குருவே சரணம்!

குருவானவர் சாகரம். பெரும் சமுத்திரம். எங்கும் வியாபித்திருப்பவர். பிரம்மாண்டமானவர். சமுத்திரத்தைத் தேடி நதிகள் சங்கமிப்பதுபோல, குருவை சரணடைந்து ஒடுங்குபவரே உத்தமமான பக்தன்.

பக்தி செய்வதில் கபடமில்லாது, “என்னிடம் ஏதுமில்லை, சகலமும் நீயே. என்னுடைய அசைவு எதுவுமில்லை. ஊசிமுனையளவும்கூட என் முயற்சியில்லை. நீயே இயக்கம், நீயே சாகஸம், நீயே தர்மம், நீயே அனைத்தும்’ என்று சரணடைந்தவரை அணைத்து, தன்னுள் இணைத்துக்கொள்பவரே குரு. அவரே ஞானி. அவரே சத்குரு. அவரே ஜகத்குரு.

ஒடுங்குபவரே உயர்வானவர்; ஒடுங்குபவரை உயரவைப்பவர் குரு. வாழ்வில் மகிழ்ச்சியை அறிய, சுவையை அறிய, வலியை அறிய, இச்சையை அறிய ஆதாரமாக இருப்பது சரீரமே. அத்தனை உணர்வையும் கடந்து, மௌனமாய் இருந்து, அந்த மௌனமும் கடந்து நடந்த சரணாகதியில்தான் உலகிற்கு உயர்வான விஷயங்கள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு ஒடுங்கியவர் அப்பண்ணாச்சாரியார்; உயர்த்தியவர் ஸ்ரீராகவேந்திரர். பக்தியில் சிறந்தது ப்ரகலாத பக்தி. அதற்கடுத்து நாம் போற்றவேண்டியது அப்பண்ணா பக்தி. ஸ்ரீஸ்ரீராகவேந்திரரின் பிரதான சீடர்; ஸ்ரீராகவேந்திரருக்கு அடுத்தபடியாக ஜகம் முழுக்க அறியப்பட்டவர். ஸ்ரீஜகத்குரு ஸ்ரீஸ்ரீராகவேந்திரரை பூஜிக்க, “பூஜ்யாய ராகவேந்திராய’ என்னும் மகா மந்திரத்தை உலகிற்கு அர்ப்பணித்தவர் அப்பண்ணா.

அவர் துங்கா நதியோரம் கண்மூடி அமர்ந்திருக்கிறார். அவர் மனதுள் இனமறியாத எண்ண அலைகள் எழும்பி, தொடர்ந்து ஓயாமல் வீசிக்கொண்டிருக்கின்றன. வாருங்கள்… நாமும் அந்த புண்ணிய பூமிக்குச் சென்று, அந்த தியாக பக்தியை அருகிலிருந்து தரிசிப்போம்.

இன்று நதியில் நீரின் வேகமும் சுழற்சியும் அதிகம். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழை காரணமாக, நீரின் நிறம் செம்மண் சுமந்திருந்தது. துங்கபத்ரா எப்போது வேகமெடுக்கும்- எப்போது அமைதியுறும் என்று கணிக்கவே இயலாது. நதியின் நடுவே ஆங்காங்கே நிமிர்ந்திருக்கும் பாறைகளில் மோதும் நீரின் சிதறல்களில், சூரிய ஒளியால் சிறு வானவில் தோன்றி மந்த்ராலயத்திற்கு மேலும் அழகைக் கூட்டியிருந்தது. சாரல்கள் முகத்தில் தெறித்து ஈரசுகத்தை உடலெங்கும் உணரச் செய்தது. இது மிக சுகானுபவமாக வேயிருப்பினும் இன்று மனம் ஒட்டாமல், தியானத்திலும் பதியாமல் சஞ்சலப்படுகிறதே.

அப்பண்ணாச்சாரியாரின் முகத்தில் கவலை மண்டியது. அவரது நெற்றிச் சுருக்கம் சிந்தனை யின் தீவிரத்தை தெரியப்படுத்துவதாக இருந்தது.

“இந்தக் கலவை உணர்வுகள் ஏனோ பயமளிப்பதாக இருக்கின்றதே! சே… சே… பயமா? ஜகத்குரு ஸ்ரீராகவேந்திரரின் சீடனுக்கா கவலை? அவரின் நிழலே நித்தியம் என்றிருப்பவருக்கு பயமா?’ என அவர் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாலும், அவரையும் மீறியதாக ஏதோ ஒரு உணர்வு மேலெழுந்தது. சிந்தனை வயப்பட்டிருந்தவர் இட வலமாக வேகமாக தலையசைத்து உதறி, ஸ்ரீமடம் நோக்கிப் பார்வையைத் திருப்பினார். அதற்குள்ளாகவே இவரை நோக்கி வேகமாக மூச்சிரைக்க ஓடிவந்து நின்றான் ஒரு இளைஞன்.

“”அடடே, வா முகுந்தா… ஏனிந்த அவரசம்” என்றார் அப்பண்ணா.

“”தங்களை அழைத்துச் செல்லத்தான் அவசர மாக வந்தேன். ஸ்வாமிகள் தங்களைத் தேடி கையுடன் அழைத்துவரச் சொன்னார்” என்றான் முகுந்தன்.

“”பூஜைக்கு துளசி பறித்துக்கொண்டு நிதானித்து வரலாமென்றிருந்தேன்” என்றார் அப்பண்ணா.

“”தீர்த்தப் பிரசாதமே நடந்துவிட்டது. அட் சதையும் பெற்றுக்கொண்டோம் சாமிகளே.”

“”அடடா, பூஜை முடிந்துவிட்டதா? என்ன காரியம் செய்துவிட்டேன். அவரை காக்கும்படி செய்துவிட்டேனே” என்றவரின் உடையில் ஒட்டியிருந்த ஈரமணலைக்கூட உதறாமல் எழ முயன்றவர் கால் இடறித் தடுமாறினார். “ஏதோ இன்று தடுமாற்றமும் தடங்கலுமாகவே நாழிகைகள் நகருகின்றதே. குருவுக்கு கவலை தரும்படி என்ன பாவம் செய்துவிட்டேன்.’ வேக நடையில் குருவின் குடிலை நெருங்க நெருங்க பதட்டம் கூடியது.

உள்ளே சிஷ்யர்களும் பக்தர்களும் கூடியிருந்தனர். நன்கு மெழுகிய சுத்தமான உயரமான பீடத்தில், ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் கண்மூடி அமர்ந்திருந்தார். பத்மாசனமிட்டு அவர் அமர்ந்திருந்த திருக்கோலம் வேதப் பிழம்பாய் ஜொலித்தது.

காவிக்குள் ஒரு காவியம் போன்று, வெண்தாடியுடன், திருத்தேகத்தில் திருச்சின்னங் களுடன், தீப்பிழம்பாய் அவரின் திருக்கோலம் இன்று சிறப்பு தரிசனமாக இருக்கின்றது. தினசரி தரிசனத்தில் இன்று மாறுதலாய்ப் பொலிவு கூடியிருந்தது.

அனைவரும் ஸ்வாமிகளின் தியானம் முடியக் காத்திருந்தனர். அருகே சிறிய மரப்பீடத்தில் ஏற்றிவைத்திருந்த விளக்கின் வெளிச்சத்தில், ஸ்ரீராகவேந்திரர் அழகான ஜுவாலையாக அமர்ந்திருந்தார். அப்பண்ணாவுக்கு காண்பது நிறைவாக இருந்தாலும், பதட்டம் மட்டும் சிறிதும் குறையாமல் இருந்தது. பட்டுப் பீதாம்பரத்துடன் திவான் வெங்கண்ணா நின்றிருந்த பவ்ய கோலத்தைப் பார்த்தார்.

அவரும் இவரை நோக்க, இருவர் கண்களின் கேள்விக்குறிகள் இடம் மாறின.

ஸ்வாமிகளின் விழிகள் மெல்லத் திறந்தது. தாமரைக்குள் சூரியன் போன்ற தகதகக்கும் நயனம். என்னே ஒரு சக்தி, எப்பேற்பட்ட ஆகர்சனம். கனிவான அத்திருப்பார்வை அப்பண்ணாவிடம் நிலைத்தது. பனியுருகி தன் உடல்மேல் கவிழ்த்தாற்போல் பிரம்மை. இல்லையில்லை நிதர்சனம்.
“முன்பெல்லாம் ஸ்வாமிகளை தரிசிக்கையில், தாய்ப்பசுவின் பரிவில் கன்றின் மயக்கத்திலிருந்தோம். இன்று இது முற்றிலும் மாற்றமாக இருக்கின்றதே. ஏதோ ஒரு புது உணர்வு உடலில் சேர்வதை அனுபவிக்க முடிகிறதே. ஆனந்தமாய் ஓர் அருவி பாய்ந்து, உச்சி முதல் உள்ளங்கால் வரை வருடுவதான உணர்வா? அன்றி, இது எண்ணங்களில் பிடிபடாத தெய்வீக அனுபவமா?’

அப்பண்ணா, தான் இலேசாவதாக உணர்ந்து சிலிர்த்தார்.

“”வா அப்பண்ணா! பதட்டம் தணிந்ததா?” பிரம்மம் பேசிற்று. “”பூஜைக்கு வர இயலாத படிக்கு குழப்பமும் பதட்டமுமடைந்து, மறத்திக்குட்பட்டு, தாமதமடைந்து நடை தடுமாறிற்றோ?”

முகுந்தனின் முகத்தில் ஆச்சரியம்.

அப்பண்ணாவுக்குத் தெரியும்- முக்காலம் உணர்ந்தவருக்கு கடந்த நிமிடம் தெரியாதா?

“”உண்மைதான் ஸ்வாமி! ஏனோ மனம் ஒரு நிலையிலில்லை. தடுமாற்றமும் வேதனையும் இனம் புரியாமலிருக்கிறது.”

வெள்ளை தாடிக்குள் அவரின் தெய்வீகப் புன்முறுவல். அருகழைத்தார். தீர்த்தமும் மந்த்ராட்சதையும் பெற்றுக்கொள்ளச் செய்தார். மெல்ல எழுந்து நடந்தவர், சற்றே நிதானித்து யோசனையுடன் திரும்பினார்.

“”முகுந்தா! என்னுடன் வெங்கண்ணரும் திம்மண்ணாவும் வெங்கண்ணபட்டரும், உடன் இரு சிஷ்யர்கள் மட்டும் வரட்டும். மற்றவரெல்லாம் மடத்திலேயே இருக்கலாம்” என்றவர் முன்னே நடக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீராகவேந்திரர் பலபொழுதுகளில் நடந்து நதியோரம் வெகுதூரம் வெகுநேரம் செல்வதுண்டு. பெரும்பாலும் வழக்கமான இடத்தினையே உலா வரப் பயன்படுத்துவார். இன்று ஏனோ மேற்குநோக்கி கிராமத்தின் பக்கவாட்டுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தார். நெடிதுயர்ந்த அவரின் நடை முதலில் நிதானமாயிருந்தாலும், பிறகு வேகமானது. முதலில் திவான் வெங்கண்ணா மௌனம் திறந்தார்.

“”ஸ்வாமி! தாங்கள் வேறு பாதையினைத் தேர்ந்தெடுத்தமைக்கு ஏதேனும் காரணமுண்டா ஸ்வாமி?”

“”காரணமில்லாமல் காரியமில்லை. நாமிப் பொழுது செல்கின்ற இடத்திற்கு இதிகாச தொடர்புண்டு. அதனால் எனக்கு புண்ணியப் பேறு அமையப் போகின்றது” என்று புன்னகைத்தார்.

“”புரியவில்லையே ஸ்வாமி!” என்றார் அப்பண்ணா.

“”அருகில் வா அப் பண்ணா” என்று வாத் சல்யத்துடன் அழைத்தார். நெருங்கி சென்று வாய்பொத்தி முகம்தாழ்த்தி நின்றவரின் சிரம்தொட்டு வருடினார். கருணையுடன் நோக்கினார்.

“”உன்னால், எனக்கும் இந்த உலகிற்கும் ஒரு காரியம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கான காரணத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டி யிருக்கிறது” என்றார் ஸ்ரீராகவேந்திரர்.

“”மிகவும் பெருமிதமாக இருக்கின்றது ஸ்வாமி. தங்களது திருவாக்கினாலேயே அதைப்பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது” என்றார் வெங்கண்ணா.

ஸ்வாமிகள் மீண்டும் மௌனமானார். இம்முறை மௌனம் நீண்டது. இளஞ்சூடான மணல் துகள்கள், கால் விரல்களின் இடையே அரைபட்டது. ஒவ்வொரு அடியிலும் குதிகால்கள் மணலில் புதைந்து புதைந்து மீண்டது. அந்த பரந்த வெளியில், முன்பாக குரு ராகவேந்திரர் நடந்து சென்றுகொண்டிருக்க, சீரான இடைவெளியில் பணிவுடன் பின்தொடர்ந்தனர் மற்றவர்கள்.

(தொடரும்)