அய்யனார்

முத்தொழில் தெய்வங்கள் முதன்மைக் கடவுளர்களாகத் திகழ, பலநூறு தெய்வங்கள் அணிசெய்யும் மதம் இந்து மதம். காசி முதல் ராமேஸ்வரம் வரை பக்தர்கள் தத்தம் இஷ்ட தெய்வங்களைத் தேடிச்சென்று வணங்கி மகிழும் தேசம் நமது பாரத தேசம். நம் மக்கள் பிரம்மாண்டமான கோபுரங்களின் நிழலில் அருள்புரியும் இறைவனிடம் பக்தி செலுத்துவதுபோலவே, எளிய கட்டடங்களிலும், கூரையின்றி வெறும் பீடத்தில் நிற்கும் சிறுதெய்வங்களிடமும்  பக்தி செலுத்துகின்றனர்.

பிழைப்பைத் தேடுவதிலேயே வாழ்க்கை முழுவதையும் செலவிடும் எளிய மக்களுக்கு, தன் ஊரின் எல்லையிலும், வீட்டுக்கு அருகிலும் கோவில் கொண்டிருக்கும் அய்யனாரையும், சாஸ்தாவையும், மாரியம்மனையும் அணுகி வழிபடுவதே எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது. விதைக்கும்போதும் அறுக்கும்போதும் ஒரு நடைபோய் “நல்ல விளைச்சலைக் கொடு’ என்றும், “இந்த வருடம் போதுமான மழையைக் கொடு’ என்றும், “இது என் குடும்பத்தின் முதல் வாரிசு; அவன் தலைமுடியை உனக்கு காணிக்கையாக்க வந்திருக்கிறேன். எங்களை நல்லமுறையில் வாழ வைக்கவேண்டும்’ என்றும் உரிமையோடு வேண்டிக் கொள்கிறார்கள்.

இப்படி காலங்காலமாக கிராம மக்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து வணங்கி வரும் தெய்வங்களில் ஒன்றுதான் குமாரமங்கலம் அய்யனார். உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டைக்கு மேற்கே ஐந்தாவது கிலோமீட்டரில், சாலையின் வலப்புறம் இயற்கையான சூழலில் அருள் புரிந்துவருகிறார் அய்யனார்.

ஆங்கிலேயருக்கு முன்பாக அலையலையாகத் தொடர்ந்த முஸ்லிம் மன்னர்களின் படை யெடுப்பின்போது, பல்வேறு இந்துக் கோவில்கள் அவற்றின் செல்வத்துக்காகவும் அந்நிய மதம் என்ற பேதத்தாலும் சூறையாடப்பட்டன. அப்படி இஸ்லாமிய தளகர்த்தர் ஒருவரால் சேதத்துக்கு ஆளான கோவில்களில் குமாரமங்கலம் அய்யனார் கோவிலும் ஒன்று. ஒரே கல்லில் பூரணி, பொற்கலையோடு வடிக்கப் பட்டிருந்த அய்யனாரின் தலைப்பகுதி சேதத் துக்குள்ளானது. (பின்னர் புதிதாக அய்யனார் சிலை ஸ்தாபிக்கப்பட்டது. சேதமான அய்யனார் சிலை இப்போதும் கோவிலில் காணப்படுகிறது.)

அந்தத் தளபதி அய்யனாருக்கு மட்டுமின்றி, அவ்வூர் மக்களின் துன்பத்துக்கும் காரண மானான். குமாரமங்கலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருத்தியின் அழகை வியந்து, அவளைத் தன் மனைவியாக்கிக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறான் அந்தத் தளபதி. இதனை அந்தப் பெண்ணோ, அவளது பெற்றோரோ, அந்த ஊர் மக்களோ எவரும் விரும்பவில்லை. அந்நிய மதத்தவனிடம் வாழ்க்கைப்பட்டு தங்களது பெண் துன்பப்படுவதா என்று நினைத்தனர்.

படைபலம்மிக்க தளபதியை எதிர்க்கமுடியாது என்பதால், இரவோடு இரவாக ஊரைவிட்டு வெளியேறிவிடுவதென தீர்மானித்து, மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் மேற்குநோக்கிக் கிளம்பினர்.

அப்படிச் சென்றவர்கள் வழியில் ஆங்காங்கே குடியேறினர். காலம்கடந்து நிலைமை சீரடைந்தபோது, கொஞ்சம்பேர் திரும்பிவந்து மீண்டும் குடியமர்ந்தனர்.

சென்ற இடத்திலேயே காலூன்றி விட்டவர்கள் அய்யனாரை வழிபடுவதற்காக வந்துசெல்ல ஆரம்பித்தனர். இப்படி இன்று திருச்சி, கடலூர், புதுச்சேரி, சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், சேலம் என பல்வேறு ஊர்களிலிருந்தும் குடும்பத்தோடு வந்து அய்யனாரை வழிபடுகிறார்கள்.

கடலூர் மாவட்டம், எம். பரூரில் இருந்து அய்யனாரை வழிபடவந்த சின்னப்பிள்ளை என்ற பெண்மணி கூறும்போது- “”அய்யனார் வெறும் காவல் தெய்வம் மட்டுமல்ல; தொலைந்த, களவுபோன பொருட் களை கண்டுபிடிச்சுத் தரும் நிஜ காவலரும்கூட சில மாசத்துக்கு முன்னால வீட்டு வாசல்ல எல்லாரும் தூங்கிக்கிட்டிருந்தோம். என் தம்பி மக அகிலா ரெண்டு பவுன் தாலிக்கொடியோட தூங்கிக்கிட்டிருந்தா. நடுராத்திரியில திருடங்க அந்த தாலிக் கொடியை அறுத்துக்கிட்டு ஓட,  “திருடன் திருடன்’னு கத்திக்கிட்டே துரத்தினோம். ஆனா திருடங்களைப் பிடிக்கமுடியலை. வேறென்ன செய்ய?

காவல் தெய்வம் அய்யனார்கிட்ட போய் முறையிட்டோம். சில நாட்களுக்குப் பின்னால மங்கலம்பேட்டை போலீசார் ரெண்டு திருடங்களைப் பிடிச்சு விசாரிச்சாங்க.

அப்போ பரூர்ல தாலிக்கொடியை அறுத்ததையும் ஒத்துக்கிட்டாங்க. தாலிக் கொடி திரும்பக் கிடைச்சது. இப்படி பல பேரோட பிரார்த்தனையைக் கேட்டு, காணாமபோன எத்தனையோ பொருட்களை திரும்பக் கிடைக்கச் செஞ்சிருக்கார் இந்த அய்யனார்” என்றார்.

உளுந்தூர்பேட்டை- சேலம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டபோது சாலையோரமிருந்த கோவிலின் மதில்சுவர்களையும் பரிவார தெய்வங்களையும் அப்புறப் படுத்தச் சொன்னார்கள் அதிகாரிகள். தெய்வங்களை இடம்மாற்றி வைக்க சில ஆகமவிதிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியபோதும், உரிய அவகாசம் வழங்கவில்லை அதிகாரிகள். கோவில் சுற்றுச்சுவரை இடிப்பதற்கு பொக்லைன் எந்திரத்தோடு வந்தார்கள். ஆனால் பொக்லைன் ஓட்டுநருக்கு உடல்நலக் குறைவு, இயந்திரக் கோளாறு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் அவர்களால் சுவரை இடிக்கமுடியவில்லை. உரிய கால அவகாசத்தை அய்யானார் ஏற்படுத்திக்கொடுத்தார். முறைப் படி பரிவார தெய்வங்கள் இடம் மாற்றப்பட்ட பின்னரே அவர்களால் வேலை செய்யமுடிந்தது. இந்த நிகழ்ச்சியை வியப்போடு சொல்கிறார்கள் ஜெயராமும், இப்பகுதி மக்களும்.

தேசிய நெடுஞ்சாலையில் விரையும் பல்வேறு வாகனங்களை கோவில்முன் நிறுத்தி, விபத்தில்லாத பயணம் அமையவேண்டுமென்று வேண்டிச் செல்கின்றனர். நீண்ட பயணத்தால் ஏற்படும் அசதியில் கண்ணயர்ந்தவர்கள் பலர் இக்கோவிலருகே வரும்போது, யாரோ தம்மைத் தட்டியெழுப்பியது போல் உணர்ந்து, அய்யனாரே தங்களை எச்சரித்திருக்கிறார் என்பதை அறிந்து பக்தியோடு இவரை வணங்கிச் சென்றிருக்கிறார்கள். இத்தகைய பல சம்பவங்களை சலிப்பின்றிச் சொல்கிறார் கோவில் பூசாரி ரமேஷ்.

முனீஸ்வரர், வீரனார், தட்சிணாமூர்த்தி, பிடாரியம்மன், தண்டோரா போடும் வாயிற்காவலன் என பரிவார தெய்வங்கள் சூழ, கம்பீரமாக அருள்புரிந்துவருகிறார் குமாரமங்கலம் அய்யனார்.

“”எங்கள் ஊரில் யாரும் காவல் நிலையத்திற்குப் போகமாட்டோம். அய்யனாரே காவல் தெய்வமாகவும் எங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பவராகவும் விளங்குகிறார்” என்கிறார் குமாரமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அரசன்.

சிறப்புகள் பல மிகுந்த அய்யனாரின் அருளுக்குப் பாத்திரமாக, நாமும் ஒருமுறை குமாரமங்கலம் போய்வரலாமே!