தூர்வா கணபதி விரதம்

free counters

http://youtu.be

பா.சி. ராமச்சந்திரன்

பாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் முடியும் காலம். அப்போது ஒருநாள் வனத்தில் கடுமையாக அலைந்து திரிந்த பாண்டவர்களுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. குடிக்க தண்ணீர் வேண்டியிருந்தது. அருகில் எங்காவது ஓடையோ, குளமோ தென்பட்டால் நீர் கொண்டுவர வயதில் இளையவனான சகாதேவனை அனுப்பினார் தருமபுத்திரர். தண்ணீர் பிடிக்கச் சென்ற சகாதேவன் நெடுநேரமாகியும் வராது போகவே, நகுலனை அனுப்பினார். நகுலனும் நெடுநேரமாகியும் வரவில்லை.  இப்படியே அர்ஜுனன், பீமன் ஆகியோரை அனுப்பி யும் எவருமே திரும்பிவரவில்லை.

மாலை நேரம். தம்பிகள் திரும்பவில்லையே என்கிற ஆதங்கத்தில் பதட்டத்தோடு தருமர் தேடிச்செல்ல, வழியில் ஒரு குளம் தென்பட்டது. குளக்கரையில் பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என நால்வரும் இறந்துகிடந்தனர்.

அதைக்கண்டு திகைத்துப்போன தருமபுத்திரர், “”யார் செய்த அடாத செயல் இது!” என்று ஓலமிட்டார்.

அப்போது ஓர் அசரீரி எழுந்தது. “”தர்மபுத்தி ரரே! நானொரு யக்ஷன்.

இக்குளம் எனக்குச் சொந்தமானது. யார் தண்ணீர் எடுக்க வந்தாலும் அல்லது தனது தாகத்தைத் தீர்த்துக்கொள்ள வந்தாலும் நான் சில கேள்விகளைக் கேட்பேன்.

அதற்கு தக்க பதில் கூறினால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும்; தவறாக பதில் சொன்னால் மரணம்தான்…” என்றான் யக்ஷன்.

அப்போதுதான் தன் சகோதரர்கள் தவறான பதில் கூறி, மாண்டது புரிந்தது தர்மருக்கு!

“”நான் விடையளிக் கிறேன்” என்றார் தர்மர்.

யக்ஷன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்.

“”எது தினமும் சூரியனை உதிக்கச் செய்வது?”

“”பிரம்மம்.”

“”மனிதன் எதில் நிலைத்து நிற்கிறான்?”

“”சத்தியத்தில்.”

“”மனிதன் எதனால் சிறப்படைகிறான்?”

“”மன உறுதியால்.”

“”மனிதன் எதனால் எப்போதும் துணை யுள்ளவனாகிறான்?”

“”தைரியமே மனிதனுக்குத் துணை.”

“”எந்த சாஸ்திரம் படித்து மனிதன் புத்திமானாகிறான்?”

“”இது சாஸ்திரத்தால் அல்ல; பெரியோர்களைப் பொறுத்தே.”

“”பூமியைவிட பொறுமைமிக்கவர் யார்?”

“”தாய்.”

“”ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் யார்?”

“”தந்தை.”

“”காற்றைவிட வேகமாகச் செல்வது எது?”

“”மனம்.”

“”புல்லைவிட அற்பமானது எது?”

“”கவலை.”

“”மனிதனுக்கு தெய்வத்திடமிருந்து கிடைத்த நன்மை எது?”

“”மனைவி.”

“”தேசாந்திரம் போகிறவனுக்கு யார் துணை?”

“”வித்தை.”

“”சாகப் போகிறவனுக்கு யார் துணை?”

“”தர்மம். அதுதான் அவன்கூட பயணம் செல்லும்…”

“”பாத்திரங்களில் எது பெரிது?”

“”அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிக்கொள்ளும் பூமி.”

“”எது சுகம்?”

“”சுகம் நல்லொழுக்கத்தில் நிலைபெறுகிறது.”

“”மனிதன் எதைவிட்டால் துயரமில்லை?”

“”கோபத்தை.”

“”எதை இழந்தால் மனிதன் தனவானாகிறான்?”

“”ஆசையை…”

“”மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்?”

“”கடன் வாங்காதவர்.”

“”வேகம் மிக்கது எது?”

“”நதி.”

“”வெற்றிக்கு அடிப்படை எது?”

“”விடாமுயற்சி.”

“”உலகில் மிகச்சிறந்த தர்மம் எது?”

“”கொல்லாமை.”

“”உலகெங்கும் நிறைந்து நிற்பது எது?”

“”அஞ்ஞானம்.”

“”முக்திக்குரிய வழி எது?”

“”பற்றினை முற்றும் விலக்குதல்.”

“”முக்திக்குத் தடையாக இருப்பது எது?”

“”"நான்’ என்னும் ஆணவம்.”

“”எது ஞானம்?”

“”மெய்ப்பொருளை அறிதல்.”

“”எப்போதும் நிறைவேறாதது எது?”

“”பேராசை.”

“”எது வியப்பானது?”

“”நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்டும், தான் என்றென்றும் வாழ்ந்திருப்போம் என்று மனிதன் நினைக்கிறானே, அதுதான்.”

“”பிராமணன், உயர்வானவன் என்பது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா? கற்ற பல சாஸ்திரங்களினாலா?”

“”ஒழுக்கத்தினால் மட்டுமே உயர்ந்தவனாகிறான். நான்கு வேதங்கள் கற்றவனாயிருந்தாலும், கெட்டநடத்தை உள்ளவன் பிராமணன் அல்ல; இழிந்தவனே…”

“”அற்புதம் தர்மபுத்திரரே… உமது பதில்கள் அபாரம். ஆனால் இறந்த உன் சகோதரர்களில் ஒருவனை மட்டும் நான் உயிர்ப்பிக்கிறேன். உமக்கு யார் வேண்டும்?”

“”நகுலன்…” சற்றும் யோசியாமல் பதிலளித்தார் தர்மர்.

அப்போது யக்ஷன் தர்மனுக்கு காட்சிதந்து, “”நகுலனா? புஜபல பராக்கிரமசாலி பீமனையோ, அழகனும் திறமையுள்ளவனுமான அர்ஜுனனையோ, ஜோதிடத்தில் மட்டுமின்றி சகல சாஸ்திரங்களையும் அறிந்த சகாதேவனையோ கேட்காமல் நகுலனை ஏன் கேட்டீர்? நகுலனைத் தவிர மற்ற மூவரும் உமக்குத் துணையில்லையா?”

“”யக்ஷனே, தருமமே மனிதனைப் பாதுகாக்கிறது. பீமனோ அர்ஜுனனோ அல்ல. தருமத்தைப் புறக்கணித்தால் அது மனிதனைக் கொல்லும். நான் நகுலனை மட்டும் உயிர்ப்பிக்க வேண்டிய காரணம் உள்ளது. என் தந்தைக்கு குந்தி, மாத்ரி என்று இரண்டு மனைவியர். குந்திக்கு மகனாக நானும், பீமனும், அர்ஜுனனும் பிறந்தோம். மாத்ரிக்கு, நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். கடைசி காலத்தில் குந்திக்கு இறுதிச் சடங்கை செய்ய நான் இருக்கிறேன். ஆனால் மாத்ரிக்கு இறுதிச் சடங்கு செய்ய அவள் முதல் மகன் வேண்டாமா? அதனால் தான் நகுலனை உயிர்ப்பிக்குமாறு கேட்டேன்…”

“”பாரபட்சமற்ற தர்மனே! உன் பதில் எனக்கு திருப்தியளித்துவிட்டது. தன் அன்பிற் குரிய சொந்தத் தம்பிகளை உயிர்ப்பிக்குமாறு கேட்காமல், சிற்றன்னையின் மைந்தனை உயிர்ப்பிக்குமாறு கேட்டாயே- நீயல்லவோ தர்மதேவன்…” என்று சொல்லி அனைவருக்கும் உயிர் கொடுத்தான் அந்த யக்ஷன்.

ஐவரும் அந்த யக்ஷனை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கியபோது, யக்ஷன் எமதர்மராஜனாக நின்றிருந்தான். வியப்புடன் நின்றிருந்த பஞ்சபாண்டவர்களைப் பார்த்து எமதர்மன் சொன்னான்:

“”தர்மபுத்திரரே… நான் எமன்தான். ஆனால் எந்தெந்த உயிர்களை எப்படி எடுத்துச் செல்வது? அதில் பாவி யார்- புண்ணியன் யார் என்பதை சரியாக செய்துவந்ததால் என்னை எமதர்மராஜன் என்பர். தர்மத்தின்படி நடந்துவரும் என்னைப்போல் பெயர் பெற்ற உன்னை சோதிக்கவே நான் யக்ஷனாக மாறி வந்தேன். என் பெயர் இருக்கும்வரை நீயும் தர்மமாகவே வாழ்வாய்…” என்று வாழ்த்திவிட்டு எமன் மறைந்தான்.

பெற்ற தாய்- தந்தையை, பெரியோர்களை, அறவோர்களை மகிழ்விப்பவனே உலகில் தர்மிஷ்டனாகிறான்.
தூர்வா கணபதி விரதம்

சிராவண மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தியன்று தூர்வா கணபதி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று காலை சுத்தமான ஓரிடத்தில் கோலமிட்டு, தரை முழுவதும் தூர்வை என்னும் அறுகம்புல்லை நிறைய பரப்பி, புல்லின்மீது ஸ்ரீகணபதி விக்ரகம் அல்லது படத்தை வைத்து பூஜை செய்யவேண்டும்.

பூஜையில் செய்யப்படும் ஆவாஹனம் முதலான 16 உபசாரங்களையும் அறுகம்புல்லைக் கொண்டே செய்யவேண்டும். கொப்பரைத் தேங்காய், அவல் நிவேதனம் செய்து, கற்பூரம் காட்டி நமஸ்கரித்து பூஜையின் முடிவில், “கணபதயே நம: உமாபுத்ராய நம: அகநாசநாய நம: ஏகதந்தாய நம: இபவக்த்ராய நம: மூஷிகவாஹனாய நம: வினாயகாய நம: ஈசபுத்ராய நம: ஸர்வஸித்திப்ரதாயகாய நம: குமாரகுரவே நம:’ என்னும் பத்து நாமங்களைச் சொல்லி அறுகம்புல்லால் கணபதியை அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.

கணேஸ்வர கணாத்யக்ஷ கௌரீபுத்ர கஜானன/
வ்ரதம் ஸம்பூர்ணதாம் யாதுத்வத் ப்ரஸாதாத் இபாநந//

இவ்வாறு அறுகம்புல்லால் கணபதியை நியமத்துடன் பூஜிப்பவர்களுக்கு அனைத்துஇடையூறுகளும் விலகி எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும். 10-8-2013 

அன்று இந்த விரதநாள் அமைகிறது.

சீதளா சப்தமி விரதம்

சிராவண மாத சுக்ல பக்ஷ சப்தமிக்கு சீதளா சப்தமி என்று பெயர். அம்மனின் பல உருவங்களில் சீதளாதேவி என்னும் வடிவமும் ஒன்று.

அசுரர்களின் தொல்லையால் கடும் வெப்பம் காரணமாக உடலில் கொப்பளங்களுடனும் (வைசூரி) கடும் ஜுரத்துடனும் உடல் வலியுடனும் தேவர்கள் சிரமப்பட்டார்கள். தேவர்களின்துயர் துடைக்க சிவனின் ஜடையிலிருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் சுடரொளி ஒன்று தோன்றி அம்மனாக உருப்பெற்றது. அந்த அம்மனே சீதளாதேவி என்று அழைக்கப்படுகிறாள்.

சீதளா சப்தமியன்று சீதளா தேவியை பூஜை செய்து, மாம்பழமும் வெள்ளரிக்காயும் தயிர் சாதமும் நிவேதனம் செய்து அதை தானம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் தானம் மட்டுமாவது செய்யலாம். அதாவது அன்று காலை நித்யகர்மாவை முடித்துவிட்டு, “மம புத்ரபௌத்ராதி அபிவிருத்தி த்வாரா சீதளா தேவதா ப்ரீத்யர்த்தம் ச்ராவண சுக்ல ஸப்தமி புண்யகாலே ஆம்ரபல கர்கடீபல ஸஹித கர்கடீ பர்ணஸ்தித தத்யோதன தானமஹம் கரிஷ்யே’ என்ற சங்கல்பம் சொல்லி, ஒரு வெள்ளரி இலையில்  தயிர்சாதம் வைத்துக்கொண்டு, ஒரு மாம்பழம், ஒரு வெள்ளரிக்காயுடன் சேர்த்து, “ஸ பரிவார சீதளா தேவதா ப்ரீத்யர்த்தம் இதம் ஆம்ரபல கர்கடீபல ஸஹித கர்கடீ பர்ணஸ்தித தத்யோதனம் சீதளா ப்ரீத்யர்த்தம் ஸம்ப்ரததே’ என்று சொல்லி தெய்வ சந்நிதியில் வைத்து, பின்னர் அதை ஏழைக்குத் தந்து சாப்பிடச் செய்யவேண்டும். இதனால் நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் நோய்கள் உடனே விலகும். குறிப்பாக அதிக வெப்பத்தாலேற்படும் கட்டிகள், அம்மை, வைசூரி முதலான நோய்கள் விலகும். மேலும் ஒருபோதும் இதுபோன்ற நோய்கள் குடும்பத்தில் யாருக்கும் தோன்றாது என்கிறது ஸ்காந்த புராணம். இது 13-8-2013 அன்று வருகிறது.

அசூன்ய சயன விரதம்

சிராவண மாத கிருஷ்ண பட்ச த்விதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று மாலை பூஜையறையில் ஸ்ரீகிருஷ்ணர்- மகாலட்சுமி விக்ரகம் அல்லது படத்தை வைத்து தம்பதிகளாக பூஜை செய்து, காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்து, புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை, தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் ஸ்ரீகிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் படுக்க வைக்க வேண்டும். பிறகு,

“லக்ஷ்ம்யா வியுஜ்யதே தேவ ந கதாசித்யதோ பவான்
ததா களத்ர ஸம்பந்தோ தேவமா மே வியுஜ்யதாம்’

(ஹே க்ருஷ்ண! எவ்வாறு மகாலட்சுமியுடன் எப்போதும் தாங்கள் சேர்ந்தே இருக்கிறீர்களோஅப்படி நானும் எனது மனைவியுடன்- கணவனுடன் என்றும் இணைபிரியாமல் ஒன்றுசேர்ந்தே இருக்க அருள்புரிய வேண்டும்) என்னும் ஸ்லோகம் சொல்லி பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். மறுநாள் காலை மறுபடியும் ஸ்ரீகிருஷ்ணர்- லக்ஷ்மி விக்ரகங்களுக்கு பூஜை செய்து நிவேதனம் செய்து நமஸ்கரித்து, கிருஷ்ணரை படுக்கவைத்த அந்தப் புதிய படுக்கையை தானம் தந்துவிட வேண்டும். இவ்வாறு செய்பவர்களின்  வீட்டில், ஸ்ரீகிருஷ்ணர் அருளால் படுக்கை எப்போதும் கணவன்- மனைவியுடன் சேர்ந்ததாகவே இருக்கும். ஒருபோதும் தம்பதிகள் பிரியமாட்டார்கள். அவர்கள் சொத்தும் பணமும் அவர்களை விட்டுவிலகாது என்கிறது பாத்ம புராணம். இவ்வாண்டு அசூன்ய சயன விரதம் 22-8-2013 அன்று வருகிறது.

 


            ம் பாரத நாடெங்கும் சக்தி வழிபாடு பெருமையுற்று விளங்குகிறது. அம்மன் ஆலயங்களில் திரளும் பக்தர்கள் கூட்டம் இவ்வுண்மையை விளக்குகிறது.

சக்தியும் சிவனும் ஒன்றே. மிக உயரிய நிலையில் இருவரும் பிரிவற்ற ஒருமைத் தன்மையிலேயே விளங்குகின்றனர். சிவபெருமான் திருவிளையாடல் புரியும் சமயங்களில், தேவியானவள் இறைவனின் எண்ணப்படி அனைத்துலகங்களையும் அனைத்துயிர்களையும் படைக்கிறாள். உயிர்களின் மாயை விலக்கி அவர்களைப் பக்குவமடையச்செய்து, உண்மையொளி காட்டுகிறாள். இறுதியில் இறைவனின் திருவடியில் சேர்க்கிறாள்.

“வாயும் மனமும் கடந்த மனோன்மணி 
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல்தாரமும் ஆமே’


என்கிறார் திருமூலர். சிவபெருமானுக்கு மனைவியாக மட்டுமல்ல; தாயாகவும் மகளாகவும் விளங்குகிறாளாம் தேவி. இதிலிருந்தே அன்னையின் அளவற்ற சக்தியையும் கருணையையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

எங்கும் நிறைந்தவள் பராசக்தி. அதனால்தான் அவளை பூரணி, ராஜராஜேஸ்வரி என்றெல்லாம் அழைக்கின்றனர். முத்தொழில் செய்யுமிடங்களில் பிராம்மணி, வைஷ்ணவி, ருத்ரினி எனப்படுகிறாள். கல்வியாகும்போது சரஸ்வதி- செல்வமாகும்போது லட்சுமி- வீரமாகும்போது துர்க்கை என்று போற்றப் படுகிறாள். யோகத்தையும் மோட்சத்தையும் தருவதால் புக்தி முக்திப் பிரதாயினி எனப் படுகிறாள். மும்மூர்த்திகளும் தமது வலக்கை அபய முத்திரையால் மோட்சத்தையும், இடக்கை வர முத்திரையால் போகத்தையும் அளிப்பர். இவற்றை தேவியின் தாமரைப் பாதங்களே  வழங்கிவிடுகின்றனவாம்.

இவ்வாறு எண்ணிறந்த பெருமைகள் கொண்ட தேவியானவள் சிறப்புற கோவில் கொண்ட தலங்கள் இந்தியாவெங்கும் பலவுள்ளன. அவற்றிலொன்று மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள துளஜா பவானி ஆலயம். அந்த மாநிலத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்களில் ஒன்றாகவும்- மிகச்சிறப்பான ஆலயங்களில் ஒன்றாகவும் விளங்கும் இவ்வாலயம், தினமும் ஏராளமாக பக்தர்களைத் தன்னகத்தே ஈர்க்கிறது.

துல்ஜாப்பூர் என்னு மிடத்திலுள்ள ஜமுனாஞ்சல் என்னும் மலைமீது இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளி யுள்ள துளஜா பவானி சாளக்கிராமக் கல்லால் ஆனவள். எட்டுத் திருக்கரங்கள் கொண்ட அன்னை சூலம், கதாயுதம், சக்கரம், வில் போன்ற ஆயுதங்களை ஏந்தி, ஒரு கரத்தில் அரக்கனின் தலையையும் பிடித்துள்ளாள். இந்த அம்மன் சிலைக்கு அருகே மார்க்கண்டேய முனிவரின் சிலை உள்ளது. இவ்வன்னையின் பெருமை பற்றி மார்க்கண்டேய புராணம் விரிவாகப் பேசுகிறது.

கிருத யுக காலத்தில், கர்தம் என்னும் முனிவர் இருந்தார். அவரது மனைவியின் பெயர் அனுபூதி. இருவரும் இல்லறத்தை நல்லறமாய் நடத்திவந்த சமயம், எதிர்பாராதவண்ணம் அந்த முனிவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். பதிவிரதையான அனுபூதி உடன்கட்டையேறிப் பிராணத்தியாகம் செய்ய எண்ணம் கொண் டாலும், அவளால் அது முடியாமல்போனது. ஏனெனில் அவள் கருவுற்றிருந்தாள்.

மந்தாகினி நதிக்கரையில் அமைந்திருந்த குடிலில் தெய்வ ஆராதனை செய்தபடி அவள் பற்றற்று வாழ்ந்து வந்தாள். அப்போது அவ்வழியே வந்த குக்கர் என்னும் அரக்கன் அனுபூதியின் அழகைக் கண்டு மயங்கினான். 

அவளை அடைய முற்பட்டான். அப்போது அவள்  எல்லாம் வல்ல உலக மாதாவை எண்ணி அபயமிட்டாள். அந்த நொடியில் அங்கு தோன்றிய அன்னை அரக்கனுடன் போரிட்டாள். பல்வேறு வரங்கள் பெற்றிருந்த அரக்கன் வெவ்வேறு வடிவங்கள் கொண்டு தேவியுடன் போரிட்டான். இறுதியாக எருமையாக மாறி அவன் போரிட, கடுஞ்சினம் கொண்ட தேவி அவனை சம்ஹாரம் செய்தாள். அந்த அன்னையே இங்கு கோவில் கொண்டுள்ளதாக புராணம் கூறுகிறது.

மராட்டிய மன்னன் வீரசிவாஜியின்  குலதெய்வமாக விளங்கியவளும் இவ்வன்னைதான். இவள் சிவாஜிக்கு வீரவாள் தந்தாள் என்றும் சொல்வர். துளஜாபவானியை வணங்கிய பின்னரே போருக்குச் செல்லும் வழக்கமுடையவர் சிவாஜி. அவ்வாறு சென்ற தருணங்களிலெல்லாம் வெற்றியைத் தவிர வேறொன்றையும் அவர் சந்தித்ததில்லையாம்.

மனோபலத்தையும் மன அமைதியையும் தரும் துளஜா பவானி, பக்தர்களின் அனைத்துமனக்குறைகளையும் தீர்த்து வைப்பவளாக விளங்குகிறாள்.

இவ்வாலயத்தில் வெள்ளிக்காசுகளால் அமைக்கப்பட்ட தூண் ஒன்றுள்ளது. உடல்நலம் குன்றியவர்கள் இந்தத் தூணை மூன்றுமுறை வலம்வந்து வழிபடுகிறார்கள். இவ்வாறு ஏழு நாட்கள் வழிபட்டால் நாள்பட்ட வியாதிகளும் குணமாகிவிடுவதாக இங்குவரும் பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

மேலும் இங்கே சிந்தாமணி என்னும் அதிசயமான கல் ஒன்றுள்ளது. ஏதாவது ஒரு புதிய காரியத்தில் ஈடுபட விரும்புபவர்கள் இந்தக் கல்லின்முன் நின்று “இதைச் செய்யலாமாவேண்டாமா?’ என்று கேட்டுப் பிரார்த்திக்கிறார்கள். செய்யலாம் என்றால் கல் வலப்பக்கமாகச் சாய்கிறது. செய்யக்கூடாது என்றால் இடப்பக்கமாகச் சாய்கிறது. இங்கே அனுமதி கிடைத்தபின் செய்யும் எந்தக் காரியமானாலும் அது நிச்சயம் வெற்றி பெறுவதாகக் கூறுகிறார்கள் பக்தர்கள்.

சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில் வழியில், மும்பைக்கு முன்பாக சோலாப்பூர் என்னும் ரயில் நிலையம் வரும். அங்கிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில், உஸ்மனாபாத் என்னும் ஊருக்கருகே உள்ளது 

துல்ஜாப்பூர்.


மரம் போல் வளையுங்கள்

* உலகின் நான்கு திசைகளிலும் பிரயாணம் செய்தாலும், உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காண முடியாது. தர்மம் 
என்பது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம்.
* எல்லா மனிதர்களிடமும் இறைவன் இருக்கிறான். ஆனால், இறைவனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதனால் தான் மனிதர்கள் துன்பப்படுகின்றனர்.
* பிறர் மீது குற்றம் கண்டுபிடித்துப் பொழுதைக் கழிப்பவன் தன் வாழ்நாளை விரயம் செய்தவன் ஆகிறான். 
* இறைவனை வெளியில் தேடுவது அறியாமை. தனக்குள்ளே இறைவன் இருப்பதை உணர்வதே அறிவுடைமை.
* கனிகள் நிறைந்த மரம் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல செல்வச்செழிப்பு மிக்க பணக்காரனும் அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
* பணம் எவனுக்கு அடிமையோ, அவன் தான் உண்மையான மனிதன். பணத்தை எப்படி உபயோகிப்பது என்பதை அறியாதவர்கள் மனிதனாக வாழத் தகுதியற்றவர்கள்.
- ராமகிருஷ்ணர்

யாழ். நல்லூர் கந்தனின் கொடிச்சீலைக்கான காளாஞ்சி…
August 01, 20135:54 pm

யாழ். நல்லூர் கந்தனின் வருடாந்த திருவிழா எதிர்வரும் வாரம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ள நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகள் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக, இன்று வியாழக்கிழமை கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச் செல்லல் நிகழ்வு நடைபெற்றது.

நல்லூரின் புராதான கலாசார விழுமியங்களில் ஒன்றான இம்முறையானது நல்லூர் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக நடைபெறுவது வழமையாகும்.

அதாவது, வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்பு பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் (ஒற்றைதிருக்கை வண்டில்) மூலம் எடுத்துச்செல்லப்படும்.

ஆரம்ப காலத்தில் கொடிசீலைக்கான காளாஞ்சியானது குதிரை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் கடந்த நூறு வருடங்களிற்கு மேலாக இந்த நடைமுறை மாற்றப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழலை தொடர்ந்து இப்பாரம்பரியம் மறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வருடம் முருகபெருமானின் திருவருள் கைகூடியதற்கமைவாக மாட்டு வண்டியில் கொடிச்சீலைக்கான காளாஞ்சி எடுத்துச்செல்லப்பட்டு ஆலய பிரதம குருவினால் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

jvpnews_nluir jvpnews_nluir1 jvpnews_nluir2 jvpnews_nluir3 jvpnews_nluir4  jvpnews_nluir6

———————————————————————————————————————


———————————————————————————————————

Leave a Reply