மாசி மாத ராசிபலன்கள்


மேஷம்

இந்த மாதம் கிரகநிலைகள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால், அட்டமச் சனியின் வேதனை பாதிக்காது. என்றாலும் ஒருசிலருக்கு வேலைப்பளுவால் உடல்அசதி, சோர்வு போன்ற சிறுசிறு பீடைகள் தோன்றி மறையலாம். பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருக்காது. தேவைகள் அதிகம் இருப்பினும்- அதை “ஓவர்டைம் வொர்க்’ என்ற முறையில் உழைத்து சரிக்கட்டலாம். நெருங்கிய நண்பர் அல்லது முக்கியமான உறவினர் ஒருவர் உங்களுக்கு மறைமுகமாக கெடுதல் செய்து உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கலாம் அல்லது கெடுக்கலாம். இது சனி பகவானின் திருவிளையாடல் என்றாலும், உங்கள் விடாமுயற்சியும் வைராக்கியமும் உங்களுக்கு உறுதுணையாக அமைந்து அவற்றை சமாளித்து வெற்றிகொள்ளலாம். காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் மிளகு தீபம் (நெய்விளக்கு) ஏற்றி வழிபடவும்.

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால், அலைச்சலும் திரிச்சலும் அதிகமாகக் காணப்பட்டாலும் எடுத்த காரியத்தை தொடுத்து முடித்து சாதனை படைக்கலாம். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாத மாதிரி, எதற்கும் மயங்கமாட்டீர்கள்; தயங்கமாட்டீர்கள். 7-ல் யோகாதிபதி சனி நின்றாலும் 4-ல் உள்ள ராகுவைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணைக்கு சில சமயம் பிணி ஏற்பட்டு கவலை ஏற்படுத்தும். என்றாலும் குரு பலத்தால் நிவர்த்திக்கும் இடமுண்டு. தவிரவும் விவரம் அறிந்த நாள்முதல் கொல்லன்பட்டறையில் பழுக்கக் காய்ச்சிய கம்பியை அடித்து அடித்து வளைப்பதைப்போல, கஷ்டப்பட்டு கஷ்டப் பட்டு முன்னேறிய வாழ்க்கை என்பதால் துன்பத்தைக் கண்டு துவளமாட்டீர்கள். கஷ்டம் இஷ்டமானதுதான் என்பதுதான் உங்கள் தனித்தன்மை! அந்த நெஞ்சுரமே உங்கள் நெஞ்சுக்கு நீதி! வெளிப்பிரச்சினைகளை எல்லாம் எளிதாக சமாளிக்கும் உங்களுக்கு வீட்டுப்பிரச்சினைதான் தலைவலி.

மிதுனம்

இந்த வாரம் ராகு- கேது, சனி ஆகிய மூன்று பாவகிரகங்களும் பாவ ஸ்தானத்தில் நின்று பலன்தருவதால் “டபுள் நெகட்டிவ் ஒரு பாசிட்டிவ்’ என்றும், “டபுள் மைனஸ் ஒரு பிளஸ்’ என்றும் கெடுதல்கள் எல்லாம் நல்லதாக மாறும் நிலை. அதேசமயம் யாரை நல்லவர் என்று நம்புகிறீர்களோ அவர்கள்தான் கெட்டவர்களாக மாறி கெடுதல்கள் செய்வார்கள். யாரை கெட்டவர் என்று ஒதுங்கியிருக்கிறீர்களோ அவர்கள்தான் உங்கள் கஷ்டத்தைக் கண்டு ஓடிவந்து உதவி செய்து ஆறுதல் கூறுவார்கள். இதைத்தான் எம்.ஜி.ஆர். படத்தில் “நடக்கும் என்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்து விடும்’ என்று பாடினார். சாதக பாதகங்கள் கலந்திருக்கும் மாதம் என்றாலும் சாதனைகள் தொடரும். வேதனைகள் விலகும். மாதமுற்பகுதியில் சூரியன் 8-ல் இருக்கும்வரை சிலருக்கு காரிய தாமதம், கடன் கவலையாக இருந்தாலும், மாசி 1-ல் (13-2-2016-ல்) சூரியன் 9-ல் மாறியதும் சிரமங்கள் படிப்படியாகக் குறையும். லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

கடகம்

இந்த மாதம் தனாதிபதி சூரியன் தொடக்கத்தில் 7-ல் நின்று குரு பார்வையைப் பெறுவதால் பொருளாதாரத்தில் பாதிப்புக்கு இடமில்லை. அத்துடன் சனி, செவ்வாயும் சூரியனைப் பார்ப்பதால் பாக்கிசாக்கிகள் வசூலாகும். ஏற்கெனவே செய்த தொழில்துறையில் அல்லது வேலையில் வரவேண்டியவை வந்துசேரும். அடுத்து புதிய முயற்சிகளில் ஆர்வம், அக்கறை உண்டாகும். சிலர் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். சிலர் புதிய வேலையை ஒப்புக்கொள்ளலாம். சிலர் புதிய கான்ட்ராக்ட் வேலை எடுக்கலாம். சிலருக்கு  பழைய கடன் பிரச்சினைகள் தலைவலியாக இருந்தாலும் பழைய டென்ஷன் இருக்காது. படிப்படியாக கடன் சுமை குறையும். சிலர் புதுக்கடன் வாங்கி பழைய கடனை அடைக்கலாம். சிலர் இடத்தை விற்று கடனை அடைக்கலாம். சிலர் முக்கிய பிரமுகர்களின் தொடர்பால் உதவிகள் கிடைக்கப்பெற்றும் கடன்சுமையைக் குறைக்கலாம். மொத்தத்தில் இந்த மாதம் மகரத்திலும் கும்பத்திலும் சூரியன் சஞ்சரிக்கும் காலத்திற்குள் எல்லாக் கடன்களையும் அடைத்து நிம்மதிபெறலாம். திருச்சேறை சென்று கடன் நிவர்த்தீஸ்வரரை வழிபடவும்.

சிம்மம்

மாத முற்பகுதி வரை ராசிநாதன் சூரியன் 6-ல் (மகரத்தில்)- பிறகு ராசிக்கு 7-ல் சஞ்சாரம். 6-ல் சூரியனும் ஜென்ம ராகுவும், அவர்களுக்கு சனி பார்வையும் இருப்பதால் ஆரோக்கியக் குறைவும், ஒருசிலருக்கு அறுவை சிகிச்சைக்குரிய சூழ்நிலையும் காணப்படலாம். சில நேரம் தைரியமும் வைராக்கியமும், சில நேரம் குழப்ப நிலையும் ஏற்படலாம். ராகுவும் கேதுவும் சுற்றியுள்ளவர்களில் யார் நல்லவர்கள்- யார் கெட்டவர்கள் என்று எடைபோட முடியாதபடி ஒரு குழப்பநிலை உருவாக்கலாம். மனதில் உறுதியும் பேச்சில் ஆணித்தரமுமாக வைராக்கியமாக செயல்படுவதால், உங்கள் நடவடிக்கைகள் எதிரிகளுக்கும் அச்சமூட்டுவதாக அமையும். முக்கியமான நேரத்தில் குடும்பத்தாரின் ஆலோசனைகளைப் பெற்று சில முடிவுகள் எடுக்கவேண்டி வரும். அதேபோல கணவன்- மனைவிக்குள் அனுசரணையான சூழ்நிலை உருவாகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடக்கும் தன்மையும் ஏற்படும். அத்துடன் மாதப்பிற்பகுதியில் ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் தெளிவும் ஏற்படும். தன்வந்திரி பகவானை வழிபடவும்.

கன்னி

மாதம் முழுவதும் சனி மூன்றிலும், 12-ல் ராகுவும், 6-ல் கேதுவும் இருப்பதால் உங்கள் காரியங்களிலும் செயல்களிலும் முன்னேற்றமும் திருப்தியும் உண்டாகும். ஜென்மத்தில் உள்ள குரு பிப்ரவரி 7-ல் சிம்மத்துக்கு மாறுவதால் விரயச் செலவுகளைத் தவிர்க்கமுடியாது. தேவையற்ற விரயங்களும் தேவையற்ற பயணங்களும் ஏற்படலாம். அயராத உழைப்பும் தளராத முயற்சியும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றாலும், ஆங்காங்கு சாலை பழுதுபார்க்கும் சமயத்தில் “டேக் டைவர்சன்’ என்று மாற்றுப்பாதையில் திருப்பிவிடும்படியான நிகழ்வுகளைச் சந்திப்பதுபோல சில மாற்றங்களையும் சந்திக்கவேண்டும். 3-ல் உள்ள சனி தைரியத்தையும் வைராக்கியத்தையும் தருவதோடு, உறவினர்கள், நண்பர்கள், உடன்பிறப்புகள் வகையிலும் உதவிகளும் எதிர்பார்க்கலாம். தொழில், பதவி, வேலையில் வழக்கம்போல் எல்லாம் செயல்படும். கூடியவரை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு குடியிருப்பு மாற்றம் வரலாம்.

துலாம்

துலா ராசிக்கு ஆரம்பத்தில் 12-ல் உள்ள குரு பிப்ரவரி 7-ல் 11-ஆம் இடம் சிம்மத்துக்கு மாறுவார். அதனால் மாத ஆரம்பத்தில் காணப்பட்ட தேவையற்ற விரயங்களும் செலவுகளும் குறைந்துவிடும். முயற்சிகளில் வெற்றியும் லாபமும் உண்டாகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். பழைய சலசலப்புகள் மறைந்துவிடும். சிலர் தொழில் போட்டிகளை சமாளித்து வெற்றிகாணலாம். உத்தியோகத்திலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் உண்டாகும். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மனதை அதிகம் ஆக்ரமிக்கும்.  கூடியவரை புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் ஆறப்போடுவது நல்லது. திருமணம், வாரிசு போன்ற யோகங்கள் செயல்படும். சிலர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி எடுத்துப் போகலாம். மனம் நிறைந்த வேலையும் கைநிறைய சம்பாத்தியமும் அமையும். அதனால் இடம், வீடு, வாகன யோகத்தை செயல்படுத்தலாம். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமி, ஆரணவல்லியை வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. 11-ல் உள்ள குரு பிப்ரவரி 7-ல், 10-ல் சிம்ம ராசிக்கு மாறுவார். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வமும் அக்கறையும் காட்டலாம். ஆசைப்பட்டதை வாங்குவதைவிட அத்தியாவசியமானதை வாங்கப் பழகிக்கொள்ள வேண்டும். அதேபோல கடன் வாங்குவதிலும் ஒரு கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது யாரிடமும் கடன் வாங்கலாம்- எவ்வளவு வட்டியானாலும் வாங்கலாம் என்ற கொள்கையை மாற்றி, தரம் உள்ளவர்களிடம் குறைவான வட்டிக்கு வாங்குவது என்ற கொள்கையைக் கடைப்பிடித்தால், உங்கள் மதிப்பும் மரியாதையும் கௌரவமும் காப்பாற்றப்படும். இல்லாவிட்டால் கம்பர் பாடிய மாதிரி கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற நிலையாகிவிடும். ஜெய ஸ்தானத்தில் (11-ல்) உள்ள குரு பிப்ரவரி 7-ல், 10-ல் மாறுவது உங்களுக்கு அனுகூலமான காலம்தான்.

தனுசு

குடும்பத்தில் மிகவும் எச்சரிக்கையாகப் பேச வேண்டும். உங்கள் பேச்சுக்களால் குடும்பத்தில் குழப்பம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒருசில அரசு ஊழியர்கள் புதிய இடத்துக்கு மாற்றலாகிச் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். புதிய பொறுப்புகள் வந்துசேரும். பூர்வீக வீட்டைப் பழுதுபார்க்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்கு வியாஜ்ஜியங்களில் தீர்ப்புகள் வர தாமதமாகும். உடல்நிலையில் சிறுசிறு மருத்துவச் செலவுகள் வந்துசேரும். நீண்டநாட்களாக பிள்ளைகள் வகையில் இருந்துவந்த தொல்லைகள் மாறும். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு அனுகூலமான தகவல்கள் வந்துசேரும். வெளிநாட்டு வேலை முயற்சிகளும் கைகூடும். திருமணமாகாதவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கூடிவரும். இளைய சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

மகரம்

நீண்டகால கனவுத்திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் வகையில் எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே தீராத பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வழக்குகள் முடிவுக்கு வந்து கணவன்- மனைவி சேர்ந்து வாழலாம். பிள்ளைகள், தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் நீங்கும். ஒருசிலர் பங்காளி பிரச்சினை காரணமாக பூமி சம்பந்தப்பட்ட வழக்குகளை சந்திக்க நேரலாம். செய்துவந்த சுயதொழிலில் சிறிது மாற்றம் செய்து செயல்படுவீர்கள். அதற்கான முயற்சிகளும் பலனளிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய முடியவில்லையே என்ற கவலை இருந்தாலும், தேவைகள் பூர்த்தியாகும். தாமதமாகுமே தவிர நிறைவேறாமல் இருக்காது.

கும்பம்

புதிய பொருளாதார வாய்ப்புகள் வரும். வரவு ஒருபுறம் வந்துகொண்டிருந்தாலும் செலவுகளும் அதற்குச் சமமாக இருக்கும். சில சமயம் வரவை மீறிய செலவுகளும் அமையும். உடன்பிறந்தவர்கள் மத்தியில் பொறுமையைக் கையாள்வது மிக அவசியம். தாய்வழியில் சிறுசிறு செலவினங்களை சந்திக்க நேரும். கருத்து வேறுபாடுகளும் வந்துநீங்கும். ஜென்ம கேது ஆன்மிகத்தில் அதிக நாட்டங்களைத் தருவார். ஆன்மிக வழிபாடு, தெய்வ கைங்கர்யங்கள், தெய்வப் பணிக்கு உண்டான பொறுப்பு, பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல் போன்ற பலன்களை சந்திக்க வாய்ப்புகள் கூடிவரும். உங்களை ஏமாற்றியவர்கள் உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள். வேலைப்பளு சற்று கூடுதலாகும். அதனால் உடல்நலத்தில் சிறு சோர்வுகள் ஏற்படும். பாதிப்புக்கு இடமில்லை.

மீனம்

12-ஆம் இடத்துக் கேது பொருளாதாரத்தில் சில நெருக்கடியான சூழ்நிலைகளை உருவாக்கினாலும் அவற்றை சமாளிக்கும் வழிகளையும் கூடவே தருவார். ஒருசில தம்பதிகளுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்வது பரிகாரமாக அமையும். மாதப் பிற்பகுதியில் பணப்புழக்கம் சற்று தாராளமாகவே அமைவதால் அத்திவாசியப் பொருட்களை வாங்கலாம். கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் கவனமுடன் படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். ஹயக்ரீவரை வழிபடுவதோடு, ஹயக்ரீவ மந்திரத்தையும் பாராயணம் செய்வது ஞாபக சக்தியை அதிகரித்து படிப்பிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும். உயர்கல்வி யோகமும் அமையும். விட்டுச் சென்ற உறவுகள் மீண்டும் வந்துசேரும். குலதெய்வ வழிபாட்டுப் பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

மேஷம்

மேஷ ராசிநாதன் செவ்வாய் மாத முற்பகுதிவரை 4-ல் நீச ராசியில் நிற்கிறார். அதனால் உங்களுடைய ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் உருவாகலாம். அல்லது இடம் சம்பந்தமான சிக்கல்களைச் சந்திக்க நேரும். சிலருக்கு தாய் அல்லது சகோதர வகையில் பிணி, வைத்தியச் செலவு ஏற்படலாம். என்றாலும் 5-ல் குரு பலம்பெற்று ராசியைப் பார்ப்பதால், சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பதுபோல சமாளித்துவிடலாம். 7-ல் சனி. கணவன்- மனைவிக்குள், கடன் பிரச்சினையால் கவலை அல்லது கருத்துவேறுபாடு உருவாகலாம். கடன் வாங்குவது தவறில்லை. ஆனால் அநியாய வட்டிக்கும், தரம் இல்லாதவர்களிடமும் கடன் வாங்கக்கூடாது. 6-க்குடைய புதன் மாதப் பிற்பகுதியில் சிம்மத்தில் வக்ரமடைவதால் புதியவர்களின் உதவியால் கடன் பிரச்சினைக்கு வழி பிறக்கும்.

பரிகாரம்: மதுரை- திருப் பரங்குன்றத்தில் சோமப்பா சித்தரை யும், கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி களையும் வழிபடலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் கடகத்தில் வக்ரமாக இருப்பதால் எதிர்ப்பு, இடையூறு, கடன், அரசு அதிகாரிகளின் தொல்லைகளை சந்திக்கும் சூழ்நிலை. 5-க்குடைய புதன் சிம்மத்தில் வக்ரகதி என்பதால் மனோ தைரியத்தால் பிரச்சினைகளை சந்தித்து சமாளிக்கலாம். 6-ல் சனி இருப்பது சத்ருஜெயம் என்றாலும், செப்டம்பர் 5-ஆம் தேதி 7-ல் மாறுவதால், மனைவி வகையில் வைத்தியச் செலவும், செயல்படமுடியாதபடி தேக்க நிலையும் காணப்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சிலருக்கு விவாகரத்து அல்லது மறுமணம் போன்ற பலன்கள் நடைபெறும். திருமணமானவர்களுக்கு புத்திரர்கள் வகையில் கவலையும் பிரச்சினைகளும் ஏற்படலாம். செவ்வாய், சனி பார்வையால் காதல் விவகாரத்தில் சிலர் சிக்கித் தவிக்கும் நிலை! எதிர்ப்புகளை சமாளிக்கவேண்டும். ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும்.

பரிகாரம்: திருவாரூர் அருகில் மடப்புரம் பகுதியில் தட்சிணாமூர்த்தி மடம் (ஜீவசமாதி) சென்று வழிபட லாம்.

மிதுனம்

மிதுன ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் கன்னியில் ஆட்சி, உச்சம் பெறுவார். பிற்பகுதியில் சிம்மத்தில் வக்ரமடைவார். முற்பகுதியில் பொருளாதாரத்திலும் தொழில், உத்தியோகத்திலும் பிரச்சினை இல்லை. படிப்படியாக முன்னேற்றமும் விருத்தியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் எதிர்பார்க்கலாம். மாதப் பிற்பகுதியில் ஆரோக்கியம் பாதிக்கலாம். எதிர்பாராத வைத்தியச் செலவு வரலாம். உடன்பிறந்தோர் வகையில் கொடுக்கல்- வாங்கலில் அல்லது சொத்து வகையில் பிரச் சினைகள் உருவாகி சஞ்சலம் ஏற்படலாம். சிலருக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் வகையில் அனுதாபம் ஏற்பட்டு, வெளியில் கடன்வாங்கி அவர்களுக்கு உதவி செய்வீர்கள். அவர்கள் அசலையும் கட்டமாட்டார்கள்; வட்டியையும் கட்டமாட்டார்கள். கொடுத்தவர்கள் உங்களை விரட்டுவார்கள். இதனால் யாருக்குமே அனுதாபப்படக்கூடாது என்ற ஞானம் உதயமாகும்.

பரிகாரம்: கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரிடம் பிரச்சினையை முறையிடுங்கள். குருநாதர் ஜீவசமாதியையும் வழிபடவும்.

கடகம்

கடந்த ஜனவரி முதல் எட்டு மாத காலம் செவ்வாய், சனி கோட்சார கிரகங்களின் சஞ்சாரத்தால் எந்த ரூபத்திலேயோ பெரும் கடனாளியாகிவிட்டீர்கள். ஐந்து வட்டி கடனை பத்து வட்டிக்கு வாங்கி அடைத்தீர்கள். பத்து வட்டிக்கடனை 15 ரூபாய் வட்டிக்கு வாங்கி அடைத்தீர்கள். வாக்கு நாணயத்தைக் காப்பாற்ற கடன் சுமையை தலைக்கு மேல் பெரும்பாரமாக ஏற்றிவைத்துவிட்டு தவிக்கிறீர்கள். சிலர் ஊரைவிட்டு ஓடிவிடலாமா என்றுகூட விபரீத முடிவுக்கு வந்தார்கள். எல்லா இரவுகளும் விடியத்தானே வேண்டும் என்பதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு ஏற்படத்தானே வேண்டும். கௌரவத்துக்கு பயந்தவர்கள் வாங்கியதை அடைக்கத் துடிப்பார்கள். எல்லாவற்றையும் உதிர்த்து மனசாட்சியைக் கொன்றவர்கள் “தரமுடியாது முடிந்ததைப்பார்’ என்று நிமிர்ந்து வாதாடுவார்கள். இந்த மாதப் பிற்பகுதியில் நல்லவர்களும் நாணயத்தைக் காப்பாற்ற நினைப்பவர்களும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று விடுதலை பெறலாம்; விமோசனம் அடையலாம்.

பரிகாரம்: திண்டுக்கல்- கசவனம்பட்டி சென்று மௌனகுரு ஜோதி சித்தரை வழிபட லாம்.

சிம்மம்

சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பகுதிவரை சிம்மத்தில் ஆட்சியாக இருப்பார். அடுத்து 18-ஆம் தேதி கன்னியில் மாறுவார். அங்கு ராகுவோடு  சேருவார். ராகு, கேது, சனி, செவ்வாய் சம்பந்தம் இருந்தாலே சிக்கல்தான். சிலரை ஊரைவிட்டுக் கிளப்பும். சிலருக்கு வாழ்க்கைத் துணையைப் பிரியச் செய்யும். சிலருக்கு வாரிசு கவலையை உருவாக்கும். சிலரை மது, மாது, சூது போன்ற பாதகங்களில் ஈடுபடச் செய்து கேவலப்படுத்தும். அரசியல்வாதிகளுக்கு பதவிச் சிக்கல் உருவாகும். விபத்து, நோயால் வேதனை ஏற்படலாம். ஜனவரியில் ராகு-கேது பெயர்ச்சி யாகும் வரை நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் நாள் ஓடும். நல்லவர்களை தெய்வம் கைவிடாது.

பரிகாரம்: சென்னை- திருத்தணி அருகே ஆற்காடுகுப்பம் சென்று அனுமந்தசுவாமி ஜீவசமாதியை வழிபடலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மீண்டும் 3-ஆம் இடத்தில் சனி மாறிவிட்டது. மாதப் பிற்பகுதியில் விரயச்செவ்வாயும் 3-ஆமிடத்து சனியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். கடந்த சில மாதங்களாகவே செவ்வாய் அஸ்தமனம், நீசம் என்பதால், கணவன் வகையில் மனைவியும், மனைவி வகையில் கணவனும் வேதனைகளை சந்திக்க நேர்ந்தது. ஒருசிலர்  விபத்து, எலும்பு முறிவு, ஆபரேஷன் போன்ற சங்கடங்களையும் சந்தித்து வருகிறார்கள். நட்பைவிட பணமே பிரதானம் என்று கருதிய சந்தர்ப்பவாதிகளுக்கு இக்காலம் இழப்பு, ஏமாற்றம், பகை, அரசு வழக்கு போன்றவற்றை சந்திக்கும் நிலை. பூர்வ புண்ணியம் வலுவாக இருந்தால் மலைபோல வருபவை பனிபோல விலகிவிடும்.

பரிகாரம்: திண்டுக்கல் ஓதசுவாமிகள் ஜீவசமாதியில் வழிபடலாம்.

துலாம்

துலா ராசிக்கு தற்காலிக ஜென்மச்சனி விலகி, பாதச் சனியாக மாறிவிட்டது. மாதப் பிற்பகுதியில் சிம்மச்செவ்வாயும் விருச்சிகச் சனியும் ஒருவரையொருவர்  பார்த்துக் கொள்கிறார்கள். செவ்வாய், சனி, ராகு- கேது சம்பந்தம் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களைத் தரும். (செவ்வாய் கேதுவைப் பார்ப்பார். சனியை ராகு பார்ப்பார்). விதை விதைத்தால் பயிரை அறுவடை செய்யலாம். வினை விதைத்தால் விபரீத விதிப்பயனை அனுபவிக்கலாம் என்பதுபோல, அவரர்களின் நற்செயலுக்கும் துர்செயலுக்கும் ஏற்ற பலன்களை அனுபவிப்பார்கள். நல்லவர்கள் வாழ் வார்கள்; கெட்டவர்கள் வீழ்வார்கள்.

பரிகாரம்: சிங்கம்புனரி வாத்தியார் கோவில் சென்று முத்துவடுகச்சித்தர் ஜீவ சமாதியை வழிபடலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் கடந்த ஏழெட்டு மாதமாக அஸ்தமனமாகவும் இருந்தார்; சிலமாதம் நீசமாகவும் இருந்தார். அத்துடன் செவ்வாய், சனி பார்வையும் இருந்தது என்றாலும் கடக குருவின் பார்வையும், அடுத்து சிம்ம குருவின் சஞ்சாரமும் நல்லவர்களுக்கு ஒரு கவசம்போல இருந்தது. ஊழல் பேர்வழிகளுக்கும் கள்ளம், கபடு, சூது, வஞ்சகம் புரிந்தவர்களுக்கும் சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளியும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்த மாதம் விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு செவ்வாயின் மாற்றமும் குருவின் பலமும் ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி உங்களை வழிநடத்தும். எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பு உண்டு. எல்லா சாபத்திற்கும் சாபவிமோசனமுண்டு. எல்லா தோஷங்களுக்கும் பரிகாரம் உண்டு.

பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்த மங்கலம் சென்று (தத்தகிரி முருகன் கோவில்) குருநாதர் ஜீவசமாதியை வழிபடலாம்.

தனுசு

தனுசு ராசிக்கு 9-ல் குரு நின்று ராசியைப் பார்ப்பது உத்தமம். 4-ஆமிடத்து கேதுவும் 10-ஆமிடத்து ராகுவும் 12-ஆமிடத்து விரயச் சனியும் ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு பிரச்சினையைத் தருகிறது. சிலருக்கு வீடு மாற்றம், சிலருக்கு தொழில் கவலை, சிலருக்கு குரும்பத்தில் நல்ல காரியம் தள்ளிப்போவதால் உள்ளத்துடிப்பு, சிலருக்கு பிள்ளைகள் பற்றிய கவலை, சிலருக்கு கடன் பிரச்சினை, சிலருக்கு வைத்தியச்செலவு! என்றாலும் மாதப் பிற்பகுதியில் செவ்வாயின் மாற்றத்திற்குப்பிறகு ஒவ்வொரு பிரச்சினையாகத் தீர்வுக்கு வரும். எந்தக் கஷ்டமும் நிரந்தரமல்ல; எந்த இன்பமும் நிரந்தரமல்ல. இரவும் பகலும் மாறிமாறி வருவதுபோல இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும். எல்லாவற்றையும் சமாளிக்க சித்தர்களின் ஜீவசமாதியை வழிபடவும்.

பரிகாரம்: கரூர் அருகில் நெரூர் சென்று சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவசமாதியை வழிபடலாம்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 11-ல் மாறிவிட்டார். ராசியைப் பார்க்கிறார். மதிப்பு, மரியாதை, கௌரவத்துக்குக் குறைவில்லை. ஆனால் குரு 8-ல் மறைந்து 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால், வரவுக்கு மீறிய செலவுகளும் மிச்சப்படுத்தமுடியாத விரயங்களும் தவிர்க்க முடியாதவை. மாதப் பிற்பகுதியில் கடகச் செவ்வாயும் சிம்மத்திற்கு மாறுவார். அட்ட மாதிபதி சூரியன் 9-க்கு மாறுவார். எனவே சில விஷயங்களில் முடிவெடுக்கமுடியாத நிலையும் சில விஷயங்களில் எதிர்மறைப் பலனும் சில விஷயங்களில் எதிர்பார்த்தபடி நல்லமுடிவும் என அவியல் பலனாக நடக்கும். செலவுகள் அதிகம்; சேமிப்புக்கு இடமில்லை.  ஆனால் கௌரவம் பாதிக்காது.

பரிகாரம்: திருச்சி- துறையூர் பாதையில், திருவெள்ளறை சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடலாம்.

கும்பம்

கும்ப ராசிநாதன் சனி 10-ல் திக்பலம் பெறுகிறார். மாதப்பிற்பகுதியில் கடகச் செவ்வாய் சிம்மத்துக்கு மாறி, சனி- செவ்வாய் பார்வை ஏற்படும். பொதுவாக செவ்வாய்- சனி பார்வை கெடுதல் என்றாலும், செவ்வாய் வீட்டில் இருக்கும் சனிக்கும் சூரியன் வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கும் விதிவிலக்கு உண்டு. தூக்குதண்டனைக் கைதிக்குக்கூட ஜனாதிபதி கருணைமனுவால் மாற்றம் ஏற்படுவதுபோல நிவர்த்தி உண்டாகும். அதற்கு முக்கிய காரணம் குருபார்வை! (ராசியை குரு பார்க்கிறார்). குரு பார்க்க கோடி நன்மை! எனவே ஏழெட்டு மாதம்- ஏன், ஒரு வருடம்  என்றுகூட சொல்லலாம்- எதிர்பார்க்கும் உதவிகள் “இன்று போய் நாளை வா’ என்ற கதையாக தள்ளிப்போகிறது. நடக்குமா நடக்காதா- கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகமும் வலுக்கிறது. “வரும்; ஆனால் வராது’ என்ற மாதிரி மதில்மேல் பூனையாகத் தவிக்கும் உங்களுக்கு, இந்த மாதப் பிற்பகுதியில் செவ்வாய் சிம்மத்துக்கு மாறியதும் தீர்வு கிடைத்துவிடும்.

பரிகாரம்: நாகப்பட்டினம் அருகில் வடக் குப் பொய்கைநல்லூர் சென்று வழிபடலாம்.

மீனம்

மீன ராசிக்கு தற்காலிக அட்டமச் சனி விலகிவிட்டது. ஆனால் ராசிநாதன் குரு 6-ல் மறைந்துவிட்டார். ஒரு கதவு திறந்தது; ஆனால் மறுகதவு மூடிவிட்டது. எனவே ஏதாவது ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். ஆனால் மற்றொரு புதுப்பிரச்சினை உருவாகி பயமுறுத்தும். ஆக அட்டமத்துச் சனிகூட பரவாயில்லை என்று சொல்லுமளவு நிலைமை மாறிவிட்டது. இதற்குக் காரணம் ஜென்ம கேதுவும் ஏழாமிடத்து ராகுவும்தான். பரிகாரம் செய்து நிவர்த்தி தேடலாம் என்று நினைத்தாலும், பரிகாரம் செய்யவிடாமல் ஏதாவது ஒரு தடை ஏற்படுகிறது. நோய்க்கு மருந்து வாங்க குடும்ப டாக்டரிடம் போனால், அவரும் வெளியூர் போய்விடுவார். புது டாக்டரிடம் போனால் மருந்து ஒத்துவரவில்லை. (சைடு எபக்ட் அல்லது ஓவர்டோஸ்.) மொத்தத்தில் 2016 ஜனவரியில் ராகு-கேது பெயர்ச்சி வரை இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நீடித்தாலும், இந்த மாதப் பிற்பகுதியில் செவ்வாய்- சூரியன் மாற்றத்துக்குப் பிறகு ஏதாவது ஒருவகையில் மாற்று வழி தெரியும்.

பரிகாரம்: சித்தர்களின் ஜீவசமாதியை வழிபடலாம்.


மேஷம்

இந்த மாதம் தொழில்வகையில் எதிர்பார்த்தது நிறைவேறும். புதுத்தொழில் தொடங்குவதுபற்றி ஆலோசித்துச் செயல்படுவது நல்லது. இருக்கும் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியை மேற்கொள்ளலாம். அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி பொறுமையைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும். சிலருக்கு கருத்துவேறுபாடு வரலாம். தாயார் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். மருத்துவச் செலவுகளை சந்திக்கும் சூழ்நிலை காணப்படும். தந்தைவழி உறவினர்களுடனும் தந்தையுடனும் இருந்த சச்சரவு மாறி சமரசமாவீர்கள். பெரியவர்களிடம் நல்ல பெயரெடுப்பீர்கள். பழைய வாகனத்தைப் பழுதுபார்க்கலாம். புதிய வாகன யோகமுண்டு.

ரிஷபம்

இந்த மாதம் பொருளாதார வரவு நல்லமுறையில் செயல்படும். கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தேவையில்லாதவர்களின் நட்பும் தொடர்பும் தடுக்கப்படும். நண்பர்களாக நடித்து முதுகில் குத்தியவர்களை விலக்கி வைப்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களும் முதலீடுகளும் தொடர்புகளும் நன்மை தரும். உங்களை எதிர்த்துக்கொண்டிருந்தவர்கள் உங்களிடம் தோற்றுப்போகும் சந்தர்ப்பங்கள் வரும். கையில் சேமிப்பு பெருகும். வீண் விரயங்கள் தடுக்கப்படும். கணவன்- மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்றவையும் உங்கள் எண்ணப்படியே நடக்கும்.

மிதுனம்

சுயதொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்துவந்த மந்தநிலை அனைத்தும் விலகி சுறுசுறுப்பாக நடக்கும். தொழிலதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கும் இருந்த முட்டுக்கட்டை விலகும். எடுக்கும் முயற்சிகள் செயல்படும். தொழிலை விரிவுபடுத்தும் காரியங்களில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்திலிருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு தென்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் இந்த மாதம் செயல்படும்.

கடகம்

இந்த மாதம் பணவரவு நன்றாக இருக்கும்; தடை இருக்காது. எந்த ஒரு விஷயமும் நீண்ட இழுபறிக்குப் பின்னரே நடந்துவந்த நிலை மாறி, உடனுக்குடன் செய்துமுடிக்கும்படியான சூழ்நிலை அமையும். சுயதொழில், வியாபாரம் போன்றவற்றை நடத்துவோருக்கு கடன்வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். என்றாலும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்குரியதாகவோ வருமானம் வரும் வகையில்தான் அமையும். அதில் சந்தேகம் தேவையில்லை. கவலைப்படவும் வேண்டியதில்லை. அரசு சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்கப்பெறும். தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

சிம்மம்

இம்மாதம் தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம் போன்றவை இப்போது நடக்கும் சூழ்நிலை காணப்படும். பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்புள்ளது. உறவினர்களுடன் கவனமாகப் பழகவேண்டியது அவசியம். ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும் மனக்குழப்பமும் எந்த நேரமும் தென்படும். அதேசமயம், உங்களின் உடல்நிலை மற்றும் வாழ்க்கைத் துணைவரின் நலம் போன்றவை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகளும் விலகும்.

கன்னி

தொழில்ரீதியான பயணங்கள் இனி அடிக்கடி அமையும். வெளிமாநிலங்களுக்குச் செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களும் உருவாகும். சில நல்ல விஷயங்களுக்காக கடன் வாங்கும் சூழலும் ஏற்படும். ஏற்கெனவே இருக்கிற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடும். அல்லது குடும்பத்தில் நடக்கும் சுபகாரியங்களுக்காகவோ, தொழில் விரிவாக்கத்திற்காகவோ கடன் வாங்க நேரிடலாம். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். கோபங்களைக் குறைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் அனுசரணை காட்டவேண்டியது அவசியம். பிள்ளைகளால் பிரச்சினைகளையும், எதிர்காலக் கவலைகளையும் சந்திக்க வேண்டிவரும்.

துலாம்

வெகுநாட்களாக வெளிநாட்டுப் பயணத்தை எதிர்பார்த்தவர்கள்- அயல்தேச வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை அமையும் யோகம் இம்மாதம் செயல்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். வீடு சம்பந்தப்பட்ட காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் வங்கிக் கடன் கிடைத்து அல்லது வெளியில் கடன் வாங்கி முடிக்கும் யோகம் உண்டாகும். கூடுமானவரை யாருக்கும் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.

விருச்சிகம்

வேலை கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். தொழிலதிபர்கள் புதிய தொழில் முயற்சியை ஒத்திப்போடவும். தொழிலில் முதலீடு செய்யமுடியாமல் திணறிக்கொண்டிருந்தவர்களுக்கு முதலீட்டிற்கான பணம் கிடைத்து தொழிலை நடத்தும் வாய்ப்பு உருவாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வு தள்ளிப்போகும். விரும்பிய இடப்பெயர்ச்சிக்கு பதில் வேறு இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். திருமணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆண்- பெண் களுக்கு திருமண அமைப்பு உருவாகும். உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடனும் காணப்படும். ஆரோக்கியக் குறைவை சந்தித்தவர்களுக்கு இம்மாதம் முதல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன்- மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகளும் மறையும்.

தனுசு

தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் சில சங்கடங்களை சந்தித்தாலும் முடிவில் நல்ல பலன்களே உண்டாகும். கணவன்- மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவை இருந்தாலும், அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட்சேர்க்கையும் இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடு மாறி ஒற்றுமை நிலவும். மேலதிகாரிகளிடம் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறலாம். உடல்நலம் நன்றாக இருக்கும். தாயின் உடல்நலமும் சீராக இருக்கும்.

மகரம்

தொழில், வியாபாரம், வாழ்க்கை எல்லாவற்றிலும் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வேலையில் திருப்தி ஆகிய மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். தொழிலதிபர்களுக்கு புதிய கூட்டு, புதிய முயற்சிகள், வெற்றிவாய்ப்புகள் மகிழ்ச்சியை உண்டாகும். போட்டி, பொறாமை, எதிரி, கடன், வைத்தியச் செலவுகள் ஒரு கட்டத்தில் நடைபெற்றாலும், இன்னொரு கட்டத்தில் எதிர்பாராத உதவி, சகாயம், சுயமுதலீடு, வரவேண்டிய பாக்கிகள் வசூல் போன்ற பலன்களையும் சந்திக்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்கு 2, 11-க்குடைய குரு 6-ல் மறைகிறார். அதனால் கடன், போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகள் போன்றவை உங்களை வந்து மோதி டென்ஷனாக்கும். அதேசமயம் 2-க்குடைய குரு உச்சம்பெற்று 2-ஆம் இடத்தையே பார்ப்பதால் பணக்கஷ்டம் இருக்காது. என்றாலும் கையில் தாராளமாக- சரளமாக புழங்காது; தேவைக்குப் பணம் வந்துசேரும். சனி 10-ல் இருப்பதால் தொழில்முயற்சிகள் கைகூடும். புதிய தொழில்வாய்ப்புகள் அல்லது வேலை எண்ணம்போல் ஈடேறும். தேக ஆரோக்கியத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. நண்பர்கள், உறவினர்களின் உதவியும் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கலாம். திருமண மானவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும்.

மீனம்

இந்த மாதம் முழுவதும் 5-ல் குரு உச்சம்பெற்று ராசியைப் பார்க்கிறார். அதனால் உங்கள் மதிப்பு, மரியாதை, செல்வாக்கு ஆகியவற்றுக்குக் குறைவில்லை. அதேசமயம் ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் குடும்பத்தில் ஏதாவதொரு காரணத்தால் அமைதிக்குறைவையும் மகிழ்ச்சிக் குறைவையும் ஏற்படுத்தும். 6-க்குடைய சூரியன் ஆட்சிவீட்டை நோக்கிப் போவதால், எவ்வளவு வருமானம் வந்தாலும் மிச்சப்படுத்த முடியாத அளவில் செலவுகளும் வந்துசேரும். இறைக்கிற கிணறு ஊறும் என்பதுபோல செலவு ஒரு பக்கம் ஏற்பட்டா லும், இன்னொரு பக்கம் அதைச் சரிக்கட்ட வரவும் வந்துவிடும்.


 

மேஷம்

இந்த மாதம் நல்லதும் கெட்டதுமாக கலந்து நடக்கும். என்றாலும் மனதில் இதுவரை நிலவிய கற்பனை பயமும் தேகசுகக் குறைவும் உங்களை விட்டு விலகியோடும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். மாணவர்களும் மாணவிகளும் ஆர்வமும் அக்கறையும் உடையவர்களாக படிப்பில் தீவிர கவனம் செலுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கல் சீராக இயங்கும். பணப்புழக்கத்தில் தேக்கமோ தட்டுப்பாடோ இருக்காது. வியாபாரம் விருத்தியடையும். எதிர்காலம் இனிமையாக விளங்கும். எடுத்த காரியமும் தொடுத்த முயற்சிகளும் அடுத்தடுத்து வெற்றிகரமாகத் திகழும். குடும்பத்தில் மனநிறைவும் மகிழ்ச்சியும் உருவாகும். உறவினர்கள் வருகையும் நண்பர்கள் சந்திப்பும் உள்ளத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்கும். சிலருக்கு ஆன்மிகப் பயணமும், தெய்வ தரிசனமும் மனநிறைவை ஏற்படுத்தும்.

ரிஷபம்

இந்த மாத முற்பகுதியில் சிறுசிறு பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்படலாம். அரசியல், பொதுவாழ்வில் இருப்போருக்கு ஏமாற்றமும் தோல்வியும் ஏற்படலாம். ஆன்மிகத்தில் இருப்போருக்கு ஆத்மார்த்தமான செயல்திட்டங்களால் ஆனந்தமும் மனநிறைவும் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். இயற்கை மாற்றத்தால் அல்லது உணவு வகையால் சிலருக்கு அலர்ஜி, உடல் உபாதைகள் ஏற்படலாம். மனதில் உறுதியிருந்தாலும் வயது காரணமாக உடலில் சோர்வும் களைப்பும் ஏற்படலாம். சிலருக்கு கடன் உபாதைகளும் உண்டாகலாம். வியாபாரக் கடன் அல்லது வீட்டுக்கடன் அல்லது கல்விக்கடன் போன்றவை ஏற்பட்டாலும் அவையெல்லாம் முறையாக ஓடியடையும். தவணை அடைபடும். வெளிநாட்டிலிருந்து நல்ல சேதிவரும். உங்களுடைய எதிர்கால கனவுத் திட்டங்களுக்கு அது அஸ்திவாரமாக அமையும்.

மிதுனம்

தர்மசங்கடமான சூழ்நிலைகளைச் சந்திக்கும் காலம். என்றாலும் சாமர்த்தியமாக அவற்றைச் சமாளித்துவிடுவீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகளும், வரவு- செலவுகளில் நெருக்கடி நிலையும் காணப்பட்டாலும் கௌரவ பங்கமோ நாணய பங்கமோ வராது. வியாபாரிகளுக்கு வியாபாரம் நடந்தாலும், லாபம் கிடைத் தாலும் மிச்சப்படுத்த முடியாத நிலை காணப்படும். வரவும் செலவும் சமமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் திட்டமிட்டபடி செயல்பட்டாலும் சில நேரங்களில் சில காரியங்களில் தடை, தாமதம், திருப்பம் உண்டாகும். உங்கள் யோகத் துக்கு சில எதிர்மறையான செயல்களும் உடன்பாடானதாக மாறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களும் அல்லது வி.ஐ.பி. பிரமுகர்களும் உங்களுக்கு அறிமுகமாகலாம். அவர்களால் உங்களுக்கு அனுகூல மான பலன்களும் உண்டாகலாம். புதிய சிந்தனைகளும் புதிய திட்டங்களும் உருவாகும். அதற்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் அமையும்.

கடகம்

கடக ராசியில் பாக்கியாதிபதி குரு உச்சம். அவருடைய பார்வை 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம், 7-ஆம் இடம் மனைவி ஸ்தானம்- கணவர் ஸ்தானம், 9-ஆம் இடம் பாக்கிய ஸ்தானம். இவற்றுக்குக் கிடைக்கிறது. அதனால் பிள்ளைகள்வகையில் நல்லவை நடக்கும். கல்வி, பட்டம், வேலை, வருமானம், திருமணம், வாரிசு யோகம் போன்ற எல்லா சுபப்பலன்களும் உங்கள் புத்திர- புத்திரிகளுக்கு உண்டாகும். சிலர் மாமனார் ஆகலாம். சிலர் தாத்தா- பாட்டி ஆகலாம். 7-ஆம் இடம் மகரம். அதற்குடைய சனி 5-ல் நின்று 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் ஒருசிலரின் மனைவி அல்லது கணவருக்கு உடல் உபாதைகளும் சோர்வுகளும் காணப்பட்டாலும், குரு பார்வை 7-ஆம் இடம், 7-க்குடையவருக்கு கிடைப்பதால் குருவருளும் திருவருளும் தெய்வ அனுகூல மும் உங்களுக்குத் துணைநின்று உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றுவது உறுதி. நாக்கு- வாக்கு மாறும் மனிதர்களின் உறுதிமொழிகளை நம்புவதைவிட தெய்வத்தை முழுமையாக நம்புங்கள். அது உங்கள் கோரிக்கையை நிறைவேற்றும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு 4-ஆம் இடத்துச் சனி உங்கள் ராசியைப் பார்க்கிறார். சனி 6, 7-க்குடையவர். எனவே போட்டி, பொறாமை, எதிரி, கடன், வைத்தியச்செலவு போன்ற 6-ஆம் இடத்துப் பலன்கள் உங்களைக் கிலேசமடையச் செய்யும். 24 மணி நேரமும் பிஸியாக- உற்சாகமாக வேலை செய்த சிலருக்கு இப்போது தனிமைச் சிறையில் தள்ளப்பட்டதுபோன்ற ஒரு சோக உணர்வு உண்டாகும். நான் ஒருசமயம் ஒரு அரசியல் வாதியிடம் வேலை பார்த்தேன். அவர் ஒரு பெரிய புள்ளி. எல்லாருக்கும் உதவும் மனப்பான்மையுடையவர். போலீஸ் வட்டாரம், அரசு அலுவலகம் எல்லாவற்றிலும் செல்வாக்குடையவர். காரியங்களை சாதிப்பார். இந்திராகாந்தி பிரதமராக இருந்தசமயம் தடாசட்டம் போட்டபோது சில எதிர்கட்சியினரை கைது செய்தார்கள். பல முக்கியப் புள்ளிகளின் வீடுகளுக்கு மப்டியில் காவலரைப் போட்டு, யார் யார் வந்துபோகிறார்கள் என்று கண்காணிப்பு செய்யப்பட்டது. அதனால் எனது முதலாளியைப் பார்க்க யாரும் வரவில்லை. தினசரி 100 பேர் வந்து பஞ்சாயத்து அது இது என்று பிஸியாக இருப்பவர்- யாரும் வராமல் தனியாக இருந்ததனால் மனம்சோர்வாகி என்னைக் கூப்பிட்டு எல்லாக் கதைகளையும் பேசுவார். அப்போதுதான் புரிந்தது. தனிமைச்சிறை என்பது எவ்வளவு சங்கடமானது என்று!

கன்னி

கன்னி ராசிக்கு ஏழரைச் சனி முழுமையாக விலகிவிட்டது. குருவும் 11-ல் உச்சம். சனி நிற்கும் இடமும் அற்புத இடம்- 3-ஆம் இடம். ஆகவே பொருளாதாரத்தில், பணப்புழக்கத்தில், வரவு- செலவுகளில் பிரச்சினை இல்லை. தொழில்துறையில் கூட்டுத்தொழில் செய்கிறவர்கள் மாற்றுத்தொழில் திட்டங்களை மேற்கொள்ளலாம். அல்லது இரண்டு மூன்று பேர் கூட்டாளிகளாக இருந்தவர்களை விலக்கி விட்டு கூட்டைச் சுருக்கி அளவாக்கி செயல்படுத்தலாம். விரிவாக நடத்திய சொந்தத் தொழில் இடத்தைச் சுருக்கி அதில் காம்ப்ளக்ஸ் கட்டடம் கட்டி வாடகை வசூல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தலாம். சிலர் பூர்வீக இடத்தில் உடன்பிறந்தோருக்கு உரிமையான பங்கு பாகத்தைக் கொடுக் காமல் தானே அனுபவிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு வழக்கு விவகாரங்களைச் சந்திக்கலாம். இதனால் சில காரியங்கள் தடைப்படுவதால் மனதில் கவலை ஏற்படலாம். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்ற பாலிஸியைக் கடைப் பிடிப்பது நல்லது.

துலாம்

துலா ராசிக்கு 2-ஆம் இடத்து பாதச்சனி நடந்தாலும்- 10-ல் உள்ள உச்ச குருவின் பார்வை சனிக்கும் கிடைப்பதால் சனியின் வேகம் குறையலாம். 2-ஆம் இடத்துச் சனி- வாக்குச் சனி கோப்பைக் குலைக்கும். சிலருக்கு வாக்கு நாணயத்தைக் காப்பாற்றமுடியாமல் சோதனை ஏற்படலாம். சிலருக்கு குடும்பச் சூழ்நிலையில் உறவினர்கள் வகையில் பகை, வருத்தம் ஏற்படலாம். சிலருக்கு வரவுக்குமேல் தவிர்க்கமுடியாத செலவுகள் உண்டாகி- அதைச் சமாளிக்க வெளியில் கடன்வாங்கலாம். அப்படிக் கடன் வாங்கும்போது அவசியத்துக்கும் அவசரத்துக்கும் தரம் இல்லாதவர்களிடம் கடன் வாங்கிவிட்டு தவணையை அடைக்க முடியாமல் தவிக்கலாம்- தடுமாறலாம். 6-க்குடையவர் குரு 10-ல் உச்சம்பெற்று 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால், போட்டி, பொறாமை, எதிர்ப்பு, கடன் போன்ற 6-ஆம் வீட்டுப் பலன் அதிகமாக பாதிக்கும். அதேசமயம் சிலருக்கு எதிர்பாராத தனப்ராப்தியும் அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு ஜென்மச் சனி. அதற்கு 9-ஆம் இடத்து உச்ச குரு பார்வை! அதனால் எப்படியோ உங்கள் வாழ்க்கை வசதியாக ஓடும். இப்படித்தான் வாழவேண்டுமென்று லட்சியத்தோடு வாழ்கிறவர்கள் சிலர். எப்படியும் வாழலாம்- எப்படியும் சம்பாதிக்கலாம் என்று சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்கிறவர்கள் பலர்! இந்த இருதரப்பினரும் விருச்சிக ராசியில் அடங்குவர். அதேசமயம் கிரகங்களும் தசாபுக்திகளும் அனுகூலமாக இருக்கும்வரை தவறுகள் செய்தாலும் தப்பிக்கலாம். தசாபுக்திகள் பாதகமாக மாறும்போது செய்யாத தவறுக்கும் தண்டனைக்கு ஆளாகலாம். இதற்கு உதாரணம், ஊழல் செய்த பல அரசியல் வாதிகள் பதவியில்லாத நிலையில் உதவி செய்யவும் ஆள்துணை இல்லாமல் சி.பி.ஐ. வழக்குகளைச் சந்திக்கும் கதை தெரியுமல்லவா! மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை! உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தாகவேண்டும்; தப்பு செய்தவன் தண்டனைக்காளாக வேண்டும். இதுதான் காலத்தின் கணக்கு.

தனுசு

தனுசு ராசிநாதன் குரு தன் ராசிக்கு 8-ல் மறைந்தாலும் உச்சமாக இருப்பதோடு 2-ஆம் இடத்தையும், 4-ஆம் இடத்தையும் பார்ப்பதால், தேக ஆரோக்கியமும், பூமி, வீடு வாகன யோகமும், கல்வி யோகமும் தாயன்பும் குறைவில்லாமல் செயல்படும். அதேசமயம் 12-ஆம் இடத்தையும் பார்ப்பதால் செலவினங்களும் உங்களை வந்தடையும். சிலசமயம் அவசியமான செலவுகள் ஏற்படும். சிலசமயம் தவிர்க்கமுடியாத வேண்டாத செலவுகளும் உங்களை விரும்பி வந்தடையும். சிலசமயம் வைத்தியச்செலவுகள் அல்லது பயணச் செலவுகள் வரலாம். அல்லது கோவில் செலவுகளும் வரலாம். ஒருசிலரின் அனுபவத்தில் அவசரத்துக்காக கடன் வாங்கியவர்கள் திருப்பித்தராமல் நஷ்டம், விரயம் ஏற்படலாம். ஒரு அன்பர் ஒரு தெய்வீக ஸ்தலத்துக்குப் போக- வர ரயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தார். போன இடத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட, ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு வாடகைக் காரில் திரும்பி ஊர்வந்து சேர்ந்தார். இது தேவையற்ற செலவுதானே! இப்படி சில செலவுகளும் வரலாம்.

மகரம்

மகர ராசிநாதன் சனி 11-ல் பலம்பெற்று ராசியைப் பார்க்கிறார். 7-ல் குருவும் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். அடிப்படை வாழ்க்கை வசதிகள், சௌகர்யங்களுக்கு பாதிப்பில்லை. பிரச்சினை இல்லை. ஆனால் 3, 12-க்குடையவர் 7-ல் இருப்பதால் மனைவி அல்லது கணவர் உறவில், அன்பில் சில குறைபாடுகள் எழக்கூடும். அன்பும் நெருக்கமும் வலுவாக இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கலாம். இந்த இரண்டும் இல்லாவிட்டால் பொருளாதாரத்தில் மிகப்பெரும் வீழ்ச்சி, ஏமாற்றம், இழப்பு ஏற்படலாம். ஒருசிலருடைய அனுபவம்- வெளிநாட்டு வேலைக்கு அதிகம் செலவுசெய்து போனதும், அங்கிருக்கும் இயற்கைச் சூழ்நிலை ஒத்துக்கொள்ளாமல் உடனே ஊர் திரும்பும் சூழ்நிலை ஏற்படலாம். அதனால் செலவழித்த பணம் நஷ்டம் ஆகலாம். 7-ஆம் இடம் என்பது 10-ஆம் இடமான துலாத்துக்கு 10-ஆம் இடம். அங்கு 10-க்கு 3, 6-க்குடையவர் இருப்பது தோஷம்.

கும்பம்

கும்ப ராசிக்கு 6-ல் குரு உச்சம். ராசிநாதன் சனி 10-ல் பலம். அவருக்கு 2, 11-க்குடைய குரு பார்வை. 6 என்பது கடன், போட்டி, எதிரி, வைத்தியச்செலவைக் குறிக்குமிடம். என்றாலும் 10-க்கு திரிகோணத்தில் குரு உச்சமென்பதால் வாழ்க்கை வசதிகள், தொழில், வேலை, உத்தியோகத்தில் பாதிப்புக்கு இடமில்லை. அதிலும் சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும், சொந்தத் தொழில் செய்தாலும் சாதனை படைக்கலாம். வியாபாரத்தில் பழைய பங்குதாரரை (கூட்டாளியை) மாற்றலாம். தைரியமாக சில முடிவுகளை எடுக்கலாம். சிலர் தொழில் ஸ்தாபனத்தில் ஏற்பட்ட தொய்வைச் சரிக்கட்ட அல்லது கடன் தொகையை அடைக்க, ஊழியர்களுக்கும் தெரியாமல் கடன் கொடுத்தவருக்கே ஸ்தாபனத்தை எழுதிக்கொடுத்துவிட்டு போகும் நிலை ஏற்படும்.  அதனால் ஒருசிலரின் கோபதாபம் சாபத்துக்கு ஆளாகலாம். அல்லது அவர்கள் வயிற்றெரிச்சலை சந்திக்கும்படியும் ஆகலாம். ஆக இப்படி அவசர முடிவெடுக்காமல் ஆறுதலாக கலந்துபேசி நல்ல முடிவெடுக்க வேண்டியது உங்கள் கடமை.

மீனம்

மீன ராசிக்கு மூன்றாண்டு அட்டமச் சனி விலகியதே மிகமிகப் பெரிய ஆறுதல். அதைவிட ஆறுதல் ராசிநாதன் குரு 5-ல் உச்சம்பெற்று ராசியைப் பார்ப்பது. எனவே “குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியமாதிரி, குறிப்பிட்டுக் கூறுமளவு குறையேதுமில்லை. என்றாலும் சில பிரச்சினைகளில் உங்கள் மனம் நிறைவடையாது வாடும். கணவன்- மனைவிக்குள் இருந்த கசப்புணர்வு மாறி கலகலப்பும் நெருக்கமும் மலரும். ஆனால் தவறானவர்களையெல்லாம் நல்லவர்களாக நினைத்துப் பழகுவீர்கள். நல்லவர்களையெல்லாம் தவறானவர்கள் என்று நினைத்து ஓரம்கட்டுவீர்கள். இதில்தான் அட்டமச் சனி விலகியும் சனி விலகாத மாதிரி ஒரு வேதனையைச் சந்திப்பீர்கள். ஆக சோதனைகளை ஜெயிக்க ஆறுதலாக சிந்தித்துச் செயல் படவேண்டியது அவசியம்!ஸ்ரீஜய வருடத்திற்கான (2014- 2015)       உலக ஜாதகம்


அஸ்வினி 1-ல் சூரியன்.

ஹஸ்தம் 2-ல் சந்திரன்.

ஹஸ்தம் 2-ல் செவ்வாய் (வக்ரம்).

ரேவதி 4-ல் புதன்.

புனர்பூசம் 1-ல் குரு.

சதயம் 3-ல் சுக்கிரன்.

விசாகம் 1-ல் சனி (வக்ரம்).

சித்திரை 4-ல் ராகு.

அஸ்வினி 2-ல் கேது.

உலக ஜாதகத்தில் நவநாயகர்களின் நிலை பற்றி முதலில் அறிவோம்.

1. ராஜா- சந்திரன்; 2. மந்திரி- சந்திரன்; 3. அர்க்காதிபதி- சூரியன்; 4. மேகாதிபதி- சூரியன்; 5. ஸஸ்யாதிபதி- குரு; 6. சேனாதிபதி- சூரியன்;          7. இரஸாதிபதி- சனி; 8. தான்யாதிபதி- செவ்வாய்; 9. நீராஸாதிபதி- புதன்; 10. பசுநாயகன்- கோபாலன்.

ஸ்ரீஜய வருடத்தில் உலக ஜாதகப் பிறப்பு நட்சத்திரம் அஸ்தம் 2-ஆம் பாதம், மேஷ லக்னம், கன்னியா ராசி. வர்க்கோத்தம யோகம் உள்ளது. சஷ்டாஷ்டக தோஷம் உள்ளது. சந்திரமங்கள யோகம் உள்ளது. அம்சத்தில் சுக்கிர மங்கள யோகம் உள்ளது. உலக நட்சத்திர தேவதை சாத்தான் (துர்தேவதை). பஞ்ச பட்சிகளில் காகம் பட்சியாக உள்ளது. 1-ஆம் ஜாமத்தில் நடை வலிமை பெற்றுவரும். சங்கராந்தி புருஷர் கரஜு. ஆண் யானை வாகனம். இந்த ஆண்டில் கிழக்கு திக்கில் மேகம் உருவாகி முக்குறுணி மழை- அதாவது மூன்று மரக்கால் மழை உண்டு. உலக ஜாதகப்படி வருடப்பிறப்பின்போது, சந்திர மகாதசையில் ராகு புக்தியில் செவ்வாய் அந்தரம் நடக்கிறது. (இருப்பு வருடம் 1, மாதம் 4, நாள் 6). கோட்சாரப்படி உலக ஜாதகத்திற்கு ஏழரைச் சனி நடக்கிறது.

இந்த ஆண்டு ஆதாயம் 56; விரயம் 37. அதிக வருமானம் 19 வருவதால், அரசாங்கத்திற்கு பலகோடிக்கணக்கில் லாபம் வரும். கடன்படாமல் அரசாங்கம் நடக்கும். சங்கராந்தி புருஷர் நட்சத்திரம் சுவாதி வருகின்றது. வருடப்பிறப்பு திங்கள்கிழமை அமைகிறது. எனவே இடி, மின்னலுடன் சில இடங்களில் மழை பெய்யும்.

ஆடி 5-ஆம் தேதி திங்கள்கிழமை வருகின்றது. விஷப்பூச்சிகள் உற்பத்தி யாகி,  புதிய நோய்களால் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மழை விவரம்

ஸ்ரீஜய வருடத்தில் ஐப்பசி மாதம் 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (24-10-2014) முதல் கார்த்திகை மாதம் 19-ஆம் தேதி புதன்கிழமை (5-11-2014) வரையிலும் உள்ள காலகட்டத்தில் இடிமுழக்கம், மேக கர்ஜனை, இந்திரவில் போன்றவை தோன்றும். மின்னலுடன், அதிக சாரலுடன் மழைபெய்யும். பகல், மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு தொந்தரவுசெய்யும் வகையிலும் மழைபெய்யும். அதிக மழையால் புழு, பூச்சி, முட்டை மடிந்துபோகும். மழைக்குறி மேகமூட்டமின்றி, கோட்டைமேகம் கூடி நல்லமழை பெய்யும். உதய- அஸ்தமன காலங்களில் மின்னல் அதிகம் காணப்படும். இதனால் புராதன ஆலயம் மற்றும் கட்டடம் போன்றவை பாதிக்கப்படலாம். வடநாடு அதிக அளவில் சேதாரம் அடையும். அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்படும். மூன்றாம் பிறைச்சந்திரன் வடகோடு உயர்ந்து காணப்படும். அடிக்கடி சூரியனையும், சந்திரனையும் பரிவட்டம் சூழுவதால் நல்லமழை பெய்யும். பூமிகாரகன் செவ்வாய் உதயத்தில் உள்ளார். சந்திர மங்கள யோகத்துடனும் உள்ளார். எனவே ரியல் எஸ்டேட் தொழில் உயரும். அதேபோல நிறைய இடங்களில் புதையல் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடிக்கடி உருவாகி மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களிலும்; உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் கடுமையான மழை பொழிந்து சேதாரத்தை உண்டாக்கும். விண்வெளிக் கருவிகள் பாதிப்பு, செல்போன் டவர் பாதிப்பு உண்டாகும். ஆந்திராவில் சிறிய நிலநடுக்கம் உண்டாகும்.

உழவர் பொன்னேர் கட்ட உகந்த நேரம்

சித்திரை மாதம் 5-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (18-4-2014) திரிதியை திதியில், அனுஷ நட்சத்திரத்தில் காலை 6.00 மணி முதல் 7-மணிக்குள் சுக்கிரன் ஓரையில், மேஷ லக்னத்தில் பொன்னேர் கட்ட உகந்த காலம். அல்லது- சித்திரை 7-ல் ஞாயிற்றுக்கிழமை (20-4-2014) அன்று சஷ்டி திதியும், மூல நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை 7.00 மணிமுதல் 8-மணிக்குள் சுக்கிர ஓரையில் ரிஷப லக்னத்தில் பொன்னேர் கட்ட உத்தமம்.

இவ்வாண்டின் கிரகப் பெயர்ச்சிகள்

நிகழும் ஸ்ரீஜய வருடம், வைகாசி மாதம் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (13-6-2014) அன்று மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார்.

நிகழும் ஸ்ரீஜய வருடம், ஆனி மாதம் 7-ஆம் தேதி சனிக்கிழமை (21-6-2014) அன்று ராகு பகவான் துலா ராசியிலிருந்து கன்னி ராசிக்கு வருகிறார். கேது பகவான் மேஷ ராசியிலிருந்து மீனத்திற்கு வருகின்றார்.

நிகழும் ஸ்ரீஜய வருடம், மார்கழி மாதம் 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (16-12-2014) அன்று சனி பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிகத்திற்கு வருகிறார்.

ஸ்ரீஜய வருடம் (2014-2015) ஆண்டு பலன்கள்

மங்களகரமான ஸ்ரீஜய வருடம் சித்திரை- 1 (14-4-2014) அன்று, திங்கள்கிழமை சுக்கில பட்சம், சதுர்த்தசி திதியில், அஸ்த நட்சத்திரத்தில் துவங்குகின்றது. இந்த ஆண்டு எங்கும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை, புயல் உருவாகும். பிராண பயம் ஏற்படும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். கரஜு நாமகரணம்- ஆண் யானை வருவதால் கால்நடைகள் வளர்ச்சி கூடும். சுபச்செய்தி வரும். கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். இதனால் சுமத்ரா, இலங்கை, அந்தமான், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். கர்நாடகத்தில் மழையால் பாதிப்பும், நிம்மதிக் குறைவும் ஏற்படும். கேரளாவில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பெண்களுக்கு ரத்த கொதிப்பு நோய் ஏற்படும். பணத்திற்கு பற்றாக்குறை ஏற்படாது. 9, 12-க்கான பாக்கியாதிபதி குரு பகவான் இவ்வாண்டு சஸ்யாதிபதியாகவும், 3-ல் நின்று சுயசார பலம்பெற்றும், அம்சத்தில் சூரியனுடனும், நீசம்பெற்ற சனியுடனும் சேர்ந்துள்ளது. இதனால் இவ்வாண்டு முல்லைப் பெரியாறு விஷயத்தில் மீண்டும் பாதிப்பு ஏற்படும். இதனால் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படும். கேரளத்தின் அனைத்து ஊர்களிலும் மக்கள் மத்தியில் பலவித பகைகள் ஏற்படும். எங்கும் தெய்வபக்தி அதிகரிக்கும்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீசம்பெற்ற பொருட்களின் விலை வீழ்ச்சியடையும். முட்டை வியாபாரத்திற்கு பெயர் பெற்ற நாமக்கல், சித்தூர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலால் சேதாரம் ஏற்படும். வியாபாரிகள் பலவிதத்தில் நஷ்டத்தை அடைவார்கள். வங்கக் கடலில் புயல் உருவாகும். அதற்கான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உற்பத்தியாகும். இதனால் ஏற்றுமதி- இறக்குமதி வாணிபம் பாதிக்கும். சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர். கொல்லிமலையில் கனமழை பெய்யும். குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்; சுற்றுலாப் பயணிகளுக்கு குதூகலமாக இருக்கும். பொதுவாக கனமழை பெய்யும். இரும்பு, இயந்திரம், கார்கள், கட்டடப் பொருட்கள், மின்சார உபகரணங்கள், மரச்சாமான்கள், கண்ணாடி, செம்பு, பித்தளை, தாமிரம், எவர்சில்வர், பீங்கான், செங்கல் போன்றவற்றின் விலை வீழ்ச்சியடையும். மணல், சிமெண்ட் விலை குறையும். ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை வளர்ச்சிபெறும்.

அயல்நாட்டில் பசுபிக் பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு, ராட்சச அலை உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பொதுவாக இந்த வருடம் சித்திரை 1-ஆம் தேதி திங்கள்கிழமை வருவதால், வெள்ளப்பெருக்கு அதிகம் உண்டாகும். வடகிழக்குப் பருவமழை சரியான தருணத்தில் தொடங்கி முறைப்படி மழைபொழியும். வேர்க்கடலை மகசூலும் அதிகமாகும். பட்டு, ஜவுளி நூல் வகை விலை ஏறியிறங்கும்.

26-11-2014 முதல் 03-12-2014-க்குள் உலகத்தில் ஒரு விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது. கடல் சார்ந்த பகுதிகளில் நடக்கும். மக்கள் எச்சரிக்கையாக வாழவேண்டும்.

மேஷம் 1.3.14
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசி அன்பர்களே!

மேடான ராசி என்பது மருவி மேஷ ராசி என்று வந்தது. மேஷ ராசியில் பிறந்த பெரும்பாலானவர்கள் தைரியம் உள்ளவர்கள். இறைவனை நம்புவீர்கள். ஆனால் மனிதனிடம் தன்மானத்தைவிட்டு மண்டியிட மாட்டீர்கள். சோதனைகளை உரத்த நெஞ்சோடு எதிர்கொண்டு, அவற்றை சாதனைகளாக மாற்றுவீர்கள். மற்றவர்கள் நம்மைப் பாராட்டவேண்டும் என்பதற்காக பிரதிபலன் கருதி எந்தக் காரியத்தையும் செய்யமாட்டீர்கள். மேஷ ராசிக்காரர்களால் உயர்வடைந்தவர்கள் அதிகம்பேர் இருப்பார்கள். உங்களால் உயர்ந்த அவர்களே உங்களுக்கு எதிரியாகவும் ஆகிவிடுவார்கள். சில காலத்துக்குப்பின்பு அவர்களாகவே தங்கள் தவறை உணர்ந்து வருவார்கள். மேஷ ராசியினர் சமூகத்தில் உயர் பதவியிலும், உயர் அந்தஸ்திலும் வாழ்வார்கள். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள். அண்டினோரை ஆதரிப்பவர்கள். மற்றவர்கள் செய்வதைப் பற்றி கவலைப்படாதவர்கள். மனைவி, மக்கள்மீது அதிக பாசம் உள்ளவர்கள். அதிகாரப் பற்று இருக்காது. பணத்தின்மீது அதிகம் பற்று வராது. சமூக சிந்தனையில் அதிகம் பற்றுள்ளவர்.

முதிர்ந்த ருசி பார்க்கும் நாவை உடையவர் நீங்கள். உங்களது ஜாதகத்தில் செவ்வாய் எந்த அளவில் அமைந்துள்ளதோ, அந்த அளவுக்கு செல்வாக்காக வாழ்வீர்கள். முன்கோபம் அதிகமாக வரும். கோபத்தை ஜெயிக்க விடக்கூடாது. வாழ்க்கையில் தோற்றுப்போவீர்கள். கோபத்தைத் தள்ளிவைத்து உணர்ச்சிவசப்படாமல் வாழ்பவர்கள் வாழ்வில் உயர்ந்து விடுவார்கள். எப்போதும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்துதான் வாழ்வீர்கள். முன்னேறுவீர்கள். எப்போதும் சிரித்த முகத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள். பையிலே பணம் இல்லையென்றாலும் வெளித் தோற்றத்தில் மலர்ந்த முகத்தோடு வாழ்வீர்கள். மற்றவர்களை உயர்த்தி வைத்து, அவர்கள் உயர்ந்து வாழ்வதைப் பார்த்து மனதுக்குள் ரசிப்பவர் நீங்கள். மேஷ ராசியில் பிறந்து வக்கீலாக ஒருவர் பணிபுரிவாரேயானால், அவர் எடுத்துக்கொண்ட வழக்குகள் யாவும் வெற்றியைத் தரும்.

கணீரென்ற குரலுக்குச் சொந்தக்காரர் நீங்கள். குடும்பத்தைவிட கடமையின்மீது அதிக பற்றுக்கொண்டிருப்பீர்கள். ஏமாற்றுபவர்களை எளிதில் அடையாளம் காண்பீர்கள். உங்கள் மனதில் உள்ளதை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. இளமையில் துடிப்போடு செயலாற்றும் நீங்கள், முதுமையில் விவேகத்தோடு காரியம் சாதிப்பீர்கள். எப்போதும் நண்பர்கள் கூட்டம் உங்களுக்கு எதிராகவே இருக்கும். மாமன், மைத்துனர்களாலும் பலனிருக்காது. அவர்களைவிட்டு விலகியிருந்தால் வாழ்வில் உயர்வீர்கள். எப்போதும் உங்கள் சொந்த உழைப்பால் வாழ்வீர்கள். பக்குவம் உங்களிடம் வந்துசேரும்போது பதவியும் வந்துசேரும்.

மேஷ ராசி அன்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீஜய வருடம் நல்ல பலன்களை வழங்கவுள்ளது. இந்த ஆண்டு பிறப்பு அஸ்த நட்சத்திரத்தில், மேஷ லக்னத்தில் வருகின்றது. கன்னி வீட்டில் சந்திரனும், செவ்வாயும் இருக்க சந்திரமங்கள யோகத்துடன் பிறக்கிறது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் கன்னி வீட்டில் (6-ஆம் வீட்டில்) அமர்ந்து 8-ஆம் பார்வையாக தன் சொந்த வீட்டைப் பார்க்கின்றார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பல்வேறு முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்துக்கொடுப்பார். கடந்த ஆண்டு எண்ணற்ற பிரச்சினைகளை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். குறிப்பாக முயற்சியில் தடை ஏற்பட்டிருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போயிருக்கும். குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்திருக்கலாம். சிலர் நண்பர்களால் அதிக சிரமத்தை அடைந்திருப்பார்கள். ஆனால் குரு பகவான் தன் சொந்த வீட்டைப் பார்த்ததால் சிறிதளவு சிரமம் குறைந்திருக்கும். கிரகங்களில் அதிகமான பலமுள்ள சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் (துலாம் வீட்டில்) 16-12-2014 வரையிலும் உள்ளார். கண்டச் சனி நடக்கும் இந்தக் காலகட்டத்தில், நீங்கள் வாகனங்களில் கவனத்துடன் செல்லவேண்டும். சிலர் வட்டிக்குப் பணம் வாங்கி அவஸ்தைப்படலாம். எனவே எதிலும் நிதானித்துச் செல்லவேண்டும். சனி பகவான் ஜய வருடப் பிறப்பிற்கு முன்னரே மார்ச் 4 முதல், ஜய வருடத்தில் ஜூலை 19 வரை வக்ரம் அடைகிறார். அவர் வக்ரமாக உள்ள அந்த காலகட்டத்தில் கெடுபலன் தருவதை நிறுத்திக்கொள்வார். நல்ல பலன்களே நடக்கும். அதன்பிறகு கண்டச்சனியின் தாக்கம் உண்டு என்றாலும், கெடுதல் எதுவும் வராது. கொடுக்கல்- வாங்கல் தொழில் செய்கின்றவர்கள் நிதானித்துச் செயல்பட வேண்டும்.

குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 3-ஆம் இடத்தில் உள்ளார். 13-6-2014-ல் குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றார். இது உங்கள் ராசிக்கு 4-ஆம் வீடு. கடகத்தில் அமர்கின்ற குரு பகவான் உச்சம்பெற்று 9-ஆம் பார்வையாகத் தன் சொந்த வீட்டைப் பார்க்கின்றார். எனவே குரு பகவானால் ஏற்பட்ட தடை, தாமதங்கள் அகலும். ஒருசிலர் வேறு நகரம் செல்வார்கள். மாறுதல் கேட்டவர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் வரும். உறவினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எனவே உறவினர்களிடம் மிகவும் தள்ளிநின்றுப் பழகி வரவேண்டும். “கிட்ட உறவு- முட்டப் பகை’யாக மாறிவிடும். ஒருவிதமான மன உளைச்சலைக் கொடுக்கும்.

இந்த ஜய வருடத்தில் சாயா கிகரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் (துலாம் வீட்டில்) உள்ளார். அவர் 21-6-2014-ல் கன்னி ராசிக்கு- உங்கள் ராசிக்கு 6-ல் வருகிறார். அதேபோல கேது பகவான் 21-6-2014-ல் உங்கள் ராசிக்கு 12-ல் (மீன வீட்டிற்கு) வருகிறார். மீன வீட்டிற்குச் செல்லும் அவரால், மேஷ வீட்டில் கேது இருக்கும்போது ஏற்பட்ட சிரமம் வராது. அதேநேரம் உடல்நலன் பாதிக்கப்படும். பித்தம் சம்பந்தமான நோய்த் தாக்கம் வரலாம். எனவே உடல்நலனில் மிகுந்த அக்கறை கொள்ளவேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். எப்போதும் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தினருடன் தெய்வீக சுற்றுலா அதிகமிருக்கும்.

14-4-2014 முதல் 12-6-2014 வரை குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகம் ஏற்படும். உடன்பிறப்புகளால் சொத்துப் பிரச்சினை உண்டாகும். எதிர்பாராத வகையில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஒருசிலருக்கு சொத்து வாங்கி, அதனால் வில்லங்கம் உண்டாகலாம். இதனால் மனநிம்மதிக் குறைவு ஏற்படும். ஒருசிலரின் மனைவிக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சையும் உண்டாகலாம். எனவே எதிலும் நிதானித்து சிந்தித்துச் செயல்படவேண்டும்.

13-6-2014 முதல் 2-12-2014 வரை பிள்ளைகள்மீது கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் கல்வி விஷயத்தில் தடைகளும், அதிகமான செலவும் ஏற்படும். அதனால் புதிய கடன்கள் ஏற்படக்கூடும். எனவே எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். எந்த ஒரு காரியத்திலும் பாதுகாப்புடன் செயல்பட்டால் நல்ல பலன்களை அடையலாம்.

3-12-2014 முதல் 21-12-2014 வரையில் லாபங்கள் அதிகமாகும். 22-12-2014 முதல் எதிலும் நிதானித்துச் செயல்படவேண்டும். பழைய பாக்கிகள் தொந்தரவு கொடுக்கும். எனவே கடனைத் திரும்பச் செலுத்தவிட்டு, புதிய கடன் பெறாமல் இருப்பது உத்தமம். இந்த நிலை 31-1-2015 வரை நீடிக்கும். பின்பு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வேலையில்லாத பிள்ளைகள் புதிய வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். 1-2-2015 முதல் 13-4-2015 வரையிலும் உங்களுக்கு யோக காலம். புதிய பொருளாதார வாய்ப்புகள் வந்துசேரும். பொருளாதாரம் உயரும். பெரும்பகுதி எல்லா முயற்சியிலும் வெற்றியைக் காண்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உறவினர்களால் நன்மையுண்டு. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களை ஏமாற்றுகின்றவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலைப் பளு கூடும். தூரதேசத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். ஒருசிலருக்கு மத்திய, மாநில அரசுகளில் வேலைவாய்ப்பு கிட்டும்.

பெண்கள்

குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பிடித்தமானவர்களாகத் திகழ்வீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சிகண்டு பெருமை கொள்வீர்கள். விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடையே உங்கள் செல்வாக்கு கூடும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமண யோகம் வந்துசேரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

மாணவர்கள்

இந்த ஸ்ரீஜய ஆண்டில்- கல்வியாண்டில் மாணவர்கள் நன்கு படித்து நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். விளையாட்டு, கலைத்துறையிலும் ஆர்வம் கொள்வார்கள். படிப்பு முடிந்தவர்களுக்கு, தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிட்டும்.

தொழிலதிபர்கள்- வியாபாரிகள்

ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் பகவானாலும், பிற்பகுதியில் ராகு பகவானாலும் நல்ல பொருளாதார வளம் இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் லாபம் காண்பீர்கள். புதிய தொழில் தொடங்க தொழிலாளர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த போட்ட திட்டம் நிறைவேறும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சீராகக் கிட்டும்.

விவசாயிகள்

விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல மகசூலைப் பெறுவார்கள். ஒருசில விவசாயிகள் ஜூன் 2014-க்குள் புதிய வீடு கட்டுவார்கள். அல்லது நிலம் வாங்குவார்கள். பணப்பயிர்கள் பயிரிடுவோர் யோசித்துச் செய்யவேண்டும். குறைந்த முதலீட்டில் பயிர் செய்து அதிக லாபம் பெறலாம்.

அரசுப் பணியாளர்கள்

அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் நல்ல ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். சந்திரமங்கள யோகமுள்ள இந்த காலத்தில், புதிய வீடு கட்ட போட்ட திட்டம் நிறைவேறும். காவல் துறையில் பணிபுரிபவர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் பெறுவார்கள். ஒருசிலர் தானாக முன்வந்து ஓய்வுபெற்று புதிய தொழிலைத் தொடங்கி அதிக லாபத்தைப் பெறுவார்கள்.

கலைத்துறையினர்

குறைந்த பட்ஜெட் படம் எடுப்பவர்கள் அதிகமான லாபத்தைக் காண்பார்கள். சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழகவேண்டும். கலைத்துறையினருக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் பாராட்டும் பரிசும் கிடைக்கும். இந்த ஆண்டு வளமான ஆண்டாக அமையும்.

அரசியல் பிரமுகர்கள்

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தங்கள் சுய ஜாதகத்தை நடப்பு தசா புக்தியுடன் பரிசீலித்து அதற்கேற்றவாறு செயல்படவேண்டும். தலைமையின் ஆதரவுபெற உங்கள் ஜாதகத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருசிலருக்கு அமைச்சர் பொறுப்புகள் தேடிவரும். மக்கள் செல்வாக்கும் கிட்டும்.

80% நன்மை

ஆதாயம் 5 பங்கு, விரயம் 11 பங்கு, ஆரோக்கியம் 5 பங்கு,  அவஆரோக்கியம் 1 பங்கு, ராஜபூஜிதம் 6 பங்கு, சுகஸ்தானம் 4 பங்கு, துக்கம் 3 பங்கு என அமைகிறது. நோயின் தாக்கம் விலகும். அரசு ஊழியர்கள் பதவி உயர்வையும், அரசியல் பிரமுகர்கள் நல்ல பதவியையும் அடைவார்கள். எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தால் பின்னாளில் அதிக லாபத்தைப்பெற்று வாழ்வீர்கள்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை மாதம்முதல் ஆடி மாதம்வரை ஐந்து பங்கு லாபம் வருகிறது. கூடுதல் வருவாய் வரும். எனவே சொத்து வாங்க, பொருட்கள் வாங்க உத்தமம். காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில் இரண்டு பங்கு லாபமுண்டு. கடன் வாங்கும் நிலை ஏற்படாது. வருமானம் சீராக இருக்கும்.

மார்கழி முதல் பங்குனி வரை இரண்டு பங்கு லாபமுண்டு. வருமானக் குறைவு ஏற்படாது.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை முதல் ஆடி வரை ஏழு பங்கு லாபம் வருகிறது. காரிய வெற்றிகள் உண்டு. சிக்கனமாக இருந்தால், அது அடுத்த நான்கு மாதங்களுக்கு உங்களுக்கு கைகொடுக்கும். திட்டமிட்ட காரியமும், திட்டமிடாத காரியமும் எளிதாய் நிறைவேறும்.

ஆவணி முதல் கார்த்திகை வரை எதிர்பார்த்த அளவு வருமானம் வரவில்லை. எனவே நீங்கள் சிக்கனத்துடன் செயல்படவேண்டும். புதிய கடன்கள் வாங்கவேண்டியது வராது.

மார்கழி முதல் பங்குனி வரை இரண்டு பங்கு லாபம் வருகின்றது. எனவே அலைச்சல் குறைந்து, காரிய வெற்றிகள் ஏற்படும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை முதல் ஆடி வரை இரண்டு பங்கு லாபத்தைப் பெறுவார்கள். வருமானம் சீராக வரும். கஷ்ட ஜீவனம் வராது. சேமிப்பை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

ஆவணி முதல் கார்த்திகை வரை ஒரு பங்கு லாபம் வருகின்றது. நிம்மதியான காலகட்டம்.

மார்கழி முதல் பங்குனி வரை வருமானக் குறைவு உள்ளது. காரிய பங்கமும் அலைச்சலும் ஏற்படும். எனவே எதிலும் நிதானித்துச் செயல்பட வேண்டும்.

ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்

சஷ்டி திதிகளில் அருகிலுள்ள முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், சந்தனக் காப்பு செய்யலாம். முடியாதவர்கள் உடல் ஊனமுள்ளவர்களுக்கு ஆடை தானம் செய்யலாம்; அன்னதானம் செய்யலாம். மேற்கண்ட பரிகாரங்களைச் செய்து ஸ்ரீஜய வருடத்தில் வளமாக வாழலாம்.

———————————————————————————————————————

ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசி அன்பர்களே!

மற்றவர்களுக்கு அள்ளிக்கொடுப்பதில் நீங்கள் வல்லமை பெற்றவர்கள். எனவே நீங்கள் உழைக்காமலேயேகூட கூடுதலான வருமானத்தைப் பெறுவீர்கள். பிரச்சினைகள் உங்களுக்கு அதிகம். ஆனால் எதிர்நீச்சல் போட்டு அவற்றை சமாளிப்பீர்கள். மற்றவர்கள் ஒதுக்கிவைத்த கடினமான வேலையையும், நீங்கள் வெகு இலகுவாகவும் சீக்கிரமாகவும் செய்வீர்கள். முரட்டு சுபாவம் இருந்தாலும், எதிலும் சற்று நிதானித்து ரகசியம் காப்பீர்கள். ஒருசிலருக்கு அரசியல் ஈடுபாடு உண்டு. 49 வயதைக் கடந்தவர்கள் அரசியலில் வெற்றிப் படிக்கட்டை அடைவீர்கள். உங்களுக்கு லாபம் எவ்வளவு வருகிறதென்று பார்த்துக்கொண்டுதான் மற்ற வேலைகளைச் செய்வீர்கள். பிறர் சொத்தை வாங்க நினைப்பவர்கள். சுயநலத்தில் சற்று கூடுதலாக அக்கறை காட்டுபவர்கள். தங்கள் எண்ணத்திற்கு மற்றவர்கள் செவிசாய்க்கும்வரை வாதிடுவார்கள். பால் பொருட்களை அதிகம் விரும்பி உண்பார்கள். தூய உடையுடன் எப்போதும் வலம் வருவார்கள். பெற்றோர்களைப் பேணிக்காப்பார்கள். பெரும்பாலானவர்கள் அடிமைத் தொழிலை விரும்பி ஏற்கமாட்டார்கள். மற்றவர்களிடம் கேட்டறிதல்மூலம் அறிவுப்பூர்வமாக விளங்குவார்கள். உடன்பிறந்தவர்களுக்குள் நேசத்தோடு இருக்கமாட்டார்கள். ஆனால் உற்றார்- உறவினர்களிடம் நேசத்தோடு வாழ்வார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மகிழ்ச்சியாக காலம் கழிக்கக்கூடியவர்கள். எல்லா இடங்களிலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவார்கள். எடுத்த காரியத்தை முடிப்பவர்கள். அளவுகடந்த விஷயப் பிரியர். இனிமையாகப் பேசுவார்கள். மற்றவர்களைப் புரிந்து நடக்கும் குணமுள்ளவர்கள். இசை, நாட்டியத்தில் விருப்பமுள்ளவர்கள். சிலர் சங்கீத மேதைகளாகத் திகழ்வார்கள். ஒருசிலர் திடீர்திடீரென குணத்தை மாற்றுவார்கள்.

நவகிரகங்களில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான நற்பலன்களையும் தீய பலன்களையும் வழங்கும் கிரகங்கள் குரு, சனி, ராகு. அதன்படி ரிஷப ராசி அன்பர்களுக்கு குரு பகவான், ராசிக்கு 2-ல் அமர்ந்து 12-6-2014 வரையிலும் உலாவருகின்றார். எனவே நீங்கள் 12-6-2014 வரையிலும் குரு பகவான் அருளால் அதிகமான லாபத்தைப் பெறுவீர்கள். அரசு ஊழியர்களைவிட, வியாபாரம் செய்கிறவர்கள் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். இனிப்பு, ஜவுளி, கண்ணாடி, ரசாயனம், மருந்து ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். திருமணமாகாத ஆண்- பெண் இருசாராரும் நல்ல வரன்கள் அமைந்து, சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். மூடிக்கிடந்த ஆலையைத் திறந்துள்ள முதலாளிகள் 12-6-2014 வரை எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். மருத்துவமனை நடத்துபவர்கள் மேலும் விரிவாக்கம் செய்வார்கள். ஒருசில மருத்துவர்கள் வெளிநாடு சென்று தொழில் செய்வார்கள். பூர்வீக சொத்துகளால் நல்ல பலன்கள் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

இத்தகைய நற்பலன்களை வழங்கிய குரு பகவான் 13-6-2014-ல் உங்கள் ராசிக்கு 3-ல் உலா வருகின்றார். அது அவ்வளவு சிறப்பானதல்ல. குரு பகவான் கடகத்தில் அமர்ந்துள்ள காலத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இருப்பதைக்கொண்டு சிறப்பாக வாழவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டுவிடாதீர்கள். விலையுயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசுப் பணியாளர்களில் ஒருசிலர் மேலதிகாரிகளின் தண்டனைக்கு ஆளாகநேரும். உடன்பிறந்தவர்களால் சுபகாரிய பங்கம் ஏற்படும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். அதேசமயம் நண்பர்களால் உதவியைப் பெறுவீர்கள். பொருளாதாரத் தட்டுப்பாடு வராது. சகோதர- சகோதரிகளிடையே பலமான கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். எனவே குருப்பெயர்ச்சிக்குப் பின், அடுத்த குருப்பெயர்ச்சி வரை மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும். நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்கள் எப்போதும் எந்த பாதிப்புமின்றி வாழ்வார்கள். நல்லவர்களாக வாழ்ந்து வருபவர் குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும்.

எந்தக் காரியத்தையும் பிறரிடம் ஆலோசித்துச் செயல்படவேண்டும். மேலதிகாரியாக உள்ள ஒருசிலர் காவல்துறை நடவடிக்கைக்கு ஆட்பட நேரிடலாம். உங்களுக்கு ஜால்ரா போடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ல் 15-12-2014 வரை உலா வருகிறார். சனி 6-ல் உள்ள இந்த காலகட்டத்திலும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பொருட்களை கவனத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். எனினும் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

ரிஷப லக்னக்காரர்கள் சனி பகவானால் அதிக பலன்களை அடைவார்கள். சனி ஒருவரே ராஜயோகத்தைத் தரவல்லவர். எனவேதான் ரிஷபம் லக்னமாக அமைந்த அன்பர்கள் அதிகமான நற்பலன்களை அடைவார்கள். சனி பகவானும் குரு பகவானும் உங்கள் முயற்சிகளில் வெற்றிகளைத் தருவார்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு வரும். பகைவர்களை முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். ரிஷப லக்ன அன்பர்கள் பகைவர்களின் சதியை முறியடித்துவிடுவார்கள்.

ரிஷப ராசியினர் ஒருசிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகமும் புதிய நிலம் வாங்கும் யோகமும் உண்டாகும். ஒருசிலர் தற்போதுள்ள வீட்டை காலிசெய்துவிட்டு வசதியான வீட்டிற்குச் செல்வார்கள். உறவினர்கள் வருகை அதிகரிக்கும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். 16-12-2014-ல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் வருகிறார். அது கண்டச் சனி எனப்படும். எனவே வாகனங்களில் கவனமாகச் செல்லவேண்டும். புதிய கடன் வாங்கி எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது. (ரிஷபம் லக்னமாக அமைந்த ரிஷப ராசி அன்பர்கள், இந்த சனிக்காலத்தில் ஒரு சொத்து வாங்கி அதிக விலைக்கு விற்கக்கூடும்.) பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றத்தைக் காணலாம். ஒருசிலருக்கு வேலையில் இடமாற்றம் வரும். ஒருசிலருக்கு இலாகா மாற்றம் வரும். எனவே ரிஷப லக்னம் உள்ளவர்கள் தவிர, மற்ற ரிஷப ராசி அன்பர்கள் கூடுதல் கவனத்துடன், நிதானத்துடன் குடும்பத்தைப் பேணவேண்டும். சொந்தக் காரியங்களில் மட்டுமே ஈடுபடவேண்டும்.

கடந்த காலத்தில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் அமர்ந்து, உங்கள் உடல்நலத்தில் அதிக சிரமத்தைத் தந்திருப்பார். நீங்கள் 20-6-2014 வரை மிகவும் எச்சரிக்கையாக செயல்படவேண்டும். ஒருசிலர் ஒவ்வாமை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆட்படக் கூடும். எனவே உணவு கட்டுப்பாடு வேண்டும். அசதியைப்போக்கி, உற்சாகத்தோடு செயல்படவேண்டும். 21-6-2014-ல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 5-ல் வருகிறார். அதேபோல கேது பகவான் 11-ல் மீன வீட்டில் உலா வருகிறார். 11-ல் அமர்ந்து கேது அதிகமான லாபத்தை வழங்குவார். கேது பகவானால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செயலில் வெற்றியும் கிடைக்கும். ஆண்டின் முற்பகுதியில்- அதாவது 20-6-2014 வரை ராகு பகவான் உங்களுக்கு நன்மைகளைச் செய்வார். அதன்பின்னர் 21-6-2014 முதல் ராகு செய்த நன்மைகளை கேது பகவான் ஏற்றுச் செய்வார். ராகு உங்கள் ராசிக்கு 5-ல் வருவதால், குடும்பத்தில் ஒற்றுமையில்லாத நிலை ஏற்படக்கூடும். எதிலும் நிதானத்துடன் செயல்படுபவர்கள் வெற்றிக்கனியைப் பறிப்பார்கள். உடன்பிறந்தவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்களும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கமாட்டீர்கள். நிதானத்துடன் செயல்படவேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்வதால் நல்ல பலனை அடையலாம். ரத்த சம்பந்தமான நோய்கள் வரலாம். எனவே சற்று கவனத்துடன் உடலைப் பேணவேண்டும். உங்கள் உடன்பிறந்த மூத்த சகோதரி- சகோதரர் மூலம் நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஒருசிலருக்கு காதுவலி வரும்.

13-6-2014 முதல் 2-12-2014 வரையிலும், உங்கள் உடன்பிறந்தவர்களுக்காக பொருளாதார உதவி செய்தால் அதனால் உங்களுக்கு புதிய கடன் வந்துசேரும். விவசாயத்தில் தோட்டக் காய், கனி வகை, மலர் வகைகள் பயிரிட்டு நல்ல லாபத்தை அடையலாம்.

3-12-2014 முதல் 21-12-2014 வரையில் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஏமாற்றம் உண்டாகும். மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். கிணறு, போர்வெல் போடுபவர்கள் யோசித்து செயல்படவும்; நஷ்டம் வர வாய்ப்புள்ளது.

22-12-2014 முதல் 13-6-2015 வரை பொருட்கள் களவுபோக வாய்ப்புள்ளதால், கைப்பொருட்களை மிகவும் பத்திரமாக வைத்திருக்கவேண்டும். அதிக அளவில் செலவு செய்து வழக்கில் வெற்றிபெற நேரும்.

பெண்கள்

இந்த ஸ்ரீஜய வருடத்தில், குடும்பத்தில் வசதி அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வார்கள். பெண்களுக்கு பல ஆண்டுகளாகத் தடைப்பட்டுவந்த திருமணம் இனிதே நிறைவேறும். நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். நீண்டகாலமாகப் பிரிந்துவாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். காதல்வசப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, காதலைக் கைவிடுவார்கள்.

மாணவர்கள்

மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். பெற்றோரும் ஆசிரியரும் கல்வி நிறுவனமும் பாராட்டும் வகையில் கல்வியில் உயர்வார்கள். அதேபோல விளையாட்டுப் போட்டியிலும் சாதனை படைப்பார்கள். அதேசமயம் 13-6-2014 முதல் கல்வியாண்டு முடியும் வரை அதிகமான சிரத்தை எடுத்துப் படித்து முன்னேற வேண்டும். கல்வியில் தடை வராது. உயர்கல்வி மாணவர்கள் அரியர்ஸ் இல்லாமல் தேர்ச்சி பெறுவார்கள். சிலர் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வுபெறுவார்கள். ஒருசில மாணவர்களின் அலட்சியப் போக்கால் அதிக மதிப்பெண் கிடைக்காது. ஆனாலும் தோல்வியைத் தழுவ மாட்டார்கள்.

தொழிலதிபர்கள்- வியாபாரிகள்

தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்கி, ஆதாயத்தை அதிகரிக்கச் செய்வார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு நல்லமுறையில் கிடைக்கும். ஒருசிலர் தொழில்ரீதியாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு சென்று வருவார்கள். வியாபாரிகள் புதிய முறைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பார்கள். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

விவசாயிகள்

விவசாயிகள் புதிய சொத்துகளை வாங்குவார்கள். எதிலும் முன்னேற்ற கரமான பலனைக் காணலாம். சொத்துப் பிரச்சினைகளில் ஏற்பட்ட வழக்கு விவகாரம் சாதகமாக இருக்கும். ஒருசிலருக்கு கைவிட்டுப்போன சொத்துகள் மீண்டும் கிடைக்கும். மாற்றுப் பயிர்கள் சாகுபடி செய்வதன்மூலம் வருமானம் கிடைக்கும், கால்நடை வளர்ப்பவர்களும் ஓரளவு லாபம் பெறுவார்கள்.

அரசுப் பணியாளர்கள்

அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில் இந்த ஆண்டு 12-6-2014 வரை சாதகமாக அமையும். 13-6-2014-க்குமேல், நீங்கள் யாரை முழுமையாக நம்புகின்றீர்களோ அவர்களே உங்களுக்கு எதிராக செயல்படக்கூடும். கவனம் தேவை. ஜூலை 16 முதல் செப்டம்பர் இறுதி வரையிலும் செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமாக உள்ளார். இந்த காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் அதிகமாக லாபத்தை அடைவார்கள். ஒருசிலருக்கு விரும்பிய இடத்துக்கு மாறுதல் வரும். கையூட்டு பெறும் அரசு ஊழியர்கள் தண்டனைக்கு உள்ளாகும் நேரமிது. எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

கலைத்துறையினர்

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். ஒருசிலர் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வார்கள். கலைஞர்களில் ஒருசிலருக்கு புகழும் பாராட்டும் வந்துசேரும்.

அரசியல் பிரமுகர்கள்

13-6-2014 வரை குரு பகவான் 2-ல் சாதகமாக உள்ளார். எனவே நீங்கள் எதிர்பார்த்தபடி தேர்தல் வெற்றியைக் காண்பீர்கள். நீங்கள் எந்தப் பக்கம் ஆதரவு தருகிறீர்களோ, அதன்படி வெற்றியைக் காண் பீர்கள். அதன்பிறகு அரசியலில் சற்று யோசித்துச் செயல்பட வேண்டும். தலைமையால் விமர்சிக்கப்படலாம். 13-6-2014 வரை தேர்தல் களம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே நீங்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் ஒருசில எம்.எல்.ஏக்கள் அமைச்சராகவும் பொறுப்பேற்கும் வாய்ப்பு வரும். ஒருசிலருக்கு முக்கியத்துவம்வாய்ந்த இலாகா பொறுப்புகள் வந்துசேரும்.

75% நன்மை

இந்த ஸ்ரீஜய வருடத்தில் ரிஷப ராசி அன்பர்கள் 75 சதவிகித நன்மை பெறவுள்ளார்கள். இந்த ஆண்டு உங்களுக்கு 11 பங்கு லாபம்; 2 பங்கு மட்டுமே விரயம். ஆரோக்கியம் 2 பங்கு, அவஆரோக்கியம் 5 பங்கு (எனவே உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை), ராஜபூஜிதம் 8 பங்கு, ராஜயோகம் 3 பங்கு, சுகம்  3 பங்கு அமைகிறது.

(கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கான பலன், மேஷ ராசிபலனின் இறுதியில் உள்ளது.)

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை மாதம்முதல் ஆடி மாதம்வரை ஐந்து பங்கு லாபம். எனவே சௌபாக்கியத்துடன், எதிர்காலத்திற்கு வேண்டிய சேமிப்புகளையும் உருவாக்கிக் கொள்வீர்கள்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில் இரண்டு பங்கு லாபம் வருகின்றது. சேமிப்புத் தொகை இப்போது உங்களுக்குப் பயன்படும்.

மார்கழி முதல் பங்குனி வரை மூன்று பங்கு லாபம் வருகின்றது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆலய வழிபாடுகள் சிறக்கும். தாய்- தந்தையர் வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை முதல் ஆடி வரை வருமானக் குறைவு உள்ளது. வரவைவிட செலவுகள் கூடுதலாக இருக்கும்.

ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானத்தை சீராக செலவு செய்யவேண்டும். கூடுதல் செலவுகளுக்காக புதிய கடன்கள் ஏற்படலாம்.

மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் வரும். செலவுகள் கட்டுக்கடங்கி காணப்படும். சிக்கனம், புதிய கடன் ஏற்படுவதைத் தடுக்கும்.

ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்

ஆண்டு முழுவதும் வருகின்ற ஏகாதசி திதிகளில் பெருமாள் ஆலயம் சென்று, நெய்விளக்கேற்றி 11 முறை வலம் வந்தால் நல்ல பலன்களை அடையலாம். முடியாதவர்கள் பசுக்களுக்கு வைக்கோல், அகத்திக்கீரை, வாழைப்பழம் தானம் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பசுவுக்கு மஞ்சள், குங்குமம் தடவி வாலைத் தொட்டு வணங்கினால் நன்மையுண்டு. ஆண்டு முழுவதும் பெருமாள் உங்களுக்குத் துணையிருப்பார்.

————————————————————————————————————————————————–

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை,
புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசி அன்பர்களே!

மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் எல்லாருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். எந்தக் காரியம் செய்தாலும் பிறர் நம்பும்படி செய்வார்கள். முதிர்ந்த ருசியுடன் கூடிய உணவை உண்பார்கள். வாழ்க்கையில் ஏற்படும் தாழ்வு- முன்னேற்றம் இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்வார்கள். உடல் வலிமையுள்ளவர்கள். எந்த காரியத்தையும் திட்டமிட்டுச் செய்து அதில் வெற்றியும் பெறுவார்கள். கலைத்துறையில் சிறந்து விளங்குவார்கள். எல்லாம் சிறப்பாக நடக்கவேண்டுமென்று நினைப்பார்கள். ஆனால் தங்கள் பிடிவாத குணத்தை மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஒருசிலர் மற்றவர்களின் புகழ்ச்சிக்கு அடிமையாகிவிடுவார்கள். சாந்தகுணம் உள்ளவர்கள். மற்றவர்களுக்காக இரக்கப்படுவார்கள். மற்றவர்கள் இவர்களை எளிதில் ஏமாற்றி விடுவார்கள். கம்பீரமான நடை உள்ளவர்கள். எப்போதும் சுத்தமாக இருப்பார்கள். துணிச்சலுடன் வாழ்வார்கள். சாமர்த்தியமாகப் பேசுவார்கள். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிடுவார்கள். உற்றார்- உறவினர்களுடன் மிகுந்த பற்றுடன் வாழ்வார்கள். பின்வயதில் அதிக செல்வாக்குடன் வாழ்வார்கள். மிதுன ராசியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர் கணக்கில் சிறந்து விளங்குவார்கள். மனதுக்குள்ளேயே கணக்குப்போட்டு ஒருவருடைய குணங்களை அளந்துவிடுவார்கள். மனதிலுள்ள காரியங்களை மற்றவர்களிடம் சொல்லாமல் செய்து முடிப்பார்கள்.

இந்த ஆண்டு துவக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார். 12-6-2014 வரையில் அமர்ந்திருப்பார். அதுவரை, செய்யும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் அதிகம் ஏற்படும். எந்த அளவுக்கு தடை, தாமதம் ஏற்படுகின்றதோ அந்த அளவுக்கு 13-6-2014 முதல் நற்பலன்கள் ஏற்படும். எனவே நீங்கள் 12-6-2014 வரை எதிலும் நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படவேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. அக்கம்பக்கம் உள்ளவர்களை மிகவும் அனுசரித்துச் செல்லவேண்டும். சிலருக்கு கணவன்- மனைவி உறவில் பிரச்சினைகள் வரக்கூடும். மேலும் கணவனைவிட்டுப் பிரிந்துசென்ற தம்பதியரை அழைக்கச் செல்லும்போது நிதானித்துப் பேசவேண்டும். மனைவி, மக்கள் தேவையைப் பூர்த்திசெய்வதில் தடை, தாமதங்கள் வந்து நீங்கும். சிலர் உங்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுவார்கள். எனவே நன்கு தெரிந்தவர்களைத் தவிர மற்றவர்களை வீட்டினுள் அனுமதிக்காதீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் மாறுதல் கேட்பதை 12-6-2014 வரை தள்ளிப்போட வேண்டும். ஒருசிலருக்கு வேண்டாத இடத்திற்கு மாறுதல் வரலாம். உங்களுடன் பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்கள் உங்களை வம்பில் மாட்டிவிடக்கூடும். மறதியைத் தவிர்க்க சுறுசுறுப்புடன் இருக்கவேண்டும். ஒருசில அரசு ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனைகளை அடைய நேரலாம்.

13-6-2014-ல் குரு பகவான் உங்கள் ராசியான மிதுனத்திலிருந்து கடக ராசிக்கு உச்சம்பெற்று பெயர்ச்சியாகின்றார். இப்போது உங்கள் ராசிக்கு  2-ல் குரு வருவது உத்தமம். தடைப்பட்டுவந்த திருமணம் நடைபெறும். பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும். வேலைதேடும் இளைஞர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். மத்திய, மாநில அரசுகளில் வேலைக்கான உத்தரவை எதிர்பார்த்திருப்போருக்கு நல்ல தகவல் வந்துசேரும். 13-6-2014 முதல் அடுத்த ஆண்டு பிற்பகுதி வரையிலும் குரு பகவான் அள்ளித்தரப்போகின்றார். வியாபாரம் செய்பவர்கள் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். இனிப்பு, ஜவுளி, கண்ணாடி, ரசாயனம், மருந்து ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு கூடுதல் லாபம்கிட்டும். நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் வாழ்வார்கள். திருமணமாகாத ஆண்- பெண் இருசாராருக்கும் நல்ல வரன் கிடைத்து. மகிழ்ச்சியாக வாழ்வார்கள். மூடிக்கிடக்கும் ஆலை திறக்கப்பட்டு, தொழிலாளிகள் இந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன்களையும் ஆதாயத்தையும் பெறுவார்கள். மருத்துவமனை நடத்துபவர்கள் மேலும் விரிவாக்கம் செய்வார்கள். மருத்துவர்களில் சிலர் அயல்நாடு சென்று தொழில்செய்வார்கள். மருந்துப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிகமான விற்பனையை அடைவார்கள். புத்திர- புத்திரிகளால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஒருசிலர் அயல்நாடு சென்று கல்விபயில்வார்கள். சிலர் விலைமதிப்புள்ள சொத்துகளை வாங்குவார்கள். எதிர்காலம் நல்ல நிலையிலுள்ளது. ராஜயோகத்தை அடைவார்கள்.

ஒருசிலர் பூர்வீக சொத்துகளால் நல்ல பலனை அடைவார்கள். வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகளில் ஏற்பட்ட தடை மாறும். நல்ல வரன்களும் தேடிவரும். பிரிந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும். அரசுப் பணியாளர்களுக்கு இதுவரை இழுபறியாக இருந்துவந்த பதவிஉயர்வு கிட்டும். வேலைதேடும் அன்பர்களுக்கு நல்ல வேலை அமையும். அரசுப் பணி வராதா என்று ஏங்கிய ஒருசிலர் உயர்பதவிக்கான உத்தரவுகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட பாக்கியங்களை அள்ளிப் பருகுவீர்கள். காதல் திருமணம் செய்து பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். ராணுவம், காவல் துறையில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற்று விரும்பிய இடத்துக்கு      மாறுதலில் செல்வார்கள். மனைவி, மக்களின் தேவைகள் பூர்த்தியாகும்.

மனைவியை அனுசரித்துச் செல்பவர்கள் பெரும் செல்வத்தை அடைவார்கள். மனைவிவழியில் இருந்துவந்த சொத்துப்பிரச்சினைகள் நீங்கும். மனைவியின் யோகத்தில் நல்ல வருமானமும் லாபமும் வரும். உற்சாகமாக இருப்பீர்கள். ஒருசிலர் புதியவீடு, மனை வாங்கிக் குவிப்பார்கள். உடன்பிறந்தோர் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். சொத்துப்பிரச்சினைகளில் சுமுக முடிவு ஏற்படும். பெற்றோர் வழியில் இருந்துவந்த மருத்துவச்செலவுகள் குறையும். ஒருசில இளைஞர்களுக்கு வேறு மாநிலத்தில் அரசுப்பணி அமையும். வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். உள்ளூரில் இருப்பவர்கள் பொருளாதாரத்தை சிக்கனமாக வைத்திருக்கவேண்டும். வீண் சிக்கலையும் சிரமத்தையும் தவிர்க்க, அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ஆம் இடமான துலா ராசியில் உள்ளார். 16-12-2014 வரை அவர் ராசிக்கு 5-ஆம் இடத்தில்தான் இருப்பார். சென்ற ஆண்டைப் பொறுத்தவரை சனி பகவான் அதே இடத்தில் இருந்தாலும் நல்ல பலன்களை வழங்கவில்லை. வைராக்கியமான சூழ்நிலையை உருவாக்கினார். உங்கள் பிள்ளைகள் சம்பந்தமாகவும் தொல்லைகளை அனுபவித்திருப்பீர்கள். அடிக்கடி ஒருவிதமான மனஉளைச்சலுக்குக்கூட ஆளாகியிருப்பீர்கள். தற்போதும் அதே இடத்தில் சனிபகவான் நீடித்தாலும், மார்ச் 4 முதல் ஜூலை 7 வரை சனி பகவான் வக்ரம் பெறுகிறார். சனி பகவான் இந்த காலகட்டங்களில் கெடுதலான பலன்களைத் தராமல் ஒதுங்கிக்கொள்வார். இந்த காலகட்டத்தில் பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

நிழல் கிரகமான ராகு பகவான் 20-6-2014 வரை துலா ராசியில் சனி பகவானுடன் இணைந்திருக்கின்றார். அவர்களால் குடும்பத்தில் பிரச்சினை உருவாகலாம். ஆனால் குரு பகவான் 12-6-2014 வரை 5-ஆம் பார்வையாக பார்ப்பதால் கெடுபலன்கள் குறையும். 21-6-2014-ல் ராகு பகவான் இடம் பெயர்ந்து உங்கள் ராசிக்கு 4-ல் (கன்னி) வருகிறார். அவரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். (எனவே நீங்கள் 27 முழு உளுந்தை வெள்ளைத் துணியில் முடிந்து, உங்கள்வீட்டு பூஜையறையில் வைத்து, “ராகுவால் எவ்விதக் கெடுதலும் வரக்கூடாது’ என்று தினசரி காலையில் முடிந்தவரை வேண்டுங்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் வராது).

மற்றொரு நிழல் கிரகமான கேது பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் மேஷத்தில் உள்ளார். அவரும் 20-6-2014 வரை நல்ல பொருளாதார வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை உண்டுபண்ணுவார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலை வாரி வழங்குவார். 21-6-2014 முதல் 10-ஆம் இடமான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு அவரால் நன்மையை எதிர்பார்க்க முடியாது. 10-ஆம் இடத்தில் கேது இருக்கும் காலம்வரை உஷ்ணம், தோல் தொடர்பான உபாதைகளைத் தருவார். சிலரது வீட்டில் பொருட்கள் களவுபோகவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் எப்போதும் விழிப்போடு செயல்படுங்கள். ராகு- கேதுவுக்கு ப்ரீதி செய்துகொள்ளுங்கள். கெடுதல் வருவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

12-6-2014 வரை மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும். பூர்வீக சொத்தில் பிரச்சினை ஏற்பட்டு, உடன்பிறப்புகளாலும், அவரது மனைவியாலும் வீண் பிரச்சினைகள் உருவாகும். சிலருக்கு நிலுவையிலுள்ள வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் பாதிப்படையும். குடும்பத்தில் குழப்ப நிலையும், உடல் ஆரோக்கிய பாதிப்பும் உண்டாகலாம். ஒருசிலருக்கு நண்பர்களால் உதவி கிட்டும்.

13-6-2014 முதல் நினைத்த காரியம் நடக்கும். ஒருசிலருக்கு செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றம் மற்றும் இலாகா மாற்றம் உண்டாகும். பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பதவியை அடைவார்கள். நல்ல வருமானம் வரும்.

3-12-2014 முதல் 22-12-2014 வரை தைரியமும் விவேகமும் சற்று குறையும். விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி வாய்ப்பை அடைவது கஷ்டமாகும். பொருளாதாரத் தட்டுப்பாடு உண்டாகும். பணத்தில் பற்றாக்குறை ஏற்படும். சிலருக்கு தூரதேசப் பயணம் பாதகமாக இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். ஒருசிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய் கடுமையாக பாதிக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். ரசவர்க்கம், இனிப்பு, புளி வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலனை அடைவார்கள். அதேபோல திராவகம், பாதரசம், கண்ணாடி வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றத்தை அடைவார்கள். நல்ல லாபத்தையும் அடைவார்கள்.

பெண்கள்

பெண்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வருமானமுடைய வரன் வந்துசேரும். பெண்கள் கல்வியில் உயர்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்துசென்ற பெண்கள் கணவரோடு சேர்ந்துவாழ்வார்கள். நீண்டநாட்களாக குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அக்கம்பக்கத்தினர் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.

மாணவர்கள்

மாணவர்கள் இந்த கல்வியாண்டில் மிகவும் கவனத்துடன் படிக்கவேண்டும். அப்போதுதான் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். அடுத்த கல்வியாண்டில் குரு பகவான் உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளார். எனவே கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

தொழிலதிபர்கள்- வியாபாரிகள்

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் குறுக்கிடும் தடையை முறியடித்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். சிலர் தங்கள் தொழிலை வங்கி உதவியுடன் விரிவாக்கம் செய்வார்கள். ஒருசிலருக்கு தொழில் காரணமாக ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை ஏற்படும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அதனை முறியடித்துவிடுவீர்கள். நிர்வாகச் செலவு கட்டுக்கடங்காமல் போகலாம். எனவே சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருசிலர் வெளிநாடுகளில் தொழில்செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். கொள்முதலைவிட கூடுதல் லாபத்துக்கு அனைத்து சரக்குகளையும் விற்பனை செய்வார்கள். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள்.

விவசாயிகள்

ஒருசில விவசாயிகள் புதிதாக சொத்துகளை வாங்குவார்கள். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். ஆண்டின் துவக்கத்தில் மானாவாரி பயிர்கள் மூலமும், பிற்பகுதியில் நெல், கடலை போன்ற பயிர்கள் மூலமும் நல்ல மகசூல் கிடைக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் திட்டமிடாமலேயே புதிய சொத்துகளை வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்துகளில் வழக்குள்ளவர்கள் சாதகமான தீர்ப்புக் காகக் காத்திருக்க வேண்டும். 16-12-2014-க்கு முன்னர் வரும் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எனவே நீங்கள் மேல்முறையீடு செய்து எதிர்பார்த்த நல்ல தீர்ப்பை அடையலாம். சொத்துகளிலுள்ள வில்லங்கம் நீங்கும்.

அரசுப் பணியாளர்கள்

அரசு ஊழியர்கள் 12-6-2014 வரை நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன்பின்னர் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், பணி மாற்றமும் கிடைக்கும். வேலையிழந்த ஒருசில அரசுப் பணியாளர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள். பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. மேலதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். வரவேண்டிய சலுகைகள் படிப்படியாகக் கிடைக்கும். ஒருசிலருக்கு வேலைப் பளு கூடினாலும் வருமானத்துக்குக் குறைவிருக்காது. எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைத்து, ஒருசிலர் வீடுகட்டி முடிப்பார்கள். வாரிசு வேலைக்காக காத்திருப்பவர்கள் வேலைவாய்ப்பை அடைவார்கள்.

கலைத்துறையினர்

ஒருசிலருக்கு புதிய படவாய்ப்புகள் வந்துசேரும். சில கலைஞர்கள் நீண்டநாள் கடனை அடைப்பார்கள். புதிய படம் ஒப்பந்தமாகும். வெளிவந்த படம் வெள்ளிவிழா காணும். கலைத்துறையினருக்கு இந்த ஸ்ரீஜய ஆண்டு பொற்காலம்.

அரசியல் பிரமுகர்கள்

நீங்கள் இதுவரை செய்துவந்த பொதுத்தொண்டு உங்களை தலைமைக்கு அடையாளம் காட்டும். புதிய தலைமைப் பொறுப்புகள் உங்களை வந்துசேரும். எம்.எல்.ஏ.வாக உள்ள ஒருசிலர் 13-6-2014-க்குமேல் அமைச்சராக வாய்ப்பு அதிகம் உள்ளது. தேர்தல்களம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

80% நன்மை

நீங்கள் இந்த ஆண்டில் 80 சதவிகித லாபத்தைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு லாபம் 2 பங்கு, விரயம் 2 பங்கு, ஆரோக்கியம் 4 பங்கு, அவஆரோக்கியம் 6 பங்கு (ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடக்கூடாது), ராஜபூஜிதம் 5 பங்கு, ராஜயோகம் 6 பங்கு, சுகம் 3 பங்கு, துக்கம் 3 பங்கு. எனவே வாழ்க்கை நிலை சீராகச் செல்லும்.

(மிருகசீரிட நட்சத்திரத்திற்கான பலன், ரிஷப ராசிபலனின் இறுதியில் உள்ளது.)

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை முதல் ஆடி வரை மூன்று பங்கு லாபம் உள்ளது. எனவே வாழ்க்கையில் சௌபாக்கியமும் தனலாபமும் எதிர்கால யோகமும் கிடைக்கும்.

ஆவணி முதல் கார்த்திகை வரை ஒரு பங்கு லாபம் வருகிறது. எனவே வருமானத்தை நிதானமாக செலவுசெய்ய வேண்டும். கூடுதல் செலவுகள் வரும். எனவே பணத்தை சிக்கனமாகக் கையாளவேண்டும்.

மார்கழி முதல் பங்குனி வரை நான்கு பங்கு லாபம் வருகிறது. எனவே கூடுதலான வருமானம் வரும். தேவைகள் பூர்த்தியாகும். பணத்தை சேமிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை முதல் ஆடி வரை ஆறு பங்கு லாபம் வருகிறது. எனவே  நீங்கள் திட்டமிட்டபடி அனைத்து பொருட்களையும் வாங்குவீர்கள். வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

ஆவணி முதல் கார்த்திகை வரை இரண்டு பங்கு லாபம் வருகிறது. எனவே வருமானத்திற்கு குறைவு வராது. சேமிப்பை உயர்த்துவீர்கள்.

மார்கழி முதல் பங்குனி வரை இரண்டு பங்கு லாபம் வருகிறது. பிள்ளைகளின் திருமணம் விமரிசையாக நடக்கும். சேமிப்பு கூடும். எதிர்கால வசதிகளுக்கான காரியங்களை செயல்படுத்துவீர்கள்.

ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்

ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலபைரவர் சந்நிதியில் ஈசானிய (வடகிழக்கு) திசையில் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, மிளகை சிறு மூட்டையாகக் கட்டி தீபமேற்றிட, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். அல்லது நெய்விளக்கேற்றி புவனேஸ்வரி அம்மனை தரிசித்துவர, நன்மையான பலன்களே ஏற்படும்.

——————————————————————————————————————————————————–

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசி அன்பர்களே!

இந்த ராசியில் பிறந்தவர்கள் பக்திசிரத்தையுடன் வாழ்வார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் நீதி, நேர்மையுடன் இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்கள். தன்னைப்போல மற்றவர்களும் இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள். பசி பொறுக்காதவர்கள். நல்ல உழைப்பும் பொருளாதார உயர்வும் உள்ளவர்கள். சிலர் தங்கள் சௌகரியத்துக்காக மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவார்கள். எல்லாருக்கும் நல்லவர்கள். மற்றவர்களைப் புரிந்து நடப்பவர்கள். ஒருசிலர் கடல் கடந்து வேலைசெய்வார்கள். உயர்கல்வி கற்றவர்கள். சுயநலம் இல்லாத போக்கைக் கொண்டவர்கள். இரக்க குணம் அதிகமுள்ளவர்கள். கடக ராசி அன்பர்கள் எப்போதும் காலத்தால் அழியாதவர்கள்.

இந்த ஸ்ரீஜய வருட ஆரம்பத்தில் தடை, தாமதங்களைச் சந்திக்கலாம். அதிகமான அலைச்சல் ஏற்படலாம். எந்த அளவுக்குத் தடை, தாமதங்கள் ஏற்படுகின்றதோ அந்த அளவிற்கு வருடப் பிற்பகுதியில் நல்ல பலன்கள் உண்டாகும். மருத்துவத் தொழில் செய்கிறவர்கள் இந்த ஆண்டு நல்ல பலன்களைப் பெறுவார்கள். மருந்து விற்பனை செய்கின்றவர்களும், மருந்து  விற்பனைப் பிரதிநிதியாக இருப்பவர்களும் கூடுதல் லாபத்தையும் சம்பளத்தையும் பெறுவார்கள். கணினி துறையில் உள்ளவர்கள் புதிய படைப்புகளைப் படைப்பார்கள். இவர்களது கண்டுபிடிப்பை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். ஒருசிலர் தங்க நகைகளை அடிக்கடி அடகுவைப்பார்கள்.

13-6-2014-ல் குரு பகவான் மிதுன ராசியிலிருந்து உங்களின் கடக ராசிக்கு வருகிறார். பழைய ஜோதிடச் சுவடியில் “ராசியில் குரு வந்தால் சிறைப்படுதல் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதுபோன்ற சிறைப்படுதல் நிலை எல்லாருக்கும் வராது. கடக ராசிப் பெண்ணாக இருந்தால், திருமணம் நடைபெற்று கணவன் என்கின்ற வாழ்க்கைச் சிறைக்குள் சென்றுவிடுகிறாள் என்று அறியவேண்டும். ஆண்களுக்கு ராசியில் குரு வரும்போது அடிமைத் தொழில் புரிவார்கள். மேலதிகாரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்; பேசவேண்டும். ஒருசிலருக்கு கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு வலுக்கும். பூர்வீக சொத்துகளால் பிரச்சினை ஏற்பட்டு, வழக்குகளை சந்திக்க நேரும். எனவே நீங்கள் உங்கள் உடன்பிறந்தவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். முடிந்தவரை பேச்சுவார்த்தைமூலம் பாகப் பிரிவினையை சரிசெய்து. கொள்ளவேண்டும். ஒருசிலருக்கு அயல்நாடு சென்று அறுவை சிகிச்சை செய்யவேண்டியது வரும். நீங்கள் இப்போது வெளிநாடு செல்ல போட்ட புதிய திட்டத்தை தள்ளி வைக்கவேண்டும்.

குரு பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்து சிரமத்தைக் கொடுக்கின்ற இந்த வேளையில், சனி பகவான் ஸ்ரீஜய வருடத்தில் எந்தமாதிரியான பலன்களைத் தரவுள்ளார் என்பதைக் காண்போம். 16-12-2014 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ல் அமர்ந்து, அர்த்தாஷ்டமச் சனியாக உள்ளார். அவர் உங்கள் ராசிக்கு 4-ல் உள்ள காலகட்டத்தில், அதிகமான சிரமத்தைக் கொடுக்காமல் நன்மைகளையே செய்வார். 60 வயதுக்கு மேலுள்ள கடக ராசி அன்பர்களுக்கு முழங்கால் பகுதியில் வலி வந்து நீங்கும். உரிய மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.

சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ல் உள்ளதால் எதிலும் நிதானமாக செயல்படவேண்டும். மிகவும் கருப்பாக உள்ளவர்களால் குடும்பத்தில் கோளும் கலகமும் உண்டாகும். குழந்தை இல்லாத தம்பதியர் ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். மாமன்வழி உறவுகள் வலிய சண்டைக்கு வருவார்கள். எனவே நீங்கள் ஒதுங்கியிருக்க வேண்டும். தாய்- தந்தையருக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். எனவே தக்க நேரத்தில் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். 4-ல் பயணிக்கும் சனி பகவான் கெடுதல்களை மட்டுமே செய்வாரென்று நீங்கள் பயம்கொள்ளக்கூடாது. இக்காலகட்டத்தில் திரைப்படக் கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்கள் அங்குசென்று பொருளீட்டுவார்கள். அரசுப் பதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அந்தப் பதவியை அடைவார்கள். அரசுப் பணியாளர்களுக்கு அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய நிலுவை பாக்கிகள் வந்துசேரும்.

உங்கள் குடும்பத்துக்கு வேண்டாதவர்கள் இப்போது உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். வழக்குகளில் ஏற்பட்டுவந்த தாமதம் மாறும்; வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பொதுவாக எந்த காரியத்திலும் நிதானித்து செயல்படுபவர்கள் கூடுதல் லாபத்தை அடைவார்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். உறவினர்கள்மூலம் காரிய சித்தி ஏற்படும். பணவசதிக்குக் குறைவிருக்காது. எனினும் கூடுதல் செலவுகள் ஏற்படும். வெளியில் புதிய நபர்களிடம் மிகவும் கவனமாகப் பழகவேண்டும். நினைத்தபடி ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். உடன்பிறந்தவர் களுக்கு அல்லது அவர்கள் குடும்பத்தில் நடக்கவேண்டிய சுபகாரியங்கள் நடக்கும். சுற்றத்தார் மத்தியில் நிலவிவந்த பகை மாறும். சனி பகவான் 16-12-2014-ல் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குச் செல்கின்றார்.

பொதுவாக சனி பகவான் ஆறு மாதங்களுக்கு முன்பே தன் பார்வையை விருச்சிக ராசிக்குக் கொண்டுசெல்வார். இந்த காலகட்டத்தில் கடக ராசி அன்பர்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும். எல்லா தரப்பு மக்களும் கூடுதல் லாபத்தையும் நல்ல தொழிலையும் பெறுவார்கள். நினைத்தபடி குடும்பத்தில் நிம்மதி பெருகும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு   மாறுதலில் செல்வார்கள். புதிய வீடுவாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துசென்ற மனைவி, நீங்கள் அழைக்காமலே உங்கள் வீடு வந்துசேர்வார். கடன் பாக்கிகள் வசூலாகும். பெண்கள் புன்னகையோடும் பொன்னகையோடும் சுபகாரியங்களில் கலந்து கொண்டு உற்சாகமடைவார்கள். உங்களுடன் பிறந்தவர்களுக்குத் திருமணம் நடக்கும்.

21-6-2014-ல் ராகு பகவான் கன்னி ராசிக்கு வருகின்றார். உங்கள் ராசிக்கு 3-ஆம் இடத்துக்கு வரும் ராகு பகவான், எப்போதும் உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தருவார். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். தொழில் வளர்ச்சியும் லாபமும் பெருகும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அளவு லாபம் கிட்டும். வழக்குகள் சாதகமாகும். நல்ல வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். ஒருசிலர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் நல்ல வேலையாளைப் பெறுவார்கள். ஒருசிலர் பெரிய தொழிற்சாலைகளைத் தொடங்கி, நல்ல தொழிலாளர்களையும் பெற்று பொருளாதாரத்தில் உயர்வார்கள். சேமிப்பு பணம் கரையாமலிருக்க சிந்தித்துச் செயல்படவேண்டும். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் பொருள்வளம் பெருகும். உங்கள் உயர்வுக்கு இதுவரை இருந்துவந்த போட்டிகள், எதிர்ப்புகள் விலகும். தெளிவான சூழ்நிலைகள் பிறக்கும். செய்யும் காரியத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். அயல்நாட்டு வணிகம், உற்பத்தி அனைத்திலும் கூடுதலான லாபம்கிட்டும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் பூர்த்தியாகும். மருத்துவச் செலவுகள் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை கூடும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் வந்துசேரும். சொத்துகள் வருகின்றதோ இல்லையோ, நீங்கள் மனைவி வழியில் கொடுத்த கடன்கள் வந்துசேரும். மனைவிவழி உறவினர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நண்பர்கள், கூட்டாளிகளால் நீங்கள் செய்துவரும் தொழில் உயரும். வருமானம் இரட்டிப்பாகும். அரசாங்கம், அரசியல்வாதிகளின் ஆதரவால் நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும்.

கேது பகவான் உங்கள் ராசிக்கு 9-ல் உள்ளார். அவர் இந்த ஆண்டு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவார். ஒருசிலருக்கு 21-6-2014-க்குப் பிறகு நிரந்தரப் பணி அமையும். தடைப்பட்ட வேலைவாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பொன், பொருள் சேமிப்பு உயரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். செல்வந்தர்களின் தொடர்பு மேலும் செல்வச் செழிப்பை உயர்த்தும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த நல்ல பலன்கள் வந்துசேரும். நண்பர்கள் எப்போதும் உங்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பார்கள். அவர்களால் வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சேமிப்பு நிலையும் உயரும். ஒருசிலர் குலதெய்வ அருளைப் பெறுவார்கள். குலதெய்வக் கோவிலை எடுத்துக்கட்டும் பாக்கியம் சிலருக்குக் கிட்டும். எப்போதும் சந்தோஷம் தரும் செய்திகள் வந்துசேரும்.

உங்களிடம் பெரும் தொகையை வாங்கிக்கொண்டு கொடுக்காமலிருந்தவர்கள், வலியவந்து தொகையைத் திருப்பித்தருவார்கள். தடைப் பட்ட  ஆலய தரிசனம் கைகூடும். உங்களைவிட்டுப் பிரிந்துசென்ற சொந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகள் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் நீங்கும். வேலை  தேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்த நிலை மாறும். வயதுவந்த பிள்ளைகள் காதல்வயப்படக் கூடும். பிள்ளைகளின் போக்கை பெற்றோர்கள் கவனித்து வருவது நல்லது.

13-6-2014 முதல் நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வீண்பழி வரும் வாய்ப்புள்ளது. ஒருசிலருக்கு வாகனப் போக்குவரத்தால் விபத்து நேரக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதால் வீண்விரோதங்கள் உண்டாகும். எனவே சுமுகமான அணுகுமுறை தேவை. பிள்ளைகள் கல்வியில் உயர்வார்கள். ஒருசிலருக்கு மாமியார் வீட்டு சொத்துகள் சேரும். சிலர் விவசாயத்தை நவீன முறையில் செய்து நல்ல லாபமும் அதிக மகசூலும் பெறுவார்கள்.

3-12-2014 முதல் 21-12-2014 வரை யோக காலமாகும். நீண்டகாலமாகத் தடைப்பட்ட திருமணம் தற்போது நடக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தவண்ணமிருக்கும். லாரி, டிராக்டர், இயந்திர வகைகளால் நல்ல லாபத்தை அடைவீர்கள். இப்போது உங்களுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.

1-1-2015 முதல் 14-1-2015 வரை கடக ராசி அன்பர்கள் எதிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒருசிலருக்கு வாகன கண்டம் உள்ளது. எனவே நீங்கள் வாகனத்தில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் பழியேற்கும் நிலையுண்டாகும். எனவே இந்த காலகட்டத்தில் வெளியூர் பயணங்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.

பெண்கள்

இந்த ஸ்ரீஜய வருடத்தில் பெண்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தாலும், தம்பதிகள் இருவரும் உடனுக்குடன் விட்டுக்கொடுத்து சுமுகமாக வாழ்வார்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும். பிள்ளைகள் வழியில் ஆடம்பரச் செலவுகளைச் செய்வீர்கள். இதற்கு உங்கள் சேமிப்பு உதவும். ஆடை, ஆபரணச் சேர்க்கையுண்டு.

மாணவர்கள்

மாணவர்கள் இந்த கல்வியாண்டில் அதிகமான முயற்சியெடுத்துப் படிக்க வேண்டியிருக்கும். அடுத்த கல்வியாண்டு சிறப்பாக அமையும். ஒருசில  மாணவர்கள் கலையிலும், விளையாட்டுத் துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மாணவர்கள், பெற்றோர்கள் விருப்பப்படி நடந்துகொள்வார்கள். படிப்பை முடித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்க விடாமுயற்சி செய்யவேண்டும்.

தொழிலதிபர்கள்- வியாபாரிகள்

தொழிலில் எதிர்வரும் குறுக்கீடுகளை சமாளித்து முன்னேறுவீர்கள். வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் தேவைகளையறிந்து, அதன்படி பூர்த்தி செய்வீர்கள். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். தொழி லதிபர்கள் வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கத்தில் மேற்கொள்வீர்கள். ஒருசிலருக்கு வியாபாரத்தையே ஊர்விட்டு ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் வரும். எதிரிகளினால் தொல்லைகள் ஏற்படும். 2014 ஜூன் முதல் லாபங்கள் படிப்படியாக உயரும்.

விவசாயிகள்

விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடியால் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். உழைப்புக்கேற்ற லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். இந்த ஆண்டு பழைய கடனில் பெருந்தொகையை அடைத்துவிடுவீர்கள். கால்நடை வளர்ப்பவர்கள் இந்த ஆண்டு நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வழக்கு நிலைகள் சாதகமாகச் செல்லும்.

அரசுப் பணியாளர்கள்

இந்த ஆண்டு உங்களுக்குப் பணிச்சுமை கூடும். அதனால் சோர்வுக்கு ஆளாவீர்கள். இருப்பினும் வழக்கமான ஊதிய உயர்வுகள் கிட்டும். அதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து, நல்ல பெயர் பெறுவீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஜூன் முதல் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். ஒருசிலருக்கு திடீர் மாற்றம் வரும். பணிமாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. போலீஸ், ராணுவம், பாதுகாப்பு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் இந்த ஆண்டு நல்ல பலனைக் காண்பார்கள்.

கலைத்துறையினர்

புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க அதிகமான சிரமத்தை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். சக கலைஞர்களுடன் நட்புடன் பழகுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தால் நல்ல அனுபவத்தைக் காண்பீர்கள்.

அரசியல் பிரமுகர்கள்

எப்போதும் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டுவந்த அரசியல் தொண்டர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். நீங்கள் செய்த பொது  சேவைக்கு. தலைமையால் பாராட்டப்படுவீர்கள். பாராளுமன்றத்        தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ஒருசிலர் பெற்று, வெற்றியும் பெறுவார்கள்.

70% நன்மை

ஆதாயம் 2 பங்கு, விரயம் 8 பங்கு. எனவே சேமிப்பைப் பார்த்து, சிக்கனமாக செலவு செய்யவேண்டும். ஆரோக்கியம் 1 பங்கு, அவஆரோக்கியம் 2 பங்கு. உணவில் மிகவும் கட்டுப்பாடு தேவை. ராஜபூஜிதம் 6 பங்கு. வேலை தேடுவோருக்கு அரசப் பணி கிட்டும். ராஜயோகம் 3 பங்கு. சுகம் 3 பங்கு. துக்கம் 3 பங்கு. செல்வாக்கு கூடும். இன்ப- துன்பம் சமமாக இருக்கும்.

(புனர்பூச நட்சத்திரப் பலன், மிதுன ராசிபலனின் இறுதியில் உள்ளது.)

பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை 1 முதல் ஆடி மாதம் வரை சௌபாக்கியத்தோடும் தனலாபத்தோடும் எதிர்கால யோகத்தோடும் வாழ்வார்கள்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. எனவே நீங்கள் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவேண்டும். புதிதாக கடன் வாங்குவதைத் தவிர்க்கவேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது.

மார்கழி முதல் பங்குனி வரை காரிய பங்கம் ஏற்படக்கூடும் எனவே அவசர முடிவுகளைத் தவிர்க்கவேண்டும். அதிகமான அலைச்சல் வரலாம். எனவே புதிய காரியங்களைச் செய்தல் கூடாது. வருமானம் ஓரளவுக்கு வரும். சேமிப்பு உங்களுக்குக் கைகொடுக்கும்.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:

சித்திரை முதல் ஆடி வரை நான்கு பங்கு லாபம் வருகின்றது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வேண்டிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். ஒருசிலர் வீடு வாங்குவார்கள்.

ஆவணி முதல் கார்த்திகை வரை ஒரு பங்கு லாபம் வருகின்றது. இப்போது நீங்கள் தேவையான- அவசியமான செலவுகளை மட்டுமே செய்யவேண்டும்.

மார்கழி முதல் பங்குனி வரை மூன்று பங்கு லாபமுண்டு. பொருளாதார நிலை உயரும். தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கிச்சேர்ப்பீர்கள்.

ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்

தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவருக்கு வெண்பூசணிக்காயில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவரவேண்டும். தினசரி சூர்ய நமஸ்காரம் செய்யவேண்டும்.இவற்றைச் செய்யமுடியாதவர்கள் தேய்பிறை அஷ்டமி திதியில், உங்கள் பகுதியிலுள்ள நாய்க்கு வெண்பூசணிக்காயில் சாம்பார் சாதம் வைத்துப் போட்டு வர, தீமைகள் குறையும்.

———————————————————————————————————————————————————

 

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசி அன்பர்களே!

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் ஆட்சி வீட்டைப் பெற்றவர்கள். எப்போதும் மதிப்பும் மரியாதையும் உள்ளவர்களாக விளங்குவார்கள். அரசியலாக இருந்தாலும் சரி; ஆன்மிகமாக இருந்தாலும் சரி- பரபரப்பாகச் செயல்பட்டு பதவியைக் கைப்பற்றிக் கொள்வார்கள். உங்களுக்கு பக்கபலமாக உள்ளவர்கள் பாதிக்குமேல் வி.ஐ.பி. அந்தஸ்தில் உள்ளவர்கள் என்பதால், எதையும் பொருட் படுத்தமாட்டீர்கள். உங்களிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதனை மிகவும் உற்சாகத்தோடு செயல்படுத்திக் காட்டுவீர்கள். யாரை எப்படி அணுகினால் காரியத்தை முடிக்கலாம் என்ற கலையைக் கற்றுவைத்திருப்பீர்கள். பிடிவாதம் உங்கள் பிறவி குணம். கடிவாளம் போடாத குதிரைக்குள்ள வீரம் உங்களிடம் உண்டு. அதேநேரம் விவேகமும் உண்டு. நீங்கள் நடிப்புத்துறை முதல் நாடாளும் துறைவரை கற்றுவைத் திருப்பீர்கள். கூட்டாளிகள் கொஞ்சம் மாறினால், மற்றொரு கூட்டாளியை சேர்த்துக்கொள்வீர்கள். கனிவுடன் பிறர் குறைகளைக் கேட்பவர். மற்றவர்களை குறைகூறிப் பேசமாட் டீர்கள். எதிரிகளை அறிவாற்றலால் வெல்வீர்கள். எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பீர்கள். தனக்கென ஒரு வழியைப் பின்பற்றி எப்போதும் புகழுடன் வாழ்வீர்கள். கல்வி, கேள்விஞானம் அதிகம் உள்ளவர்கள். ஆச்சார அனுஷ்டானப் பிரியர்கள். தேவைக்கேற்ப பண வசதிகளுடன் வாழ்வார்கள். தனது மனதிற்கு சரியெனப்பட்டதை செய்துமுடிப்பார்கள். ஆடை, அலங்காரத்தில் அதிகமான ஈடுபாடு உள்ளவர்களாகத் திகழ்வார்கள்.

ஸ்ரீவிஜய வருடத்தில் பல கிரகங்கள் சாதகமாக இருந்ததால் பல்வேறு நற்பலன்களைப் பெற்றிருப்பீர்கள். இந்த ஜய ஆண்டிலும் உங்களுக்கு தொடர்ந்து நன்மைகள் கிடைக்கும். பொதுவாக ஒவ்வொரு ராசியிலும் நவகிரகங்களின் பலனை நாம் கண்டாலும், பலன் தரும் கிரகங்களில் முக்கிய பங்கு வகிப்பது குரு பகவான், சனி பகவான், ராகு- கேது பகவான்கள் ஆவார்கள்.

குரு பகவான் 13-6-2014 வரையிலும் உங்கள் ராசிக்கு 11-ல் இருப்பார். அதாவது மிதுன வீட்டில் இருப்பார். இந்த இடம் உங்களுக்கு லாப ஸ்தானமாகும். எனவே நீங்கள் 13-6-2014 வரை நல்ல பலன்களை அடைவீர்கள். குரு பகவான் அதிகமான நன்மைகளைத் தருவார். வேலை தேடுவோர் நல்ல வேலை கிடைத்து கூடுதல் சம்பளத்தில் அமர்வா