கண்ணன்கூடாரவல்லி- 12-1-2016

கிருஷ்ணாவதாரத்தை முடித்துக்கொண்டு வைகுண்டத்தில் வீற்றிருந்தார் பரந்தாமன். தேவர்கள், முனிவர்கள் சூழ ஒரு பெரிய சபை அங்கே.

எல்லாரும் ஆனந்தமயமாக இருக்கிறார்கள். அப்படி பல நாட்கள் கடந்த நிலையில் பெருமாள் பூவுலகத்தைப் பார்த்தார். சொல்லமுடியாத அக்கிரமங்கள் அங்கே நடந்துகொண்டிருந்தன.

“கிருஷ்ணாவதாரம் எடுத்து மக்கள் உய்யும் பொருட்டு கீதையை உபதேசித்துவிட்டு வந்தோம். அதன்பிறகும் பூலோகத்தில் இப்படி அக்கிரமங்கள் நடந்து கொண்டே இருக்கிறதே?

கீதையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இனி வேறு வாக்கைக்கொண்டு அதே கருத்தை தெரிவிக்க வேண்டும்’ என்று முடிவு செய்தார்.

பக்கத்திலிருக்கும் மகா லட்சுமியைப் பார்த்து, “”தேவி, நீ போய் பூவுலகில் பிறந்து, கீதையில் நான் சொன்ன உபதேசங்களைச் சொல்லி மக்களைத் திருத்துவாய்” என்றார்.

மகாலட்சுமிக்கு இதில் விருப்பமில்லை. “”சுவாமி, ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் போன்ற அவதாரங்களில் நான் உங்களுடன் வந்து சுகம் என்பதையே அறியவில்லை. ராமாவதாரத்தில் நான் பட்ட சிரமங்கள் போதாதா? கிருஷ்ணாவதாரத்திலும் உங்களுக்கு பல மனைவிகள். சத்ய பாமாவோடு போராடி பட்டபாடு போதும்.

இன்னொரு பூவுலக வாழ்க்கை வேண்டாம்” என்றாள்.

பொறுமையே உருவான பூமாதேவியும் பக்கத்தில் இருந்தாள். பகவான் பூமித்தாயை திரும்பிப் பார்த்தார். “”பூமா, மகாலட்சுமி சொன்னதைக் கேட்டாய். நீ பூலோகத்தில் அவதரித்து மக்களைத் திருத்துவாயா?” என்று கேட்டார்.

பூமாதேவி மலர்ந்த முகத்தோடு, “”சுவாமி,  அதற்குத்தானே காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லி உடனே கிளம்பினாள்.

பெருமாள், “”நீ எங்கே போவாய்? யாரிடம் பிறப்பாய்?” என்று கேட்டார்.

“”சுவாமி, உங்களது கருணை உதவிபுரியும்” என்று கிளம்பி, பூவுலகில் அவதரித்தாள். நம்முடைய திராவிட தேசத்திற்கே அந்த அவதாரம் பெருமை சேர்த்தது.

துளசி வனத்தில் அவதரித்தாள் பூமிதேவி. பிறக்கும்போதே மேன்மையுடையவளாய், கலாரசனையோடு பிறந்தாள். விஷ்ணு சித்தரின் மகளாய் கோதை என்றும், ஆண்டாள் என்றும் திருநாமம் பெற்றாள். விஷ்ணுசித்தர் அரங்கநாதப் பெருமாளிடம் நீங்காத பக்தி கொண்டவர். பெருமாளுக்கு மாலை சூட்டுவதற்காக ஒரு அழகான நந்தவனம் அமைத்தார். அதில் பூத்த நறுமணம் கமழும் மலர்களைக் கொண்டு அரங்கநாதனுக்கு மாலைகளைச் சூட்டி மகிழ்வார். கண்ணன்மீது பேரன்புகொண்ட விஷ்ணு சித்தர் தானே யசோதையாகி, கண்ணனை தன் குழந்தையாக பாவித்து பாடி மகிழ்ந்து இன்பமடைவார். கோதைக்கும் கண்ணன் குறும்புகளையும், கதைகளையும் சொல்லி மகிழ்வார். குழந்தை கோதை மனதில் கிருஷ்ண பக்தி வேரூன்றிவிட்டது. தந்தையைப்போலவே கோதையும் கண்ணனை பக்தி மேலீட்டால் உள்ளம் உருகிப் பாடினாள். கோதை இரண்டு மாலைகள் கட்டினாள். ஒன்று பூமாலை; மற்றொன்று பாமாலை. ஒன்றைப் பாடி சமர்ப்பித்தாள்; மற்றதை சூடி சமர்ப்பித்தாள். சூடிக்கொடுத்த நாச்சியார் என்ற பெயரும் பெற்றாள்.

அப்படி கோதை நாச்சியார் கண்ணன்மீது பாடிய பாடல்களே திருப்பாவைப் பாடல்கள். கண்ணனையே திருக்கல்யாண மும் செய்து கொண்டாள். ஸ்ரீஆண்டாளின் பக்திக்கும் அன்புக்கும் கட்டுண்டு கண்ணன், ஸ்ரீவில்லிப்புத்தூரிலேயே இன்றும் காட்சி தருகிறான்.

ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் முப்பது பாடினாள். அது ஒரு நூல் மட்டு மல்ல. ஒரு யக்ஞம். ஆண்டாள் மார்கழி மாதத்தில் வளர்த்த வேள்வி. யாகம் செய்வதற்கென்று ஒரு பாத்திரம் (கபாலம்) உண்டு. அதில் புரோட்சத்தை வைத்து நெய் தடவி, திரிவிக்ரமனை ஸ்தோத்திரித்து சமர்ப்பிப் பார்கள். அதுபோல் ஆண்டாள் பாடிய திருப்பாவையின் மூன்று பத்து பாசுரங்களை மூன்று கபால சாதனங்கள் என்று சொல்லலாம். ஆசார்ய அனுக்ரகம் என்னும் நெய்யைத் தடவி அதை சமர்ப்பிக்கிறாள். யக்ஞம் செய்யும்போது, ஒவ்வொரு கபாலத்தை சமர்ப்பிக்கும்போதும் திரிவிக்கிரம அவதாரத்தை துதிக்கிறாள்.

“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ என்று தொடங்கும் முதல் பத்து பாசுரத்தில் திரிவிக்கிரமனை நினைக்கிறாள்.

“அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த’ என்று தொடங்கும் பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள் இரண்டாவது முறையாக திரிவிக்கிரமனைப் பாடுகிறாள். “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்று இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள் திரிவிக்கிரமனின் திருவடிகளைப் போற்று கின்றாள். எனவே திருப்பாவை ஒரு வேள்வி போன்றது. நமக்கு கீதையின் வழிகாட்டி. “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயண’ என்று உருகினாள்.

இளமையான கொஞ்சு தமிழில் திருப்பாவை பாசுரங்களைப் பாடி சமர்ப்பித்து, “கூடாரை வெல்லும் சீர்கோவிந்தனோடு’ கூடி நமக்கு அருளை அள்ளித்தருகிறாள் ஸ்ரீ ஆண்டாள்.

ஸ்ரீகிருஷ்ணனின் திருவடியில் மலர்களை வைத்து அர்ச்சனை செய்யவேண்டும். அவனுடைய திரு நாமத்தை உரக்கச் சொல்லவேண்டும்.

அவனுடைய திருவடியில் ஆத்மசமர்ப்பணம் செய்யவேண்டும். பக்தி என்பது அவ்வளவு சுலபமாகக் கிட்டிவிடாது. பகவானுடைய கருணையே நமக்கு அவனிடம் பக்தி தோன்றச்செய்கிறது. பக்தியினால் கிட்டும் ஆனந்தம் சொல்லினால் விவரிக்க முடியாது.

கண்ணனின் அருளைப் பெறுவதற்கு நாம் தவமோ யக்ஞமோ செய்ய வேண்டியதில்லை. திருப்பாவைப் பாடல்களை தினமும் பாடினாலே அவனுடைய அருள் கிடைத்துவிடும். இயலாதவர்கள் மார்கழி மாதத்திலாவது பாட வேண்டும். ஸ்ரீஆண்டாள் பாடிய 27-ஆவது பாசுரமாகிய, “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்ற பாசுரம் ஸ்ரீ ஆண்டாள் கல்யாணம். ஸ்ரீவைணவ திவ்ய தேசம் என்கிற எம்பெருமாள் எழுந்தருளியிருக்கும் திருக்கோவில்களில் எல்லாம் “கூடாரை வல்லி’ நோன்பை மிக விமர்சையாகக் கொண்டாடி வருகிறார்கள்.

நாடு செழிக்கவும், நீர்வளம், நிலவளம் பெருகவும், நீங்காத செல்வம் நிறைந் திருக்கவும், பெண்கள் நல்ல கணவரை அடையவும், இம்மை- மறுமை இரண்டிலும் உயர்ந்த நலன்களைக் கொடுக்கக்கூடிய பாவை நோன்பை நோற்கின்றனர் ஆயர்குலச் சிறுமிகள். உலகம் எல்லாம் உவக்கும்படி இளமையிலேயே கண்ணனிடத்தில் பக்திப் பெருங்காதல் கொண்டு, பிஞ்சாய்ப் பழுத்தவளாய் அவனையே மணம் செய்துகொள்ளக் கருதி, அப்பெருமானது பெருமைகளையே எப்பொழுதும் நினைத்து நின்றாள் கோதை. “அஞ்சரும்பார் குழற்கோதை’ இடைப் பெண்கள் நோற்ற நோன்பை தானும் நோற்கிறாள். நினைப்பின் வலிமையால் இவளுக்கு இடை நடையும், இடைப் பேச்சும், முடை நாற்றமும் உண்டாயின.

நோன்பு முடியும் நேரம், “உள்ளத்தில் திண்ணமாய் எண்ணியபடி நாம் பட்டாடை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து, மலர்சூடி கண்ணனை வரவேற் போம்’ என்கிறாள். பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார கண்ணனுடனே கூடி இருந்து குளிர்ந்து உண்போம் வாரீர்’ என்று அழைக்கிறாள் 27-ஆவது பாடலில்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் இவன். கூடினாரிடம் தோற்பவன். தன் அடியார்களிடம் தன்னையே கொடுப்பவன். இதைத்தானே இடைக்குலப் பெண்களும் விரும்பினார்கள். ஆண்டாளும் விரும்பினாள். நாமும் விரும்புகிறோம். விருப்பத்தின் நிறைவு நாளான மார்கழி மாதம் 27-ஆம் நாள், கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையோர் கொண்டாடும் திருநாளே “கூடாரை வெல்லும்’

என்னும் கூடாரவல்லி நோன்பு. இவ்வருடம் 12-1-2016- அன்று கூடாரவல்லி நோன்பு வருகிறது.

#‎வைகுண்டஏகாதசி‬

 

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (1)

கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்
கூர்ந்தது குண-திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்
வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (2)
சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல்-ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (3)
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (4)

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. (5)
இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ
இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (6)

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (7)

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (8)

ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (9)

கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே (10)

மார்கழி மாதம் வந்த உடனே நம் மனதைக் குளிர வைக்க வரும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம் ஆகும்.கங்கையின் தீர்த்த மகிமையை போலும், காயத்ரி மந்திரத்தின் அதிர்வுகளின் ஆழமகிமையைப் போலும், கோயிலின் ஆகமத்தைவிட தாயின் அன்பு அறவணைப்பு விஞ்சியிருப்பதைப்போலும், திருமாலின் உன்னத கருணையைப்போல் விரதங்களில் சிறந்ததாக விளங்குவது வைகுண்ட ஏகாதசி.

நமது வாழ்நாளில் ஒரு வருடம் தேவ வருஷத்தில் ஒரு நாள் ஆகிறது. அதில் தை முதல் ஆனி முடிய உள்ள ஆறு முதம் பகல் என்றும் ஆடி முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாதம் ஒரு இரவு என்றும் உள்ளத்தில் இப்பகுதி இரவுக் காலத்தில் அதிக இருட்டும், மழையும், பனியும், குளிரும் பகல் பொழுது குறைந்தும் காணப்படுகின்றது. இத்தணத்தில் மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி (பிரம்ம முகூர்த்தம்) உள்ள கால அளவில் வைகுந்த வாசல் திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்களை நிவேதனம் செய்கின்றோம்.
வைகுண்ட ஏகாதசி அன்று பரந்தாமன் வைகுந்தத்தில் இருந்து சொர்க்கவாசல் வழியாக நமக்காக வந்து கருணை மழை பொழிகின்றார்.

சொர்க்க வாசல்:

மார்கழி மாதம் தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பினும் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தரும் நாள் வைகுண்ட ஏகாதசி
ஏகாதசியின் சிறப்பு:

ஒரு வருடத்தில் 25 ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. வளர்பிறை ஏகாதசி என்றும், தேய் பிறை ஏகாதசி என்றும் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் உண்டு நாழிகை வேறுபாட்டினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும். ஆக இருபத்தைந்து ஏகாதசியும் விரதம் கடைபிடித்தால் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்துகள் நம்மைத் தேடிவரும். அனைத்து ஏகாதசியும் விரதம் கடைபிடிக்க முடியாவிட்டாலும் உதய காலத்தில் வைகுந்த வாசல் திறக்கும் மார்கழியில் வரும் வைகுந்த ஏகாதசி அன்று பகல் உண்ணாவிரதம் இருந்து இரவு கண்விழித்து விரதம் கடைபிடித்தால் மற்ற 24 ஏகாதசி விரத சிறப்புப்பலனும் சேர்ந்து கிடைக்கும்.

விரதம் பிறந்த விதம்:

தால ஜங்காசுரனுடனும் (முரன்) அவன் புதல்வன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டு களைத்து ஒரு குகையில் அயர்ந்து இருக்கையில் (தூங்கிக்கொண்டிக்கையில்) விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தேவப் பெண்ணாக உறுவெடுத்து அசுரர்களை தனது ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது. விஷ்ணு விழித்து விபரம் உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி என பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து பரந்தாமணின் அருளும் வரமும் பெற்ற இந்நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடை பிடித்தால் என்னும் நீங்காப் புகழுடன் பொருள் பெற்று சிறப்பாக வாழ்வோம். பரந்தாமனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்வில் ஏற்றம் நிச்சயம்.

ஏகாதசியின் முந்தய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். மறுநாள் ஏகாதசி அன்று அதிகாலை எழுந்து நீராடி சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை எழுந்து நீராடி சொர்க்கவால் திறப்பு நிகழ்ச்சியை ஆலயம் சென்று கண்டு பரந்தாமன் லெட்சுமி தேவியுடன் வருவதை போற்றி வணங்க வேண்டும். முழுவிதைமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு முழுவதும் கண்விழித்து இறை நாமம் சொல்லி மருநாள் துவாதசி திதியில் (பொழுது விடியுமுன்) விரதம் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாக சேர்க்கக்கூடாது.
துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் மூன்றும் சேர்த்து அல்லது கிடைக்கும் நெல்லிக்காயையாவது உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

துவாதசி அன்று முதல் நாள் கண் விழித்தவர்கள் அதிகாலையில் குளித்து திருமாலை வணங்கி ஹரி ஹரி ஹரி என மும்முறை கூறி சுண்டைக்காய், நெல்லிக்காய், இதில் கொஞ்சம் எடுத்து பல்லில்படாமல் உண்ண வேண்டும் இதற்கு “பாரனை” (விரதம்) முடித்தல் என்று பொருள்.
புதிய வரவு ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் அகாய சூரராக விளங்குவர். பொறுமை, இன்சொல், நுண்ணறிவு, சாந்தமே ஜெயம் எனும் கோபம் தணிந்த ஆற்றல் என சகல நற்குணங்களுடன் இருப்பார்கள்.
வைகுந்த பதவி

இந்நாளில் மோட்சமடையும் ஆன்மாக்கள் இறைபதம் சென்றடையும். அதே நேரத்தில் ஏகாதசி விரதம் அனைத்தையும் தனது வாழ்நாளில் கடைபிடித்து ஏகாதசி அன்று முக்தியடையும் ஆன்மாக்கள் 14 உலகங்களுக்கு அப்பால் உள்ள நித்திய சூரிகளின் உலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டு நரகத்திற்கும் சுவர்க்கத்துக்கும் செல்லும் சாம மார்க்கத்தில் பிரம்மா உள்ளிட்ட அக்னி வரை உள்ள 12 தேவதைகள் வழி நடத்திச் செல்வர்.

அவ்வாறு இவர்கள் அழைத்துச் செல்லும் ஜீவாத்மாக்கள் விரகாநதிக்கரையை பசுவின் வாலைப்பிடித்துக் கொண்டு கடந்து செல்லும் போது மற்றொரு சூட்சம உருவம் பெற்று “ஜாம்மதியம்” என்ற குளத்தை கடந்து “சோம ஸ்வனம்” என்ற அரசமரத்தடியை அடையும் போது ஜநூறு தேவப் பெண்களால் வரவேற்று பின் அலங்கரித்து வைகுண்ட வீதியினில் தேவ மரியாதையுடன் அழைத்துச் சென்று வைகுண்ட வாசல் சூவாரகபாலகரின் அனுமதியுடன் பரமாத்மாவிடம் அழைத்துச் செல்கின்றார்கள்.

இந்த ஜீவாத்மா வானது பரந்தாமனை ஆலிங்கனம் செய்து மோட்சம் பெறுகின்றது. புன்னியத்தையே பேராக பெற்ற ஆவ்வாத்மாவுக்கு விரும்பும் வரத்தை தந்து மீண்டும் பிறப்பு வேண்டின் அருளும் பரந்தாமன் தன்னுள் ஐக்யமாக வேண்டும் என விரும்பும் ஆத்மாவை ஜக்யப் படுத்திக் கொள்கிறார்.(இந்நிலையைத்தான் எத்துணை பிறவி எடுத்தாலும் உன் தாள் போற்றும் வரம் தா என பிரார்த்திக்கின்றோம். இந்த பிரார்த்தனை ஏகாதசி விரதத்தால் பூர்த்தி செய்யப்படுகின்றது.பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்து ஏகாதசி நாளில் தான் விடுபட்டு மோட்சம் அடைகின்றார். எனவே வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும். என பரமபத சோபனம் விவரிக்கின்றது. முரனை அழித்தவர் ஸ்ரீஹரி. சில காலம் துன்பத்தைத்தந்த கெட்டவனால் உலகிற்கு ஒரு உன்னதவிரதம் கிடைத்தது என்பதால் முருனும் மோட்சம் அடைந்ததான் முரனை வதைத்த ஹரி முராரி (முரடிஹரி) என்று சிவபெருமான் பாராட்டுகின்றார்.

விரத தானம்”:

என்ன செய்தார்கள் என் தாய் தந்தையர் சொத்தும் இல்லை சுகமும் இல்லை என்றெல்லாம் மனம் வெதும்பத் தேவையில்லை மூதாதயர்களின் தவரால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட வாழ்க்கை முட்டுக்கட்டையும் நாம் ஏகாதசி விரதம் கடைபிடித்து மறைந்த பெரியவர்களுக்கு விரதத்தை தானமாகத் தந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்துக்குச் சென்று பரந்தாமனிடம் நம் குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள். எனவே இவ்வருடம் ஏகாதசி விரதம் இருந்து மறைந்த ஆத்மாவுக்கு விரத பலனை தானம் செய்யுங்கள். இனி வரும் காலமெல்லாம் இன்ப மயமாகி அமையும். நகரத்தில் இருக்கும் மூதையருக்கும் நற்கதி கிடைக்கும்.
24 ஏகாதசியின் விரதபலன்:

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுந்த ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்து தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்களையும் தெரிந்து கொள்வோம். சரியான முதலீடாக தேர்ந்தெடுத்தால் பயன்பல மடங்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தானே நாம்.
* மார்கழி தேய்பிறை ஏகாதசி “உற்பத்தி ஏகாதசி” எனப்படும். பகையை வெல்ல.
* தை மாத வளர்பிறை ஏகாதசி “புத்ரா” எனப்படும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் சந்தான ஏகாதசி ஆகும்.
* தை தேய்பிறை ஏகாதசி “ஸபலா” எனப்படும். இன்று பழதானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.
* மாசி மாத வளர்பிறை ஏகாதசி “ஐயா” எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.
* மாசி மாத தேய்பிறை ஏகாதசி “ஷட்திலா” எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும். மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியனவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் “ஷட்திலா” என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.
* பங்குனி தேய்பிறை ஏகாதசி “விஜயா” எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.
* பங்குனி வளர்பிறை ஏகாதசி “ஆமலகீ” எனப்படும். இன்று நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.
* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி “காமதா” எனப்படும். நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும். திருமண யோகம் தரும்.
* சித்திரை தேய்பிறை ஏகாதசி “பாபமோசனிகா” எனப்படும் பாபத்தை போக்கும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர்.
* வைகாசி வளர்பிறை ஏகாதசி “மோஹினீ” எனப்படும். உடல் சோர்பு நீக்கும். பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்த சோகை அகலும். வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.
* வைகாசி தேய்பிறை ஏகாதசி “வரூதினீ” எனப்படும். உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.
* ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு “நிர்ஜனா” என்று பெயர். பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது ஆகும்.எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன்வாயு அம்சம்.
* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி “அபரா” எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்பண் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.
* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி “தயினி” எனப்படும். இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது. ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு “யோகினி” என்று பெயர். இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வசதி உள்ளவர்கள் வெற்றி விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.
* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு “புத்ரதா” என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பும் அமையும். சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.
* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு “காமிகா” எனப்படும். இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சவுர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும். ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும். காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது.
* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் “பத்மநாபா” எனப்படும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.
* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு “அஜா” என்று பெயர். அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து இழந்த நாட்டையும், மனைவி பக்களையும் பெற்று பல்லாண்டுஅரபு செய்தான். எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடைபிடித்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).
* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு “பாபாப்குசா” எனப்படும் வருமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
* ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு “இந்திரா” எனப் பெயர் இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தாலங அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெருவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள். ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.
* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு “ப்ரமோதினீ” என்று பெயர். கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவோனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு “ரமா” என்பர். இன்று இருக்கும் விரதம் இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.
* வருடத்தில் கூடுதலாக வரும் 25 ஏகாதசி “கமலா” எனப்படும். கமலம் என்றாள் தாமரை. தாமரை மலரில் இருந்து அருள் தரும் அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால் நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும் தனித்தனி விரதமாக இருப்பதும், “மோட்ச ஏகாதசியில்” உண்ணாமலை அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.

காக்கும் கடவுளான மஹா விஷ்ணுவினுள் கூட்டு சக்திகலாக இருந்துள்ளதில் முதல் ஆற்றல் முதன் முதலாக தனித்துப் புறப்பட்டு மூலப்பரம் பொருளின் தனித்தனித் தன்மையை நமக்கு உணர்த்தும் பொருட்டு வெளிப்பட்ட “முதல்” சக்தியே “ஏகாதசி” என அழைக்கப்படுகின்றது. நாம் உறங்கும் போது உலகுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு இருந்தால் பகவானின் 25 சக்திகளும் தனித் தன்மை பெற்று வரம் தருவதைப் போல நாமும் இவ்வுலகிற்கு பல அற்புத நிகழ்வுகளை நிகழ்த்தி உலகில் புகழுடன் தங்க முடியும் என்பதை போதிப்பதே ஏகாதசி விரதங்களின் கூட்டுப் பலன்கள் ஆகும். அதனால் தான் வாஸ்து புருஷனாக மஹாவிஷ்ணு இருந்து அருள் தருகிறார் என மயன் புராணம் கூறுகின்றது.
தானம் செய்வோம்.
ஒவ்வொரு ஏகாதசி அன்றும் தனித் தனியாக தானங்கள் செய்யலாம் என்றாலும் அது எல்லாம் வசதியானவர்கள் தானே செய்ய முடியும் என்ற சோர்வு நிலை வேண்டாம். ஒரு பிடி அகத்திக் கீரையை பசுவுக்கு தானமாகக் கொடுங்கள். வசதி உள்ளவர்கள் ஏகாசி அன்று பசுவும் கன்றுமாக தானம் கொடுங்கள் சகல நன்மையையும் உலகம் உள்ள வரை உங்கள் சந்ததியர் பெறுவர்.

விரத பண்பு:

அனைத்து விரத நாட்களிலும் அன்னதானம் செய்யப்படும். ஏகாதசி விரத நாளில் உண்ணாமல் இருப்பதும் கண் விழித்து பாசுரங்கள் பாடுபவதும் செய்ய வேண்டும் என்பதால் அன்ன தானம் மட்டும் இந் நாளில் செய்யக் கூடாது. அதற்குப் பதில் பழவர்க்கங்களை தானமாக தரலாம்.
“பலன்”
ஏழ்மை அகலும், கல்வியில் உயர்வு, தன் ஆற்றல் வெளிப்பட்டு, குடும்ப ஒற்றுமை, சொந்தங்களின் உதவி, எதிரிகள் விலகி நண்பர்கள் அதிகமாகுதல், நல்ல பதவி, அந்தஸ்தான வாழ்க்கை, வெளிவட்டாரச் சிறப்பு, திருமண யோகம், பாவம் அகலுதல், புத்திர பாக்யம் என அனைத்தும் வாஸ்து புருஷனின் கருணையால் நம் அனைவருக்கும் உண்டாகும். கருணாகரனை கண் விழித்துப் போற்றுவோம்.

——————————————————————————————————————————————————————————————

 

மகாளய அமாவாசை- 12-10-2015
டி.ஆர். பரிமளரங்கன்

முன்னோர்களுக்கான பிதுர் பூஜையை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள் மகரிஷிகள்.

அமாவாசை, கிரகணம், ஆடி, தை மற்றும் புரட்டாசி யில் செய்யும் தர்ப்பணம்; காலமான பெற்றோர் திதியில் (நாள்) திவசம் செய்வது; மகாளயபட்சம் போன்ற சிறப்பு நாட்களில் செய்யப்படும் சிரார்த்தம்
அல்லது தர்ப்பணம்.

புனித நீர்நிலையில், வேதவிற்பன்னர்கள் மேற்பார்வையில் செய்யப் படும் பிதுர்பூஜை மிகவும் சிறந்தது. அதுவும் அரச மரங்கள் நிறைந்த நீர்நிலைகள் வெகுவாகப் போற்றப்படு கின்றன. பசு மடத்தில் மேற்கொள்ளப்படும் பிதுர்பூஜை மேலும் சிறப்புவாய்ந்தது. இந்தப் பூஜையை மகாளயபட்ச அமாவாசையில் மேற்கொண்டால் நலம் பல பெறலாம்.

தற்பொழுது, பசு மடம் உள்ள சில திருத்தலங்களில் அமாவாசை திதியில் பிதுர் பூஜை நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம், திருவேற்காடு, திருவொற்றியூர், திருவானைக்கா, கும்பகோணம், மயிலாடுதுறை, திருவையாறு ஆகிய தலங்களிலுள்ள பசுமடத்தில் திலஹோமம் செய்து பிதுர் பூஜை நடை பெறுகிறது.

குறிப்பாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப்படித்துறையில் பிதுர்பூஜை யின்போது கோ (பசு) பூஜையும் நடைபெறும். ராமேஸ் வரம் கடற்கரையில் பிதுர் பூஜையின்போது கோ பூஜையும் கோதானமும் நடைபெறு வதைக் காணலாம்.

பசுக்கள் முன்னிலையில் பிதுர் பூஜை செய்வதற்கான காரணத்தை சாஸ்திரம் விளக்குகிறது.

தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட தெய்வாம்சம் பொருந்திய வற்றில் காமதேனு என்னும் பசுவும் ஒன்று.

அதன் வாரிசுகளே எல்லா பசுக்களும். பசு இனத்தில் பலவகை இருந்தாலும், கயிலையில் நந்திதேவருடன் ஐந்து வகை தேவ பசுக்கள் வாழ்கின்றன. நந்தை, பத்திரை, சுரபி, சுமணை, சுமலை ஆகியவை. இவற்றின் வழியில் வந்தவைதான் பூமியில் வாழும் பசுக்கள் என்ற தகவலும் புராணத்தில் உள்ளது. நந்தை கருமை இல்லாத பொன்னிறம் கொண்டது. பத்திரை கருமை நிறமுடையது. சுரபி வெண்மை நிறமுடையது. சுமணை புகை நிறமுடையது. சுமலை செந்நிறம் கொண்டது.

சிவபெருமான் அருளால் நான்கு பசுக்கள் தோன்றின. அவற்றை சிவன் நான்கு திசை தெய்வங்களுக்கு அளித்தார். இந்திரனுக்கு சுஷிதை; எமனுக்கு கயிலை; வருணனுக்கு ரோஹிணி; குபேரனுக்கு காமதேனு. இந்தப் பசுக்களின் வாரிசுகளே பல நிறங்களில் பூவுலகில் வாழுகின்றன என்றும் வேறொரு புராணத் தகவல் கூறுகிறது.

பசுக்களின் நான்கு காம்புகளும் சுவாகாரம், சுவாதகாரம், வஷ்டாகாரம், ஹந்தாகாரம் என்று நான்கு வகைப்படும். இவற்றை முறையே தேவர், பிதுரர், பூதேசுவரர், மனிதர் என்கிறது சாஸ்திரம்.

பசுக்களின் உடலில் முக்கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள். எனவே, பசுவை முன்னிறுத்தி அதன் பார்வையில் பிதுர்பூஜை செய்வது போற்றப்படுகிறது. பசுவின் பின்புறம் மகாலட்சுமி எழுந்தருளியிருப்பதால், ஸ்ரீலட்சுமி பூஜையும் அன்று மேற்கொள்ளப்படுகிறது.

பிதுர் பூஜை முடிந்தபின் பசு தானம் தருவதால் குடும் பத்தில் மங்களம் நிறையும். மேலும் சனியின் தாக்கம் குறையும்; நவகிரக தோஷம் நீங்கும்; மனஉளைச்சல், தீயசக்திகள் விலகி மனம் சாந்தமடையும். ரத்த கொதிப்பு ஏற்படாது.

இதேபோல் மகிஷ தானம் எனப்படும் எருமை தானமும் தற்போது சிறப்பாகப் பேசப்படுகிறது. கன்றுடன் கூடிய எருமையை தானமளித்தால் எமபயம் நீங்கும். காலசர்ப்ப தோஷம், முற்பிறவியின் பாவம் விலகும். வாகன  விபத்து நேராது. பதவி உயர்வு, குலவிருத்தி, ஆயுள் விருத்தி, உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆத்மஞானமும் கிட்டும். எமனின் கோரைப் பற்கள் வெளியே தெரியும் புரட்டாசி மாதத்தில் எருமை தானம் செய்வதால் எமனின் தீய பார்வை பொசுங்கிப் போகும் என்கின்றன ஞான நூல்கள்.

அரச மரங்கள் உள்ள நீர்நிலையில் பிதுர்களுக்கு வழங்கப்படும் எள்ளும் தண்ணீரும் உடனே அவர்களைச் சென்றடையும். இதனால் அவர்கள் ஓராண்டு காலம் பசி, தாகமின்றி இருப்பார்கள். அந்த வகையில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித் துறையில் பத்து அரசமரங்களுக்குமேல் உள்ளன. இதேபோல் தஞ்சை திருவையாறு புஷ்ய படித்துறையிலும், கும்பகோணம் சக்கரப் படித்துறையிலும், மகாமகக் குளக்கரை அருகிலும், மயிலாடுதுறை நந்திக்கட்டம் அருகிலும் அரச மரங்கள் உள்ளன.

அரசமரம் மும்மூர்த்திகளின் சாந்நித்யம் கொண்டு திகழ்கிறது. இப்புனித மரத்தை வணங்கியவர்களுக்கு பாவங்கள் இருப்ப தில்லை என்பார்கள். “அரச மரத்தைப் பார்த்ததும் வணங்கித் தொழுகிறவர் களுக்கு ஆயுள் பெருகும்’ என்று பத்மபுராணம் கூறுகிறது.

இந்த வருடம் மஹாளய அமாவாசை 12-10-2015 திங்கட்கிழமையில் வருகிறது. அமாசோம அமாவாசை என்று இதனைப் போற்றுவர். இதுவொரு அபூர்வமான மகாளயபட்ச அமாவாசை.

மகாளயம் என்பதை மால் + அயம் என்று பிரிக்கலாம்.

அதாவது திருமாலுக்கு உரித்தான அயன காலம் என்று பொருள். சகல கோடி பித்ருக் களின் நாயகர் மகாவிஷ்ணுவே என்கிறது விஷ்ணு புராணம்.

புரட்டாசி அமாவாசைக்கு முன்னுள்ள பதினைந்து நாட்களும் (திதிகள்) மாளய பட்ச காலமாகும். மகாவிஷ்ணுவுக்கு விருப்பமான இந்தப் பதினைந்து திதிகளிலும் தர்ப்பண பூஜையை முறைப்படி செய்வது சிறப்பானது.

ஆடி முதல் தெற்குநோக்கி சஞ்சரிக்கும் சூரியன் புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேரே நிற்கும். அப்போது சந்திரனது தென்பாகமும் நேரே நிற்கும். எனவே இது பிதுர் கடமைக்குரிய காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூரியன், புரட்டாசி மாதம் கன்யா ராசியில் பிரவேசிக்கும் காலகட்டத்தில், பித்ருக்கள் தங்களுடைய சந்ததிகளின் இல்லத்திற்கு வருகிறார்கள் என்றும்; எமதர்மராஜனே அவர்களை பூமிக்கு அனுப்பிவைப்பதாகவும் ஐதீகம். எல்லா பித்ருக்களும் லயமாக- அதாவது ஒன்றாக இணைந்து வருவதால் இதற்கு மகாளயம் என்று பெயர்.

மகாளயபட்சத்தின் துவக்கத்தில் பூமிக்கு வரும் பித்ருக்கள்- மகாளய முடிவில் அமாவாசை தினத்தில் தில (எள்) தர்ப்பணம் பெற்றுக்கொண்டு சில நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் பிதுர் லோகம் செல்வதாக ஐதீகம். பிதுர் பூஜை செய்யும்போது சொல்ல வேண்டிய ஒரு மந்திரத்தை மகரிஷிகள் அருளியுள்ளனர்.

“ஏஷாம் நமாதா நபிதா நப்ராதா
நபந்து நாந்ய கோத்ரிணஹ
தேஸர்வே த்ருப்தி மாயந்து மயோத்
ஸ்ருஷ்டைஹிகு கோத்ஹை!’

“என் தாய், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்கு முகம் தெரியாத- என்னையும்  தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்த உலகத்திலிருந்து உடலைவிட்டுப் பிரிந்திருந்தாலும், அந்த ஆத்மாக்களெல்லாம் நற்கதி அடையப் பிரார்த்திக்கிறேன். அந்த ஆத்மாக்களெல்லாம் மேலுலகில் எந்த துன்பத்தையும் அனுபவிக்காதிருக்கவும்; அடுத்து எடுக்கும் புதுப்பிறவியிலும் எல்லா வளமும் பெற்று சுகமுடன் வாழவும் பிரார்த்திக்கிறேன். எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்தப் பிதுர்பூஜை தர்ப்பணத்தால் எல்லா ஆத்மாக்களும் திருப்தியடையட்டும்’ என்பதே இந்த மந்திரத்தின் பொருள்.

மேற்கண்ட மந்திரத்தை பிதுர்பூஜையின் போது வேதவிற்பன்னர் சொல்ல, பூஜையை மேற்கொள்பவர் திரும்பச் சொல்வது வழக்கம்.

இந்தியாவில் வாரணாசி (காசி), கயா போன்ற திருத்தலங்களிலும், கங்கை, காவேரி போன்ற புனித நதிதீரங்களிலும், மகான்கள், யோகியரின் ஜீவசமாதிகளிலும், பசுமடத்திலும், அரச மரத்தடியிலும் தர்ப்பண பூஜையை நிகழ்த்துவது அபரிமிதமான பலன்களைப் பெற்றுத்தரும்.

காசியில் “மணிகர்ணிகாகாட்’ பிதுர்பூஜை செய்வதற்குப் புகழ்பெற்றுத் திகழ்வதுபோல, கயா திருத்தலத்தில் பிதுர்பூஜை செய்வதற்கென்றே தனி இடம் உள்ளது. இங்கே, பிதுர்பூஜையின்போது, தன்னைப்பெற்று, தன் ரத்தத்தையே பாலாக்கிக்கொடுத்த தாய்க்கு மட்டும் பதினாறு பிண்டங்கள் (உணவு உருண்டை) போட்டு வழிபடப்படுகிறது.

தாயின் அளப்பரிய தியாகத்தை உணரும் வகையில் வேத விற்பன்னர்கள் “மாத்ருக்ஷோசி’  மந்திரத்தை சொல்லி பூஜை செய்வார்கள். அம்மந்திரத்தை தமிழில் மொழிபெயர்த்துச் சொல்வதையும் பூஜையில் கலந்துகொள்பவர் அனுபவிக்கலாம். வாழை இலையில் பதினாறு உணவுப் பிண்டங்களை வைத்து, தர்ப்பைக் கட்டங்களின் நடுவில் எள் இரைத்து, தண்ணீர்விட்டுப் பூஜித்த பிறகு அவற்றை ஒன்றுசேர்க்கிறார்கள். அதிலொரு பகுதியை ஆலமரத்தடியிலுள்ள பெரிய பாறைமீது வைக்கிறார்கள். அதை பசு ஒன்று வந்து உண்ணும்போது நம் பிதுர்பூஜை நிறைவடைந்ததாகவும் பிதுர்கள் ஆசீர்வதிப்பதாகவும் கூறுவர். இதில் ஒருசிலர் வைக்கும் பிண்டத்தினை பசுமாடுகள் ஏற்காமல் போகும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு. அந்த வேளையில் மீண்டும் ஒருமுறை பரிகாரப் பூஜை செய்து அங்குள்ள பாறைமீது வைப்பது வழக்கம். பிண்டங்களின் ஒரு பகுதியை அருகிலுள்ள விஷ்ணு பாதத்தில் கரைத்து பூஜை செய்து பிதுர்பூஜையை நிறைவுசெய்வர்.

தமிழகத்தில் ராமேஸ்வரம் அக்னிக்கடற்கரை, தனுஷ்கோடி, கன்னியாகுமரி, வேதாரண்யம் அருகிலுள்ள கோடியக்கரை, பூம்புகார், கும்பகோணம் அரிசலாற்றங்கரை, திருவையாறு புஷ்ய படித்துறை, மயிலாடுதுறை நந்திக்கட்டம், விருத்தாசலத்திலுள்ள மணிமுத்தாறு, நெல்லை மாவட்டத்திலுள்ள தாமிரபரணிக்கரை, கும்பகோணம் மகாமகக்குளம், திருவெண்காடு சிவன் கோவில் வளாகத்திலுள்ள ருத்ரபாதம், மயிலாடுதுறை- பூந்தோட்டம் அருகிலுள்ள திலதர்ப்பணப்புரி ஆகிய புனிதத்தலங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. இதுபோல மேலும் பல தலங்கள் தமிழகத்தில் உள்ளன. அவரவருக்கு அருகிலுள்ள தலங்களை அறிந்து பூஜிக்கலாம்.

பிதுர்பூஜையை எந்த தலத்தில் மேற்கொண்டாலும், அன்னதானம் செய்ய வேண்டும் என்பது விதியாகும். பிதுர்கள் எந்த ரூபத்தில் வந்தாவது நாம் அளிக்கும் அன்னத்தைப் புசிப்பார்கள். மேலும், அன்று பசுமாட்டிற்கு அகத்திக்கீரையும் வாழைப்பழங்களும் அளிக்கவேண்டும்.

நாட்டுப்பசுவும் கன்றும் தானம் செய்தால் ஜாதகரீதியான தோஷம், தலைமுறை தோஷம், செய்வினை தோஷம், மாத்ரு- பித்ரு தோஷம், குலதோஷம், பூர்வஜென்ம தோஷம், பிரம்மஹத்தி தோஷம் ஆகியவை விலகும். வசதியில்லாதவர்கள், வயதான- ஆதரவற்ற பசுக்களைக் காக்கும் பசுமடத்திற்கு தங்களால் இயன்ற பொருளுதவிசெய்து புண்ணியம் பெறலாம்.

அமாசோமவாரம் வரும் இந்த வருட புரட்டாசி அமாவாசையன்று (12-10-2015) பிதுர்பூஜை மேற்கொண்டு வசதிக்கேற்ப அன்னதானம், ஆடை தானம் செய்து புனிதம் பெறலாம். அன்று அரச மரத்தை 21 முறை வலம் வந்தபின் தானதர்மங்கள் செய்வது போற்றப்படுகிறது.

பாரதப் போரால் மனிதகுலத்துக்குக் கிடைத்த மாபெரும் செல்வம் கண்ணன் அருளிய பகவத்கீதை. துவாபர யுகத்தில் கீதை அருளிய கண்ணன், அடுத்துவரும் கலியுகம் எப்படியிருக்கும் என்பதையும் அருளியிருக்கிறார். அதிலிருந்து சில துளிகள்.

கலியுகத்தில், பூவுலகில் வாழும் மனிதர்கள் தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக்கொள்வார்கள். அதன்விளைவு- அகந்தை, பொய், வஞ்சனை, சோம்பல், மனவருத்தம், அடுத்தவரை சொல்லால் துன்புறுத்துதல், தீயவர்களைக்கொண்டு வன்செயலில் ஈடுபடுதல் போன்றவை.

ஆட்சிபுரியும் மன்னர்களிடம் நீதி, நேர்மை இருக்காது. பகையுணர்ச்சி மேலோங்கியிருக்கும். எவ்வளவு சொத்து சுகம் இருந்தாலும் மேன்மேலும் சேர்க்க தீவிரமாக முயல்வர். நேர்மை யாக நடப்பதாகச் சொல்லிக்கொண்டு குறுக்கு வழியில் பொருள் திரட்டுவார்கள். நேர்மையானவர்களை குறிவைத்து துன்பம் கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பர்.

“அறிவில் சிறந்தவர், மாமேதை’ என்றெல்லாம் மற்றவர்கள் தன்னைப் புகழ வேண்டுமென்று நினைப்பார்கள். புகழ் ஒன்றில்மட்டும் கவனம் செலுத்துவர். மந்தபுத்தியுடைய இவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டு, எதையும் அனுபவிக்க முடியாமல் அவதிப்படுவார்கள்.

துறவறம் மேற்கொண்டதாகச் சொல்லும் வேடதாரிகள் பணத்தாசை பிடித்து அலைவார்கள். மனதைக் கட்டுப்படுத்த முடியாமல்- உடல் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் பெண்தொடர்பால் அவமானப்படுவார்கள். சஞ்சலபுத்தி கொண்ட சாமியார்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.

பெற்றோர்களை பாரமாகக் கருதுவார்கள். அதேசமயம், மனைவியின் பெற்றோர், சுற்றத் தார்களிடம் பிரியமாக நடந்துகொள்வர்.

எந்தப் பொருளை வாங்குவதிலும், விற்பதி லும் ஏமாற்றம் நிறைந்திருக்கும். சிறிதளவு தர்மம் செய்துவிட்டு, பெரிய அளவில் பலன்கள் கிட்டவேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.

பூவுலகில் உள்ளவர்கள் தங்களை ஆள்வதற் கென்று ஒருசிலரைத் தேர்ந்தெடுப்பார்கள். பிறகு யார் நல்லவர்- கெட்டவர், பேராசைக்காரர், சுயநலவாதி என்று புரியாமல் திண்டாடுவர். தனக்கு ஏதாவது சாதகமாக பொருள் கிட்டுமா என்று ஏங்குவார்கள். அவர்களின் இயலாமை வலுவுள்ளவர்களுக்கு சாதகமாக இருக்கும். எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பாராமல் ஒழுங்காக- நேர்மையுடன் நடப்பவர்களை ஏமாளி என்று சொல்வதுடன் ஏளனமாக சிரிப்பார்கள். காலத்துடன் ஒத்துப்போகத் தெரியாதவன் என்று இகழ்வார்கள்.

கலியுகத்தில் மனிதர்களின் சரீரம் விரைவில் எதிர்ப்பு சக்தியை இழந்துவிடும். புதிய புதிய நோய்கள் தோன்றும். வேதம் அறிந்தவர்கள்கூட தங்கள் கடமைகளைத் துறந்து பேராசை கொள்வார்கள்.

நெல் முதலிய தானியங்கள், மருத்துவ மூலிகைகள் முழுமையான பலன்களைக் கொடுக்காது. மேகங்கள், இடி, மின்னல் இருந்தும் நிறைவான மழை இருக்காது. காலம் மாறி மழைபொழிந்து பயிர்ச்சேதம், உயிர்ச்சேதம் ஏற்படும்.

கடவுள் பக்தி, வழிபாடு, அனுஷ்டானம், மனித சேவை போன்றவற்றில் நாட்டம் உள்ளதுபோல் காட்சிதந்தாலும் அதில் போலித்தன்மை நிறைந்திருக்கும். பிறர் பெண்களைக் கள்ளத்தனமாகப் பார்ப்பது, ரசிப்பது ஆகியவை நிறைந்திருக்கும். மேலும் கலியுகத்தில் ஒவ்வொரு நாளும் தர்மம் (கடமை), சத்தியம் (உண்மை), உயர்ந்த வாழ்க்கை முறை, பொறுமை, தயை, ஆயுள், ஆரோக்கியம், பலம், சாஸ்திரங்கள், நேர்மை, வாக்குறுதி ஆகியவை தேய்ந்துகொண்டே போகும்.

செல்வந்தர்கள் சொல்வது தர்மமாகவும் பலசாலிகளின் செயல்பாடுகளே நியாயமாகவும் ஏற்கப்படும்.

இப்படியெல்லாம் அருளிய கண்ணபிரான் துவாபர யுகத்தில் 125 வருடம், 7 மாதம், 6 நாட்கள் இவ்வுலகில் வாழ்ந்து, துவாபர யுகம் முடியும் அந்தக் கடைசி நாளில் பிற்பகல் இரண்டு மணி, 27 நிமிடம், 30 விநாடியில், வேடன் ஒருவன் எய்த அம்பினால் முக்தியடைந்தார்- அதாவது வைகுண்டம் சென்றார் என்று புராண வரலாற்றினை ஆய்வுசெய்த அறிஞர்கள் கூறுகின்றனர். விஷ்ணுபுராணம், மத்ஸ்யபுராணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றிலுள்ள குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு, கோள்களின்  நிலையைக் கணக்கில் கொண்டு கிருஷ்ணரின் ஜாதகத்தையும் கணித்து பகவானின் இறுதிநாளை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதன்படி கி.மு. 3,102-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி கிருஷ்ணாவதாரம் முடிந்ததாக 2005-ஆம் ஆண்டு அறிவித்தனர்.

யுகங்கள் நான்கு. சத்ய (கிருத) யுகத்தில் தர்மதேவதை நான்கு கால்களில் நின்று கொண்டிருந்தாள். திரேதா யுகத்தில் மூன்று கால்களிலும், துவாபர யுகத்தில் இரண்டு கால்களிலும் நின்றுகொண்டிருந்த தர்ம தேவதை கலியுகத்தில் தற்போது ஒரே காலில் நின்றுகொண்டு தவிக்கிறாள்.

சத்ய யுகத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஆழ்ந்த தியானம் இருந்தது. திரேதா யுகத்தில் கடும்தவம் மேற்கொண்டார்கள். துவாபர யுகத்தில் சடங்கு மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். ஆனால் கலியுகத்தில் இறைவன் நாமங்களைக் கூறிக் கொண்டு வாழ்கிறார்கள். மற்ற யுகங்களில் பிறந்தவர்களைவிட கலியுகத்தில் பிறந்தவர்களுக்கு முக்தியடைவது மிக சுலபம். இறைவழிபாடு, சத்தியம், கருணை, தானம் ஆகியவற்றை சுயநலமின்றி மேற்கொண்டால், கலியுகமும் சுகமே.

 எம்.கே. இராதாகிருஷ்ணன்

மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரிந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ளது ராய்ப்பூர். அந்த நகரில் சம்ப்பாரண்யா என்ற இடத்தில் 1479-ல் வல்லபாச்சார்யா என்ற வைணவப் பெரியார் அவதரித்தார்.

இவரது தந்தை லக்ஷ்மணபட்டா; தாய் இல்லம்மா. தெலுங்கு பிராமணக் குலத்தில் தோன்றிய இவர் சைதன்ய மகாபிரபு வாழ்ந்த அதே சமகாலத்தில் வாழ்ந்தவர். இவரை அக்னிதேவனின் மறுபிறவி என்றும் கூறுவர். வல்லபருக்கு பதினோரு வயது நடந்துகொண்டிருந்தபோது அவரது தந்தை இவ்வுலக வாழ்வை நீத்தார். வல்லபர் தனது 12-ஆவது வயதில் நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், 18 புராணங்களை வாரணாசியில் கற்றுத்தேர்ந்தார்.

பிறகு வாரணாசியிலிருந்து பிருந்தாவன க்ஷேத்திரம் வந்து ஸ்ரீகிருஷ்ணனை தரிசித்தார்.

பின்னர் இந்தியா முழுவதிலுமுள்ள புண்ணிய தலங்களுக்கு கால்நடையாகவே சென்று தரிசித்தார்.

ஒருசமயம், விஜயநகரத்தை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயரின் அரசவையில் புலவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் போட்டி நடந்தது. இதையறிந்த வல்லபாச்சார்யா அங்குவந்து பெரும் புலவர்களோடு வாதிட்டு வெற்றிபெற்றார்.

வல்லபாச்சாரியாரின் ஆற்றலை நேரில் கண்ட விஜய நகர மன்னர் இவருக்கு பொன்னும் பொருளும் கொடுத்ததுடன், வைஷ்ணவாச்சார்யா என்ற உயரிய பட்டமும் கொடுத்து கௌரவித்தார். இவர் புகழ் நாடெங்கும் பரவியது. பின்னர் விஜயநகரத்திலிருந்து உஜ்ஜயினி வந்து அங்குள்ள மக்களிடம் வைணவ தத்துவங்களைப் பரப்பினார். இதனால் பலரும் வைணவ மார்க்கத்தைப் பின்பற்றத் தொடங்கினர். ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கும் சென்று வைணவத்தின் பெருமையைக்கூறி, அம்மாநில மக்கள் வைணவ சமயத்தைப் பின்பற்ற வழிசெய்தார். வாரணாசியில் மகாலட்சுமி என்ற பெண்ணை மணந்தார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இருந்தனர்.

இவர் வைஸ்ய சூத்ரபாஷ்யா, ஜெய்மினி சூத்ரபாஷ்யா, பாகவததிகா சுபோதினி, புஷ்டி ப்ரவலாமர்யாதா, சித்தானந்த ரஹஸ்யா ஆகிய நூல்களை சமஸ்கிருத மொழியில் எழுதினார். மேலும் பிரிஜ் என்ற மொழியில் பல நூல்களை எழுதினார். சுத்தாத்வைத தத்துவத்தில் வல்லவராக இருந்த இவரது உடல் சச்சிதானந்த நிலையில் இருந்ததால் இவர் புருஷோத்தமர் என்றும் அழைக்கப்பட்டார்.

இந்திய நாட்டில் அன்று வாழ்ந்த இவரது சீடர்கள் குழந்தை ஸ்ரீகிருஷ்ணனை முதன்மை தெய்வமாகப் போற்றி வணங்கிவந்தனர்.

ஸ்ரீகிருஷ்ணன்தான் எல்லாருக்கும் முதல் தெய்வம் என்றும்; தினமும் ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி ஆராதிக்கும்படியும் அவர் கூறினர். ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய மிக உயர்ந்த கருணையையும், அனுக் கிரகத்தையும் அடைவதற்கு “மஹாகருணா யோகம்’ என்ற நூல்மூலம் பல உபதேசங்களை மக்களுக்குக் கூறினார்.

இவர் தன் கடைசி காலத்தில் வாரணாசியில் தங்கியிருந்தபோது, தான் இவ்வுடலைவிட்டுப் பிரியும் நேரம் நெருங்குவதை அறிந்தார். ஒருநாள் கங்கை நதியின் ஹனுமான் காட் நீராடும் கட்டத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கினார். சில விநாடிகளில் அவர் மூழ்கிய இடத்திலிருந்து பேரொளி ஒன்று வான்நோக்கிச் செல்வதை அங்கு நீராடிக்கொண்டிருந்த வர்கள் பார்த்து அதிசயித்தனர். சிறிது நேரத்தில் அந்த ஒளி மறைந்தது. வல்ல பாச்சார்யா இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதை மக்கள் புரிந்துகொண்டனர்.

இவர் தனது 52-ஆவது வயதில் 1531-ல் கண்ணன் திருவடியை அடைந்தார். அதற்குப்பின் நாடெங்கிலும் இருந்த வல்லபாச்சாரியாரின் தொண்டர்கள், அவர் பிறந்த இடமான சம்ப்பாரண்யாவில் மிகப்பெரிய அழகிய கோவில் ஒன்றை அமைத்தனர்.

அது இன்றும் வல்லபாச்சார்யாரின் சேவையைப் போற்றும் ஒரு புண்ணியத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கிவருகிறது.


 

தீயவர்களை அழித்து, தர்மநெறியை நிலைநாட்ட திருமால் எடுத்த அவதாரங் களில் நரசிம்மாவதாரமும் ஒன்று. இதைப்பற்றி கம்பர் குறிப்பிடும்போது,

“நசை பிறந்து இலங்கப் பொங்கி
நன்று நன்று என்று நக்கு
விசை பிறந்து உருமு வீழ்ந்தது
என்ன ஓர் தூணின் வென்றி
இசைதிறந்த அமர்ந்த கையால்
என்றினன்; எற்ற லோடும்
திசைதிறந்து அண்டம் கீறிச்
சிரித்தது செங்கட் சீயம்’

என்று கூறுகிறார். அதாவது சீறியெழுந்த சிங்கமாகத் தூணிலிருந்து வந்தார் நரசிம்மர் என்கிறார் கம்பர். மனித உருவில் சிங்க முகத்துடன் தனது பரம பக்தனான பிரகலாதனைக் காக்கவும், அசுரர்களின் தலைவனான இரண்யகசிபுவின் அதர்ம செயல்களைத் தடுக்கவும் நரசிம்ம அவதாரத்தைத் திருமால் எடுத்தார். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் இராமனும், நரசிம்மனும் ஒருவனே என கீழ்க் கண்ட பாசுரம் (328) விளக்குகிறது.

“கதிராயிரமிரவி கலிந்தெறித் தால் ஒத்த நீள்முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதீரேல்
அதிரும் கழற்பொருதோன் இரணியன் ஆகும் பிளந்து அரியாய்
உதிரம் களைந்த கையோடி ருந்தானை உள்ளவா கண்டாருளர்.’

சத்துரு சம்கார காலத்தில் உக்கிரமான வடிவிலும், நிஜத்தில் சாந்தமாகவும் இருந்து தம்மை வணங்கும் பக்தர்களை எல்லா துன்பங்களினின்றும் விடுபடச் செய்யும் நரசிம்மருக்கு நாடெங்கும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன.

அவற்றில் மங்களகிரியில் வீற்றிருக்கும் நரசிம்மர், தமக்கு நைவேத்தியமாகத் தரும் பானகத்தை அருந்துவது ஓர் அதிசயத்தக்க உண்மை. ஆந்திர மாநிலம், விஜயவாடா- குண்டூர் நகரங்களுக்கு இடையே உள்ளது மங்களகிரி. விஜயவாடாவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மலைக்கோவிலில் பானகால நரசிம்மர் ஆலயம் உள்ளது. பூரி ஜெகந்நாத்தில் போஜனம்,
சிம்மாசலத்தில் சந்தனம், மங்களகிரி யில் பானகம், ஸ்ரீரங்கத்தில் சயனம் என்று திருமாலின் வைபவத்தை வைணவர்கள் கூறுவார்கள்.

சிறப்புபெற்ற இந்த பானக நரசிம்மரை “ஸ்ரீபானகாலராயுடு’ என ஆந்திர மக்கள் அழைப்பர். இந்த ஆலயத்திற்கு கிருஷ்ணதேவராயர் பல தானசாசனங்கள் அளித்துள்ளார்.

பானக நரசிம்ம மூர்த்திக்கு பஞ்சலோகத்தில் கவசம் போட்டுள்ளனர். சுமார் 15 சென்டிமீட்டர் அளவுக்கு திறந்த வாயின் வழியாக சங்கு மூலம் நைவேத்தியமாக பானகத்தை (தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்த நீர்) ஊற்றுகிறார்கள். நாம் எவ்வளவு பானகத்தை ஊற்றுகின்றோமோ, அதில் சரியாகப் பாதியை சிலை ஏற்றுக்கொண்டு மீதியை ஏற்காமல் உமிழ்ந்து, வெளியே வந்துவிடுகிறது.

அப்படி வெளியே வரும் பானகத்தைதான் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.

வாயில் பானகத்தை ஊற்றும்போது அது உள்ளே செல்லும் சத்தம் நமக்குக் கேட்கிறது.

“தெங்கும் கதலியும் தென்றலால் துதிபாடும்
வெங்கண் கரியுரு மலைக்கு கைமேவி
சங்கினில் பானகம் சாலப் பருகுவோய்
மங்களகிரி யம்பலத்தென் செங்கண் மாலே!’

என மங்களகிரி பானக நரசிம்ம பாமாலையில் கோவிந்ததாசரால் பாடப் பட்டுள்ளது. மேலும் ஆலய சந்நிதியில் வெல்லம், தேங்காய் உடைத்த தண்ணீர், பானக நீர் என பல இனிப்புப் பொருட்கள் பரவலாக சிந்திக்கிடந்தாலும் ஒரு ஈ, எறும்பைக்கூட பார்க்கமுடியவில்லை.

இந்த ஆலயத்தை காலை முதல் மதியம் வரைதான் திறந்து வைக்கிறார்கள். அதற் குப் பின்பு நடையை மூடிவிடுகிறார்கள். காரணம், மதியத்திற்குப் பிறகு தேவர்கள் மூர்த்திக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

தாங்கள் நினைத்த காரியத்தை பானக நரசிம்மர் நிறைவேற்றிய பின்னர் நேர்த்திக் கடனாக பானகத்தைக் கொடுத்து வழிபடு கிறார்கள். சிறப்பு அம்சம் பொருந்திய இந்த பானக நரசிம்மர் ஆலயத்தின் அடிவாரத்தில் மிகப்பழமையான லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.

எண்ணிய காரியம் கைகூடவும், சத்ருபயம் நீங்கவும் ஸ்ரீமத் நரசிம்ம ஜெயந்தியன்று நரசிம்மரை, “ஸ்ரீநரசிம்ம காயத்ரி’ மந்திரத்தை ஜெபித்து சகல நன்மைகளையும் பெறுவோம்.

வஜ்ர நகாய வித்மஹே
   தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நரசிம்ஹ: ப்ரசோதயாத்
ஓம் நரசிம்ஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி
தன்ன: ஸிம்ஹ ப்ரசோதயாத்.


தமிழகத்தில், மார்கழி மாத கடைசி நாளில், நமது துயரங்கள் யாவும் தொலையட்டுமென்று பழைய துணிகள், பாய் போன்றவற்றை எரிப்போம். தை பிறந்ததும் மங்களம் பொங்கட்டுமென்று பொங்கல்வைத்து சூரியனை வணங்கி உண்போம். மார்கழிக் குளிரும் நீங்கும்.

ஆனால் வடநாட்டில் பிப்ரவரி- மார்ச் மாதம்வரை குளிர் நீடிக்கும்.

நாம் மாசி மகமென்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் மூழ்கி அனைத்து புனித நதிகளின் அருளையும் பெறுவோமென்றால், வடநாட்டில் அதேதினம் வேறுவிதமாகக் கொண்டாடப்படும். நமது மாசிமாதப் பௌர்ணமி அவர்களுக்கு ஹோலி தினம். நாம் போகியன்று எரிப்பதுபோல அவர்களும் எரிப்பார்கள். அந்நாளுடன் குளிர் உடைகளுக்கு விடுதலை. சூரிய ஒளி பெருகும்.

ஹோலி தினமானது நான்கு முக்கிய சம்பவங்களைக் கொண்டது.

முதலாவதாக இது பக்த பிரகலாதன் வரலாறோடு தொடர்புகொண்டது. ஹரி பக்தன் என்ற காரணத்தால் தன் மகனையே அழிக்க நினைத்தான் ஹிரண்யகசிபு. அவனது  பல முயற்சிகளையும் தடுத்து திருமால் பிரகலாதனைக் காத்தார். இறுதியாக அவன் ஒரு திட்டமிட்டான்.

ஹிரண்யகசிபுவுக்கு ஹோலிகா என்றொரு தங்கை இருந்தாள். நெருப்பில் இறங்கினாலும் அழியாத சக்தி பெற்றவள் அவள். அவள்மூலம் பிரகலாதனை அழிக்க எண்ணினான். அதன்படி பிரகலாதனை ஏந்திக்கொண்டு நெருப்புக் குண்டத்தில் இறங்கினாள் ஹோலிகா. சிறுவன் பிரகலாதன் பயப்படவில்லை; நாராயண நாமம் கூறினான். அவனுக்கு தீ குளிர்ச்சியைத் தந்தது. ஆனால் ஹோலிகாவோ எரிந்து சாம்பலானாள். அதையொட்டியே ஹோலி கொண்டாடப்படுகிறது.

ஹோலியை ஒட்டி மற்றொரு விழாவும் உண்டு. இது கோபியருடன் கண்ணன் விளையாடிய லீலையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர்மீது ஒருவர் குழல்மூலம் வண்ணநீரைப் பீய்ச்சியடித்தபடி குதூகலமாக விளையாடுவர். வயது, இனம் என்ற வேறுபாடு இருக்காது. இது ஒருநாள் விழா. மதுரா, பிருந்தாவன், பர்ஸானா (ராதா பிறந்த இடம்) ஆகியவற்றில் தனித்தனியே ஒவ்வொரு நாளாக மூன்று நாள் கொண்டாடுவார்கள்.

இதே ஹோலி தினத்தை கஜேந்திர மோட்சம் நிகழ்ந்த நாளென்று, பெருமாள் கோவில்களில் ஸ்ரீமத் பாகவத புராணம் வாசிப்பார்கள். இது சகல சௌபாக்கியங்களையும் அளித்து, வைகுண்டப் பேற்றையும் நல்கும்.

நான்காவது முக்கிய நிகழ்வு- ஹோலி தினமானது ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகாபிரபுவின் அவதார நாள்.

“ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’
என்னும் பகவத் நாமத்தைப் பரப்பியவர் ஸ்ரீசைதன்யர்.

மேற்கு வங்காள நவத்வீபத்தில் பரம வைணவரான துவைதர் என்பவர் வாழ்ந்துவந்தார். வேத, சாத்திர, புராண, ஆகமங்களில் தேர்ச்சிபெற்றவர். கலியின் கொடுமையால் மக்கள் பல தகாத காரியங்களில் ஈடுபட்டு தர்மநெறி மறந்தவர்களாக வாழ்வதைக்கண்டு மனம்வருந்திய அவர், கண்ணன் விளையாடிய பிருந்தாவனம் சென்று மக்களை நல்வழிப்படுத்த வேண்டுமென்று மனமுருகி வேண்டினர். கண்ணன் “நானே மீண்டும் அவதரித்து நாம மகிமையை மக்களிடம் பரப்புவேன்; கவலை வேண்டாம்’ என்று உணர்த்தியருளினான்.

கலியின் கொடுமை என்ன?
“கலேள கல்மஷ சித்தானாம்
பாபத்ரவ்ய உபஜீவனாம்
விதிக்ரியா விஹுனானாம் கதி:
கோவிந்த கீர்த்தனம்.’

கலியுகத்தில் மனிதர்கள் தூய மனமுடையவர்களாக இருக்க மாட்டார்கள். பண்டங்கள் தூயதாகக் கிடைக்காது; எல்லாவற்றிலும் கலப்படம். சத் காரியங்களையும் பரிசுத்தமாக- முழுமையாகச் செய்யவியலாது. இதற்கெல்லாம் கதி கோவிந்தன் நாமத்தைச் சொல்வதே.

அதேசமயம், தேவர்களும் ரிஷிகளும் கலியுகத்தில் அவதாரம் செய்யவே விரும்புகிறார்களாம். ஏன்?

“கலே: தோஷநிதே ராஜன்
அஸ்திஹி ஏகோ மஹான் குண:
கீர்த்தனாதேவ கிருஷ்ணஸ்ய
முக்த பந்த பரம் வ்ரஜேத்.’

கலியுகத்தில் தோஷங்கள் அதிகமிருந்தாலும் ஒரு நல்லதும் உண்டு. அது என்ன? கண்ணனைப் பாடினாலே சம்சார பந்தம் நீங்கி முக்தியடையலாம். எனவே கலி உன்னதமானதுதானே!

அதனால்தான் நமது புனித பாரத நாட்டில் நாயன்மார்கள், ஆழ்வார்கள், சாதுக்கள், சித்தர்கள் எல்லாம் இறைநாம சங்கீர்த்தனத் தைப் பரப்பினார்கள். அவ்வாறு நவத்வீபத்தில் கிருஷ்ண அவதாரமாகத் தோன்றியவர் தான் நிமாயி. இவர் பிறப்பும் வினோதமே.

நவத்வீபத்தில் ஜெகந்நாத மிஸ்ரா- சசிமாதா என்னும் தம்பதியர் இருந்தனர். பக்திமான்கள். அவர்களுக்கு அடுத்தடுத்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்து உடனே இறந்துவிட்டன. அடுத்தொரு மகன் பிறந்தான். விஸ்வரூபன் எனப் பெயரிட்டனர். இளம்வயதிலேயே அவன் ஞான மார்க்கத்தில் ஈடுபட்டான். திருமணம் செய்துவைத்தால் மனம் மாறுவான் என்று திருமண ஏற்பாடு செய்ய, அவனோ சந்நியாசியாகி எங்கோ சென்றுவிட்டான். வாரிசில்லாமல் போய்விட்டதே என்று மிஸ்ரா கவலைகொண் டார். ஒருமுறை மிஸ்ரா கயாவுக்கு சென்று பித்ருகடன் செய்தார். அங்கிருந்து கிளம்பும் முன் விஷ்ணுபாதத்தை வணங்கினார்.

அப்போது மகாவிஷ்ணு ஒளிப்பிழம்பாகத் தோன்றி, “நான் உனக்கு மகனாகப் பிறப்பேன்’ என்றருளினார். மெய்சிலிர்த்தார்  மிஸ்ரா.

அவர் ஆனந்தக்கண்ணீருடன் நவத்வீபம் வந்துசேர்ந்தார். 1486-ஆம் வருடம்- ஹோலி பண்டிகை தினம். அன்று கிரகணம். மிஸ்ரா நதியில் நீராடிக்கொண்டிருந்தபோது குழந்தை பிறந்ததாக தகவல் வந்தது. மீண்டும் நீராடி கிரகண காரிய தானங்கள் செய்து, புத்ரஜென்ம விதை தானமும் செய்தார்.

கயா விஷ்ணுவை நினைத்து விஸ்வம்பரன் என்று குழந்தைக்குப் பெயரிட்டார். தங்கமயமாக இருந்ததால் கௌராங்கன் என்றும் அழைத்தனர். வேப்பமரத்தின் அடியில் பிறந்ததால் நிமாயி (வேம்பு) என்ற செல்லப்பெயருமுண்டு.

இந்நிலையில் யோகி ஒருவர் மிஸ்ராவின் இல்லத்துக்கு வந்தார். அவர் தாமே  சமைத் துண்ணும் வழக்கமுடையவர். எனவே மிஸ்ரா சமையலுக்கான  பொருட்களை வழங்கினார்.

யோகியார் நீராடிவிட்டு சமைத்தார். பின்னர் அதை இறைவனுக்கு நிவேதனமாக சமர்ப் பித்து கண்மூடி தியானம் செய்தார். அப்போது அங்குவந்த குழந்தை நிவேதன அன்னத்தை எடுத்து சாப்பிட்டது. அதைக்கண்ட யோகி, “இது எச்சிலாயிற்றே’ என்று கருதி, மீண்டும் நீராடிவிட்டு சமைத்து நிவேதனம் படைத்து கண்மூடி தியானித்தார். அப்போதும் குழந்தை வந்து அன்னத்தை உண்டது. அதைக்கண்ட யோகி மீண்டும் நீராடி, சமைத்து நிவேதனம் வைக்க, அதே லீலையை குழந்தை மீண்டும் செய்தது. அப்போதுதான் அந்த யோகி குழந்தையிடம் தன் உபாசனா தெய்வமாகிய கண்ணனைக் கண்டார். மெய்சிலிர்த்து, அஞ்ஞானம் அகன்று குழந்தையைப் பணிந்தார். “என் நிவேதனத்தை கண்ணன் மூன்றுமுறை உண்டானே’ என்று கசிந்தார். குழந்தை சிரித்தது; மிஸ்ரா மனம்நெகிழ்ந்தார்.

கண்ணனைப்போலவே குழந்தை நிமாயி பல குறும்புகள் செய்தான். மிஸ்ராவிடமும் சசிமாதாவிடமும் வந்து பலர் முறையிட்டனர்.

எட்டு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் மகனையும் இழந்த தம்பதிக்கு நிமாயியைக் கண்டிக்க மனம்வரவில்லை.

நிமாயி இளம்வயதிலேயே ஆகமம், சாஸ்திரம், வியாகரணம், புராணம், இதிகாசம் யாவற்றையும் கற்றான். பாடசாலையும் நடத்தினான். தான் மிகப்பெரிய பண்டிதன் என்ற மமதைகொண்டு, மற்றவர்களை வாதுக்கழைத்து கேள்விகேட்டு மடக்கி அவமானப்படுத்தினான். வைணவ சாதுக் களை இகழ்ந்தான்.

இதுபற்றி துவைதாச்சார்யாரிடம் சிலர் குறைகூறினர். நிமாயி அவதார புருஷன் என்பதை உணர்ந்திருந்த அவர், “”பொறுமை யாக இருங்கள்” என்றார்.

பெற்றோர்கள் லட்சுமி என்ற பெண்ணை நிமாயிக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அவள் இறந்துவிட்டாள். சிறிது நாட்களிலேயே மிஸ்ராவும் இறந்தார். வைதீக முறைப்படி ஈமக்கிரியைகளைச் செய்த நிமாயி, முழுமையாக சிரார்த்த கர்மாக்கள் செய்ய (1508-ஆம் ஆண்டு) கயா சென்றார்.

அங்கே விஷ்ணு பாதத்தை அவர் தரிசித்த போது அகங்காரம் அகன்று ஞானம் பிறந்தது. ஆனந்தக் கண்ணீருடன் அப்படியே மயங்கிவீழ்ந்தார்.

அந்த நிலையைக்கண்ட ஈஸ்வரபுரி என்ற சந்நியாசி, நிமாயிக்கு கிருஷ்ண மந்திரத்தை உபதேசித்தார்.

அதிலிருந்து நிமாயியின் நடவடிக்கைகள் மாறின. “இந்தக் கலியில் பகவான் நாமமே கதி’ என்றெண்ணி நாமகோஷம் செய்தார். மற்றவர்களையும் செய்யவைத்தார். அவர் நடத்திவந்த சமஸ்கிருத பாடசாலை பஜனைமடமாக மாறியது. முன்னர் தான் ஏளனம் செய்த சாதுக்களிடமெல்லாம் சென்று பதம் பணிந்தார். இதைக்கண்ட துவைதாச்சாரியார், முன்பு பிருந்தாவனத்தில் கண்ணன் தனக் கருளியபடி அவதரித்துள்ளான் என்றெண்ணி மகிழ்ந்தார்.

நிமாயியின் ராம சங்கீர்த்தனத்தில் நித்யானந்தரும் இணைந்தார். (நிதாயி என்றும் அழைப்பர். நிமாயி கிருஷ்ண அவதாரமென்றால், நிதாயி பலராம அவதாரம்.)

முப்புரிநூல் அணிந்தவரே வேத மந்திரத் தைக் கூறலாம். பெண்களோ, மற்ற இனத்தவரோ கூறக்கூடாது என்பது நியமம். உச்சரிப்பும் மாறக்கூடாது. மாறினால் பொருள் வேறாகி விபரீதமாகிவிடும். (ஒருமுறை நாரதரே தான் செய்த யாகத்தில் மந்திர ஸ்வரம் பிறழினார். அதனால் யாக குண்டத்திலிருந்து ஒரு ஆடு வெளிப்பட்டு மிகப்பெரிதாகி அட்டகாசம் செய்தது. அவர் முருகனை வேண்ட, கந்தன் அங்கு தோன்றி ஆட்டை அடக்கி தனது முதல் வாகனமாக்கிக்கொண்டான் என்கிறது கந்தபுராணம்.)

ஆனால் இறைநாமத்தை எவரும் கூறலாம்; எங்கும் கூறலாம்; எப்போதும் கூறலாம். மனத்தூய்மைதான் தேவை. அதுவே பக்தியை மனதில் துளிர்க்கச் செய்யும். எனவே நாம சங்கீர்த்தனத்தை எங்கும் பரப்பினார் நிமாயி.

அந்தப் பகுதியை ஆண்டுவந்த காஜா என்ற முகம்மதிய மன்னன், பல இடங்களிலும் நாம சங்கீர்த்தனம் நடப்பதுகண்டு அதற்குத் தடைவிதித்தான். அன்றிரவு நிமாயி கிராம மக்களிடம், “நாம சங்கீர்த்தனம் சொல்ல காஜா அரண்மனை செல்வோம்; கையில் விளக்குடன் வாருங்கள்’ என்று சொல்லி காஜாவின் மாளிகை நோக்கிச்சென்றார். மாடியிலிருந்து தேஜோமயமான நிமாயியைப் பார்த்த காஜா, அங்கிருந்து இறங்கி ஓடிவந்து நிமாயியின் பதம் பணிந்து மன்னிப்பு கோரினான். தடையை நீக்கினான்.

இந்த நிலையில், தாயின் வற்புறுத்தலுக் கிணங்க விஷ்ணுப்பிரியா என்ற பெண்ணை நிமாயி மணந்தார். அவர் மனம் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை. அவதார காரியம் மனதைத் தூண்டியதுபோலும். ஓரிரவு விஷ்ணுப்பிரியாவிடம் மிக மகிழ்ச்சியாகப் பேசினார். “என்றுமில்லாமல் இன்றென்ன இத்தனை அன்பு’ என்று வியந்தாள் அவள்.

அன்று நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறி னார்.

கங்கைக் கரைக்குச் சென்று (1510-ஆம் ஆண்டு மாசி மாதம்) கேசவபாரதி என்பவரி டம் சந்நியாச தீட்சை பெற்றார். நிமாயியின் மனோநிலையை உணர்ந்த அவர் “ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்’ என்ற பெயரைச் சூட்டினார்.

சந்நியாசிகள் ஒரே இடத்தில் தங்கக் கூடாது. எனவே ஊர் ஊராகச் சென்று நாமப்பிரசங்கம் செய்தார். ஒருசமயம் சாதுக்களுடன் அவர் காட்டைக் கடக்கவேண்டியதி ருந்தது. உடன் வந்த சாதுக்கள், “கொடிய மிருகங்கள் இருக்குமே’ என்று தயங்க, அவர் “அஞ்சவேண்டாம்’ என்றுகூறி, கைகளைத் தூக்கியவண்ணம் “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண’ என்றபடி நடனமாடிக்கொண்டே முன்செல்ல, அதைக்கண்ட மிருகங்களும் ஆடினவாம்.

இன்னொருமுறை காட்டுவழியே சென்றபோது சைதன்யருடன் நித்யானந்தரும் இருந் தார். அவர்களிடம் நிறைய பொருளிருக்கும் என்றெண்ணிய ஜகாய், மதாய் என்ற இரு கொள்ளையர்கள் வழிமறித்தனர். நித்யானந்தர் அவர்கள்முன் செல்ல, அவரை தடியால் தாக்கினர். ரத்தம் வழிந்தது. “ஹரே கிருஷ்ண…’

என்று உரக்க குரலெழுப்பிய சைதன்யர் முன்னேறிச் சென்று அவர்களைத் தழுவிக்கொண்டார். அந்த நொடியில் கொள்ளையர் களின் முரட்டுத்தனம் ஒழிந்தது. சைதன்யரின் அடிபணிந்தனர். நதிக்கரையில் ஜகாய் காட், மதாய் காட் என்ற பெயரில் பக்தர்கள் நீராட படித்துறை அமைத்தனர்.

ஆறு வருடங்கள் பாதயாத்திரையாக பல தலங்களைச் சென்று தரிசித்தார். ஒரு சாதுர்மாஸ்ய காலத்தில் (மழைபெய்யும் நான்கு மாதங்கள்) ஸ்ரீரங்கத்திலும் தங்கினார்.

வேங்கட பட்டர் என்பவர் இல்லத்தில் அவர் தங்கியிருந்தபோது பட்டரின் மகன் சைதன்யரின் சீடரானார். அவரே கோபால பட்டர் கோஸ்வாமி என்று பெயர்கொண்டு பிருந்தாவனத்தில் வாழ்ந்தார். (ஸ்ரீரங்கத்தில் சைதன்ய பாத மண்டபம் உள்ளது.)

பின்னர் மதுரா- பிருந்தாவனம் வந்துசேர்ந்தார் சைதன்யர். கிருஷ்ண லீலைகள் நடந்ததற்கான அடையாளச் சின்னங்கள் யாவும் முகம்மதியர்களால் அழிக்கப்பட்டுவிட்டிருந் தன. அவர் கிருஷ்ண அவதாரமானதால், லீலா ஸ்தானங்களை நிர்ணயித்து, அவற்றைப் பாதுகாக்க ரூப, சனாதன என ஆறு கோஸ்வாமி களை நியமித்தார். (அவை மீண்டும் முகம்மதியர்களால் அழிக்கப்பட்டன. தற்போது நாம் காண்பவை சுமார் 200-300 ஆண்டுகளுக்குமுன் புதுப்பிக்கப்பட்ட வையே.)

பின்னர் சைதன்யர் நவத்வீபம் வந்தார். முந்தைய மனைவி விஷ்ணுப்பிரியை  ஓடிவந்து அவரை வணங்கி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள். அவளுக்கு தன் பாதுகையைத் தந்தார். தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க பூரியில் தங்கியிருப்பதாக வாக்குறுதி யளித்தார்.

பூரி சென்ற சைதன்ய மகாபிரபு, ஜெகந் நாதரைக் கண்டதும் மயங்கிவீழ்ந்தார். பின்னர் அத்தலத்திலேயே தங்கிய அவர், அந்நாட்டு அரச பண்டிதரான வாசுதேவ சர்வாபௌமர் என்பவரை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தினார். நாளடைவில் ஒரியாவில் சைதன்ய பக்தர்கள் அதிகரித்தனர். அந்நாட்டு அரசருடன் ஆலோசித்து பூரி ஜெகந்நாத யாத்திரையைத் தொடங்கிவைத்தவர் சைதன்ய மகாபிரபுவே.

ஒருநாள் பூரி கடற்கரைக்குச் சென்றார்.

கடலின் வண்ணத்தில் கண்ணனைக் கண்ட அவர் அதில் விழுந்துவிட்டார். ஒரு மீனவனின் வலையில் சிக்கி அவர் மேலே வந்தபோது தியான நிலையில் இருந்தார். என்னே  வினோதம்!

தனது கடைசி 16 ஆண்டுகளை அவர் பூரியில் கழித்தாரென்று தெரிகிறது. அடிக்கடி ராதா- கோபியர் பாவத்தில் திளைத்து மூர்ச்சையுறுவார். பலமணிநேரம் சுயநினைவுக்கு வரமாட்டார். சில நேரங்களில் “கண்ட யோக’த்தில் இருப்பா ராம். (தலை, கை, கால்கள், உடல் தனித்தனியே இருக்கும்படி செய்யும் யோகம்.) சிலர் அவ் வாறு கண்டுள்ளனர். இத்தகைய சித்திகளை அடைய அவர் யோகமோ தவமோ செய்யவில்லை; கிருஷ்ண தியானமே!
கிருஷ்ண சைதன்ய மகாபிரபு யார்?

ராதை தன்மீது கொண்ட அன்பை, அவள் பாவத்திலேயே ரசித்திட விரும்பினார் கிருஷ்ணர். அதனால் ராதையின் தங்கநிறத்தோடு சைதன்யராய்ப் பிறந்தார். கண்ணனுக் காக ஏங்கும் ராதை மனது! எனவேதான் கிருஷ்ண தியானம் அதிகம்.

9-7-1533-ஆம் தேதி சைதன்யரின் பூதவுடல் பூரி ஜெகந்நாதருக்குள் கலந்தது. (ஆண்டாள் ரங்கநாதரில்- மாணிக்கவாசகர், நந்தனார் தில்லை நடராஜரில்- ஞானசம்பந்தர் ஆச்சாள் புரம் சிவனில்- மீரா துவாரகாதீசனில் கலந்ததுபோல!)சைதன்ய மடங்கள் (ஒநஃஞச) மகா பிரபுவின் புகழைப் பரப்புகின்றன. கொல்கத்தா அருகே மாயாபூரில் சைதன்யர் ஜென்ம ஸ்தானம் அற்புதமாகக் கட்டப்பட்டுள்ளது. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்!

 

பொதுவாக தைப்பூசத் திருவிழா முருகப் பெருமான் அருள்புரியும் கோவில்களிலும், சிவாலயங்களிலும், அம்மன் கோவில்களிலும் கொண்டாடுவதைக் காண்கிறோம். அந்தவகையில் வைணவக் கோவில்களிலும் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் பஞ்சஸார க்ஷேத்ரம் என்று போற்றப்படும் திருச்சேறைத் திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

மூலவர் ஸாரநாதர், நின்ற திருக்கோலத்தில் கிழக்குமுகமாக பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

தாயார்: ஸாரநாயகி (ஸாரநாச்சியார்). தீர்த்தம்: ஸார புஷ்கரணி.

இங்கு வருடாவருடம் தை மாதம் பௌர்ணமிகூடிய பூச நட்சத்திரத்தன்று தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

ஒரு காலகட்டத்தில் காவேரி அன்னையானவள், மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்து, “கங்கைக்கு நிகராக தானும் உயர்நிலையில் இருக்கவேண்டும்; இத்தலத்தில் பெருமாள் எப்போதும் எழுந்தருளியிருக்க வேண்டும்; இங்கு வழிபடவரும் பக்தர்களுக்கு முக்தி அளிக்கவேண்டும்’ என மூன்று வரங்களைக் கேட்டாள்.

காவேரி அன்னையின் தவத்தினைப் போற்றிய மகாவிஷ்ணு காவேரிக்குக் காட்சிகொடுத்து கேட்ட வரங்களை அருளினார்.

சுமார் மூவாயிரம் ஆண்டுகள் காவேரி தவம்செய்து முடித்தபொழுது முதலில் குழந்தை உருவத்திலும், பிறகு பஞ்சலட்சுமிகளுடனும் பகவான் தோன்றி காவேரி அன்னைக்கு அருள்புரிந்தார் என்கிறது புராணம். ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, நீளாதேவி, சாரநாயகி ஆகியோரே பஞ்சலட்சுமிகள். இதில் சாரநாயகிதான் இத்தலத்தின் தாயார்.

இதில் குறிப்பாக காவேரி அன்னைக்கு முதலில் காட்சியளித்த குழந்தை வடிவிலான மாமதலைப்பிரானை கையிலேந்தி வணங்கினால், குழந்தைச் செல்வம் மற்றும் எல்லா செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் குளக்கரையில் (புஷ்கரணி) காவேரி அன்னைக்கு ஒரு சிறு சந்நிதி உள்ளது. அருகே ராஜகோபாலசாமி சந்நிதியும் உள்ளது.

காவேரி அன்னைக்கு பெருமாள் ஒரு தை மாத பூச நட்சத்திரத்தன்றுதான் வரங்கள் அளித்தார். அதனால் இத்தலத்தில் முதல் எட்டு நாட்கள் தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் வாகனத்திலும், வேத திவ்யப்பிரபந்த கோஷ்டியுடன் உற்சவம் நடைபெறுகிறது. ஒன்பதாவது நாளான தைப்பூசத்தன்று தேரில் ஊர்வலம்வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும்போது காவேரி அன்னை சந்நிதிக்கும் வருகை தந்து, சிறிது நேரம் அங்கே காவேரிக்கு காட்சி தந்தபின் புறப்பட்டுச் செல்வார்.

இத்தலத்திலுள்ள ஸார புஷ்கரணியில் நீராடி, பெருமாள் மற்றும் தாயாரை வழிபட்டபின் காவேரி அன்னையையும் வணங்கினால் எண்ணியது கிட்டும் என்பது ஐதீகம்.

இதேபோல் தாளநல்லூர் வைணவத் திருத்தலத் திலும் கொண்டாடப்படுகிறது. இத்தலம் திருநெல்வேலி- தென்காசி சாலையில், சேரன்மாதேவிக்கு சற்று தொலைவில் உள்ளது. இத்தலத்திலுள்ள கஜேந்திரவரதர் ஆலயம் புராணப் பெருமையும், வரலாற்றுச் சிறப்பும் கொண்டது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் மூலவர்  திருமால் பத்தடி உயரத்தில் “ஆதிமூலப் பெருமாள்’ என்ற திருப்பெயரில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார். பின்னிருகரங்களில் சங்கு- சக்கரம் ஏந்தியிருக்க, முன்வலக்கை வரதஹஸ்தமாக உள்ளது. முன் இடக்கையை தொடையின்மீது வைத்து அருள்புரிகிறார். கோவிலுக்கு அருகில் ஓடும் தாமிரபரணியே இத்தலத்தின் தீர்த்தமாகும். இக்கோவிலில் கஜேந்திர மோட்சம் பற்றி விளக்கும் புடைப்புச்சிற்பமும் காணப்படுகிறது.

இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. ஒரு ஆடி மாதம் சுக்ல துவாதசியில் கஜேந்திரனுக்கு திருமால் அருள்செய்ததாகவும், ஆடிப்பௌர்ணமியன்று கஜேந்திர மோட்சம் அளித்ததாகவும் உள்ள ஐதீகத்தின் பொருட்டு, இந்த ஆலயத்தில் முக்கிய விழா நாட்களாக அமைந்துள்ளன. இத்தலத்தினை “அத்தாள நல்லூர்’ என்றும் அழைப்பர்.

மேலும், தைப்பூசத் திருநாளன்று வைணவத்தலமான ஸ்ரீரங்கம் கோவிலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர், தன் தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் வைபவம் நடைபெறும். தைப்பூசத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெறா விட்டாலும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் தைப்பூசவிழாவின் பத்தாம் நாள், உற்சவர் அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி ஸ்ரீரங்கம் கோவிலின் வடக்குப் பகுதியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு தீர்த்தவாரி காணவருவாள். ஆரம்ப காலத்தில் இந்த சமயபுரம் மாரியம்மன், வைஷ்ணவி என்ற பெயரில் ஸ்ரீரங்கம் கோவிலில் தனிச்சந்நிதியில் அருள்புரிந்துகொண்டிருந்தாள். வைஷ்ணவி யின் பார்வை நாளடைவில் உக்கிரமாகவே, கோவில் நிர்வாகியான ஜீயர் சுவாமிகள் வைஷ்ணவியை வேறிடத்திற்கு மாற்ற திட்டமிட்டார்.

கோவில் பணியாட்கள், அம்மனை ஒரு சிறிய பல்லக்கில் தூக்கிக்கொண்டு ஸ்ரீரங்கத்தின் வடக்குப்பகுதியை நோக்கிவந்தார்கள். களைப்பு மேலிட ஓரிடத்தில் இறக்கிவைத்துவிட்டு, சற்று ஓய்வெடுத்தபின் மீண்டும் தூக்கிக்கொண்டு புறப்பட்டார்கள். (அந்த இடம் இனாம் சமயபுரம் என்று இன்று பெயர்பெற்றுத் திகழ்கிறது.) அதற்குப்பின் வேப்ப மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் கொட்டகை அமைத்து அங்கு இறக்கிவைத்துவிட்டுச் சென்றார்கள். அந்த இடம் கண்ணனூர் என்று அழைக்கப்பட்டது.

வேப்பமரத்தடியிலிருந்த அம்மன் சிலையைக் கண்ட கிராம மக்கள் பயபக்தியுடன் வழிபட்டுப் பேறுபெற்றார்கள். சமயத்தில் உதவிபுரிவதால் “சமயபுரத்தாள்’ என்று போற்றினார்கள்.

இந்த அம்மன் புகழ் பரவியதால் சுற்றுப்புற கிராம மக்கள் ஒரு கோவில் கட்ட திட்ட மிட்டார்கள். அந்தவேளையில் வடக்கிலிருந்து தென்னகம் வந்த விஜயநகர மன்னன் இந்த அம்மனை வழிபட்டு போரில் வெற்றிபெற்றான்.

அதனால் ஒரு கோவிலைக் கட்டி அம்மனை எழுந்தருளச் செய்தான்.

அதன்பிறகு தமிழகத்தை ஆட்சிபுரிந்த மன்னர்கள் இக்கோவிலுக்குத் திருப்பணிகள் செய்திருப்பதாக வரலாறு கூறுகிறது.

தைப்பூச விழாவின் கடைசி நாள் தீர்த்தவாரி காணும் வேளையில், இரவு பத்து மணியளவில் ஸ்ரீரங்கநாதர் கோவிலிலிருந்து யானைமீது பட்டாடை, சந்தனம், மஞ்சள், தாம்பூலம், மலர் மாலை, பழங்கள் ஆகிய மங்கலப் பொருட்களை, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர்சார்பில் சீர்வரிசையாக கோவில் முக்கியஸ்தர் அம்மனுக்கு சமர்ப்பிப்பார். இந்த வைபவம் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று நடைபெறும். அண்ணனிடம் சீர்வரிசைகள் பெற்றபின் அம்மன் அன்றிரவு அங்கு தங்கி, மறுநாள் விடியற்காலை நான்கு மணியளவில் சமயபுரம் கோவிலுக்கு வந்தடைவது வழக்கம்.

இந்த சமயபுரம் மாரியம்மன்- அண்ணன் ஸ்ரீரங்கநாதரிடம் மட்டுமல்ல; திருவானைக் காவில் அருள்புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரரான ஈசனிடமும் சீர்வரிசை பெறுவது வழக்கம். சித்திரை மாதம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவின்போது, ஈசன் அம்மனுக்கு சீர்வரிசை அளிக்கும் வைபவம் நடைபெறும். அண்ணனிடமும் ஈசனிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் சமயபுரத்தாள் என்று பக்தர்கள் போற்றுவர்.

அரியலூருக்கு சிறப்புகள் பல உண்டு. தமிழ்த்தாத்தா என போற்றப்படும் உ.வே. சாமிநாதய்யர் சிறுவயதில் இங்குதான் தமிழ் கற்றார். கிட்டத்தட்ட இந்த மாவட்டம் முழுவதுமே சுண்ணாம்புக்கல் அதிகம் கிடைப்பதால், தமிழக அரசின் அரசு சிமென்ட், டால்மியா சிமென்ட்ஸ், சக்தி சிமென்ட்ஸ் போன்ற பல்வேறு சிமென்ட் நிறுவனங்கள் இம்மாவட்டத்திலுண்டு. கல்மரம், டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டது போன்ற வியப்பிலாழ்த்தும் விஷயங்களும் இவ்வூருக்கு உண்டு. அதேவிதத்தில் அரியலூருக்கு பெருமை சேர்க்கும் ஆன்மிகத் தலமாக விளங்குகிறது கோதண்டராமர் கோவில்.

அரி என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அரி குடிகொண்ட ஊர் எனும் பொருளில் அரி+இல்+ஊர் என்பது அரியலூர் என்றானதாக சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர், அரி என்பதற்கு கடல் என்று பொருள். அரி+ அகலூர்- கடல் உள்வாங்கியதால் உருவான ஊர் அரியலூர் எனக் கூறுகின்றனர்.

இக்கோவில் 1570-களில் பாளையக்கார ஜமீன்தார்களில் ஒருவரான கிருஷ்ண மழவராயர் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்குப்பின் அவரது வாரிசான ஒப்பில்லாத மழவராயர் கோவிலை புனரமைப்பு செய்துள்ளார். இதற்கு ஆதாரமாக கோவில் தூணொன்றில் ஒப்பில்லா மழவராயர் சிலை வடிக்கப் பட்டுள்ளது.

இக்கோவிலுக்கு புராணரீதியான கதையொன்றும் உண்டு. துர்வாசரால் சபிக்கப்பட்டார் அம்பரீஷ முனிவர். பெருமாளின் பத்து அவதாரங்களையும் ஒருசேரக் கண்டாலே அவரது சாபம் நீங்கும். எனவே அம்பரீஷர் தெற்கு நோக்கிப் புறப்பட்டு அரியலூரில் வந்து கடும்தவத்தில் ஈடுபட்டார். முனிவரின் தவத்தை மெச்சிய பகவான் தசாவதாரக் கோலத்தில் காட்சிதந்து சாபவிமோசனமளித்தார்.

கோதண்டராமர் கோவில் தூண்களில், இந்த தசாவதாரக் காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. அவற்றுள் நரசிம்மாவதாரக் கோலத்தை தரிசனம் செய்து வழிபடுவோருக்கு, எதிரிகளை வெல்லும் சக்தியும், செய்யும் செயல்களில் வெற்றியும் சித்திக்கிறது. மனக்குறைகள் நீங்குவதோடு, திருமண வாழ்வும் அமைகிறது.

“”கோதண்டராமரை தரிசித்தால் குறையில்லாத மணவாழ்வு அமையும். முகூர்த்த நாட்களில் இக்கோவிலில் நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கையே அதற்கு சாட்சி” என்கிறார் கோவில் அர்ச்சகரான கிருஷ்ண பட்டாச்சாரியார்.

கோவில் உருவானவிதம் பற்றி பக்தர்களிடம் சுவாரஸ்யமான செவிவழிக் கதையொன்றும் நிலவுகிறது. பல்லவ மன்னன் ஒருவன் தன் அண்டை நாடுகள்மீது போர்தொடுத்து பல வெற்றிகளைக் கண்டான். போர்க்களங்களில் கண்ட வெற்றி அவனை ஆணவக்காரனாகவும், போர்வெறியனாகவும் மாற்றியது. போரில் பல வீரர்கள் மாண்டனர். இதனால் பிள்ளைகளை இழந்தவர்களும், கணவனை இழந்தவர்களும் பெருகினர்.

அவனது அரச சபையிலிருந்த ஆன்றோர்கள் உரிய தருணத்தில் அவனை அணுகி, போரில் உயிரிழந்தவர்களின் உறவினர் சாபம் அரசனை சும்மாவிடாது என எடுத்துரைத்தனர். மன்னனும் உண்மையறிந்து, பிராயச்சித்தம் தேடிக்கொள்ள திருமாலின் பத்து அவதாரங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் இக்கோவிலைக் கட்டியெழுப்பினான் என்கின்றனர்.

பூமிக்கடியில் புதையுண்ட இக்கோவிலை பெருமாள் தூக்கி நிறுத்தினார் என்றும் ஒரு கதையுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக ஆலயக்கருவறை தேர்போன்ற வடிவில் உள்ளது. ஒரே பீடத்திலமைந்த கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சிலைகள் விக்கிரமங்கலம் எனும் ஊரில் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. அவர் பெயராலே ஆலயமும் கோதண்டராமர் கோவில் எனும் பெயரில் விளங்கிவருகிறது.

“”எனது தாத்தா வீராச்சாமி முன்னர் கோவில் மதில்சுவர் எழுப்பிக் கொடுத்தார். கோவிலுக்கு திருப்பணி நடந்து பல காலமாகிவிட்டதால், நாங்கள் ஊர்கூடி திருப்பணி செய்ய முடிவெடுத்திருக்கிறோம்.

தேர் சிதிலமடைந்து போனதால் பல ஆண்டுகளாக தேரோட்டமும் நடைபெறவில்லை. எனவே பெருமாள் பவனிவர புதிய தேர் செய்யவும் ஒரு குழு அமைத்திருக்கிறோம்” என்கிறார் இறையருளாளர் பாலகிருஷ்ணன். இவர் பல்வேறு கோவில்களின் திருப்பணியை முன்னின்று நடத்திய அனுபவம்மிக்கவர்.

“”முயற்சி மட்டும்தான் எங்களுடையது; திருப்பணியை வெற்றிகரமாக நடத்தியருள வேண்டியது அவன்தான்” என கோதண்ட ராமரை கைகாட்டுகிறார் பெரியவர் ரங்கநாதன்.

கோவிலின் இடப்புறம் ஆழ்வார்கள் சந்நிதியும்; தசாவதார மண்டபத்தின் இடப்புறம் கண்ணன் சந்நிதியும் உள்ளன. கோவிலின் வலப்புறம் ஆண்டாள் சந்நிதியும், கோதண்டராமருக்கு எதிரே ஆஞ்சனேயர் சந்நிதியும் அமைந்துள்ளன. மூலவர் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். இவருக்கு இடப்புறம் கோதண்டராமர் சந்நிதியும், அலமேலு மங்கைத் தாயாருக்கு தனிச்சந்நிதியும் உண்டு. அலமேலுமங்கை புஷ்கரணி என்ற பெயரில் தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கப் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்களனைத்தும், இவ்வாலயப் பெருமாளுக்கும் நடத்தப்படுகின்றன.

தன்னிகரில்லா தசாவதாரப் பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசித்துவர, அரியலூர் கோதண்டராமர் கோவிலுக்கு ஒருமுறை போய்வரலாமே!

 

என். சத்தியநாராயணன்

பெரும்பாலும் ஆங்கிலப் புதுவருடப் பிறப்பும், வைகுண்ட ஏகாதசியும் வெவ்வேறு நாட்களில் வரும். ஆனால் 2015-ஆம் ஆண்டில் இவ்விரண்டும் ஒரே நாளில் வருகின்றன.இத்தருணத்தில் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தைப் பற்றிய வியப்புமிகு செய்திகளை பக்தர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.

✶ மைசூர் மாநிலத்தில், குடகு மலைப் பகுதியில் உற்பத்தியாகும் காவிரி ஆறானது மூன்று இடங்களில் இரண்டாகப் பிரிந்து, பின்னர் ஒன்றாகக் கூடி ஓடிவருகிறது. அப் படிப் பிரிந்து கூடுமிடங்களில் அமைந்த தீவுப்பகுதிகளில்  (ஒள்ப்ஹய்க்) உள்ள தலங்கள் மூன்று.

அவை மைசூர் மாநிலத்திலுள்ள ஸ்ரீரங்கப் பட்டினம், ஸ்ரீஷிவண சமுத்திரம் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கத்தில் காவிரியானது காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிந்து ஸ்ரீரங்கத்தைச் சுற்றி ஓடுகிறது. காவிரியில் நீர்மிகும் நேரத்தில், அதிகமுள்ள நீரை தேக்கிக்கொள்வது கொள்ளிடம் ஆறாகும். இந்த இடைப்பட்ட தீவுப்பகுதியில் ஸ்ரீரங்கத்தலம் அமைந்துள்ளது.  ஆறு சூழ்ந்த  தீவுப்பகுதிக்கு அரங்கம்  என்று பெயர். திருமகள் அருளும் கிட்டுவதால் திருவரங்கம் எனப்படுகிறது.

✶  108 வைணவத் திருப்பதிகளில் முதன்மையான இடத்தை ஸ்ரீரங்கம் வகிக்கிறது.

✶ 12 ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரைத் தவிர 11 ஆழ்வார்கள் (ஸ்ரீஆண்டாள் உட்பட) 247 திருப்பாசுரங்களால் திருவரங்கத்தை மங்களா சாசனம் செய்துள்ளனர்.

✶ ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளைப் பிராட்டியாக ஏற்றுக்கொண்ட திருத்தலம்.

✶  கம்பர் தாம் பாடிய இராமாயண காவியத்தை இத்தலத்தில்தான் அரங்கேற்றினார்.

✶   ஸ்ரீராமானுஜர் வைகுந்த பதவியை அடைந்ததும் இத்தலத்தில்தான்.

✶ ஸ்ரீமந் ஆண்டவன் சுவாமிகளின் திருமடம் இங்குள்ளது.

✶ வெளிநாடு சென்று முன்னேறவேண்டுமென்று துடிப்பவர்கள், வேலை தேடுபவர்கள், சொந்தத் தொழில் செய்ய ஆசைப்படுபவர்கள் அனைவருக்கும் யோகத்தையும் சௌபாக்கியத்தையும் தரக்கூடிய தலம் என்பது மிகப் பெரிய சிறப்பு.

✶ எட்டு ஸ்வயம்வியக்த தலங்களில் ஒன்று.

✶ நாதமுனிகளால் வழக்கிற்கு வந்த அரையர் சேவை இன்றைக்கும் நடக்கும் தலம்.

✶ பெரிய நம்பி, பட்டர், வடக்கு திருவீதிப்பிள்ளை, பின்னை லோகச்சாரியார், ஆகியோரின் அவதாரத் தலம்.

✶ மணவாள மாமுனிகள் திருவாய்மொழி காலட்சேபம் செய்த தலம்.

✶ உலகத்தின் எந்த மூலையிலிருந்தும், திருவரங்கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினாலே போதும்; நற்பலன்கள் அனைத்தும் சேரும்.

✶ இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, திருவரங்கனை தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

✶ ஸ்ரீரங்கத்தில் பாயும் காவிரி நதி, பரமபதமான ஸ்ரீவைகுண்டத்திற்கு வெளியே ஓடும் விரஜா நதிக்கு ஒப்பானது.

✶ நவகிரகங்களில் ஒன்றான சுக்கிர தலமாகவும் கருதப்படுகிறது.

✶ பெயர், கோவில், பெருமாள், தாயார், ஊர், தளிகை, வாத்யம் மற்றும் பலகாரங்கள் அனைத்தும் பெரியது என்று ஏற்றிச் சொல்லப்படும் பெருமை இத்தலத்துக்கு மட்டுமே உண்டு.

✶ குலசேகரர் மகள் சேரர் குலவல்லி, தில்லி பாதுஷாவின் புதல்வி துலுக்க நாச்சியார், பெரியாழ்வார் மகள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள், நந்தசோழன் திருப்புதல்வி கமலவல்லி ஆகியோர் ஸ்ரீ ரங்கத்து நாதரை மனதாரக் காதலித்து அவருடன் ஐக்கியமாகிய தலம் ஸ்ரீரங்கமாகும்.

✶ கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டுவரை பல்லவ மன்னர்கள், 10-ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள், கி.பி. 1223-25-ல் கலிங்க அரசர்கள், 1225-ல் மாறவர்மன் சுந்தரபாண்டியன், 14-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்கள், 17-ஆம் நூற்றாண்டு மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர மன்னர் மற்றும் மதுரை நாயக்கர், தஞ்சை நாயக்கர்கள் முதலானோர் இந்தக் கோவிலின் சுவர்கள் மற்றும் கோபுரங்களை கட்டியும் பழுதுபார்த்தும் வந்துள்ளனர்.

✶ திருக்கோவில் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 156 ஏக்கர்.

✶ திருக்கோவில் 3,072 ஷ் 2,520 அடி நீள அகலம் கொண்டு, ஏழு மதில்களையும் ஏழு பிராகாரங்களையும் 21 கோபுரங்களையும் கொண்டது.

✶ உலகத்திலுள்ள திருக்கோவில் இராஜகோபுரங்களிலேயே மிகவும் உயரமானது என்று சொல்லப்படும் தெற்கு இராஜகோபுரமானது, 13 நிலை, 236 அடி உயரம், 12 கலசங்களைக் கொண்டது. இது ஸ்ரீஅஹோபில மடத்தின் 41-ஆவது ஜீயரான ஸ்ரீமந் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகளின் பெருமுயற்சியால் கட்டிமுடிக்கப்பட்டது.

✶ கோவிலின் கருவறை 240 அடி நீளம், 150 அடி அகலம் கெண்டது. மூலவர்- பெரிய பெருமாள், நம்பெருமாள், திருவரங்கநாதர் ஆதிசேடன்மீது புஜங்க சயனத்தில் பெருமிதமாகக் காட்சிதருகிறார். தாயார்- ஸ்ரீஅரங்கநாயகி. தலமரம்- புன்னை; விமானம்- பிரணவக்ருதி (ரங்க விமானம்). தீர்த்தம்- சந்திரபுஷ்கரணி. உற்சவப் பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார்.

✶ திருவரங்கத்தில் இருக்கும் “ரங்க விமானம்’ ஆதியில் தானாகவே உருவானது. இதைச் சுற்றி 24 கிலோமீட்டர் தூரத்துக்குள் எங்கிருந்தாலும் முக்தி நிச்சயம். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு “ஓம்’ என்ற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. இந்த விமானத்திலுள்ள பரவாசுதேவர் கையில் கிண்ணத்துடன் காட்சியளிக்கிறார். அந்தக் கிண்ணம் அவரது வாயை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாகவும், அது வாயருகில் சென்று சேர்ந்தால் உலகம் அழியுமென்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

✶ பங்குனி மாதம், வளர்பிறை சப்தமி திதி, சனிக்கிழமையன்று, சந்திரன் ரோகிணியிலும், குரு ரேவதியிலும் இருக்கும்போது திருவரங் கன் இங்கு வந்துசேர்ந்தார்.

✶ பிரம்மா, மகாவிஷ்ணுவை நோக்கி பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்து பாற்கடலிலிருந்து பெறப்பட்டது ரங்கவிமானம். நான்கு வேதங்களையும் பிரம்மன் இந்த விமானத்தில் ஓதியிருக்கிறார்.

✶ பொதுவாக ஆலயம், அதைச் சுற்றி ரத வீதிகள் என ஒரு நகரம் அமைந்திருக்கும். ஆனால் வீதிகளே பிராகாரங்களாக, நகரைத் தனக்குள் கொண்டிருக்கும் ஆலயம் இது.

✶ இங்கு ஸ்ரீமன் நாராயணனே தன்வந்திரியாக காட்சியளிக்கிறார். சாதாரணமாக எல்லா சந்நிதிகள் மேலும் விமானம் அமைப்பது மரபு. ஆனால் தன்வந்திரி வைத்தியராக இருப்பதால், நோயாளிகள் அவரிடம் வருவார்களென்பதால் ஆகம விதிகளின்படி அவர் சந்நிதிக்குமேல் விமானம் கட்டப்படவில்லை.

✶ இங்குள்ள கருட பகவான் கையில் அமிர்த கலசத்துடன் மிகப்பெரிய உருவத்துடன் கூரையை முட்டியவாறு அமர்ந்துள்ளார்.

✶ பாண்டிய மன்னர்களில் சிறந்தவனான சுந்தரபாண்டியன் காணிக்கையாக அளித்த கிரீடம் பாண்டியன் கொண்டை என்று இன்றும் சிறப்பாக நம் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

✶ ஸ்ரீராமானுஜர் தன் உடலோடு சந்நிதி கொண்டது இங்குதான். இங்கு ராமானுஜர் பத்மாசன கோலத்தில் தரிசனம் தருகிறார்.

✶ இன்றும் அவரது சிகை மற்றும் நகங்கள் தரிசனம் செய்யக் கிடைக்கின்றன. வருடத்துக்கு இருமுறை பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ போன்றவற்றை விழுதாக அரைத்து பற்றாக அவரது உடலில் பூசுகின்றனர்.

✶ ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் ஆகியோர் இங்கு மட்டுமே தொண்டுபுரிந்து வாழ்ந்தவர்கள்.

✶ நாதப்பிரம்மம் தியாகராஜ சுவாமிகள் ஸ்ரீரங்கநாதரை தரிசித்து அவர்மேல் கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

✶ இங்கு உத்திரை வீதியில் இரண்டு பிரம்மோற்சவங்கள், சித்திரை வீதியில் இரு பிரம்மோற்சவங்கள் என வருடத்தில் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

✶ வைகுண்ட ஏகாதசியன்று மூலவர், தசாவதாரம் சித்தரிக்கப்பட்ட முத்தங்கி அணிந்து காட்சிதருகிறார்.

✶ எல்லா பெருமாள் கோவில்களிலும் மூலவருக்கு ஆனி மாத ஜ்யேஷ்டாபிஷேகத்தன்று மட்டுமே தைலக்காப்பு சாற்றப்படும். ஆனால், ஸ்ரீரங்கத்தில் மட்டும் இத்துடன்கூட ஆவணி பவித்ரோற்சவத்தின் இறுதி நாளிலும் தைலக்காப்பு சாற்றப்படும். எனவே ஸ்ரீரங்கநாதருக்கு மட்டுமே இருமுறை தைலக்காப்பு.

✶  இங்கு வருடத்தில் 114 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது!

சென்ற இதழின் தொடர்ச்சி…

 

கீத கோவிந்தம்!
மும்பை ராமகிருஷ்ணன்

ஜயதேவர் ஆற்றில் நீராடிவிட்டுத் திரும்ப வந்து வீட்டின் கதவைத்தட்ட, இடக்கையால் கதவைத் திறந்த மனைவி பத்மாவதியைக் கண்டு திடுக்கிட்டார். “”பத்மா, நான் வீடுவந்து பூஜைசெய்து சாப்பிட்டபின்தானே நீ சாப்பிடுவாய்? இன்று என்னாயிற்று” என்று கேட்டார். அவளது வலக்கையில் உணவுண்டுகொண்டிருந்த அடையாளம்.

பத்மாவதியும் திடுக்கிட்டாள். “”எனக்கும் புரியவில்லையே. நீராடி வருவதாகப் புறப் பட்டுப் போனவர் உடனே திரும்பி வந்தீர்கள். “ஒரு ஞாபகம் வந்தது. மறந்துவிடப் போகிறதென்று வந்தேன். எழுதிவிட்டுப் போகிறேன்’ என்று எழுதினீர்கள். பின் இங்கேயே அனுஷ்டானங்களை முடித்துவிடுவதாகச் சொல்லி, அவ்வாறே நீராடி, பூஜைசெய்து பின் சாப்பிட்டீர்கள். பூஜையறையில் சென்று படுத்துவிட் டீர்கள். நீங்கள் சாப்பிட்ட இலையில்தான் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள்…” என்று இழுத்தாள்.

“”நான் இப்போது தானே வருகிறேன்” என்று சொல்லி பூஜையறைக்குச்  சென்று பார்த்தார். அங்கே யாருமில்லை. சுவடியை எடுத்துப் பார்த்தார். அதில் தனக்குத் தோன்றிய- ஆனால் எழுதாத சொற்களே எழுதப்பட்டிருந்தன. “நான் அபத்தமென்று எண்ணித் தவிர்த் ததை, அந்தக் கண்ணனே வந்து எழுதிவிட்டானே!’ என்று மெய்சிலிர்த்தார்.

“ஸ்மரகரள கண்டனம் மம சிரசி மண்டனம்
தேஹிபத பல்லபம் உதாரம்
ஜ்வலதி மயிதாருணோ மதன கதனானலோ
ஹரது ததுபாஹித விசாரம்- ப்ரியே சாருசீலே.’
என்பது அந்த பாடல். 19-ஆவது அஷ்டபதி.

(ராதையின் பாதங்களைத் தன் தலைமீது வைக்கச் சொல்கிறான் கண்ணன். இதே குறிப்பை அருணகிரிநாதர், “பணியா என வள்ளிபதம் பணியும் தணியா அதிமோக தயாபரா’, “குறமின் பத சேகரனே’ என்று கந்தரனுபூதியிலும்; “மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா’ என்று திருப்புகழிலும் முருகனைப் பாடுகிறார்.)

ஜயதேவர் பத்மாவதியிடம், “”என் உருவில் கண்ணனே வந்தான். நீ அவனை தரிசித்தாய்; உணவளித்தாய். பாக்கியவதி நீ” என்று பாராட்டி, கண்ணன் உண்ட உச்சிஷ்டம் என்று, பத்மாவதி உண்ட எச்சில் உணவை அவர் உண்டார். எட்டாவது அடியை “பத்மாவதி ரமண ஜயதேவ’ என்றெழுதி உன்னதம் ஈந்தார்.

19-ஆவது அஷ்டபதிக்கு உஜ்ஜீவன அஷ்டபதி- சஞ்சீவி அஷ்டபதி (இறந்தவரை உயிர்ப்பிக்கும் அஷ்டபதி) என்று பெயர். அதன் மகிமையை சற்று காண்போம்.

ஒருசமயம் அந்நாட்டு அரசியிடம் உரையாடிக்கொண்டிருந்தாள் பத்மாவதி.

அப்போது அங்குவந்த சேடிப்பெண், ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்றும், அதன் காரணமாக அவர் மனைவி உடன்கட்டை ஏறப்போகிறாள் என்றும் வருத்தத்துடன் கூறினாள். அதைக்கேட்ட பத்மாவதி, “”அவள் தூய கற்புடையவளென்றால், கணவர் இறந்த செய்தியைக் கேட்டதுமே அவள் உயிர் போயிருக்க வேண்டுமே” என்றாள். இந்தப் பேச்சு ராணியை உறுத்தியது. பத்மாவதியின் கற்பை சோதிக்க திட்டமிட்டாள் அவள்.

ஒருசமயம் அரசர் வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது ஜயதேவரையும் அழைத்துச் சென்றார். அந்த சமயத்தை தன் சூழ்ச்சிக்கு ராணி பயன்படுத்தினாள். வழக்கம்போல பத்மாவதி ராணியுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, ராணியின் ஏற்பாட்டின்படி சேடி “ஐயோ’ என்ற அலறலுடன் அங்கு ஓடிவந்தாள். “”அரசருடன் காட்டுக்குச் சென்ற ஜயதேவரை புலி தாக்கி அவர் இறந்துவிட்டார்” என்று ரத்தம் தோய்ந்த ஆடைகளைக் காட்டினாள். “”நாதா! நானும் வந்துவிட்டேன்!” என்று அப்படியே சரிந்தாள் பத்மாவதி. அவள் உயிர் பிர