murugan Mahabharatham | மகாபாரதம்

 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றபடி, இயற்கையோடு இயைந்த வழிபாடாக- மக்களின் மகிழ்ச்சி விழாவாகக் கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். கண்கண்ட தெய்வமான சூரியனை வழிபடுவது இதன் சிறப்பம்சமாகும்.

உத்ராயன காலமான தை மாத அமாவாசைக்குப்பின் வரும் ஏழாம் நாளான சப்தமி திதியை, ரதசப்தமி என்று போற்றுவர். இந்நாளில்தான் சூரியன் அவதரித்தார் என்கிறது புராணம்.

ஸ்வேத வராக கல்பகாலத் தொடக்கத்தில், விராட் புருஷனுடைய கண்களிலிருந்து சவித்துரு (சூரியன்) அவதரித்தார் என்கிறது வைவஸ்சதமன் என்னும் மந்திரநூல். உலகம் தோன்றியதும் “ஓம்’ என்ற ஒலி எழுந்தது. அதிலிருந்து சூரியன் தோன்றினார் என்கிறது சூரியபுராணம்.

பிரபவ ஆண்டு, மகா சுக்ல சப்தமி, விசாக நட்சத்திரத்தில் கச்யபரின் பத்தினி அதிதியிடம் தோன்றிய பிண்டத்திலிருந்து பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். அவர்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு, சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களுடன் உலாவருகிறார் என்கிறது சாம்பபுராணம்.

முதலில் இருளான அண்டம் தோன்றியது.

அதன் மத்தியிலிருந்து, பிரம்மன் அதைப் பிளந்தார். அப்போது “ஓம்’ என்ற ஒலி உண்டாயிற்று. அதிலிருந்து பூ: புவ: சுவ: எனும் வியாவிருதி திரயம் உண்டாயிற்று. பின்பு, ஓங்காரத்தால் சூட்சும உரு உண்டாயிற்று. அதுவே சூரியன் என்கிறது பிரம்மபுராணம். சிவபெருமானின் வலக்கண் சூரியன் என்றும், இடக்கண் சந்திரன் என்று கூறுகிறது சிவபுராணம்.

மகாவிஷ்ணுவே சூரிய நாராயணராக சித்தரிக்கப்படுகிறார் என்கிறது ரிக்வேதம்.

“நானே சூரியனாகத் திகழ்கிறேன்’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார். ஆரோகன், பிராஜன், படான், பதங்கன், ஸ்வர்னரன், ஜோதிஷிமான், லிபாசன், காஸ்யபன் என்று எட்டு சூரியன்கள் உண்டு என்றும்; இதில் எட்டாவதான காஸ்யபனைச் சார்ந்தே இதர சூரியன்கள் அமைந்துள்ளன என்று விவரிக்கிறது முண்டக உபநிடதம்.

அறிவியல் கூற்றின்படி, பல்லாயிரங்கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பிரபஞ்சத்தில் மேகம் போன்ற தோற்றத்துடன் வேகமாகச் சுழலும் ஓர் தீப்பிழம்பு இருந்தது. காலப்போக்கில், அதிலிருந்து சில துண்டுகள் சிதறின. அவ்வாறு சிதறிய துண்டுகள் நாளடைவில் குளிர்ந்து திண்மையான கோள்களாயின. இந்தப் பிழம்பின் மையப் பகுதியே சூரியனாகும்.

பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் சூரியன். பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் சூரியன் உள்ளதாம். நம் பூமியைப்போல் 12,000 மடங்கு மேற்பரப்பும், 13,00,000 மடங்கு கன அளவும் உடையது என்கிறது அறிவியல்.

சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைந்தாலும், அதன் கோணமானது ஆறு மாதங்களுக்கு சற்று வடக்குநோக்கி நகர்ந்தும், ஆறு மாதங்களுக்கு சற்று தெற்குநோக்கி நகர்ந்தும் இருக்கும். இவ்வாறு தெற்கு- வடக்காக சூரியன் நகர்வதைக் குறிப்பதே தட்சிணாயனம், உத்தராயனம்.

அயனம் என்றால் பயணம். தை மாதம் தொடங்கி ஆனி மாத வரையிலான ஆறு மாத காலம் உத்தராயனம். ஆடி தொடங்கி மார்கழி வரையிலான ஆறு மாதம் தட்சிணாயனம். உத்தராயன புண்ணிய காலத்தின் முதல் மாதம் தை. சனீஸ்வரன் வீடான மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இதில் தை அமாவாசையிலிருந்து வளர்பிறை ஏழாம் நாள் சூரிய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத் தில்தான் சூரிய பகவான் தனது ரதத்தை வடக்கு நோக்கித் திருப்பி பயணிக்கிறார்.

சூரிய பகவான், தன் ஏழு குதிரைகளைக் கொண்ட ஜாதவேத பூஷணத் தேரினை சிவபெருமானிடமிருந்து பரிசாகப் பெற்றார்.

இந்த ரதத்தை ஓட்டி வருபவர்தான் கருட பகவானுடைய சகோதரர் அருணன். இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. உடலின் மேல் அங்கங்களுடன் மட்டும், வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஹ்ருக், அனுஷ்டுப், பங்கி எனும் ஏழு வகையான சந்தங்களே குதிரைகளாக சித்தரிக்கப்பட்டு, அவை சூரியனின் பொன்னிறத் தேரினை இழுக்கின்றன. இந்த ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள்.

பொதுவாக, தேரென்றால் இரண்டு சக்கரங்கள் அல்லது நான்கு சக்கரங்கள் இருக்கும். ஆனால் சூரியனின் தேருக்கு ஒரே ஒரு சக்கரம்தான் உண்டு.

இந்த ரதத்தை ஓட்டும் அருணனுடைய ஒளிதான் காலையில் முதலில் வெளிப்படும். இதைத்தான் அருணோதயம் என்கிறோம். அதற்கும்முன் தோன்றுவது அதிகாலை நேரத்திற்குரிய பெண் தேவதை உஷஸ் என்று ரிக்வேதம் கூறுகிறது.

அதனால்தான் அதிகாலை நேரத்தை உஷத் காலம் என்று வேதம் கூறுகிறது. இந்த நேரத்தில் உஷஸின் சிறப்பான கிரணங்கள் பூமியின்மீது பாய்வதால் நீர் நிலைகள் வெதுவெதுப்பாக இருக்கும். மேலும் கண்களுக்குத் தெரியாத கிருமிகளும் அழிந்துவிடும். எனவே, உஷத் காலத்தில் நீராடினால் உடல்நலம் சீராகும். புத்துணர்ச்சி ஏற்படும்.

அதிகாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணிவரையிலான உஷத் காலத்தில் மேற்கொள்ளப்படும் நீராடல், தியானம், வழிபாடுகள், பாடங்கள் படித்தல் ஆகியவை நல்ல பலன்களைத் தரும்.

அருணோதயத்திற்குப்பின் சூரியன் உதயமாகும்போது, அதிலிருந்து சக்தி வாய்ந்த ஏழு வண்ணங்கள் வெளிப்படுகின்றன. இந்த ஏழு வண்ணங்களும் உலகில் வாழும் ஜீவன்களுக்கும் தாவரங் களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்ச்சியையும் தருகின்றன. மேலும், பூலோகத்திற்கு உரித்தான ச, ரி, க, ம, ப, த, நி என்ற தெய்வீக ஸ்வர சப்தங்களையும் குறிக்கின்றன. இந்த ஏழு சப்தங்கள் மட்டும் விண்வெளியில் பரவியிராவிட்டால் இவ்வுலகில் மொழிகளே ஏற்பட்டிருக்காது. உஷத்கால தேவதையின் அருளால் சூரிய சக்தி மேன்மேலும் வலிமை பெறுகிறது.

சூரியனின் ஆதாரசக்திக்கு தீப்தா கௌரி என்று பெயர். தீப்தா கௌரியின் பெருமைகளை புராணங்கள் பலவாறு போற்றுகின்றன.

இந்த தீப்தா கௌரிதான் சூரியனுக்கு வெம்மையையும், ஒளியையும், வண்ணங் களையும் தருகிறாள். சூரியனின் அந்தராத்மாவில் பிரகாசிப்பவள் இவளே. இவளை சவிதா என்றும் போற்றுவர். இவள் ஆயிரம் முகங்கள் கொண்டவள். இவளது விழிகளின் கருணை வெள்ளமே சூரியனின் கிரணங்களாக வெளிப்பட்டு, மற்ற கிரகங்களை பிரகாசிக்கச் செய்வதுடன் பூமியையும் வாழவைக்கிறது என்றும் புராணம் கூறுகிறது.

சிவபெருமான் அருளாலும், மகாவிஷ்ணுவின் அருள்பார்வையாலும், உஷத்தேவதை, தீப்தா கௌரி ஆகியோரின் சக்தியாலும் மேன்மேலும் ஒளிபெற்று பூவுலகத்தை வாழவைக்கிறது சூரியன். நம் உடலிலுள்ள ஏழு சக்கரங்களையும் சக்தியுடன் இயங்க உதவுகின்றது.

மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப் பூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகிய ஏழு சக்கரங்களும் நல்ல வலுவுடன் மேன்மேலும் இயங்க எருக்கன் இலைகள் உதவுவதால், சூரிய ஜெயந்தி என்று போற்றப்படும் ரதசப்தமி நாளில் ஏழு எருக்கன் இலைகளுடன் சிறிது அட்சதையையும், விபூதியையும் தலையில் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நீராடவேண்டும் என்பது விதியாகும். அப்பொழுது சூரியனை நோக்கி அர்க்கிய வழிபாட்டினை மேற் கொள்ளவேண்டும். பெண்கள் மஞ்சளையும் சேர்த்து நீராடவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

உலோகக் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து செல்வதுபோல, சூரியனின் ஏழு வகை கிரணங்களும் எருக்கன் இலையின் மூலமாக இழுக்கப்பட்டு, விரைவில் ஊடுருவிச் சென்று நம் உடலிலுள்ள சக்கரங்களுக்கு வலிமை கொடுக்கிறது. உடலில் நோய் இருந்தாலும் விரைவில் குணமாகும். எனவேதான் நம் முன்னோர்கள் ரதசப்தமி நாளில் இந்த வழிபாட்டினை மேற்கொண்டார்கள். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் அனைத்து சுபகாரியங்களும் வெற்றியைத் தரும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

ரதசப்தமி நாளில் சூரியனை வழிபடும்போது கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபிப்பது நல்லது.

சூரிய காயத்திரி மந்திரம்

“ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹோத்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்.’

“பாஸ்கரனை (சூரியனை) அறிவோமாக- ஒளியைத் தருபவனாகிய அவன்மீது தியானம் செய்கிறோம். ஆதித்தனாகிய அவன், நம்மைக் காத்து அருள்புரிவானாக’ என்பது இதன்பொருள்.

ரதசப்தமிக்கு அடுத்த நாளான அஷ்டமி அன்றுதான் கங்கையின் மைந்தன் என்று போற்றப்படும் பீஷ்மர் முக்தியடைந்தார். அதனால் இந்நாளினை “பீஷ்மாஷ்டமி’ என்று போற்றுவர். பீஷ்மருக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால், அன்று அவருக்காக புனித நீர்நிலையில் தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களையும் வழிபட்ட பலன் கிட்டும்.