சூரிய வழிபாடு

free counters

 

 

டி. பரிமளரங்கன்

உலகிலுள்ள உயிரினங்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக விளங்குபவன் சூரியன். அவனது ஒளியாலேயே உயிரினங்கள் வாழ்கின்றன. எனவேதான் சூரிய வழிபாடு பழங்காலந்தொட்டே கடைப்பிடிக்கப்படுகிறது. காலை வேளையில் சூரியனுக்குரிய மூல மந்திரத்தினை ஜெபித்து, கிழக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்தால், புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிட்டுவதுடன், உடலில் நோய் எதிர்ப்புசக்தி கூடும்; கண்ணொளி பிரகாசிக்கும்; இதயம் வலிமைபெறும்.

“காலையில் ரிக்வேதமாகவும், நண்பகலில் யஜுர் வேதமாகவும், மாலை நேரத்தில் சாமவேத சொரூபமாகவும் சூரியன் திகழ்கிறான்’ என்கிறது சூரிய அஷ்டகம்.

சூரியன் வலம்வரும் தேரின் குதிரைகள் ஏழு என்பதால், சூரியனிடமிருந்து ஏழு பிராணங்கள், ஏழு ஜுவாலைகள், ஏழு சமித்துக்கள், ஏழு ஹோமங்கள் தோன்றி இதயக்குகையில் ஒடுங்குகின்றன.

சூரிய வழிபாட்டினை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கிறார்கள். எகிப்தியர்கள் சூரியனை ஆமன்-ரா (ஆரோக்கியம் தருபவன்) என்று போற்றுகிறார்கள். கிரேக்கர்கள் “போபஸ்- அப்போலோ’ என்றும், ஈரானியர்கள் “மித்ரா’ என்றும் அழைக்கிறார்கள். நைல் நதிக்கரையில் வாழ்பவர்கள் சூரிய வழிபாடு செய்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை தெய்வங்களான சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை இந்தியர்கள் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளார்கள். குறிப்பாக தமிழர்கள் சூரிய வழிபாட்டை தெய்வ வழிபாடாகக் கருதும் அதேவேளையில், ஒரு மருத்துவ சிகிச்சையாகவும் கருதி கையாண்டிருக்கிறார்கள்.

இந்தியத் திருவிழாக்களில் சூரியனை பிரதான தெய்வமாகக் கருதி வழிபடும் விழாக்களும் உண்டு. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளை “மகர சங்கராந்தி’ என்று வட இந்தியாவிலும், “பொங்கல் திருநாள்’ என்று தமிழகத்திலும் கொண்டாடுகிறார்கள். இரண்டுமே சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழாக்களாகும்.

இந்தியாவில் வேத காலத்திலிருந்தே சூரிய வழிபாடுகள் நடந்ததாக வேதநூல்கள் கூறும். கருங்கடல் கரையோர நாடுகளில் கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கள் கூறுகிறார்கள்.

எகிப்தில் கி.மு. 14-ஆம் நூற்றாண்டிலேயே சூரிய வழிபாடு மேற்கொள்ளப்பட்டதற்குச் சான்றாக பிரமிடுகள், புராதனக் கலைப்பொருட்கள், கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஈரானில் கி.மு. 551-லும், சுமேரியாவில் கி.மு. 4000-லும், மேற்கு ஐரோப்பாவில் கி.மு. 2000-லும் சூரிய வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இயற்கையின் வடிவமைப்பில் முதலிடம் பெறும் சூரியனை ஒரு கிரகமாகக் கருதினாலும், புராணங்கள் கூறும் தகவல்கள் நம்மைக் கவர்வதாகவே உள்ளன. காசிபர்- அதிதி தம்பதியினருக்குப் பிறந்த- விஸ்வான் என்றழைக்கப்படும் சூரியன் ரஜினி, சுவர்ணா, சாயா, ஸுவர்ச்சலா ஆகிய நான்கு மனைவிகளைக் கொண்டவன் என்றும், செம்பொன் மேனியை யுடையவன் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

சூரியனின் ரதத்திலுள்ள சக்கரமே காலச்சக்கரம் என்றும், ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள் என்றும், சூரியன் தான் காலத்தின் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது.

ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு பெயரைப் பெறுகிறான்; தன் ஒளிக்கிரணங்களின் சக்தியை கூட்டியும் குறைத்தும் பயணிக்கிறானென்று புராணம் கூறுகிறது. அதனை அறிவியலும் ஏற்கிறது.

சித்திரை மாதத்தில் விஷ்ணு என்ற பெயரில் ஆயிரம் கதிர்களுடனும்; வைகாசி மாதத்தில் அர்யமான் என்ற பெயரில் ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும்; ஆனி மாதத்தில் விஸ்வஸ் என்று பெயர் பெறும் சூரியன் ஆயிரத்து நாநூறு கதிர் களுடனும்; ஆடி மாதத்தில் அம்சுமான் என்று ஆயிரத்து ஐந்நூறு கதிர்களுடனும்; ஆவணி மாதத்தில் பர்ஜன் என்ற பெயரில் ஆயிரத்து நாநூறு கதிர்களுடனும்; புரட்டாசி மாதத்தில் வருணன் என்ற பெயரில் ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் பிரகாசிக்கும் சூரியன், ஐப்பசி மாதத்தில் இந்திரன் என்று பெயர் பெற்று ஆயிரத்து இருநூறு கதிர்களால் ஒளிரச் செய்கிறான். கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் பெற்று ஆயிரத்து நூறு கதிர்களையும்; மார்கழி மாதத்தில் நண்பனாக ஆயிரத்து ஐந்நூறு கதிர்களுடனும் விளங்குகிறான். தை மாதத்தில் பூஷாவான் என்ற பெயரில் ஆயிரம் கதிர் களுடன் ஒளிவீசுபவன், மாசி மாதத்தில் பகன் என்ற பெயரில் ஆயிரம் கதிர்களுடன் ஒளிவீசுகிறான். பங்குனியில் துவஷ்டா என்ற பெயரில் ஆயிரத்து நூறு கதிர்களால் அனைவரையும் மகிழ்ச்சியூட்டுகிறான். மேலும், வடக்கு நோக்கிச் செல்லும் உத்ராயன காலத்தில் அதிகமான ஒளிக்கதிர்களுடனும்; தெற்கு நோக்கிச் செல்லும் தட்சிணாயன காலத்தில் குறைந்த ஒளிக்கதிர்களுடனும் பவனிவந்து அனைத்துலகையும் காக்கிறான். சூரியனுக்கு மேலும் பல பெயர்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு சூரியன் அருளிய பெயர்கள் குறித்து புராணத்தில் தகவல்கள் உள்ளன.

“ஆயிரம் நாமங்கள் கொண்டு எவரொருவர் என்னைத் துதித்து வழிபடுகிறார்களோ. அவர்களின் எண்ணங்களை முழுமையாகப் பூர்த்தி செய்வேன். எனது ஆயிரம் நாமங்களை நினைவுகூர்ந்து ஜெபிக்க இயலாதவர்கள், எனது இருபத்தொரு நாமங்களைக் கொண்டு பூஜித்தாலும் முழுத் திருப்தி அடைவேன்’ என்று சூரிய பகவான் கூறிய இருபத்தொரு நாமங்கள்:

“ஓம் விகர்த்ததோ விவஸ்வாம்ஸ்ச
மார்த்தாண்டோ பாஸ்கரோ ரவி
லோகப் பிரகாச: ஸ்ரீமாம்
லோக சாக்ஷி த்ரிலோகேச:
கர்த்தா ஹர்த்தா தமிஸரஹ’
தபனஸ் தாபனஸ் சைவ கசி:
ஸப்தாஸ்வ வாஹன
கபஸ்தி ஸ்தோஹ ப்ரம்மாச
ஸர்வ தேவ நமஸ்கிருத:’

மேற்கண்ட நாமங்களை சூரிய வழிபாட்டின்போது ஜெபித்தால் சூரிய பகவானின் முழு அருளையும் பெற்று வளமுடன் வாழலாமென்று கூறப்படுகிறது.

பலவாறு புகழப்படும் சூரியனைப் போற்றி வழிபடும் நாளாக தமிழகத்தில் தை மாதம் முதல் தேதியன்று பொங்கல் விழா மிகச் சிறப்பாகவும் உற்சாகமாகவும் கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் தைப்பொங்கலை முன்னிட்டு பகவதி அம்மன் கோவில்களில் பொங்கல் படைத்து வழிபடுவர். ஆந்திராவில், பெருமாள் கோவில்களில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் நடைபெறும்.

கர்நாடகாவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்புகளினால் பந்தலிட்டு சூரியனுக்குப் பொங்கல் படைத்து வழிபடு வது வழக்கம்.

மகாராஷ்டிராவில் மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடுவர். அப்போது எள்ளுருண்டை முக்கியத்துவம் பெறுகிறது. முதல் நாள் போகி அன்று எள் சேர்த்து கேழ்வரகு மாவு ரொட்டியும், காய்கறி கூட்டும் சமைத்து இறைவனுக்குப் படைத்து உண்பர். இரண்டாம் நாள் சங்கராந்தியன்று இனிப்பு, பழங்கள், கரும்புகள், பொங்கல் படைப்பர். மூன்றாம் நாள் கிங்கராந்தியன்று வடை செய்வார்கள். தை மாதம் குளிராக இருப்பதால் வழிபாட்டில் எள்ளுருண்டை முதலிடம் பெறுகிறது.

அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங் களில் “போகாலிபிஹு’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடுவர். உத்திரப்பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருபவர்களை கரும்புத்துண்டுகள் மற்றும் தாம்பூலத்துடன் ஆசீர்வதிப்பர்.

உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள், மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் சாணத்தால் பிள்ளையார் பிடித்துவைப்பர். அதனைச் சேர்த்து வைத்து பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் கொண்டாடுவர். சாணப்பிள்ளையாரை ஆற்றில் கரைத்துவிடுவார்கள்.

இங்கிலாந்தில் பழங்குடி இனத்தைச் சார்ந்த ஒரு பிரிவினர் திறந்தவெளியில் ஒன்றுகூடி, ஒரு சமூக விழாவாக “சூரியன் உலகைப் படைத்தவர்’ என்று போற்றி வழிபடுகிறார்கள்.

பாரீஸில் வாழும் மக்கள் “உடல்நலனுக்கு அடிப்படை சூரியன்’ என்று போற்றுவர். ஜப்பானிலும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நாம் “பொங்கலோ பொங்கல்’  என்று குரல் கொடுப்பதுபோல ஜப்பானியர்கள் “ஹங்கரோ ஹங்கரோ’ என்று குரல் கொடுப்பர். பொங்கலுக்கு மறுநாள் நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதுபோல் அவர்கள் குதிரைப்பொங்கல் கொண்டாடுவர். பர்மாவில் (மியான்மர்) பொங்கல் திருநாளன்று புத்தாடை அணிந்து சூரிய வழிபாடு செய்வதுடன் கால்நடைகளுக்கும் பூஜைசெய்து போற்றுவர்.

எனவே, உலகம் போற்றும் சூரியனை தைப்பொங்கல் திருநாளில் வழிபடுவதுடன், தினமும் வழிபட்டு சுகம்பெறுவோம்.

Comments are closed.