மகாசரஸ்வதி அம்மன்

ஒட்டக்கூத்தரை வரகவியாக்கிய கூத்தனூர் மகாசரஸ்வதி அம்மன்

திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டம் பேருந்து நிலையத்தின் அருகே அரை கி.மீ தொலைவில் கூத்தனூர் உள்ளது. வேறெங்கிலும் இல்லாது தமிழகத்தில் மட்டுமே சரஸ்வதிக்கென தனிக்கோயில் அமைந்திருப்பது இவ்வூரில்தான். மேலும், இங்கு சிவன் கோயிலில் துர்க்கையும், பெருமாள் கோயிலில் மகாலட்சுமியும், தனக்கென தனிக்கோயில் கொண்டு மகாசரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. அம்பிகையின் கோயிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை. கருவறையின் மேலே ஐந்து கலசங்களுடன் ஞானத்தின் இருப்பிடத்தை உலகுவோர்க்கு உணர்த்துவதாய் அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்திற்குள் அம்பிகை ஞானதவம் இயற்ற அர்த்த மண்டபத்துள் உற்சவ விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கோயிலுக்கென சிறப்பு வரலாறு உண்டு. அந்த வரலாறு வருமாறு: கவிச்சக்கரவர்த்தி எனப்பெயர் பெற்றவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளை பூசித்தார். கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் ஒன்று அமைத்தும் தக்சின வாகினியாய் ஓடும் ஹரிசொல் மாநதியின் நீரினால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிப்பட்டு வரலானார். கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவியாக்கினாள் என்பர். மூன்று சோழ அரசர்களின் புலவராக விளங்கி கவிச்சக்கரவர்த்தி என்ற பெரும் புகழையும் அடைவதற்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய என்று தக்கையாக பரணி பாடியுள்ளார் கூத்தர்.

சங்கமர்கள் ஒட்டக்கூத்தரை கொலை செய்ய முயன்றபோது கூத்தனூர் காளி கோயிலினுள் நுழைந்தார். பரணி நூல் ஒன்று பாடினால் அவரை விட்டு விடுவதாக கூறினார் சங்கமர்கள். அதை கேட்டு கூத்தர் பரணி நூல் ஒன்று பாடியதாகவும் அவதூறு பாடுவதற்கு நாவிலிருந்து துணை புரிந்த நாமகளை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய என்று பாடினார் எனவும் வரலாறு உண்டு. கூத்தர் மறைந்துகொண்ட ஊர் வீரர்வாடி என பெயர் பெறும் எனவும் ஆய்வாளர் கூறுகின்றனர்.

வீரர்வாடி கூத்தனூரிலிருந்து அரை கி.மீ தொலைவில் ஆற்றின் அக்கரையில் உள்ளது. ஒட்டக்கூத்தர் என பெயர் பெறுவதற்கு காரணமான நிகழ்ச்சியும் இவ்வூரில் நடந்திருக்கலாம் என கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் என்ற நூல் கூறுகிறது. செங்குந்தர்களின் தலைகள் ஆயிரத்தை வெட்டி அவற்றை கலைவாணியின் அருளால் ஒட்ட வைத்தார் கூத்தர். அதனாலேயே அவர் ஒட்டக்கூத்தர் என அழைக்கப்பட்டார். இவ்வாறு ஒட்டும் பொருட்டு அவர் பாடிய பாடல்கள் எழுப்பெழுவது எனப்படும்.

இம்மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே பிரம்ம முகூர்த்தத்தில்  காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன் றரை மணி நேரத்திற்குமுன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக துலாக் காவேரி புராணம் கூறுகிறது.

ஐப்பசி மாதத்தில் குரு பகவான் துலா ராசியில் இருப்பதால், பிரம்ம கங்கை- காவேரியில் கலக்கிறது என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு, வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள கொள்ளிடத்தி லிருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள். ஐப்பசி மாதத்தில் மட்டும், ஸ்ரீரங்கம் கோவிலின்  தென்பகுதி யிலுள்ள காவேரி அம்மா மண்டபப் படித்துறையிலிருந்து தங்கக் குடங்களில் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் சேகரித்து, யானைமீது வைத்து வேதங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.

மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் வருடம் முழுவதும் பயன் படுத்திவரும் வெள்ளியிலான பூஜைப் பொருட்களை ஐப்பசி மாதத்தில் பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு மாற்றாக தங்கக் குடம், தங்கக் குடை, தங்கச் சாமரம், தங்கத் தடி என அனைத் தும் தங்கமயமானதாக இருக்கும். பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் பாதங்களை தங்கக் கவசத்தால் அலங்கரித்தி ருப்பார்கள். மேலும், பல நூறு ஆண்டுகளுக்குமுன் நேபாள மன்னர் கோவிலுக்கு அளித்த சாளக்கிராம மாலையை பெருமாளுக்கு அணிவித்திருப்பார்கள். முழுக்க முழுக்க தங்கத்தால் ஜொலிக்கும் பெருமாளை துலா மாதமான ஐப்பசி யில் மட்டுமே தரிசிக்க முடியுமென்பது தனிச்சிறப்பாகும்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் தென்பகுதியில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் நீராடி பெருமாளை தரிசித்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டுமென்று தர்மசாஸ்திரம் கூறுகிறது.

காவேரிக் கரையோரத் திருத்தலங்களில், காவேரி உற்சவத்திற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் மயிலாடு துறை. இங்குள்ள மயூரநாதர் கோவிலில் துலா உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒருசமயம் சிவபெருமான் வேதங்களின் உட்பொருளை உபதேசித்துக்கொண்டிருக்கையில், பார்வதிதேவி யானவள் அழகாக தோகை விரித்தாடிய மயிலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இதனால் கோபமுற்ற சிவபெருமான், “நீ மயிலாக பூலோகத்தில் அவதரிக்கக் கடவாய்’ என்று சபித்தார். அதன்படி மண்ணுலகில் மயிலாக அவதரித்த பார்வதி, சிவபெருமானை ஒவ்வொரு தலமாக வழிபட்டு வந்தாள். இறுதியாக காவேரி நதி ஓடும் இத்தலத் திற்கு வந்து சிவபெருமானை நினைத்து தவம் மேற்கொண்டாள். பார்வதியின் தவத்தினைப் போற்றிய சிவபெருமான் ஆண் மயிலாக வந்து, அவளது சாபத்திற்கு விமோசனம் அளித்தார். அதனால் இத்தலம் மாயூரம் என்று பெயர் பெற்றது. மயிலாக இருந்த பார்வதி சாப விமோசனம் பெற்றதால் இத்தலத்து இறைவன் மயூரநாதர் என்று பெயர் பெற்றார். பார்வதி, அஞ்சல் நாயகி என்று பெயர் பெற்றாள். சாப விமோசனம் பெற்ற பார்வதி, பிரம்மன் நிறுவிய தீர்த்தத்தில் நீராடினாள். அந்த மாதம் துலா மாதமென்று புராணம் கூறுகிறது. இங்குள்ள தீர்த்தக் கட்டத்தை இடப தீர்த்தக்கட்டம் என்றும் சொல்வர்.

பார்வதி மயில் வடிவில் இருந்த காலத்தில், பரமன் பூவுலகைச் சுற்றிப் பார்க்க எண்ணி ரிஷபத்தில் ஏறிப் புறப்படும்போது, மற்ற தேவர்களும் தங்கள் வாகனங் களிலேறிப் பின்தொடர்ந்தார் கள். அனைவரையும் முந்திக் கொண்டு வேகமாகச் சென்று காவேரியின் நடுவில் நின்ற ரிஷபம், “சிவபெருமானைச் சுமக்கும் நான்தான் பெரிய வாகனம்’ என்ற கர்வத்துடன் மற்ற வாகனங்களைப் பார்த் தது. இதை கவனித்த இறைவன் நந்தியின் கர்வத்தை அடக்க சிறிது அழுத்தம் தரவே, ரிஷபம் பாதாளத்தில் சென்று துன்பப்பட்டது. உடனே ரிஷபம் பரமனிடம்  மன்னிப்புக் கேட்க, “நீ காவúரி நதியின் நடுவே மேற்கு முக மாய் இருந்து இங்கு நீராட வருபவர்களுக்கு வேண்டி யதை அளிப்பாய்’  என்று ஆசி தந்து, ரிஷபம்  மேலே வர அருளினார். இதனால் மயிலாடுதுறையிலுள்ள இத் துறை ரிஷபத்துறை என்று பெயர் பெற்றது.

ஒருசமயம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூவரும் சந்தித்துக் கொண்டார்கள். அந்த மூவரும் கறுமை நிறத்துடன் பார்க்க அருவருப்பாகத் தோற்றமளித்தார்கள்.

அந்தத் தோற்றம் நீங்க பிரம்மனிடம் சென்று ஆலோசனை கேட்டார்கள். அவர், “உங்கள்மீது மக்கள் திணித்த பாவ மூட்டை களின் விளைவால், நீங்கள் உருமாறி இருக் கிறீர்கள். நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர, ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மயிலாடுதுறை என்ற தலத்தில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதத்தில் நீராடுங் கள். அதிலும் ஐப்பசி அமாவாசை மிகவும் சிறப்பானது’ என்று அருளினார். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் மயிலாடுதுறைக்கு வந்து காவேரி யில் ரிஷப கட்டத்தில் நீராடி தங்கள்மீது மக்கள் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறார்கள் என்று  புராணம் கூறுகிறது.

தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசை யைப்போல் இத்தலத்தில் ஐப்பசி மாத அமாவாசை மிகவும் சிறப்பாகக் கருதப்படு கிறது. அன்று புனித நீராடல், சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய நீர்க்கடன்களை அளித்து, தம் முன்னோர்களின் பாவங்களையும் போக்க சிறப்பு பூஜை செய்து புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள்.

ஐப்பசி அமாவாசையன்று இங்குள்ள காவேரி ரிஷபக் கட்டம் விழாக் கோலம் காணும். அன்று கங்கையை விட மிக உயர்ந்தவளாகக் காவேரி திகழ்கிறாள். மேலும் மயூர நாதர் கோவிலில் உற்சவமும் நடைபெறுவதால், சுற்று வட்டாரத்திலுள்ள கோவில் களிலிருந்து உற்சவமூர்த்திகள் ரிஷபக் கட்டத்திற்கு வந்து தீர்த்தவாரி காண்பார்கள்.

மயூரநாதர் கோவிலில் ஐப்பசி முதல் தேதி தீர்த்தவாரியுடன் உற்சவம் ஆரம்பமாகும். அமாவாசை தீர்த்தவாரியும்,  ஐப்பசி முப்பதாம் தேதி துலா உற்சவமும், கடைமுகத் தீர்த்த வாரியும் மிகச்சிறப்பாக நடை பெறும். தீர்த்தவாரியை முன் னிட்டு அபயாம்பிகை சமேத மயூரநாத சுவாமி, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்ப சுவாமி, விசாலாட்சி  சமேத காசி விஸ்வநாத சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வர சுவாமி, மாயூரம் பரிமள ரங்கநாத சுவாமி ஆகிய பஞ்ச மூர்த்திகளும் காவேரி துலாக் கட்டத்தில் எழுந்தருளியதும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவேரியில் நீராடி புனிதம் பெறுகிறார்கள்.

மயிலாடுதுறையில்  ஐப்பசி மாதம் முழு வதும் துலா ஸ்நானம் மிகவும் விசேஷம். ஐப்பசி கடை முழுக்கு, கார்த்திகை முடவன் முழுக்கு ஆகிய நாட்களில் காவேரி நதியில் நீராடினால் அற்புதப் பலன்கள் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.

ஐப்பசியில் காவேரியில் ஒருமுறை நீராடினால்- காவேரியில்  மூன்று முறை நீராடிய பலனும்; யமுனையில் ஐந்து முறை நீராடிய பலனும் கிட்டும்.

பாரதத்தில் உள்ள புனித நதிகள் அனைத் தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, தங்களிடம் மக்கள் கரைத்த பாவக் கறைகளைப் போக்கிக் கொள்வதால், காவேரியானவள் தன்னிடம் நதிகள், மக்கள் கரைத்த பாவச் சுமைகளை திருமங்கலக்குடி திருத் தலத்திலும் மாயூரத்திலும் உத்தரவாகினியாக (தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்து) போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

உனக்கு நீயே தலைவனாக இரு! உணர்ச்சியூட்டுகிறார் புத்தர்

எல்லா உயிர்களிடமும் அன்புடன் நேசக்கரம் நீட்டுங்கள். ஒழுக்கம் என்னும் உயர்ந்த பாறை மீது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். மெய்யறிவினால் மனதில் உண்டாகும் மயக்கத்தையும், அறியாமையையும் போக்குங்கள். கூரை செம்மையாக வேயப்பட்டிருந்தால் வீட்டிற்குள் மழைநீர் இறங்காதது போல, நன்னடத்தையும், நன்னெறிப் பயிற்சியும் கொண்ட மனத்தில் ஆசைகளுக்குச் சிறிதும் இடம் இருக்காது.   ஒருவன் ஆயிரம் படைகளை கூட வெற்றி கொள்ளலாம். அது மட்டுமே வீரமல்ல. எவனொருவன் தன்னைத் தானே அடக்கக் கற்றுக் கொள்கிறானே அவனே வெற்றி வீரர்களில் முதன்மையானவன்.  நாம் ஒவ்வொருவரும் தனக்குத் தானே தலைவனாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நீயே உனக்கு தலைவனாக முடியா விட்டால் வேறு யார் தலைவனாக இருக்க முடியும்? மன அடக்கம் கைவரப்பெற்றவன் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதி பெறுகிறான்.
மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாடு செல்லும் திசையை நோக்கிச் செல்வது போல, துன்பம் அவனைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். நிலையில்லாத மனம் படைத்தவர்களும், உண்மையான அறத்தை அறியாதவர்களும், மனதில் அமைதியற்று குழம்பிக் கொண்டிருப்பவர்களும் எக்காலத்திலும் ஞானத்தை அடைய முடியாது. உண்மையான ஞானம் நம்மிடம் தோன்றி விட்டால், மனம் பூரண விடுதலை அடைந்து விடும். அப்போது சொல்லும், செயலிலும் அமைதி தவழும்.  வயலில் களைகள் பயிருக்கு தீமை தருவது போல, மனிதர்களுக்கு ஆசையே எல்லாத் தீமைகளையும் உண்டாக்குகிறது.   எந்தக் காலத்திலும் பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமை அன்பால் மட்டுமே போக்க முடியும்.  சோம்பித் திரியாதீர்கள். காமத்தோடு புலன் இன்பங்களை நாடாதீர்கள். ஆக்கமும், கேடும் தருகின்ற இருவழிகளை ஆராய்ந்து அறிவின் துணை கொண்டு ஆக்கம் தரும் பாதையில் நடை போடுங்கள்.
நியாயமான முறையில் செல்வத்தை சேர்த்து, அதனைக் கொண்டு இல்லாத ஏழைகளுக்கு தானம் செய்து வாழபவன் பெரும் புண்ணியங்களைத் தேடிக் கொள்கிறான்.  மனிதர்கள் தங்கள் நாக்கினைக் காத்துக் கொள்வது அவசியம். அப்போது எல்லா நன்மைகளும் தானாக வந்து சேரும்.  உங்கள் அறிவை நீங்களே தூண்டிக் கொள்ளுங்கள். உங்கள் நீங்களே பரிசோதனை செய்யுங்கள். இதனால், வாழ்வில் உண்டாகும் துன்பங்களைத் தடுத்துக் கொள்ளும் வலிமை உண்டாகும்.   எந்த ஒரு நதியானாலும் ஒருவனுடைய பாவத்தைக் கழுவ முடியாது. எந்த ஒரு சடங்கும் நம்மைத் தூய்மைப்படுத்தாது. தயவு, தருமசிந்தை, அமைதி போன்ற நல்லொழுக்கங்களே நம்மை ஈடேற்றும்.  உலகத்தின் மீது கொண்டுள்ள அளவு கடந்த பற்றை விடுங்கள். வாழ்க்கையில் ஒருவனுடைய செல்வமோ, அதிகாரமோ அவனை மேலும் மேலும் கீழ்நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.   “அவன் என்னை நிந்தித்தான், தாக்கினான், என் பொருளை அபகரித்தான்’ என்று எண்ணிக் கொண்டே இருந்தால், எந்நாளும் பகைமை தீர்வதில்லை. அத்தகைய எண்ணங்களுக்கு சிறிதும் இடம் தராதீர்கள். அவனிடம் அன்புகாட்டுங்கள். பகைமை மறைந்துவிடும்.

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமலான்

12:30:05

Friday

2012-07-20

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமலான் மாதம் தான் இது.

இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி மூன்று பிரிவுகளாக பிரித்து தன் கருணையை அடியார்கள் மீது அள்ளி வழங்குகிறான்.

இக்கண்ணியமிக்க புனித மாதத்தின் முப்பது நாட்களைப்பற்றி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகையில் அல்லாஹ் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார்கள். ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும் நடுப்பத்து நாட்கள் மக்ஃபிரத் எனும் பாவமன்னிப்புக்குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் (அறிவிப்பாளர்: ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு குஜைமா)

மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எல்லாத் தருணங்களிலும் அனைத்து விதமான நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றாலும் அருள், இறை கருணை, மற்றும் பாவமன்னிப்பை அள்ளித்தருகின்ற இப்புனித மாதத்தில் ஒரு இறை நம்பிக்கையாளரின் சிந்தனையில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனின் இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெருகின்ற நோக்கத்துடன் எந்த ஒரு நன்மையை செய்தாலும் அது ஃபர்ளுக்கான அந்தஸ்தை பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்கு.

எனவே நன்மைகளை அதிகமாக ஈட்டுவதில் முனைப்புடன் செயலாற்றி முதல் பத்தில் அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக்கொள்வதுடன் இரண்டாவது பத்தில் அதிகமாக பாவமன்னிப்பு கோர வேண்டும். நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன் (நூல்: புகாரி) என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் என்றால், நோன்பாளிகளாக இருக்கும் நாம் நம் தேவைகளை அவனிடம் முன் வைக்கின்ற போது இறை அருளாலும், நோன்பின் பரக்கத்தாலும் அல்லாஹ்வே நேரிடையாக அடியார்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். அது மட்டுமல்ல அடியார்கள், தான் செய்த (ஷிர்கைத்தவிர) சிறிய பெரிய தவறுகளுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது தன் கருணையினால் மன்னிப்பையும் வழங்குகிறான்.

இறைவன் கூறியதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்;

”ரமலானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்” (நூல்: புகாரி) என்றும்

”ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவனின் முன் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது.” (நூல்: புகாரி) என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.

முன் செய்த பாவங்களை அல்லாஹ் தன் கருணையைக் கொண்டு மன்னிக்கின்றான் என்பதன் பொருள் மனிதர்கள் கடந்த காலத்தில் பாவச்செயல்களில் ஈடுபட்டுயிருந்திருப்பார்கள் ரமலான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் அடியார் நோன்பின் மூலம் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் கடந்த காலத்தில் செய்த பாவங்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற எண்ணம் தன் மனதில் வந்துவிடும் பொழுது நோன்பின் பரக்கத்தால் அந்த அடியாரை அல்லாஹ் உடனே மன்னித்து கிருபை செய்கிறான்.

பொதுவாக மனிதர்கள் அல்லாஹ்விடம் முறையாக மனமுறுகி பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப்பற்றி மனம் வருந்தி மீண்டும் அப்பாவத்தில் ஈடுபடாமல் இருக்க இந்த ரமலான் மாதத்தில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும், தஹஜ்ஜத் தொழுத பின்பும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை கோர வேண்டும்.

மேலும் நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, அல்லது கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ எங்கு நிகழும் போதும் அது அல்லாஹ்வின் பார்வைக்கு மறைந்தது அல்ல, அவன் எந்நேரமும் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான், மேலும் நாம் நிச்சயமாக அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும், நன்மையான செயல்களுக்கு பரிசும், தீமைகளுக்கு (இறை மன்னிப்பு இல்லையெனில்) தண்டனை நிச்சயம் உண்டு என்ற எண்ணத்தில் உறுதியாகவும், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தையும் மனதில் உள்வாங்கி நாம் நோன்பிருப்போமானால் கண்டிப்பாக அல்லாஹ் அந்த நோன்பை ஏற்றுக் கொண்டு ரஹ்மத் எனும் கருணையை பொழிவதுடன் நாம் செய்த சிரிய பெரிய தவறுகளை அவனிடம் முறையிடுவதினால் நமக்கு மன்னிப்பையும் வழங்கி நரகத்திலிருந்து ஈடேற்றம் பெறச் செய்து சுவர்க்கத்தில் நிச்சயமாக நுழையச் செய்வான் என்பதை கீழ்காணும் ஹதீஸ் நமக்கு உறுதியளிக்கின்றது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் உடனே, அவர்கள் எழுவார்கள் (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி) என்று நபிகளார் கூறினார்கள்.

கருணை உள்ளம் கொண்ட இறைவனே ! உன் அளவில்லா கருணையை எங்கள் மீதும் பொழிந்து உன் மன்னிப்பை மட்டுமே ஆதரவு வைத்துள்ள எங்களின் குற்றம் குறைகளை மன்னித்து நோன்பாளிகளான எங்கள் அனைவர்களையும் ரய்யான் என்ற வாசல் வழியாக சுவர்க்கத்தில் சேர்த்து விடுவாயாக ஆமீன் வஸ்ஸலாம்


Leave a Reply