அம்மன் /ammen

. 


கிடைப்பதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்றவர் யாவரும் சதாசிவனைப் பூஜிப்பதாலேயே பிறவிப் பயனை அடைவர் என்று ஐந்தாவது வேதமாகிய மகாபாரதம் கூறுகிறது.

“துர்லபம் ப்ராப்ய மானுஷ்யம் யே
அர்ச்சயந்தி ஸதாசிவம்
தேஷாம் ஹி ஜன்ம சாபல்யம்
க்ருதக்ருத்யா நராஸ்து தே.’

“பிறவாமைவேண்டும் மீண்டும் பிறப் புண்டேல் உனை என்றும் மறவாமை வேண்டும்’ என தமிழ்மூதாட்டி ஔவையும் வேண்டுவார்.

உலகில் மனிதன் பிறக்கும்பொழுதே மூவகைக் கடமைகளை- கடன்களை உடையவனாகவே பிறக்கிறான். அவை தேவகடன், ரிஷிக்கடன், பித்ருக்கடன் என்பவை. இவற்றில் ஒன்றையும் விட்டுவைக்காது, தனது வாழ்நாளில் செய்து முடித்துவிடவேண்டும். அதேசமயம் எல்லாரும் யாகமும் நித்யபூஜையும் செய்துவிடமுடியாது. எனவே இவற்றைச் செய்யமுடியாதவர்களுக்கு பொதுவாக தேவகடன் தீரவும், தெய்வங்களை மகிழ்வித்திடவும் ஒரு வாய்ப்பாக சாந்தி ஹோமங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றைச் செய்வதனால் கடமை தவறியதால் ஏற்படும் குற்றம் நம்மைப் பற்றாதிருப்பதுடன், நற்பயனும் ஏற்படுகிறது.

மேலும் அறம் வளர்த்திடவும், மகனைப் பெற்றிடவும் என இரு காரணங்களுக்காகவே மனிதன் திருமணம் செய்துகொள்வது அவசியமாகிறது; போகத்திற்கு மட்டுமல்ல. மகனைப் பெறுவதனால் ஒரு மனிதன் வாழ்வில் நிறைவு பெறுகிறான் என்கிறது வேதம். ஒருவன் புலன் வழியே மட்டும் வாழாது, நன்னெறியில் வாழ்வதே முறையாகும்.

உலகில் பெண்களே அறம் வளர்க்கும்- படைக்கும் சக்திகள். எனவேதான் மனைவி மட்டும் தர்மபத்தினி எனப்படுகிறாள். புனித சமஸ்காரம் செய்துகொண்ட ஒருவர், அந்த சமஸ்காரம் செய்துகொள்ளாத பெண்ணோடு வாழுதல் முறையாகாது என்பதாலேயே, பெண்களுக்கும் அவர்களுக்கு பதியாகிய ஆடவர்க்கும் சடங்கு செய்யப்படுகிறது. ஒரு சமயத்தின் வழியாக, குருவருளால் இறைவனின் திருவருளைப் பெற்றிடவும், ஆன்மா நித்யகர்மானுஷ்டானத்திற்கான தகுதியை இழக்காமல் பாதுகாத்திடவும், அறநெறியில் வாழ்ந்திடவும், புனிதமும் புண்ணியமும் பெற்றிடவும் செய்யப்படும் உடலுக்கான கிரியைகளே சடங்குகள். ஆனால் குறிப்பிட்ட ஒரு பயனைப் பெறும் நோக்கிலும், குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தின் காரணமாகவும், தாம் விரும்பாதபோதிலும் செய்துகொள்ள வேண்டியவை உக்ரரத, பீமரத, விஜயரத சாந்திகள். பூஜை அல்லது பரிகாரம் என்பவை ஹோமமின்றியும் செய்யபடலாம். ஆனால் விசேஷ சாந்திகள் ஜெபம், ஹோமம், தானம் இவற்றுடன் மட்டுமே செய்யத்தக்கவை என்பதை அறிந்திடவேண்டும்.

சாந்தி வகை

பெண்களுக்கு முதலாவது பூப்பு (ரஜஸ்) ஏற்படும்போது, அத்தருணத்தின் திதி, வாரம், நட்சத்திரம் முதலானவற்றால் தோஷங்கள் ஏற்பட்டு, அவர்களுக்கு பலவகையில் தீமைகள் விளையலாம். அவை ஏற்படாதவாறு தடுப்பதற்குச் செய்யப்படும் முதற்சாந்தி ருதுசாந்தி ஹோமமாகும்.

பெண்களுக்கு திருமணம், கர்பாதானம், பும்ஸவனம், சீமந்தம் போன்ற சமயங்களிலும், வால்நட்சத்திரம் முதலான தீய சகுனம் ஏற்படும் காலங்களிலும்; பூத- ப்ரேத- பைசாசங்களால் தொல்லை ஏற்படும்பொழுதும்; மனிதர்களாலும் மிருகங்களாலும் இடையூறு உண்டானபொழுதும், அனைத்து தோஷப் பரிகாரமாக, ஒரு கலசநீரில் உரிய வேதமந்திரங்களால் மந்திரித்து, மந்திரித்த மூன்று மணிநேரத்திற்குள் நீராட்டி, மாலையில் செய்யப்படுவது உதகசாந்தி எனப்படும்.

குழந்தை பிறக்கையில் அதன் தொப்புள்கொடி அதன் கழுத்தில் மூன்று சுற்றாக சுற்றிக்கொண்டு பிறந்தால், அக்குழந்தையை கெடுதலிலிருந்து காத்திடவும்; பலவாறாக அமைந்த நாபிக்கொடியுடன் பிறந்தால் தாய்மாமன் முதலானோருக்கு ஏற்படும் தீமையிலிருந்து பாதுகாப்பதற்காகவும் குழந்தையின் தகப்பனால் செய்யப்படுவது நாளவேஷ்டன சாந்தி எனப்படும்.

குழந்தையானது ரோகிணி, கேட்டை, மூலம் உள்ளிட்ட சில நட்சத்திரங்களின் குறிப்பிட்ட பகுதியில் பிறந்தால், அதனால் குழந்தையின் தாய்மாமன் முதலான உறவினர்களுக்கு ஏற்படக்கூடிய தீமையிலிருந்து காத்திடவும்; உறவையும் சிசுவையும் பராமரித்திடவும், 11-ஆம் நாளிலோ, ஆறு மாதத்திற்குள்ளோ செய்யப்படுவன நட்சத்திர சாந்திகள் ஆகும்.

ஒரு குழந்தையானது, தாய் அல்லது தந்தை மற்றும் உடன்பிறந்தவர்கள் ஆகியோருடைய நட்சத்திரத்தில் பிறந்தால், அதே நட்சத்திரமுடைய உறவினர்களுக்கு ஊறுவிளையலாம்.

அவ்வாறு ஏற்படாமல் இருக்க செய்யப் படுவது ஏக நட்சத்திர சாந்தியாகும்.

ஒரு குழந்தை, தேய்பிறை, சதுர்த்தசி திதியில் பிறந்தால் பலருக்கு பலவகையில் தீமையை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க செய்யப்படுவது கிருஷ்ண சதுர்த்தசி ஜனன சாந்தியாகும்.

ஒரு குழந்தை, அமாவாசையன்று முன்பாதியில் பிறந்தால் தகப்பனாருக்கும், பின்பாதியில் பிறந்தால் தாயாருக்கும் கெடுதி நேரலாம். உடன்பிறந்தவர்களுக்கும் கெடுதி ஏற்படலாம். எனவே அவ்வாறு வராமலிருக்க செய்யப்படுவது அமாவாஸ்ய ஜனனசாந்தியாகும்.

தினக்ஷயம், வியதீபாதம், வியாகாதம், வைதிருதி, சூலம், கண்டம் போன்ற கெட்ட காலத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அக்குழந்தையின் உறவினர்களுக்கு தீமை நேராமலிருக்க செய்யப்படுவது தினக்ஷயாதி ஜனனசாந்தியாகும்.

ஒருவர் வாழ்நாளில் பாம்பை அடித்தா லும் பிரித்தாலும் கொன்றாலும் பல ஜென்ம காலங்களுக்கான பெரும் தோஷம் ஏற்பட்டு, அந்த வம்சம் அழிந்துபோகின்றது என்று சிவாகமங்கள் விளக்குகின்றன. முன்ஜென்ம ஜென்மாந்திரத்தில் பாம்பைக் கொன்றிருந் தாலும் அத்தகையவருக்கு குழந்தை பிறப்பதில் தடை உண்டாகும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். எனவே குழந்தை பிறப்பதற்காகச் செய்யப்படுவது சர்ப்ப சாந்தி எனப்படும்.

ஒரு குழந்தை இறந்து பிறந்தாலோ, பிறந்தவுடன் இறந்தாலோ, ஒரு வருஷத்திற்குள் இறந்தாலோ, ஐந்து ஆண்டுகள் வளர்ந்து இறந்தாலோ, அக்குழந்தையின் தாயைத் தூற்றுவார்கள். எனவே அத்தகைய தோஷம் நீங்குவதற்காக செய்யப்படும் சாந்தி ஹோமம் சிம்சுமாரக சாந்தி எனப்படும்.

குழந்தை பிறந்து ஓராண்டு நிறைவுபெற்றதும், குழந்தை தீர்க்காயுள் பெறும் பொருட்டாகச் செய்யப்படுவது அப்த பூர்த்தி சாந்தி எனப்படும்.

ஒருவர் ஐம்பத்தொன்பது ஆண்டு வளர்ந்து, அறுபதாவது ஆண்டு பிறக்கும் போது செய்யப்படுவது உக்ரரத சாந்தி.

அறுபது ஆண்டு நிறைவடைந்து, அறுபத்து ஒன்றாவது ஆண்டு பிறக்கும் நாளன்று செய்யப்படுவது ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி எனப்படும். இச்சாந்தியின் முடிவில், தம்பதியர் சாந்தி கலசாபிஷேகத் திற்குப் பின்பு மாங்கல்யதாரணம் (தாலி அணிவிப்பு) செய்துகொள்வர்.

ஒருவருக்கு அறுபத்து ஒன்பது ஆண்டுகள் முடிந்து எழுபதாவது ஆண்டு தொடங்கும்பொழுது ஒரு ஆபத்து ஏற்படலாம். அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, பிள்ளையின் மகனான பேரனது பிள்ளையை (ப்ரபௌத்ரனை) காண்பதற்காகவும், ஆயிரம் பூர்ணசந்திரனைக் கண்டுமுடிப்பதற்காகவும், நூற்றாண்டு காலம் வாழவேண்டும் என்பதற் காகவும் செய்யப்படும் சாந்திஹோமம் பீமரத சாந்தியாகும். இதில் மாங்கல்யதாரணம் விதிக்கப்படவில்லை. உக்ரர், பீமர் இவர்கள் ருத்ரமூர்த்திகள் ஆவர்.

எழுபத்தி எட்டாவது வயது தொடங்கும் பொழுது செய்யப்படுவது விஜயரதசாந்தி எனப்படும். இதனை செய்துகொள்வதால், ஒரு தசாப்தம் எனப்படுகிற ஒன்பது கிரகங்க ளின் முழுமையான காலதசையாகிய நூற்றிருபது ஆண்டுகள் நன்கு வாழ்வர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எழுபத்து எட்டாவது வயதில் செய்யப் பட்ட விஜயரத சாந்திக்குப் பிறகு- அதாவது எண்பது ஆண்டுகளைக் கடந்து மேலும் எட்டு மாதங்கள் முடியும் காலகட்டத்தில் செய்யக்கூடியது ஸஹஸ்ர சந்திர தரிசன சாந்தியாகும். இங்கு சிலர் பிறைச்சந்திரனைக் காண்பதாகக் கூறுகின்றனர். முழுநிலவு தினமான மாதப்பௌர்ணமியே கண்டு தியானித்து வழிபடத்தக்கது. எனவே முழுநிலவைக் காண்பதாக கணக்கிடுவதே சிறந்ததாகும். சிலர் அன்றே சதாபிஷேகம் செய்துகொள்கின்றனர்.

80 வயதுமுதல் 100 வயது வரையுள்ள காலகட்டத்தில், அத்தம்பதியை சிவன்- பார்வதியாகவே கண்டு, அவர்கள் தீட்சை பெறாதிருந்தாலும்கூட அதனை செய்து முடித்து, சிவசக்தி ஸ்வரூபமாகக் கருதி கலசநீரால் முழுக்காட்டி ஆசிபெறுவதே சதாபிஷேகம் எனப்படும். இது மற்றதைப்போல் சாந்திவகை ஆகாது. சதாபிஷேகம் என்பது தம்பதிக்கு சிவனாரின் தகுதியை அங்கீகரித்து, சிவத்துவ சம்பாதக பட்டாபிஷேகமாக செய்யப்படுவதாகும்.

இத்தகைய வழிமுறைகளெல்லாம், மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து பிறவிப் பயனை அடைவதற்காகவே வகுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறியவேண்டும்.

(தொடரும்)


திருஞானசம்பந்தரை முருக அவதாரம் என்று அருணகிரியார் பல பாடல்களில் பாடியுள்ளார். ஆதிசங்கரர் சிவ அவதாரம் என்று துதிகளே உண்டு. ஆதிசேஷ, லட்சுமண அவதாரம் ஸ்ரீராமானுஜர்.

இப்படியே பட்டியல் நீளும். அந்தவகையில் காஞ்சி காமாட்சியின் அவதாரம் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் என்பர்.

ஆதிசங்கரர் காமாட்சி தேவியை ஆராதிப்பதற்கு நர்மதை நதி தீரத்திலிருந்து 30 குருமார்களை நியமித்தாராம். அவர்களுக்கு காமகோடி என்று பெயர். பத்து பேர் பௌரகுத்ஸ, பத்து பேர் கௌசிக, பத்து பேர் கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 15 பேர் அஷ்ட சாஸ்திர வகுப்பு; 15 பேர் வாம வகுப்பு. ஆனால் இப்போது பௌரகுத்ஸ, கௌண்டின்ய கோத்திரத்தவர்களே உள்ளார்களாம். அவர்களுள் காமகோடி சாஸ்திரிகள் என்ற ஆழ்ந்த ஸ்ரீவித்யா உபாசகரும் ஒருவர். வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், இதிகாசம், காந்தர்வ வேதம் எனப்படும் சங்கீதம் என பலவற்றிலும் தேர்ச்சியுற்றவர்.

அவரது பேத்தியான மரகதம் என்பவர் காமகோடி சாஸ்திரிகள் வம்சத்தைச் சார்ந்த வரதராஜன் என்பவரை மணந்தார். இத்தம்பதிக்கு நீண்ட நாட்களாக பிள்ளைப்பேறு கிட்டாததால் ராமேஸ்வரம் சென்று வழிபட்டனர்.

சஷ்டி விரதமும் அனுஷ்டித்தனர். அந்தசமயம் காமகோடி சாஸ்திரிகள் கனவில் தோன்றிய காமாட்சி, “என்னைப் பூஜித்து, வெண்ணெய் நிவேதனம் செய்து மரகதத்துக்குத் தரவும்; சத்புத்திரன் பிறப்பான்’ என்று அருளினாள். அவ்வாறே செய்ய, மரகதம் கருவுற்றார். 1870-ஆம் ஆண்டு, தை மாத ஹஸ்த நட்சத்திரத்தில், தேய்பிறை சஷ்டி திதியில், சனிக்கிழமையன்று குழந்தை பிறந்தது. அவர்களின் குலதெய்வம் ஸ்ரீநிவாசன் என்பதாலும், குழந்தை பிறந்தது சனிக்கிழமை என்பதாலும் சேஷாத்ரி என்று ஜாதக முறையில் பெயர் வைத்தனர்.

(சேஷாத்ரி பிறந்த வீடு இன்றும் காஞ்சி வரதராசர் கோவில் மாடத்தினருகிலேயே விளங்குகிறது. ஜயந்தி, ஆராதனை விழாக்கள் காஞ்சி மகாபெரியவர் ஆக்ஞையால் கொண்டாடப்படுகின் றன. ஞானமனம் ஈயும் புனித இடம் அது.)

சேஷாத்ரி தெய்வீகக் குழந்தை என்பதற்கு உதாரணமாக நான்கு வயதிலே ஒரு சம்பவம் நடந்தது. மரகதம் அம்மையார் குழந்தையுடன் தினமும் காமாட்சி, ஏகாம்பரநாதர், வரதராஜ சுவாமி கோவில்களுக்குச் சென்று வணங்கி வருவார்.

வரதராஜர் கோவிலில் பிரம்மோற்சவ சமயம். பெரியதாக பந்தல் போடப்பட்டு, பல கடைகளும் இருந்தன. ஒரு கடையில் வெண்ணெய் ஏந்திய பாலகிருஷ்ண விக்ரகம் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த குழந்தை, “அம்மா எனக்கு அது வேணும்’ என்றது. தாயாரோ “வேண்டாம் வா’ என்று இழுத்தார். கடைக்காரருக்கு குழந்தையைப் பார்த்ததில் என்ன தோன்றியதோ, பணம் வாங்காமலே அந்த சிலையை எடுத்து குழந்தையிடம் கொடுத்துவிட்டார். மறுநாளும் மரகதம் குழந்தையுடன் வந்தார். கடைக்காரர் குழந்தையை வணங்கி அதன் கைக்கு முத்தம் கொடுத்து, “இது தங்கக் கை. பதினோரு நாள் உற்சவத்தில் நூறு சிலைகளே விற்கும். ஆனால் நேற்றே நான் கொணர்ந்த ஆயிரம் சிலைகளும் விற்றுவிட்டன. கண்ணனே வாங்கிக்கொண்டான் போலும்’ என்று நெகிழ்ந்தார். (அந்த விக்ரகம் இன்றும் அவரது சந்ததிகளிடம் உள்ளது.)

சேஷாத்ரிக்கு ஐந்து வயது முதல் தந்தையே கல்வி கற்பித்தார். ஏழு வயதில் பூணூலும் போட்டு வேத அத்யயனமும் செய்யப்பட்டது. அதற்கடுத்து சில காலத்தில் தந்தை இறந்துவிட்டார்.

ராமாயணம், பாகவதம் போன்றவற்றைக் கற்ற சேஷாத்ரி, சிறப்பாக சொற்பொழிவாற்றும் வல்லமையை சிறுவயதிலேயே பெற்றுவிட்டார். அவரது திறமை கண்டு பலரும் வியந்தனர். சேஷாத்ரிக்கு பக்தி, ஞான வைராக்கியம் வளர்ந்ததே தவிர ஆசை, பணம், அந்தஸ்து, இல்லற வாழ்க்கை என எதிலும் ஈடுபாடு இல்லை. சேஷாத்ரிக்கு 17 வயது நடந்துகொண்டிருந்தது. திருமணம் செய்துவைத்தால் மனம் மாறும் என பெண் பார்த்தனர். ஜாதகத்தைப் பார்த்தவர்கள், “சந்நியாச யோகம்தான்; மணவாழ்க்கை இல்லை’ என்றனர். இதனால் மரகதத்தின் மனம் ஒடிந்தது. தான் பூவுலக வாழ்வை நீங்கும் தருணம் நெருங்கியதை அறிந்த அம்மையார் சேஷாத்ரியை அழைத்து,

“ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன்முக்தம்’

என்ற ஆதிசங்கரரின் பஜகோவிந்த துதியைச் சொல்லி, பின்

“தர்ஸனாத் அப்தஸரஸி
ஜனனாத் கமலாலயே காஸ்யாம் து
மரணாத் முக்தி:
ஸ்மரணாத் அருணாசல’
என்று சொன்னார்.

அருணாசல நாம நினைப்பு முக்தி அளிக்கும் என்று கூறி, “அருணாசல’ என்னும் இறுதி வார்த்தையுடன் உயிர்நீத்தார். தாயாருக்கு இறுதிக் காரியங்களை செய்துமுடித்தார் சேஷாத்ரி. “அருணாசல’ என்ற நாமம் ரமணமகரிஷி போன்ற பல மஹனீயர்களை  ஈர்த்ததுபோல, அந்த நாமம்- அன்னையின் அந்திம நாமம் சேஷாத்ரியையும் ஈர்த்தது.

அப்பனும் அன்னையும் இல்லாத தால் விவேக வைராக்கியம் அதிக மானது. வீட்டில் ஜெபம் செய்வது வசதிப்படாததால் ருத்ரபூமியில் (சுடுகாட்டில்) ஜெபதபம் செய்யத் தொடங்கினார். “அது கூடாது’ என்றால், “அங்கு தவம் செய்ய 1,000 மடங்கு அதிக பலன்’ என்று சொன்னார்.

ஒருசமயம் தகப்பனாருக்கு திவசம் வந்தது. சுடுகாடு ஜெபத்திற்கு போகக் கூடாதென்று, வீட்டின் ஓர் அறையில் சேஷாத்ரியை பூட்டிவைத்தனர். தம்பி நரசிம்மன் தான் திவசம் செய்தான். யாதும் முடிந்து அட்சதை பெற்று அன்னம் உண்ணலாம் என்று பூட்டிய கதவைத் திறந்தால், அங்கே  சேஷாத்ரியைக் காணவில்லை! சேஷாத்ரியின் மகிமை அப்போது அவர்களுக்குப் புரியவில்லை. வியந்து நின்றனர்.

பின்னர் சேஷாத்ரி, காஞ்சி தீர்த்தக்கரையில், பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் சந்நியாச தீட்சை பெற்றார். (ரமண மகரிஷி சன்யாசம் பெறவில்லை!) ஆக, குடும்ப பந்தம் விட்டது. காஞ்சியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் காவேரிப்பாக்கம் உள்ளது. அங்கு அவர் மாமி சுந்தரம்மாள் இருந்தார். அங்கு சென்றார். முக்தீஸ்வரர் கோவில் புன்னை மரத்தடியில் ஒரு நாகம் இருக்கக் கண்டு, “நாகப்பா வா’ என்றார். சிவபெருமானுக்கு ஆபரணம்போன்று அது சேக்ஷாத்ரி கழுத்தில் மாலையாயிற்று. அங்கிருந்து செங்கல்பட்டு, வந்தவாசி வந்து, சில மாதங்கள் தங்கிவிட்டு திண்டிவனம் வந்தார்.

அங்கே அவர் பெயர் மௌன ஸ்வாமிகள். எவருடனும் எதுவும் பேசுவதில்லை. அங்குள்ள சிவன் கோவிலில் ஆழ்ந்த தியானம் செய்யவேண்டி கோவிலில் ஒரு அறையில் வைத்துப் பூட்டச் சொன்னார். அதற்கு குப்புசுவாமி குருக்கள் இசைந்து, சேஷாத்ரியை ஒரு அறைக் குள் வைத்துப் பூட்டினார்.

ஐந்து நாட்களாயின. அறைக்குள்ளிருந்து எந்த சப்தமும் வராததைக் கண்டு பயந்துபோன குப்புசுவாமி, கதவைத் திறந்து பார்க்க, சலனமின்றி இருந்தார் சேஷாத்ரி.

அங்கிருந்து வேலூர், வாணியம்பாடி வழியாக திருப்பத்தூர் வந்து, குமாரசுவாமி கோவிலைச் சேர்ந்தார். இவர் வந்ததை அறிந்த வெங்கடராமன் என்பவர் அவருடன் தங்கினார்.

ஆனால் இரவே அவருக்குத் தெரியாமல் மறைந்துபோனார் சேஷாத்ரி. சித்தர் போக்கு சிவம் போக்கு என்பர். நமக்குப் புரியாது.

அங்கிருந்து ஜமதக்னி, ரேணுகாதேவி கோவிலுள்ள படவேடு வந்தார். அம்மனையும் சந்நியாசிப் பாறையையும் தரிசித்து நெகிழ்ந்து அருணாசலம் வந்தார். 1889-ல் தனது 19-ஆவது வயதில் காஞ்சியைவிட்டுப் புறப்பட்ட சுவாமிகள் 1929 வரை 40 வருடங்கள் திருவண்ணாமலை வாசமே! மதுரை மீனாட்சி ரமணரை அருணாசலம் அனுப்பினாள். காஞ்சி காமாட்சி சேஷாத்ரியை அருணாசலம் அனுப்பினாள்.

வினோத அனுபவங்கள். இன்றும் சித்தர்கள், தபோதனர்கள் வாழும் தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. காஞ்சி காமாட்சியே தவமிருந்து இறைவன் உடலில் பாதியைப் பெற்ற தலமல்லவா! சேஷாத்ரி சுவாமிகளின் தோற்றம் மிக எளிமையாக இருக்கும். சடைமுடி, அழுக்குப் படிந்த கிழிந்த உடை, வெறித்துப்பார்க்கும் கண்கள், நெற்றியில் மூன்று கோடுகள்- விபூதி இடவே தேவையில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர்போல் அரைக்கண்ணே திறந்திருக்கும்.

அருணாசலேஸ்வரர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் என திருவண்ணா மலையில் மூன்று லிங்கங்கள் என்பர். ஒருமுறை அவர் மலைக்கருகிலிருந்த ஏழு கழுதைகளைத் தொட்டு, வலம்வந்து வணங்கினாராம். பார்த்தவர்கள் அதை பைத்தியக்காரத் தனம் என்று சொல்ல, சப்த ரிஷிகள்  அல்லவா இவ்வுருவத்தில் வந்துள்ளனர் என்றாராம்.

சேஷாத்திரி சுவாமிகள் உட்காருவது வினோதமாக இருக்கும். சம்மணமிட்டு அமர்ந்திருப்பதுபோல் படங்களில் பார்க்கிறோம். அப்படியல்ல. ஸ்வஸ்திக ஆசன அமைப்பில் அமர்ந்திருப்பார்.

காஞ்சி மகாபெரியவர் பரணிதரனிடம், “அம்மாதிரி உட்கார்ந்து அவர் நிலைக்கு நான் செல்வேனா’ என்றாராம். வெகு கடைசி தினங்களில் அவரை மிக மதித்தார். சேஷாத்ரி சுவாமிகளின் பேச்சு மென்மையாக இருக்கும்.

அவர் தூங்கியே பார்த்ததில்லை என்பார்கள். தனக்குத் தானே ஏதோ பேசிக்கொண்டு செல்வார். அதனால் பலரும் அவரை பைத்தியம் என்றே நினைத்தனர்.

அவரது வெளித்தோற்றத்தைக் கண்டு விலகாமல், அவரது உள்ளம், மகிமை புரிந்து உணர்ந்தோரும் இருந்தனர். இதற்கு உதாரணமாக ஒருசில சம்பவங்களை சிந்திப்போம்.

திருச்சுழி வெங்கடராமனே திருவண்ணாமலையில் ரமண மகரிஷி என்றும், அவர் கந்தன் அவதாரம் என்றும் கணபதி மஹாமுனி கூறினார் என்றால், அதற்குக் காரணம் சேஷாத்ரி சுவாமிகளே! திருவண்ணாமலை வந்த வெங்கடராமன் பல நாட்கள் பாதாள லிங்க குகையில் ஆழ்ந்த தியானத்தில் லயித்தார். உண்ணவில்லை; நீர் அருந்தவில்லை. உட்கார்ந்த நிலையில் கால்கள் மரத்துபோயின. எலும்புகள் தெரிந்தன. வண்டுகள் உடல் தசைகளை உண்டன. சிறுவர்கள் கல்லெறிந்தனர். இதையறிந்த சேஷாத்ரி சுவாமிகள் அவர்களை விரட்டினார். வெங்கடாசலத்தை அழைத்து, “என் மகன் ஆழ்ந்து தவம் செய்கிறான். அவனை வெளிக்கொணர வேண்டும்’ என்று கூறி அவ்வாறே செய்தார். “என் மகன்’ என்றதன் மூலம், தான் காமாட்சி என்றும், ரமணர் கந்தன் என்றும் உணர்த்திவிட்டார்.

ஆகவேதான் மந்த்ர த்ரஷ்டா கணபதி மாமுனி ரமணரை, “குரவே தாரகாயே’- “தாரகனை அழித்த குருவே’ என்று முருகனாய்ப் புகழ்ந்தார். உலகமும் ரமணரை அறிந்தது.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வருடாவருடம் திருத்தணியில் திருப்புகழ் படிவிழா நடக்கிறது. இதை 1918-ல் ஆரம்பித்தவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள். வள்ளிமலைக் கோவில் குகையை சீர்படுத்தியது அந்த திருப்புகழ் சுவாமிகளே. அதற்கு மூலகர்த்தா ரமண மகரிஷியும் சேஷாத்ரி சுவாமிகளுமே. வயிற்றுவலியால் அவதிப்பட்ட மைசூர் அரண்மனை சமையல்காரர், கட்டட வேலை செய்யும் ஒருவர் சொன்னதன் பேரில் பழனி வந்தார். அபிஷேக நீர் பருகிட வயிறு வலி தீர்ந்தது. ஒரு திருப்புகழ் நடனப் பாடல் கேட்டு, திருப்புகழ் கற்க ஆரம்பித்தார். பழனி ஆண்டி, “திருவண்ணாமலை போ’ என்றான்.

அருணாசலம் வந்து ரமணரை தரிசித்த அவர், தான் பாடும் திருப்புகழை ரமணர் மூலம் திருத்திக்கொண்டார். (அவர் கன்னட மொழி பேசுபவர்.) ஒருநாள் ரமணர், “கீழே போ’ என்றார். அவர் மிக வருத்தத்துடன் இறங்க, எதிரே வந்த சேஷாத்ரி சுவாமிகள் சிரித்து, ஆதிசங்கரரின் சிவமானஸ பூஜையின் கடைசி துதியைச் சொல்லி, “இதற்கு ஈடான- ஒப்பான திருப்புகழ் உண்டா?’ என்று கேட்டார். உடனே அவர் ஒரு திருப்புகழ் கூறினார். அதைக்கேட்ட சேஷாத்ரி சுவாமிகள், “திருப்புகழே உனக்கு மகாமந்திரம். வள்ளிமலைக்குப் போ, நான் அங்கு வருவேன்’ என்றார். அந்த மகத்தான வாக்குகள் சிறந்த உபதேசமாயிற்று. வள்ளிமலை வந்து குகைகளை நன்கு செப்பனிட்டார். திருப்புகழிலேயே ஆழ்ந்தார்; பரப்பினார். அவர் மதியம் நிவேதனம் செய்த பிரசாதத்தை வெளியே வைப்பது வழக்கம். காக்கை போன்றவை உண்ணும். சில சமயங்களில் ஒரு கீரிப்பிள்ளையும் உண்ணும். ஒருநாள் “ஸ்வாமிகள் வள்ளிமலை வருவேன் என்றாரே’ என்கிற சந்தேகம் வந்தது! அடுத்த கணம் வள்ளிமலையில் கீரிப்பிள்ளை சேஷாத்ரி சுவாமியாக காட்சி தந்தது.

தெருவில் சுவாமிகள் இஷ்டம்போல் நடப்பார். கடை முதலாளிகள் வெளியே வந்து நின்று வணங்கி, “சுவாமிகள் கடைக்கு வரணும்’ என்று வேண்டுவர். காரணம் என்ன?

தின்பண்டங்கள் எடுத்து சாப்பிடுவாரா- அல்ல. வாசலில் வீசியெறிவார். முதலாளி தலையில் கொட்டுவார். இப்படி செய்தால் கடை முதலாளிக்கு வெகு ஆனந்தம். ஏனென்றால் அன்றைய தினம் வழக்கத்தைவிட பத்து மடங்கு வியாபாரம் நடக்கும்.

சிவப்ரகாச முதலியார் ஒரு பக்தர். சுவாமிகள் அவரிடம், “இன்கிரிமென்ட் (உயர்வு) தருகிறேன். வாங்கிக்கோ’ என்றார்.

அவரோ, “என் வேலைக்கே குந்தகம் வரும்போலுள்ளது. எனது அதிகாரிக்கு என்னைப் பிடிக்கவில்லையே’ என்றார். அவரோ தலையில் கையால் அடித்து “போ போ’ என்றார். வருத்தத்துடன் வீடு வந்தார். சிவப்பிரகாச முதலியார் வீட்டில் ஒரு கடிதம். பிரிக்கவே தயங்கினார். வேலை நீக்கமா என்ற பயம். சுவாமிகளை நினைத்துத் திறக்க, அவருக்கு பதவி உயர்வுடன் இருபது ரூபாய் சம்பள உயர்வும் வழங்கப்பட்டிருந்தது.மேலதிகாரியின் சிபாரிசாம். சுவாமிகள்தான் மேலான அதிகாரியாயிற்றே! இதுபோன்ற நிகழ்வுகள் பலப்பல!

1929, டிசம்பர் 29-ல் பக்தர்கள் ஒன்றுகூடி சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யவிரும்பினர்.

ஏனெனில் 60 வயது ஆகப்போகிறது. அவர், “வேண்டாம்; எனக்கு ஜுரம் வந்துவிடும்’ என்றார். பக்தர்கள் மனம் வேறு. “மரியாதை செய்கிறோம்; கொண்டாடுகிறோம்’ என்று அவர்கள் எண்ணினார்கள். பிரமாதமாக பலரால் குடம்குடமாக அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டன. சுவாமிக்கு குளிர் ஜுரம் கண்டது. அன்ன ஆகாரம் இல்லை. கம்பளி போர்த்தினாலும் தள்ளிவிட்டார். அவர் மனம் வேறுபோலும். இதுவும் ஒரு வியாஜமே. (லீலையே). மார்கழி 21- 1929-ல் அவர் மூச்சு நின்றது. முத்திநிலை அடைந்தார். ரமண மகரிஷி முன்பு சமாதி அமைக்கப்பட்டது. அவர் இன்றும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வரப்ரசாதி. ரமணாசிரமம் முன் அவர் சமாதிக் கோவில் உள்ளது. சேஷாத்ரி சுவாமிகளின் அவதார தினம் இவ்வாண்டு 30-1-2016 அன்றும், முக்தியடைந்த தினம் 3-1-2016 அன்றும் அமைகிறது. மிகச்சிறந்த அந்த ஞானியை வணங்கி சித்தம் தெளிவோம்.

பல்வேறு வகையான பூஜைகளில் சாந்தி கிரியையும் ஒன்று. எதிர்பாராத தீய பலன்களைத் தடுப்பதற்காக செய்யப்படுவதாகும். வேதம், ஆகமம், ஸ்மிருதி, புராணாதிகளின் கர்மகாண்டத்தில் பல்வேறு கிரியைகள் இடம் பெற்றுள்ளன. அவை நித்தியக் கிரியை, நைமித்திகக் கிரியை, காம்யக் கிரியை என்று மூன்று வகைப்படும். தினமும் செய்யப்படுவதாகிய அனுஷ்டானம், ஜெபம், தபம் முதலானவை நித்தியக் கிரியைகள் ஆகும். விருப்பமான பயனைப் பெற்றிட விரும்பினால் மட்டுமே செய்யப்படுவன காம்யக் கிரியைகள் ஆகும். மனித வாழ்க்கை புனிதச் சடங்குகளாலேயே சிறப்பு நிலையைப் பெறுகிறது. அறிந்தும் அறியாமலும் நிகழும் தவறுகளுக்குப் பரிகாரமாகவே (சாந்தியாகவே) தினமும் அனுஷ்டானமும் ஜெபமும் செய்யப்படுகிறது.

ஆனால் குறிப்பிட்ட காலகட்டம் வருகிறபொழுது ஏற்படக்கூடிய தீமைகளைக் களைந்து, நெடுநாள் வாழ்ந்திடும் நோக்கில் யாவரும் செய்துகொள்ள வேண்டியவை நைமித்திக சாந்திகளாம். இவை பரிகார சாந்திகள் அல்ல; விரும்பினால் செய்துகொள்வதும் அல்ல. ஆயுள் விருத்திக்கும், சிலவகை சிறப்புப் பயனைப்பெறவும் குறித்த காலத்தில் செய்யப்பட வேண்டுவனவாகும். மனிதனின் பெறற்கரிய பேறு மன அமைதியே. வேதங்களும் ஆகமங்களும் “ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி’ என்று மூன்று முறை கூறி, யாவரும் சாந்தி பெறவேண்டி இதனை வலியுறுத்துகின்றன.

மனித உடலுக்கு மட்டுமின்றி தேச நலனுக்கும், கிராம நலனுக் கும், வீட்டு நலனுக்கும், கால்நடை முதலிய பிராணிகளின் நலத்திற்கும் உரியவையென்று பலவகை சாந்திக் கிரியைகள் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, உதக சாந்தி, ரக்ஷோக்ன சாந்தி ஹோமம், கூஷ்மாண்ட ஹோமம், சாந்தி ஹோமம், அஸ்த்ரயாகம் முதலிய கிரியைகளைச் சொல்லலாம். பஞ்சபூதங்களில் ஒன்றான பூமிக்கு புனிதத் தன்மையையும், தெய்வீகத் தன்மையையும் விளைவிப்பதற்காக செய்யப்படுவது வாஸ்து சாந்தியாகும். அது குறிப்பிட்ட காலங்களில் பயன் கருதி செய்யப்படுவது போலவே, மனித உடலுக்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் விளையும் தீய பலனைப் போக்கி ஆயுளை நீட்டிக்கும் நோக்கில் சாந்திகள் செய்யப்படவேண்டுமென்பது பொதுவிதியாகும்.

வேள்வி விளக்கம்

“அறம் எனப்படுவதே இல் வாழ்க்கை’ என்றும்; “அன்பும் அறமும் இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாகும்’ என்றும் திருவள்ளுவர் கூறுவார். மேலும் “கற்றதனால் ஆயபயன் வாலறிவன் நற்றாள் தொழுதலே’ என்பார். இதனையே ஆன்றோர்கள், இறைவனை மகிழ்விப்பதையே யாகம் என்றனர். “தேவர்கள் வேள்வியினாலேயே படைக்கப்பட்டும், வல்லமை பெற்றும் இவ்வுலகைக் காக்கின்றனர். வேள்வியே அறங்களுக்கெல்லாம் தலையாவது’ என்கிறது யஜுர்வேதம்.

நாம் வேள்விகள் செய்வதால் மழைவளம் பெருகும். மழை வளத்தால் உலகம் செழித்து தன்னிறைவு பெறும். “கற்றாங்கே எரியோம்பிக் கலியை வாராமே செற்றார்’ என்பது அப்பர் பெருமான் திருவாக்கு. “அந்தணர் நூல்விதிப்படி வேள்விகள் செய்ய உலகின் துன்பம் நீங்கும்’ என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். மேலும் தேவாரத்தில், “மண்ணிற் பெருவேள்வி வளர் தீப்புகை நாளும் விண்ணிற் புயல் காட்டும் வீழிமிழலையே’ என்னும் இலக்கியச் சுவைமிக்க ஞானசம்பந்தரது திருவாக்கு, வேள்விகள் மழைக்குக் காரணமென்பது உண்மை என்பதையும், இதனைச் செய்வது நித்தியக்கடமையாக இருந்தது என்பதையும் அருளாணையிட்டு உணர்த்துகிறது. பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் இதனை,

“அந்தணர் தேவ ரானினங்கள் வாழ்க வென்
றிந்த மெய்ம் மொழிப் பயனுலக மின்புறச்
சந்த வேள்விகள் சங்கரர்க்கு முன்
வந்த அர்ச்சனை வழிபாடு மன்னவாம்.’

என்று விவரிக்கிறார்.

வள்ளுவப் பெருந்தûகையும் “சிறப்பொடு பூசனை செய்யாது வானம்’ என்று மழைக்கென பூஜையின் தேவையைக் குறிப்பிட்டுள்ளார்.

யாவருக்கும் யோகம் தருவது ஹோமமே. யாகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது தியாகமே.

அக்னியில் பல பொருட் களால் ஹோமம் செய்வதன் மூலமாக, நம்முடைய பொருட்களை தெய்வங்களுக்காக நாம் தியாகம் செய்கிறோம். மேலும் யாகத்தின் அங்கமாக உள்ள தட்சிணை தருவது, தான தருமம் செய்வது போன்றவற்றால் நாம் பலருக்குப் பொருளையளித்து கொடையாளியாகிறோம்; புனிதராகிறோம்.

ஜெபம், தபம் முதலானவற்றால் ஒருவன் தனிப்பட்ட முறையில் தான் உயர்ந்து மோட்சத்தை அடையலாம். ஆனால் மனித குல சமூகத்திற்கு நன்மை ஏற்பட வேண்டுமென்றால் யக்ஞம்தான் சிறந்தது. யாகத்தின் பயனாக தேவர்களும் மற்றவர்களும் கருத்து வேற்றுமை, பகைமை நீங்கப்பெற்றவர்களாகி நண்பர்களாவர் என்றும், உலகில் யாவும் வேள்வியிலேயே நிலைபெற்று விளங்குவதாயும், ஆதலால் வேள்வியே மேலான அறமென்றும் யஜுர் வேதம் கூறுகிறது.

யக்ஞம் என்பது, தேவதைகளுக்கான அவிர்பாகத்தை (விருப்பமான பொருளை) அந்தந்த தேவதைக்குரிய மந்திரங்களைச் சொல்லி யாக அக்னியில் இடுவது. அவற்றை அக்னிதேவன் அந்தந்த தேவதைகளிடம் சேர்ப்பிக்கிறார். தேவர்கள் அக்னியையே திருவாயாகக் கொண்டு ஹவிஸ்ஸை ஏற்பதாக வேதம் கூறுகிறது. யக்ஞத்தின் மூலமாக தேவதைகள் திருப்தியடைந்து உலகிற்குத் தேவையான மழையை அளிக்கிறார்கள்.

அக்னியானது தானும் தூய்மையாக விளங்கி, மற்றவற்றையும் புனிதமாக்க வல்லது. எனவே பூஜையிலும், சாந்திஹோமம் முதலிய கிரியைகளிலும் அக்னி இடம்பெறுகிறது. ஹோமத்துடன் செய்யப் படும் கிரியையே உத்தமமான உயர்தரக் கிரியை என்று வேதம் வலியுறுத்துகிறது.

ஆகம நெறியில் ஆயுள்தரும் ஹோமம்வேதநாயகன் அருளிய சிவாகமங்கள் பசு, பதி, பாசம் எனும் முப்பொருளையும் உணர்த்தி. அவற்றுள் பசுக்களாகிய உயிர்கள், பாசமாகிற மலபந்தங்களிலிருந்து விடுபட்டு, பதியாகிய இறைவனைச் சேரும் நெறியைச் கூறுவனவாம்.

இவ்வுலகம் ஓசை வடிவிலும் ஒளி வடிவிலும் இருவகையாகத் தோன்றி ஆறு அத்வாக்களாக (வழிகளில்) யாவுமாக விளங்குகிறது. அவற்றுள் மந்திரம், பதம், வர்ணம் எனும் மூன்றும் சப்தப் பிரபஞ்சம் எனப்படுபவை. தத்துவம், புவனம், கலா எனும் மூன்றும் அர்த்தப் பிரபஞ்சம் எனப்படும். அதாவது உடல், தத்துவங்கள், உலகங்கள் ஆகிய மூன்றுமாம். இதில் ஆத்மாவானது போக மோட்சங்களை அடைய சாதனமாக இருப்பவை 36 தத்துவங்களாகும். உடல் இயக்கத்திற்கு இவை மிகவும் அவசியமானவை. இந்த 36-ம் போக்ய காண்டம், போக காண்டம், ப்ரேரக காண்டம் என மூன்று பகுதியாக விளங்குபவை. அதாவது ஆத்மதத்துவம் 24-ம் அனுபவிக்கப்படுபவை. வித்யா தத்துவம் ஏழும் அனுபவிக்க உதவுபவை.

சிவதத்துவம் ஐந்தும் அனுபவிக்க துணைநின்று தூண்டுபவை.

ஆத்ம, வித்யா தத்துவங்கள் 31-ம் கூடியவனே புருஷன் எனும்- அனுபவித்திடும் உயிரெனும் ஆன்மா. இந்த தத்துவங்கள் 31-ம் பிரகிருதி மாயை, அசுத்த மாயை சம்பந்தம் உடையவை. எதைப்பற்றி சொல்கிறோமோ அதன் உண்மையே தத்துவம் எனப்படும். இவை புலன்கள் அல்ல. சூட்சும நிலையில் மகாபிரளய காலம்வரை இருப்பவை. தத்துவரூபமான உலகம் பாசமாகும். உலகுடன் இயங்கும் சித்தே ஆத்மாவாகும். ஆத்மாவான சித் என்பது, பாசமயமான உலகுடன் சேர்ந்து தன்னை மறந்து உலகிலேயே உழல்கிறது. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் முதலில் தன்னை அறிந்து, அடுத்து மாயா சம்பந்தம் நீங்கி, சிவஞானபோதம் ஏற்பட்டு, சிவயோகம் கூடினால் பிறவித்துன்பம் நீங்கும். பிறவியிலிருந்து நீங்குவதே மோட்சமென்பது.

சைவசித்தாந்தத்தில் மோட்சத்திற்கு சாதனமாக பத்து காரியங்கள் சொல்லப்படுகின்றன. தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி, ஆத்மரூபம், ஆத்மதரிசனம், ஆத்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் ஆகியவையே அவை. இதன்மூலமாக சிவத்துடன் மலர்கிற சிவயோகத்தை அடையலாம். இதுவே பேரின்ப நித்யானந்த பரமுக்திநிலையாகும்.

எனவே நாம் பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்களைப் போற்றவேண்டும். இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாநாளே என்பது அப்பரின் அருள்வாக்கு. தோன்றிய பொருள் எதுவாயினும் அது ஒடுக்கமுடையதே. எனவே உடலானது முறையே பாதுகாக்கப்பட்டால், பல ஆண்டு காலம் கூடுதல் ஆயுள்பெறும். ஒழுக்கநெறியின் உன்னத சடங்குகளால்- உரிய சாந்தி ஹோமங்களால் வாழ்நாள் நீட்டிப்பை அடையுமென்பது நமது சமய உண்மையாம். இதை அடிப்படையாகக் கொண்டே 60 வயதில் உக்ர ரத சாந்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் விஜயரத சாந்தி என்று செய்வார்கள். அதன் விளக்கத்தை அடுத்த இதழில் காணலாம்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ளது காளனம்பட்டி. இங்கு ஆற்றங்கரை ஓரத்தில் ஆதிசக்தியாய் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகாகும்பாபிஷேகம் 21-8-2015 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்து பிள்ளைமார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி என்பதால், வேடசந்தூர் தொகுதியிலுள்ள மேற்கு பூத்தாம்பட்டி, கிழக்கு பூத்தாம்பட்டி, எஸ். புதூர், தேவநாயக்கன்பட்டி, சொக்கலிங்கபுரம், ஸ்ரீராமபுரம், அம்மாபட்டி, மண்டபம்புதூர், தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல் உள்பட 38 ஊர்களைச் சேர்ந்த பிள்ளைமார் சமூக மக்கள் பெரும்திரளாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு அம்மனின் அருள்பெற்றனர். அதுபோல் திண்டுக்கல்லில் உள்ள பிரபல கே.டி.என். தரகு மண்டி குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான கே.டி. மோகன்குமார், கே.டி.என். வரதராஜன், கே.டி.என். குருமூர்த்தி, எம். தீபன் சக்கரவர்த்தி ஆகியவர்கள் குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு இறையருள் பெற்றனர்.

தொகுதி எம்.எல்.ஏ. பழனிச்சாமி, யூனியன் சேர்மன் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. தண்டபாணி, முன்னாள் யூனியன் சேர்மன் பிரியம் நடராஜன், அருணாசலம் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களும், அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.

புலியூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் பரம்பரை பூசாரிகளுடன் இணைந்து, கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்தார் ஜெயசூர்ய நாராயண குருக்கள்.

கும்பாபிஷேக அறங்காவலர் குழுத் தலைவரும், முன்னாள் ஆசிரியருமான ராமசாமி கூறியபோது, “”விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மனைத்தான் ஆதிகாலத்தில் எங்கள் முன்னோர்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். அதன்பின் கரூர் புலியூரில் அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் கட்டி வழிபட்டுவந்தனர்.

இருந்தாலும் இங்குள்ள எங்கள் சமூக மக்கள் அடிக்கடி புலியூர் சென்று அம்மனை தரிசித்துவர காலதாமதமாகும் என்பதனால், எங்கள் முன்னோர்கள் 150 வருடங்களுக்கு முன்பே புலியூரிலிருந்து கைமண் எடுத்துவந்து, இந்த காளனம்பட்டி ஆற்றங்கரையில் ஒரு திட்டுபோல கட்டி வழிபட்டுவந்தனர். இப்படி வழிபட்டுவந்த இடத்தில்தான் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஒரு பெரிய கோவில் கட்டவேண்டுமென எங்கள் பங்காளிகள் மற்றும் மாமன், மைத்துனர்கள் முடிவுசெய்ததன்பேரில், தலைக்கட்டு வரியுடன் எங்கள் சமூக மக்களிடம் நிதி உதவிகளைப் பெற்று இந்த ஆலயத்தைக் கட்டிமுடித்தோம். இங்கு மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் நாலே முக்கால் அடி உயர அம்மன் விக்ரகம் திருமுருகன்பூண்டியில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது.

கோவில் உட்புற வளாகத்தில் எங்கள் குலதெய்வங்களான ஸ்ரீசக்திவிநாயகர், ஸ்ரீபிச்சாளம்மன், ஸ்ரீரங்கநாதர், மதுரைவீரன் உள்பட நான்கு பரிவார தெய்வங்களையும் வைத்து சிறந்த முறையில் உருவாக்கி இருக்கிறோம். இந்த பூமியில் எழுந்தருளியுள்ள எங்கள் அங்காள பரமேஸ்வரியை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி என எதை நினைத்து அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றுகிறோமோ அதை உடனே நிறைவேற்றித் தரக்கூடிய சக்தியாக அங்காள பரமேஸ்வரி இங்கு விளங்குகிறாள். எங்கள் சமூகத்தினர் மட்டுமல்லாமல், மற்ற அனைத்து சமூகத்தினரும் இந்த அம்மனை வணங்கி அருள்பெற்று வருகிறார்கள்” என்றார்.

150 வருடங்களுக்குப்பிறகு இவ்வாலயம் கட்டப்பட்டதையடுத்து, சமூக மக்கள் தங்கள் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரியை தரிசிக்க திரண்டு செல்கின்றனர்.

(தொடரும்)

 

முனைவர் இரா. இராஜேஸ்வரன்

பராசக்தியே இந்த உலகத்தை உருவாக்குகிறாள்; அவளே எல்லா உயிர்களை யும் காப்பாற்றுகிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும்; இந்திரன், சூரியன், அக்னி, வாயு உள்ளிட்ட தேவதை களுக்கும் தங்களுடைய காரியத்தை தானாகச் செய்ய தனிப்பட்ட சக்தி இல்லை. அவர்கள் எல்லாரும் பராசக்தியிடமிருந்து சக்தியைப் பெற்றுதான் தங்களின் கடமைகளை சரிவரச் செய்கிறார்கள். ஸ்ரீஆதிசங்கரர் “சிவ; சக்த்யா யுக்தோ’ என்ற சௌந்தர்ய லஹரியின் முதல் சுலோ கத்தில், “பராசக்தி இல்லை யெனில் பரமசிவனுக்கே சக்தி இல்லை’ என உணர்த்து கிறார்.

த்வயைதத்தார்யதே விச்வம் த்வயைதத் ஸ்ருஜ்ய தேஜகத்/
த்வயைதத் பால்யதே தேவி த்வமத்ஸ்யந்தே ச ஸர்வதா//

இந்த உலகம் பராசக்தி யால் உருவாக்கப்படுகிறது. அவளாலே காக்கப்படுகிறது. இறுதியில் அவளாலே சம்ஹாரம் (முடிவு) செய்யப்படுகிறது என்பதை மேற்கண்ட தேவி மாகாத்மிய சுலோகம் தெரிவிஹக்கிறது.

“நானே ஜகத்தின் தோற்றத்துக்கும் மறைவுக்கும் காரணம்’ என கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறுகிறார். இவ்விதம் தோற்றுவித்தல், மறையச்செய்தல் போன்ற பணியைச் செய்யும் பரமாத்மாவின் சக்தியே பராசக்தி. இந்த ஜகத்தை தோற்றுவித்ததால் பராசக்திக்கு “ஜகன்மாதா’ என்கிற பெயரும் வந்தது. சக்தியை பெண்பால் இறைவியாக- அதாவது தேவியாக வழிபடுவது நமது இந்து மதத்தின் தனிப்பெரும் சிறப்பாகும். “மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர’ என்கிற கருத்துப்படி தேவி, மஹேஸ்வரன் ஆகிய இருவரும் ஒருவரே. அம்மையும் அப்பனும் ஒருவரே. இதே கருத்தைதான் சௌந்தர்ய லஹரியில்,

“சரீரம் த்வம் சம்போ: சசிமிஹிர வசஷாருயுகம்
தவாத்மாநம் மந்யே பகவதி நபாத்மாஜமநகம்
ஆத: சேஷ: சேஷீத்யயம் உபயஸாதாரண தயா
ஸ்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸபராந்த் தபரேயோ.’

“ஹே பகவதியே! பரமசிவனை  உனது சரீரமாக (உடல்) எண்ணுகிறேன்’ என ஆதிசங்கரர் கூறுகிறார்.

பரமசிவனின் இடப்பாதியில் பராசக்தி வீற்றிருக்கிறாள். இந்த அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தில் இருவர் இருந்தாலும் ஒரே மூர்த்தியாகவே கருதப்படும். பாதி பாதியாக இணைந்த இந்த கோலத்தைப் பற்றி அபிராமி பட்டர்,

“உமையும் உமையொரு பாகனும்
ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கன்பு செய்ய வைத்தார்’

எனப் பாடுகிறார்.

அளவற்ற கருணையுடன்கூடிய அன்னை பராசக்தியானவள், தான் தோற்றுவித்த மனிதர்கள் சுலபமாக வழிபட்டு ஞானமடைய பல பெயர்களுடன் திகழ்கிறாள். கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி என்கிற சரஸ்வதி, லட்சுமி, பார்வதி போன்ற வடிவங்கள் உண்டாயிற்று.

அம்பிகையை “ஸர்வக’ (எங்கும் நிறைந்திருப்பவள்) என லலிதா சகஸ்ரநாமாவளியில் கூறப் பட்டுள்ளது. இதே பொருளில் பாரதியார் காளி ஸ்தோத்திரம் என்கிற கவிதையில்,

“யாதுமாகி நின்றாய்- காளீ
எங்கும் நீ நிறைந்தாய்’

எனப் பாடினார்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நவராத்திரி நாயகியான பராசக்தியைப் பற்றி குறிப்பிடும்போது, “அவள் கலியுகத்தில் துர்க்கை என்றும் பத்ரகாளி என்றும் அழைக்கப்படுவாள்’  என சொல்லியிருக்கிறார். பராசக்தியின் பரிபூரண அருள்கிடைக்க நவராத்திரி விரத பூஜையைச் செய்தல் அவசியம். இந்த பூஜையின் மகிமையைப் பற்றி பகவான் வேத வியாசர் ஜனமேஜய மகாராஜாவுக்கு விளக்கியுள்ளார்.

நவராத்திரியானது வருடத் திற்கு நான்கு முறை வசந்த நவராத்திரி, சாரதா சரன் நவராத்திரி, மகா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி என்கிற பெயர்களில் வந்தாலும், சாரதா சரன் நவராத்திரிதான் மிக விசேஷமான நவராத்திரியாகும். இதையே “துர்க்கா பூஜை’ யென அழைப்பதுண்டு. புரட்டாசி மாத சுக்லபட்ச பிரதமையன்று நவராத்திரி பூஜையை முறைப்படி பக்தியுடன் ஆரம்பித்து, மகாநவமி வரை ஒன்பது நாட்கள் ஜகன்மாதாவான அம்பிகையை துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்கிற தேவிகளின் ரூபத்தில் வழிபடவேண்டும். புனிதமான நவராத்திரி நாட்களில் வீடுகளிலும் கோவில்களிலும் பூஜை, விரதம், ஹோமம், பாராயணம் என ஒரு பக்கம் வைதீக சம்பிரதா யங்கள் இருந்தாலும், மறுபக்கம் தெய்வம், மனிதன், விலங்கினங்கள், இயற்கை காட்சிகள் போன்ற உருவ பொம்மைகளைக்கொண்டு அழகான கொலுப்படி வைக்கும் மகிழ்ச்சியான சம்பிரதாய நிகழ்வு பாரம்பரியமாக கடைப் பிடிக்கப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் கோவில்களில் தினமும் அம்பிகைக்கு ஹம்ஸ வாஹினி (ப்ராஹ்மி), ரிஷப வாஹினி (மகேஸ்வரி), மயூர வாஹினி (கௌமாரி), கருட வாஹினி (வைஷ்ணவி), சிம்ம வாஹினி, கஜலட்சுமி, வீணா சரஸ்வதி போன்ற பல விதவித அலங்காரங் கள் செய்து சிறப்பு பூஜையைச் செய்வார்கள். ஸ்ரீதேவி பாகவதம், ஸ்ரீ தேவி மாகாத்மியம், துர்க்கா ஸப்தசதி போன்ற அம்பிகைக்கான பாராயணங்கள், சதசண்டி ஹோமம் ஆகியவற்றை முறைப்படி செய்வார்கள். குறிப்பாக பெண்களுக்காக சுமங்கலி பூஜை, திருவிளக்குப் பூஜை, சிறுமிகளுக்காக கன்னியா பூஜை போன்ற சடங்குகளைச் செய்வார்கள்.

மீன்கள் தன் கண் பார்வையாலேயே தனது குஞ்சுகளை வளர்ப்பதுபோல, அம்பிகையும் தமது அருட்கண்களால் தம்மை வணங்கும் குழந்தைகளை வளர்க்கிறாள். உலகத்திற்கே தாயான பராசக்தியை நவராத்திரி நாட்களில் விசேஷமாக வழிபடுவது சாலச்சிறந்தது.

“எந்த தேவியானவள் எல்லா தேவதைகளிடத்திலும் சக்தி ரூபமாக விளங்குகிறாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்’ என்று தேவி மாகாத்மியத் தில் சொல்லப்பட்ட கீழுள்ள சுலோகத்தை ஜெபிப்போம்.

யாதேவீ ஸர்வ பூதேஷீ சக்திரூபணே ஸம்ஸ்த்திதா/
நமஸ்தஸ்ய நமஸ்தஸ்ய நமஸ்தஸ்ய நமோ நம//காளிகாம்பாள் அற்புதங்கள் -16
சிவஸ்ரீ தி.ஸா. சண்முக சிவாச்சாரியார்

தலவிருட்சமான அரசமரத்தின் சிறப்புகளை கடந்த இதழில் கண்டோம். அதுபோல மற்றொரு சிறப்பு வாய்ந்த மரம் வேம்பு.

இம்மரத்தின் காற்று வெப்பத்தைப் போக்கி குளிர்ச்சியைத் தரும். நோயின் மூலத்தைப் போக்கும் ஆற்றல் வேப்பமரத்தின் காற்றுக்கு உண்டு. இம்மரத்தின் பட்டை, இலை, சாறு, கொட்டை, எண்ணெய் யாவும் கிருமிநாசினியாகும். பூத தோஷங்கள்,  பேய், பிசாசு, பிரம்மராட்சதர் போன்ற தீய சக்திகளை விரட்டும் சக்தி இம்மரத்துக்கு உண்டு. சித்தபிரம்மை, வைசூரி போன்ற நோய்களையும் நீக்கவல்லது.

வேப்பமரமானது ஊருக்கு காவல் தேவதையாகவும், உந்து சக்தியாகவும் விளங்குவதால், கிராம காவல் தெய்வங்களான  காளியம்மன், துர்க்கையம்மன், மாரியம்மன் ஆலயங்களில் வேப்பமரம் போற்றி வணங்கப்படுகிறது. காடுகள் மற்றும் வெட்டவெளிப் பகுதிகளிலுள்ள அரசு முதலான மரங்களில் பிரம்மராட்சதர் போன்ற தீய தேவதைகள் இருக்குமென்பதால், அகால நேரங்களில் அங்கு போகக்கூடாது என்றும் தொடக்கூடாது என்றும் சொல்லிவைத்தனர். அவ்வாறு போகும் அவசியம் நேரிட்டால் வேப்பிலையுடன் செல்வார்கள். பாதுகாப்பு கருதி அம்மரங்களுடன் வேம்பையும் இணைத்துவைப்பர். எனவேதான் இந்த வேப்ப மரத்தை சர்வசக்தி மயமாகவும், நாராயணரின் சக்தியான நாராயணியாகக் கருதி தனித்தும், அரசு முதலான மரங்களுடன் சேர்த்துவைத்தும் வழிபட்டனர். இறையருளையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கு நம் முன்னோர் காட்டிய உயர்வான வழி இது. வேப்பமரக் கட்டையில் சூரியதேவனின் வடிவத்தை செய்து வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும் என்று சாத்திரங்கள் உரைக்கின்றன. தீயவர்களை விரட்ட செய்யப்படும் வேள்விக்கு ஏற்ற சமித்தாக வேம்பு விளங்குகிறது.

அரச மரத்தை மரங்களின் அரசன் என்று ஆண் பாலாகவும், வேப்ப மரத்தை அரசி என்று பெண் பாலாகவும் சிறப்பித்துக் கூறுவர். இவ்விரண்டையும் தனித்தனியாக ஆலயங்களில் வழிபடுகின்றனர். இரண்டையும் ஓரிடத்தில் ஒன்றாக நட்டு வளர்த்து, அவற்றுக்குத் திருமண வைபவம் நடத்திவைத்து, பின்பு தெய்வத் தம்பதிகளாக வழிபடுவதும் சிறந்த வழிபாட்டு நெறியாகும். நாராயணராகவும் நாராயணியாகவும் எண்ணி வழிபடுவதால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஈடேறும். நற்பிள்ளைப்பேறும் வாய்க்கும். எல்லாவித தோஷங்களும் நீங்கும்.

அரசு, வேம்பு திருமணச் சடங்கென்பது மிகவும் புனிதம் வாய்ந்தவொன்று. முறையாக செய்துவைக்கப்படும் திருமணத்தால் முற்பிறவிப் பாவங்கள் நீங்கும். பிறந்தகால ஜாதகத்திலுள்ள வாழ்க்கைத்துணை தோஷம், பிள்ளைச்செல்வ தோஷம், நாக தோஷங்கள் விலகும். விதிமுறைப்படி செய்யப்படும் பூஜை, திருமணம், 108 முறை வலம்வருதல் ஆகியவற்றால் விரும்பிய எப்பயனையும் பெறலாம். கோடி கன்னிகா தானம் செய்வதால் கிட்டும் புண்ணியத்தை ஒரு அரசு- வேம்பு திருமணத்தால் பெறலாம்.

எல்லா தெய்வாம்சமும் பொருந்திய அரசமரம் இருக்கும் பகுதி மிகவும் புனிதமானது. எனவே இம்மரத்திற்கடியில் பாதபீடமாக சுட்ட கல் அல்லது கருங்கல்லால் ஒரு மேடை அமைக்க வேண்டும். அரச மரத்தடியில் விநாயகரையோ, நாகரையோ, இஷ்ட தெய்வங்களையோ சூலம் முதலான குறியீட்டு உருவிலோ சிலைகளாகவோ பிரதிஷ்டை செய்யவேண்டுமென்று சிவாகமங்கள் கூறுகின்றன. இவ்வாறு செய்யப்படும் பிரதிஷ்டைகளால் விரும்பிய பயனை விரைந்து பெறலாம். பூஜை, ஹோமம், பித்ரு காரியங்கள் செய்வதற்கும் அரசமரப் பகுதி ஏற்ற இடமாக உள்ளது.

அச்வத்த: ப்ரதிக்ருஹ்னாதி
அச்வத்தோ வை ததாதி ச/
அச்வத்த ஸ்தாரகோ த்வாப்யாம்
அச்வத்தாய நமோநம//

என்று அச்வத்த (அரசமர) மகாத்மியம் கூறுகிறது. அதாவது, நம் பாவங்களை ஏற்று நம்மைப் புனிதப்படுத்தி, நாம் விரும்பியதை அளித்து நம்மை உய்வித்து மேம்படுத்துவது அரசமரம் என்று கூறுகிறது.

அடுத்து, வழிபாடுகள் குறித்த வேறுசில விவரங்களைக் காண்போம்.

அனைவரும் இம்மைப் பயன், மறுமைப்பயனை அடைய எளிய வழியாக தினமும் ஏதாவது ஒரு மந்திரத்தை மன ஒருமைப்பாட்டு டன் ஜபித்துவருமாறு சாஸ்திரங்கள் கூறுகின்றன. தெய்வம், அரசமரம், துளசிச்செடி, கோமாதா, குரு போன்ற ஏதாவதொரு மந்திரத்தினை ஜெபிக்கலாம்.

கோ என்னும் பசுவிடமிருந்து பெறப்படுவதாலேயே பால் முதலானவை “கவ்யம்’ எனப்படுகின்றன. தெய்வ மூர்த்தங்களுக்கு பசும்பாலைக் கொண்டு அபிஷேகம் செய்வதை ஆகமங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. பசுவின் நிறத்துக்கேற்ப பஞ்ச கவ்யங்கள் வகைப்படுத் தப்பட்டுள்ளன. கபிலநிறப் பசுவின் சிறுநீர், கருமை நிறப் பசுவின் சாணம், வெண்ணிறப் பசுவின் பால், புகைநிறப் பசுவின் தயிர், சிவப்பு நிறப் பசுவின் நெய் ஆகியவை சிறப்பு மிக்கவை. மேலும் அனைத்து வண்ண பசுக்களிடமிருந்து கிடைக்கும் கோரோசனையும் உத்தமமான கவ்யமாகும். இவற்றிலிருந்தே நன்மை தரும் பல பொருட்கள் தோன்றியதாக சுப்ரபேத ஆகமம் குறிப்பிடுகிறது.

சிவபெருமானுக்குகந்த சிறப்புமிக்க தூபப்பொடியான குங்கிலியம் பசுவின் சிறுநீரிலிருந்தே தோன்றியது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனார், இந்த தூப கைங்கர்யத்தினால் சிவகதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவனுக்குப் பிரியமானதும், மகாலட்சுமி நித்தியவாசம் புரிவதுமான வில்வமரம் சாணத்திலிருந்தே தோன்றியது. மேலும் உத்தம மலர்களான தாமரையும் குவளையும் சாணத்திலிருந்தே தோன்றின.

பாலிலிருந்து உலகிற்குத் தேவையான உயிர்சக்திமிக்க விதைகள் தோன்றின. அனைத்தும் சித்திக்கத் தேவையான- பரிணாம சக்தியான மங்களங்கள் தயிரிலிருந்து தோன்றின. தேவர்களுக்கு மிகவும் விருப்பமானதும், ஆயுளைத் தருவதுமான அமிர்தம் நெய்யிலிருந்து தோன்றியது.

இவ்வாறு, சர்வதேவதா சொரூபமான பசுவை கன்றுடன் சேர்த்துவைத்து பூஜைசெய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.

பசுவை வலம் வந்து வணங்குவதற்கான துதி இங்கே தரப்பட்டுள்ளது.

“ஸர்வ காமதுகே தேவி ஸர்வ தீர்த்தாபிஷேசிநி
பாவநி சுரபிச்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே/
ஸௌரபேயி நமஸ்துப்யம் வரதே யக்ஞரூபிணி
ஆயுராரோக்ய மைச்வர்யம் தேஹிமே கபிலாம்பிகே//

அரச மரத்திலோ வானத்திலோ கருடனைக் காண்பது நமக்கு நன்மை தருவதாகும். ஞாயிறன்று கருட தரிசனம் கண்டால் சுபகாரியங்கள் ஈடேறும். திங்களன்று கண்டால் எண்ணங்கள் ஈடேறும். செவ்வாயன்று கண்டால் உணவுப் பஞ்சம் தீரும்; நல்ல உணவு கிடைக்கும். புதன்கிழமை கண்டு வணங்கினால் அகால மரணம் அகலும். வியாழனன்று காண்பது மனத்துயரைப் போக்கும். வெள்ளியன்று தரிசித்தால் பெரிய சிரமங்கள் நீங்கும். சனிக்கிழமையில் காண்பது பதவி உயர்வையும் பெருமைகளையும் பெற்றுத் தரும். திருமாலின் வாகனமும், வினதையின் குமாரனும், பட்சிராஜனுமாகிய கருடனை தரிசனம் செய்யும் காலத்தில் கீழுள்ள மந்திரத்தைக் கூறி வணங்கினால் மேற்சொன்ன நன்மைகளை நிறைவாகப் பெறலாம்.

“குங்குமாங்கித வர்ணாய
குந்தேந்து தவளாய ச/
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம்
க்ஷேமம் குரு ஸதா மம//

நற்கதி தரும் நற்செயல்களைச் செய்ய வேண்டுவது நமது கடமை. துளசிவனம் வைத்து வளர்த்தால் பாவம் அகலும். மரங்களை வளர்ப்பது இகத்திலும் பரத்திலும் சுகம் தரும். சுமங்கலி பூஜை செய்தால் சௌமாங்கல்யம் கிட்டும். புதிதாய் கிணறு, குளம் வெட்டுவது அல்லது புதுப்பிப்பது, தாய்க்கு மகன் பட்ட கடன்களைத் தீர்க்கும். ஆலயத்தைப் பெருக்கித் தூய்மை செய்து, பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டால் சொர்க்க பாக்கியத்தை அடையலாம்.

செல்வத்தைப் பெற லட்சுமிக்குரிய ஸ்ரீசூக்தத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். பசுவை வணங்குவதால் அனைத்து தேவதைகளின் அனுக்கிரகமும் கிட்டும். எப்போதும் விபூதியையும் ருத்ராட்சத்தையும் அணிந்திருந்தால் நோய்கள், பாவங்கள் அகலும்; ஆரோக்கியம், புனிதத்தன்மை, ஆன்மபயனைத் தரும். பசுவின் சாணமும், பசுவின் சிறுநீரும் லட்சுமியும் கங்கையுமாக விளங்குபவை. எனவே இவை உடல், பொருள், இடம் ஆகியவற்றைப் புனிதப்படுத்த எங்கும் உபயோகிக்கத்தக்கவை.ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்வது  எல்லாவித பாவங்களையும் போக்கும்; அனைத்து நன்மைகளையும் தரும். அறுகம்புல்லை தினமும் ஆலயத்தில் அர்ப்பணித்தால் கெட்ட கனவுகள் நீங்கும். தினமும் சூரியனை வழிபடுவதால் கண் நோய் வராமல் காக்கலாம். ஆரோக்கியம் மேம்படும். “சிவ’ என்றும், “ராம’ என்றும் இரு எழுத்துகளை பலமுறை உச்சரித்திட பிறவிப் பயன் கிட்டும். ஆஞ்சனேயரை எண்ணினால் தைரியம், பலம் கிட்டும். குருவை வணங்கினால் ஞானம் பெறலாம். இத்தகைய வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றினால்கூட ஆன்ம முன்னேற்றம் அடையலாம்.

(தொடரும்)

ஆலய வழிபாட்டின் சிறப்புகளையும், அங்கு பின்பற்றப்படும் செயல்களுக்கான அறிவியல் காரணங்களையும் இத்தொடர் கட்டுரையில் இதுவரை கண்டுவந்தோம். இப்போது ஆலயங்களிலுள்ள தலவிருட்ச சிறப்புகள் பற்றி காணலாம்.

உலகிலுள்ள உயிர்களை உய்விக்கும் நன்னெறிச் சமயங்களில் நமது இந்து சமயம் தன்னிகரற்றதாக விளங்குகிறது. அவரவர் மனதின் பக்குவ நிலைக்கேற்ப, இறைவழிபாட்டுக் கொள்கையானது உருவநிலை, அருவுருவ நிலை, அருவநிலை என மூன்றாக உள்ளது.

இறைவனை உருவற்ற நிலையில்- உண்மை, ஞானம், ஆனந்தம் என பண்புத்திறன் வடிவில்- எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பவராகக் காண்பது அருவநிலை வழிபாடு. இது யோகியர், ஞானியருக்கானது. சாதாரண மக்களுக்கு இது அரிய செயல்.

எங்கும் எதிலும் பரம்பொருளே உள்ளார் என்று நாம் உணர முயலவேண்டும். ஒரு இலக்காகத் தெரிகிற உருவத்துள்ளே, தெரியாத நிலையில் வேறொரு உருவாய் இறைவன் உள்ளதாகக் கருதி வழிபடுவார்கள். இது அருவுருவ வழிபாடு. உதாரணமாக சிவலிங்கத் திருமேனியைச் சொல்லலாம்.

உருவ வழிபாடென்பது நடராஜர், அம்பாள், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, விநாயகர், முருகர் போன்ற துலங்கித் தெரியும் இஷ்ட தெய்வ வழிபாட்டைச் சொல்லலாம்.

இதில் உருவ வழிபாடு முதல்படி. அருவுருவ வழிபாடு அதனினும் மேம்பட்டது. அருவ வழிபாடென்பது முதுநிலை. நம் மனோலயத்தை படிப்படியாக இறைவனிடம் மேம்படுத்துவதே நமது வழிபாட்டு நெறியாகும்.

இவ்வகைக்குள் தாவரமான மரங்களை ஒரு இலக்காகக்கொண்டு, அருவநிலையிலிருந்து அதனை அசைத்திடும் காற்றை கடவுளாகக் கருதி வழிபடுவது ஒரு முறையாகும். இது மிகச்சிறந்த அருவுருவ வழிபாட்டு நெறி. தெய்வீக மரங்களை இறைவனின் திருமேனியாகக் கண்டு, அவற்றைக் காத்து வணங்குவது பொதுநலத்துடன் கலந்த அறநெறியாகும்.

தேவர்களும் மண்ணுலகு வந்து, தெய்வீக மரத்தின்கீழ் இறையுருவங்களை நிறுவி வழிபட்டுப் பேறுபெற்றனர் என்பதை புராணங்களிலும் இதிகாசங்களிலும் காண்கிறோம். காடுகளில் மரத்தடிகளில் இருந்த தெய்வாம்சத் தால் அப்பகுதியில் ஏற்பட்ட அதிசயங்களைக் கண்டுணர்ந்த மன்னர் முதலானோர், அந்த தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைத்துப் போற்றிவந்ததையும் அறிகிறோம். இத்தகைய மரங்களே பழம்பெருங் கோவில்களில் தல மரங்களாக விளங்கிவருகின்றன. எப்பகுதியில் எந்த வகை மரங்கள் அதிகம் இருந்தனவோ, அவற்றின் பெயராலேயே தலங்கள் விளங்கி வருவதையும் காணலாம்.

மிகத் தொன்மையான வேதகாலத்தில், பெருவேள்விகள் நிகழ்த்தும்போது யூபஸ்தம்பங்கள் எனப்படும் வேள்வித் தூண்களாக அத்திமரம் போன்றவை நடப்பட்டு வழிபடப் பட்டன. பிற்காலத்தில் காடுகளைத் திருத்தி மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளை அமைத்தபோது, நிலத்தை சீர்படுத்தியவுடன் ஆகம வாஸ்துப்படி எட்டு திசைகளிலும் எட்டு வகையான பெரு மரங்களை நடவேண்டும் என்று விதித்திருந்தார்கள். கிராமத்தின் எண்திசைக்கான சைத்யவிருட்சங்கள் என்று பெயரிட்டு வழிபட்டுவந்தனர்.

இறைவனின் உறைவிடமாகவும், உயிர்கள் ஒடுங்கி உய்வுபெற தூண்டுதல் தரும் புனிதத் தலமாகவும் விளங்குபவை ஆலயங்கள். அங்கே ஒரு மரம் அல்லது தாவரத்தை தலவிருட்சம் என்று போற்றிவருவர். அரசு, வில்வம், ஆலம், வன்னி, அத்தி, சரக்கொன்றை, சந்தனம், பாதிரி, நெல்லி, மா, புன்னை, மகிழம், வேம்பு போன்ற மரங்கள் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. கோவில்களுக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றை சிறப்பாகச் சொல்வர். இவற்றில் தலவிருட்சம் மூர்த்தி வகையைச் சேர்ந்தது. அதுபோல மணி, மந்திரம், ஔஷதம் எனும் மூன்றனுள், தலவிருட்சத்தின் இலையானது ஔஷதம் (பச்சிலை) என்பதில் அடங்கும். இதனையே பூஜிக்கவேண்டும் என்பதை திருமூலர், “யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை’ என்கிறார்.

தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகை மரங்களுள் அரசமரம் முதன்மையானது.

இம்மரத்தின் இலைகள் தேவர்களுக்கு இருக்கைகளாகவும் வசிப்பிடமாகவும் உள்ளன. நான்கு வேத ரூபமானதும், மும்மூர்த்திகளின் ஓருருவாக விளங்குவதும் அரசமரமே என்று வேதங்கள் போற்றுகின்றன. இது எங்கும் எந்தச் சூழலிலும் வளரக்கூடிய மரமாகும். அரச மரமானது சமஸ்கிருத மொழியில் அச்வத்தம், பிப்பலம், போதிவிருட்சம், சலதளம், குஞ்சராசனம், பூதாவாசம், அக்னிகர்பம், விருட்சராஜம், சமீபதி, வனஸ்பதி, வைணவம், யக்ஞாங்கம், இந்த்ரானுஜம், விருக்ஷேந்திரம், நிம்பபதி, ஹயாம்சஜம் என்னும் பதினாறு பெயர்களால் போற்றப்படுகிறது.

சூரியனின் தேரிலுள்ள ஏழு குதிரைகளின் அம்சமாக அரசமரம் பூமியில் தோன்றியதென்பர். எனவே இம்மரத்தை எப்போதும் ஏழுமுறை வலம்வரவேண்டும். உதயகாலத்தில் பூஜிப்பதும் முக்கியம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மரத்தைக் குறிப்பிட்டிருப்பினும், அனைத்து தெய்வங்களுக்கும் விருப்பமானது அரச மரம் ஒன்றே. இம்மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் நித்திய வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது.

“மூலதோ பிரம்ஹரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே/
ஆக்ரத: சிவரூபாய
விருக்ஷராஜாய தே நம//’

என்னும் மந்திரம் கூறி அரசமரத்தை வணங்கவேண்டும்.

இந்துசமய நெறியில் வாழ்வோருக்கு, அரசமரத்தை வலம்வருதல் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக விதிக்கப்பட்டுள்ளது. அமாவாசை அல்லது திங்கட்கிழமை அல்லது அமாசோம விரத காலங்களில் அங்கப்பிரதட்சிணம் செய்வதும் நியதி. பாவங்கள், தோஷங்கள், நோய்கள் அகலவும், உடல்நலம் பெறவும், மகப்பேறு அடையவும் அரசமரத்தை வலம் வருதலும், அரசமரத்தடியில் விநாயகர் அல்லது நாகர் பிரதிஷ்டை செய்து வழிபடுதலும் ஏற்றது.

தெய்வப் பிரதிமைகள் செய்யவும்; கோவில், யாகசாலைக்கான பொருட்கள், வாகனங்கள் செய்யவும் அரசமரம் அவசியத் தேவையாகிறது. ஆனால் மனிதர்கள் தங்கள் சொந்த உபயோகத்
திற்காக வீடு கட்டவோ இதர பொருட்கள் செய்யவோ அரசமரத்தைப் பயன்படுத்தக்கூடாது.

அரச மரத்தின் அனைத்துப் பொருட்களும் ஆலய சிறப்புப் பூஜைகளிலும், யாகங்களிலும் பயன்படக்கூடியவை. அரச சமித்தின் யாகாக்னி புகையானது ஆரோக்கியம், ஆயுளைத் தருவது.

அரசமரக் காற்றானது நோய் நீக்கும். புனிதப்படுத்தும் சடங்குகளில் அரசமரத்தின் தேவை முதலிடம் வகிக்கிறது. இந்த மரக்கட்டையில் அக்னியை உண்டாக்கும் கருவியாகிய அரணிக்கட்டையைச் செய்து, அதைக் கடைந்து யாகத்தீயைத் தோற்றுவிப்பார்கள். அரசமரமானது யாகத்தில் யூபத்தூண்களாகவும், யாகசாலையில் கிழக்கு அல்லது மேற்கில் தோரணவாயிலாகவும், குச்சிகள் சர்வதேவதா ஹோமங்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது.

விநாயகர் அல்லது விஷ்ணுவின் உருவப்பதுமைகளை முறைப்படி அரசமரத்தினால் செய்து ஜெபித்தால் மந்திரசித்தி உண்டாகும். மேலும் பூஜைக்குரிய சிவலிங்கம், திரிசூலம், பிம்பம், பாலாலயம், பாலபிம்பம் முதலியவற்றை இம்மரத்தில் செய்வது உரிய பயனை விரைந்தளிக்கும்.

அரசமரத்தடியில் தவமிருத்தலால் யோகசித்தியும், ஞானசித்தியும் கிட்டும். புத்தர் முதலான பல மகான்கள் அரசமரத்தடியில் தவமிருந்தே ஞானம் பெற்றனர். முருகனின் திருக்கையில் விளங்குகிற ஞானவேல் என்பது அரச இலையின் உருவத்திலேயே இருப்பதும், யாகத்தில் சிதக்னிகுண்டம் என்பது அரச இலையின் வடிவமாய் உள்ளதும் இம்மரத்தின் ஆற்றலை உணர்த்தும். இம்மரத்தின் பட்டை, இலை, மொக்கு, அடிமண்ணை எடுக்கும்போது முதலில் மரத்தைப் பூஜித்து, பின்பு அதனிடம் யாசித்து தான் பெறவேண்டும்.

வலம்வரும் விதிமுறை

அரசமரத்தை விடியற்காலையில் வலம் வரவேண்டும். அதிகாலை முதல் 9.00 மணி வரையிலான பொழுதில் அரசமரத்தை ஈரத்துணியுடன் பிரதட்சிணம் செய்வது விரைவில் பலனைத் தரும். இம்மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொடலாம் என்பது சாஸ்திர விதி. அமாவாசை, ஏகாதசி, சப்தமி, பஞ்சமி ஆகிய திதிகளிலும்; சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய கிழமை களிலும் அரசமர வலம்வருவது சிறப்பைத் தரும்.

விநாயகருக்கு ஒன்று; சூரியனுக்கு இரண்டு; சிவனுக்கும் பார்வதிக்கும் மூன்று; விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும், மகான்களின் சமாதிகளுக்கும் நான்கு என்ற எண்ணிக்கையில் வலம் வந்தால், அரசமரத்திற்கு மட்டும் ஏழு முறை வலம்வருதல் சாஸ்திர விதிமுறை.

இவ்விதம் வலம் வரும்போது நிதானத்துடன் அடிமேல் அடிவைத்து, கைகளைக் கூப்பிக்கொண்டு, ஸ்தோத்ரத்தை உச்சரித்த வண்ணம் அமைதியுடனும் தூயஎண்ணத்துடனும் வலம்வர வேண்டும். ஒருபோதும் வேகமாகச் சுற்றிவரக்கூடாது. அரச மரத்தடியில் தெய்வமூர்த்தம், நாக லிங்கம் போன்றவை இருப்பின் அவற்றை தனியே விலக்கிவிடாமல் மரத்துடன் சேர்த்தே வலம்வர வேண்டும்.

திங்கட்கிழமையில் அமாவாசை திதியும், ஞாயிற்றுக்கிழமையில் சப்தமி திதியும், செவ்வாய்க்கிழமையில் சதுர்த்தி திதியும், புதன்கிழமையில் அஷ்டமி திதியும் சேர்ந்து வந்தால் அந்த நாள் அரிய புண்ணிய தினமாகும். அந்த நாட்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முடித்து, புனிதராய் இருந்தவாறு அரச மரத்தைப் பூஜிக்கவேண்டும்.

பூஜைமுறை

அரசமரத்தடியில் அரிசிமாக்கோலங்களால் பூமியை அலங்கரித்து, காலம், தேசம், பயன், நோக்கம் ஆகியவற்றை முதலில் சங்கல்பம் செய்துகொண்டு, கலசபூஜையைச் செய்யவேண்டும்.

அரசமரத்தடியில் ஒரு அந்தணரை அமரச்செய்து பூஜிப்பது நன்மை தரும். தம்பதியராக பூஜித்தால் சிறந்த பயனடையலாம். சனிக்கிழமைகளில் தம்பதியை மரத்தடியில் இருத்தி லட்சுமி நாராயணராகவும், திங்கட் கிழமையில் உமா மகேச்வரராகவும் எண்ணி பூஜிக்கவேண்டும். இவ்வாறு பூஜித்து வலம் வருவோர் பலவகை கொடிய நோய்களிலிருந்தும்; தோஷங்கள், மனத்தளர்ச்சி, மனவருத்தம் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெற்று, மக்கள் செல்வத்தையும் பெறுவார்கள் என்பது உறுதி.

சனிக்கிழமையில் அரச இலையில் சனி பகவானை எண்ணி வணங்கி வலம்வந்தால், சனிகிரக தோஷம் அகலும். நீண்ட ஆயுளும், உடல்நலமும் கிட்டுவது திண்ணம்.

“அச்வத்தபர்ணே சரசாபஹஸ்தம்
திஷ்டந்தமீட்யே வரதம் வரேண்யம்/
சநைச்சரம் பூரி வரப்ரதம் தம்
நமாம்யஹம் துக்கவிநாயசனாய//

என்று கூறி வணங்குவதால் சனி பகவானின் அருளும், விஷ்ணுவின் அருளும் கிட்டும்.

அரசமரத்தில் மின்காந்த சக்தியும், தாமிர சக்தியும் உள்ளது. உடல் நலமில்லாதவர்களும், மனக்குழப்பம் உள்ளவர்களும் சுத்தமான நீரில் தலைமுழுக்காடி, ஈரத்துணியுடன் தினமும் அரசமரத்தை காலையில் சுற்றிவந்தால் நாளுக்குநாள் சிறப்பாகத் தெளிவடைந்து, பரிபூரண நலம் பெறுவர். பொதுவாக மின்சாரமானது ஈரமான பொருட்களில் விரைவில் பரவும் தன்மைகொண்டதாகும். அரசமரத்தில் உள்ள மின்சார காந்த சக்தியானது அரச இலைகளின் நுனிவழியாக, ஈர ஆடையுடன் மரத்தடியில் வலம்வரும் அடியவர்களின் உடலில் சிறிது சிறிதாகப் பரவும். நாளுக்குநாள் இது அதிகரிப்பதால் உடல் உபாதைகள் நீங்கும். உடல் வலிமையடைந்து ஆரோக்கியம் அடைகிறார்கள்.

தல விருட்சம் பற்றிய மேலும் பல தகவல்களை அடுத்த இதழில் காண்போம்.

(தொடரும்)

ஒரு ஊர் செழிப்புடன் விளங்க உற்சவங்கள் எவ்வளவு அவசியம் என்பதையும், அவை குறித்த சில அடிப்படை விவரங்களை யும் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சிலவற்றை இங்கு காணலாம்.

உற்சவக் கிரியைகளில் முக்கியமான ஒன்று “பேரீதாடனம்’ என்பதாகும். அதாவது முரசு கொட்டுதல். செய்தி அறிவிப்பின் பொருட்டும், பிரம்மோற்சவத்திற்கு தேவதை களை அழைத்தலின் பொருட்டும், அவர்களை மகிழ்விப்பதன் பொருட்டும் முரசு ஒலிக்கப் படுகிறது. அப்போது 18 வகையான இசைக்கருவிகளை ராக தாளங்களுடன் இசைத்து தெய்வங்களை மகிழ்வித்தல் வேண்டும். தெய்வத் திருமேனிகள் வீதியுலா புறப்படும் காலத்திலும், கொடியேற்றம் மற்றும் கொடியிறக்கம் செய்யும் சமயத்திலும், வாஸ்து சாந்தி, தீர்த்தோற்சவம் போன்ற சிறப்புக் கிரியைகளின்போதும் பேரீதாடனம் செய்யத்தக்கது என்பது சைவாகமங்களின் கருத்து.

பெரும் ஓசையை எழுப்பும் தோல்கருவியே “பேரீ’ என்பதாகும். தற்காலத்தில் சற்று சிறியதாக தவில் என்னும் மேளத்தைக் கையாள்கின்றனர். இந்த மேளத்திற்கும் பல சிறப்புகள் உள்ளன. மேளத்தின் மையப்பகுதியில் ருத்ரமூர்த்தியும், அவரது வலப்பக்கம் பிரம்மாவும், இடப்பக்கம் விஷ்ணுவும், முளைக்குச்சி கீலங்களில் பிராம்மி முதலான ஏழு அன்னையர்களும் மற்றும் நவகிரகங்களும், கட்டியுள்ள தோலாலான கயிற்றில் வாசுகி என்னும் பெரிய நாகமும், அடிக்கும் கோலில் சண்முகரும் விளங்குவதாக பாவித்து, ஆவாஹனம் முதலான 16 வகை உபாசாரங்களைச் செய்யவேண்டும் என்று ஆகமபூஜா பத்ததி என்னும் நூல் கூறுகிறது.

உற்சவக் கிரியையை மூவுலகுக்கும் அறிவிக்கும் நோக்கில் முரசு அல்லது மேளத்தை ஒலிக்கச் செய்வதால், இதற்கென உள்ள விதிப்படியே செய்தல் வேண்டும். இதற்காக ஆச்சாரியர் முதலில் பிரஹர தண்டம் அல்லது தர்ப்பையால் மூன்று முறை அடிக்கவேண்டும். பிரம்மதேவரின் வேதாகம மந்திரத்தால் முதல்முறையும், விஷ்ணுவின் வேதாகம மந்திரத்தால்  இரண்டாவது முறையும், ருத்ரமூர்த்தியின் வேதாகம மந்திரத்தால் மூன்றாவது முறையும் அடித்து முழங்கச் செய்யவேண்டும். இந்த ஒலியைக் கேட்கும் மக்கள் சொர்க்கம், ஆகாயம், பூமி ஆகிய மூன்று உலக இன்னல்களிலிருந்தும் விடுபடுவர்; மகிழ்ச்சியுடையவராவர் என்கிறது ஆகமம். மும்முறை ஒலித்தபின் ஆச்சாரியர் முரசு கொட்டுபவரை அழைத்து, அவருக்கு புனிதநீர் தெளித்து, தீட்சையும் நல்லாசியும் வழங்கி, பூணூல், மேலாடையான உத்தரீயம், மலர் மாலை அணிந்திடச் செய்து, சந்தனம், விபூதி, ருத்ராட்சை போன்ற சமயச் சின்னங்களை அணியச் செய்யவேண்டும். பின்னர் ஆச்சாரியர் வாத்தியக்காரர் கையில் மலர்களைக் கொடுத்து இசைக்கருவிக்கு புஷ்பாஞ்சலி செய்விக்க வேண்டும். பின்னர் அந்த வாத்தியக்காரரால் கணபதி தாளம் முதலாக, தெய்வங்களுக்கு மிக விருப்பமான தாள வகைகளை வாசித்திடச் செய்ய வேண்டும். இப்படி பல விவரங்கள் வரையறுக் கப்பட்டுள்ளன.

அடுத்து, உற்சவ காலங்களில் பாலிகையில் விதை விதைத்தல் என்னும் அங்குரார்ப்பணம் பற்றி சில விவரங்களை அறியலாம். முளைப்பாலிகை இடுதலுக்குமுன், யாகபூஜையின் பொருட்டு புனித மண் எடுத்துவரும் கிரியை நடக்கும். இதை மிருத் சங்கிரஹணம் என்பர். ஊருக்கு சாந்தி தருவதும், நாட்டுக்கும் ஆள்வோருக்கும் மேன்மையைத் தருவதுமான இந்தச் செயல் தவறாமல் செய்யத்தக்கது. தேவதை பிரதிஷ்டை செய்யப்படும் காலம், சம்ப்ரோக்ஷண காலம், தீட்சா காலம், பவித்ரோற்சவ காலம், வசந்தோற்சவ காலம், கிருத்திகா தீபோற்சவ காலம், சக்தி ஸ்தாபன காலம், தீர்த்தோற்சவம் மற்றும் டோலோற்சவ காலங்களில் பாலிகையில் விதை விதைப்பதற்குமுன் புனிதமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இவற்றில் பிரம்மோற்சவ காலத்தில் இதை கண்டிப்பாகச் செய்யவேண்டும்.

ஆச்சாரியரானவர் ஆலயத்துக்கு கிழக்கு திசையிலோ அல்லது வடக்கு திசையிலோ புனிதமண் எடுப்பதற்காகச் செல்லவேண்டும். நதிக்கரை, குளக்கரை, வில்வமரத்தடி, துளசி வனத்தின் துளசிச் செடியின் அடி, தானியம் விளையும் நிலம், தர்ப்பைச் செடியின் அடி, புற்றின் அடி, பூந்தோட்டம், யக்ஞவிருட்ச வனப்பகுதி, அரச மரத்தடி முதலான இடங்களில்தான் புனிதமண் சேகரிக்கவேண்டும்.

எங்கெல்லாம் முளைப்பாலிகை நடத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் புனித மண் எடுத்துவரும் செயலை கொடியேற்றும் ஆச்சாரியரே முன்னின்று செய்யவேண்டும். இனி, சகல ஆகம சங்கிரணம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ள சிவ உற்சவத்துக்கான மண் சேகரிப்பு முறையைக் காண்போம்.

ஆச்சாரியர் முதலில் ஆலயத்திலுள்ள மூலவரான விநாயகரை முறைப்படி பூஜித்து அவருடைய அனுமதியைப் பெறவேண்டும். பின்னர் பூஜிக்கப்பட்ட உற்சவ விநாயகர் விக்ரகத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லவேண்டும். உரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலின்கீழே கணேசரை இறக்கிவைத்து, அவரைப் பூஜித்து அனுமதி பெறவேண்டும். பிறகு புண்யாவாசனம் செய்து, அவ்விடத்தில் புனிதநீர் தெளித்து தூய்மையாக்கவேண்டும். மனோபாவனையால் துவார பூஜையுடன் பஞ்சசுத்தி செய்து முடிக்கவேண்டும். (அங்கு சண்டேசர் இருப்பின் அவரை ஈசான மூலையிலும், அஸ்திர தேவர் இருப்பின் மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி வைத்தும் பூஜிக்கவேண்டும்.)

பின்னர் மண் எடுக்கவுள்ள தரையில் கிழக்கு வடக்காக சமசதுரமாய் கோடிட்டு, அதைச் சுற்றி தர்ப்பை மற்றும் பூக்களால் நான்கு கோட்டம் உள்ளதாய் (சதுஷ்பத மண்டலம்) அமைத்து, அதில் வாஸ்து அதிபதியாகிய பிரம்ம தேவரை பூஜித்து, அன்னத்தால் பலிகொடுத்து வேண்டிக்கொள்ள வேண்டும். பின்னர் பூமாதேவியை அங்கு உருவகப்படுத்தி, நான்கு வேதியர்களைக்கொண்டு பூமி சூக்த மந்திரத்தை ஜெபிக்கச் செய்தல் வேண்டும்.

பின்பு மண்வெட்டியை நீராட்டித் தூய்மை செய்து அலங்கரித்து, சம்ஹிதா மந்திரத்தை அதில் நியாசம் செய்து, சிவாஸ்திரம் அல்லது விஷ்ணுவை அதில் பூஜிக்கவேண்டும். அந்த மண்வெட்டியைக் கொண்டு அஸ்திர மந்திரம் பூஜித்த மண்தரையைத் தோண்ட வேண்டும். தேங்காய் அளவு மண்ணை மூலமந்திரம் உச்சரித்த வண்ணம் மூன்று முறை மட்டும் எடுத்து, ஒரு பெரிய உலோகப் பாத்திரத்தில் அந்தப் புனித மண்ணை வைத்து, வாமதேவ மந்திரம் சொல்லி புதிய துணியால் அந்த பாத்திரத்தை மூடவேண்டும். பின் மண் எடுத்த தரைப்பகுதியை சமப்படுத்தி மூடி அங்கு தானியத்தை விதைத்து, ஏழு கடல் பூஜித்த நீரால் நனைத்து, பின் எடுத்துவைத்த மண் மற்றும் தெய்வங்களை பூஜிக்கவேண்டும். பின்னர் அனைத்தையும் ஊர்வலமாகக் கொண்டுவந்து, யாகசாலையில் உள்ள வேதிகையில் புனித மண்ணையும்; கணேசர் உள்ளிட்ட உற்சவ விக்ரகங்களை அவரவர் ஸ்தானத்திலும் சேர்க்கவேண்டும்.

இதில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். விதைப்பதற்காக கொஞ்சம் மண் எடுத்துவரும் செயல்தான். இதற்கு எத்தனை சாஸ்திர நியதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன பார்த்தீர்களா! இவையெல்லாம் சாதாரண சடங்குகளல்ல. அதிநுட்பமான கணக்குகள். அத்தனையும் இறைசக்தியை எள்ளளவும் குறைவின்றி இடம்மாற்றும் மகத்தான அறிவியல்.

இதற்கு அடுத்த கட்டம்தான் அங்குரார்ப்பணம் எனும் விதை விதைத்தல். சைவாகமங்களில் அனைத்து நைமித்திக கிரியைகளிலும் முதலில் செய்யப்படுவது இதுவேயாகும்.

அங்குரம் என்ற சொல்லுக்கு தானிய விதையிலிருந்து வெளிப்பட்டு, மூன்று நாளான முளைவிட்ட விதை என்பது பொருள். அந்த விதையை பாலிகையின் மண்ணிலிட்டு நீரூற்றி வளர்ப்பதும், அதன் வாயிலாக பயனறிவதும், பயன்படுத்துவதும் இதன் நோக்கமாகும். இது சிருஷ்டி கர்மாவை உணர்த்தும் செயலாகும். உற்சவம், ஸ்தாபனம், அஷ்டபந்தனம், சம்புரோக்ஷணம் போன்ற அனைத்து நிகழ்வுகளின்போதும் இது செய்யப்பட வேண்டும். இதற்கான நாளைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம்.

அதாவது தீர்த்தம், கொடியேற்றம், யாகாரம்பம், தேவதா பிரதிஷ்டை (மூலமந்திர நியாசமான கும்பாபிஷேகம்) போன்றவற்றை முதலில் முடிவு செய்துகொள்ளவேண்டும். இவை என்று செய்யப்படுகிறதோ அந்த தினத்தையும் கணக்கில் கொண்டு, அதற்கு முன்னதாக ஒற்றை இலக்க நாட்களில் (1, 3, 5, 7 என்றவாறு) விதை விதைத்தலைச் செய்யவேண்டும். இதை ஒரு மாதம் வரை செய்யலாம். அதற்குமேல் செய்யக்கூடாது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நாள் சுபமானதாக இருக்கவேண்டியது அவசியம். இதில் நாள் கணக்கு முக்கியமென்பதால், அதில் சுபதினம் அமையாதபட்சத்தில், மாலையில் சூரியன் மறைந்த பின்பு மேற்கொள்ளலாம். அல்லது காலையில் செய்துவிடவேண்டும்.

அங்குரார்ப்பணம் செய்யப்படும் பாத்திரங்கள் பொன், வெள்ளி, தாமிரம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டதாகவோ அல்லது சுட்ட மண் பாண்டமாகவோ இருக்கவேண்டும். இவை மூன்று வகை வடிவங்களிலும் ஒன்பது வகை அளவுகளிலும் உள்ளவை. கிண்ணம் போன்றதும், அகன்ற வாயுடையதும், பாதமுள்ளதுமான வடிவம் பாலிகை; குடம் போன்றதும், துளையுள்ளதும்,
அகன்ற வாயுடையதுமான வடிவம் கடிகை; வட்டமானதும், மூடிபோன்ற மடக்கு வடிவமுடையதும் சராவம். இவற்றைத் தாங்க ஆதாரமான வேறொரு தூண் போன்ற பாத்திரம் இருக்கும். இந்த அமைப்புகள் ஆரம்பகால பயிர் வளர்ப்புக்கும், தட்ப வெப்ப நிலை பராமரிப்புக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிகையின் எண்ணிக்கை உத்தமம், மத்திமம், அதமம் என பலவாறாக இருப்பினும், 12 பாலிகைகள் வைக்கும் முறையே பரவலாகப் பின்பற்றப்படுகிறது. முறைப்படி பாலிகைகளை ஸ்தாபித்து, அதனடியிலுள்ள துவாரத்தை அரசிலை, மாவிலை போன்றவற்றால் அடைத்து, கொண்டுவந்து வைத்துள்ள புனித மண்ணை அதிலிட்டு சமப்படுத்தி பூஜித்தபின்பு, மந்திரித்த தானிய விதைகளை அதில் விதைக்கவேண்டும்.

மூன்று வகை பாத்திரங்களை மேலே கண்டோம். அதில் சராவ வகைக்கு பிரம்மாவும், பாலிகைக்கு விஷ்ணுவும், கடிகைக்கு ருத்திரனும் அதிதேவதைகளாவர். இவற்றின் உச்சியில் 16 கலைகளுடன் கூடிய சந்திர மண்டலமும், நடுவில் 12 கலைகளுடன் கூடிய சூரிய மண்டலமும், அடியில் 10 கலைகளுடன் கூடிய அக்னி மண்டலமும் உள்ளதாக பூஜிப்பார்கள். 12 பாலிகைகளில் 12 சூரியர்கள் பூஜிக்கப்படுவர். இவ்வாறு, வானில் பிரத்யட்சமாக ஒளிரும் சூரியன், சந்திரன் மற்றும் கார்த்திகை, ரோகிணி நட்சத்திரங்கள் ஆகிய கர்ம சாட்சிகளான ஜோதிகள் பூஜிக்கப்படுவதை உற்று நோக்கினால், அங்குரார்ப்பண கிரியையின் மகிமையை உணர்ந்துகொள்ள முடியும்.

நெல், தினை, நாயுருவி, யவை, சியாமை, எள், கடுகு, பயறு, உளுந்து, மொச்சை ஆகிய பத்து வகை விதைகளைப் பயன்படுத்தலா மென்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது. இவற்றை பாலால் கழுவி, தசபீஜ மந்திரத்தைச் சொல்லி விதைக்கவேண்டும். 12 பாலிகைகளில் உள்ள மண்மீது விதைகளை விதைத்து அவற்றின்மீது சிறிது மண்ணைத் தூவ வேண்டும். அதன்மீது நீர்தெளித்துப் பூஜிக்கவேண்டும். பூஜை முடியும் நாள்வரை இருவேளையும் பூஜித்து, குளிர்ந்த நீர்தெளித்து நன்கு வளர்க்கவேண்டும்.

இந்த நியதி முறையாகப் பின்பற்றப் பட்டால் மற்ற அனைத்து செயல்களும் சிறப்பாக நிறைவேறி, நாம் எண்ணிய பலன்களை முழுமையாக ஈடேற்றித் தரும்.

(தொடரும்)

திருக்கோவில்களில் இறைவனுக்குச் செய்யப் படும் அர்ச்சனை, அபிஷேக விதிகள் குறித்த சில விவரங்களை கடந்த இதழ்களில் பகிர்ந்துகொண்டோம். இனி உற்சவங்கள் குறித்து சில அடிப்படை விவரங்களைக் காண் போம்.

ஆலயங்களில் நடை பெறும் வழிபாடுகள், உற்சவங்கள், திரு விழாக்கள் அனைத் தும், உயிர்களென்னும் பசுக்கள் பாசமெனப்படும் பற்றறுத்து பதியாகியாகிய இறைவனோடு சேரும் உட்பொருளைத்தான் குறிக்கின்றன.

பதி, பசு, பாசம் எனும் முப்பொருளை உணர்த்திட பத்து நிலைகளை சைவ சித்தாந்தம் கூறுகிறது. தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் என்னும் அந்த பத்து நிலைகளும் “தசகாரியம்’ எனப்படும். உற்சவத்தில் நிகழ்த்தப்பெறும் பல்வேறு செயல்களும் இந்த பத்து நிலைகளில் அடங்கும் என்பர் பெரியோர். கொடியேற்றம் தொடங்கி தீர்த்தவாரி வரையிலான செயல்களில் இவை அடங்கும். இதை “த்வஜா ரோஹாதி தீர்த்தாந்தம் தசகார்யமிதம் பவேத்’ என்னும் ஆகம வாக்கியத்தால் அறியலாம்.

ஆலயங்களில் இறைவனுக்குச் செய்யப்படும் வழிபாட்டுக் காரியங் களில் சிறப்பு அங்கமாக விளங்குவது உற்சவமாகும். மூலஸ்தானத்தில் விளங்கும் இறைவனே உற்சவ மூர்த்தங் களில் எழுந்தருளி, பரிவார தெய்வங்கள் சூழ வீதியுலா வருதலே உற்சவம் எனப்படும்.

ஆலயத்தில் மூலவரை பிரதிஷ்டை செய்தவுடன் முதன்முதலாகச் செய்யப்படுவது பிரதிஷ்டோற்சவம். பின்பு தொடர்ச்சியாக வசதிக்கேற்ப நித்யோற்சவமும், ஆண்டுக்கொருமுறை மஹோற்சவம் நடத்தப்படும். சிறப்பு தினங்களில் ஒருநாள் செய்யப்படுவது சிரத்தோற்சவமாகும். எந்த ஊரிலுள்ள ஆலயமாயினும், அவ்வூரின் வளர்ச்சிக்காக ஒரு ஆண்டில் ஒரு நாளாவது உற்சவம் நடத்தப்படவேண்டும் என்கிறது சைவாகமம்.

உற்சவம் என்பது ஒரு உத்தம யாகமாகும். இறைவன் உயிர்களுக்குச் செய்தருளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறிப்பதாகவும்; உலக மக்கள் வெகுகாலம் நலமுடன் வாழ மூலகாரணமாகவும் இருப்பது உற்சவமாகும். உலகில் வாழும் 84 லட்சம் உடல் வகையில் வாழும் எண்ணிலா உயிர்களுக்கு சுகவாழ்வையும், பரமபத முக்தியையும் கொடுப்பது உற்சவமே என்கின்றன சைவாகமங்கள்.

உற்சவம் என்னும் சொல் படைப்பாற்றலை உணர்த்துவதாகும். இதை சிவபெருமான் காரணாகமத்தில்,

“ஸவ இத் யுச்யதே சிருஷ்டிர்
ததுத் ஸ்யாத் சப்த பாஷிதம்
உத்பூதஸ் சிருஷ்டி காரத்வாத்
உத்ஸவம் கதிதோ மயா’

என்று விளக்குகிறார். அதாவது “உத்ஸவ’ என்ற சொல்லிலுள்ள “ஸவ’ என்ற பதம் சிருஷ்டி என்பதையும், “உத்’ என்ற பதம் உண்டுபண்ணுதல் என்பதையும் உணர்த்துவதாய்- உலகசிருஷ்டியைக் குறிக்கிறது என்கிறார். உலகில் படைப்புக்கு மூலகாரணமாக இருப்பது மகிழ்ச்சியே. அத் தகைய மகிழ்ச்சியானது இந்த விழாவினால் தேவர்களுக்கும், அவர்களால் மக்களுக்கும் கிட்டுகிறது என்று உத்தர காரணாகமம் கூறுகிறது.

“மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும்
அண்ணலார் அடியார்தமை அமுதுசெய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்
உண்மையாமெனின் உலகர்முன் வருகென உரைப்பார்’

என்று, திருவிழா காணும் சிறப்பை பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

“மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்’

என்று, மயிலையில் நடைபெற்ற பங்குனி உத்திர வருடாந்தர விழாவைக் குறிப்பிடுகிறார் திருஞான சம்பந்தர். பவித்ரோத்சவத்தை பெருஞ்சாந்தி விழா என்றும் சம்பந்தர் பாடியுள்ளார்.

உற்சவ விழாக்களானது சாகல்யம், பாவனம், சாந்திகம், மாங்கல்யம் என்று நான்கு வகைப்படும். கொடியேற்றம் தொடங்கி தீர்த்தவாரி காண்பது வரையிலான அனைத்து காரியங்களும் செய்யப் படும் உற்சவங்கள் சாகல்யம் எனப்படும். கொடி யேற்றம் தவிர்த்து மற்றவையெல்லாம் நடத்தப் பெறுவது பாவனம் ஆகும். பிராத காலத்தில் பலியும் ஹோமமும் தந்து, இவற்றை இரவில் தவிர்த்து, மாலையில் உற்சவம் நடத்துவது சாந்திகம் எனப்படும். தலைவரும், ஆலய குருவும் ஒரு நாளை கடைசியாகத் தீர்மானித்துச் செய்யும் சிவோற்சவம் மாங்கல்யம் என்பதாகும்.

இதில் முதலாவது சொல்லப்பட்ட சாகல்ய உற்சவமானது, ஒருநாள் முதல் தொடர்ந்து 27 நாள்வரை செய்யத்தக்க வகையை ஆகமம் கூறுகிறது. அதில் பல்வேறு பிரிவுகளும் உள்ளன. 45 நாட்கள் தொடர்ந்து செ%