
வைகாசி தசமி 30-5-2012
கன்னிகா பரமேஸ்வரி ஆரிய வைசியர் களின் குலதெய்வமாக விளங்குகிறாள். இந்த அம்மனின் அவதார நன்னாள் வைகாசி தசமி.
கயிலையில் பார்வதியும் பரமேஸ்வரனும் வஜ்ர, வைடூரிய, கோமேதக, நவரத்தினங் களால் உருவான தங்கமயமான மாளிகையில் ஆனந்தமாக இருந்து ஆன்மாக்களை ரட்சித்து வரும் வேளையில், மகேஸ்வரனின் பிரமோத கணங்களின் தலைவனான நந்திகேஸ்வரன் கங்கையில் நீராடப் புறப்பட்டார். அருகிலிருந்த சமாதி முனிவரிடம், தான் வரும்வரை கயிலை வாயிலைக் காவல் புரியுமாறும்; யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றார்.
அப்போது பார்வதி- பரமேஸ்வரனை தரிசிக்க துர்வாச முனி அங்கு வந்தார். காவல் நின்ற சமாதி முனி அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபமடைந்த துர்வாசர் சமாதி மகரிஷியை மானுடனாகப் பிறக்கும்படி சாபமிட்டார். (அதன்படி ரிஷி பெனுகொண்டா நகர மன்னன் குஸுமரேஷ்டி யாகப் பிறந்து ஆண்டு வந்தார்.)
கங்கையில் நீராடித் திரும்பிய நந்தி பரமேஸ்வரன் காலில் விழுந்து வணங்கினார். இதைப் பார்த்த பார்வதி, நந்தி தன்னை அலட்சியம் செய்துவிட்டதாக நினைத்து கோபம் கொண்டாள். உடனே நந்தியைப் பார்த்து, “நீ பூவுலகில் மானுடனாகப் பிறப் பாய்’ என சாபமிட்டாள். எந்தத் தவறும் செய்யாத தனக்கு இப்படி ஒரு சாபமா என எண்ணி வருந்திய நந்தி, சிவபெருமானிடம் தானும் சாபம் தர வரம் கேட்டுப் பெற்றார். பின்னர் பார்வதியைப் பார்த்து, “தேவி, தாங்கள் பூவுலகில் பெண்ணாக அவதரித்து, கடைசி வரை கன்னியாகவே இருந்து அக் னிப் பிரவேசம் செய்து கயிலை அடைவீர்கள்’ என சாபமிட்டார் நந்தி.
பெனுகொண்டா மன்னர் குஸுமரேஷ்டி (சமாதி முனிவர்) புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதனால் அவர் மனைவி குஸுமாம்பிகைக்கு பார்வதியும் நந்தியும் இரட்டைப் பிள்ளைகளாக அவதரித்தனர். ஆண் குழந்தைக்கு (நந்தி) விருபாக்ஷன் என்று பெயர். பெண் குழந்தைக்கு (பார்வதி) வாசவாம்பாள் என்று பெயர். இவர்கள் இருவரும் சீரும் சிறப்புமாக வளர்ந்தனர். குரு பாஸ்கராச்சாரியரே வியப்படையும்படி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர். வளர்ந்து பருவம் அடைந்தனர்.
முன்னமேயே சமாதி முனிவரிடம் சாபம் பெற்ற கந்தர்வன் விஷ்ணுவர்த்தன் என்ற பெயரில் பக்கத்து நாட்டை ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் பெனுகொண்டா வந்து குஸுமரேஷ்டி மன்னன் அரண்மனை யில் தங்கியபோது அழகிய கன்னியான வாசவியைக் கண்டான். அவளிடம் மனதைப் பறி கொடுத்த அவன் திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டான். குஸுமரேஷ்டி வைசிய தர்மப்படி மன்னனுக்கு பெண் தர இயலாமையை எடுத்துக் கூறினார். கோபமடைந்த விஷ்ணுவர்த்தன் வன்முறையைக் கையாள முயல, பயந்த மன்னன் தன் குலத்தாருடன் ஆலோசித்து பதில் சொல்வ தாகக் கூறி சமாதானப்படுத்தி அனுப்பினார்.
18 நகரங்களிலிருந்து 714 கோத்திரத்தார் மன்னர் அழைப்பினால் வந்து சேர்ந்தனர். நகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைசிய மகா சபையில் கூடினர். பிரச்சினையைப் பற்றி ஆலோசித்தனர். பலர் உடன்பட்டனர்; சிலர் உடன்படவில்லை. 612 கோத்திரக்காரர்கள் பெண் கொடுக்கலாம் என்றனர். 102 கோத்திரக்காரர்கள் கொடுக்க வேண்டாம் என்றனர். அதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்கள் (இவர்களை பெனு கொண்டாவில் நெய் செட்டு (நெய் செட்டி) என்று அழைப்பர்) நாட்டை விட்டு வெளி யேறினர்.
இவ்வளவு குழப்பமும் தன்னால் வந்ததுதானே என எண்ணிய வாசவி, இதற்குத் தானே பரிகாரம் செய்ய எண்ணி தீக்குளிக்க முடிவெடுத்தாள். அவள் கட்டளைப்படி நகரேஸ்வரர் ஆலயத்தின்முன் அக்னி குண்டம் அமைக்கப்பட்டது. அதில் வாசவி அக்னிப் பிரவேசம் செய்தாள்.
அவளுடன் 102 கோத்திரக்காரர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டுவிட்டு அக்னிப் பிரவேசம் செய்து கயிலை அடைந்தனர். (இவர்களை எண்ணெய் செட்டு (எண்ணெய் செட்டி) என பெனுகொண்டாவில் அழைப் பார்கள்.) மேற்படி செய்திகளைக் கேள்விப் பட்ட உடனேயே விஷ்ணுவர்த்தனின் தலை சுக்குநூறாக வெடித்தது; அவன் அழிந்தான்
அவன் மகன் ராஜராஜேந்திரன்- தன் தந்தை தவறு செய்ததால் இப்படி இறந்து விட் டாரே என வருந்தி னான். பிராயச்சித்தமாக தன் அரசு முழுவதையும் வைசியர்களுக்கு காணிக்கையாக்கிவிட்டு மன்னிப்பும் கேட்டான். அவர்கள் அவன் ராஜ்ஜியத்தை ஏற்கவில்லை. அப்போது வாசவி அக்னிக் குண்டத்தினின்று அம்பிகையாகத் தோன்றி மன்னன் மகனை ரட்சித்தாள். பின் தன்னுடன் அக்னிப் பிரவேசம் செய்த நல்லவர்களை வாழ்த்தினாள்.
“இன்று முதல் நீங்கள் (102 கோத்திரக் காரர்கள்) பொன், புகழ், கல்வி உள்ளிட்ட சம்பத்துகள் அனைத்தையும் பெற்று குறைவின்றி வாழுங்கள்’ என வரமளித்தாள்.
அதன்படி வாழ்ந்து வரும் ஆரிய வைசியர் கள், ஆண்டுதோறும் தங்கள் குலதெய்வமான வாசவியின் அவதார நன்னாளையும், அக்னிப் பிரவேசத்தையும் அதிவிமரிசையாக தங்கள் ஆலயங்களில் கொண்டாடி வருகின்றனர்.
பெனுகொண்டாவில் ஆயிரம் கால் மண்டபம்போல் அமைந்த தூண்களில், அம்மனுடன் ஐக்கியமான 102 கோத்திரத்தார் களின் வரலாறு அற்புதமாகச் செதுக்கப் பட்டுள்ளது. இதுபோல் புதுச்சேரி காந்தி வீதி சந்திப்பில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய முன்மண்டபச் சுவர்களின் வாசவியின் வரலாற்றை வண்ணச் சித்திரமாகத் தீட்டியுள்ளனர்.
கன்னிகா பரமேஸ்வரி ஆலயங்கள்
நாட்டின் பல இடங்களிலும் ஆரிய வைசியர்கள் வசிக்குமிடமெல்லாம் கோவில்கள் அமைத்துள்ளனர். இவ்வாலயங் களில் வைகாசி தசமி நாளில் வாசவி அவதார விழாவை அபிஷேக, அலங்காரத்துடன் சிறப் பாகக் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை கொத்த வால் சாவடியில் அமைந்த ஆலயத்தில், நவராத்திரி ஒன்பது நாட்களும், மூலவருக் கும் உற்சவருக்கும் விதம்விதமான அலங் காரங்கள் செய்து விழா நடத்துகின்றனர். 9-ஆம் நாள் சண்டி ஹோமம்.
அன்று மதியம் சுவாசினி பூஜை யில் செய்யும் பூர்ணாஹுதியை அக்னிப் பிரவேசமாகக் குறிப்பிடுகின்ற னர். அம்மனை மஞ்சளில் பிடித்து ஆவாஹ னம் செய்து அக்னியில் இடுவர். பின் அத்து டன் மட்டைத் தேங்காய் கொப்பரைகளையும் இடுவர். 10-ஆம் நாள் பரிவேட்டை விழா.
அன்று அன்னைக்கு மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து 15 அடி உயர சப்பரத்தில் எழுந்தருளச் செய்து வீதியுலா நடத்துவார்கள். தினமும் சிறப்புப் பிரசாதமும் வழங்குவார்கள்.
ஊற வைத்த பச்சைப் பருப்பை வேகவிட்டு, கையால் மசித்து, உப்பு காரமிட்டு நிவேதனம் செய்வதுதான் சிறப்புப் பிரசாதம்.
கன்னிகா பரமேஸ்வரிக்கு பொள்ளாச்சி யிலும் ஆலயம் உள்ளது.
கரூர் பஸ் நிலையம் அருகேயுள்ள ஆலயத் தில் அம்மன் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். பக்கவாட்டுச் சுவர்களில் சுதைச் சிற்பமாக பிள்ளையார்- சித்தி- புத்தி திருக்கல்யாணக் காட்சி, முருகன்- வள்ளி- தெய்வானை திருமணக் காட்சி, சீதா- ராம மணக்கோலக் காட்சி யாவும் இடம் பெற்றுள்ளன. இவ்வாலய நவகிரகங்களின் அமைப்பு புதுமையானது. தாமரை வடிவ பீடத்தில் அமைந்துள்ளது.
மேற்கூரையில் சுழலும் லிங்கத்தின் வண்ண ஓவியத்தைக் காணலாம். எப்பக்கம் இருந்து பார்த்தாலும் லிங்கத்தின் கோமுகம் நம்மையே பார்ப்பது போல அமைந்துள்ளது ஒரு சிறப்பம்சம். வாசவி ஜெயந்தி, அக்னிப் பிரவே சம், ஆடி வெள்ளி, தை வெள்ளி, மார்கழி பூஜை அனைத்தும் சிறப்பாக நடைபெறு கிறது.
திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் அக்னிப் பிரவேச நாளன்று அன்னையை முழு நெற் றுத் தேங்காயில் ஆவாஹனம் செய்து ஹோம குண்டத்தில் இடுவர். அன்னையை இறக்கிய பின் கருவறையில் உள்ள அம்மனை மூட்டை மூட்டையாக புஷ்பங்களால் நிறைத்து கதவை மூடிவிடுவார்கள். மாலை கதவைத் திறந்து புஷ்பங்களை அகற்றி உஷ்ணத்தில் இருக்கும் அம்பிகையை 1,000 லிட்டர் பாலால் அபிஷே கம் செய்து குளிரச் செய்து சாந்தியடையச் செய்வார்கள்.
பெண்ணுரிமையை நிலை நாட்டிய பெண் தெய்வம்- வேண்டுபவர்களின் கோரிக்கையை உடன் வழங்கும் கன்னித் தெய்வம் வாசவி எனப்படும் கன்னிகா பரமேஸ்வரி. இவளை வணங்கினால் நற்பலன்கள் அனைத்தையும் உடனே பெறலாம்.
![]() ஒரு மனிதனின் வாழ்வில் துணையாக நின்று, அவனுக்கு அத்தனை வளங்களும் நலங்களும் அளித்து, எதிரிகளை வெல்லும் ஆற்றலைத் தந்து காக்கும் மகத்தான தெய்வமாக ஸ்ரீமகாகாளி விளங்குகிறாள். வீரத்துக்கு மட்டுமல்ல; அறிவுக்கும், கவி புனையும் ஆற்றலுக்கும், ஆன்மிக சாதனைகளுக்கும் அருளூற்றாக விளங்குபவள் காளி! “யாதுமாகி நின்றாய் காளி’ என மகாகவி பாரதியார் அவளது சக்தியைப் போற்றினார். மூடனாக இருந்த காளிதாசரின் நாவில் சரஸ்வதி நர்த்தனமிடச் செய்தவள் அவள். காளிதாசரை மகாகவியாக- உலகம் உள்ளவரை நிலைத்த புகழ்பெற துணை புரிந்தவள் அவள். இந்து சாம்ராஜ்ஜியம் கண்ட சத்ரபதி சிவாஜிக்கு வீரமும் தீரமும் தந்து வெற்றி மகுடம் சூட்டியவள் அவள். ஆன்மிகத் தின் வான் ஜோதியாக நின்று- விவேகானந்தர் என்ற ஒப்பற்ற மாணிக்கத்தை நமது நாட்டிற்கு வழங்கிய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு பிரத்தியட்சமாகக் காட்சி தந்து அற்புதம் செய்தவள் அவள். நமது சென்னை மாநகரில் தம்புச்செட்டி தெருவில் கடலை நோக்கியபடி அமர்ந்து, சுனாமி அபாயத்தை விரட்டியவள் அவள். “காளி கலி கல்மஷ நாசினி; காளி வலிய சாமுண்டி’ என கலியுகத் தெய்வமாகத் திகழ் பவள் அவள் கொல்கத்தா நகரின் உயிர் மூச்சாகத் திகழ்ந்து, அந்நகரை “சந்தோஷ நகரம்’ (City of Joy) ஆக்கியவள். இன்றைய கால கட்டத்தில், உலகம் முழுவதும் நேர்மறை எண்ணங்கள் குறைந்து எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாகி, தீமைகளை உண்டாக் கும் வன்முறை, தீவிரவாதம், உயிர் பயம், எதிரி களால் துன்பம் என மக்கள் துன்புறும் நேரத் தில், ஆங்கார சொரூபமாய் தீமைகளை மாய்த்து, ஓங்கார சொரூபமாய் நம்மைக் காக்கும் காவல் தெய்வம் அவள். லோக மாதா அவள். கடவுளின் ரூபங்கள் ஆணாகவும் பெண்ணாகவும் இருந்தாலும், திரிசக்தி சொரூபமாக, திரிசூலம் ஏந்தி, திக்கெட்டிலிருந்தும் வரும் ஆபத்து களைப் போக்கி, திக்கற்றவரைக் காப்பாற்றும் பெண்மையின் தாய்மை சொரூபமான அவளை வேண்டினால் கேட்டது கிடைக்கும்; நினைத் தது நடக்கும். பதவி, உதவி அத்தனையும் தானே நம்மைத் தேடி வரும். பொதுவாக, நமது தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் காளி பற்றிய பல சுலோகங் கள், பாடல்கள் இருந்தாலும், அவற்றுடன் நாம் “ஸ்ரீமகாகாளி சாலிஸா’வை தினமும் பாராயணம் செய்தால், அவள் பிரத்தியட்சமாக வந்து நம்மைக் காப்பாள். சகல சௌபாக்கி யங்களையும் கொடுப்பாள். நாற்பது வரியில் அமைந்துள்ள “ஹனுமன் சாலிஸா’ தரும் நற்பயன்போல- “ஸ்ரீ ராம் சாலிஸா’வைப்போல “ஸ்ரீ மகாகாளி சாலிஸா’வும் சக்திவாய்ந்தது. நன்மைகளையெல்லாம் கற்பக விருட்சமாகத் தந்து, தீமைகளை தீயினில் தூசாக்கி, நம்மை புகழுடனும் பொருளுடனும் வாழ்வாங்கு வாழ வைக்க ஸ்ரீ மகாகாளி சாலிஸா ஒரு வரப் பிரசாதம். காரிய சித்திக்கும், கஷ்ட நிவர்த்திக் கும் அவசியம் படிக்க வேண்டிய சாலிஸா இது! ஸ்ரீ மகாகாளி சாலிஸாதோஹா ஜய ஜய சீதாராம கே மத்யவாஸினி அம்ப தேஹு தர்ஷ ஜகதம்ப அப் கரோ ந மாது விளம்ப ஜய தாரா ஜய காளிகா ஜய தச வித்யா வ்ருந்த காளி சாலிஸா ரசத் ஏக சித்தி கவிஹிந்த ப்ராத கால உட்ஜோ படே து பஹரியா ஷாம் துக்க தரித்திரதா தூர் ஹோ சித்தி ஹோய் சப்காம் சௌபாயி ஜய காளி கங்கால மாலினி ஜய மங்களா மஹாகபாலினி ரக்த பீஜ பதகாரிணி மாதா சதா பக்த ஜனனகி சுக்தாத ஷிரோ புத்தி அங்கே ஜய காளி ஜய மத்ய மதங்கே ஹர ஹ்ருதயாரவிந்த சுவிலாஸினி ஜய ஜகதம்ப சகலதுக்க நாசினி ஹ்ரீம் காளி ஸ்ரீம் மகாகாளி க்ரீம் கல்யாணி தக்ஷிணகாளி ஜய கலாவதி ஜய வித்யாவதி ஜயதாரா சுந்தரி மஹாமதி தேஹு சுபுத்தி ஹரஹீசப் சங்கட் ஹோகு பக்த கே ப்ரகட் ஜய ஓம்காரே ஜய ஹூம்காரே மஹாசக்தி ஜய அபரம்பாரே கமலா கலியுக தர்பவினாசினி சதா பக்த ஜனகே பயநாசினி அப் ஜகதம்ப ந தேர் லகா வஹு துக்க தரித்திரத்தாயோர் ஹடாவகு ஜயதி கராள காளிகா மாதா காலானல சமான் துதிநாதா ஜய சங்கரி சுரேஷி சனாதனி கோடி சித்த கவிமாது புரானி கபர்த்தினி கலி கல்ப சனாதனி ஜயவிகசித் நவநளின விலோசனி ஆனந்த கரணி ஆனந்த நிதானா தேஹீமாது மோஹி நிர்மல ஞானா கருணாம்ருத சாகர க்ருபாமயி ஹோஹீ துஷ்டஜனபர அப்நிர்தயி சகல ஜீவ தோஹி பரம ப்யாரா சகல விஷ்வதேரே ஆதாரா ப்ரளய கால மேம் நர்த்தன காரிணி ஜயஜனனி ஸப் ஜககோபாலினி மஹோதரி மஹேஷ்வரி மாயா ஹிமகிரிசுதா விஷ்வ கீ சாயா ஸ்வசந்த் ரத மாரத துனா மாஹி கர்ஜத் தும்ஹிஅவுர் கோயிநாஹி ஸ்பூர்தி மணிகணாகர் ப்ரதானே தாராகண தூப்யோம்ம விதானே ஸ்ரீ தாரே சன்தன ஹிதகாரிணி அக்னி பாணி அதி த்ருஷ்ட விதாரிணி தூம்ர விலோசனி ப்ராண விமோசனா சாமுண்டே மர்கட கோ வாசினி கப்பர் மத்ய சுஷோனாத் சாஜி மாரேஹீமாம் மஹிஷாசுரபாஜி அம்ப அம்பிகா சண்டி சண்டிகா சப் ஏக தும் ஆதிகாளிகா அஜா ஏகரூபா பஹுரூபா அகத சரித்ரதப் சக்தி அனூபா கல்கத்தா கே தக்ஷிண துவாரே மூர்த்தி தோர் மஹேஷி அபாரே காதம்பரி பான ரத ஸ்யாமா ஜய மாதங்கி காம கே தாமா கமலாசன வாஸினி கமலாயனி ஜய ஸ்யாமா ஜய ஜய ஷ்யாமாயனி மாதங்கி ஜப் ஜயதி ப்ரக்ருதி ஹே ஜயபக்தி உர் குமதி சுமதி ஹே கோடி ப்ரம்ஹ சிவ விஷ்ணு காமதா ஜயதா அஹிம்ஸா தர்ம ஜன்மதா ஜல் தல் தச்சு மரிரின நாதினி ஜப் ஸரஸ்வதி வீணா வாதினி ஒம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயே விச்சே கலித கண்டஷோபித நாமுண்டா ஜய ப்ரம்மாண்ட சித்தி கவி மாதா காமாக்யா அவுர் காளி மாதா ஹிங்க ராஜ் விந்த்யாசல வாசினி அட்டஹாசினி அரு அதன நாசினி கித்னி ஸ்துதி கரூம் அகண்டே துப்ரம்மாண்டே சக்தி ஜிதசண்டே கரஹு க்ருபா சர்பே ஜகதம்பா ரஹஹும் நிஷங்க தோர் அவலம்பா சதுர்புஜி காளி தும் ஸ்யாமா ரூப தும்ஹார மஹா அபிராமா கடக அவுர் கப்பர் கர சோஹத சுர் நரமுனி சப்கோ மன மோஹித் தும் ஹரி க்ருபா பாவே ஜோ கோயி ரோக சோக நஹிம் தாகஹம் ஹோயி ஜோ யஹ் பாட் கரே சாலிஸா தாபர் க்ருபா கரஹி கௌரீஸா/ தோஹா ஜய கபாலினி ஜய சிவா ஜய ஜய ஜய ஜகதம்பா சதா பக்த ஜன கேரி துக்க ஹரஹி மாது அவலம்ப. |

ஸ்ரீ மத் ராமாய ணத்தை ஆதிகவி வால்மீகி வடமொழியில் எழுதினார். கம்பர் கவிநயம் சொட்ட தமிழில் இயற்றி அதை ஸ்ரீரங்கப் பெருமாள் முன்பாகவே அரங்கேற்றினார். துளசி தாசர் இந்தி மொழியில் ராமாயணத்தை எழுதினார். குலசேகர ஆழ்வார் போன்றவர்களும் பக்திச் சுவை ததும்ப ராமனைப் பாடி இன்புற்றார்கள்.
ஒவ்வொருவர் பக்தி ஒவ்வொரு விதம். இசையால் இறைவனை அடைந்துவிடலாம். இசை மூலம் பரந்தாமனைப் பணிந்தவர்கள் பலர். சுவையான தமிழில் ராமபிரானைப் பாடி அவர் அருளைப் பெற்றவர்களுள் அருணாசலக் கவிராயரும் ஒருவர்.
ஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப் பால் அருளிய சீர்காழியில் பிறந்தவர் அருணாசலக் கவிராயர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் சகோதர னின் ஆதரவில் வளர்ந்தார். ஏழ்மையான குடும்பம். அருணாசலத்திற்கு இசையில் ஆர்வம் அதிகமாக இருந்தது; நல்ல குரல் வளமும் இருந்தது. தமையனின் வார்த்தைக் குப் பணிந்து, அந்த ஊரிலிருந்த அம்பல வாணக் கவிராயரிடம் சைவத் திருமுறைகளையும், வடமொழியையும், தமிழ் சாத்திரங்களையும் கற்று வந்தார். இசையில் ஆர்வம் அதிகம் இருந்ததால் எல்லாவற்றையும் பாடலாக மாற்றிப் பாடுவதில் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார்.
நீராடுவதற்கு நதிக்குச் சென்றால், தனிமையில் இருந்து தன் இனிமையான குரலில் பாடி மகிழ்வார். நேரம் போவது தெரியாமல் பாடிக் கொண்டிருப்பார்.
அருணாசலத்தின் இறை பக்தியையும் இனிய குரலையும் கண்ட தருமபுரம் ஆதீனம், அவரை துறவு கொள்ளச் செய்து இறைப்பணியில் ஈடுபடுத்த விழைந்தார். ஆனால் அருணாசலத்தின் தமையன் அதற்கு சம்மதிக்கவில்லை.
அருணாசலம் கம்ப ராமாயணத்தை மிகுந்த ஆர்வமாகப் படித்தார். எப்போ தும் ராம சிந்தனையுடனேயே இருந்தார். ராமனை இசையால் பாடி இன்புற வேண்டும் என்று மனம் துடித்தது.
ஒருநாள் இரவு அருணாசலம் கனவில் ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். கோதண்டத்தை ஏந்திய ராமபிரானும் லட்சுமணனும் தரிசனம் தந்து, “ராமா யணத்தை கர்நாடக இசையில் பாடு’ என்று சொல்லி அருள்பாலித்தார்கள்.
அருணாசலத்திற்கு மேனி சிலிர்த்தது. கண்களில் நீர் வழிந்தது. அடுத்த வினா டியே அவருடைய மனதில் இசை பிர வாகமாகப் பொங்கிற்று. “யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேன்’ என்ற பாடல் இசை வடிவில் வந்தது. ஸ்ரீராமன் மிதிலா நகருக்குள் வரும்போது, கன்னி மாடத்திலிருந்த சீதாதேவி தன் தோழி களிடம் கேட்பதாக அமைந்தது இந்தப் பாடல். தன் மனதிற்குள் சுந்தர ரூபமான ஸ்ரீராமனை அனுபவித்துப் பாடிய பாடல்.
இயல், இசை, நாடக நூல்களை 12 ஆண்டுகள் முழுமூச்சாகக் கற்றார்அருணாசலம். அவர் வாலிப வயதைஅடைந்தவுடன், அவருடைய தமையன் தனக்குத் தெரிந்த சீலமுள்ள குடும்பத்துப் பெண்ணை திருமணம் செய்து வைத்தார். அருணாசலத்திற்கு கடை ஒன்றை வைத்துக் கொடுத்தார் பெண்ணின் தந்தை. பகல் வேளைகளில் வியாபாரத்தை கவனிப்பார். இரவில் புராண பிரவசனம் செய்வார். அருணாசலத்தின் பிரவசனத் தைக் கேட்க மக்கள் திரளாகக் கூடினார் கள். இனிமையான குரலில் அவர் ராமா யணத்தை இசையுடன் பாடிச் சொல்லும் போது, மக்கள் மெய்ம்மறந்து கேட்பார்கள்.
அருணாசலம் குறிப்பு எதுவும் எடுப்பதில்லை. ஸ்ரீராமரை தியானித்து மேடையில் வந்து அமர்ந்தவுடன், அவரிடமிருந்து அருவியாகப் பாடல்கள் அமுதம் போன்று கொட்டும். அருணா சலத்தின் முகத்தில் ஒரு தெய்வீக ஒளி பிரகாசிக்கும். நெற்றியில் திருநீறு, தூய வெள்ளை ஆடை, கழுத்தில் துளசிமாலை. ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ராமனை எப்படி அனுபவித்தாரோ அப்படியே அருணாசலமும் அனுபவித்தார்.
நாளுக்கு நாள் அருணாசலத்தின் புகழ் கூடியது. சீர்காழிக்கு அருகிலுள்ள சட்டநாதபுரத்திலிருந்து கோதண்ட ராமன், வேங்கடராமன் என்ற இளைஞர் கள் தவறாமல் அருணாசலத்தின் பிரவசனத் தைக் கேட்க வருவார்கள். அருணாசலத் தின் இசையிலும், புராணம் சொல்லும் அழகிலும் தங்கள் மனதைப் பறிகொடுத் தார்கள். அவர்கள் அருணாசலத்தை நமஸ்கரித்து, “ஐயா, உங்கள் இசையில் நாங்கள் கட்டுண்டோம். நீங்கள் எங்களுக்கு ராமாயணப் பாடல்களைக் கற்றுத் தரவேண்டும். உங்கள் பாடல்களின் நகல் வேண்டும்’ என்று பணிவோடு வேண்டினார்கள். அருணாசலம் மகிழ்ந்து அவர்களுக்கு இசையுடன் ராமாயணப் பாடல்களைக் கற்றுக் கொடுத்தார். ராம கதையை தானும் அனுபவித்து அவர் களையும் அனுபவிக்கும்படி செய்தார்.
பிறந்தது முதல் சீர்காழியை விட்டு எங்குமே செல்லாதபோதிலும், அயோத்தி யையும், சரயு நதியையும், தண்டகாரண் யத்தையும், கோதாவரி நதியையும் அப்ப டியே கண்முன்னே கொண்டு நிறுத்தி விடுவார். ஒருநாள் ராமாயண பிரவசனம் சொல்லும்போது, ராமர் காட்டுக்குப் போகும் கட்டத்தில் கைகேயி கோபித்துக் கொண்டு மந்தரையிடம் பாடிய, “ராமனுக்கே மன்னன் முடிசூட்டினால்’ என்ற பாடலைத் திரும்பத் திரும்ப பாடி மெய்சிலிர்த்துப் போனாராம். லட்சு மணன் பொங்கி எழும்போது, “நானே ராமனுக்கு முடி சூட்டுவேன்’ என்று ஆவேசமாகப் பாடியபோது, சபையில் உள்ள அனைவரும் வெலவெலத்துப் போனார்களாம். லட்சுமணனின் சீற்றமும் வில்லின் நாண் ஒலியும் அவரது பாடலில் வெளிப்பட்டதாம்.
ஸ்ரீ ராமபிரானைப் பற்றி ராமநாடக கீர்த்தனைகளை நாற்பது ராகங்களில் பாடினார். தவிர தனிப்பாடல்களும் பாடினார். அத்தனை பாடல்களும் மனதை உருக்கும்படியாக அமைந்தன.
“சரணம், சரணம் ரகுராமா, நீ என்னை தற்காத்து அருள் பரந்தாமா’ போன்ற பாடல்களை பக்தி ததும்ப பாடியுள்ளார். ராமாயணம் முழுவதையும் பாடலாகப் பாடினார். இவர் இயற்றிய, “ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜெயமங்களம், திவ்யமுக சந்திரனுக்கு சுபமங்களம்’ என்ற பாடல் எல்லாரையும் மிகவும் கவர்ந்தது. பல வித்வான்கள் கச்சேரிகளில் இவரது பாடல்களைப் பாடினார்கள்.
எப்போதுமே கவிஞர்களுக்கு சோதனை உண்டு. கம்ப ராமாயணத்தை கம்பர் அரங்கேற்றும்போது எதிர்ப்பு ஏற்பட்டதுபோல, அருணாசலக் கவி யின் பாடல்களை அரங்கேற்றும்போது எதிர்ப்பு தெரிவித்தனர். பெருமாள் உத்தரவு கொடுத்தால்தான் அரங்கேற்றம் நடக்கும் என்று கண்டிப்பாகச் சொன் னார்கள்.
அருணாசலக் கவிராயர் ராமனிடமே தஞ்சம் ஆனார். ஸ்ரீராமனை நினைத்து உருகி, “ஏன் பள்ளி கொண்டீரய்யா ஸ்ரீரங்கநாதனே’ என்று மோகன ராகத்தில் மனம் கசிந்து பாடி உருகினார். அந்தப் பாடலில், “விச்வாமித்திரர் பின் நடந்த வருத்தமோ’ என ஆரம்பித்து, ராவணவதம் முடிய ராமாயணத்தில் உள்ள அத்தனை சம்பவங்களையும் பாடி முடித்தார். இறைவன் அருணாசலத்தின் பக்தியோடு கூடிய இசையைக் கேட்டு அருள்புரிந்தார். வைணவ ஆச்சார்யர் களின் கனவில் திருமாலே வந்து அரங்கேற்ற நாளைச் சொல்லி மறைந் தார். கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய அதே பங்குனித் திருநாளில் அருணாசலக் கவிராயரின் ராம நாடக கீர்த்தனைகளும் மிகச் சிறப்பாக அரங்கேறியது.
புதுவையில் துபாஷாக இருந்த அனந்தரங்கம் பிள்ளை, கவிராயரை வரவேற்று சிறப்புக்கள் செய்தார். மணலி முத்துக் கிருஷ்ண பிள்ளை என்பவர் கவிராயரின் பாடல்களைப் பிரபலம் செய்தார். “நாடெல்லாம் ஒலிக்க வேண்டிய நாத காவியம்’ என்று பாராட்டினார்.
அருணாசலக் கவிராயரின் பாடல்கள் இன்றும் சங்கீத வித்வான்களால் பாடப்படுகிறது. நாமும் கவிராயரது பாடல்களைப் பாடி, ஸ்ரீ ராமனின் அருளைப் பெறுவோம்.
அட்சய திரிதியை 24-4-2012அமாவாசைக்குப்பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம் வாங்க ஆசைப்படுவார் கள். ஆனால் எல்லாராலும் வாங்க முடியாதே. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடைய லாமே. உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். எப்படியும் மாதா மாதம் மளிகை வாங்கியே ஆகவேண்டும். சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாமே. ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே. பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான். மணிமேகலையும் இப்பாத்திரம் பெற்றுள்ளாள். பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான். ![]() கௌரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும்போது, “அட்சய’ என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான். பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான். மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனை யில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே. ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாக வும் விளங்குகிறாள். பசுக்களில் கோமாதா, யாகங்களில் தட்சிணை, தாமரையில் கமலை, அவிர்பாகத்தில் ஸ்வாகா தேவி என சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நாராயணனின் இணைபிரியாத தேவியான லட்சுமியை நாம் அட்சய திரிதியை நாளில் சாஸ்திரப்படி பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும். இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர். அட்சய திரிதியையில் செய்யும் எல்லா வகை தான- தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும். கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும். அன்று குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம்; புத்தகம் வெளியிடலாம்; வீடு, மனை, கிணறு புதுப்பிக்கலாம்; எந்த ஒரு புதிய செயலையும், புண்ணிய செயலையும் செய்யலாம். ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது. சங்கர அவதாரம் கேரளாவில் உள்ளது காலடி தலம். இங்கு சிவகுரு- ஆர்யாம்பாள் தம்பதிகளுக்குப் பிறந்த வர் ஆதிசங்கர். சிறு வயதில் குருகுலத்தில் சேர்ந்தார். குருகுல வழக்கப்படி சங்கரர் யாசகத்திற்குப் புறப்பட்டார். அவர் முதல் முதல் யாசித்த வீடு படு ஏழை வீடு. “பவதி பிட்சாந்தேஹி’ என குரல் கொடுத்த பாலகனுக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண், தன்னிடமிருந்த காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். (அவள் இல்லத்தின் பின்புறம் நெல்லிமரம் ஒன்று இருந்தது.) அவள் ஏழ்மையை உணர்ந்த பாலகன் அவளுக்கு உதவ விரும்பி, மகாலட்சு மியை நோக்கி மனம் உருகப் பாடினார். என்ன அதிசயம்! அவள் வீட்டு நெல்லிமரம் தங்கமழையைப் பெய்வித்தது. வீடு முழுவதும் தங்கக் கனி கள் குவிந்தன. அப்பாடல் தான் கனகதாரா ஸ்தோத் திரம். இது 8-ஆம் நூற்றாண் டில் நடந்த அதிசயமாகும். இச்சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனக தாரா யாகம் செய்கின்றனர். சங்கரர் முக்தியடைந்தது 32-ஆம் வயதில். எனவே அன் றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1,008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்வார்கள். தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், ரட்சைகள் வைத்துப் பூஜை செய்வார்கள். முன்னதாகப் பணம் கட்டி பதிவு செய்த பக்தர்களுக்கு இவை தரப்படும். இதனை வீட்டு பூஜையறையில் வைத்துப் பூஜித்தால் நலமும் வளமும் பெற்று இன்பமாய் வாழலாம். திருக்காலடியப்பன் ஆலய மூலஸ்தானத்தில் கண்ணன் ஒரு கையில் வெண்ணெயுடனும், ஒரு கையை இடுப்பிலும் வைத்தபடி காட்சி தரும் அழகைக் காணலாம். ஆலயத்தின் பெயர் கிருஷ்ண அம்பலம் என்பதாகும். இவ்வாலயத்தின் உள்ளே வலப்புறம் சங்கரர் சந்நிதியும், இடப்புறம் சாரதாம்பாள் சந்நிதியும், சக்தி விநாயகர், கிருஷ்ணர் சந்நிதிகளும் அமைந் துள்ளன. சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் சமாதி யும் சிறப்புடன் அமைத்துள்ளனர். இங்கு ஒரு கல் விளக்கு நிரந்தரமாக ஒளி வீசியபடி உள்ளது. இது ஒரு அணையா தீபம். ஆன்மிகத்தின் முதல் குருவான ஆதிசங்கரரின் தாய்க்கு இவ்வாலயத்தில் தரப்பட்டுள்ள சிறந்த புகழ் சரியானதுதானே. 1910-ஆம் ஆண்டு ஆதிசங்கரர் அவதரித்த காலடியில் ஒரு கோவில் அமைத்துள்ளனர். இக் கோவிலில் சங்கரரின் உருவத்தை தட்சிணாமூர்த்தி யாக வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆலயத்தில் உள்ள பெரிய மண்டபத்தின் சுவர்களில் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை வண்ண ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர். வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில் கேரளா மாநிலம் அடுவாஞ்சேரி கிராமத்தில்- வாசுதேவபுரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த மகா விஷ்ணு கோவில் உள்ளது. பரசுராமர் பிரதிஷ்டை செய்யும்போது, லட்சுமி தேவியை திருமால் தன் கையால் ஆலிங்கனம் செய்துகொண்டிருப்பது போல சங்கல்பம் செய்து கொண்டே பிரதிஷ்டை செய்தார். பின் இவ்வாலயத்தை அந்தணர்களிடம் ஒப்படைத்து பூஜை பொறுப்புகளைத் தந்தார். ஆலயப் பொறுப்புகளை பரசுராமரிடமிருந்து பெற் றுக்கொண்ட அந்தணர்கள் பணிகளைச் சிறப்புடன் செய்ததால் லட்சுமி கடாட் சம் பெற்று செல்வந்தர்களாக மிக உயர்ந்த நிலையில் இருந்தனர். பல தலைமுறைகளுக்குப் பின் வந்தவர்கள் கோவில் காரியங்களை உதாசீனப்படுத்தியதால், அனைத்தையும் இழந்து வறுமையில் வாடினர். கோவில் பூஜையும் சரிவர நடைபெறவில்லை. அதனால் ஆலயத்தில் மனித நடமாட்டம் இல்லை. விஷ்ணுவிற்கு பூஜைகள் நடைபெறாத நிலையில், அவருக்கு பணிவிடை செய்ய லட்சு மியே வந்தாள். சாலக்குடி ஆற்றில் பூஜைக்கு நீர் எடுக்க வந்தபோது, அங்கு வந்த வில்வமங்கள சுவாமிகள் லட்சுமி தேவியைக் கண்டு ஆச்சரிய மடைந்து விவரம் கேட்டார். லட்சுமியும் நடந்த வற்றைக் கூறினாள்.
ஆலய மூலவரான விஷ்ணு பகவான் சதுர்புஜங் களுடன் காட்சி தருகிறார். இவருக்குப்பின் லட்சுமிதேவி விக்ரகம் உள்ளது. அதை தினசரி பார்க்க முடியாது. இந்த எட்டு நாட்களில்- அவ்விக்ரகத்தை விஷ்ணுவின் இடபாகத்தில் எழுந்தருளச் செய்யும்போது பார்க்கலாம். முழையூர் காசி, விளங்குளம், திருப்பரங்குன்றம், திருச் சோற்றுத்துறை, முழையூர் ஆகிய தலங்களுடன் மேலும் ஒருசில தலங்கள் அட்சய திரிதியை தலங்களாகும். இத்தலங்களில் மிக விசேஷமாகக் கருதப்படும் தலம் முழையூர் சிவத்தலமாகும். முழையூர் தலத்தில் வருடந்தோறும் அட்சய திரிதியை நாளன்று ஆயிரக்கணக்கானோர் கூடிக் கொண்டாடுகின்றனர். இத்தல இறைவன் பரசுநாதர்; இறைவி ஞானாம்பிகை. இத்தலம் பட்டீஸ்வரம் அருகே அமைந்துள்ளது. திருக்கயிலாயத்தில் இசைக்கப்படும் முழை என்ற இசைக்கருவியின் ஒலி முதன்முதல் பூமியை அடைந்த தலம் இது. எனவே முழையூர் எனப் பெயர் பெற்றது. இந்த ஒலியைக் கேட்பதற்காகவே முப்பத்து முக்கோடி தேவர்கள் அட்சய திரிதியை நாளன்று இத்திருத்தலத்தில் கூடி இவ்வொலி கேட்டு ஆனந்திக்கின்றனர். அட்சய திரிதியை அன்று 3, 12, 21 என்ற எண் ணிக்கை கொண்ட ஜலமதுரம் என்ற இளநீரால் அபிஷேகம் செய்து, புடலங்காய் கலந்த உணவை தானமளித்தால் அறிந்தோ, அறியாமலோ செய்த தீவினைகளில் இருந்து காக்கப்படுவார்கள். இவ்வாலய லிங்கம் பஞ்சாட்சர பீஜங்களாலான பரசுநாத லிங்கம். கோஷ்ட மூர்த்திகள் இங்கு இறைவன் அருகிலேயே அமைந்துள்ளனர். இங்கு குபேர பூஜை செய்வது சிறப்பு. காசி அன்னபூரணி தன் கையில் உள்ள அட்சய பாத்திரத்தில் இருந்த உணவை சர்வேஸ்வரனுக்கு தானமிட்டு, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட வைத்த நாள் அட்சய திரிதியை நாள்தான். எனவே காசியும் அட்சய திரிதியை தலமாகிறது. விளங்குளம் சனியின் துயரைத் தீர்க்க இறைவன் தோன்றிய தலம் விளங்குளம் என்ற கிராமத்தில் உள்ளது. ஈஸ்வரன் சனியின் ஊனத்தை நீக்கிய நாள் பூச நட்சத்திர சனிக்கிழமையுடன் கூடிய அட்சய திரிதியை நாளில்தான். இத்தலத்தில் அட்சய திரிதியை அன்று அட்சய புரீஸ்வரருக்கும், சனி பகவானுக்கும் சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும். இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பக் கஷ்டம், குழப்பம் விலகும். தஞ்சை மாவட்டம், பேராவூரணியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. குபேரலிங்கம் திருவானைக்கா கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ளது குபேரலிங்கம். இந்த லிங்கத்தை அட்சய திரிதியை நாளன்று பால், தேன், சந்தன அபிஷேகம் செய்துவழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, வறுமை தொலைந்து வளமாக வாழலாம். இத்தலத்தில் ஆடை தானமும் அன்ன தானமும் செய்வது சிறப்பு. திருக்கோளூர் நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. இத்தல பெருமாள் மரக்காலால் குபேரனுக்கு செல்வம் கொடுத்தாராம். பின் அந்த மரக்காலை தலைக்கு அடியில் வைத்தபடி சயன கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு வைத்த மாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் பெயர். இவரை அட்சய திரிதியை நாளில் தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும். சுவர்ண கௌரி விரதம் கர்நாடக மாநிலப் பெண்கள் அட்சய திரிதியை அன்று சுவர்ண கௌரி விரதம் கடைப்பிடிப்பர். அன்று பார்வதி பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறுநாள் அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயக ரும் வருவதாகவும் நம்பப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் கோதுமையில் இனிப்புகள் செய்து படைத்து பிரசாதமாக அனைவருக்கும் கொடுத்து ஆடை தானமும் செய்வார்கள். அட்சய திரிதியை தான பலன்கள் தயிர்சாத தானம்- ஆயுள் கூடும். இனிப்புப் பண்ட தானம்- திருமணத் தடையை விலக்கும். உணவு தானிய தானம்- விபத்து, அகால மரணத்தை தடுக்கும். கால்நடை தீவன தானம்- வாழ்வை வள மாக்கும். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்தால் பாபவிமோசனம் கிட்டும். லட்சுமி பூஜை செய்வதால் அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும். |

சித்திரை நந்தன ஆண்டு
13-4-2012, வெள்ளிக்கிழமை, சித்திரை மாத முதல்நாளன்று நந்தன வருடம் பிறக்கிறது.
அன்று வீட்டின் மூத்தோர் புதிய பஞ்சாங்கத்தை பூஜையறையில் வைத்துப் பூஜித்து அனைவர் முன்னிலையிலும் படிப்பார். பூஜை முடித்து ஆலயம் சென்று வழிபட்டு பின் வீட்டில் அறுசுவை உணவு உண்பர். அதில் வசந்த காலத்தில் பூக்கும் வேப்பம் பூவும் முக்கனி களும் கண்டிப்பாக இடம்பெறும். கோவில் களிலும் இந்த பஞ்சாங்கம் படித்தல் நடை பெறும்.
சித்திரை மாதத்தில் புத்தாண்டு விழா, ஆதிசங்கரர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி, மச்சாவதார ஜெயந்தி, வராக ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, வாசவி ஜெயந்தி, ரமணர் ஆராதனை விழா, காமன் பண்டிகை, ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம், தேர்த் திருவிழா, சமயபுரம் மாரி பூச்சொரிதல் விழா, காரைக்குடி கொப்புடையம் மன் தேர்த் திருவிழா, சித்திரை அன்னா பிஷேகம், சப்த ஸ்தான விழா, ராசிபுர திருமணம், தேர்விழா, மகாலட்சுமி அவதார தினம், பாபநாசம் சிவ- பார்வதி திருமணக் கோல காட்சி, தங்கத்தேர், சித்திரகுப்த பூஜை, குருவாயூர் விஷுக்கனி, நெல்லுக்கடைமாரி செடல் விழா, கூத்தாண்டவர் விழா, கன்னியா குமரியில் சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் கண்டு நிலாச்சோறு என்ற சித்திரான்னம் உண்ணும் விழா, அட்சய திரிதியை கனகதாரா யாகம், மகாலட்சுமி எட்டு நாள் காட்சி தரும் விழா என பற்பல விழாக்களைக் காணலாம். எதைப் பார்ப்பது எதை விடுவது? எல்லாமே நன்மை தரும் விழாக்கள்!
அக்னி நட்சத்திரம் என்ற கொடிய வெயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 21 நாட்கள் நம்மை வாட்டி வதைக்கும். இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். இது சித்திரை மாத இறுதி பத்து நாட்களும்; வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இருக்கும். சில வருடங்களில் 25 நாட்கள்கூட இருக்கும்.
இந்நாட்களில் சூரியனுக்கு மிக அருகே பூமி இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி. கார்த்திகை நெருப்பைக் கக்கும் நட்சத்திரம். எனவே இதை அக்னி நட்சத்திரம் என்பர்.
இந்த அக்னி நட்சத்திர நாட்களில், வெயிலில் இருந்து விடுபட மகா விஷ்ணுவையும், மகா மாரியம்மனையும் சாந்தப்படுத்த வேண்டும். மகாவிஷ்ணுவின் திருநாமங்களை ஜெபித்து வழிபட வேண்டும். நாராயண மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். மாரியை பால், தேன், சந்தனத்தால் அபிஷேகம் செய்து குளிர் விக்க வேண்டும்.
இந்நாட்களில் தான- தர்மம் செய்வது சிறந்த பலனைத் தரும். தண்ணீர்ப் பந்தல்அமைக்கலாம். நீர் மோர், பானகம் விநியோகம் செய்யலாம். விசிறி, காலணி கொடுக்கலாம். சீதாஷ்டக சுலோகம் சொல்லலாம்.
அக்னி நட்சத்திரம் பிறந்த கதைமுன்னொரு காலத்தில் சுவேத யாகத்தை 12 வருடங்கள் இடைவிடாது செய்தனர். தொடர்ந்து அக்னி குண்டத்தில் நெய் ஊற்றப் பட்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. நோயினின்று விடுபட, காண்டவ வனத்தை எரித்து உண்ண திட்டமிட்டான் அக்னி.

இதை அறிந்த காண்டவ வன உயிரினங்கள் வருண தேவனின் உதவியை வேண்டினர். வருணன் கனமழை பெய்வித்தான். இதனால் வருந்திய அக்னி திருமாலின் உதவியை வேண்டி னான். திருமால் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சு னன் வான் நோக்கி அம்புகளை எய்து சரக்கூடு கட்டி, மழை நீர் வனத்தில் விழாமல் தடுத்தான். அக்னி வனத்தை எரிக்கலானான்.
அப்போது கண்ணன், “அக்னியே’! உனக்கு 21 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் உன் பசியையும் பிணியையும் போக்கிக் கொள்’ என்றார். அதன்படி அக்னி 21 நாட்கள் வனத்தை எரித்து விழுங்கினான். இந்த நாட்களைத்தான் நாம் அக்னி நட்சத்திர நாட்கள் என்கிறோம்.
அக்னி நட்சத்திர நாட்களில் முருகனையும்; பரணிக்கு உரிய துர்க்கை, ரோஹிணிக்கு உரிய பிரம்மன், கார்த்திகையின் அதிதேவதை அக்னி ஆகியோரையும் வழிபடலாம். அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து, கடவுள்
அருளைப் பெறலாம்.
மதுரை சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா என்றாலே மதுரைதான் நினைவிற்கு வரும். மதுரை மீனாட்சியம்மை திருமண விழாவும் அதையொட்டி கள்ளழகர் வைகையில் இறங்கும் விழாவும் உலகப் புகழ்பெற்றவை.
முற்காலத்தில் இவ்விழா பங்குனி மாதத் தில்தான் நடைபெற்று வந்தது. இவ்விழாவை சித்திரை மாத விழாவாக மாற்றியமைத்தவர் மதுரை மன்னன் திருமலை நாயக்கர்தான். பங்குனி மாதம் மக்கள் விவசாய வேலையில் ஈடுபடும் காலம். அப்போது மக்கள் கையில் பணப்புழக்கமும் குறைவாக இருக்கும்.
எனவே மீனாட்சி திருமணத்திற்கும், தேர்த் திருவிழாவுக்கும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அப்போது சைவ- வைணவ பேதமும் இருந்த காலம். எனவே மன்னர் திருமலை நாயக்கர் யோசனை செய்து, பங்குனியில் நடைபெற்ற விழாவை சித்திரைக்கு மாற்றி, கள்ளழகர் விழாவையும் அத்துடன் இணைத்து விட்டார். மன்னரின் உத்தரவை மக்களும் ஏற்றனர்.
அவர் எண்ணியபடி, மீனாட்சி திருமணம், தேர் விழா, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி மதுரை குலுங்கியது. சைவ- வைணவ பேதமும் நீங்கி அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவை இன்றளவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
சிறுத்தொண்டர் விழா
நரசிம்ம பல்லவ மன்னரிடம் படைத் தலைவராகப் பணியாற்றியவர் பரஞ்சோதி. அவரது சிவத்தொண்டின் மேன்மையறிந்த மன்னன், “தொண்டு புரியுங்கள்’ எனக் கூறி அனுப்பிவிட்டார். பரஞ்சோதி தன் பிறந்த ஊரான திருச்செங்காட்டங்குடி (கணபதியீஸ்வரம்) சென்று, திருவெண்காட்டு நங்கையை மணந்துகொண்டு, சிவநெறியில் வாழ்ந்து வந்தார். இவர்கள் பிள்ளையின் பெயர் சீராளன்.
பரஞ்சோதி தினமும் ஒரு சிவனடியாருக்கு அமுது படைத்த பின்னரே குடும்பத்துடன் உணவு அருந்தும் வழக்கம் உடையவர்.
அவரது பக்தியை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் சிவபெருமான். ஒரு சந்நியாசிபோல வேட மிட்டு மரத்தடியில் அமர்ந்துகொண் டார்.
வழக்கம்போல சிவனடியாரைத் தேடி வந்த பரஞ்சோதி, மரத்தடியிலிருந்த ருத்ராபதி என்னும் அந்த சந்நியாசியைக் கண்டு மகிழ்ந்து, உணவுண்ண வருமாறு அழைத்தார்.
அந்த சந்நியாசியோ, “”நான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் உண் பேன். இன்று உணவு உண்ணும் நாள்தான். ஆனால் நான் நரபாகம் உண்பவன். அதை உன்னால் ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்டார்.
திடுக்கிட்டார் பரஞ்சோதி.
“”இன்னொரு நிபந்தனை. அவன் தாய்க்கு ஒரே பிள்ளையாக இருக்க வேண்டும். அவன் தலையை தாய் பிடித் துக்கொள்ள, தந்தை அரிய வேண்டும். அப்படி சமைத்ததைத்தான் உண்பேன்” என்றார் சந்நியாசி.
திகைத்து நின்ற பரஞ்சோதிக்கு திடீரென்று மனதில் ஒரு ஒளி தோன் றியது. “”உங்கள் எண்ணப்படியே ஆகட் டும்” என்று சொல்லி முனிவரை அழைத்துக்கொண்டு இல்லம் சேர்ந்தார்.
தன் மனைவியிடம் விவரத்தைக் கூறி, தன் ஒரே மகன் சீராளனைச் சமைத்து சந்நியாசிக்கு உணவாகப் படைத்தார். அப்போது சந்நியாசி, “”நான் தனியாக உண்ணுவதில்லை. உன் மகனை வரச்சொல்” என்றார்.
“”சுவாமி! அவன் இப்போது வர மாட்டான்” என்று கூற, “”அவன் பெய ரைச் சொல்லி அழை!” என்றார் சந்நி யாசி. அதன்படியே பரஞ்சோதி அழைக்க, சீராளன் உயிரோடு வந்தான். திரும்பிப் பார்த்த போது சிவனடியாரைக் காணவில்லை. அப்போது சிவன்- பார்வதிதேவியுடன் காட்சி தந்து அம்மூவருக்கும் முக்தியளித்தார்.
சிவன் அவர்களுக்கு முக்தியளித்தது சித்திரை மாத பரணி நட்சத்திரத்தன்று என்பதால், அந்த நாளில் திருச்செங்காட்டங்குடியில் இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். திட்டச்சேரி, கண்கொடுத்த வனிதம் ஆகிய தலங்க ளிலும் இவ்விழா சிறப்பாக நடை பெறும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் உள்ள வீர அழகர் திருக் கோவிலில் சித்திரைத் திருவிழா மதுரையில் நடைபெறுவதுபோலவே நடைபெறுகிறது. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் (வைகை) இறங்குவார். இங்கு பேரழகர் தென்வடலாக ஓடும் நதியில் இறங்குவார். இவ்வாலய அனுமன் மகுடம் அணிந்த கோலத் தில் காட்சி தருகிறார்.

காரைக்குடி
சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும்தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருப்பர். அதுபோல அம்மன் தலங்களில் மூலஸ்தான அம்மனே உற்சவராக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவிலில் மட்டும்தான். இது ஆதி சங்கரர் வழிபட்ட தலம். இங்கு துர்க்கை புதுமை யாக கிழக்கு பார்த்து வீற்றுள்ளாள். அதுபோல வேறெங்கும் இல்லாத கோலமாக கருப்பண்ண சுவாமி குதிரையில் அமர்ந்தபடி அருள் பாலிக் கிறார்.
இக்கோவிலில் செவ்வாய் பெருந்திருவிழா தேரோட்டம் விசேஷம். இது சித்திரை மாத கடைசி செவ்வாயன்று தொடங்கி, பத்து நாட்கள் வைகாசி முதல் வாரம் வரை நடைபெறும். சித்திரையில் நான்கு செவ்வாய் வந்தால் இரண்டாவது செவ்வாயிலும், ஐந்து செவ்வாய் வந்தால் மூன்றாவது செவ்வாயிலும் கொப்புடை யம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்துவார்கள். புத்தாண்டு அன்றும் சிறப்பு வழிபாடு உண்டு. தேர் ஊர்வலத்தில் ஆலய மூலஸ்தான அம்மனே பவனி வருவது சிறப்பு.
ஸ்ரீரங்கம்
சித்திரையில் சிறப்பாக நடைபெறும் தேர்த்திருவிழாவை விருப்பண்ண திருநாள் என்று அழைப்பதுண்டு. மாலிக்காபூரின் தென்னக முற் றுகையின்போது, ரங்கநாதர் 1310-ல் அகற்றப்பட் டார். பின் 1371-ஆம் ஆண்டு விருப்பண்ண உடையார் என்ற நாயக்க வம்ச மன்னரால் மீண்டும் கொண்டு வரப்பட்டார் ரங்கர். 60 ஆண்டுகள் நடைபெறாத சித்திரைத் தேர்விழாவை இம்மன்னர் மீண்டும் ஏற்பாடு செய்ததால், இவ்விழாவை விருப்பண்ண திருநாள் என்று அழைக்கின்றனர்.
சமயபுரம்
சித்திரை மாத முதல் செவ்வாயன்று நடைபெறும் தேர்த் திருவிழாவில் பக்தர்கள் வேப்பிலை கட்டிக் கொண்டு பால்குடம், பலவகை காவடிகள் எடுத்த படி, ஈரத்துணியுடன் அலகு குத்திக் கொண்டு மாரியம்மனை வழிபட வருவார்கள்.
மற்ற எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. உற்சவ அம்மனின் பஞ்சலோகத் திருவுருவம் இரண்டு உள்ளன. சித்திரைத் தேர் விழாவின் முதல் நாள் இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் ஒரு அம்மன் வீதியுலா வருவாள். மறுநாள் திருத்தேரில் மற்றொரு அம்மன் பவனி வருவாள்.
சீர்காழி
இத்தலத்தில் ஞானசம்பந்தருக்கு அம்பிகை பாலூட்டிய உற்சவம் சித்திரை மாதத்தில் சிறப் பாக நடைபெறும்.
திருக்கடையூர்
தன் பக்தனான மார்க்கண்டேயனை எமனிட மிருந்து காத்த சிவபெருமான், காலனையும் சம்ஹாரம் செய்தார். அதனால் காலசம்ஹாரமூர்த்தி என பெயர் பெற்றார். இந்த நிகழ்ச்சி பெரும் திருவிழாவாக திருக்கடையூரில் சித்திரை மாதத்தில் நடக்கிறது.
திருவாரூர்
இத்தலத்திலுள்ள ஆழித்தேர், “திருவாரூர் தேரழகு’ என்னும் சிறப்பினைப் பெற்றது. சித்திரை மாதத்தில்தான் திருவாரூர் தேரோட்டம் நடக்கும்.
திருவையாறு
சப்த ஸ்தான விழா என்னும் ஏழு நாள் திருவிழா திருவையாறில் சித்திரை மாதம் சிறப்பாக நடக்கும். திருவையாறிலிருந்து
அம்மனுடன் ஊர்வலமாகப் புறப்படும் ஐயாறப்பர், திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப் பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய தலங் களுக்குச் சென்று திரும்புவார். இது சுமார் 20 கிலோமீட்டர் தூரம் இருக்கும். அம்ம னும் பெருமானும் இவ்வாறு வலம் வரும் போது, எல்லா ஊர்களும் சிறப்பாக அலங் கரிக்கப்பட்டிருக்கும். எல்லா வீடுகளிலும் சிறப்பான விருந்து உபசாரங்கள் நடைபெறும்.
காஞ்சி
காஞ்சி காமாட்சியம்மன் தங்கத்தேரில் மாதப்பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமைகள், காஞ்சிப் பெரியவர் பிறந்த தினம் ஆகிய நாட்களில் ஆலயப் பிராகாரத்துக்குள்ளேயே வலம் வருவாள். ஆண்டுக்கொருமுறை சித்திரை முதல் நாள் மட்டுமே தங்கத்தேரில் வீதியுலா வருவாள்.
சிறுவாச்சூர்
இங்குள்ள மதுரகாளியம்மன் ஆலயம் திங்கள், வெள்ளி மற்றும் சிறப்பு விழா நாட்களில் மட்டுமே திறந்திருக்கும். இங்கு அமாவாசையை அடுத்த செவ்வாயன்று காப்பு கட்டி, தொடர்ந்து 15 நாட்கள் சித்தி ரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவார்கள்.
தூத்துக்குடி
பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி மாதம்தான் அன்னாபிஷேக விழா நடை பெறும். ஆனால், தூத்துக்குடியிலுள்ள சங்க மேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை முதல் நாளன்று அன்னாபிஷேக விழா நடத்துகிறார்கள். மூலவருக்கு மட்டுமின்றி, ஆலயத்திலுள்ள எல்லா சந்நிதி மூர்த்தங்களுக்கும் அன்னா பிஷேகம் செய்வர். சித்திரை மாத பிரம்மோற் சவம் பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடக்கும்.
சித்திரை மாதத்தில் பல்வேறு திருவிழாக் கள் நடக்கின்றன. அவற்றில் பக்தியுடன் கலந்துகொண்டு இறையருள் பெறுவோம்.
வித்தியாச ஆலயங்கள்

12:06:29
Wednesday
2012-03-21
* சின்ன சேலம் ஆறகழூரில் உள்ள காம
நாதேஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம்.
* சக்தியோடு கூடிய தட்சிணாமூர்த்தியை திருக்கள்ளில் தலத்திலும் சுருட்டப்பள்ளி தலத்திலும் பார்த்துப் பரவசமடையலாம்.
* காங்கேயம் முருகன் ஆலயத்தில் கால்நடைகள் நோய்நொடியின்றி வளமாக வாழ கதனை என்று கூறப்படும் அதிர்வெடி வழிபாடு நடைபெறுகிறது.
* சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அழகிரிநாதசுவாமி ஆலயத்தில், சிம்ம முகத்துடன் அனுமனை தரிசிக்கலாம்.
* வந்தவாசிக்கு அருகில் உள்ள ஆவணியா
புரத்தில் சிம்ம முகத்தோடு அருள்கிறாள் மகாலட்சுமி! பக்தர்களைக் காக்க, யாகத் தீயால் எரிந்த, அடையாளம் காண முடியாத, முகமில்லாத நரசிம்மர் மடியில் அமர்ந்திருக்கிறாள். அந்த நரசிம்மரின் முகத்தை தேவிதான் ஏற்று அருள்பாலிக்கிறாள்.
* ஆந்திராவில் உள்ள மங்களகிரி பானக நரசிம்மருக்கு நாம் எவ்வளவு பானகம் நிவேதனம் செய்தாலும், அந்தப் பானக அளவில் பாதியை விழுங்கி, மீதியை பிரசாதமாக நிறுத்திவிடுகிறார். இனிப்பான பானகம் எத்தனையோ லிட்டர் கொண்டு சேர்த்தாலும் அத்தலத்தில்
ஈ எறும்பு இல்லாதது அற்புதம்.
* ராமபிரான் நான்கு கரங்களுடன் மூலவராக செங்கல்பட்டிற்கு அருகே உள்ள பொன்பதர்கூடத்திலும் உற்சவராக கும்பகோணத்தருகே உள்ள புள்ளம்பூதங்குடியிலும் அருள்கிறார்.
* மனித முகத்துடன் விநாயகரை கும்பகோணம் திருமீயச்சூர் அருகே உள்ள செதிலபதியிலும் சிதம்பரம் தெற்கு வீதியிலும்
தரிசிக்கலாம்.
* வேதாரண்யம் அருகில் உள்ள கோடிக்காட்டில் ஆறு
கரங்களும் ஒரு முகமும் கொண்ட முருகப்பெருமான் அருள்கிறார்.
* கும்பகோணம் அருகில், நாச்சியார் கோயில் கல் கருடன் வீதிஉலா வரும்போது கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதும் பின் ஆலயம் திரும்பும்போது குறைந்து கொண்டே வருவதுமான அற்புதம் நிகழ்கிறது.
* சென்னை-மயிலை கோலவிழி அம்மனின் திருவிழிகள் மனிதர்களுக்கு இருப்பதுபோலவே
உயிரோட்டமுள்ளதாக அமைந்துள்ளது.
* விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் சப்தகன்னியர்களும் தாயாரின் தோழிகளாக
பூஜிக்கப்படுகின்றனர்.
* செங்கல்பட்டு-மதுராந்தகம் பாதையில், படாளம் சர்க்கரை ஆலையின் இடதுபுறத்தில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள அரசர்கோயிலில் ஆறு விரல்கள் கொண்ட மகாலட்சுமியை தரிசிக்கலாம்.
* சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி ஆலய பிராகாரத்தில் கடம்பவன தட்சிணாமூர்த்திரூபிணி எனும் பெயரில் பெண் வடிவ தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
* தன் பக்தனுக்காக தீபாவளி அன்று திதி கொடுக்கும் கும்பகோணம் சார்ங்கபாணி பெருமாளுக்கு அன்றைய நிவேதனம், திதி சமையல்தான்.
* விநாயகரின் முகத்தையும் தேள் போன்ற வரிவரியான உடலமைப்புடன் உள்ள விருச்சிகப்
பிள்ளையாரை கும்பகோணம் ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவக்குடியில்
தரிசிக்கலாம்.
* ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவில் உள்ள நயினார் கோயில் நாகநாதர் சந்நதியில் குழந்தைகளை ஆலயத்திற்கு நேர்ந்து விட்டு, பின் ஏலம் கேட்டு அவர்களை திரும்பப் பெறும் பிரார்த்தனை வழக்கத்தில் உள்ளது. இதை விற்று வாங்குதல் என அழைக்கின்றனர்.
* திருச்சி, சிறுவாச்சூர் மதுரகாளிக்கு ஆலயத்திலேயே மாவிடித்து மாவிளக்கு ஏற்றுகின்றனர். வீட்டிலிருந்து மாவு எடுத்துச் செல்ல அங்கு அனுமதி இல்லை.
* சென்னை, தாம்பரம் – காஞ்சிபுரம் மார்க்கத்தில் உள்ள பண்ருட்டிக் கண்டிகையில் மகாமேரு, திதிநித்யா தேவிகள் அனைவருமே யந்திர வடிவிலேயே அருள்கின்றனர்.
* வேலூர் அருகில் உள்ள சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் ஒரே கருவறையில் அருள்கின்றனர்.
கல்வி வரம் அருளும் ஆலயங்கள்

2012-03-10
திருச்சி உத்தமர் கோயிலில் சரஸ்வதி தேவி தனி சந்நதி கொண்டு அருள்கிறாள். இவள் சந்நதியில் தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் விசேஷமானது. மாணவர்களின் படிப்புக்கு ஊக்கமளிப்பது.
தேனி மாவட்டம், வேதபுரியில் சனகாதி முனிவர்க்கு அருள் புரியும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். இவர் கல்விச் செல்வம் அருள்வதில் வல்லவர்.
நாகை மாவட்டம், பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில், கம்பருக்கு அருளிய சரஸ்வதி தேவி தனிக் கோயில் கொண்டிருக்கிறாள். படிப்பு வரம் அருள்வதில் நிகரற்ற அன்னை இவள்.
சென்னைசெங்கல்பட்டிற்கு அருகில் உள்ள செட்டிபுண்ணியம் தலத்திலுள்ள ஹயக்ரீவமூர்த்தியை வணங்க, கல்வி வளம் சிறக்கும்.
சென்னைதிருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலய வாசலில் உள்ள தட்சிணாமூர்த்தி, வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் வீற்றருள்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வலம் வந்து வணங்க வளமான கல்வியைப் பெறலாம்.
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இன்னம்பூர் திருத்தல ஈசன் கல்வி வளம் சிறக்க அருள்புரிபவர். இவர் திருநாமம்எழுத்தறிநாதர்!
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் கலைமகளுக்கென ஓர் ஆலயம் உள்ளது. அந்த சரஸ்வதி ஞான சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.
கடலூர் மாவட்டம், திருவஹீந்திரபுரம் தலத்தில் ஔஷதகிரியில் அருளும் ஹயக்ரீவமூர்த்தியை வணங்க, கல்வியில் முன்னேற்றம் பெறலாம்.
திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அட்சர பீடத்தில் 51 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த பீடத்தை தரிசித்தால் படிப்பு நன்றாக வரும்.
பாண்டிச்சேரிமுத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர், பக்தர்களால் கல்வி, கலைகளில் சிறக்க வைக்கும் மூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பிராகாரத்தில் அருளும் கலைகளுக்கெல்லாம் அதிபதியாகத் திகழும் ராஜமாதங்கியை வணங்கி வேண்டிட, கல்வியில் மேன்மை பெறலாம்.
சென்னைபோரூர், மதனானந்தபுரத்தில் உள்ள துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆலயத்தில் அன்னவாகனம் முன் நிற்க, சரஸ்வதி தனி சந்நதியில் அருள்கிறாள். இவளை வணங்கி, சகலகலாவல்லி மாலை துதியை பாராயணம் செய்ய அறிவுத்திறன் அதிகரிக்கும்.
சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்தில் கிழக்கு முகமாய் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசம் செய்தருளிய தட்சிணாமூர்த்தி கல்விச்
செல்வத்தை வாரியருளும் வரப்பிரசாதியாகப் போற்றப்படுகிறார்.
தஞ்சாவூரில் உள்ள கண்டியூரில் பிரம்மசிரகண்டீஸ்வரர் ஆலயத்தில் தன் நாயகனான நான்முகனுடன் அருளும் சரஸ்வதியை தரிசிக்கலாம். இந்த சரஸ்வதியை மனமாற வணங்கி கல்வி வரம் பெறலாம்.
சென்னைபாடி திருவலிதாயநாதர் ஆலய குருபகவான் ஞானம் வேண்டும் பக்தர்களுக்கு தப்பாமல் ஞானம் தந்து காப்பார்.
சென்னை சோழிங்கநல்லூர் ப்ரத்யங்கிரா ஆலயத்தில் அருளும் நீல சரஸ்வதி, கல்வியைப் பெருக்கி, வாக்கு வன்மையை அருள்பவள்.
முழையூரில் எட்டுப்பட்டை லிங்க வடிவில் அருளும் பரசுநாதரையும் அறிவுக் கண்களைத் திறக்க அருள் புரியும் ஞானாம்பிகையையும் தரிசித்து பக்தர்கள் கல்வி வரம் பெறுகின்றனர்.
வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கொலுவிருக்கும் சரஸ்வதியை தரிசிக்க
கல்வியில் சிறக்கலாம். இந்த அன்னை கையில் வீணை இல்லை என்பது தனிச் சிறப்பு.
ஆந்திர மாநிலம் பாஸர் எனுமிடத்தில் சரஸ்வதிக்கென்று தனிக்கோயில் உள்ளது. இந்த சரஸ்வதி வரப்பிரசாதியாக மாணவர்களால் போற்றப்படுகிறாள்.
சென்னைமயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள செங்கழுநீர் பிள்ளையாரிடம் தேர்வெழுதப்போகும் மாணவ, மாணவியர் ஆசி பெற்று சிதறுகாய் உடைத்துச் செல்வது வழக்கம். அதனால் அவர்களால் தேர்வை நன்றாக எழுதமுடிகிறது என நம்புகின்றனர்.
|
||||
உலகிலேயே உயரமான இரட்டைக் கோபுரங்களுக்குப் பெயர் போன மலேசியத் திருநாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வடக்கே 11 கிலோமீற்றர் தொலைவில் பத்துமலை சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் ஒற்றையடிப் பாதையில் ஏறிச்சென்று மலைக் குகையில் முருகப் பெருமானை வழிபட்டு வந்த காலம் போய் இன்று உலகளவில் பிரசித்தி பெற்று விளங்கும் பத்துமலை(Batu Caves)யை உலக மக்களைக் கவரும் வகையில் பல்வேறு கலையம்சங்கள் அலங்கரித்து நிற்கின்றன. மலேசியாவைப் பொறுத்த வரையில் மலேசியத் தமிழர் வரலாற்றில் பத்தமலை தைப்பூசமே மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது. ஒவ்வோர் ஆண்டும் தைப்பூசத் தினத்தில் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் பத்துமலைத் திருத்தலம் காண்போரை ஈர்க்கும் காந்த சக்தி கொண்டது. பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த பத்துமலைக் குகை சுண்ணாம்புக் கற்களால் ஆனது. அருகில் ஓடும் ஆற்றை மலாய் மொழியில் சுங்கை பத்து(கல் ஆறு) என்று அழைத்தனர். அந்தப் பெயரையே தமிழர் இம்மலைக்கும் சூட்டினர். ![]() ஒற்றையடிப் பாதை காலப்போக்கில் மாற்றியமைக்கப்பட்டு ஒருவழிப் படிகளாக அமைக்கப்பட்டு தற்போது மூன்று வழிப் படிகளாக 272 படிகளுடன் இத்திருத்தலம் மேம்பாடு கண்டுள்ளது. பத்துகேவ்ஸ் முருகன் கோயில் மிகவும் சிறப்பான சுற்றாடலைக் கொண்டது. பிரமாண்டமான மலை, காடு என்பவற்றின் நடுவே சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளமை பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறது. மலையின் கீழ் வாசலின் அருகே 140 அடி உயரமுள்ள வேல் ஏந்தி நிற்கும் முருகன் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இச்சிலை நிர்மாணிப்புப் பணிகள் 2002 மார்ச்சில் ஆரம்பித்து 2005 டிசம்பரில் நிறைவு பெற்றன. 250 தொன் இரும்புப் பாளங்களாலும் 1550 கனமீற்றர் கொன்கிறீட்டைக் கொண்டும் இம்முருகன் சிலை உருவாக்கப்பட்டது. இச்சிலைக்குப் பூசப்பட்டுள்ள தங்க முலாம் தாய்லாந்திலிருந்து பெறப்பட்டதாகும். தமிழகத்தைச் சேர்ந்த 15 ஸ்தபதிகளும் 15 உதவியாளர்களும் வடிவமைத்துள்ள இத்திருமுருகன் சிலை 2006 ஜனவரி 29இல் திறப்பு விழா கண்டது. ![]() இந்து மதத்தவர் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் தமிழ் இந்துக்களே இக்கோயிலை நிர்வகிக்கின்றனர். இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்ட குருமார்களும் பூசகர்களும் கோயில் பூசைகளைச் செய்து வருகின்றனர். இங்கிருக்கும் 272 படிகள் மூலம் மேலே ஏறிப் போனால் குகைக்குள் முருகன் கோயில் அமைந்துள்ளது. காலை 8.30 மணிக்குக் கோயில் திறந்து மாலை 7 மணிக்கு மூடுகின்றனர். மலேசியாவிலுள்ள சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று என்பதால் இயற்கை அழகைப் பருக அதிகளவு வெளிநாட்டவர்கள் வந்து செல்கின்றனர். இங்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. எம்மதத்தவரும் வரலாம். புகைப்படம் எடுக்கலாம். பணம் அறவிடுதலும் இல்லை. பிச்சைக்காரர்களும் இல்லை. சுற்றுலாப் பயணிகளும் எவ்வித சிரமமுமின்றிப் போய் வரலாம். ![]() இங்கு வருடாவருடம் தைப்பூசத் திருநாள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தைப்பூசத்திற்கு இரு நாட்களுக்கு முந்திய நள்ளிரவு 12 மணிக்கு ஜாலான் துன் எச்.எஸ்.லீ மகா மாரியம்மன் கோயிலிலிருந்து முருகன் வள்ளி-தெய்வானை உடன் கொண்டு பத்துமலைக்கு எழுந்தருள்வார். இந்த நள்ளிரவு வழி நடையை( 15 கி.மீற்றர்) நேர்த்திக்கடனாக நடந்து வருவர். தைப்பூசத்தன்று 10 இலட்சத்திற்கும் மேலானோர் கூடுவர். இத் தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடி விட்டு, நேர்த்திக் கடன்களைச் செய்வர். அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கின்றன. காவடி எடுத்தலில் இழுவைக் காவடி(செடில் காவடி) பிரபலமானது. மக்கள் இன, மத பேதமின்றி வந்து தரிசிப்பர். மேலும் தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனிடம் வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சரியமான ஒன்றாகும். உலகெங்குமிருந்து சுற்றுலாப் பயணிகளும் தைப்பூசத் திருவிழாவின் போது பத்துமலைக்கு வருகை தருகின்றனர். இந்நாளை மலேசிய அரசு விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்தியிருப்பது இதன் சிறப்புக்கு மேலும் மெருகூட்டுவதாகும். ![]() ‘வருவான் வடிவேலன்’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் மெல்லிசை மன்னர், டீ.எம்.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பெங்களுர் ரமணியம்மாள், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகிய அறுவரும் பாடிய “பத்துமலை திருமுத்துக்குமரனை பார்த்துக் களித்திருப்போம்…” என்ற பாடலின்(பத்தரை நிமிடப் பாடல்) காட்சிகளும் மலேசிய பத்துமலை முருகன் கோயில் திருவிழாவில் எடுத்தவை. மக்களின் பேராதரவைப் பெற்று அந்தத் திரைப்படம் பெரு வெற்றியைப் பெற்றது. இந்தத் திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றார். இது தவிர நடிகர் அஜித் குமார் நடித்து வெளிவந்த ‘பில்லா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ”சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா….” என்ற பாடலும் இத்திருத்தலத்தில் படமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ![]() தொகுப்பு: கி.லக்ஷ்மன் சிசில் ___ |
||||
நந்தித் திருமணம்சிலாத முனிவர்- சாருலட்சனை தம்பதிக்கு நெடுங்காலமாக புத்திர பாக்கியம் கிட்டவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார் சிலாதர். அவரது தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் மழலை வரம் அருளினார். இறை அருளால் பிறந்த பிள்ளைக்கு நந்தி என பெயர் சூட்டி வளர்த்தனர். ஆனாலும் மகன் பிறந்த மகிழ்ச்சியை அத்தம்பதி யால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. ஏனெனில் பிள்ளைக்கு ஆயுள் எட்டு வருடங்கள்தான் என்று நிபந்தனை விதித்திருந்தார் சிவபெருமான்.
அந்தக் காலம் நெருங்க நெருங்க பெற்றோரின் கவலை அதிகரித்தது. இதை உணர்ந்த சிறுவனான நந்தி காரணம் கேட்க, வேறு வழியின்றி உண்மையைக் கூறினர். “கவலை வேண்டாம்’ என்று அவர்களை ஆறுதல்படுத்திய நந்தி, தனியே சென்று சிவனைக் குறித்து தவம் மேற்கொண்டான். சிவனருளால் பூரண ஆயுள் பலமும், கயிலைக்கே காவலனா கும் பேறும் பெற்றான். அதனால் அதிகார நந்தி என பெயரும் பெற்றான்.

நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண் டார். உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மண மகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி திருமழபாடியில் மேற்சொன்ன நாளில் கோலாகலமாக நடைபெறும். பார்வதியும் பரமேஸ்வரனும் திருவையாறிலிருந்து பல்லக்கில் வருவர். நந்தி மாப்பிள்ளை கோலத்தில், வெள்ளியாலான தலைப்பாகை அணிந்து, கையில் செங்கோல் ஏந்தி, குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க வைத்தியநாதன்பேட்டை வழியாகத் திருமழபாடி வருவார். திருமண விழா முடிந்ததும் புனல்வாசல் வழியாக திருவையாறு திரும்பிச் செல்வர். இதைத்தான் “வருவது வைத்தியநாதன்பேட்டை; போவது புனல்வாசல்’ என்பர்.
நந்தி திருமணத்தின்போது பல தலங்களிலிருந்து பல பொருட்கள் வந்தன. திருவேதிக்குடியிலிருந்து வேதியர்கள் வந்தனர். திருப்பழனத்திலிருந்து பழ வகைகள் வந்தன. திருப்பூந்துருத்தியிலிருந்து மலர் மாலைகள் வந்தன. திருநெய்த் தானத்திலிருந்து யாகத் திற்கும் சமையலுக் குமான நெய் வந்தது. திருச்சோற்றுத் துறை யிலிருந்து அறுசுவை அன்ன வகைகள் வந் தன. இந்தத் தலங்க ளெல்லாம் திருமழ பாடியைச் சுற்றி அமைந்துள்ளன.
இவ்வாண்டு இந்தத் திருமண விழா 31-3-2012 அன்று நடை பெறவுள்ளது. இதைக் காணும் திருமண மாகாத ஆண்களுக்கும் பெண்களுக் கும் விரைவில் திருமணம் கூடி வரும் என்பர். “நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்’ என்பது சொல் வழக்கு. இவ்விழாவைக் காண்போர் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்;சுபகாரியங்களும் நடை பெறும் என்பர்.
பஞ்ச நந்திகள்
போக நந்தி: ஒருசமயம் பார்வதி யும் பரமேஸ்வரனும் பூவுலகம் செல்ல எண்ணினர். அப்போது இந்திரன், நந்தி வாகனமாகி அவர்களை பூவுல கம் அழைத்துச் சென்றான். போகநந்தி எனப்படும் அபூர்வ நந்தி கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது.
பிரம்ம நந்தி: பிரம்மன் படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும்முன் சிவனி டம் உபதேசம் பெற விரும்பினார். சிவன் உயிர்களைப் பாதுகாக்க அடிக்கடி உலாப் போவதால் ஓரிடத் தில் இருந்து உபதேசம் பெற பிரம்ம னால் இயலவில்லை. எனவே, நந்தி உருவுடன் சிவனைச் சுமந்து சென்றபடி உபதேசம் பெற்றுக் கொண்டார். பிரம்ம நந்தி எனப்படும் இது சுதைச் சிற்பமாக பிராகார மண்டபத்தில் உள்ளது.
ஆன்ம நந்தி: பிரதோஷ கால பூஜையேற்கும் நந்திதான் ஆன்ம நந்தி. இது கொடிமரம் அருகே இருக்கும். எல்லா ஆன்மாக்களிலும் இறைவன் இருப்பதால், அந்த ஆன்மாக்களின் வடிவாக ஆன்ம நந்தி உள்ளது.
மால்விடை: மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார். மால்விடை எனப்படும் இது கொடி மரத்திற்கும் மகாமண்டபத்துக்கும் இடையில் அமைந்திருக்கும்.
தரும நந்தி: இது கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு மிக அருகில் இருக்கும். ஊழி முடிவில் உலக உயிர்கள் எல்லாம் உமாபதிக்குள் அடங்கிவிடும். அப்போது தர்மம் மட்டும் நிலைக் கும். அதுவே ரிஷபமாகிறது. இது தரும நந்தி.
மருந்து நிவேதனம்
கேரளாவில் உள்ள கூத்தாட்டுக்குளம் என்ற இடத்தில் உள்ள நெல்லிக்கட்டு பகவதி கோவிலில், பங்குனி மாத அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி 12 நாட்கள் விழா நடத்துவார்கள். நோயாளி களுக்கான மருந்தை இங்குள்ள அம்மன்முன் வைத்துப் படைத்தபின்தான் நோயாளிகளுக்குக் கொடுப்பார்கள். அத்துடன் ஆலயத்திலும்அம்மனுக்கு மருந்து நிவேதனம் செய்வார்கள்.

ஆண்டுதோறும் புது அம்மன்
பங்குனி மாத இரண்டாம் செவ்வாயன்று இரவு, பச்சை மண்ணில் புது அம்மன் உருவாக்கி கொண்டாடும் விழா இது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி என்ற கிராமத்தில், மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இரு நாட்கள் விழா நடக்கின்றது. ஒரு காலத்தில் இவ்வூருக்கு வந்த ஒரு கன்னிப் பெண், நாளடைவில் பெண் தெய்வமானாள். இவள் வந்த நாளை இவ்வாறு கொண்டாடுகின்றனர்.
திருவிழாவை தண்டோரா போட்டு ஊருக்குத் தெரிவித்தல் முதல், அம்மனை பச்சை மண்ணில் உருவாக்குவது, வண்ண மடிப்பது, ஆடை, ஆபரண, பூமாலை அலங்காரம் செய்வது, அம்மன் செல்லும் பாதையைச் சுத்தமாக்குவது, மேளதாள ஏற்பாடு, அம்மனை ஊர்வலமாக தூக்கிச் செல்வது, காவல் காப்பது, விழா முடிவில் ஊருணியில் அம்மனை சிதைப்பது என அனைத்தையும் பல்வேறு இனத்தவர்கள் அவரவருக்குரிய தொண்டினைச் செய்து ஒற்றுமையாய் இவ்விழாவை நடத்தி முடிப்பர். அனைவரும் இவ்விழாவை தங்கள் குடும்ப விழாவாகவே செய்வார்கள். இவ்வாண்டு 27-3-2012-ல் இவ்விழா நடைபெறவுள்ளது.
திருவிழாவிற்குக் கூடும்முன் ஊரிலுள்ள பல கோவில்களில் சிறப்புப் பூஜை செய்வர். அப்போது மாற்று மதத்தவர்களும் அவர வர் முறைப்படி வழிபாடு செய்துவிட்டு விழாவிற்கு வருவார்கள். விழா முடிவில் ஜாதி பேதமின்றி அனைவருக்கும் கோவில் முறைப்படி மரியாதை செய்வார்கள். கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
செவ்வாய் இரவு பச்சை மண்ணால்
அம்மன் திருவுரு செய்து, வண்ணமடித்து, அலங்கரித்து ஊர்வலம் நடைபெறும். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக ஊர்வலம் கோவிலுக்கு வரும்போது புதன் காலை 4.00 மணியாகிவிடும். அப்போது பல்வேறு சமூகத்தினரும் மாவிளக்கிடுவார்கள்.
வழிபாடுகள் முடிந்தபின் அம்மன் திருவுருவை ஒருவரின் தலைமீது வைத்து ஊருணிக் கரைக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வர். அப்போது முதலில் அம்மனின் முகம் சிரித்தபடியும் பின்னர் அழுதபடி சோகமாகவும் காட்சியளிக்குமாம். ஆண்டு தோறும் மக்கள் இவ்வதிசயத்தைக் காண்பர். பின் அம்மனின் உரு மூன்று முறை சுற்றி வந்து குழந்தைகளை ஆசீர்வதித்தபின் திருவுருவை சிதைத்துவிடுவர். அப்போது யாவரும் அமைதியாக இருந்து, தன் நெருங்கிய சொந்தத்தைப் பிரிந்ததுபோல சோகமாக இல்லம் திரும்புவார்கள்.
பெண்டாட்டித் திருவிழா
திருச்சியில் முசிறியை அடுத்துள்ள பொன்னாங் கன்னிப்பட்டி ஊரைச் சுற்றியுள்ள 18 கிராம மக்கள் அனைவரும் பங்குனி மாத மூன்றாவது திங்கட் கிழமையன்று மாரியம்மன் கோவில் திருவிழாவில் கூடுவர். இவர்கள் அனைவரும் உறவினர்கள்தான். (இவ்வாண்டு 2-4-2012-ல் இவ்விழா நடைபெறும்.)
ஒருகாலத்தில் பசு ஒன்று தினம் பாம்புப்புற்றில் பால் சொரிந்து வந்தது. இதுகண்ட மக்கள் புற்றை இடித்தனர். உள்ளே தோளில் ரத்தம் கசிய அழகிய மாரியம்மன் சிலை இருந்தது. அச்சிலை பெண்களுக்கு சம உரிமை கொடுத்து, பெண் களை தெய்வமாக மதிக்கும்படி அசரீரியாகக் கூறியது. அதன்படி கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்ததிலிருந்து பெண்களுக்கு சம உரிமை தந்து, கிராம சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்து அதை இவ்வாலயத்திலேயே விழாவாகவும் இன்றளவும் நடத்தி வருகின்றனர் இவ்வூரார்.
18 பட்டி மக்களும், வெளியூர், வெளிநாடு களில் தங்கியுள்ளோரும் தவறாமல் இங்கு கூடி விடுவர். விழாவன்று பெற்றோர் தங்கள் வீட்டுக் கன்னிப் பெண்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து, அவர்களுக்குப் பிடித்த மண மகனைத் தேர்வு செய்யும் பொறுப்பை அளிப் பார்கள். அப்பெண் தன் அத்தை- மாமன் மகனுடன் கலந்து பேசி, தனக்குப் பிடித்த கணவனைத் தேர்வு செய்து பெற்றோரிடம் கூறிவிடுவார்கள்.
ஊர் மக்கள் ஆலயத்தில் கூடிப்பேசி, பொது வில் முடிவெடுத்து திருமணம் முடிப்பார்கள். இதனால் பிற்காலத்தில் சீர்வரிசை தகராறு, குடும்பச் சண்டை ஏதும் இதுவரை வந்ததில்லை என இம்மக்கள் பெருமையாகக் கூறுகின்றனர். இவ்விழாவைதான் பெண்டாட்டி திருவிழா என்று கூறுகின்றனர். இவ்வாலயம் சென்று அம்மனை வழிபட்டால் பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இக்கிராம கட்டுப்பாட்டுக்கு மாரியம்மனே காவல் தெய்வம்!
பூ ஐயப்பன்
திருநெல்வேலி மாவட்ட தென்கோடி யில், தெற்கு கருங்குளம் என்ற கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள் ளது. இங்கு பங்குனி உத்திரத்தன்று மெகா கொழுக்கட்டை வழிபாடு செய்கின்றனர்.
இது முழுக்க முழுக்க ஆண்களே செய்யும் வேலை. விரதம் இருந்து, எச்சில் படாமல் இருக்க வாயில் துணி கட்டிக் கொண்டு செய்வர். ஒரு கோட்டை நெல்லிலிருந்துபெறப்படும் பச்சரிசி 42 படி இருக்கும். இது கிலோ கணக்கில் பார்த்தால் 63 கிலோ வரும். இந்தப் பச்சரிசியை ஆண்களே இடித்து மாவாக்கு வார்கள்.
மாவில் நீர் விட்டுப் பிசைந்து உருட்டித் தட்டுவார்கள். இதை காட்டுக்கொடி நிரவி,அதன்மீது இலைகளைப் பரப்பி உருட்டித் தட்டிய அரிசி மாவை அடுக்குவார்கள். அதன் மீது சிறுபயறு, தேங்காய்த் துருவல் கலந்த பூரணத்தையும் வைப்பர். இப்படி மாவு, பூரணம் என மாறி மாறி அடுக்கியபின் காட்டு இலையைப் பரப்பி மூடி, காட்டுக்கொடியால் உருண்டை வடிவில் கட்டிவிடுவார்கள். மெகா கொழுக்கட்டை உருவாகிவிட்டது.

இதற்குமுன்பே கட்டைகள் எடுத்து தணல் உருவாக்கி இருப்பார்கள். ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும். அவர் சாமியாடியபடியே ஐந்தாறு பேர் சேர்ந்து தூக்கும் கொழுக்கட்டையை இவர் ஒருவரே அனாயசமாகத் தூக்கி தணல் நடுவே போடுவார். யாராலும் நெருங்க முடியாத தணலில் அருகிலிருந்து கொழுக்கட்டையை உருட்டிப் புரட்டி வேக வைத்துவிடுவார்.
இரவில் வெந்த கொழுக்கட்டையைப் பூஜித்து படையல் போடுவார்கள். ஆயிரக் கணக்கானோர் இவ்வழிபாட்டை தரிசிப்பார் கள். பின் மறுநாள் கொழுக்கட்டையைப் பிரித்து ஊரிலுள்ள எல்லா வீடுகளுக்கும் பிரசாதமாகக் கொடுப்பார்கள்.
பெயரில்லா பூமரத்தடியில் சாஸ்தா
அமர்ந்து அருள்புரிவதால் இவருக்கு பூ சாஸ்தா- பூ ஐயனார் என்று பெயர். இம்மரம் பங்குனி உத்திரத்தை ஒட்டிதான் பூ பூக்கும். இப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டால் எண்ணெய் சிவப்பாகிவிடும், மணமுடன் இருக்கும். இதைப் பெண்கள் தங்கள் தலையில் தடவினால் கருகருவென நீண்ட கூந்தல் வளரும். இது தோல்நோய்களுக்கும் பயன்படும்.
பன்னாரி மாரியம்மன்
பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது. ஆயிரக்கணக்கானவர்கள் அக்னி குண்டம் இறங்கு வர். பங்குனி மாத உத்திரத்திற்கு முந்தின 15-ஆம் நாள் இரவு பன்னாரி மாரியம்மனுக்கு பூச் சாற்று நடைபெறும். மறுநாள் வனதுர்க்கை அம்மன் புறப்பாடு நடக்கும்.
இது ஒரு வித்தியாசமான ஊர்வலம். அப்போது சோலகர் என்ற மலைவாசிகளின் வாத்தி யங்களும், அருந்ததியர் வாத்தியங் களும் முழங்கும். மலைவாழ் மக்களும் சுற்றியுள்ள வனப் பகுதி மக்களும் பெரிய தனக் காரர்களும் புடைசூழ வந்து நடத்துவர். இவ்வூர்வலம் 8-ஆம் நாள் கோவிலுக்கு வந்துசேரும். மறுநாள் இரவு அம்பிகை ஆராதனை செய்து அக்னி கம்பம் போடுவர்.
பூச்சாற்றின் 15-ஆம் நாள் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மாட்டு வண்டி, பஸ், சைக்கிள், நடைப் பயணம் என பன்னாரிக்குப் புறப்படு வார்கள். மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும். முக்கிய அம்சமானஅக்னி குண்ட வழிபாடு நடக்கும். இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.
இந்தக் கானகத் திருவிழா தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் இவ்வளவு சிறப்பாக மக்கள் பெருமளவில் பங்குபெற்று நடத்துவர். அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு அம்மன்அழைப்பு நடைபெறும். தெப்பக்கிணற்றருகே உள்ள அம்மனை அழைத்து வந்து அக்னி குண்டம் அருகே இருத்துவர். குண்டம் சமப்படுத்தப்படும்.
மறுநாள் காலை, பூசாரி பூஜை செய்தபின் முதலில் குண்டம் இறங்குவார். பிறகு வரிசையாய் ஆண்களும் பெண்களும் இறங்கு வார்கள். கடைசியாக கால்நடைகளும் குண்டம் இறங்கும். இது இங்கு மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சியாகும். நடுப்பகலில் பொங்கல் வைத்து மாவிளக்கு இடுவர்.
அடுத்த நாள், மின்விளக்கு அலங்காரத்துடன் மலர் ரதம்
அலங்கரித்து, அதில் அம்பிகை எழுந்தருள மங்கள இசையுடன் புறப்பாடு நடைபெறும். பின் அக்னி கம்பத்தைப் பிடுங்கி கிணற்றில் இடுவர்.
மறுநாள் மஞ்சள் நீர் உற் சவம், அன்னதானம், அம்மனுக்கு விசேஷ பூஜை, சிறப்பு ஆராதனைகளுடன் திருவிழா இனிது முடியும். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பன்னாரி.
திருச்சி தாயுமானவர் தெப்பம்
திருச்சி தாயுமானவர் ஆலயம் குழந்தைப்பேறு, சுகப்பிரசவ பிரார்த்தனை தலம்.
தென்னகத் தலங்களுள் இத்தலத்தை தென் கயிலாயம் என்பர். நில எல்லையில் இருந்து பார்த்தால் மூன்றடுக்கு உடையதாக இம்மலை தோற்றமளிக்கும். மட்டுவார் குழலியம்மன் திருக் கோவில், தாயுமானவர் கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில் என அமைந்துள்ளது. மேற்கு பார்த்த மூர்த்தலிங்கம் தமிழகத்தின் நான்காவது பெரிய லிங்கம் ஆகும்.
பங்குனி மாதம் இக்கோவிலில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். அதில் 9-ஆம் நாளன்று பங்குனி உத்திரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். 10-ஆம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இத்தெப்பத்திற்குதான் தாயுமானவர் தெப்பம் என பெயர். இவ்விழா இவ்வாண்டு 28-3-2012 முதல் 6-4-2012 வரை நடைபெறவுள்ளது.
பங்குனி மாத 15-ஆம் நாளன்று கொடி யேற்றம் நடைபெறும். ஒன்பதாம் நாள் பங்குனி உத்திரமாக இருக்கும்படிதான் விழா ஏற்பாடு செய்வார்கள். இரண்டாம் நாள் கற்பக விருட் சம். மூன்றாம் நாள் பூதவாகனம். நான்காம் நாள் கைலாச பர்வதம். ஐந்தாம் நாள் வெள்ளை ரதம். ஆறாம் நாள் யானை வாகனம். ஏழாம் நாள் நந்தி வாகனம். எட்டாம் நாள் தங்க குதிரை வாகனம். ஒன்பதாம் நாள் தெப்ப உற்சவம். பத்தாம் நாள் தீர்த்தவாரியுடன் விழா இனிதே நடைபெற்று முடிவடையும்.
சிவனின் திருமணத்தலம்- வேதாரண்யம்
இங்குதான் பார்வதியும் பரமேஸ்வரனும் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்ற தங்கள் திருமணக் கோலத்தை அகத்தியருக்கு மீண்டும் சித்திரை வளர்பிறை சப்தமி திதியில் காட்டி அருளினர். அந்தக் கோல சிற்பத்தைக் கருவறை யில் லிங்கத்தின் பின்புற சுவரில் காணலாம்.
இவ்வாலயம் வேத காலத்திற்கும் முற்பட்டது என்பதால் பிற்காலத்தில் பாழ்பட்டது. மூடிய கதவை யாராலும் திறக்க முடியவில்லை. இச்சமயம் திருநாவுக்கரசரும் சம்பந்தரும் பல சிவத்தலங்களை தரிசித்துக் கொண்டே இங்கும் வந்தனர். கதவு மூடியிருந்ததால் சிவனை தரிசிக்க முடியாமல் வருத்தமுற்றனர். பின்னர் திருநாவுக்கரசர் மனம் உருக “மணிக்கதவம் தாள் திறவாய்’ என்ற தேவாரப் பாடலைப்பாடினார். அப்போது கதவு தானே திறந்தது. எல்லாரும் உள்ளே சென்று சிவதரிசனம் செய்தனர். பின்னர் வெளியே வந்ததும் திறந்த கதவை மூட முடியவில்லை. அப்போது சம்பந்தர் ஒரு பாடல் பாட கதவு மூடிக் கொண்டது. இக்கதவுதான் இவ்வாலயத்திற்கு பிரதானம். கதவிற்கும் பூஜை உண்டு. இப்போது இதற்கு வெள்ளித் தகடு போர்த்தியுள்ளனர். இத்தலம் தஞ்சையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
உறையூர்
இதற்கு கோழியூர் என்றும் பெயர். இது சோழர்களின் தலைநகராக இருந்துள்ளது. திருவாகிய லட்சுமி உறைந்த தலமாதலால் இதற்கு உறையூர் என்று பெயர். நந்தசோழனின் புத்திர பாக்கியத்திற்கு- மகாவிஷ்ணு லட்சுமியை கமலவல்லியாக இத்தலத்தில் தோன்றச் செய்து, மன்னனின் குழந்தையில்லாத குறையைத் தீர்த்தார்.
கமலவல்லி ரங்கநாதரிடம் கொண்ட பக்தியின் காரணமாக அவளை ஆட்கொள்ள எண்ணிய பெருமாள், மன்னன் கனவில் தோன்றி, “கமலவல்லியை திருமணக் கோலத்துடன் ஸ்ரீரங்கம் அழைத்துவா’ எனக் கூறி மறைந்தார். அதன்படி மன்னன் மகளை அழைத்துச் சென்றான். ஆலயத்தில் நுழைந்ததும் அவள் அரங்கனுடன் இரண்டறக் கலந்தாள்.
இதை நினைவுகூரும் வண்ணம் பங்குனி ஆயில்யத்தன்று இவ்வாலயத்தில் ஏகாசன சேவை விழா நடத்துகின்றனர். கமலவல்லியைத் திருமணம் புரிய மணவாளனாக ரங்க நாதர் உறையூர் வருவதையொட்டி ஊரே திருவிழாக் கோலம் பூணும். இதில் அனைவரும் உற்சாகமாகக் கலந்து கொள்வார்கள். சேவை மண்டபத்தில் பங்குனி உத்திரத்தன்று (5-4-2012) தாயாரும் பெருமாளும் சேர்த்தி காண்பர். இதனைக் காண பக்தர்கள் திரண்டு வருவார்கள். திருச்சிக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

வீடான குன்றுதோறாடலில் இடம் பெற்ற திருத்தலங்களில், வள்ளியூர் திருத்தலமும் ஒன்று.
வள்ளி கேட்ட வரம்!
தொண்டை மண்டலத்திலுள்ள மேற்பாடி நகரின் அருகில் உள்ளது வள்ளிமலை. இங்கு வள்ளிக் கிழங்கு அகழ்ந்தெடுத்த குழியில் கிடந்த பெண் குழந்தைக்கு வள்ளி என்று பெயரிட்டு வளர்த்தான் நம்பிராஜன். வள்ளி பெரியவளாகி தம் குல வழக்கப்படி தினைப் புனத்தில் காவல் புரிந்து வந்தாள். முருகப் பெருமான் வள்ளியை மணந்துகொள்ள தினைப்புனம் வந்து சேர்ந்தார். வேடனாய், வேங்கை மரமாய், விருத்தனாய் உருக்கொண்டு வள்ளி முன் ஊடல் பல செய்தார். முருகப் பெருமான் என்பதை அறியாமல் வள்ளி வெகுண்டாள். சினங்கொண்ட வள்ளியை பயங்கொள்ளச் செய்ய முருகப் பெருமான் தன் அண்ணன் விநாயகரை அழைத்தார். கணபதியின் திருவருளால் முருகப் பெருமான் வள்ளிக்கு ஆறுமுகமாய், பன்னிருகரத்தோனாய் காட்சி தந்தார். வள்ளியும் தன் குல தெய்வமாம் முருகனை வணங்கி பிழை பொறுக்குமாறு வேண்டினாள். “தன்னை திருத்தணிகையில் மணமுடித்து தென்கோடியிலுள்ள மஹேந்திரகிரிக்கு கிழக்கே உள்ள மலைக்குகையில் தன்னுடன் தங்க வேண்டும். அந்த மலையை அடுத்துள்ள ஊர் தனது பெயரால் வழங்கப்பட வேண்டும்’ என்று வரம் கேட்டாள். முருகப் பெருமானும் வள்ளி கேட்ட வரத்தை அளித்தார். முருகப் பெருமான் மலைக்குகைக்கு வள்ளியுடன் வந்தபோது அவரது ஞானவேலின் ஞான ஒளியால் அந்தக் குகை பூரணத்துவம் அடைந்தது. எனவே “பூரணகிரி’ என்றும் அழைக்கப்படுகிறது.
அகத்தியர் வழிபட்டார்!
பூரணகிரியில் முருகப்பெருமானை வள்ளியுடன் வணங்கினார் அகத்தியர். முருகப் பெருமான் குருவாக, கிழக்கு முகமாக நின்று நான்மறைப் பொருளுரைக்க, அகத்தியரும் மாணவராக மேற்குமுகமாக நின்று நான்மறைப்பொருள் உபதேசம் பெற்றார். பார்வதி, பரமேஸ்வரனை ஜெயந்தீஸ்வரன் சமேத செüந்தர்ய நாயகியாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். தெய்வானையை வள்ளியிடம் அழைத்து வந்து “வள்ளியின் சகோதரியே தெய்வானை’ என்பதை உணர்த்தினார். எனவே முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியராக இங்கு காட்சியளிக்கிறார்.
நாரதர் இந்தப் பெருமானை வணங்கி பிரம்மஞான உபதேசம் பெற்றார். தேவேந்திரன் இம்முருகப்பெருமானை ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து வணங்கினார். வள்ளியம்மையின் வேண்டுகோளுக்கிணங்க முருகப்பெருமான் தனது கைவேலை ஊன்றியதால் சரவணப்பொய்கையும், தெப்பக்குளமும் தோன்றின.
கல்வெட்டுகள்:
முதலாம் குலோத்துங்க சோழனுக்கு உட்பட்ட குறுநில மன்னர்களில் அள்ளியுண்ட ராஜாவால் குகையை அடுத்து சிறிய மண்டபம் கட்டப்பட்டது. எனவே அள்ளியூர் என்று கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஜடாவர்மன் என்ற திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீவல்லபதேவனின் ஆட்சியில் (கி.பி. 1190) வள்ளியூரில் அரண்மனை அமைந்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இம்மன்னன் ஊருக்கு மேற்கே பெரிய பாசனக்குளம் ஒன்று வெட்டியதால் அந்தக் குளம் அவனது பெயரால் சீவலப்பேரிகுளம் என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்போது அதுவே வள்ளியூர் பெரிய குளம் என்று அழைக்கப்படுகிறது.
திருவிழாக்கள்:
சித்திரை மாத பிரம்மோற்ஸவத்தில் 9ஆம் நாள் தேர்த்
திருவிழா நடக்கிறது. வைகாசி மாதம் விசாகம் மற்றும் வசந்தத் திருவிழா 10 நாட்கள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் 10 நாட்கள் சூர சம்ஹார விழா நடக்கிறது. கார்த்திகை மாதம் கடைசி வெள்ளியன்று தெப்பத் திருவிழா நடைபெறும். தினசரி ஆறு கால பூஜை நடைபெறும் இத்திருக்கோயில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது.
அமைவிடம்:
காசி – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் திருநெல்வேலிக்கு தென்மேற்கில் சுமார் 30 கல் தொலைவில் அமைந்துள்ளது வள்ளியூர். குமரப் பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூருக்கு தென் மேற்கில் சுமார் 60 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.
- மு. ஆறுமுகம் பிள்ளை,
படங்கள்: குமாரபாண்டியன்.

ஸ்ரீ மகாகாளி சாலிஸா
அட்சய திரிதியை 24-4-2012
அதற்கு வில்வமங்கள சுவாமிகள், “”தாயே, உங்கள் கருணைப் பார்வையை அந்த பாவிகள்மீது செலுத்தி, அவர்களைத் திருத்தி ஆன்மிக வழியில் ஈடுபடுத்துங்கள்” என மனமுருகி கேட்டுக்கொண் டார். லட்சுமி தேவி, “”அட்சய திரிதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு நான் அருள்பாலிக் கிறேன்” என உறுதி கூறினாள். அதன்படி இந்த எட்டு நாட்களும் அஷ்ட லட்சுமிகளாக- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு லட்சுமியாக அருள்பாலிப் பதை அடுவாஞ்சேரி கோவிலில் ஆண்டுதோறும் காணலாம்.








