். அவர்களால் தொல்லைகள் உருவாகும்.

இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்குச் செல்லவேண்டி வரும். நிதானித்து அமைதிகாக்கவேண்டும்.

புதிய தொழில் தொடங்கக்கூடாது

10-4-2017 முதல் 6-8-2017 வரை சனி பகவான் வக்ரம்பெற்று, புதன் சாரத்தில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் நல்ல பலன்கள் குறைவு. எனவே புதிய தொழில்களைத் தொடங்காதீர்கள். இடமாற்றம் வந்தால் அரசுப்பணியாளர்கள் தயங்காமல் சென்றுவிடுங்கள். அதுவும் நன்மையைத் தரும். புதிய இடத்தில் பொருளாதாரமும் உயரும். வியாபாரிகள் புதிய வியாபாரத்தைத் தொடங்கக்கூடாது.

பொன்னும் பொருளும் சேரும் காலம்

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரை புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பிள்ளைகள் வழியில் இருந்துவந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். வழக்குகள் சுமுகமாகும்; தீர்ப்புகள் சாதகமாகும். அரசுப் பணியாளர்கள் வேண்டுவதை அதிகாரிகள் நன்மையாக செய்துதருவார்கள். வேலையிழந்த பணியாளர்கள் மீண்டும் வேலையில் அமர்வார்கள்.

பணியாளர்களுக்கு

அரசு வழியில் வரவேண்டிய சலுகைகள் வந்துசேரும். புதிய பொருட்களை வாங்க நினைத்த எண்ணம் ஈடேறும். வேண்டிய இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். பொறுமையைக் கடைப்பிடித்துச் சென்றால் சனி பகவான் உங்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்துவார்.

பெண்களுக்கு

பெண்களைப் பொறுத்தவரை இந்த சனிப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகம். திருமணமாகாத பெண்களுக்கு திருமணமாகும். ஒருசிலருக்கு குழந்தை பாக்கியமும் கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை கூடும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பார்கள். நாத்தனார் உள்ள வீட்டில் திருமணமாகியுள்ளவர்கள், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பட்டும்படாமல் பேசி காரியத்தை சாதிக்கவேண்டும்.

மாணவர்களுக்கு

கல்வியைப் பொருத்தவரை மந்தநிலை மாறி ஞானத்தோடு படிப் பீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஒரு சிலர் மாநில அளவில் முதலிடத்தைப் பிடிப்பார்கள். பெற்றோர்களை மதித்து நடக்கும் பிள்ளைகள் எல்லாரும் மதிக்கத்தக்க அளவில் வாழ்வார்கள். ஒருசில மாணவர்கள் கூடாத சேர்க்கையால் காவல்துறை நடவடிக்கைகளுக்கு ஆட்படுவார்கள். எனவே நல்லவர்களோடு உறவுகொள்ளவேண்டும். சனி பகவான் நன்மைகளைத் தருவார்.

வியாபாரிகளுக்கு

எண்ணெய் வித்துகள், எண்ணெய் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரத்தில் புதிய போட்டி வியாபாரிகள் தோன்றுவார்கள். நடைபாதை, சந்தைக்கடை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலாளர்களின் ஒற்றுமை ஏற்படும் காலம். அவர்களை அனுசரித்துச் சென்றால் லாபம் கூடும்.

விவசாயிகளுக்கு 

இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் குறுகிய கால வித்துகளைப் பயிரிட்டால் நல்ல விளைச்சலைக் காணலாம். எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு

கலைத்துறையில் உள்ளவர்கள் புதிய ஒப்பந்தங்கள் போட்டு வாய்ப்புகளைப் பெறுவார்கள். நல்ல வருமானமுண்டு. குடும்பத்தில் சிலர் பிரச்சினைகளை சந்திப்பார்கள். அரசாங்க கண்காணிப்பு உங்கள்மீது அதிகம் இருக்கும். கெடுபிடிகளுக்கு ஆளாவீர்கள்.

எனவே எதிலும் கவனம் தேவை.

அரசியல் பிரமுகர்களுக்கு

அரசியலில் ஒருசிலர் உயர்பதவிகளைப் பிடிப்பார்கள். ஓயாது உழைக்க நேரும். சமூகத்தில் நீங்கள் செய்துவந்த நற்காரியங்களுக்கு தக்க அந்தஸ்தைப் பெறுவீர்கள். எதிரியாகச் செயல்பட்டவர்களும் நண்பராவார்கள்.

பரிகாரம்

சிம்ம ராசிக்காரர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அருகிலுள்ள சனீஸ்வரரை தரிசித்து வர, நன்மையுண்டு.

நாட்டுக் கருவேலமர இலை மற்றும் பூக்களை எப்போதும் உடன் வைத்திருங்கள். சனி பகவான் அருள்கிட்டும்.

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கையில் அமைந்துள்ள சனீஸ்வரரை ஒருமுறையாவது சென்று தரிசித்து அர்த்தாஷ்டமச் சனியிலிருந்து பாதுகாக்கும் சனீஸ்வரரின் அருளைப் பெற்றுவாருங்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்.

 

—————————————————————————————————————-

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

அன்பார்ந்த கன்னி ராசி நேயர்களே!

16-12-2014 முதல் 18-12-2017 வரை விருச்சிக ராசியிலிருக்கும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ல் வருகிறார். ஏழரைச் சனியின் தாக்கம் இனி உங்களுக்கில்லை. இந்த பெயர்ச்சிக்காலம் முழுவதும் நீங்கள் நல்ல பலன்களையே அடையப்போகிறீர்கள். அவரவர் வயதுக்கேற்ப வேலைவாய்ப்பு, திருமணம், தூரதேசப் பயணம், பிரிந்தவர்கள் ஒன்றுசேர்தல், வழக்குகளில் வெற்றி, மருத்துவச் செலவுகள் குறைதல், தாய்- தந்தையர் உடல்நலன் சீராகுதல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். எடுத்த காரியங்களில் வெற்றிகிட்டும். பொருளாதார மந்த நிலையும் மாறும்.

உங்கள் ராசிக்கு 5-ஆம் இடமான குலதெய்வம், பிள்ளைகள் போன்றவற்றை நிர்ணயிப்பவர் குரு பகவான். அவரை சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து 3-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். ஒருசிலர் குழந்தை பாக்கியமே  கிட்டாதென்ற முடிவுக்கு வந்திருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை வழங்கிச் செல்வார். ஆண் வாரிசில்லையே என்று ஏங்கியவர்கள் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் ஆண் வாரிசை அடைவார்கள். பிள்ளைகளின் உயர்கல்வி கைகூடும். அதேபோல திருமணமாகாமலிருக்கும் உங்கள் பிள்ளைகளுக்குத் திருமணமாகும். நல்ல வரனாகவும் அமையும். ஒருசிலரின் பிள்ளைகள் ஐ.ஏ.எஸ். போன்ற தேர்வுகளில் வெற்றிபெற்று பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

சனி பகவான் விருச்சிக ராசியில் அமர்ந்து 7-ஆம் பார்வையாக உங்கள் பிதாபாக்கிய ஸ்தானத்தை (சுக்கிரன் வீட்டை) பார்க்கிறார். இதுவரை தகப்பனார், பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரிவினை, பிரச்சினைகள் நீங்கி, சொத்துகள் வந்துசேரும். 70 வயதைக் கடந்த பெற்றோர்கள் இருப்பார்களேயானால், அவர்களுக்கு மருத்துவச் செலவுகள் வரும். மற்றபடி ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

உங்கள் ராசிக்கு 12-ஆம் இடம் சிம்மம். இந்த வீட்டை சனி பகவான் 10-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். இதனால் உங்களுக்கு நிலையான பொருள் வந்து சேரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் ஈடேறும். வீட்டை பழுதுபார்க்க போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் புதிய வீடுகட்டி புதுமனை புகுவார்கள். முடிந்தவரை யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அதனால் வம்பு வழக்குகள் வரும். ஒருசிலர் கோவிலை எடுத்துக்கட்ட வேண்டுமென்று நீண்டகால திட்டம் வைத்திருப்பார்கள். அவர்களது எண்ணம் இந்த சனிப்பெயர்ச்சியில் ஈடேறும்.

இனி 16-12-2014 முதல் 18-12-2017 வரை சனி பகவான் விருச்சிக ராசியில் உலாவரும்போது, உங்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படிப்பட்ட பலன்களைத் தருவாரென்று காண்போம். அந்தக் காலகட்டத்தில் நீங்கள் உங்களை அதற்கேற்றவாறு தயார்படுத்தி கடமைகளைச் செய்யுங்கள். தீயவர்கள், கொடியவர்களை மட்டுமே சனி பகவான் தண்டிப்பார். நல்லவர்களை மேலும் உயர்த்தி அழகு பார்ப்பார்.

தொட்டதெல்லாம் பொன்னாகும்

சனி பகவான் 16-12-2014 முதல் 24-1-2015 வரை குரு சாரத்தில் விருச்சிகத்தில் அமர்ந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் அனைத்து தரப்பினரும் செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். எந்த காரியமாக இருந்தாலும் அது நல்ல பலனைத் தரும். மனைவி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வேலையிழந்த அரசுப்பணியாளர்கள் மீண்டும் வேலையைப் பெறுவார்கள்.

வழக்குகளில் வெற்றி- பேராசை கூடாது

24-1-2015 முதல் 17-3-2015 வரை சனி பகவான் சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருகிறார். பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகும். பங்காளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பிரிந்துவாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். ரத்த சம்பந்தப்பட்ட நோயால் அவதிப்பட்டவர்களின் மருத்துவச்செலவு குறையும். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். இதற்கு முன்னர் நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்திருந்தால், அந்தத் தொகையை வசூலித்துவிடுவீர்கள். சனி பகவான் அனைத்து நிலைகளிலும் சாதகமான பலன்களை தருகிறாரே என்று, ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்பவர்கள், பேராசையால் பணத்தை இழப்பார்கள்; எச்சரிக்கை தேவை.

சொத்துகளை வாங்க நல்ல நேரம்

சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரமான நிலையில் குரு சாரத்தில் விருச்சிக ராசியில் உள்ளார். இந்தக் காலகட்டத்தில் ஒருசிலர் தங்கள் பங்காளிகள் வகையில் உயில் சொத்துகளை அடைவார்கள். ஒருசிலர் வயல்வெளியில் புதையல் எடுப்பார்கள். இதுவரை புதிய வீடு கட்டவில்லையே என்று நொந்துபோய் இருப்பவர்களில் பெரும்பாலோனோர், புதிய வீட்டைக் கட்டுவார்கள். பிள்ளைகளுக்கு திருமணத் தடை நீங்கி, நல்ல வரன்கள் வந்துசேரும். அயல்நாடு சென்று பணமீட்டும் பிள்ளைகள் நல்ல லாபத்தை அடைவார்கள். தொழில் உயரும். மனைவி, மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

பிரச்சினைகள் நிறைந்த காலம்

சனி பகவான் 13-6-2015 முதல் 1-8-2015 வரை குரு சாரத்தில் வக்ரகதியில் துலா ராசியில் உலாவருகிறார். வீண் ஆடம்பரத்தால் செலவுகள் இரட்டிப்பாகும். பணியாளர்கள் வேலையை நன்கு கவனித்துச் செய்யவேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் இயந்திரங்களை இயக்குவதில் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். சிறுவிபத்துகளை சந்திக்க நேரும். பிள்ளைகளை திருமணம் செய்துகொடுத்த இடத்தில் பிரச்சினைகள் என்று தகவல் வரும். பொறுமை காத்து இருந்தால் பிரச்சினைகள் தானாகவே ஓடிவிடும். அரசு ஊழியர்கள் திடீர் இடமாற்றத்தைச் சந்திப்பீர்கள். ஒருசிலர் அதிக ஆசைகொண்டு கையூட்டு பெற்று காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாவார்கள். எனவே நிதானத்துடன் செயல்படவேண்டும்.

வாழ்வில் வசந்தகாலம்

சனி பகவான் 1-8-2015 முதல் 6-9-2015 வரை குரு சாரத்தில் துலாமில் உலாவருகிறார். இந்தக் காலம் உங்களுக்கு பொற்காலம். வழக்குகள் சாதகமாகும். தூரதேசப் பயணம் ஏற்படும். நல்ல தகவல்கள் வந்துசேரும். மகான்கள் தரிசனம் கிட்டும். பெற்றோர் வழியில் உள்ள சொத்துகள் வந்துசேரும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்திற்கு மாறுதலை அடைவார்கள். திருமணத் தடை நீங்கி வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதோர் பிள்ளை பாக்கியத்தைப் பெறுவார்கள். புதிய வீடு கட்ட வாய்ப்புண்டு. வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். நல்ல லாபம் கிட்டும். இந்தக் காலம் வசந்த காலம். அள்ளிப்பருகுங்கள் வசந்தத்தை.

அந்நிய நாட்டில் தொழில்

சனி பகவான் 6-9-2015 முதல் 18-10-2015 வரை குரு சாரத்தில் விருச்சிக ராசியில் நேர்கதியில் உலாவருகிறார். யோசிக்காமல் செய்த காரியத்தில்கூட நல்ல பலன்களை அடைவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். ஒருசிலரது குடும்பத்தில் பிள்ளைகள் வெளிநாடு செல்வதில் இருந்துவந்த தடை நீங்கும். பிள்ளைகள் வெளிநாடு சென்று லாபகரமாக வாழ்வார்கள். ஏற்கெனவே வெளிநாட்டில் வாழ்ந்துவருபவர்களின் தொழில் விருத்தியாகும். விரும்பிய இடத்துக்கு மாறுதலும் உண்டு. புதிய கம்பெனிகள் உங்களை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும். வெளிநாட்டுப் பணம் பெற்றோருக்கு வந்துசேரும். வீடு, தோட்டம், மாடு, கன்றுகள் பாக்கிய விருத்தியோடு வாழ்வீர்கள். இது ஒரு பொற்காலம்.

எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம்

சனி பகவான் 18-10-2015 முதல் 28-3-2016 வரை நேர்கதியில் விருச்சிக ராசியில் சனி சாரத்தில் அமர்ந்துள்ளார். இந்தக் காலங்களில் நீங்கள் புதிதாக எந்த காரியத்தையும் செய்யக்கூடாது. தொழிலை விருத்திசெய்ய போட்ட திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட் தொழில் செய்பவர்கள் குறைந்த முதலீட்டைச் செய்யுங்கள். இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் அடித்துச்சென்றது என்ற கதையாகிவிடும். இதுவரை நீங்கள் குருவி சேர்த்ததுபோல சேர்த்து வைத்ததை இழந்துவிடாதீர்கள். சனி பகவான் அடுத்து எப்போது கொடுப்பார் என்று அவரை வணங்கிக் காத்திருங்கள். எதிலும் எச்சரிக்கையாக இருந்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.

உறவுகள் சேரும் காலம்

சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை விருச்சிக ராசியில் சனி சாரத்தில் வக்ரம் பெற்று அமர்ந்துள்ளார். சகோதரர்கள் மத்தியில் நிலவிவந்த பிணக்குகள் நீங்கும் பாகப்பிரிவினை சுமுகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் வகையில் இருந்தவந்த மந்தகதி மாறும். தாய்- தந்தையர் வழியில் இருந்த மருத்துவச் செலவுகள் குறையும். ஷேர் மார்க்கெட் தொழில் செய்பவர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரிகள் புதிய கிளைகளை ஆரம்பிப்பார்கள். போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.

லாபகரமான காலம்

சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் நேர்கதியில் அமர்ந்துள்ளார். பொன், பொருள், நகைகள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்து தரப்பு மக்களும் செய்யும் தொழிலில் மேன்மையடைவார்கள். சுபகாரியம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். வெளிநாட்டில் தொழில் தொடங்க எண்ணிய தொழிலதிபர்களின் எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். வேலைதேடும் இளைஞர்கள் ஐ.ஏ.எஸ். போன்ற உயர்பதவிகளை அடைவார்கள்.

பணத்தை உணரும் காலம்

சனி பகவான் 17-11-2016 முதல் 10-4-2017 வரை நேர்கதியில் புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் அமர்ந்திருப்பார். இந்தக் காலத்தில் கையிருப்பு வெகுவேகமாகக் கரைந்துபோகும். வேண்டாத செயல்களில் ஈடுபட்டு பொருளை இழப்பீர்கள். வீண்செலவு, வம்பு தும்புகள் வந்துசேரும் காலம். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை குறையும் காலம். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். வெளிவட்டாரத் தொடர்புகளில் பொறுமையாகப் பேசவேண்டும். இல்லையெனில் வீண் சண்டைகளைக் கொண்டுவரும். யார் சொல்வதையும் கேட்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்து காலம் கழிக்கவேண்டும். யோசிக்காமல் செய்த தவறினால் பணப் பற்றாக்குறை ஏற்படும்.

சேமிப்பைக் காக்கலாம்!

சனி பகவான் 10-4-2017 முதல் 6-8-2017 வரை விருச்சிக ராசியில் புதன் சாரத்தில் வக்ரம்பெற்று உலாவருகிறார். இந்த நேரத்தில் கருமை நிறமுள்ளவர்கள் ஆசைவார்த்தை கூறி வேறுதொழிலில் பணத்தை முடக்கச் சொல்வார்கள். நீங்கள் எச்சரிக்கையாக இருந்து சேமிப்பை பாதுகாக்க வேண்டும். ஒருசிலர் உங்கள் குடும்ப உறுப்பினர்களை வெளிநாட்டு வேலைக்கு அழைத்துச்செல்வதாகக் கூறி, உங்கள் சேமிப்பைக் கரைப்பதோடு ஏமாற்றியும் விடுவார்கள். இதனால் கடன் தொல்லை வந்துசேரும். எச்சரிக்கையாகச் செயல்படுங்கள். கணவன்- மனைவியிடையே கருத்துவேறுபாடுகள் வரப்பார்க்கும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நிதானித்துச் செயல்படவேண்டும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரை புதன்சாரம் பெற்று, விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். வேலைதேடும் பிள்ளைகள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். எதிர்பார்த்த வரன் வந்துசேரும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர் எண்ணம்போல் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள்.

அரசு ஊழியர்களின் நிலுவைகள் வந்துசேரும். பதவி உயர்வு, விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிட்டும். தூரதேசப்பயணம் அனுகூலமாகும். ஷேர்மார்க்கெட் செய்வோர் நல்ல லாபம் பெறுவார்கள். மருத்துவச் செலவுகள் குறையும். மாமன், மைத்துனர் உறவில் இருந்துவந்த விரிசல் மாறும்.

பணியாளர்களுக்கு 

அரசு ஊழியர்கள் இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் அதிகமான வேலைப்பளுவை சந்திக்கமாட்டார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். திருமணமாகாத பணியாளர்களுக்கு நினைத்தபடி திருமணம் நடக்கும். பழைய நிலுவைகள் வசூலாகும். விட்டுப்போன பதவி மீண்டும் வந்துசேரும். ஒருசில பொறுப்பான பதவிக்கு மாற்றமாவார்கள்.

பெண்களுக்கு

பெண்கள் எதிர்பார்த்த அனைத்து காரியங்களையும் சனி பகவான் நடத்தித்தருவார். கணவரின் உடல்நிலை சீராகி, தீர்க்கசுமங்கலியாக உலாவருவீர்கள். தாய்வீட்டு சீதன சொத்துகள் கிடைக்கும். பிரிந்த தம்பதியர் கூடுவர். குழந்தை பாக்கியமும் கிட்டும். கல்விகற்ற பெண்கள் நல்ல தொழிலைப் பெறுவார்கள். திருமணத்தடை நீங்கி நல்ல வரனாக அமையும். ஒருசிலருக்கு தொல்லை கொடுத்துவந்த கணவரும் திருந்துவார். குடும்ப நிலையிலும் நல்ல சீர்திருத்தம் வரும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் கவனமாகப் படிக்கவேண்டும். நல்லபடியாக படித்தால் மட்டும் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். ஏனோதானோவென்று படிப்பவர்கள் தோல்வியைத் தழுவும் நிலையுள்ளது.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் புதிய கிளைகளைத் தொடங்குவார்கள். போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கோவில், திருத்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். சாலையோர வியாபாரிகள் புதிய இடம் கிடைத்து வியாபாரத்தை மேம்படுத்துவார்கள். சந்தை வியாபாரிகள் நல்ல வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.

தொழிலதிபர்களுக்கு

புதிய தொழில்களை தொடங்கும் எண்ணத்தை சற்று தள்ளிவைக்க வேண்டும். தொழிலாளர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும்.

விவசாயிகளுக்கு

விவசாயத்துறையில் ஈடுபடுபவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். வீட்டில் சேமித்துவைத்த தானியங்கள் நல்ல விலைக்குப் போகும். பிள்ளைகளால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்கள்.

கலைஞர்களுக்கு

மக்களுக்கு நல்ல படத்தைக் கொடுப்பீர்கள். எதிர்பார்த்தபடி சக கலைஞர்களின் ஒத்துழைப்புண்டு. புதிய படங்களில் புதியவர்கள் வாய்ப்பு பெற்று அறிமுகமாகி, பிரபலமாவார்கள். இந்த சனிப்பெயர்ச்சி கலைஞர்களுக்கு ஒரு பொற்காலம்.

அரசியல் பிரமுகர்களுக்கு

ஒருசில அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்புகளை மீறி பதவிகளைப் பெறுவார்கள். தலைமையால் பாராட்டப்படுவார்கள். பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய வாகனம், வீடு வாங்குவீர்கள். ஒருசில அரசியல் பிரமுகர்கள் பெண்கள் தொடர்பான விஷயத்தில் வழக்கை சந்திப்பார்கள்.

பரிகாரம்

தினசரி காலை எழுந்தவுடன் காக்கைக்கு சாதம் வைத்து வர (பழைய சாதம் போதுமானது) சனி பகவான் அருளைப் பெறுவீர்கள்.இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்.

——————————————————————————————————————–

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

அன்பார்ந்த துலா ராசி நேயர்களே!

இதற்கு முன்னர் சனி பகவான் உங்கள் ராசியில் இரண்டரை ஆண்டுகள் ஜென்மச் சனியாகத் தங்கியிருந்தார். அந்தக் காலத்தில் பொருள் விரயம், எதிர்பார்த்த இனங்கள் கிடைக்காமை, விபரீத ராஜவைத்தியங்கள், விபத்து போன்றவற்றைக் கொடுத்திருப்பார். ஒருசிலர் புத்திரர்கள் சம்பந்தமாகவோ, வீடு கட்டியது சம்பந்தமாகவோ கடன் பெற்று அதைக் கட்டமுடியாமல் நிலுவையாகவே இருந்திருக்கும். ஒருசில அதிகாரிகள் பதவி ஓய்வு நேரத்தில் பல பிரச்சினைகளை சந்தித்திருப்பார்கள். அந்த பிரச்சினைகளும் முடிவுக்கு வராமல் இருந்திருக்கும். இப்படியாக பல பிரச்சினைகளை சந்தித்த துலா ராசி அன்பர்களுக்கு, தற்போது சனி 16-12-2014 முதல் 18-12-2017 வரை விருச்சிக ராசியில் அமர்ந்து பார்க்கும் இடங்களால் ஏற்படும் லாப நஷ்டங்களைக் காண்போம்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ஆம் இடமான வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு 4-ஆம் வீடான சனி வீட்டை 3-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். இந்த மோட்சப் பார்வையால் கடந்தகால சங்கடங்கள் மாறும். வீடு, மனை விருத்தியாகும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாகும். தடைப்பட்டுக் கிடந்த வீடுகட்டும் பணி நிறைவேறும். வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வந்துசேரும். பணியில் ஏற்பட்ட பிரச்சினைகளும் மளமளவென குறைந்து, பணியாளர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தாயார் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ஆம் இடமான சுக்கிரன் வீட்டை 7-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். மனைவிக்கு சிறு வைத்தியங்கள் செய்ய நேரும். பொதுவாக கணவன்- மனைவியிடையே ஏற்படும் பிரச்சினைகளைப் பெரிதாக்காதீர்கள். ஆயுளில் எந்த பங்கமும் வராது. புதிதாக வாகனம் வாங்க நினைத்ததை சற்று தள்ளிப்போட வேண்டும். நல்ல ஓட்டுநர்களை வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் வேகத்தைக் குறைத்து விவேகமாகச் செயல்பட்டால், வரவுள்ள சிறு விபத்துகளைத் தவிர்க்கலாம்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமான சூரியன் வீட்டை 10-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். உடன்பிறந்தோரின் உறவுகள் சுமுகமாக இருக்காது. பூர்வீக சொத்துப்பிரச்சினையில் வம்பு வழக்குகளைக் கொண்டுவரும். மூத்த சகோதர- சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். வரவுகள் அனைத்தும் குடும்பச் செலவுக்கே செல்கிறது. அதிகம் உழைப்பீர்கள்; ஆனால் குறைந்த லாபமே பெறுவீர்கள். சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் புதிய கடன் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம். திருமணமாகி கணவன் வீட்டிலுள்ள துலா ராசிப் பெண்கள், கணவன் மனம்கோணாது நடக்கவேண்டும். நாத்தனார் கொடுமை ஏற்படக்கூடும். நாத்தனார்தானே என்று மனம் திறந்து எதையும் சொல்லிவிடாதீர்கள். அவர்கள் உங்களை வம்பில் மாட்டிவிடுவார்கள்.  சனி பகவானை நினைத்து செய்யும் காரியங்களில் தடைவராது.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்ந்து வக்ரகாலத்திலும், வக்ர நிவர்த்தி காலத்திலும் எந்த மாதிரியான பலன்களை வழங்குவார் என்பதனை இனி காண்போம். அதற்கேற்றவாறு உங்கள் செய்கைகளை மாற்றி அமைத்துக்கொண்டு காரியங்களில் வெற்றிபெற வேண்டும். சனி பகவான் நல்லவர்களை சோதிப்பாரே தவிர தண்டிக்கமாட்டார். வளமான வாழ்வுக்கு வழிகாட்டுவார். தீயவர்கள், கொடியவர்கள் மட்டுமே சனி பகவானால் தண்டிக்கப்படுவார்கள்.

ரியல் எஸ்டேட் தொழிலில் எச்சரிக்கை தேவை

சனி பகவான் 16-12-2014 முதல் 24-1-2015 வரை குரு சாரத்தில் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார். பூமி சம்பந்தமான வகையில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ரியல் எஸ்டேட் செய்வோர் புதிதாக வாங்குமிடத்தில் புதிய வில்லங்கங்கள் வர வாய்ப்புள்ளது. மேலும் தனக்கென சொந்த வீடு அமைத்துக்கொள்ள நினைப்பவர்களும் இடத்தைப் பற்றி நன்கு விசாரித்து வாங்குங்கள். உடன்பிறந்தவர்கள் உங்களை ஏமாற்றும் கிரக நிலை உள்ளது. அரசுப் பணியாளர்கள் திடீர் இடமாற்றங்களைச் சந்திப்பார்கள். மாறுதலை மாற்ற முயற்சிக்காதவர்கள் பிரச்சினைகளை சந்திக்கமாட்டார்கள். எனவே வந்த மாறுதலை ஏற்றுக்கொள்ளுங்கள். சுபகாரிய நிகழ்ச்சிகளைத் தள்ளி வைக்கவேண்டும்.

பொருளாதார சிரமங்கள் கூடும்

சனி பகவான் 24-1-2015 முதல் 17-3-2015 வரை சனி சாரத்தில், விருச்சிக ராசியில் உள்ளார். உஷ்ணமான பேச்சுகளால் கணவன்- மனைவியிடையே கருத்துவேற்றுமை வரும். பேச்சில் நிதானம் தேவை. வர்த்தகத்தில் மந்தநிலை  காணப்படும். செலவுக்கேற்ற வருமானம் இருக்காது. சிக்கனமாக வாழ்ந்து பொருளாதார நஷ்டங்களைத் தவிர்க்கவேண்டும்.

எதிர்பார்த்தவை தாமதமாகும்

சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரகதியில் குரு சாரம் பெற்று விருச்சிக ராசியில் இருப்பார். இது பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படும் காலம். ரியல் எஸ்டேட், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களைத் தவிர்க்கவேண்டும். எதிர்பார்த்த இனங்கள் அனுகூலமாக இருக்காது. குடும்பத்தில் உடல்ரீதியாக மருத்துவச் செலவுகள் வரும். இந்த நிலை எல்லாருக்கும் வராது. பாவ புண்ணியங்களைப் பொறுத்தே வரும் பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் கூடும். சனி பகவான் நல்ல எண்ணம் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்காத நேரத்தில் பொருளாதார வரவுகளைக் கூட்டுவார். புதிய கடன்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வருமானம் வரும் காலம்

சனி பகவான் 13-6-2015 முதல் 1-8-2015 முடிய வக்ரகதியில் குரு சாரம் பெற்று துலா ராசியில் இருப்பார். இந்த நேரத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்திலுள்ள படித்த இளைஞர்கள், பெண்கள் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் கூடிவரும். தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், பணியாளர்கள், அரசுத் துறைப் பணியாளர்கள் அனைவரும் போதிய அளவு வருமானத்தைப் பெறுவார்கள். கஷ்ட சூழ்நிலை மாறும்.

சனி பகவான் கடைக்கண் பார்வை

சனி பகவான் 1-8-2015 முதல் 6-9-2015 வரை குரு சாரம் பெற்று துலா ராசியில் நேர்கதியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிர்பார்த்தபடி நல்லவருமானத்தைத் தருவார். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். குழந்தையில்லாத தம்பதியருக்கு வாரிசுகள் உருவாகும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். நிலையான பொருள் வந்துசேரும். ஒருசிலர் வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு இருந்துவந்த பொருளாதார மந்தநிலை மாறி கைநிறைய பணம் வந்துசேரும். கல்வியில் மந்தமாக இருந்துவந்த பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

வசந்த காலம்

சனி பகவான் 6-9-2015 முதல் 18-10-2015 வரை குரு சாரம் பெற்று விருச்சிக ராசியில் நேர்கதியில் உலாவருகிறார். இதுவரை நீங்கள் அனுபவித்த சோதனைகள் மாறி, வருமானம் இருமடங்காக உயரும். எல்லா தரப்பு மக்களும் நல்ல வருவாயைப் பெறுவார்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பொன்னும், பொருளும் வந்துசேரும். அடகுபோன நகைகளை மீட்பீர்கள். கட்டியவீடு பாதியிலேயே நின்ற நிலையில் மாற்றம் வந்து, கட்டிமுடிப்பீர்கள். தொழிலதிபர்கள் எதிர்பார்த்த கடன் தொகைகள் வந்துசேரும். காணாமல்போன பொருட்கள் கிடைக்கும். தாய்- தந்தையர் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். இது உங்களுக்கு வசந்தகாலமாக இருக்கும்.

உறவுகளால் தொல்லை

சனி பகவான் 18-10-2015 முதல் 28-3-2016 வரை சனி சாரத்தில் விருச்சிக ராசியில் நேர்கதியில் உலாவருகிறார். இந்த நேரத்தில் வருமானத்திற்குக் குறைவுமில்லை. ஆனால் அக்கம்பக்கம் உள்ளவர்களால் குடும்பத்தில் குழப்பம் வரும். ஆண்கள், பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதவி செய்யப்போய் உபத்திரவத்தை அடையநேரும். பிள்ளைகளைக் கண்காணிக்கவேண்டும். அவர்கள் கறுப்பாக உள்ளவர்களால் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுவார்கள். அந்நிய நாடுகளில் பணிபுரிவோர் கூடுதலாக சம்பளம் பெறுவர். குறுக்குவழியைக் கடைப்பிடிப்பவர்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள். உற்றார்- உறவினர் எதிர்பாராமல் வருகைதந்து கடன்கேட்டு நச்சரிப்பார்கள்.

வரவுகள் திருப்தி தரும்

சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை சனி சாரத்தில் விருச்சிக ராசியில் வக்ரம்பெற்று அமர்ந்திருப்பார். இந்தக் காலம் முழுவதும், யோசிக்காமல் செய்த காரியங்களிலும்கூட லாபத்தைப் பெறுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். அடிக்கடி வெளியிடங்களுக்குச் சென்றுவருவீர்கள். தொழிற்சாலை அதிபர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். கஷ்ட நஷ்டங்கள் மாறும். எல்லா தரப்பு மக்களுக்கும் கூடுதல் வருவாயை சனி பகவான் வழங்குவார். வீட்டில் வேலையில்லாமலிருந்த இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். மகான்கள் சந்திப்பும், கடிதத் தொடர்பில் நல்ல தகவல்களும் வந்துசேரும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.

பிள்ளைகளால் பெருமை

சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை சனி சாரத்தில் விருச்சிக ராசியில் நேர்கதியில் உலாவருகிறார். பிள்ளைகளின் உயர்கல்வியில் இருந்த தடை நீங்கும். உயர்கல்வி முடிந்த பிள்ளைகள் உடனடியாக வேலையில் சேர்வார்கள். பிரிந்த உறவுகள் வந்துசேரும். திருமணமாகாதவர்கள் நல்ல வரன்களை அடைவார்கள். மணமக்கள் அன்யோன்யமாக வாழ்வார்கள். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்வுக்கு வரும். வழக்குகள் சாதகமாக பைசலாகும். சுபச்செலவுகள் கூடும். ஒருசிலருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்ற நிலைமாறி, மருந்து வகையிலேயே குணமாகும். பிள்ளைகளால் பெருமைசேரும் காலம்.

தடையில்லா வருமானம்

சனி பகவான் 17-11-2016 முதல் 10-4-2017 வரை புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் உலாவருகிறார். அயல்நாட்டில் உள்ளவர்களின் தொழில்வளம் பெருகும். அவர்கள் பணம் உங்கள் தேவைகளை நிறைவுசெய்யும். வேலைதேடும் இளைஞர்களுக்கு, வெளிநாடுஅல்லது வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி கடன்களை அடைப்பீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சந்தை விற்பனையாளர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். அலங்காரப் பொருட்கள் விற்பனை படுஜோராக இருக்கும். லாபங்கள் கூடும். அரசு ஊழியர்களின் வருமானம் கூடும். வேலையிழந்த சிலர் மீண்டும் வேலைக்குச் செல்வார்கள்.

எதிர்பாராத லாபங்கள்

சனி பகவான் 10-4-2017 முதல் 6-8-2017 வரை புதன் சாரத்தில் வக்ரம் பெற்று, விருச்சிக ராசியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இந்தக் காலகட்டம் முழுவதும் லாபங்கள் பெருகும். வேலை தேடும் இளைஞர்கள் ஐ.ஏ.எஸ். போன்ற உயர் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மறைமுக எதிரிகளின் தொல்லை ஒழியும். ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வெளிமாநிலத்தவர் உங்களை அணுகி இடங்களை வாங்குவார்கள். காதலர்கள் எண்ணம் கைகூடும். குடும்பத்தில் இருந்துவந்த பணப்பற்
றாக்குறை நீங்கும். பகுதிநேர வேலை செய்தவர்களில் ஒருசிலரது வேலை நிரந்தரமாகும். வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும்.

எங்கும் எதிலும் வெற்றி

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரை புதன் சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருகிறார். குடும்பப் பிரச்சினை தீர்ந்து தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். காலம்காலமாய் இருந்துவந்த உறவினர்கள் பகை விலகும். சொத்துப் பிரச்சினைகள் சுமுக நிலைக்கு வரும்வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் புதிய வீடுகட்ட ஆயத்தமாவார்கள். வழக்குகள் சாதகமாகும். தொல்லைகொடுத்த பிள்ளைகள் நல்லவர்களாக மாறுவார்கள். எல்லாதரப்பு மக்களும் நல்ல வருவாயைப் பெறுவார்கள். எங்கும் எதிலும் வெற்றியைக் காண்பார்கள்.

18-12-2017-க்குப் பிறகு உங்கள் அனைவருக்கும் பொற்காலம்.

பணியாளர்களுக்கு

எல்லா தரப்பு பணியாளர்களும் நேர்மையுடன் செயல்படவேண்டும். அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். மாறுதல் வந்தால் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்றுவிடவேண்டும். மாற்றலை ரத்துசெய்பவர்கள் அதிகாரிகளின் வைராக்கியத்துக்கு ஆளாவார்கள். பொருளாதாரத் தட்டுப்பாடுகள் அதிகம் வராது. அதிக வேலைப்பளு இருக்குமே தவிர அலைக்கழிப்புகள் இருக்காது. பதவி உயர்வு காலம்தாழ்த்தி வரும். சக பணியாளர்களால் உபத்திரவத்தை சந்திப்பீர்கள். எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்.

பெண்களுக்கு

உற்றார்- உறவினர்களால் போற்றப்படுவீர்கள். சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறப்படைவீர்கள். நல்ல பிள்ளைகளைப் பெறுவீர்கள். அந்தக் குழந்தைகள் அரசாங்கத்தில் விருதுகளைப் பெறவுள்ள நல்ல பிள்ளைகளாக இருப்பார்கள். காலம்காலமாய் இருந்துவந்தஉறவினர்கள் சண்டை தீரும். பொன், பொருள், நகைகள் சேர்ப்பீர்கள். காலத்திற்கேற்ற சிக்கனம் உங்களை சண்டையில்லாமல் வாழவைக்கும். பெண் குழந்தைகள் கல்வியில் உயர்ந்துவருவார்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். “தான்’ என்ற அகங்காரம் உங்கள் மதிப்பெண்ணைக் குறைத்துவிடும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். கேம்பஸ் செலக்ஷன் மூலம் பதவிகளை அடைவீர்கள். மாணவர்கள் காதல் வசப்பட்டால் சனி பகவான்  கல்வியைக் கெடுத்துவிடுவார். காதல் கூடாது.

வியாபாரிகளுக்கு

கூடுதல் கொள்முதல் செய்வதைத் தவிர்க்கவேண்டும். வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு சில பொருட்கள் விற்பனைக்கு வரும். முன்பைவிட கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். வியாபாரம் நன்றாக நடக்கும்.

தொழிலதிபர்களுக்கு

தொழிற்சாலைகளில் பழுதுகள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்காக உங்கள்கீழ் பணிபுரியும் பணியாளர்களை நிந்திக்காதீர்கள். முடிந்தவரை உதிரி பாகங்களை உடனுக்குடன் மாற்றியமைப்பது நல்லது. மற்றபடி தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலாளர்கள் ஒற்றுமை கூடும்.

விவசாயிகளுக்கு

நல்ல மழை பொழிய வாய்ப்புள்ளது. எனவே விவசாயப் பெருமக்கள் கால்நடைத் தீவனங்களை சேமித்து வைக்கவேண்டும். ஆடு- குறிப்பாக வெள்ளாடு வளர்ப்போர் கூடுதல் லாபம் பெறுவார்கள். எனவே ஆடு வளர்ப்பதிலும் உங்கள் கவனத்தை செலுத்தவேண்டும். நல்ல விவசாயம் உண்டு.

கலைத்துறையினருக்கு 

நீங்கள் நினைத்தபடி புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பொருளாதாரம் கூடும். சிலருக்கு பெண்களால் கெட்டபெயர் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். திருமணமானவர்கள் மனைவி, மக்களிடம் நேசமாக இருப்பது நல்லது.

அரசியல் பிரமுகர்களுக்கு

அரசியல்வாதிகள் இருக்கும் பதவியைத் தக்கவைக்க வேண்டும். புதிய பதவிகள் 2013 ஆரம்பத்தில் வந்துசேரும். புறம்பேசுபவர்களுக்கு சிரமம் உண்டு. வெளிப்படையாகப் பேசாதீர்கள்.

பரிகாரம்

ஆரம்பத்தில் குச்சனூர் சென்று சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். பின்பு சிவகங்கை சென்று சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். சனிப்பெயர்ச்சி முடியும் தறுவாயில் திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு வாருங்கள். சனி பகவான் நல்ல பலன்களைத் தருவார்.

நாட்டுக் கருவேலமர இலைகள் மற்றும் பூவை எடுத்து பையில் வைத்து வணங்கிவாருங்கள். சனி பகவான் அருள் கிட்டும்; சங்கடங்கள் குறையும்.

இந்த சனிப்பெயர்ச்சியில் துலா ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்.

——————————————————————————————————————–

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

அன்பார்ந்த விருச்சிக ராசி நேயர்களே!

16-12-2014-ல் சனி பகவான் உங்கள் விருச்சிக ராசியில் ஜென்மச் சனியாக அமர்கிறார். அங்கிருந்து 3-ஆம் பார்வையாக தன் சொந்தவீடான மகரத்தைப் பார்ப்பதால், இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசியினர் கெடுபலன்களை அடையமாட்டார்கள்.

மூன்றாவது சுற்று சனி வருகிறவர்கள் இது மாரகச் சனி என்று பயம்கொள்ள வேண்டாம். ஏனெனில் சனி 3-ஆம் பார்வையாக மகரத்தைப் பார்ப்பது உத்தமம்.

16-12-2014 முதல் 18-12-2017 வரை உங்களுக்கு ஜென்மச் சனி நடக்கிறது. இந்தக் காலகட்டங்களில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அமைதிகாக்க வேண்டும். நிதானித்துச் செயல்படவேண்டும்.

அதேநேரத்தில் புதிய ஆடை, ஆபரணம், சொத்து சேர்க்கைக்கு எந்தவித குறையும் வராது. வெளித்தொடர்புகளில் புதிதாக அறிமுகமாகிறவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களை நம்பி புதிய முதலீடு எதையும் செய்யக்கூடாது. ஷேர் மார்க்கெட் உங்களுக்கு சாதகமாக இல்லை. மற்ற தொழில்புரிவோர், பணியாளர்களும் தொழிலில் கவனமாக இருக்கவேண்டும். ரியல் எஸ்டேட் தொழில்புரிபவர்கள் சனிப்பெயர்ச்சியின் ஓராண்டுக்குப்பின் லாபங்களைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே பொறுமையுடன் பேசவேண்டும். குதர்க்கமான பேச்சுகளைத் தவிர்க்கவேண்டும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். சொத்துப் பிரச்சினைகள் வரும். அதனால் நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழலும்வரும். மனைவி, மக்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள். குலதெய்வ ஆலயம் சென்று வணங்கிவரவேண்டும். அரசுப்பணிகளில் இருப்போர் வேண்டாத இடமாற்றத்தைச் சந்திப்பீர்கள். அதனால் லாபம் உண்டே தவிர, உங்களுக்குப் பிரச்சினைகள் வராது. கல்லூரி மாணவர்கள் அடக்கத்தோடு இருக்கவேண்டும். மற்றவர்களுக்குப் பரிந்துபேசினால் வழக்குகளை சந்திக்க நேரும்.

இனி சனி பகவானின் 3, 7, 10-ஆம் பார்வைப் பலனைக் காண்போம்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ஆம் இடமான- தன் சொந்தவீடான மகரத்தைப் பார்க்கிறார். அவர் விருச்சிக வீட்டிலமர்ந்து பார்ப்பதால், உங்கள் உடன்பிறந்த இளையவர்கள், (ஆண்- பெண் இருபாலரும்) உங்களோடு நேசமாக இருப்பார்கள். அவர்களுக்கு சுபகாரியங்கள் நடைபெறும். திருமணமான இளைய சகோதர- சகோதரிகள் குழந்தை பாக்கியத்தையும் அடைவார்கள். நீங்கள் செய்யும் உதவிகளுக்கு அவர்களிடம் எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது. துலா ராசிக்காரரை மகளாகப் பெற்று, அடுத்து ஆண் குழந்தை வேண்டுமென்று எதிர்பார்த்திருந்தால், சனி பகவான் அருளால் ஆண் வாரிசு கிட்டும். இளையவர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருந்தால் அவர்களின் உடல்பிணிகள் உங்கள் ராசிப்படி சரியாகும். இளையவர்களால் மூத்தவர்கள் செலவினங்களை ஏற்கும் காலம்.

சனி பகவான் உங்கள் ராசிக்கும் 7-ஆம் இடமான குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கிறார். 7-ஆம் வீடு சுக்கிரன் வீடான ரிஷபம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வரும். எனவே கணவன்- மனைவி நிதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டும். கணவருக்கு சேரவேண்டிய சொத்துகளையோ மனைவிக்கு சேரவேண்டிய சொத்துகளையோ இந்த சனிப்பெயர்ச்சிக் காலம் முழுவதும் கேட்கக்கூடாது. அவர்களாகக் கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம்.

சனி பகவான் உங்கள் ராசியின் தொழில் ஸ்தானமான சிம்ம வீட்டைப் பார்க்கிறார். இந்த நேரம் தொழில் பாதிப்புகள் உருவாகலாம். அரசுப் பணியிலிருப்பவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளைச் செய்து அதிகாரிகளின் தொல்லைக்கு ஆளாக நேரிடும். வருகின்ற மாறுதலை ஏற்றுச் செல்லவேண்டும். வேலைப்பளு அதிகமாகும். ராணுவம், காவல்துறை போன்ற பணிகளிலிருக்கும் ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். தொலைதூர மாறுதல்களை சந்திப்பீர்கள். மாறுதலை எதிர்த்துச் செயல்படுகிறவர்கள் அதிகாரிகளின் வைராக்கியத்துக்கு ஆளாகி பாதிப்பு நேரலாம். 65 வயதுக்கு மேலுள்ள தாய்- தந்தையரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். என்றாலும் சனி பகவான் கருணை காட்டுவார். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் சற்று தாமதப்படுத்தி தொடங்கிடவேண்டும். தொழிலாளர்களால் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டில் வாழும் தொழிலாளர்கள் நிர்வாக கெடுபிடிக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சனி பகவான் எப்போதும் பழி, பாவம் செய்யாதவர்களை சோதிப்பார். ஆனால் முடிவில் வெற்றியைத் தருவார். பழி, பாவம் செய்பவர்களை மட்டும் தண்டிப்பார்.

இனி சனி பகவான் 16-12-2015 முதல் 18-12-2017 வரை உங்கள் ராசியில் உலாவரும்போது வக்ரம், வக்ரநிவர்த்தி காலங்களில் எப்படிப்பட்ட பலன்களைத் தருவார் என்று காண்போம். அதற்கேற்றவாறு உங்கள் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டு, நல்ல பலன்களை அடையவேண்டும்.

குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

சனி பகவான் 16-12-2014 முதல் 24-1-2015 வரை நேர்கதியில் குரு சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் கணவன்- மனைவியிடையே ஈகோ காரணமாக சண்டைகள் வரும். யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்துச் சென்றால் குடும்பத்தில் குழப்பம் வராது. குழப்பமென்பது மனைவிவழி உறவுகளால் வரும். தன் கணவரின் நிலை நன்கு உயரவேண்டுமென்றால், மனைவி தன் பிறந்தவீட்டில் அளவோடு பேசி வரவேண்டும். மற்றபடி பொருள் வரவில் மந்தம் இருக்காது. சிக்கனமாக வாழ்ந்து இந்தக் காலகட்டத்தில் சிறப்படையலாம். ஏற்கெனவே பிரிந்துவாழும் தம்பதியர் மீண்டும் ஒன்றுசேர்வதற்கான பேச்சு வார்த்தைகளைத் தள்ளிப்போட வேண்டும்.

நல்ல செலவுகள் ஏற்படும்

சனி பகவான் 24-1-2015 முதல் 17-3-2015 வரை சனி சாரம் பெற்று நேர்கதியில் விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கும். என்றாலும் உழைப்புக்கேற்ற லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களுக்கு திருமணப் பேச்சுகள் கைகூடும். புதிய கடன்கள் எதுவும் வராது. கையிருப்பு மட்டும் செலவாகும். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் சிலர் திடீரென லாபத்தை அடைவார்கள்.

எதிர்பாராத லாபங்கள்

சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரகதியில் குரு சாரத்தில் விருச்சிகத்தில் உலாவருவார். மனைவிவழி சொத்துகள் கிட்டும். பங்காளிகளுக்குள் இருந்த சொத்துப் பிரச்சினை நல்ல தீர்வுக்கு வரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் விற்காத இடத்தையும் விற்றுவிடுவார்கள். வேலை தேடும் இளைஞர்கள் சிலருக்கு தேர்வில் வெற்றிகிடைத்து ஐ.ஏ.எஸ். போன்ற உயர் பதவிகளை அடைவார்கள். அரசு ஊழியர் மற்றும் பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாறுதலை அடைவார்கள். மேலதிகாரிகளின் அனுசரணை கிட்டும். ஒருசிலர் வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். நீங்கள் எதையும் எதிர்பார்க்காத நிலையிலும், எதிர்பாராத லாபங்களைப் பெறுவீர்கள்.

எதிலும் நிதானித்துச் செல்லவேண்டும்

சனி பகவான் 13-6-2015 முதல் 1-8-2015 வரை குரு சாரம் பெற்று வக்ர கதியில் துலா ராசியில் அமர்ந்திருப்பார். இந்தக் காலகட்டத்தில் மனதில் ஒருவிதமான படபடப்பை ஏற்படுத்துவார். குடும்பத்தில் சண்டை- சச்சரவுகள் வரும். வேலைபார்க்கும் அலுவலகத்திலும் சக பணியாளர்களிடமும் நிதானித்துப் பேசவேண்டும். மாணவர்கள் கல்வியில் ஏற்படும் மந்தத்தைப் போக்க கவனமுடன் படிக்கவேண்டும். மருத்துவச் செலவுகள் கூடும். உணவில் கட்டுப்பாடு தேவை.

மறைமுக எதிரிகளால் தொல்லை

சனி பகவான் 1-8-2015 முதல் 6-9-2015 வரை நேர்கதியில் குரு சாரத்தில் துலா ராசியில் உலாவருகிறார். மாற்று மதத்தினர், பிறமொழி பேசுபவர்களால் மறைமுகத்  தொல்லைகள் உருவாகும். கறுப்பான நிறமுள்ளவர்களைக் கண்டால் விலகிச்சென்றுவிடுங்கள். அவர்கள் வலியவந்து பேசி, வம்புச் சண்டையை இழுத்துவிடுவார்கள். கைப்பொருட்களை மிகவும் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும். நீண்டநாட்கள் வெளியூர்ப்பயணம் செல்வதைத் தவிர்த்தால் களவுபோவதைத் தவிர்க்கலாம். அப்படி வெளியூர் செல்பவர்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக மற்றவர்கள் பாதுகாப்பில் விட்டுச்செல்லுங்கள். ஷேர் மார்க்கெட்  போன்ற துறைகளில் பெரும் முதலீடுகள் செய்யக்கூடாது. இருக்கும் லாபமும் அதில் நஷ்டமாகிவிடும். நிதானமாக காலத்தைக் கடத்தவேண்டும்.

அரசுப்பணியிலிருப்பவர்கள் நிதானமுடன் செயல்படவேண்டும்.

மற்றவர்கள் பேச்சை நம்பக்கூடாது

சனி பகவான் 6-9-2015 முதல் 18-10-2015 வரை குரு சாரத்தில் விருச்சிக ராசியில் நேர்கதியில் உலாவருகிறார். இந்த நேரத்தில் மற்றவர்கள் உங்களுக்கு உதவுவதாக வாக்குக் கொடுப்பார்கள்.

அதனை நம்பி தொழில் செய்யச் சென்றுவிடாதீர்கள். தாமதித்துச் செய்தால் சனி பகவான் தொழிலை உயர்த்தித் தருவார். உங்களுடன் பணிபுரிபவர்களுக்காக நீங்கள் பரிந்துபேசக்கூடாது. அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

எல்லா வகையிலும் குழப்பம்

சனி பகவான் 18-10-2015 முதல் 28-3-2016 வரை நேர்கதியில் விருச்சிகத்தில் சனி சாரம் பெற்று உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் எல்லா வகையிலும் குழப்பத்தை ஏற்படுத்துவார். எதையும் கண்டு அஞ்சாமல் சனி பகவானை நினைத்து வணங்கிச் செல்லுங்கள். சொத்துப் பிரச்சினை தொடர்பாக எந்த புதிய முயற்சியும் செய்யக்கூடாது. அரசு ஊழியர்கள் வேலைபார்க்கும் இடங்களில் கூடுதல் வேலைப்பளுவைச் சந்திப்பார்கள். தேவை அதிகம் என்பதற்காக ஒருசிலர் கையூட்டு பெற்று, காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். துன்பங்களை சனி பகவானிடம் சொல்லி வேண்டுங்கள். விரைவில் உங்களுக்கு கஷ்ட ஜீவனத்திலிருந்து மாற்றத்தைத் தரவுள்ளார். பிள்ளைகளின் உயர்கல்விக்காக புதிய கடன்களை வாங்க நேரிடும். உடல்நிலையில் அதிக பாதிப்புகளைக் கொடுக்காது. நண்பர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். ஆபத்துக்கு உதவாத நண்பர்களைவிட்டு விலகிச்செல்வீர்கள். குடும்பத்தில் பெண்களின் வழிபாட்டால் கணவருக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

வசந்தகாலம் தரும் சனி பகவான்

சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் வக்ரகதியில் வருகிறார். இப்போது உங்கள் வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளைக் கொண்டுவருவார். பிள்ளைகளின் தடைப்பட்ட கல்வி உயரும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். அரசு ஊழியர்களில் வேலையிழந்தவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். அரசாங்க நன்மைகளையும் அடைவார்கள். உயர்கல்வியில் உள்ள மாணவர்கள் தேர்ச்சிபெற்று உடனடி வேலைவாய்ப்பையும் பெறுவார்கள். ஜீவனப் பாதையில் புதிய வருமானம் வந்துசேரும். குழப்பம் குறையும்.

வருமானம் கூடும்

சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை நேர்கதியில் சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருவார். தொழில், வியாபாரம் முடக்கம் நீங்கி வருமானம் கூடும். பழைய கடன்கள் பைசலாகும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வந்துசேரும். வெளிநாடு செல்ல காத்திருந்தவர்கள் விசா வரப்பெற்று வெளிநாடு சென்றுவிடுவார்கள். விவசாயிகள் தானிய உற்பத்தியில் லாபத்தைப் பெறுவார்கள். திருமணப் பேச்சுகள் கைகூடிவரும். எதிலும் நிதானமாக செலவுசெய்து பழைய பாக்கி கடன்களை அடைப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றவர்கள் இப்போது தொழிலை விரிவுசெய்யலாம். குடும்ப சூழ்நிலை மாறும்.

சனி பகவான் எல்லா நன்மைகளும் அருள்வார்

சனி பகவான் 17-11-2016 முதல் 10-4-2017 வரை நேர்கதியில் புதன் சாரம் பெற்று விருச்சிகத்தில் உலாவருகிறார். இதுவரை இருந்துவந்த பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிநாட்டுத் தொடர்புகளால் பண வருவாயை அடைவீர்கள். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். சொத்துப் பிரிவினையில் ஏற்பட்ட தடை நீங்கும். சொத்துகள் நல்ல விலைக்குச் செல்லும். மருத்துவச் செலவுகள் குறைந்து, சனி பகவான் அருளைப் பெறுவீர்கள்.

புதிய செயல்களைத் தடைசெய்ய வேண்டும்

சனி பகவான் 10-4-2017 முதல் 6-8-2017 வரை வக்ரம் பெற்று புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார். சனி பகவானின் அருளால் வருமான உயர்வுண்டு. ஆனால் அவற்றை முதலீடு செய்வதைத் தள்ளிப்போட வேண்டும். வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வோர் அதனை நிறுத்திவைக்க வேண்டும்.

சனி பகவானின் கருணைப் பார்வை கிட்டும்

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரை நேர்கதியில் புதன் சாரம் பெற்று விருச்சிகத்தில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு வரவேண்டிய பணம் அனைத்தும் வரும். மனைவி, மக்களால் நன்மைகளை அடைவீர்கள். பணியாளர்கள் நல்ல வருவாயைப் பெறுவார்கள். சனி பகவானின் கருணைப் பார்வையால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையத் துவங்கிவிடும்.

இனி பொதுவாக விருச்சிக ராசியிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் எப்படிப்பட்ட பலன்களை அடைவார்கள் என்பதை அறிவோம்.

பணியாளர்களுக்கு

தங்களது பணிகளில் கவனம் செலுத்தவேண்டும். சக பணியாளர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். முக்கிய கோப்புகளை வைத்திருப்போர் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும். ஒருசிலர் தங்கள் செயல்களால் பணிநீக்கத்தை அடைவார்கள். முடிவில் வெற்றியாகி பணியில் சேர்வார்கள்.

பெண்களுக்கு

16-12-2014 முதல் 18-12-2017 வரை குடும்பத்தில் அமைதிகாத்து வந்தால் சலிப்பில்லாத வாழ்க்கை வாழ்வீர்கள். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகளை முடிப்பீர்கள். வாரம்தோறும் சனி பகவானை தரிசிக்கும் பெண்களின் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

மாணவர்களுக்கு

ஆரம்பத்தில் மாணவர்கள் கல்வியில் மந்தமாக இருந்தாலும் தேர்வு காலங்களில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் புதிய விரிவாக்கம் செய்யக்கூடாது. வியாபாரத்தில் மந்தநிலை மாறிவிடும். லாபத்திற்குக் குறைவிருக்காது. சந்தை வியாபாரிகள் எப்போதும்போல நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சக வியாபாரிகளிடம் சமாதானமாகச் செல்லவேண்டும்.

தொழிலதிபர்களுக்கு

நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள். தொழிலதிபர்கள் இந்த சனிப்பெயர்ச்சியில் நினைத்தபடி தொழில் தொடங்கி அதிக லாபம் பெறுவார்கள்.

விவசாயிகளுக்கு

இந்த சனிப்பெயர்ச்சியில் நீங்கள் அதிகமான மகசூலைப் பெறவுள்ளீர்கள். பணப்பயிர்கள் அதிக பலன் கொடுக்கும். மேலும் மாடு, கன்று, பால் பாக்கிய விருதிதயும் உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் சாதகமாக உள்ளது.

கலைத்துறையினருக்கு

கலைத்துறையினர் நினைத்தபடி வாய்ப்புகள் வந்துசேரும். சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். ஒருசிலர் வெளிநாடு சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள். இப்பொழுது உங்கள் காலம் வசந்தகாலம். கிடைக்கும் பொருளாதாரத்தை நிலமாக மாற்றுங்கள்.

அரசியல் பிரமுகர்களுக்கு

இதுவரை நீங்கள் மக்கள் சேவையில் செய்துவந்த நல்ல பலன்கள் அனைத்தும் தலைமைக்குத் தெரியவரும். தலைமையால் பாராட்டப்படுவீர்கள். புதிய பதவிகள் வரக் காத்திருக்கின்றன. மக்கள் சேவையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள்.

பரிகாரங்கள்

சனிப்பெயர்ச்சி துவக்கத்தில் தேனி மாவட்டம் குச்சனூரில் அமைந்துள்ள சனீஸ்வரரை தரிசித்து வரவேண்டும்.

இடையில் சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் அமைந்துள்ள சனீஸ்வரரை தரிசித்து வரவேண்டும்.

பின்பு காரைக்கால் அருகே அமைந்துள்ள திருநள்ளாறு சென்று தரிசித்து வரவேண்டும்.

16-12-2014 முதல் 18-12-2017 வரை நாட்டுக் கருவேலமர இலை மற்றும் பூவை ஒரு பையில் கட்டிவைத்து, தினசரி உள்ளங்கையில் வைத்து, உங்கள் கஷ்டங்களைச் சொல்லி சனி பகவானிடம் வேண்டுங்கள். சனி பகவான் அருள் பரிபூரணமாகக் கிட்டும்.

இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்.

——————————————————————————————————————–
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

அன்பார்ந்த தனுசு ராசி நேர்யகளே!

16-12-2014 முதல் 18-12-2014 வரை விரயச் சனியாக தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் எப்படிப்பட்ட பலன்களை வழங்குவார் என்பதைக் காண்போம். இந்த சனிப்பெயர்ச்சியால் பெரிய பாதிப்பு எதனையும் சனி கொடுத்துவிடமாட்டார். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும்போது சூடான வார்த்தைகளைப் பேசக்கூடாது. நிதானித்துச் செல்பவர்களுக்கு பாதிப்பு வராது. பிள்ளைகளில் ஒருசிலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். கொள்ளைலாபம் காண தவறான வழியில் செல்லும் வியாபாரிகள் சனி பகவானால் தண்டிக்கப்படுவார்கள். அரசுப் பணியாளர்களைப் பொறுத்தவரை கடுமையான வேலைப்பளுவை சந்திப்பார்கள். ஆனால் பணியில் இடர்ப்பாடுகள் வராது. அதிகாரிகள் எண்ணம்போல எப்போதும் நடந்தவர்களென்பதால் எப்போதும் பணிவாகவே இருப்பார்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அன்பர்கள், இடம் வாங்கும்போதும், விற்கும்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வில்லங்க சொத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. சனி பகவான் உங்கள் கண்களை மறைத்துவிடுவார். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டத்தை தொழிலதிபர்கள் தள்ளிவைக்க வேண்டும். தொழிலாளர்கள் கிடைக்காமல் நெருக்கடியைச் சந்திப்பீர்கள். இந்த ராசியில் உள்ளவர்கள் உயரதிகாரிகளாக இருந்தால், சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவேண்டும்.

அவர்களால் தொல்லைவராது.

சனி பகவான் விருச்சிக ராசியில் அமர்ந்து உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தை 3-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். எனவே நீங்கள் பொருளாதாரத்தை மிகவும் கவனமாகக் கையாளவேண்டும். இருப்பதைக்கொண்டு சிறப்பாக வாழப் பழகவேண்டும். முன்புபோல வருமானம் திருப்திகரமாக  இருக்காது. இந்த விவரத்தை குடும்பத்தாரிடம் சொல்லி, வந்த வருமானத்துக்குள் செயல்படச் சொல்லுங்கள். போதுமென்ற மனதோடு வாழ்ந்தால், புதிய கடனை அடையமாட்டீர்கள்.

சனி பகவான் விருச்சிக ராசியிலமர்ந்து, உங்கள் ராசிக்கு 6-ஆம் ராசியான ரிஷபத்தை ஏழாம் பார்வையாகப் பார்க்கிறார். மனைவி, மனைவி வழி உறவுகளால் ஆதரவு அல்லது மகிழ்ச்சி இருக்காது. மனைவிவழி உறவில் மைத்துனர்களால் புதிய கடன்படவேண்டி வரும். ஒருசிலரது பெற்றோருக்கு வைத்தியச் செலவுகள் கூடும். வியாபாரிகள், வியாபாரத்தில் மிகவும் கவனமாக செயல்படவேண்டும். ஒருசிலருக்கு வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் கூடும். கடன் வாங்கி வாகனம் வாங்காதீர்கள். வாகனத்தால் செலவுகள் அதிகமாகும்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் வீடான பிதாபாக்கிய ஸ்தானத்தை 10-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். இந்தக் காலகட்டத்தில் வேலையில் சுணக்கம் ஏற்படும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் ஏற்படும். தந்தை- மகனுக்குள் சுமுக உறவுகள் பாதிக்கப்படும். தந்தைவழி உறவுகளால் லாபம் ஏற்படாது. ஆனால் வெளிநாட்டில் வாழ்பவர்கள் நல்ல தொழில் பெருக்கத்தையும், பொருள் வரவையும் பெறுவார்கள்.

இனி சனி பகவான் வக்ரம், வக்ரநிவர்த்தி காலங்களில் எந்தவிதமான பலன்களை வழங்குவார் என்று காண்போம்.

அமைதியாக காலம்தள்ள வேண்டும்

சனி பகவான் 16-12-2014 முதல் 24-1-2015 வரை நேர்கதியில் குரு சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் உடன்பிறந்தவர்களால் சொத்துப்பிரச்சினை வரும். புதிய வாகனம் வாங்க திட்டமிட்டதைத் தள்ளிவைக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் சக பணியாளர்களையும் அனுசரித்துச் செல்லவேண்டும். அவர்களால் பணிமாற்றம், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்துகள் விற்பனையில் தாமதம் ஏற்படும்.

உறவுகளில் பகை

சனி பகவான் 24-1-2015 முதல் 17-3-2015 வரை சனி சாரம் பெற்று நேர்கதியில் விருச்சிக ராசியில் உலாவருகிறார். இதுவரை வெளியாட்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். ஓரளவு வருமானம் உண்டு. அரசுப் பணியாளர்கள் திடீர் இடமாற்றத்தை சந்திப்பார்கள். அதனால் நல்ல பலனையும் அடைவார்கள். யாரை நம்பி நீங்கள் காரியங்களைச் செய்தீர்களோ, அந்த நெருங்கிய
உறவுகளே உங்களுக்குப் பகையாக மாறுவார்கள்.

சனி பகவான் கருணை

சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரகதியில் குரு சாரத்தில் விருச்சிகத்தில் உலாவருவார். பாலைவனத்துக்குள் சென்றவர் நீருற்றைக் கண்டதுபோல, இதுவரை கஷ்டஜீவனம் நடத்திவந்தவர்களுக்கு தாராளமான பணப்புழக்கம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவுகள் அனைத்தையும் பெறுவீர்கள். சனி பகவான் கருணைப் பார்வையால் வரவுகளைப் பெற்று கஷ்ட நிவர்த்தியை அடைவீர்கள்.

புதிய வேலைவாய்ப்புகள் கிட்டும்

சனி பகவான் 13-6-2015 முதல் 1-8-2015 வரை குரு சாரம் பெற்று வக்ரகதியில் துலா ராசியில் அமர்ந்திருப்பார். வேலைதேடி அலைந்த பிள்ளைகள் நல்ல பதவியை அடைவார்கள். ஒருசிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வார்கள். சுபகாரியப் பேச்சுகள் தடையின்றி நடக்கும். இதுவரை ஏற்பட்ட கடன் பிரச்சினை, உடல்நலக் குறைவுகள் போன்றவற்றிலிருந்து சற்று விடுதலையாவீர்கள்.

குரு சாரம் ஒரு பொற்காலம்

சனி பகவான் 1-8-2015 முதல் 6-9-2015 வரை நேர்கதியில் குரு சாரத்தில் துலா ராசியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் ஒருசிலருக்கு மறைமுக வருமானம் கூடும். அந்நிய நாட்டிலுள்ள பிள்ளைகளிடமிருந்து பணம் வந்துசேரும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் நீங்கள் நல்ல தொழில், லாபம் பெறுவீர்கள். மருந்துப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளவர்கள், லாகிரி வஸ்துகளைத் தயாரிப்பவர்கள்- விற்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். பலகாலமாக கைக்கு வராதென்று நினைத்துவந்த பழைய கடன்கள் வசூலாகி, வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இது உங்களுக்கு பொற்காலம்.

பலன்கள் தாமதம்

சனி பகவான் 6-9-2015 முதல் 18-10-2015 வரை குரு சாரத்தில் விருச்சிக ராசியில் நேர்கதியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் தாமதமாகவே நடக்கும். நீங்கள் வெளியூர் செல்ல பேருந்துக்குக் காத்திருந்தாலும் பேருந்து தாமதமாகவே வரும். உற்றார்- உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருக்கமாட்டார்கள். ஒருசிலர் வேலைக்காக வெளிநாடு, வெளியூர் செல்வார்கள். திருமணப் பேச்சுகளைத் தாமதப்படுத்தினால், பின்னாளில் நல்ல வரன்கள் வரும்.

பெற்றோருக்கு வைத்தியச் செலவு

சனி பகவான் 18-10-2015 முதல் 28-3-2016 வரை நேர்கதியில் விருச்சிகத்தில் சனி சாரம் பெற்று உலாவருகிறார். வயதான பெற்றோரை உடையவர்கள் மருத்துவச் செலவுகளை சந்திப்பார்கள். 70 வயதுக்கு மேலுள்ள வயதான சில தாய்- தந்தையருக்கு மருத்துவச் செலவில் பயனிருக்காது. குழந்தைகளின் கல்விச்செலவு கூடுதலாகும். காலம்காலமாய் சுற்றித்திரிந்த நண்பர்கள் விலகிச்செல்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமையில் விரிசல் ஏற்படும் காலம். வீட்டுக்கொடுத்துப் போகவேண்டும். அரசுப் பணியாளர்கள் திடீர் பணிமாற்றத்தைச் சந்திப்பார்கள். அதனால் நல்ல பலன்களே ஏற்படும்.

சனி பகவான் வழங்கும் வசந்தகாலம் சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் வக்ரகதியில் வருகிறார். இந்தக் காலகட்டத்தில் பொருளாதாரம் சீராக இருக்கும். ஏற்கெனவே வராமலிருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும் தீர்ப்பீர்கள். இதுவரை வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியம் நல்லபடியாக நடக்கும். நல்ல வரன்களாக அமையும். வேலைதேடும் இளைஞர்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலையில் சேர்வார்கள். ஒருசிலர் மத்திய அரசின் உயர்பதவிகளுக்குத் தேர்வுபெறுவார்கள். இதுவரை தடைப்பட்டுவந்த வீட்டு வேலைகள் தடையின்றி நடக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தையும் அடைவார்கள்.

பிள்ளைகளின் கல்வி உயரும்

சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை நேர்கதியில் சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலா வருவார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். மனைவிவழி உறவுகளில் திருப்தியான பணவரவுகளைப் பெறலாம். ஒருசிலர் பணிமாற்றத்தைச் சந்திப்பார்கள். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பிள்ளைகள் உயர்கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதற்கும் மேல்படிப்புக்காக புதிய கடன்களைப் பெற்றாவது படிக்கச் செல்வார்கள்.  குடும்பத்திலுள்ள அனைவரும் நிதானமான போக்கை கடைப்பிடிப்பார்கள்.

வெளிநாட்டு வியாபாரம் மந்தம்

சனி பகவான் 17-11-2016 முதல் 10-4-2017 வரை நேர்கதியில் புதன் சாரம் பெற்று விருச்சிகத்தில் உலா வருகிறார்.

இந்தக் காலகட்டங்களில் அந்நிய நாட்டில் முதலீடு செய்து தொழிற்சாலைகள் தொடங்கக்கூடாது. சற்று தள்ளிப்போட வேண்டும். வெளிநாட்டுப் பொருட்களை வாங்கிவிற்பவர்கள் நஷ்டத்தை சந்திப்பார்கள். எனவே வியாபாரத்தை நிறுத்திவைக்கலாம். அதனால் புதிய கடன், நஷ்டங்களைக் தவிர்த்திடலாம்.

துன்பங்கள் குறையும்

சனி பகவான் 10-4-2017 முதல் 6-8-2017 வரை வக்ரம்பெற்று புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார். சற்றும் எதிர்பாராத வகையில் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நடக்கும். வேலைதேடும் இளைஞர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும். பிரிந்த தம்பதியர் ஒருசிலர் ஒன்றுசேர்வார்கள். அந்நிய மதத்தினர், அந்நிய மொழியினரால் அனைத்து தரப்பு மக்களும் நல்ல பலன்களையடைவார்கள். ஒருசிலர் பணம் கட்டாமலேயே இலவசமாக வாய்ப்பு பெற்று வெளிநாடு செல்வார்கள். இதுவரை தொல்லைதந்த கஷ்டங்கள் குறையத் தொடங்கும்.

குடும்பச் சீர்திருத்தம்

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரை நேர்கதியில் புதன் சாரம் பெற்று விருச்சிகத்தில் உலாவருகிறார். இந்தத் தருணம் எல்லா தரப்பு மக்களுக்கும் பொற்காலம். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காலம் காலமாய் இருந்துவந்த சொத்துப்பிரச்சினைகள் மாறும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு  நல்ல குழந்தை பாக்கியம் கிட்டும். இதுவரை இருந்துவந்த வழக்குகள் சாதகமாக அமையும். ஒருசிலர் காதல் திருமணம் செய்வார்கள். பெற்றோர் சம்மதமும் கிடைக்கும். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தபடி மாறுதல் பெற்று நல்ல இடத்தில் வேலைக்குச் சேர்வார்கள். கடன் தொந்தரவுகள் மறையும். வியாபாரிகள் புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். பெற்றோர் வழியில் இருந்துவந்த கூடுதல் செலவுகள் குறையும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை வெளிநாட்டிலும் விரிவுபடுத்துவார்கள். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த ஓயாத மருத்துவச் செலவு குறையும். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கி முழுவதும் கேட்காமலேயே வசூலாகும்.

இனி சனி பகவான் எல்லா தரப்பு மக்களுக்கும் எந்த வகையான நன்மைகளைச் செய்வார் என்பதைக் காண்போம்.

பணியாளர்களுக்கு

வேலையில் உங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடியும் படிப்படியாகக் குறையும். பதவி உயர்வு, இடமாறுதலில் சாதகமான நிலை இருக்கும். வேலைப்பளு மட்டும் அதிகமாக இருக்கும். வேலைநிமித்தம் வெளியூர் செல்லும்போது கைப்பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு

பெண்கள் மிகவும் நிதானமாகச் செயல்பட வேண்டும். மற்றவர்களைப் பற்றி கருத்து சொல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எதிர்பார்த்தபடி பிள்ளைகளின் திருமணம் முடியும். கணவன்- மனைவி உறவில் விரிசலெதுவும் இல்லை. உங்கள் உடன்பிறந்தவர்களிடம் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அவர்களுக்கு நீங்கள் செய்யும் பண உதவியால் உங்களுக்கு துன்பம் வரும். திருமண வயதுப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். மனதில் எப்போதும் ஒரு படபடப்பு உங்களுக்குக் காணப்படும். ஆனால் வியாதியில்லை.

மாணவர்களுக்கு

கல்வியிலுள்ள மந்தநிலை மாற நீங்கள் விழிப்புடன் படித்து வரவேண்டும். முழுக்கவனத்தையும் செலுத்தி மேற்படிப்புக்குத் தயாராக வேண்டும். பெற்றோர்கள், பெரியவர்கள் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து செல்லும் மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் எப்போதும் விழிப்புடன் செயல்படவேண்டும். நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு நல்ல லாபம் கிட்டும். ஏற்கெனவே உள்ள கொள்முதல் சரக்குகளை கூடுதல் விலைக்கு விற்பதோடு நல்ல லாபத்தையும் பெறலாம். புதிய நண்பர்கள் பேச்சைக் கேட்டு தொழிலை விரிவாக்கம் செய்யக்கூடாது. பழைய வாடிக்கையாளர்கள் உங்களைவிட்டுச் சென்றுவிடாமல் பேச்சில் இனிமையைக் கூட்டவேண்டிய காலம் இந்த சனிப்பெயர்ச்சிக்காலம்.

தொழிலதிபர்களுக்கு

தொழிலதிபர்கள் புதிய தொழில் விரிவாக்கத்தை தள்ளிப்போட வேண்டும். தொழிலாளர்கள் ஒற்றுமை குறையலாம். தொழிலாளர்களை அரவணைத்துச் செல்லவேண்டும். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி-

இறக்குமதி தொழில் செய்துவருபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் உடனுள்ள பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். ஷேர் மார்க்கெட்டில் பணத்தைப் போட்டால் இழப்பீர்கள். எனவே சனிப்பெயர்ச்சி காலம் முழுவதும் ஷேர் மார்க்கெட்டை தள்ளிவையுங்கள்.

விவசாயிகளுக்கு 

நல்ல மகசூலைக் காணவுள்ளீர்கள். சிறு வித்து, பெரு வித்து என போடுகின்ற அனைத்திலும் நல்ல மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டு முழுவதும் நல்ல மழைப்பொழிவுண்டு. உங்கள் பகுதிகளிலுள்ள ஆலயங்களில் நீங்கள் செய்கின்ற உழவாரப் பணிகளால் நல்ல மழை வரும்.

கலைத்துறையினருக்கு

இந்த சனிப்பெயர்ச்சிக் காலம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. அதிகமான படங்கள் கிடைக்கவில்லையென்றாலும் குறைவான வருவாயில் நிறைவாக வாழ்வீர்கள். சேமிப்பைத் தொடவிடாமல் வருமானம் பார்த்துக்கொள்ளும்.

அரசியல் பிரமுகர்களுக்கு

இந்த சனிப்பெயர்ச்சிக் காலத்தில் நீங்கள் மக்கள் சேவையில் மகத்தான பணிகளைச் செய்வீர்கள். புதிய பதவி தானாகவே வந்துசேரும். தேவைக்கு அதிகமான பொருள் வரவுகளைப் பெறுவீர்கள். மக்கள் மத்தியில் உங்களின் பொதுசேவைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

அன்பார்ந்த தனுசு ராசி அன்பர்களே, மேற்கண்டவாறு உங்களுக்கு சனி பகவான் நன்மை- தீமைகளை வழங்கவுள்ளார். சனி பகவான் எப்போதுமே நல்லவர்களைத் தண்டிக்கமாட்டார். சமூக விரோதிகள், போக்கிரிகள், தீயவர்களை மட்டுமே தண்டிப்பார். சனிப்பெயர்ச்சிக் காலத்தில் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்துவாருங்கள்.

பரிகாரம்

தினசரி காலை எழுந்தவுடன் காக்கைக்கு சாதம் வைத்து வர சனி பகவானின் தாக்கம் குறையும். (பழைய சாதம் வைக்கலாம். தாய்- தந்தை உள்ளவர்கள் எள் கலந்து சாதம் வைக்கக்கூடாது. மற்றவர்கள் தேவைப்பட்டால் எள் கலந்து வைக்கலாம்).

சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள ஆலயத்தில், நவகிரக சந்நிதியிலுள்ள சனிபகவானுக்கு எள் தீபமேற்றி வர நன்மையுண்டு.

வசதிக்கேற்ப திருநள்ளாறு அல்லது குச்சனூர் அல்லது சிவகங்கையில் அமைந்துள்ள சனீஸ்வரரை தரிசித்துவாருங்கள்.

நாட்டுக் கருவேல மரத்தில் இலைகள் மற்றும் பூவை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து, அதை எப்போதும் உடன் வைத்திருந்து வணங்குங்கள். சனி பகவான் இடர்ப்பாடுகளை நீக்கி நல்ல பலன்களைத் தருவார்.

இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்.

——————————————————————————————————————–

மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

அன்பார்ந்த மகர ராசி நேயர்களே!

சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் விருச்சிக ராசியில் 16-12-2014 முதல் 18-12-2017 வரை அமர்ந்திருப்பார். இந்தக் காலகட்டத்தில் எப்படிப்பட்ட பலன்களை உங்களுக்கு வழங்குவார் என்பதைப் பார்ப்போம்.

ராசிக்கு 11-ஆம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்வது நல்லது. உங்கள் நீண்டகால ஆசைகளும் திட்டங்களும் நிறைவேறும். உங்கள் கௌரவம் மேலும் விரிவடையும். வெளிவட்டாரத்தில் உள்ளவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளை வலியவந்து செய்வார்கள். குடும்பத்தில் இதுவரை நடந்துவந்த குழப்பங்கள் தீரும். மற்றவர்கள் பேச்சைநம்பி நீங்கள் செயல்பட்டு, கடந்த காலங்களில் சில இழப்புகளை உங்கள் அனுபவத்தில் பெற்றிருப்பீர்கள். இனி எந்த விஷயத்தையும் தீர ஆலோசிக்காமல் செய்ய மாட்டீர்கள். உங்கள் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் இனி நல்ல முறையில் நடக்கும். உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் ஏற்படும். நீதிமன்றத்திலுள்ள வழக்குகள் சாதகமாகும். அனைத்துத் துறைகளில் உள்ளவர்களும் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். உலோகம், எந்திரம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வெளிநாட்டுத் தொடர்பால் நல்ல பலன்களைக் காண்பீர்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நல்ல முறையில் நடைபெறும்; தடைகள் வராது.

சனி பகவான் விருச்சிக ராசியிலமர்ந்து 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்ப்பார். அதன் பலன் என்னவென்று காண்போம்.

சனி பகவான் 3-ஆம் பார்வையாக உங்கள் ராசியையே (ஜென்மத்தை) பார்க்கிறார். இதனால் உங்களுக்கு இனம்தெரியாத கவலைகளைக் கொடுப்பார். தொடர்ச்சியாக சிக்கல்கள் வரும்.

ஆனால் அவற்றை வெற்றிகரமாகக் களைவீர்கள். நீங்கள் நினைப்பதற்கு மாறான செயல்களை சனிபகவானை நடத்துவார். எனவே தீர யோசித்து அனைத்து காரியத்திலும் ஈடுபட வேண்டும். உங்களது பழைய நண்பர்கள், உங்களுக்கு பக்கபலமாக நின்று உதவிகள் செய்வார்கள். குடும்பத்தில் நிம்மதி பெருகும். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குடும்பத் தலைவர்கள் தங்கள் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவார்கள்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ஆவதாக உள்ள புத்திர பாக்கிய ஸ்தானத்தை 7-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். பிள்ளைகளால் இதுவரை இருந்துவந்த கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய திருமணத்தை நடத்திவைப்பீர்கள். வெளிநாட்டில் வேலைதேடும் பிள்ளைகள் அங்கு வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். ஒருசிலரது பிள்ளைகள் வெளிமாநிலம் சென்று வேலையில் அமர்வார்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் தீரும். பொன், பொருள் ஆபரணச்சேர்க்கை உண்டாகும். நீங்கள் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்திலும் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ஆம் இடமான சிம்மத்தை 10-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். இதனால் உங்கள் உடல்நிலையில் இதுவரை இருந்தவந்த பிணி, பீடைகள் விலகும். புதிய வாகனம் வாங்க நினைத்தோரின் எண்ணம் நிறைவேறும். நீங்கள் செய்யும் காரியம் அனைத்திலும் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கோவில் திருப்பணிகள் செய்ய நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். அதனால் நல்ல வருவாயைப் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் வியாபார விருத்தியை அடைவார்கள். புண்ணியத்தைத் தேடிவைப்பீர்கள். தான தருமங்கள் செய்யும் வகையில் பணம் நிறைவாக வரும்.

இனி சனி பகவான் வக்ரம் மற்றும் வக்ரநிவர்த்தி காலங்களில் எந்த வகையான பலன்களைத் தருவார் என்பதைக் காண்போம்.

எதிர்பார்த்த சொத்துகள் வரும்

சனி பகவான் 16-12-2014 முதல் 24-1-2015 வரை நேர்கதியில் குரு சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு இதுவரை வராமலிருந்த பூர்வீக சொத்துகள் அனைத்தும் கிட்டும். குடும்பத்தில் அனைத்து நன்மைகளும் நடக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். பாதியில் கட்டிநின்ற வீட்டை மறுபடியும் கட்டி, புதுனை புகுவிழாவும் நடத்துவீர்கள்.

உடன்பிறந்தோர் சுமுக உறவு

சனி பகவான் 24-1-2015 முதல் 17-3-2015 வரை சனி சாரம் பெற்று நேர்கதியில் விருச்சிக ராசியில் உலா வருகிறார். இந்தக் காலகட்டத்தில் சகோதர- சகோதரிகள் பூர்வீக சொத்துக்காக போட்ட வழக்குகள் பைசலாகும். அவற்றிலிருந்த பிரச்சினைகள் நீங்கி சுமுகமாகும். உடன்பிறந்தோர் உறவும் சுமுகமாகும். குடும்பத்தில் திருமணம்போன்ற நல்ல செலவுகள் ஏற்படும். பிரிந்துசென்ற சகோதர- சகோதரிகள் மனம்திறந்து பேசி ஒன்றுசேர்வார்கள்.

வெளிநாட்டு வேலை கிட்டும் காலம் 

சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரகதியில் குரு சாரத்தில் விருச்சிகத்தில் உலாவருவார். இந்த நேரத்தில் வெளிநாட்டு ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்வோர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வெளிநாடு  போய் சம்பாத்தியம் செய்திட போட்ட திட்டம் நிறைவேறும். ஒருசிலர் மத்திய அரசில் வெளிமாநிலங்களில் புதிய வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். நல்ல வருமானமும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். உங்கள் கையில் பணம் புழங்குவதைக்கண்டு உறவுகளும் மற்றவர்களும் தேடிவருவார்கள். பிள்ளைகளின் உயர்கல்வி நல்ல முறையில் நடக்கும். மாணவர்கள் திடீரென நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். மந்தகதி மாறும்.

நண்பர்களைப் புரிந்துகொள்ளும் காலம்

சனி பகவான் 13-6-2015 முதல் 1-8-2015 வரை குரு சாரம் பெற்று வக்ரகதியில் துலா ராசியில் அமர்ந்திருப்பார். இந்த நேரத்தில் உங்கள் எண்ணம்போல அனைத்து காரியமும் நடக்கும். தடைப்பட்டுவந்த தொழில்களை மாற்றி, புதிய தொழில்களை அமைப்பீர்கள்.

அப்போது உங்கள் நண்பர்கள் கூட்டுத்தொழில் செய்ய முன்வருவார்கள். நீங்கள் அவர்களை விட்டு விலகிச்சென்று சொந்தமாகவே தொழில் தொடங்குவீர்கள். சிலருக்கு வம்பு வழக்குகள் ஏற்பட்டு, நீதிமன்றத்தை நாடவேண்டி வரும். யோசித்துச் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் அனைத்தும் பைசலாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும்.

எங்கும் எதிலும் வெற்றி

சனி பகவான் 1-8-2015 முதல் 6-9-2015 வரை நேர்கதியில் குரு சாரத்தில் துலா ராசியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகம் வரப்பெறுவீர்கள். அனைத்து தரப்பிலுள்ள பணியாளர்களும் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். நிலுவை பாக்கிகள் வசூலாகும். வெளிநாடு சென்று இளைஞர்கள் வேலையில் அமர்வார்கள். வருமானம் பெருகியபோதும் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி சண்டை ஏற்படும். அதற்குக் காரணம் மனைவியின் பேராசையாகவே இருக்கும். மறைமுகத் தொழில் செய்வோர் இரட்டிப்பு லாபம் பெறுவார்கள். கலைஞர்களின் காலம் பொற்காலம். புதிய ஒப்பந்தங்கள் வந்து பெட்டியை நிரப்பும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். மருத்துவச் செலவுகள் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

லாகிரி வஸ்துகளில் அதிக லாபம்பெறும் காலம்

சனி பகவான் 6-9-2015 முதல் 18-10-2015 வரை குரு சாரத்தில் விருச்சிக ராசியில் நேர்கதியில் உலாவருகிறார். இந்த நேரத்தில் லாகிரி வஸ்துகள் வியாபாரம் செய்வோர் இரட்டிப்பு லாபம் பெறுவார்கள். மருத்துவத் தொழில் செய்வோர், மருந்து உற்பத்தி செய்பவர்கள், அதன் பிரதிநிதிகளின் வாழ்வில் செல்வம் கொட்டும். நீதித்துறையில் பணிபுரிவோர், வக்கீல்கள் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். அடிக்கடி வெளியூர் பயணத்தை மேற்கொள்ள வேண்டிவரும். குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவுகள் செய்யவேண்டிய வரும். கறுப்பாகவுள்ள உறவினர்களால் தொல்லைகள் அதிகமுண்டு. எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் உங்கள் பொருட்களை அபகரிப்பார்கள்.

சனி பகவானின் சாதகமான பலன்கள் 

சனி பகவான் 18-10-2015 முதல் 28-3-2016 வரை நேர்கதியில் விருச்சிகத்தில் சனி சாரம் பெற்று உலாவருகிறார். எதிர்பார்த்த எல்லாமே நற்பலனாக வரும். யோசிக்காமல் செய்த காரியங்களில்கூட நல்ல லாபம் கிட்டும். இதுவரை உங்களை வாட்டிவதைத்த வழக்குகள் சாதகமாகும். நீதிமன்றத் தீர்ப்புகள் உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும்.

அனைத்துத் தரப்பு பணியாளர்களுக்கும் பணிசெய்யுமிடத்தில் வராமலிருந்த அத்தனை பலன்களும் வந்துசேரும். வியாபாரிகள் தங்கள் பொருட்களை நல்ல லாபத்திற்கு விற்பார்கள். வேலையில்லாத இளைஞர்கள் நல்ல புதிய பதவிகளை அடைவார்கள். ஒருசிலர் மத்திய அரசில் உயர்பதவிகளுக்கான உத்தரவைப் பெறுவார்கள். மனைவி வழியில் இருந்துவந்த பகை மறந்து, மனைவிவழி சொத்துகளைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உயர்கல்வி பயின்று வருபவர்கள் இந்த ஆண்டில் கேம்பஸ் செலக்ஷன் பெற்று உடனடியாக வேலையைப் பெறுவார்கள். இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் இலவச விசா கிட்டும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்குவீப்பீர்கள். திருமணமாகாத இளைஞர்கள், பெண்கள் நல்ல வரன்கள் வரப்பெறுவார்கள். எதிர்பார்த்த அந்தஸ்தான வரன்கள் வந்துசேரும். சனி பகவான் இந்த காலகட்டம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதகமாக அமைந்து, சாதகமான பலன்கள் அனைத்தையும் அள்ளிவழங்குவார்.

காணாமல் போனவை வந்துசேரும்

சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் வக்ரகதியில் வருகிறார். இந்தக் காலம் உங்களுக்கு பொற்காலம். உங்கள் குடும்பத்தில் காணாமல்போன பொருட்களனைத்தும் கிடைக்கும். அதேபோல குடும்பத்தை விட்டுப்பிரிந்து, எங்கிருக்கிறார் என்று தெரியாத குடும்ப உறுப்பினர்கள் இருக்குமிடம் தெரியும். அவர்கள் உங்களைத் தேடியும் வருவார்கள். தொலைபேசியில் நல்ல தொடர்புகள் வந்துசேரும். மனைவி, மக்கள் கேட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொடுத்து அவர்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நல்லபடியாய் நடக்கும். அதுவும் எதிர்பார்த்த நல்ல வரன்களாக
அமையும். எதிர்பார்த்தபடி பிள்ளைகள் நல்ல வேலையில் சேர்வார்கள். ஒருசிலர் அயல்நாடு சென்று பொருளீட்டுவார்கள்.

குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்

சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை நேர்கதியில் சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருவார். இந்தக் காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் பணிபுரியும் பணியாளர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். எதிர்பார்த்த மாறுதல் வந்துசேரும். ஒருசிலர் பதவி உயர்வை அடைவார்கள். வருவாயும் கூடும். தொல்லை கொடுத்துவந்த பிள்ளைகள் நல்லவர்களாக மாறுவார்கள். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வார்கள். உடன்பிறந்தவர்களின் திருமணத்தை நடத்திவைத்து பெற்றோர்களின் பாராட்டைப் பெறுவார்கள்.

நண்பர்களால் பாதிப்பு

சனி பகவான் 17-11-2016 முதல் 10-4-2017 வரை நேர்கதியில் புதன் சாரம் பெற்று விருச்சிகத்தில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் யாரையெல்லாம் நல்லவர் என்று நம்பிக்கையுடன் பழகிவந்தீர்களோ அவர்களால் சிரமத்தை அடைவீர்கள். உங்கள் ரகசியங்களை வெளியிட்டு எதிராகச் செயல்படுவார்கள். எனவே இந்தக் காலம் முழுவதும் மிகவும் எச்சரிக்கையாக நண்பர்களிடம் பழகுங்கள். பட்டும் படாமலிருக்க வேண்டும். தீய நண்பர்கள் சகவாசம் எளிதாக ஏற்பட்டு அவர்கள் காட்டும் தீயவழிகளில் நீங்களும் செல்லநேரும். எனவே சனி பகவான் தற்போது எச்சரிக்கையாக இருக்கச் சொல்லியுள்ளார் என்பதை உணருங்கள்.

ஜாமீன் போட்டது தொல்லைதரும் காலம் 

சனி பகவான் 10-4-2017 முதல் 6-8-2017 வரை வக்ரம் பெற்று புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார். இந்த நேரத்தில் உங்களுக்கு வரவேண்டிய வரவுகள் அனைத்தும் தாமதமாகும். கையிருப்பு கரையும். எப்போதும் குடும்பத்தில் செலவுகள் கூடிக்கொண்டே இருக்கும். முந்தைய காலகட்டத்தில் நீங்கள் யாருக்காவது பொறுப்பு போட்ட வகையில், மற்றவர் செலுத்தவேண்டிய தொகையை கட்டச்சொல்லி நிர்பந்தம் ஏற்படும். எனவே எப்போதும் ஜாமீன் போடாமலிருக்க பழகிவிடுங்கள். சனிபகவான் உங்களை சோதிக்கிறார். மனவுறுதியுடன் செயல்பட்டு நல்ல பலன்களை அடையுங்கள்.

எதையும் சிந்தித்துச் செய்யவேண்டும்

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரையிலும் நேர்கதியில் புதன் சாரம் பெற்று விருச்சிகத்தில் உலாவருகிறார். இந்த நேரத்தில் செலவுகள் கூடுதலாகும். வயதான பெற்றோர் வகையிலும் பிள்ளைகள் வழியிலும் தேவையற்ற செலவுகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த பணவரவுகள் தாமதமாகும். திருமணப்பேச்சுகளை தள்ளிவைக்கவேண்டும். ஏமாற்று நபர்கள் பெண் கொடுக்க- எடுக்க வருவார்கள். எனவே எல்லா வகையிலும் சிந்தித்துச் செயல்பட்டு தற்காத்துக்கொள்ள வேண்டும். நிதானம்காப்போர் எப்போதும் நல்ல பலன்களை அடைவார்கள்.

இனி சனி பகவான் எல்லா தரப்பு மக்களுக்கும் எந்தவிதமான பலன்களைத் தருவார் என்று அறிவோம்.

பணியாளர்களுக்கு

பணியாளர்கள் அதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். நிலுவைத் தொகை முழுவதும் வந்துசேரும். வேலைப்பளு கூடும். பதவி உயர்வு, மாறுதல் விரும்பியபடி வந்துசேரும்.

பெண்களுக்கு

நீங்கள் எதிர்பார்த்தபடி எல்லாமே நல்ல பலனாக இருக்கும். பெற்றோர் மற்றும் சகோதரர்களால் கிடைக்கவேண்டிய எல்லா நன்மைகளும் உங்களுக்குக் கிட்டும். வாழ்க்கையில் தடைப்பட்டுவந்த அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வராது. நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். நீங்கள் நினைத்தபடி வேலைவாய்ப்பு அமையும். பொன்னும் பொருளும் அள்ளிக்குவிப்பீர்கள். பொறுமையான பேச்சால் நினைத்த காரியங்களை சாதிப்பீர்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்வைப் பெறுவார்கள்.

வியாபாரிகளுக்கு

இதுவரை உங்களுக்குத் தொல்லை கொடுத்தவந்த வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கொள்முதல் செய்த பொருட்களனைத்தும் விற்றுவிடும். இந்த சனிப்பெயர்ச்சியில் நீங்கள் நினைத்தபடி பொருளாதார நிலை உயரும்.

தொழிலதிபர்களுக்கு

தொழிலதிபர்கள் நல்ல வருமானம் பெறுவார்கள். தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவார்கள். இதுவரை தொழிலாளர்களுக்கு கிடைக்காமலிருந்த அனைத்து சலுகைகளையும் வழங்குவார்கள். தொழிலதிபர்களுக்கு பொற்காலம்.

விவசாயிகளுக்கு

இதுவரை உங்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த பக்கத்து விவசாயிகள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிர்பார்த்தபடி மகசூலை அடைவீர்கள். புதிய நிலம், டிராக்டர் வாங்கிட போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

கலைத்துறையினருக்கு 

ஆண் கலைஞர்களுக்கு கலைத்துறையில் அதிக வாய்ப்புகள் கிடைக்காது. கதாநாயகியாக வரக்கூடிய கலைத்துறையினர் அதிகமான படவாய்ப்புகளைப் பெறுவார்கள். சிக்கனம் உங்களை வாழவைக்கும். அரசியல்வாதிகளுடன் பழக்கமுள்ளவர்கள் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு 

இதுவரை உங்களை இகழ்ந்து பேசியவர்களும் வலியவந்து உங்களைப் புகழ்வார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய பதவிகளைத் தலைமையின் பாராட்டால் அடைவீர்கள்.

பரிகாரம்

தினசரி காலையில் காக்கைக்கு சாதம் வைத்துவர, சனி பகவானின் தாக்கம் குறையும். (பழைய சாதம் வைக்கலாம்).

ஆரம்பத்தில் குச்சனூர் சென்று சனி பகவானை தரிசித்து வாருங்கள். பின்பு சிவகங்கையில் அமைந்துள்ள சனீஸ்வரரை தரிசித்து வாருங்கள். இறுதியாக திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடிய பின்பு சனீஸ்வர பகவானை தரிசித்து வாருங்கள். அனைத்து நற்பலன்களையும் பெறுவீர்கள்.

நாட்டுக்கருவேல மரத்திலுள்ள இலைகள் மற்றும் பூவை சேகரித்து ஒரு தனி பையில் வைத்து உடன்வைத்திருங்கள். எப்போதும் சனி பகவான் அருள்பாலிப்பார். (சீமைக் கருவேல இலை, பூ ஆகியவற்றைப் பயன்படுத்தினால் பலனில்லை.)

இந்த சனிப்பெயர்ச்சியில் மகர ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்.

——————————————————————————————————————–

கும்பம் 
(அவிட்டம் 3- ஆம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3 -ஆம் பாதம் முடிய)

அன்பார்ந்த கும்ப ராசி நேயர்களே!

16-12-2014 முதல் 18-12-2017 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் ராஜ்ய ஸ்தானத்தில் அமர்ந்து எப்படிப்பட்ட பலன்களை வழங்குவார் என்பதை அறிந்துகொள்வோம்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் அமர்ந்துள்ள காலத்தில் ஆரம்பத்தில் உங்கள் செயல்களில் மந்தநிலை ஏற்பட்டாலும் இறுதியில் லாபகரமாகவே வந்துவிடும். மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்கமாட்டீர்கள். தான, தர்மங்கள் செய்வீர்கள். உங்களை நம்பியிருப்பவர்களை இருகரத்தாலும் அணைத்து உதவிசெய்வீர்கள். புதிய யுக்திகள் உதயமாகும். வியாபார விருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் வேண்டிய இடத்திற்கு மாறுதலைப் பெற்று நல்ல பலன்களை அடைவார்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். இதுவரை உங்களைக் குறைகூறி வந்தவர்கள் உங்களது உழைப்பைக்கண்டு வியந்துபோவார்கள். உங்களது நாணயம் உங்களை உயர்த்தும். நீண்டகாலமாக நீங்கள் போட்ட திட்டம் நிறைவேறும். சொத்துகளை வாங்கிக்குவீப்பீர்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணம் வாங்கிச்சேர்ப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் சிலருக்கு நீண்டகாலமாக தடைப்பட்டுவந்த திருமணம் இனிதே நடக்கும். அரசியல் பிரமுகர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். புதிய பதவிகளையும் அடைவார்கள். ஒருசிலர் வெளிநாடு சென்றுவர போட்ட திட்டம் நிறைவேறும். பிள்ளைகளும் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுவார்கள். பொருளாதாரத் தடைகள் அகலும்.

இனி சனி பகவானின் 3, 7, 10-ஆம் பார்வையால் ஏற்படும் பலன்களை அறியலாம்.

சனி பகவான் 3-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12-ஆம் இடத்தைப் பார்க்கிறார். இதன்காரணமாக கணவன்- மனைவியிடையே இருந்துவந்த ஓயாத சண்டைகள் ஒழிந்துவிடும். ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வருவீர்கள். ஒருசிலர் கோவிலை எடுத்துக்கட்டும் பாக்கியத்தைப் பெறுவார்கள். உடன்பிறந்தவர்கள் எப்போதும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். செய்யும் தொழிலில் மேன்மையுண்டு. நல்ல லாபமும் ஏற்படும். ஒருசிலர் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். சனி பகவான் 3-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால், வேறுவிதமான விபரீதச் செலவுகள் எதுவும் வராது.

சனி பகவான் 7-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். 4-ஆமிடம் என்பது நிலம், வீடு, வாகனம், சுகம், தாயார் போன்றவற்றைக் குறிக்கும். அது சம்பந்தமான வகையில் சில சிக்கல்கள் ஏற்படலாம் என்றாலும், பெரிதாக பாதிக்காது. சமாளித்துவிடுவீர்கள்.

சனி பகவான் 10-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7-ஆம் இடமான களஸ்திரத்தைப் பார்க்கிறார். இதனால் உங்களுக்கு பாதகமாக எதுவும் நடக்காது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிரிந்துசென்ற தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றுகவனம் செலுத்தவேண்டும். அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில் போட்டிகளை சமாளிக்கவேண்டும். உங்கள் மனைவிவழி உறவுகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். போதுமான வருமானம் உண்டு. மருத்துவச் செலவும் உண்டு. உடல்நிலையில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.

இனி சனி பகவான் வக்ரம் மற்றும் வக்ரநிவர்த்தி காலங்களில் எப்படிப்பட்ட பலன்களை வழங்குவார் என்பதைக் காண்போம்.

நல்ல திருப்பங்கள்

சனி பகவான் 16-12-2014 முதல் 24-1-2015 வரை நேர்கதியில் குரு சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் நல்ல பலன்களாகவே நடக்கும். செய்யும் தொழிலில் லாபம் உண்டு. வேலைதேடும் இளைஞர்கள் அவரவர் தகுதிக்கேற்ப நல்ல வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். இதுவரை உங்களுக்கு சாதகமாக அமையாத வழக்குகள் அனைத்தும் சாதகமாகும். புதிய வீடு கட்டுவீர்கள். அல்லது மனைவாங்குவீர்கள். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் போட்டி விலகி, வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

போட்டி, பொறாமைக்காலம்

சனி பகவான் 24-1-2015 முதல் 17-3-2015 வரை சனி சாரம் பெற்று நேர்கதியில் விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்த நேரத்தில் எல்லா வகையிலும் உங்களுக்கு சிரமம் வரும். எனவே நீங்கள் பதட்டம் கொள்ளாமல் காரிய வெற்றிக்குக் காத்திருக்கவேண்டும். வேலையாட்களால் உபத்திரவம் உண்டு. போட்டி வியாபாரிகளால் வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். உங்கள் உறவினர்களே உங்கள் வளர்ச்சியைப் பொறுக்காமல், பொறாமை குணம் கொண்டு கெடுதல்கள் செய்ய முற்படுவார்கள். எனவே நீங்கள் விழிப்பாகச் செயல்படவேண்டும். சனி பகவான் அடுத்துவரும் காலங்களில் நன்மையைச் செய்வார் என்ற நோக்கத்துடன் நியாயமாகச் செயல்பட வேண்டும். 

கூடுதல் லாபம் பெறுவார்கள்

சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரகதியில் குரு சாரத்தில் விருச்சிகத்தில் உலாவருவார். இப்போது உங்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள் குறையும். பழைய வாடிக்கையாளர்களின் வருகையினால் வியாபாரம் கூடும். பிள்ளைகள் நல்லமுறையில் கல்வி பயில்வார்கள். உங்களது குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவருக்கு திருமணம் நடைபெறும். வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் லாபம் கூடும். வெளிநாடுகளுக்கு பொருட்களையனுப்பி வியாபாரம் செய்கிறவர்கள் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். இராணுவத்தில் பணிபுரிவோர், அந்நிய நாட்டில் வாழ்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பிரிந்துவாழும் தம்பதியர் பிரச்சினைகள் மறந்து ஒன்றுசேர்வார்கள். ஒருசிலர் காதல் திருமணம் செய்வார்கள்.

வசந்தகாலம் வந்துவிட்டது

சனி பகவான் 13-6-2015 முதல் 1-8-2015 வரை குரு சாரம் பெற்று வக்ர கதியில் துலா ராசியில் அமர்ந்திருப்பார். இந்தக் காலகட்டத்திலும் சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களையே வழங்குவார். வியாபாரம் பெருகும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வை அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்துவாழும் தம்பதியர் பேச்சுவார்த்தையின்றி ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியமும் கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக்கொடுத்து மகிழ்வீர்கள். காசு பணம் சரளமாகப் புழங்கும். புதிய வீடு, பொன் நகைகள், வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். சனி பகவான் உங்களுக்கு நல்ல எதிர்கால திட்டங்களை உருவாக்கித் தருவார்.

எதிரிகளும் நண்பராவர்

சனி பகவான் 1-8-2015 முதல் 6-9-2015 வரை நேர்கதியில் குரு சாரத்தில் துலா ராசியில் உலாவருகிறார். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களின் எண்ணம் நிறைவேறும். லாகிரி வஸ்துகள் விற்பனை செய்வோர், நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

அரசுப்பணியாளர்கள் எதிர்பார்த்த பணிமாற்றமும், பதவி உயர்வும் வந்துசேரும். பொதுவாக உங்கள் வாழ்வில் பொருளாதாரம் வெகுவேகமாக வந்துசேரும். ஒருசிலர் புதிய வீடுகட்ட, வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். இதுவரை உங்களிடம் மாற்றுக்கருத்துடன் செயல்பட்ட எதிரிகள் நண்பராவார்கள். சனி பகவான் உங்களுக்குப் புதிய எண்ணத்தையும் தைரியத்தையும் வழங்குவார். நியாயம்தவறி வாழும் சிலர் வாகன விபத்துக்கு ஆளாக நேரிடும்.

எதிர்பார்த்தது நிறைவேறும்

சனி பகவான் 6-9-2015 முதல் 18-10-2015 வரை குரு சாரத்தில் விருச்சிக ராசியில் நேர்கதியில் உலாவருகிறார். எதிர்பார்த்த அனைத்து காரியங்களும் கைகூடும். வருமானம் அதிகமாக வரும்.

அதேநேரம் செலவுகளும் அதிகமாகும். என்றாலும் நல்ல செலவுகளே ஏற்படும். வெளிநாட்டிலுள்ள உறவுகள் வந்துசெல்வார்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும் காலமிது. பொதுவாக வர்த்தகத்தில் பழைய நிலையை மட்டும் தொடரவேண்டும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். சொத்துகள் நல்ல விலைக்குச் செல்லும். ரியல் எஸ்டேட் தொழில்புரிவோர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை

சனி பகவான் 18-10-2015 முதல் 28-3-2016 வரை நேர்கதியில் விருச்சிகத்தில் சனி சாரம் பெற்று உலாவருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்கள் அண்டை மாநிலத்தில் தங்கள் தொழிலை விரிவு செய்து அதிக லாபத்தையும் அடைவார்கள். எல்லா தரப்பு மக்களும் அவரவர் செய்யும் தொழிலுக்கேற்ப கூடுதலான வருமானத்தை அடைவார்கள். வருமானம் கூடிவரும். இந்த நேரத்தில் தீயவர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு நல்லதாகத் தெரியும்.அவர்கள் வழிகாட்டுதலில் உங்கள் பொருளாதாரத்தை எந்தத் தொழிலில் முடக்கினாலும் நஷ்டம் ஏற்படும். எனவே நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மற்றபடி அனைத்தும் நன்மையாகும்.

குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்

சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் வக்ரகதியில் வருகிறார். இந்தக் காலகட்டத்தில் படித்த  இளைஞர்கள் ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். சிலர் மத்திய அரசின் உயர்பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே குடும்பத்தில் பிள்ளைகளால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணப் பேச்சுகள் கைகூடும். நல்ல வரன்களாக அமையும். வீட்டிற்குத் தேவையான ஆடை, ஆபரணங்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்துசேரும். தாய், தந்தையர் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டு. உடன்பிறந்தோர் மத்தியிலுள்ள போட்டி, பொறாமை விலகும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். தூரதேசப் பயணம் சென்ற கணவர் வந்துசேர்வார்.

வரவுக்குமேல் செலவு

சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை நேர்கதியில் சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருவார். இதனால் உங்களுக்கு கடுமையான அலைச்சல்கள் வரும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரியின் அனுசரணை இல்லை. உங்கள் சேமிப்பிலுள்ள தொகையும் சேர்ந்து செலவாகும். உடன்பிறந்தவர்கள் இப்போது சொத்துப் பிரிவினையைக் கொண்டுவருவார்கள். உறவினர் வருகையும் அதிகரிக்கும். வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற நிலை உள்ளதால், மிகவும் சிக்கனமாக செயல்பட வேண்டிய காலம்.

செலவுகள் குறையும்

சனி பகவான் 17-11-2016 முதல் 10-4-2017 வரை நேர்கதியில் புதன் சாரம் பெற்று விருச்சிகத்தில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் இதுவரை வெளிநாடு சென்று குடும்பத்திற்குப் பணத்தை அனுப்பாதவர்கள் அனுப்பத் தொடங்குவார்கள். ஏற்றுமதி- இறக்குமதி வியாபாரம் செய்வோர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

அனைத்துத் தரப்பு மக்களும் வரவேண்டிய பாக்கிகளை அடைத்து, பழைய கடன்களையும் கட்டுவார்கள். செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும்.

எல்லாருக்கும் இது பொற்காலம்

சனி பகவான் 10-4-2017 முதல் 6-8-2017 வரை வக்ரம் பெற்று புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார். எல்லா தரப்பு மக்களும் அதிக வருவாய் ஈட்டுவார்கள். நினைத்தபடி வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொழிலை விரிவுசெய்ய போட்ட திட்டம் நிறைவேறும்.

சுபச் செலவுகள் ஏற்படும் காலம்

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரை நேர்கதியில் புதன் சாரத்தில் விருச்சிகத்தில் உலாவருகிறார். குடும்பத்தில் திருமணப் பேச்சுகள் தடையின்றி கைகூடும். கணவன்- மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். சுபச் செலவுகளுக்காக ஆகும் செலவுகளை, புதிய வரவுகளால் ஈடுசெய்வீர்கள்.

இனி சனி பகவான் ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் எந்தவிதமான பலன்களை வழங்குவார் என்பதையும் காண்போம்.

பணியாளர்களுக்கு

எல்லா தரப்பு பணியாளர்களுக்கும் வேலைப்பளு அதிகமாகும். அதேநேரத்தில் வரவேண்டிய பாக்கிகள் யாவும் வந்துசேரும். ஒருசிலருக்கு பதவி உயர்வுடன், பணிமாற்றம் வரும். மேலதிகாரிகளின் ஆதரவு எப்போதும் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் தேவையினை நிறைவேற்றி வைப்பீர்கள்.

பெண்களுக்கு

பெண்கள் நிதானமாக மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கணவன்- மனைவி பிணக்குகள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முடிந்தவரை அருகிலுள்ளவர்களிடம் உங்களைப்பற்றிய ரகசியத்தைக் கூறாதீர்கள். வீண் சண்டைகளை ஏற்படுத்தும். பொருளாதார உயர்வுண்டு. குடும்பத்தில் பிள்ளைகளின் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் கடுமையாக உழைத்துப் படிக்கவேண்டும். அப்போதுதான் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். வெற்றி நிச்சயமென்றாலும் கூடுதல் மதிப்பெண்ணுக்கு கூடுதலான நேரத்தைச் செலவிடவேண்டும்.

வியாபாரிகளுக்கு

நீங்கள் கொள்முதல் செய்கின்ற பொருட்கள் அனைத்தும் விற்பனையாகும். எனவே கொள்முதலில் மந்தம் செய்யாதீர்கள். வியாபாரம் படுஜோராகச் செல்லும். எதிரிகள் விலகிச்செல்வார்கள்.

தொழிலதிபர்களுக்கு

தொழிலதிபர்கள், தொழிலாளர் ஒற்றுமையால் அதிக உற்பத்தி பெறுவார்கள். வெளிச்சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்பார்கள். தங்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். பழைய பாக்கிகள் யாவும் வசூலாகும்.

விவசாயிகளுக்கு

நல்ல மழை பெய்யவுள்ளதால் மகசூலில் அதிக லாபம் பெறுவீர்கள். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும். வம்பு செய்தவர்கள் விலகிச்செல்வார்கள். வழக்குகளில் வெற்றிகிட்டும்.

கலைத்துறையினருக்கு 

இந்த ஆண்டு அதிகமான படப்பிடிப்புகளில் கலந்துகொள்வீர்கள். வரவு உயரும். சேமிப்பை உயர்த்திக் கொள்ளும் நேரம் இது.

அரசியல் பிரமுகர்களுக்கு 

அரசியல்வாதிகள் நினைத்தபடி பொதுமக்களின் ஆதரவு கிட்டும். உங்கள் நல்ல செயல்கள் தலைமைக்குத் தெரிந்து, நீங்கள் கேட்காமலேயே புதிய பதவிகளைத் தருவார்கள். ஒருசிலருக்கு அரசு செலவில் வெளிநாடு சென்றுவரும் யோகம் கிடைக்கும். பொருளாதாரம் உயரும்.

பரிகாரம்

விரயங்கள் சுபவிரயமாக மாறிட சனி பகவானை வேண்டுங்கள். வாரம் ஒருமுறை சனிக்கிழமையில் சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றிவர நன்மையுண்டு.தினசரி காலையில் எழுந்தவுடன் காக்கைக்கு சாதம் வைத்து வர நன்மையுண்டு. (பழைய சாதம் போதுமானது).சனி பகவான் வாகனமான காக்கையை வணங்கி எந்த காரியம் செய்தாலும் அதில் நீங்கள் வெற்றியைக் காண்பீர்கள்.முடிந்தவர்கள் திருநள்ளாறு, குச்சனூர் அல்லது சிவகங்கை சென்று சனீஸ்வரரை தரிசித்து வரவேண்டும். இந்த சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்.

………………………………………………………………………………………………………………………….

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

அன்பார்ந்த மீன ராசி நேயர்களே!

சனி பகவான் 16-12-2014 முதல் 18-12-2017 வரை உங்கள் ராசிக்கு 9-ஆம் இடமான விருச்சிக ராசியில் அமர்கிறார். 9-ஆம் இடமென்பது பிதா, பாக்கிய ஸ்தானம். சனி பகவானைப் பொறுத்தவரையில் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ள காலத்தில் பெரும்பாலும் நல்ல பலன்களையே வழங்குவார். உங்களுக்கு அஷ்டமத்துச் சனியாக கடந்த இரண்டரை ஆண்டுகள் சிரமத்தையும், விபத்துகளையும் கொடுத்து முடித்துக்கொண்டார். இனி உங்களுக்கு 16-12-2014 முதல் 18-12-2017 வரை வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், புதிய வீடு கட்டுதல், பூர்வீக சொத்துகளால் நன்மைகள் போன்றவற்றை படிப்படியாகக் கொடுப்பார். இதுவரை மந்தமாக இருந்துவந்த ரியல் எஸ்டேட் தொழில் இனி லாபகரமாக அமையும். தொழிற்சாலைகளை விரிவுபடுத்தி சிலர் புதிய தொழிற்சாலைகளையும் தொடங்குவார்கள். தொழிலாளர்கள் இனி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொல்லை கொடுத்துவந்த பங்குதாரர்களும் இனி உங்களை தழுவிச்செல்வார்கள். தீராத நோயாக இருந்து மருத்துவம் செய்துவந்த சிலருக்கு படிப்படியாக நோய்குறையும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வும், வேண்டிய இடத்துக்கு மாறுதலையும் பெறுவார்கள். இதுவரை வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்ந்து வாழ்வார்கள். உயர்கல்வி பயின்றுவரும் மாணவர்கள் கேம்பஸ் செலக்ஷன் பெற்று உடனடியாக வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.

இனி சனி பகவான் விருச்சிக ராசியில் அமர்ந்து 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். இது உங்களுக்கு எந்த வகையான பலன்களைக் கொடுக்கும் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமான லாபம் மற்றும் உடன்பிறந்த மூத்தவர்கள் ஸ்தானத்தை 3-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். லாபஸ்தானத்தை அவர் பார்ப்பதால் உங்களுக்கு வரவேண்டிய பாக்கி நிலுவைகள் முழுவதும் வந்துசேரும். மூத்த சகோதர- சகோதரிகளால் இடையூறில்லாமல் நல்ல லாபம் வரும். எல்லா காரியங்களிலும் நிதானித்துச் செயல்படவேண்டும். தொழிற்சாலைகள் நடத்துவோர், தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

சனி பகவான் விருச்சிக ராசியில் அமர்ந்து 7-ஆம் பார்வையாக, உங்கள் ராசிக்கு 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார். இந்த வீடு, உங்களுக்கு இளைய சகோதரத்தையும், ஏற்படப்போகும் சகாயங்களையும் நிர்ணயிக்கக்கூடியது. இளைய சகோதரர், சகோதரிகளால் நல்ல லாபத்தையும் அவர்களால் அனுசரணையையும் பெறுவீர்கள். திருமணமாகி ஒரு குழந்தை மட்டுமிருந்து, அந்தக் குழந்தை கும்ப ராசியில் பிறந்திருந்தால், அந்த குழந்தையின் யோகப்படி இளைய சகோதரர்கள் வருவார்கள். அரசியல் பிரமுகர்களுக்கு இதுவரை எட்டாக் கனியாக இருந்த பதவி வந்துசேரும். உங்களுக்கும் சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மரியாதையும் உருவாகும்.

சனி பகவான் விருச்சிக ராசியிலமர்ந்து, உங்கள் ராசிக்கு 6-ஆம் இடமான எதிரி, நோய், கடன் போன்றவற்றை நிர்ணயிக்கும் இடமான சிம்ம ராசியை 10-ஆம் பார்வையாகப் பார்க்கிறார். இதனால் இதுவரை குணமாகாமல் வாட்டி வதைத்துவந்த நோய்கள் குறையும். மருத்துவச் செலவுகள் குறையும். பழைய கடன் பாக்கிகள் பைசலாகும். போட்டி வியாபாரிகள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். காலம்காலமாய் ஒருசிலருக்கு உடலில் இருந்துவந்த அலர்ஜி நீங்கும். எனவே உங்கள் ரோகஸ்தானத்தை சனி பகவான் 10-ஆம் பார்வையாகப் பார்ப்பதால் எந்த பாதிப்பும் வராது.

இனி சனி பகவான் வக்ரம், வக்ரநிவர்த்தி காலங்களில் எப்படிப்பட்ட பலன்களை வழங்குவார் என்பதைப் பார்ப்போம். அதற்கேற்றவாறு உங்கள் வாழ்க்கைப் பாதையை நெறிப்படுத்தி நல்ல பலன்களை அடையவேண்டும்.

எதிர்பார்த்த இனங்கள் வந்துசேரும்

சனி பகவான் 16-12-2014 முதல் 24-1-2015 வரை நேர்கதியில் குரு சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் பணிபுரிவோருக்கு வரவேண்டிய நிலுவை பாக்கிகள் அனைத்தும் வந்துசேரும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட சொத்துப்பிரச்சினை நல்ல தீர்வுக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்துச் செய்த அனைத்து காரியங்களிலும் வெற்றிபெறுவீர்கள். நல்ல வருவாயையும் பெறுவீர்கள்.

தவிர்க்கமுடியாத செலவுகள் வரும் நேரம்

சனி பகவான் 24-1-2015 முதல் 17-3-2015 வரை சனி சாரம் பெற்று நேர்கதியில் விருச்சிக ராசியில் உலாவருகிறார். வாகனம் வைத்திருப்போர் அதிவேகத்தைத் தவிர்க்கவேண்டும். பணியாளர்கள் தங்கள் அலுவலகங்களில், மறைமுக எதிரிகளால் தொல்லைகளை அனுபவிக்கவேண்டிவரும். கையூட்டு பெறும் பழக்கமுள்ள அதிகாரிகள், பணியாளர்கள் கையூட்டு வழக்குகளில் சிக்கிக்கொள்ளும் நேரம். எனவே பேராசையைத் தவிர்த்து, இருப்பதில் சிறப்போடு வாழவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமையும் அவ்வளவு திருப்தியாக இல்லை. பிரிந்த தம்பதியர்கள் ஒன்றுகூடுவதற்கு 13-6-2015 வரை பொறுத்திருக்கவேண்டும். பொதுவாக சுபகாரிய நிகழ்ச்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது. சனி பகவான் உங்களுக்கு நல்லதைச் செய்யும் காலத்தில் நல்ல காரிங்களைச் செய்யவேண்டும்.

நற்பலன் தருவார் சனி பகவான்

சனி பகவான் 17-3-2015 முதல் 13-6-2015 வரை வக்ரகதியில் குருசாரத்தில் விருச்சிகத்தில் உலாவருவார். இதற்கு முன்னர் தடைப்பட்டுவந்த காரியங்கள் அனைத்தும் நல்லபடி நடக்கும். அரசு ஊழியர்கள் யோசிக்காமல் செய்த காரியத்திலும் வெற்றிகாண்பீர்கள். விரும்பிய இடத்துக்கு மாறுதலை அடைவீர்கள். பூர்வீக சொத்து விஷயமாக உடன்பிறந்தோர் மத்தியில் சுமுக முடிவுகள் ஏற்பட்டு, நல்ல விலைக்கும் சொத்து விற்கும். தடைப்பட்ட சுபகாரியத்தை நடத்துவதற்கு உகந்த நேரம். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டவர்கள் இப்போது  தொழில் தொடங்கலாம். எல்லாவற்றிலும் நல்ல பலன் தருவார் சனி பகவான்.

புதிய பொருட்கள் வாங்கும் காலம்

சனி பகவான் 13-6-2015 முதல் 1-8-2015 வரை குரு சாரம் பெற்று வக்ர கதியில் துலா ராசியில் அமர்ந்திருப்பார். இந்த தருணத்தில் புதிய பொருட்கள், இடம், ஆடை, ஆபரணங்களை வாங்கிச்சேர்ப்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும், மாமன், மைத்துனர் வழிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது. மனைவியின் துர்போதனைகளைக் கேட்டு உங்களுக்கு உதவி செய்யமாட்டார்கள். அண்டை, அயலார் உதவிக்கரம் நீட்டுவார்கள். சுபகாரியப் பேச்சுகளை பேசவும், நடத்தவும் உகந்த  காலம். வருவாயை சேமிக்கமுடியாது. ஆனால் பழைய கடன்களை பைசல் செய்வீர்கள்.

நன்மையுண்டு – எச்சரிக்கை தேவை

சனி பகவான் 1-8-2015 முதல் 6-9-2015 வரை நேர்கதியில் குரு சாரத்தில் துலா ராசியில் உலாவருகிறார். குருசாரம் எப்போதுமே மருந்துப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் ஷேர் மார்க்கெட் போன்ற இனங்களில் லாபங்களை அள்ளித்தரும். வெளிநாடு சென்று வேலை தேடவுள்ள இளைஞர்கள் அந்த வாய்ப்பைப் பெறுவார்கள். ஒருசிலர் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வுசெய்யப்படுவார்கள். வேலை உத்தரவையும் அடைவார்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் மட்டும் தொடரும். லாபங்கள் பெருகும். இந்த காலகட்டத்தில் கறுப்பாக இருப்பவர்களை புதிய நண்பராய் அடையக்கூடாது. அவர்களால் பெரும் இழப்புகள் வரும்.

பேராசை வேண்டாம்

சனி பகவான் 6-9-2015 முதல் 18-10-2015 வரை குரு சாரத்தில் விருச்சிக ராசியில் நேர்கதியில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் துரோகம் செய்பவர்கள் உங்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி, உங்கள் சேமிப்புகளை முடக்கச்செய்வார்கள். நீங்களும் மெய்மறந்துவிடுவீர்கள். பேராசை குடிகொள்ளும். எனவே கையிருப்பை எதற்கும் எடுப்பதில்லை என்ற கொள்கைப்பிடிப்போடு இருங்கள். நஷ்டங்களையும் கஷ்டங்களையும் தவிர்க்கலாம். பிள்ளைகள் விஷயத்தில் தொந்தரவு வந்து நீங்கும். வீண்சண்டைகள் வரும். குடும்பத்திலும் நிம்மதியற்ற சூழல் உருவாகும். எனவே நிதானித்து செயல்படுங்கள். சேமிப்பைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பேராசை கொண்டு வேறு முதலீடு செய்தால் வந்த வெள்ளம், இருந்த வெள்ளத்தைக் கொண்டுபோன கதையாகிவிடும்.

சாதகமான சூழல்

சனி பகவான் 18-10-2015 முதல் 28-3-2016 வரை நேர்கதியில் விருச்சிகத்தில் சனி சாரம் பெற்று உலாவருகிறார். எல்லா தரப்பு பணியாளர்களும் நல்ல வருவாயைப் பெறுவார்கள். வேலைவாய்ப்போடு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிள்ளைகளின் எண்ணம் நிறைவேறும். பிள்ளைகள் கல்வியில் உயர்ந்து பெற்றோருக்கும், படிக்கும் கல்வி நிறுவனத்துக்கும் பெருமைசேர்ப்பார்கள். சுபகாரியப் பேச்சுகள் திருப்தி தரும். நல்ல வரனாக அமையும். பிரிந்துவாழ்ந்த தம்பதியர் சுமுகமாகி சேர்ந்துவாழ்வார்கள். நல்ல குழந்தை பாக்கியத்தையும் அடைவார்கள். குடும்ப உறுப்பினர் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கு தொல்லைகொடுத்து வந்தவர்களால் மேலும் தொல்லை உருவாகாமல் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சனி பகவான் வழங்கும் வசந்தகாலம்

சனி பகவான் 28-3-2016 முதல் 13-8-2016 வரை சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் வக்ரகதியில் வருகிறார். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கணவன்- மனைவியிடையே பேச்சில் இனிமை கூடும். வீட்டில் இதுவரை தடைப்பட்டுவந்த திருமணப் பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். விலகிச்சென்ற சொந்தங்களும் விரும்பிவந்து சேரும். இதுவரை வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவித்த ஆண்- பெண் இருபாலரும் நல்ல பணிகளைப் பெறுவார்கள். ஒருசிலர் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு பெறுவார்கள். அரசு ஊழியர்கள் நல்ல வருவாயைப் பெறுவார்கள். சனி பகவான் இந்தக் காலகட்டத்தை வசந்த காலமாக அமைத்துக் கொடுப்பார்.

அனைத்தும் சுபம்

சனி பகவான் 13-8-2016 முதல் 17-11-2016 வரை நேர்கதியில் சனி சாரம் பெற்று விருச்சிக ராசியில் உலா வருவார். இந்த தருணத்தில் வீட்டில் சுபச்செலவுகளாக நடக்கும். உங்கள் மகள், மகன் அல்லது உடன்பிறந்த சகோதர- சகோதரிகளின் திருமணம் நல்லபடியாய் நடக்கும். வெளியூர்ப் பயணம் செய்வீர்கள். உறவுகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் பெறுவார்கள். வேலையிழந்த ஒருசில அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். தொழிற்சாலை அதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த மறைமுக வியாபாரிகள் விலகிச்செல்வார்கள்.

லாபகரமான காலம்

சனி பகவான் 17-11-2016 முதல் 10-4-2017 வரை நேர்கதியில் புதன் சாரம் பெற்று விருச்சிகத்தில் உலாவருகிறார். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அந்நிய நாட்டவர்களால் தொழில், வருமானம் உயரும். லாகிரி வஸ்துகள் வியாபாரம் லாபகரமாக அமையும். பிள்ளைகள் உயர்கல்விக்காக வெளிமாநிலம் அல்லது வெளிநாடு செல்வார்கள். ஒருசிலர் மாற்று மதத்தவரை மணம் முடித்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இளைஞர்கள் ராணுவத்தில் சேர போட்ட திட்டம் நிறைவேறும். எல்லா தரப்பு மக்களும் தாங்கள் செய்யும் தொழிலில் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். சனி பகவான் உங்களுக்கு சாதகமாக உள்ளார்.

ஆரோக்கியத்தைப் பேணவேண்டும்

சனி பகவான் 10-4-2017 முதல் 6-8-2017 வரை வக்ரம் பெற்று புதன் சாரத்தில் விருச்சிக ராசியில் அமர்ந்துள்ளார். இந்த நேரத்தில் வயதானவர்கள் பயணத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். நரம்பு சம்பந்தப்பட்ட தளர்வுகள் வரும். மருத்துவச் செலவுகள் கூடும். இளைஞர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். மறைமுக நோய்களின் தாக்கம் ஏற்படும். பெற்றோர் வழியில் மருத்துவச் செலவுகள் கூடும். பொதுவாக உணவுக் கட்டுப்பாடு உள்ளவர்களை நோய் தாக்காது. கணவன்- மனைவி உறவுகளில் அண்டை, அயலார் தூண்டுதல் செய்து பிரச்சினைகளை உருவாக்குவார்கள். எனவே தங்கள் குடும்ப விஷயத்தை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். குடும்பப் பிரச்சினை மற்றவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ராகுவால் கலைத்துறையினர் மட்டும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

உங்களை மட்டுமே நம்பவேண்டும்

சனி பகவான் 6-8-2017 முதல் 18-12-2017 வரை நேர்கதியில் புதன் சாரம் பெற்று விருச்சிகத்தில் உலாவருகிறார். இந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளால் தொல்லைகள் வரும். தாயார் பிள்ளைகளுக்கு அனுசரணையாகப் பேசினால், உண்மை வெளிவராமல் பின்னால் பிரச்சினைகள் பெரிதாகும். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் உங்கள் கண்காணிப்பைச் செய்யவேண்டும். உங்களை மட்டுமே நம்பி, சிந்தித்துச் செயல்பட்டு தொல்லைகளிலிருந்து விடுபடவேண்டும். அரசுப் பணியாளர்கள் இடமாற்றம் பெறும் காலம். வருகின்ற இடமாற்றம் நன்மைக்கே. உங்கள் உடன்பணிபுரியும் நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மனம்திறந்து பேசாதீர்கள். இந்தக் காலகட்டத்தில் வாங்கும் கடன் பைசலாகாமல் நீண்டுகொண்டே போகும். யாருக்கும் பொறுப்பேற்று பணம் வாங்கித்தரக்கூடாது. பொறுப்பேற்றால் அந்தத் தொகையை நீங்கள்தான் கட்டவேண்டியது வரும்.

இனி சனி பகவான் ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் எப்படிப்பட்ட பலன்களை வழங்குவார் என்பதையும் பார்ப்போம்.

பணியாளர்களுக்கு

அரசுப்பணி மற்றும் பொதுப்பணியில் உள்ளவர்களின் வேலைப்பளு கூடினாலும் சலுகைகள் குறையாது. இதுவரை தடைப்பட்டுவந்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வு நிலுவைகள் கிடைக்கும். கடந்த அஷ்டமச்சனியில் தற்காலிகப் பணிநீக்கம் போன்ற சிரமத்தைஅடைந்தவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். அதிகாரிகள் அனுசரணை உண்டு.

பெண்களுக்கு

பெண்களைப் பொறுத்தவரை நல்ல எண்ணம் கொண்டவர்கள் நல்ல நிலையில் வாழ்வார்கள். அண்டை, அயலார் பேச்சைக் கேட்காதவர்களின் வாழ்வில் நிம்மதியுண்டு. கணவன்- மனைவியிடையே இருந்துவந்த பிணக்குகள் மாறும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல வரன்கள் அமைந்து, சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் கடுமையாகப் படிக்கவேண்டும். வெற்றிபெறுவது சுலபம். ஆனால் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவது கடினம், எனவே கடுமையான முயற்சி தேவை, சுற்றுலா, சினிமா, கேளிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். உயர்கல்வி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி கல்வி நிறுவனங்களில் பாராட்டைப் பெறுவதோடு, கேம்பஸ் செலக்ஷனையும் அடைவீர்கள்.

வியாபாரிகளுக்கு 

வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவுண்டு. புதிய முதலீடு செய்வீர்கள். வியாபாரிகள் மொத்தக் கொள்முதல் செய்யுமிடங்களில் நிதானமாகப் பேசினால் அவர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும். மொத்தக் கொள்முதல் வியாபாரம் செய்பவர்கள், வாடிக்கையாக உள்ள வியாபாரிகள் கைநழுவிச் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொழிலதிபர்களுக்கு

தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். ஒருசிலர் வெளிநாட்டில் தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். இதுவரை உங்களிடம் சரியான முறையில் நடந்துகொள்ளாத பங்குதாரர்கள் இணக்கமாக வருவார்கள். தொழிலாளர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். அவர்கள் எப்போதும் முதலாளிக்கு ஆதரவாக இருப்பார்கள். போனஸ் பிரச்சினையில் தாளரமாக நடந்து கொள்வீர்கள். போராட்டம் வராது.

விவசாயிகளுக்கு

விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காத காரணத்தால், விவசாயத்தை மாற்றியமைப்பீர்கள். ஒரேவிதமான விவசாயத்தை செய்வதைவிட காலத்திற்கேற்ற விவசாயத்தைச் செய்து நல்ல மகசூலைப் பெறலாம்.

கலைத்துறையினருக்கு

கலைத்துறையில் உள்ள நீங்கள் இந்த சனிப்பெயர்ச்சியில் மிகவும் பக்குவமாக நடந்துகொள்ளவேண்டும். படவாய்ப்புகள் மிகவும் குறைகிறது. சிறிய செலவில் படமெடுப்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு 

அரசியலில் உள்ளவர்களுக்கு சனி பகவான் புதிய பதவிகளைப் பெற்றிட வழிவிடுகிறார். பொதுமக்கள் மற்றும் தலைமையிடம் உங்கள் செல்வாக்கு உயரும். மக்களை ஏமாற்றும் அரசியல் பிரமுகர்கள் வாகனத்தில் மெதுவாகச் செல்லவேண்டும். விபத்துகளைத் தவிர்க்கலாம்.

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேயருக்கு நெய்விளக்கேற்றி வர, நன்மைகளைப் பெறலாம். தினசரி காலை எழுந்தவுடன் காக்கைக்கு சாதம் வைத்து வர, சனி பகவானின் தாக்கம் வராது. முடிந்தவர்கள் திருநள்ளாறு, குச்சனூர், சிவகங்கை ஆகிய ஊர்களில் அமைந்துள்ள சனீஸ்வரரை வணங்கிவாருங்கள். அன்றாடத் தொழிலாளர்கள் நாட்டுக் கருவேல மரத்தின் பட்டையை உரித்து, அதனைஎப்போதும் உங்களுடன் வைத்து வணங்கிவாருங்கள். சனீஸ்வரர் அருள்பாலிப்பார். இந்த சனிப்பெயர்ச்சியில் மீன ராசி அன்பர்கள் நல்ல பலன்களைப் பெற்றிட சனீஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன்